ஆகுபெயர் என்றால் என்ன? ஆகுபெயர் எத்தனை வகைப்படும்?

ஆகுபெயர் வகைகள்
ஒரு பொருளின் இயற்பெயர், அதனை உணர்த்தாமல் அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளுக்குத் தொன்று தொட்டுப் பெயராகி வருவது ஆகுபெயர் எனப்படும்.

(எ.கா)  ஊர் சிரித்தது
எங்கும் ஊர் சிரிக்காது. ஊரிலுள்ள மக்கள்தான் சிரிப்பார்கள். நேரிடையாக மக்கள் சிரிப்பதைச் சொல்லாமல் மக்கள் வசிக்கின்ற (தொடர்புடைய) ஊரைச் சொல்லியது ஆகும்.

“பொருள்முதல் ஆறோடு அளவை சொல்தானி
கருவி காரியம் கருத்தன் ஆதியுள்
ஒன்றன் பெயரான் அதற்கியை பிறிதைத்
தொன்முறை உரைப்பன ஆகுபெயரே”   – நன்னூல்.290
என்பார் நன்னூல் ஆசிரியர் பவனந்தி முனிவர்.


ஆகுபெயர் பதினாறு வகைப்படும்.

1.பொருளாகு பெயர்
ஒரு முழுப்பொருளின் பெயர் தன்னைச் சுட்டாது அதன் உறுப்புக்கு ஆகி வருவது பொருளாகுபெயர் எனப்படும். இதனை முதலாகுபெயர் எனவும் கூறுவர்.

(எ.கா) தமிழரசி மல்லிகை சூடினாள்
இத்தொடரில் உள்ள மல்லிகை என்னும் சொல் வேர், கொடி. இலை, பூ ஆகிய உறுப்புகள் அனைத்தும் சேர்ந்த முழுப்பொருளைக் குறிக்கிறது ஆனால் அடுத்துள்ள சூடினாள் என்னும் பயனிலையால் மல்லிகை என்னும் பெயர், முழுப்பொருளை உணர்த்தாது, அதன் ஓர் உறுப்பாகிய மலரை மட்டும் உணர்த்துகிறது. எனவே இது பொருளாகு பெயர்.
(எ.கா) பூசணிச்சாம்பார் சுவையாக இருந்தது.
2. இடவாகு பெயர்
ஓர் இடத்தின் பெயர் அந்த இடத்தோடு தொடர்புடைய வேறு பொருளுக்கு ஆகி வருவது ‘இடவாகு பெயர்’ எனப்படும்.

(எ.கா)    கிரிக்கெட்டில் இந்தியா வென்றது.
இந்தச் சொற்றொடரில் உள்ள இந்தியா என்னும் இடப்பெயர் அப்பெயரால் அமைந்த நாட்டைக் குறிக்காது அந்நாட்டிற்காக விளையாடிய வீரர்களைக் குறிக்கிறது. எனவே இது இடவாகு பெயர் ஆகும்.
(எ.கா) காஞ்சிபுரம் என்ன விலை?
3. காலவாகுபெயர்
காலப்பெயர் காலத்தோடு தொடர்புடைய வேறு பொருளுக்கு ஆகி வருவது காலவாகுபெயர் எனப்படும்

(எ.கா) மார்கழி சூடினாள்
மார்கழி என்னும் சொல் தமிழ்த்திங்களைக் குறிக்கும் காலப் பெயராகும். ஆனால் சூடினாள் என்னும் குறிப்பால் மார்கழித் திங்களில் மலர்ந்த மலரை (டிசம்பர் பூ எனப்படும் நீலக்கனகாம்பரம்) உணர்த்துகிறது. எனவே இது காலவாகுபெயர் ஆகும்.
(எ.கா)  கோடை நன்றாக விளைந்துள்ளது. 
4.சினையாகு பெயர்

ஒரு சினையின் (உறுப்பு) பெயர், அதனோடு தொடர்புடைய முழுப்பொருளுக்கு ஆகி வருவது சினையாகுபெயர் எனப்படும்.

(எ.கா) ஆசிரியர் தலைக்கு ஒரு வினாத்தாள் தந்தார்.

‘தலை’ என்பது நம்முடலின் ஓர் உறுப்பு இத்தொடரில் உள்ள ‘தலை’ என்னும் உறுப்பின் பெயர், ஆனால் அடுத்துள்ள குறிப்புச் சொற்களால் மாணவனைக் குறிக்கின்றது. எனவே இது சினையாகுபெயர் எனப்படும்.

(எ.கா) தலைக்கு ஒரு பழம் கொடு
5. பண்பாகு பெயர்
ஒரு பண்புப்பெயர், அப்பண்பைக் கொண்ட பொருளுக்கு ஆகி வருவது பண்பாகு பெயர் எனப்படும். இது ‘குணவாகு பெயர்’ என்றும் வழங்கப் பெறுகிறது.

(எ.கா) இளங்கோ இனிப்பு வழங்கினான்

இத்தொடரில் இனிப்பு என்னும் பண்புப்பெயர், ‘வழங்கினான்’ என்னும் குறிப்பால் இனிப்புச் சுவையுடைய பொருளை உணர்த்துகிறது. எனவே இது பண்பாகுபெயர் எனப்படும்
(எ.கா) செவலையை வண்டியில் பூட்டு
6. தொழிலாகுபெயர்

ஒரு தொழிற்பெயர், அத்தொழிலிருந்து பெறப்படும் பொருளுக்கு ஆகி வருவது தொழிலாகு பெயர் எனப்படும்.
(எகா) அழகன் அவியல் உண்டான்.

இத்தொடரில் அவியல் என்னும் சொல் காய்கறிகளை என்னும் பொருளைத் தருகிறது. எனவே இது தொழிலாகுபெயர் எனப்படும். அவித்தலாகிய தொழிலைக் குறிப்பதாகும். ஆனால் ‘உண்டான்’ என்னும் பயனிலையால் அவிக்கப்பட்ட காய்கறியினை உண்டான்.
(எ.கா) பொரியல் சுவையாக இருந்தது.
7. தானியாகுபெயர்
ஓர் இடப்பெயர். அவ்விடத்திலுள்ள பொருளுக்கு ஆகிவருவது இடவாகுபெயராகும். ஓரிடத்திலுள்ள பொருள் அவ்விடத்திற்கு ஆசி வருவது தானியாகுபெயர் எனப்படும்.

(எ.கா) பாலை வண்டியில் ஏற்று
பால் என்னும் நீர்மப்பொருள் ஏற்றும் என்னும் குறிப்பால், பால் வைக்கப்பட்டிருக்கும் தானமாகிய (இடமாகிய) குடத்திற்கு ஆகி வந்து தானியாகு பெயர் ஆயிற்று (தானம் – குடம், தானிக் பால்

8. உவமையாகு பெயர்

உவமானப் பெயர், தொடர்புடைய உவமேயப் பொருளுக்கு ஆகி வருவது உவமையாகுபெயர் எனப்படும்.

(எ.கா)  காளை வந்தான்
காளை மாட்டைக் குறிக்கும் பெயராகிய காளை என்பது காளை மாடு போன்ற வலிமையும் வீரமும் வாய்ந்த ஆண் மகனுக்கு ஆகி வந்தது. காளை போன்றவன் வந்தான். எனவே இது உவமையாகுபெயர் ஆயிற்று
(எ.கா) பாவை ஆடினாள்
9. கருவியாகுபெயர்
ஒரு கருவியின் பெயர், அதனால் உண்டாகிய காரியப் பொருளுக்கு ஆகி வருவது கருவியாகுபெயர் எனப்படும்.

(எ.கா) குழல்கேட்டு மகிழ்ந்தான்.
குழல் என்னும் இசைக் கருவியின் பெயர், அதனால் உண்டான இசைக்கு ஆகிவந்து குழலோசை கேட்டு மகிழ்ந்தான் என்றானதால், இது கருவியாகுபெயர் ஆயிற்று

10. காரியவாகு பெயர்
ஒரு காரியத்தின் பெயர், அது உண்டாவதற்குக் காரணமான கருவிப் பொருளுக்கு ஆகிவருவது காரியவாகுபெயர் எனப்படும். இது கருவியாகு பெயர்க்கு எதிர்மறையாகும்.
(எ.கா)  களவியல் படித்தான்.
களவியல் என்றும் காரியத்தின் பெயர் அதனை  உணர்த்துவதற்குக் கருவியாகிய நூலிற்கு ஆகி வந்தது, களவியல் என்னும் அகத்திணை இலக்கணத்தைப் படித்தான் என்றானதால் இது காரியவாகு பெயர் ஆயிற்று.

11. கருத்தா ஆகுபெயர்
ஒரு கருத்தாவின் பெயர், அவரால் இயற்றப்பட்ட நூலிற்கு ஆகிவருவது கருத்தா ஆகுபெயர் எனப்படும்.

(எ.கா) அழகனுக்குத் திருவள்ளுவர் மனப்பாடம்
திருக்குறளை எழுதிய கருத்தாவின் பெயர் திருக்குறள் என்பதாகும். இத்தொடரில் திருவள்ளுவர் என்னும் பெயர் அவரைக் குறிக்காது அவரால் எழுதப்பட்ட காரியமாகிய திருக்குறளுக்கு ஆகிவந்ததால் இது கருத்தாகுபெயர் ஆயிற்று.

12. சொல்லாகுபெயர்
ஒரு சொல்லின் பெயர், தொடர்புடைய பொருளுக்கு ஆகிவருவது சொல்லாகுபெயர் எனப்படும்.

(எ.கா) தம்பி என் சொல்லைக் கேட்டான்

’சொல்’ என்னும் பெயர், கேட்பான் என்னும் குறிப்பால், எழுத்துகளாகிய சொல்லைக் குறிக்காது அறிவுரைக்கு ஆகிவந்ததால் சொல்லாகுபெயர் ஆயிற்று.

(எ.கா) பாட்டுக்கு உரை எழுதுக.
13. எண்ணல் அளவை ஆகுபெயர்
எண்ணைக் குறிக்கும் பெயர், தொடர்புடைய பொருளுக்கு ஆகி வருவது எண்ணல் அளவை ஆகுபெயர் எனப்படும்.
(எ.கா) நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

இத்தொடரில் உள்ள நான்கு, இரண்டு என்னும் சொற்கள் எண்ணிக்கைப் பொருளை உணர்த்தாது. நான்கு அடிகளாலான நாலடியாரையும், இரண்டடிகளாலான திருக்குறளையும் குறிக்கின்றன. இவ்வாறு எண்ணலளவைப் பெயர் தொடர்புடைய நூல்களுக்கு ஆகிவருவதால் இஃது எண்ணலளவையாகுபெயர் எனப்படும்.
(எ.கா)  தலைக்கு ஒன்று கொடு
14. எடுத்தல் அளவை ஆகுபெயர்
எடுத்தல் அளவைப் பெயர், தொடர்புடைய பொருளுக்கு ஆகி வருவது எடுத்தல் அளவை ஆகுபெயர்.

(எகா) கிலோ என்ன விலை?
‘கிலோ’ என்னும் எடுத்தலளவைப் (நிறுத்தலளவை) பெயர், தொடர்புடைய பொருளுக்கு (அரிசி, பருப்பு, சர்க்கரை ) ஆகி வந்ததால் இது எடுத்தலளவையாகு பெயர் எனப்படும்.

15. முகத்தல் அளவை ஆகுபெயர்
முகத்தல் அளவைப் பெயர், தொடர்புடைய பொருளுக்கு ஆகிவருவது முகத்தல் அளவை ஆகுபெயர் எனப்படும்.

(எ.கா) இரண்டு லிட்டர் கொடு
லிட்டர் என்னும் முகத்தல் அளவைப் பெயர், தொடர்புடைய பொருளுக்கு (பால், மண்ணெண்ணெய்) ஆகி வந்தது. எனவே இது முகத்தளலவையாகு பெயர் எனப்படும்.

16. நீட்டல் அளவை ஆகுபெயர்
நீட்டல் அளவைப் பெயர் தொடர்புடைய பொருளுக்கு ஆகி வருவது நீட்டல் அளவை ஆகுபெயர் எனப்படும்.

(எ.கா) சட்டைக்கு இரண்டு மீட்டர் வேண்டும்.
மீட்டர் என்னும் நீட்டல் அளவைப் பெயர், தொடர்புடைய பொருளுக்கு (துணி) ஆகி வந்தது. எனவே இது நீட்டல் அளவையாகுபெயர் எனப்படும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here