🎯 நாட்டு நடப்புகள்
நல்லவை கெட்டவை
அன்றாட அழுத்தங்கள்
அரைகுறை தூக்கம்
அனைத்தையும் பகிர்ந்திட
அன்பை அள்ளித்தர
அம்மா ஒருவர் தான் அனைவருக்கும்..!
🎯 அம்மாவின் குரல் கேட்டால்
அழுத்தமான மனது
அரை சதமாய் குறையுமென்ற
ஆராய்ச்சியாளர் அறிவிப்பு ஒன்றை
அறிய முடிந்தது..!
🎯 அரக்கப் பறக்க ஓடி
அலுவலகப் பணிகள்
அயராது செய்து முடிப்போம்..!
🎯 வாரத்தில் ஒரு நாள்
வாகாய் ஓய்வெடுக்க
வந்தமரும் இடம் எது?
🎯 அம்மாவுக்காக மனது
அழுது ஏங்கும்!
அப்போது
அவர் நட்ட செடி ஒன்று
ஆகாயமளவு மரமாய் வளர்ந்து
மனதை ஆற்றும்..!
🎯 அதில்,
பகலெல்லாம்
பறவை இனங்கள்
பல பல வந்து
இன்னிசை பாடி
இதமாய் இளைப்பாறும்..!
🎯 அம்மாவின்
ஒரு குரல் கேட்க
ஏங்கிய எனக்கு
அவர் பல குரலால்
பாடல் இசைத்துப்
பாரத்தைப் பாதியாய்
குறைக்கிறார் இன்றளவும்..!
கவிதையின் ஆசிரியர்
ச. குமரேசன்,
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
இராசிபுரம்.