அமர்நீதி நாயனார்‌ புராணம்

அமர்நீதி-நாயனார்

அமர்நீதி நாயனார்‌

சோழநாட்டிலுள்ள பழையாறை என்னும்‌ ஊரில்‌, வணிகர்‌ குலத்தில்‌ பிறந்தவர்‌ அமர்நீதி நாயனார்‌ ஆவார்‌. பெருஞ்‌ செல்வந்தராய்‌ விளங்கிய அவர்‌ சிவபக்தியில்‌ சிறந்து விளங்கினார்‌. தன்‌ செல்வத்தின்‌ பெரும்பாகத்தை அடியவர்களுக்கு அமுது ஊட்டவே பயன்படுத்தினார்‌. திருநல்லூரில்‌ ஒரு மடம்‌ கட்டி, அடியவர்களுக்கு அருந்தொண்டு புரிந்து வந்தார்‌.

அமர்நீதியாரின்‌ சிவபக்தியை உலகறியச்‌ செய்ய சிவபிரான்‌ திருவுள்ளம்‌ கொண்டார்‌. பெருமான்‌ வேதியர்‌ கோலம்‌ கொண்டார்‌. உடுத்தியிருந்து போக இரண்டு கோவணங்களுடன்‌ கையில்‌ கோல்‌ ஒன்றை ஏந்தி திருநல்லூர்‌ மடத்திற்கு வந்தார்‌. அமர்நீதியார்‌ திருநீறு அணிந்துவணங்கினார்‌.

வேதியர்‌, “அமர்நீதியாரே! அடியவர்க்கு அமுது செய்யும்‌ உமது தொண்டை அறிந்தே வந்தேன்‌. நான்‌ குளித்துவிட்டு வருகிறேன்‌. அதுவரை எனது ஒரு கோணவத்தை நீர்‌ உமது மடத்தில்‌ வைத்துக்‌ கொள்ளுங்கள்‌. நான்‌ குளித்த பின்‌ எனது கோலில்‌ சுற்றிய இக்கோவணத்தை அணிந்து கொள்வேன்‌.  ஒருவேளை மழைபெய்து இக்கோவணம்‌ நனைந்து விட்டால்‌ உம்மிடம்‌ தந்துள்ள கோவணத்தைத்‌தரவேண்டும்‌. அதைக்‌ கட்டிக்‌ கொள்வேன்‌!” என்றார்‌.

அமர்நீதியாரும்‌ அதைப்‌ பெரும்‌ பாக்கியமாகக்‌ கருதி, கோவணத்தைப்‌ பெற்று மடத்தினுள்‌ வைத்தார்‌. வேதியரும்‌ சென்றுவிட்டார்‌. சற்று நேரத்தில்‌ சிவபெருமான்‌ திருவருளால்‌ மடத்திலுள்ள கோவணம்‌ மறைந்தது

அந்நேரம்‌ வெளியே கடும்மழை பெய்தது. சில நாழிகைப்‌ பொழுதில்‌ வேதியர்‌ மழையில்‌ நனைந்தபடி மடத்தை நோக்கி ஓடிவந்தார்‌. அவரது கோலில்‌ சுற்றிய கோவணமும்‌ நனைந்திருந்தது.

அவ்வேதியர்‌ அமர்நீதியாரிடம்‌, “நான்‌ தந்துள்ள கோவணத்தைத்‌ தருவீராக! இக்கோவணம்‌ நனைந்து விட்டது!” என்று கூறினார்‌. அமர்நீதியாரும்‌ மடத்தினுள்‌ சென்று கோவணத்தைத்‌ தேடினார்‌. அதைக்‌ காணவில்லை. எங்கு தேடியும்‌ அது கண்ணில்‌ அகப்படவில்லை.

உடனே வேதியரிடம்‌ வந்து கோவணம்‌ காணாமல்‌ போனதாகக்‌ கூறி, அதற்குப்‌ பதில்‌ தான்‌புதிதாக வேறு கோவணம்‌ தருகிறேன்‌ என்று சமாதானம்‌ கூறினார்‌.

வேதியரோ கடுங்கோபம்‌ கொண்டார்‌. எனக்கு என்னுடைய கோவணமே வேண்டும்‌ என்றார்‌. அமர்நீதியாரோ வேதியாரிடம்‌, “நீங்கள்‌ தந்த கோவணத்தைக்‌ காணவில்லை. புதிய பட்டுத்துணிகளை வேண்டுமானலும் தருகிறேன்‌. தயவுசெய்து கருணை காட்ட வேண்டும்‌!” என்று பணிந்து கூறினார்‌.

வேதியர்‌, “அப்படியென்றால்‌ ஒரு தராசைக்‌ கொண்டு வாரும்‌. அதில்‌ என்‌ கோவணத்தின்‌ எடையுள்ள வேறு ஒரு கோவணம்‌ தாரும்‌!” என்று கூறினார்‌. அதற்குச்‌ சம்மதித்த அமர்நீதியார்‌, உடனே அங்கொரு தராசைக்‌ கொண்டுவரச்‌ செய்தார்‌.

வேதியர்‌ தன்‌ கோலில்‌ சுற்றியிருந்த கோவணத்தை அதன்‌ ஒரு தட்டில்‌ வைத்தார்‌. மறுதட்டில்‌ புதிதாக ஒரு கோவணத்தை வைத்தார்‌ அமர்நீதியார்‌. வேதியரின்‌ கோவணம்‌ இருந்த தட்டு எடை அதிகமாகத்‌ தாழ்ந்‌து இருந்தது. அமர்நீதியார்‌ பல துணிகளை எடுத்து வைத்தார்‌. அவை யாவும்‌ வேதியரின்‌ கோவணத்தின்‌ எடைக்குச்‌ சமமாகவில்லை. துணிகளையும்‌ பொன்னையும்‌ வெள்ளியையும்‌ ஏனைய மணிகளையும்‌ அள்ளி அள்ளி வைத்து சோர்ந்துபோனார்‌. எடை சமன்படவில்லை.

உடனே அமர்நீதியார்‌, தன்‌ மனைவியையும்‌, மகனையும்‌ அழைத்தார்‌. தராசின்‌ தட்டில்‌ ஏறி நிற்கும்படிக்‌கூறினார்‌. “தான்‌ இதுவரை செய்து வந்த அடியவர்‌ தொண்டு குற்றமற்றது என்றால்‌ இத்தராசு சமநிலை பெறட்டும்‌! என்று கூறியபடி, தானும்‌ அத்தட்டில்‌ ஏறி நின்றார்‌. தராசு சமநிலைக்கு வந்தது.

அக்கணமே வேதியர்‌ அவ்விடத்தை விட்டு மறைந்தார்‌. சிவபெருமான்‌ உமையன்னையுடன்‌ விடை வாகனக்தில்‌ திருக்காட்சி தந்தார்‌. அமர்நீதியார்‌ இறைவனையும்‌ இறைவியையும்‌ கண்டு பேரானந்தம்‌ கொண்டார்‌. வழிபட்டார்‌. மெய்ச்‌ சிலிர்த்தார்‌.

தட்டில்‌ நின்றிருந்த அமர்நீதி நாயனாரும்‌, அவரது மனைவியும்‌, மகனும்‌ சிவபெருமான்‌ இருவருளால்‌ சிவலோகம்‌ சென்றடைந்தனர்‌.

கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here