தன்னம்பிக்கை கட்டுரை தொடர் – 9
நீங்கள் உங்களின் இலக்கை அடைவதற்கு போராடத் தொடங்கி விட்டீர்கள் என்றால் தடைக்கல்லாக உங்கள்முன் நிற்பது விமர்சனங்களே ஆகும். இவ்வுலகில் பெற்றோர்களைத் தவிர வேறுயாரும் உங்கள் முன்னேற்றத்தில் இன்பம் காண மாட்டார்கள். எனவே உறவு, நட்பு, அலுவலகம் போன்ற எல்லா இடங்களிலிருந்தும் உங்களுக்கு கிடைப்பவை எதிர் மறையான விமர்சனங்களே ஆகும். உங்களிடமே ஆகாது என்பதற்கு நிறைய உதாரணங்களை முன்வைப்பார்கள். முடியாது என்பதற்கு பல காரணங்களை எடுத்துரைப்பர். நடக்காது என்று ஏளனமாக பேசிச் செல்வார்கள். இவர்கள் அனைவரும் இந்தப் பூமியில் சீர்குலைக்கப் பிறந்தவர்கள். இவர்களும் ஒன்றை செய்ய மாட்டார்கள் மற்றவர்களையும் செய்ய விடமாட்டார்கள். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இவர்கள் வடிகட்டிய சுயதுரோகிகள் எனலாம்.
விமர்சனங்கள் ஒரு பொருட்டல்ல
மற்றவர்களை விமர்சனம் செய்பவர்களுக்குத் தெரியும், அதிகாலையிலேயே எழுந்துவிட்டால் அவர்களுடைய வேலையைச் சிறப்பாகச் செய்யலாம் என்று. ஆனால் சோம்பித் திரிவார்கள். படிக்கும் காலத்தில் ஊர் சுற்றாமல் ஒழுங்காகப் படித்திருந்தால் நல்ல மதிப்பெண்கள் பெற்றோர் ஆசிரியர்களுக்கு நல்ல பெயர் என்று எல்லாம் அறிந்தும் ஊதாரித்தனமாகச் செலவளித்துத் தனக்குத்தானே குழிதோண்டிக் கொள்பவர்கள் இவர்கள்தான். அவ்வாறு தனக்கே துரோகத்தைச் செய்துகொள்ளும் இவர்கள் மற்றவர்களுக்கு எவ்வகையில் நல்லது நினைப்பர்? மற்றவர்கள் முன்னேறிவிட்டால் இவர்களால் தாங்க இயலாது. பாவம் பொறாமையில் கொதிப்பார்கள். இம்மாதிரியான பிறவிகளை உங்கள் அருகில் வைத்துக் கொள்ளாதீர்கள்.
எதற்கெடுத்தாலும் மட்டம் தட்டியே பேசுவார்கள். எனக்குத்தான் எல்லாமே தெரியும் என்பார்கள். ஆனால் அவர்களுக்கே தன்னை எவ்வாறு மதிப்புடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்று தெரியாது. விமர்சனங்களைப் பற்றி கண்ணதாசன் கூறுவார். “போற்றுவோர் போற்றட்டும், புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும் நில்லேன் அஞ்சேன்” என்று. எனவே மற்றவர்களின் விமர்சனங்கள் உங்கள் மனதை தாக்காதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு நீங்கள் மதிப்புக் கொடுங்கள்
நினைவில் கொள்ளுங்கள்! மற்றவரின் தூற்றுதலோ போற்றுதலோ உங்களுக்கு தேவையோ தேவையற்றதோ முதலில் உங்களை நீங்களே உற்சாகப் படுத்திக்கொள்ளுங்கள். ஊக்கப்படுத்துங்கள். சுய ஊக்குவிப்பே உண்மையானது. இவ்வாறு அல்லாமல் மற்றவர்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் அதையே மற்றவர்களுக்குச் செய்யுங்கள். பாராட்டும் மனம் என்பது எல்லோருக்கும் வராது. தெளிந்த மனத்தவருக்கே அது கைகூடும்.
உங்களை வெற்றி பெறுவதற்குத் தகுதியுடையவராக மாற்றிக் கொள்ளுங்கள். சுயசோதனை செய்து கொள்ள உங்களிடம் இருக்கும் பலம் என்ன? பலவீனம் என்ன? திறமை யாது? அணுகுமுறை யாது? எவ்வளவு காலத்தில் வெற்றியை ஈட்ட முடியும்? இந்த வினாக்களுக்கு உங்களிடம் தெளிவான பதில் இருக்கவேண்டும். அந்தப் பதிலும் காரணத்துடன் அமைய வேண்டும். சில செயல்களுக்கு பலம் மட்டுமே போதாது. எந்த நேரத்தில் எவ்வாறு என்ற நுணுக்கங்களை கையாளவேண்டும். உங்களை வீழ்த்தும் பலவீனத்தை எவ்வாறு நீக்குவது. அல்லது பலமாக மாற்றுவது போன்ற சுய மதிப்பீடு செய்து கொண்டு, ஒரு வினையை ஆக்கபூர்வமாக செய்ய இயலும் என்ற மனத்தெளிவு வந்தவுடன் எவற்றைப்பற்றியும் நீங்கள் ஆலோசிக்க தேவையில்லை. உங்கள் இலட்சிய செயல்பாட்டை துவக்கலாம்.
மற்றவர்கள் மகிழட்டும்
உங்கள் செயல்களுக்கு மகுடம் சூட்டுபவர் யாரேனும் இருந்தால் அவர்களை அருகிலேயே வைத்ததுக் கொள்ளவும். இழிவுபடுத்துபவர் இருந்தால் அவர் உறவினர்களாக இருந்தாலும் விட்டு விலகிவிடுங்கள். உங்களை தாழ்த்துபவர் உறவினரே அல்ல. உங்களின் ஆற்றலைக் கொண்டு திறனைப்பெருக்கி ஊக்கத்தை கூட்டுங்கள் வெற்றிப்பாதையில் செல்லுங்கள். உங்களின் வெற்றியானது மற்றவர்களுக்கும் நன்மை பயப்பதாக இருக்கட்டும். அதை அடைவதற்கு நீங்கள் பல இன்னல்களை அடைந்திருந்தாலும் அதனால் மற்றவர்க்கு பயனைத்தரும் என்றால் தயங்காமல் செய்யுங்கள். தான்பெற்ற துன்பங்கள் தன்னுடனே இருக்கட்டும். ஆனால் மற்றவராவது பயன்பெறட்டும் என்ற தியாக எண்ணங்களை மனதில் கொள்ளுங்கள்.
தியாக மனோபாவம்
ஒரு மருத்துவமனை இருந்தது. அங்கு ஒரு அறையில் திரையிடப்பட்டு அந்தப்பக்கம் இந்தப்பக்கம் என்று இரண்டு நோயாளிகளுக்குச் சிகிச்சை கொடுத்தனர். அந்த நோயாளிகளும் நீண்ட நாட்களாகச் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களை காண்பதற்கு உறவினர்கள் யாரும் வரவில்லை. எனவே மனம் வெதும்பிய நோயாளி திரையின் மறுபக்கத்தில் இருந்த நோயாளியிடம் “சார் எனக்கு இப்படியே படுத்திருப்பதற்கு வேதனையாக உள்ளது. நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?” என்று கேட்டார். “சார் நான் நலமாகவே மகிழ்ச்சியாகவே உணர்கிறேன்” என்றார். மனம் வெதும்பிய நோயாளி “அப்படியா? எவ்வாறு இது சாத்தியம்”? காரணம் என்ன? அதற்கு அவர் “சார் இங்கு ஒரு சன்னல் உள்ளது அதன் வழியாக இயற்கையைப் பார்க்கும்போது மனம் சந்தோஷம் அடைகிறது” என்றார். “அப்படியென்றால் நீங்கள் பார்க்கும் காட்சிகளை எனக்கும் கூறுங்கள்” என்று கேட்டார். “சார் இந்த சன்னலின் வழியாக ஒரு மலை தெரிகிறது. அதில் அருவி ஒன்று உருவாகி அழகாக நீர் கொட்டுகிறது. அதனால் அந்த மலை பச்சைப்பசேலென்று காட்சியளிக்கிறது. பூங்கா ஒன்று தெரிகிறது. அங்கு சிறுவர்கள் ஓடியாடி விளையாடுகின்றனர். மலர்கள் வண்ணத்துப்பூச்சிகள் அழகான பறவைகள் என்று இருக்கின்றன சார். அதனால் மனம் மகிழ்ச்சியாக உள்ளது” என்றார். இவற்றை கேட்டவுடன் நோயாளிக்கு வெதும்பிய மனம் நிம்மதியானது. அதுமட்டுமல்லாமல் தினமும் தனக்கு கூறுமாறு கேட்டுக்கொண்டார். அவர்களின் உரையாடல் ஒவ்வொரு நாளும் நடந்தது. ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியாது. மனம் வெதும்பிய நோயாளி மகிழ்ச்சியாக இருந்தார். ஒரு நாள் மாலைவரை அந்த நோயாளியை அறைக்கு அழைத்து வரவில்லை. ஆதலால் நர்சிடம் கேட்க “சார் உங்களுக்கு விசயமே தெரியாதா? அவருக்கு அதிகாலையில் மூன்றுமணி இருக்கும். உடலுக்கு முடியாமல் போனது. மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும், உயிர் பிழைக்கவில்லை இறந்து விட்டார்” என்றாள். இவருக்கு மனம் மிகவும் வேதனைப்பட்டது.
தினமும் தன்னை மகிழ்ச்சிப்படுத்திய ஒரு நண்பரை இழந்து விட்டோமே என்று அவரின் கண்கள் கலங்கின. சில நிமிடங்கள் கழித்து “சிஸ்டர் எனக்கு ஒரு உதவி செய்யுங்கள். எனது இந்த படுக்கையை அந்தப்பக்கம் மாற்றிவிடுங்கள்” என்றார். சரி என்று அந்த சிஸ்டரும் மாற்றினார். இவர் கேட்டார் “சிஸ்டர் இங்கு ஒரு சன்னல் இருந்ததல்லவா அது எங்கே? என்றதும் “சன்னலா, இங்கு ஒன்றுமே இல்லையே” என்றாள். “என்ன சிஸ்டர் அவர் தினமும் சன்னலில் பார்க்கும் காட்சிகளை என்னிடம் பேசி பகிர்ந்து கொள்வார் நீங்கள் இல்லை என்று கூறுகிறீர்கள்?” “சார் இங்கிருந்த நோயாளி பிறவியிலேயே பார்வையற்றவர்” என்று கூறியதும் தான் இவருக்கு புரிந்தது அவரின் தியாக மனம். ஆமாம் அவர்தான் பார்வையற்றவர் என்ற தன்னுடைய சோகத்தை மற்றவரிடம் காட்டாமல் மற்றவரை அந்த வேதனையிலிருந்து மீட்க வேண்டும் என்பதற்காகத்தான் காணாத இயற்கை காட்சிகளையெல்லாம் கூறினார். அது எவ்வளவு பெரிய தியாகமனப்பான்மை. அசந்து விட்டார் இந்த நோயாளி.
நீங்கள் இங்கு கவனிக்க வேண்டியது பிறவி பார்வையற்றவராக இருக்கும் நோயாளி சில நாட்களிலேயே இறக்கும் நிலையில் இருப்பவர். அவரின் உடல் எந்த அளவிற்கு வேதனையை வலியை ஏற்படுத்தும். அவற்றை எல்லாம் தாங்கிக்கொண்டு தன்சோகம் மற்றவரை தாக்கக்கூடாது என்று எண்ணி உற்சாகமாகப் பேசி மற்றவரின் வேதனையை மாற்றுகிறார். இந்த மாதிரியான பெருந்தன்மை, நேர்மை உங்களிடம் இருக்கிறதா? என்று நீங்களே உங்களை கேட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில் இது எனக்காக அல்ல மற்றவர்க்குத்தானே செய்கிறோம் என்ற எண்ணம் வந்துவிட்டால் உங்கள் செயல்பாட்டில் மெத்தனப்போக்கு உருவாகிவிடும். எனவே மெய்யான தியாக மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும்.
உங்கள் தனித்திறனை இனம் காணுங்கள்
மனிதர்களில் பலர், மற்றவரின் விமர்சனங்களால் உந்தப்பட்டு தன்னுடைய சுயதிறமைகள் என்ன என்பதை அறியாமல் வாழ்ந்து கொண்டு இருப்பர். உங்கள் சூழ்நிலையின் காரணமாகச் சில பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம். அதனால் உங்களை நீங்களே தாழ்வாக எண்ணியிருந்தால் அந்த எண்ணத்தை உடனே மாற்றுங்கள். இவ்வாறான தாழ்வான மன நிலையை மாற்ற நீங்கள் செய்த செய்யப்போகும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை மனதில் வளர்த்துக்கொள்ளுங்கள்.
ஒரு கோழி தன் முட்டைகளை அடைகாத்தது. அதன் முட்டைகளில் ஒன்றை நீக்கிவிட்டுப் பருந்தின் முட்டை வைக்கப்பட்டது. நாட்கள் கடந்தன. அடைகாத்த முட்டைகளில் இருந்து குஞ்சுகள் ஓட்டை உடைத்துக்கொண்டு வெளியே வந்தன. பருந்தின் குஞ்சும் வெளியே வந்தது. அது கோழிக்குஞ்சுகளுடனே எந்தவித வேறுபாடும் இல்லாமல் வளர்ந்தது. அதுவும் சில மாதங்களில் கோழிகளைப் போன்றே ஒலி எழுப்பியது. சிறிது உயரமே அதனால் பறக்க முடிந்தது. அதற்கு தான் பருந்தின் குஞ்சு என்பதே தெரியாது. ஆனால் அதன் உண்மையான திறன் என்ன? மேகத்தையும் கடந்து மேலே பறக்கும் அசாத்திய சக்தி கொண்டது. ஆனால் அது கோழிகளுடனே சேர்ந்துகொண்டு கோழியாகவே தன்னை நினைத்துக்கொண்டது. கோழியாகவே இறந்தும் போனது. இவ்வாறே இங்கு பலரின் வாழ்க்கை அக்கம்பக்கம் உள்ளவர்கள் தங்களைப்பற்றி என்ன கூறுகிறார்களோ அவ்வாறே மாறிவிடுகின்றனர். ஆனால் அவரவர்க்கென்று தனித்தனி திறமைகள் உள்ளன. அவற்றை இனம் காணவேண்டும். தனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது எதைச் செய்ய வரும் எது சிறப்பாக வரும் எதுவெல்லாம் சுமாராக செய்ய முடியும் தன் குருதியில் தசை நரம்புகளில் மூளையில் ஊறியிருக்கும் ஆற்றல் எது என்பதை அறிந்து அதன்படி செயல்பட்டால் நீங்கள் சாதனை படைக்கலாம்.
உங்களின் உள்மனதை ஊக்கப்படுத்த வேண்டும். தினமும் உறங்கச் செல்வதற்கு முன்பாக நீங்கள் அடையப்போகும் வெற்றியை அதனால் ஏற்படும் பயனை மற்றவர் அடையும் மகிழ்ச்சியைக் கற்பனை செய்துபாருங்கள். நாளடைவில் அதை உங்கள் ஆழ்மனம் நம்பத்துவங்கும். ஆழ்மனதிற்கு கொண்டு செல்லப்பட்ட எண்ணங்கள் செயல்களாக மாறும். செயல் வெற்றியைத் தேடித்தரும். இதில் ஐயமில்லை.
மற்றவர்களுக்காக ஒன்றைச் செய்ய தயாராக இருக்கும் நீங்கள் உண்மையில் மாமனிதர்தான்.
கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் நா.சாரதாமணி
ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்லூரி,
நல்லம்பள்ளி, தர்மபுரி.
மேலும் பார்க்க..
1.ஆக்கச் சிந்தனைகள் | Creative Thoughts