இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார், பேராசிரியர், கல்லாடர், பழைய உரைகாரர் முதலிய அறுவரே தொல்காப்பியத்திற்கு உரை கண்ட பழைய உரையாசிரியர்கள் ஆவர். இவர்களுள் முதல் உரையாசிரியர் இளம்பூரணர். இவ்வுரைக்கு முன்னரே தொல்காப்பியத்திற்கு உரைகள் பல இருந்தன. அதனை இளம்பூரணரே “என்பாரும் உளர். என்பர் ஒரு சாரார் என்பதாலும் நச்சினார்க்கினியர் சில இடங்களில் இங்ஙனம் பாடம் ஒதுப என்றும் உதாரணம் காட்டுப என்றும் கூறுவதாலும் அறியலாம். எனவே இளம்பூரணருக்கு முன்னரே உரைகள் இருந்ததை உணர முடிகிறது.
இவர்களில் இளம்பூரணர் உரையே முழுமைக்கும் கிடைத்துள்ளது. சேனாவரையர், தெய்வச்சிலையார், கல்லாடர் உரைகள் சொல்லதிகாரத்திற்கு மட்டுமே உள்ளன. பேராசிரியர் உரை பொருளதிகாரத்துள் பிற்பகுதியான மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் ஆகிய நான்கு இயல்களுக்கே உள்ளது. நச்சினார்க்கினியர் உரை பொருளதிகாரத்துள் பிற்பகுதியில் மெய்ப்பாட்டியல், உவமவியல், மரபியல் ஆகிய மூன்று இயல்களுக்குக் கிடைக்கவில்லை, இவ்வுரைகளே இன்றி சொல்லதிகாரத்திற்குப் பழைய உரை ஒன்று உள்ளது.
தொல்காப்பியத்திற்கு உரைகண்ட அறுவருள் இளம்பூரணரே முதல் உரையாசிரியர் ஆவார். “உரையாசிரியராகிய இளம்பூரண அடிகள்” என்று அடியார்க்கு நல்லாரும் “உளங்கூர் கேள்வி இளம்பூரணர்” என்று மயிலை நாதரும் குறிப்பிடுகின்றனர். இதிலிருந்து இவர் இளமையிலேயே பேரறிவு படைத்திருந்தனர் என்றும் துறவு மேற்கொண்டிருந்தனர் என்றும் அறிய முடிகிறது.
இளம்பூரணன் என்னும் பெயர் இளையனாய்ப் பேரறிவுச் செல்வனாய் விளங்கும் முருகப்பெருமானைக் குறிக்கும் என்று கூறுவர். பொருளியல் முதல் நூற்பாவிற்கு உரையெழுதும்போது இறைவனது தாள் நிழலைச் சிவானுபூதி எனக்குறிக்கின்றார் அன்றியும் தாமரை புரையும் காமர் சேவடி எனத்தொடங்கும் குறுந்தொகைக் கடவுள் வாழ்த்துப் பாடலை உவமவியல் 3, 6 செய்யுளியல் 11, 49, 74 ஆகிய நூற்பாக்களில் எடுத்துக்காட்டுகிறார். இவ்வாறு இவரது பெயரையும் இவ்வுரைகளையும் உற்றுநோக்கும் போது இவரைச் சைவர் என்று துணிய இடமேற்படுகிறது.
தொல்காப்பியத்தையும் இளம்பூரணரின் உரையையும் தழுவியே பவணந்தி முனிவர் நன்னூலைச் செய்துள்ளார் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பவணந்தியாரின் காலம் கி.பி.12ஆம் நூற்றாண்டு. எனவே இளம்பூரணரின் காலம் கி.பி.2ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாக இருக்கலாம்.
இவருக்குப் பின்வந்த சேனாவரையர், நச்சினார்க்கினியர் போன்றோர் இவருடைய உரையை ஆங்காங்கு மறுத்துச் சொல்லினும் இவர்பால் அவர்கள் பெருமதிப்பு வைத்திருந்தனர் என்பதை அவரவர் உரையால் அறியமுடிகின்றது. மற்ற தொல்காப்பிய உரையாசிரியர்கள் அனைவரும் இவருடைய இயற்பெயரைக்குறிக்காமல் உரையாசிரியர் என்றே குறித்துச்செல்லுகின்றனர்.
இவருடைய உரை ஆற்றொழுக்காக அமைந்து செல்கிறது. இன்றியமையாது விளக்க வேண்டிய இடங்களில் மட்டும் விளக்கி, படிப்பவர் உள்ளத்தில் நூற்கருத்தையே இவரின் உறை இடம்பெறச்செய்யும். ஐயுறுவதற்குச் காரணமான பொருளை இங்ஙனமிருக்கும் போலும் எனக் கூறிச்செல்வது இவ்வுரையின் இயல்பாகும்.
இளம்பூணரின் உரை உவமை நலம் சான்றது.
1. அணியிழை மகளிருக்கு அவ்வணியிற் சிறந்த ஆடைபோல
2. குறிச்சி புக்க மான்போல
3. நாலுழக்குக் கொண்டது நாழி என்றாற் போல போன்றவை சில உதாரணங்களாகும்.
மாத்திரையின் இலக்கணம் பற்றிய இளம்பூரணரின் உரையைக் காண்போம்.
கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே
என்பது எழுத்ததிகார நூன்மரபில் உள்ள (7) நூற்பாவாகும்.
கண்ணிமையும் நொடியுமாகிய அவை மாத்திரைக்கு அளபு. இது நுண்ணிதாக நூலிலக்கணத்தினை உணர்ந்த ஆசிரியர் கண்ட நெறி. இமையென்றது இமைத்தல் தொழிலை. நொடி என்றது நொடியிற் பிறந்த ஓசையை தன் குறிப்பு இன்றி நிகழ்தலின் இமைமுன் கூறப்பட்டது.
நிறுத்தளத்தல், பெய்தளத்தல், நீட்டியளத்தல், நெறித்தளத்தல் தேங்க முகத்தளத்தல், சாத்தியளத்தல், எண்ணியளத்தல் என ஏழுவகையன என்னும் அளவினுள் இது சார்த்தியளத்தல்.
நுண்ணிதினுணர்ந்தோர் கண்டவாறு என்றதனான் நாலுழக்குக் கொண்டது நாழியென்றாற் போல அவ்வளவைக்கு அளவை பெறாமை அறிக.
தொல்காப்பிய உரையாசிரியர் டாக்டர் கு.சுந்தரமூர்த்தி “மாத்திரையின் அளவைக் கண்ணிமைத்தல், கை நொடித்தல் ஆகியவற்றின் அளவோடு ஒப்பிட்டுரைத்தலின் இவ்வளவு சார்த்தியத்தலின் பாற்படும்.
எழுத்துக்களை ஒலித்தற்கு ஆகும் காலக்கழிவினை மாத்திரை என்பர். இதில் கால், அரை, முக்கால் என்னும் பகுப்பு உண்டு. ஆனால் இரு மாத்திரை கொண்டது இன்ன பெயர் பெறும் என்றோ, மூன்று மாத்திரை கொண்டது இன்ன பெயர் பெறும் என்றோ அதற்குப் பெயர் கூறப்படுவது இல்லை. இதற்கு மாறாக முகத்தல் அளவையில் இங்ஙனம் பெயர் உளதாதலைக் காணலாம். நான்கு உழக்குக் கொண்டதற்கு நாழி என்று பெயர். இரண்டு நாழி கொண்டதை ஒரு படி என்பர். இரண்டு படி கொண்டதை ஒரு குறுணி என்பர். இங்ஙனம் கூறுமாறு போல இத்துணை மாத்திரையுடையது இன்னபெயர் பெறும் என்று கூறப்படுவதில்லை. இதனையே “நாலுழக்குக் கொண்டது நாழி என்றாற் போல” என்னும் உவமை கொண்டு உரையாசிரியர் விளக்குகின்றார்.
தொகை மரபில் அளவைப் பெயர்களைப் பற்றிக் கூறும்போது (நூற்பா 171) நாழி என்பது அளவைப் பெயர் என்று இளம்பூரணர் கூறுகிறார்.
உயிர் மயங்கியலில் (நூற்பா 241) நாழி என்னும் சொல்லை அடுத்து உரி என்னும் சொல் வந்தால் அது நாடுரி என மாறும் என்கிறார் இளம்பூரணர்.
நாழி (ழ் + இ) + உரி
நாழ் + உரி
நா(ட்) + உரி → நாடுரி
மேற்கண்டவாறு இவை மயங்கும்
நாழி என்னும் சொல் சங்க இலக்கியத்தில் முல்லைப்பாட்டு, பரிபாடல், கலித்தொகை புறநானூறு போன்ற நூல்களில் சுட்டப்படுகிறது. முல்லைப்பாட்டில் விரிச்சிக்காக (சகுனம் கேட்டல்) தெய்வத்தை வணங்கும் பெண்கள் நாழியில் முல்லை அரும்புகளையும் நெல்லையும் கொண்டு வந்து தெய்வத்தை வணங்கினர் என்ற செய்தியை அறியமுடிகிறது (அடி.எண்-9)
உண்பது நாழி என்று புறநானூறு (188) என்று கூறுவதும் எண்ணத்தக்கது.
மூங்கிலில் கூடை பின்னுவது போல உழக்கு, நாழிகை என்னும் அளவைகளும் மூங்கிலைத் துண்டாக்கிச் செய்யப்பெற்றதை அறியமுடிகிறது. குதிரைக்கு உழக்காலும் நாழியாலும் வண்ணம் தீட்டும் தொழிலுக்குச் சேதிகை என்று பெயர். சேதிகையால் குதிரையின் உடல் அழகு படுத்தப்பெற்றதை
“வெதிர் உழக்கு நாழியால் சேதிகைக் குத்திக்
குதிரை உடல் அணி போல”
என்று கலித்தொகை (பாடல் எண் 96) குறிக்கிறது. இக்காலத்தில் இரும்பால் படி முதலியன செய்யப்படுவது போல அக்காலத்தில் மூங்கிலின் கணுக்கள் வரை வெட்டி உழக்கு நாழி போன்ற அளவைகள் செய்யும் வழக்கம் இருந்ததையும் வண்ணங்களை நீரில் கெட்டியாகக் கரைத்து அவற்றில் உழக்கு, நாழி போன்றவற்றை வைத்து அதன் அச்சை குதிரையின் உடலில் வைத்து அழகு செய்யும் கலை இருந்ததையும் அறிய முடிகிறது. மாட்டுப்பொங்கல் போன்ற விழாக்களின்போது வண்ணக்கலவையில் கையை வைத்து அக்கையை மாடுகளின் மீது வைக்கும் வழக்கம் இன்றும் உள்ளது.
தனிப்பாடல் திரட்டில் உழக்கு பற்றிய தகவல் உள்ளது. குறவன் ஒருவனுக்கு இரு மனைவியர், இளைய மனைவியின் மீது அன்பு கொண்ட குறவன் ஒரு நாள் தான் வளர்க்கும் பலா மரத்தை பார்த்துக்கொள்ளும்படி மூத்த மனைவியிடம் சொல்லிவிட்டுச் குறவன் வெளியே சென்று விடுகிறான். மூத்த மனைவியை குறவன் தண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இளைய மனைவி சிலரின் உதவியோடு அம்மரத்தை வெட்டி விடுகிறாள். மூத்த மனைவி மிக வருந்தி அழும்போது ஒளவையார் அங்கே செல்கிறார். மூத்த மனைவி நடந்த நிகழ்வுகளைக்கூற ஒளவையார்
“கூரிய வாளால் குறைப்பட்ட கூன்பலா
ஓரிலையாய் கன்றாய் மரமாய் – சீரிய
வண்டுபோல் கொட்டையாய் வண்காயாய் திண்பழமாய்
பண்டு போல் நிற்கப் பலா”.
என்று பாடுகிறார். உடனே அப்பலாமரம் முன்னர் இருந்தது போன்ற நிலையை அடைகிறது. குறவனின் மூத்த மனைவி ஒளவையாருக்கு மூன்று உழக்கு தினையைத் தருகிறாள். அதனை வாங்கிக்கொண்ட ஒளவையார் அருகில் உள்ள குறுநில மன்னனை சந்திக்கச் செல்கிறார். அம்மன்னன் தினை உள்ள துணி முடிச்சினை என்ன இது என்று வினவ
“கூழைப் பலாத்தழைக்கப் பாடக் குறமகளும்
மூவுழக்குத் தினை தந்தாள் – சோழா கேள்
உப்புக்கும் பாடிப் புளிக்கும் ஒரு கவிதை
ஒப்பிக்கும் என்றன் உள்ளம்”
என்கிறார் ஒளவையார். மூன்று உழக்குத் தினையை மட்டுமே அந்த ஏழைக்குறப்பெண்ணால் தர முடிந்தது அதை மறுக்காது வாங்கிச்சென்ற ஒளவையின் பண்பு நம்மை வியக்க வைக்கிறது. நான்கு உழக்கு ஒரு நாழியாதலால் ஒரு நாழிக்கும் குறைவான அதாவது அரைபடிக்கும் குறைவான தினையை குறமகள் ஒளவைக்குக் கொடுத்ததை அறியமுடிகிறது. மூதுரை முப்பது நூலில் நாழியைப் பற்றி ஒளவை
“ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி”
என்று கூறுகிறார். ஒரு நாழியை எவ்வளவுதான் கடலில் அழுத்தி முகந்தாலும் அது நான்கு நாழி நீரை முகக்காது என்பதே இதன்பொருளாகும்.
நாலுழக்குக் கொண்டது நாழி என்று இளம்பூரணர் கூறுகிறார். நாழி என்பது ஒரு முகத்தல் அளவை கலைச்சொல்லாகும். உழக்கு என்பதும் கலைச்சொல்லாகும். உழக்கை விட மிகச்சிறியது ஆழாக்கு.
முகத்தல் அளவை
360 நெல் → 1 செவிடு
2 செவிடு → 1 பிடி
5 செவிடு → 1 ஆழாக்கு
2 ஆழாக்கு → 1 உழக்கு
4 உழக்கு → 1 நாழி
8 நாழி → 1 குறுணி
12 குறுணி → 1 கலம்
3 கலம் → 1 கோட்டை
மேற்கண்டவாறு தமிழரின் அளவை முறை 1950 வரை நாட்டுப்புறங்களில் இருந்தது என ம.சோ விக்டர் குறிப்பிடுகிறார்.
இது போன்ற அளவைப்பெயர்கள் ஒவ்வொன்றுமே கலைச்சொற்கள். சிறிய துளையுள்ள பாத்திரத்தில் உள்ள நீர் கீழே வடிந்ததும் அதை இவ்வளவு நாழிகை எனக்கணக்கிட்டு கூறும் மக்கள் இருந்தனர். அவர்களை நாழிகைக்கணக்கர் என்று கூறுவர். அக்கருவியை குறுநீர்க்கன்னல் என்று கூறுவர் இதனை முல்லைப்பாட்டு (அடி.எண் 55)
“பொழுதளந் தறியும் பொய்யா மாக்கள்
தொழுதுகாண் கையர் தோன்ற வாழ்த்தி
எறிநீர் வையகம் வெலீஇய செல்வோய் நின்
குறுநீர்க் கன்னல்”
என்று உணர்த்துகிறது.
“கன்னலும் கிண்ணமும் நாழிகை வட்டில்”
என பிங்கல நிகண்டு கூறுகிறது. 1 நாழிகை என்பது 24 நிமிடம். கிண்ணம் எனப்படும் பாத்திரம் துளையைக்கொண்டது வாய்க்கால் நீரை பாசனத்திற்குப் பயன்படுத்துவோர் இக்கிண்ணத்தைப் பயன்படுத்துகின்றனர். 24 நிமிடங்களில் இதில் நீர் நிரம்பி விடுகிறது. ஒரு வயலுக்கு இத்தனை கிண்ணம் நீர் என அளவீடு செய்வது ஆத்தூர் வட்டாரத்தில் இன்றும் உள்ளது. பிங்கலநிகண்டு கூறும் கிண்ணம் நாழிகை வட்டிலே என நம்மால் உணரமுடிகிறது.
நாழிக்கும், நாழிகை வட்டிலுக்கும் ஏதேனும் தொடர்பு இருந்திருக்கலாம் என்று கருதவும் இடமுண்டு. ஏ.கே செட்டியர் தன்னுடைய பயணத்தின்போது இக்கிண்ணத்தை சேலம் மாவட்ட ஆத்தூர் பகுதியில் பார்த்ததாக தன்னுடைய பயணக்கட்டுரையில் குறிப்பிடுகிறார் என்பது குறிக்கத்தக்கது. இதுபோல இளம்பூரணரின் உரையில் உள்ள கலைச்சொற்களைப் பற்றி தனியாக ஆராயும் அளவுக்கு இடம் உள்ளது. எனவே இளம்பூரணரை கலைச்சொல்லாக்க முன்னோடிகளுள் ஒருவராகக் கருதலாம் என்று உணரமுடிகிறது.
ஆய்விற்குத் துணைநின்ற நூல்கள்
1.தொல்காப்பியம் – எழுத்ததிகாரம்
பதிப்பாசிரியர்
டாக்டர் கு.சுந்தரமூர்த்தி
அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு.
2.சங்க இலக்கியம்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு
சென்னை – 98
3.மூதுரை முப்பது
கழக வெளியீடு
4.தனிப்பாடல் திரட்டு
பாரி நிலைய வெளியீடு
5.தமிழரின் எண்ணியல் – ம.சோ.விக்டர்
நல்லேர் பதிப்பகம் – சென்னை – 04
6.தமிழ்நாடு – (பயணக்கட்டுரைகள்) – ஏ.கே.செட்டியர்.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் அ.ஜெயக்குமார்
உதவிப்பேராசிரியர்
தமிழாய்வுத்துறை
மஹேந்ரா கலை அறிவியல் கல்லூரி
நாமக்கல் – 637501
ஆசிரியரின் பிறக்கட்டுரைகள்