மனிதனானவன் தன் பிறப்பிலிருந்து இறப்பு வரை பல்வேறு நிகழ்வுகளையும் பருவங்களையும் கடந்து வாழும் ஒரு கூட்டமைப்பைச் சார்ந்த விலங்காவான். அவனுள் ஏற்படும் பருவ மாற்றங்கள் உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அவனுக்குள் நிறைய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.
ஆரம்பக் காலத்தில் காட்டுமிராண்டிகளாக இருந்த மனிதன் நாகரிக வளர்ச்சியின் காரணமாகப் பல்வேறு தடைகளைத் தகர்த்தெறிந்து தன் பகுத்தறிவால் மாற்றம், முன்னேற்றம், நவீனத்துவம் முதலானவற்றை அடைந்தவன். இவ்வகைப்பட்டப் பயணங்களில் அவன் பல்வேறுபட்ட நம்பிக்கைகளையும் சடங்குகளையும் ஆன்மீகம் – நம்பிக்கை என்ற இரண்டின் துணை கொண்டு நெறிப்படுத்தப்பட்டான். எஃப்.சி லாரன்ஸ் என்ற மேனாட்டு ஆய்வாளர்கள் பொதுவாக இத்தகைய சடங்கு நிகழ்ச்சிகளை ஆண்டு பட்டியலில் அமைந்த சடங்கு நிகழ்ச்சிகள், ஆண்டு பட்டியலில் அமையா சடங்கு நிகழ்ச்சிகள் என இரண்டாக வகைப்படுத்தலாம் என்கிறார். இவ்வகைச் சடங்கு முறைகளில் பெயர் சூட்டுதல் என்பது ஒருவகையாகும்.
பெயர்சூட்டும் மரபு என்பது தமிழ் இலக்கியத்தில் ஒரு பெரும் விழாவாகவே நிகழ்த்தப்பட்டு வந்திருக்கின்றது. பெயரிடுதல் என்பது ஒரு கலை. ஏனெனில் அவன் அதனை தன் பிறப்பு முதல் இறப்பு வரை சுமந்துச் செல்ல வேண்டும். சிலசமயம் இறப்புக்குப் பின்னும் இப்பெயர்கள் ஒருவனது வாழ்வைப் பிரதிபலிக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.
பழந்தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்ட பெயர்சூட்டும் முறைகள்
தமிழ் மரபுப் பெயர்களைப் பெரும்பாலும் இடம், வம்சம் தொடர்பான பொதுப்பெயர்கள், கற்பனைப் பெயர்கள், பட்டங்களால் வரும் பெயர்கள், கடவுள் சார்ந்த பெயர்கள் என வகைப்படுத்தலாம். பழந்தமிழர் மரபுப்படி தந்தை மற்றும் பாட்டனார், தாய் மற்றும் பாட்டியார் பெயர்களைத் தம் பிள்ளைகளுக்குச் சூட்டும் வழக்கம் இருந்து வந்துள்ளது. இதனை ‘சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே’ என்ற நற்றிணை வரியின் வாயிலாகவும், ‘எந்தைப் பெயரனை யாங்கொள்வோம்’ என்ற கலித்தொகைப் பாடல் வாயிலாகவும் அறியலாம்.
பெயர் சூட்டுதல் என்பது குழந்தைப் பிறந்த மூன்றாம் மாதத்தில் நடைபெறும் ஒரு சடங்கு நிகழ்வு. இவை கோவில்களிலும் இல்லங்களிலும் பொது இடங்களிலும் நடைபெறும் ஒரு விழா ஆகும். குலதெய்வப் பெயரைச் சூட்டும் மரபுகளைச் சிலப்பதிகாரம் சுட்டுகிறது. மாதவிக்கும் கோவலனுக்கும் பிறந்த குழந்தையான மணிமேகலைக்கு தங்கள் குலதெய்வத்தின் பெயரான ‘மணிமேகலை’ என்ற பெயரினை வைத்தனர் எனச் சிலப்பதிகாரம் உரைக்கின்றது. (சிலப்பதிகாரம் கதை 15, 25 -37)
இப்பெயர் சூட்டு விழாவினை ‘’நாம நல்லுரை நாட்டுதும்’’ எனச் சிலப்பதிகாரமும் – 15:26. நாமஞ்செய்த நன்னாள் என மணிமேகலையும் – 7:35, நாமம் தரித்தார் என சீவக சிந்தாமணியும் குறிப்பிடுகின்றன. பெயர் சூட்டும் விழா குழந்தை பிறந்த பன்னிரெண்டாம் நாள் நடைபெற்றதாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
“…………… தொகுத்தநாட் சச்சந் தண்ணே சுதஞ்சணணே தரணி கந்துக் கடன்விசயன்
தத்தன் பரதன் கோவிந்த னென்று நாமந்தரித்தாரே (சிந்தாமணி 2705)
என திருத்தக்கதேவர் குறிப்பிடுவார்.
“இத்தொடரில் ஈண்டுத் தொகுத்த நாள்’ என்பதற்கு 12 என்ற எண்ணாகத் தொகுத்த நாளிலே அப்புதல்வர்கள் பெயர்களைச் சுமந்தார் என்க என நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார் (சிலப்பதிகாரம் 2705 நச்சர் உரை) இதனை
“பத்து நாளும் கடந்த விரண்டா நாள்
எத்தி சையும் சயமரம் கோடித்து
மத்த மாமலை தாங்கிய மைந்தனை
உத்தானஞ் செய் துகந்தன ராயரே”’
என வரும் திருமொழி பாசுரம் (1:2:8) மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. பரிமேலழகர் (13 ஆம் நூற்றாண்டு) செவ்வியல் கால மரபினை அடியொட்டி தன் விளக்கத்தைத் தருகின்றார். யானைக்கட்சேய் மாந்தரன் சேரல் இரும்பொறை என்ற சரியான பெயருக்கு கோசீமாறன் யானைக்கட்சேய் மாந்தரன் சேரல் இரும்பொறை என்ற பெயரைக் குறிப்பிடுகிறார். கோ என்றால் மன்னன் என்ற அலுவலகப்பெயரைக் குறிக்கும், சேரமான் என்பது வம்சத்தைக் குறிக்கும், யானைக்கண் என்பது வித்தியாசமான குணத்தைக் குறிக்கும். சேய் என்பது இயற்பெயர் அல்லது பொதுப்பெயராகும். இரும்பொறை என்பது இணைப்பாகும். இவ்வாறு குடிப்பெயர் மற்றும் தொழிற்பெயரை மாற்றாது பெயர் சூட்டும் வழக்கம் பழங்காலத்தில் இருந்தே வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. .
“நாட்டுப்புறங்களில் நட்சத்திரம் பார்த்து பெயர் வைப்பதில்லை முதல் பிள்ளைக்கு பாட்டன் பெயரும் அடுத்த பிள்ளைக்கு கோவிலில் எழுந்தருளியிருக்கும் சுவாமியின் பெயரும் அதை அடுத்தவனுக்கு முருகக்கடவுள் பெயர்களில் ஒன்றையும் வைப்பார்கள் அல்லது தமிழ் பொது பெயர்களாகவே இருக்கும் வைணவம் சைவம் சார்ந்த பெயர்களாகவும் திருத்தல பெயர்களும் வைப்பர் என கூறுவார். (எங்கள் நாட்டுப்புறம் (1951) பக்கம் 115 -116.)
பெயரிடல் முறையில் காணலாகும் நம்பிக்கைகள்
குலதெய்வ பெயர்களையும் தம் முன்னோர்களின் பெயர்களையும் தன் குழந்தைகளுக்குச் சூட்டும் பொழுது அவர்கள் எப்போதும் நம்முடன் இருப்பது போலவும் குழந்தைகள் அவர்களின் ஆசியால் நோய்நொடியின்றி இருக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும் இவ்வகை பெயர் வைக்கும் சடங்கு முறைகள் அன்று முதல் இன்றுவரை தமிழகத்தில் பரவலாக காணப்பட்டு வருகின்றது .
பெயரிடல் முறைகளில் குலதெய்வம் மற்றும் முன்னோர்களின் பெயர்களும் இறப்புக்குப் பயந்து வைக்கப்பட்ட பெயர்களுமே அதிக அளவில் காணப்படுகின்றன. முந்தைய காலகட்டங்களில் தொடர்ந்து குழந்தைகள் இறப்பது மற்றவர்களின் கண் பட்டு விட்டதாலும் பில்லி சூனியம், நோய்கள், தெய்வ குற்றம் முதலானவற்றால் குழந்தைகள் இறக்கின்றனர் என மக்கள் நம்பினர். எனவே கடவுளிடம் வேண்டிக் கொண்டு அவர்களுக்கு மூக்கு குத்தி மேற்குறிப்பிட்ட பல்வேறு வகைச் சடங்கு முறைகளில் ஏதேனும் ஒரு பெயரினை வைப்பதன் மூலம் தொடர்ந்து குழந்தைகள் இறப்பதைத் தடுக்கலாம் என்ற நம்பிக்கை இன்றும் பெரும்பாலான கிராமப்புறங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
பெரும்பாலும் ஆண் குழந்தைகளுக்கு வலது பக்கத்தில் தான் காது குத்தப் படுகிறது. ஏனெனில் மனிதனின் உடலானது இரு கூறாகச் சமமாகப் பிரித்தால் வலதுபுறம் அதிகச் சக்தியை உடையது. எனவே நீண்ட ஆயுளைப் பெற வலதுபுறம் அதிக அளவில் மூக்கு குத்தப்படுகின்றது என்பது நம்பிக்கை
தமிழ்ப் பெயர்களின் மாற்றுப்பாதை
குடி, தொழில் அடிப்படையில் பெயரிடும் முறைமை மாறி குழந்தைகளுக்குப் பிறந்த நாள் நட்சத்திரம் பார்த்துப் பெயர் வைக்கும் முறைகள் பிற்காலத்தில் உருவாயின. எனவே சோதிடத்தின் வளர்ச்சியால் நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு பெயர்சூட்டும் வழக்கம் தமிழ் நிலத்தில் பரவத்தொடங்கியது.
இவற்றில் அசுவினி, ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், உத்திரம், அத்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி முதலான நட்சத்திரங்களின் அடிப்படையில் கணித்துப் பெயரிடும் வழக்கம் இன்று அதிக அளவில் பின்பற்றப்படுகின்றன. அதுவரை பல்வேறு அழகியத் தமிழ்ப் பெயர்களைத் தாங்கி வந்த தமிழ் நிலம் நீண்ட நெடிய பிறமொழிச் சொற்கள் அடங்கிய பெயர்களுக்கு இம்முறை வழிவகுத்தது என்றே கூறலாம். இதனால் கிரந்த எழுத்துக்களின் புழக்கம் அதிகமாயின. இதன் விளைவாகத் தமிழ்ப் பெயர்களில் ஸ். ஷ், ஹ, ஜ, ஜீ முதலான உச்சரிப்புகள் அடங்கிய பெயர்களின் வரத்து அதிகமாயின.. மனிதனின் பெயரே அவனது குடி அடையாளமாகும் பிறமொழி பேசும் மக்களின் வரவால் தமிழ்ப்பெயர்கள் மாற்றங்களுக்கு உள்ளாயின. பல நீண்ட சீர்களைக் கொண்ட பெயர்களின் வரவும் உருவாயின.
உலகின் பலநாடுகளில் நெடிய சீர்களைக் கொண்ட ஒரு பெயர், இருபெயர், மூன்று, நான்கு, பெயர்கள் அடங்கிய கூட்டுப் பெயர்களாக வைக்கும் முறை இருந்து வந்துள்ளது. இதில் குடிப்பெயர்களும் ஊர்ப்பெயர்களும் கூட சிலசமயங்களில் சேர்ந்து ஒட்டிக்கொள்ளும். இரு பெயர்கள் என நாம் கூறும்போது SURNAME, FIRST NAME, MIDDLE NAME, LAST NAME என இணையும். SURNAME என்பது தலைமுறை தலைமுறையாக வந்த தொழிற் பெயர் (Smith, Carpenter), ஊர்ப்பெயர் (பழனி, திருமலை) என்று பலவிதங்களாக இருப்பதை அறியலாம்.
இவ்வாறு காலத்தைக் கடந்து தமிழ்ப் பெயர்களின் வளர்ச்சிமுறை பயணித்து வந்துள்ளதை மேற்கண்ட சான்றுகளின் மூலம் அறிய முடிகின்றது. எனவே இழந்த நம் மொழியைச் சிதைந்த நம் மொழியைக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்., ஆக தமிழ் மக்களைத் தமிழில் பெயர்களைச் சூட்ட நெறிப்படுத்துவதில் இன்றைய சூழலில் தமிழாசிரியர்களைக் காட்டிலும் சோதிடர்களுக்கே பெரும்பங்கு உள்ளது. தாய்மொழியைத் தவிர்ப்பது என்பது பெற்றெடுத்த தாயைத் தவிர்ப்பதற்குச் சமம். கடந்தது கடந்துப் போகட்டும், இனி வரும் தலைமுறைக்காவது விழித்துக் கொண்டு தம் பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயரினைச் சூட்டுவோம் என அகமனதால் உறுதிமொழி ஏற்போம். வாழ்க தமிழ், வளர்க அன்னைத் தமிழின் புகழ்., நன்றி
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர். த. தினேஷ்
தமிழ் உதவிப் பேராசிரியர்
வி.இ.டி கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
ஈரோடு.