முன்னுரை
சங்கத்தமிழர்கள் காதலையும் வீரத்தையும் தங்களது இருகண்களாகப் போற்றினர். இத்தகைய காதல் பொருட்டும் வீரம் பொருட்டும் தூதுவிடும் முறை சங்ககாலம் தொட்டே நடைமுறையில் இருந்து வந்துள்ளதை அறிந்துகொள்ள முடிகின்றது. ஒருவருக்கொருவர் தங்களின் ரகசியக் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள இவ்வகைத் தூதுமுறை உதவுகின்றது. தூது செல்வோர்களைத் தூதுவர் எனவும் வேவுபார்போர்களை ஒற்றர்கள் எனவும் சங்கநூல்கள் குறிப்பிடுகின்றன. இவர்களின் வாழ்வியல் கூறுகளைப் பற்றியும் அரசமைப்பு முறைகளில் இவர்களின் பங்களிப்புகள் குறித்தும் இவ்வாய்வுக்கட்டுரையில் காண்போம்.
தூதின் இலக்கணம்
தூது என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றாகும். தமிழ் இலக்கிய நூல்களான இலக்கண விளக்கம், பிரபந்தத்தீபிகை, முத்துவீரியம், இரத்தினச்சுருக்கம், நவநீதப்பாட்டியல் ஆகியவற்றில் தூது குறித்த இலக்கணத்தைக் காணமுடிகின்றது. ஆனால் இது சங்ககாலம் தொட்டே வழக்கத்தில் இருந்துவந்துள்ளது. மன்னர்கள் ஓலைச்சுவடிகளிலோ அல்லது பட்டுத்துணிகளிலோ செய்திகளை எழுதி தூதுவர்கள், ஒற்றர்கள் மூலமாகக் குதிரையில் அனுப்புவது அக்காலத்தில் வாடிக்கை.
தூதுவர்கள்
தூது என்னும் தொழில் மிகவும் நல்லியல்புடைய ஒரு தொழிற்பிரிவாகும். இருநாட்டு மன்னர்களுக்கு இடையே பகை உண்டாகாமல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துபவரே தூதர் எனப்படுவர். தற்கால வழக்கில் கூறினால் ‘Ambassador’ எனும் சொல் நிலைத் தூதர்களையும் ‘Envoy’ என்பது தற்காலகத் தூதரையும் குறிக்கும். தூதர்கள் கல்வி, போர், சந்து செய்வித்தல் (“ஓதல் பகையே தூதிவை பிரிவே”, தொல். பொருள்:25) என்னும் மூன்று காரணங்களை முன்னிட்டுத் தங்கள் தலைநகரை விட்டுப் பிரியலாம் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. தூது உயர்ந்தோருக்கு உரியது. உயர்ந்தோர் என்பதற்கு “ஒழுக்கத்தானும் குணத்தானும், செல்வத்தானும், ஏனையரினும் உயர்வுடையவராதலின் உயர்ந்தோர் ஆவர்”1 என்பது இளம்பூரணர் கருத்து ஆகும். தூதுத் தொழில் அரசியலிலும், போர்ச்சூழலிலுமே பெருமளவு நிகழ்ந்தது என்றாலும் அகவாயில்களாகத் தூது செல்வதும் மரபாகக் கடைப்பிடிக்கப்பட்டது.
சங்க காலத்தில் காணலாகும் புகழ்பெற்ற தூது அதிகமான் நெடுமானஞ்சியிடமிருந்து தொண்டைமானிடம் ஒளவையார் சென்ற தூதேயாகும். (புறம்.93) புறப்பாடல்களில் அரசர்கள் போர் குறித்த செய்திகளைச் சொல்லத் தூதுவரை அனுப்புவர். ஒருக்கால் மன்னன் போர் குறித்து வீரர் பலரும் வந்து சேருமாறு தூது விடுத்தான். தூதுவன் கூறிய செய்தியைக் கேட்டு வீரர் பலரும் திரண்டனர் எனப் புறநானூறு குறிப்பிடுகின்றது. (புறம். 284, 1-2), மேலும் பதிற்றுப்பத்து பாடலொன்றும் தூதுவரைப் பற்றி,
“ஒடிவில் தெவ்வர் எதிர்நின்று உரைஇ
இடுக திறையே புரவெதிர்ந் தோற்கென
அம்புடை வலத்தர் உயர்ந் தோர் பரவ” (பதிற். 80:9-11)
என ’நும்மைக் காக்குடம் பாதுகாவற் பணியை மேற்கொள்வோனாகிய என் இறைவனுக்கு நீரும் திறை இட்டுப் பணிவீராக’ என்று சொல்லி ‘உயர்ந்த பண்புடையவராகிய நின் தூதுவர் நின்னுடைய அருங்குணங்களை எல்லாம் பாராட்டி எடுத்துக்கூறுவர் என அரிசில் கிழார் இரும்பொறையினைப் பாடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. இங்குத் தூதுவரைச் சிறந்த வலிமையானோர் என்றும் உயர்ந்த ஆற்றலுடையவர் என்றும் குறிப்பிடப்படுகின்றார். வயலைக்கொடி போல வாடிய இடையினையும், வருத்தந்தோய்ந்த நடையினையும் உடைய இளம் பார்ப்பான் இரவின்கண் வந்து உள்ளே சென்று சில சொற்களே சொன்னான். உடனே மதில் கோடற்கென்று வைத்திருந்த ஏணியையும், வாயில் கதவுக்கு வலியாக உள் வாயிற்படியிலே நிலத்தே வீழ இடும் மரமான சீப்பையும் களைந்துவிட்டனர். அதுபோன்றே வேந்தன் ஊர்ந்து செல்லும் யானையின் மணியும் களையப்பட்டது. என்னும் கருத்தமைந்த பாடல் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது,
“வயலைக் கொடியின் வாடிய மருங்குல்
உயவ லூர்திப் பயலைப் பார்ப்பான்
எல்லி வந்து நில்லாது புக்குச்
சொல்லிய சொல்லோ சிலவே யதற்கே
ஏணியுஞ் சீப்பும் மாற்றி
மாண்வினை யானையு மணிகளைந் தனனே” (புறம்.305)
என்ற இப்பாடல் பார்ப்பான் தூது சென்றதற்குச் சான்றாக அமைந்துள்ளது. வேந்தனொருவன் போருக்கு ஆயத்த நிலையில் இருந்தபொழுது, பார்ப்பான் சொன்ன செய்தியைக் கேட்டவுடன் ஏணியும், சீப்பும், யானையின் மணியும் களையப்பட்டன என்னும் செய்தியில் இருந்து பார்ப்பானும் தூது சென்றுள்ளனர் என்பது தெளிவு. இவர்கள் மட்டுமின்றி பாணர்கள், குறுநில மன்னர்கள், சீறூர் மன்னர்கள். புலவர்கள், முதலானோரும் தூது சென்றுள்ளனர். பண்டைய வேந்தர்கள் தம்முடைய ஆட்சி சிறக்க வேண்டி, நல்ல திறன் வாய்ந்த தூதுவர்களை நியமித்தனர். எனவே தூதருக்கும் – வேந்தருக்கும், தூதருக்கும் – அரசுக்கும் இடையே நல்லுறவு இருந்ததால் இவர்கள் சங்க காலத்தில் மதிப்பு வாய்ந்து காணப்பட்டனர். எனவே இவர்கள் முதல் நிலைத் தொழிற்பிரிவில் வைத்துப்போற்றப்பட்டனர்.
ஒற்றர்கள்
பகை நாட்டின் / அண்டை நாட்டின் நிகழ்வுகளை அறிவதற்கு அரசர்கள் ஒற்றர்களைப் பயன்படுத்தினர். இவர்கள் ‘ஒற்றர்கள்’ அல்லது ‘வேவு பார்ப்போர்’ என அழைக்கப்பட்டனர். சந்தேகப்படாத மாற்று உருவத்துடன், பார்த்தவர்க்கு அஞ்சாமல், அறிந்ததை யாருக்கும் வெளிப்படுத்தாமல் இருப்பவனே ஒற்றன். பகை நாட்டின் திட்டங்கள், சூழ்ச்சிகள், அரசியல் நிகழ்வுகள் முதலானவற்றை அறிந்து அவற்றைத் தம் அரசர்களிடம் தெரிவித்தல் இவர்களின் பணியாகும்.
வேவு பார்ப்போரைத் தமிழ் மன்னர்கள் அதிக அளவில் பயன்படுத்தினர். இவர்களின் தொழில் ‘ஒற்று’ அல்லது ‘வேய்’ எனப்பட்டது. நாட்டிலுள்ள நிலைகளை, மக்களின் நிலைகளை ஒற்றர்களின் மூலம் அரசு புரிபவன் அறிவானேயானால், அவன் மீதும் அரசின் மீதும் மக்கள் நம்பிக்கை வைத்துப் போற்றுவர். பிறநாடுகளுக்கு ஒற்றாடச் செல்வோர், பிறர் அறியாவண்ணம் உடை உடுத்தியும், பேசியும் பழகியும் நடித்தும் ஒழுகி வந்தாலும், சிலபோது பிறரால் அறிய நேர்வதுண்டு. இந்நிலையில் துன்பத்தைத் தாங்கிக் கொள்ளத் துணிந்தும், உயிரைவிட துணிந்தும் தம் தொழிலைச் செய்வர்.
‘ஒற்றினாகிய வேயே’ (தொல் பொருள்:58) இதில் வேய் என்பது ஒற்றருடைய அறிக்கை, ஒற்று என்பது அவர்கள் செய்யும் தொழில் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. புறத்தினையின் தொடக்க நிலையான நிரை கவர்வோரும், மீட்போரும் ஒற்றர்களை ஏவினர். இவ்வாறு “ஒற்றறிதல் நாட்டில் நெருக்கடி நிறைந்த காலங்களில் மட்டுமின்றி எல்லாக் காலங்களிலும் நிகழ்ந்து வந்துள்ளது”2. எதிரிப் படைகளிடமிருந்து செய்திகளைத் திரட்டிவந்த ஒற்றர்க்கு நிறையப் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது. மதுரைக்காஞ்சி குறிப்பிடும் ‘நாற்பெருங்குழுவில்’3 ஒற்றரும் ஒருவர் என்பார் நச்சர்.
பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் “அரசனின் அவையில் ஒற்றர்களுக்குத் தூதுவர்களைப் போல் அதிகாரமும், தகுதியும் வழங்கப்படவில்லை. தூதர்கள் பொது நிர்வாக அதிகாரிகள், எனவே அவர்கள் மரியாதையாக நடத்தப்பட்டனர். ஆனால் “ஒற்றர்களோ ரகசிய வேவு வேலைப் பார்ப்பவர்கள். அவர்கள் அகப்பட்டால் உடனே கொல்லப்படுவர்”4 என்ற ராமச்சந்திர தீட்சிதரின் கருத்து இங்கு ஒப்புநோக்கத்தக்கது.
உறையூரை ஆண்ட நெடுங்கிள்ளி என்னும் சோழ மன்னன் இளந்தகன் என்னும் புலவர், ஒருவரை ஒற்றன் எனக்கருதிக் கொல்ல முற்பட்டான். (புறம். 47) இதனை அறிந்த கோவூர்கிழார் கிள்ளிக்கு உண்மையினை எடுத்துக்கூறி அவ்விளந்தகனைக் காத்தார் என்பதை அறிய முடிகின்றது. அரசர் ஒரு செய்தியை அறிந்துவர மூன்று ஒற்றர்களை அனுப்புவர். அம்மூவருமே ஒருவரையொருவர் ஒற்றர் என அறியார். பின்னர் அவர்கள் மூவரும் அறிந்துவந்த செய்தியினைக் கேட்டு ஒப்பிட்டு உண்மையினை அறிவர். உள்நாட்டு மக்களையும் அயல்நாட்டு மக்களையும் மாறுவேடத்தில் வேவு பார்த்து வந்த இவர்கள் பல்வேறு வகைப்பட்ட சப்தங்களை ஏற்படுத்தி தங்களது செய்திகளைப் பரிமாறி வந்தனர். இவ்வாறாகத் தம் அறிவையும் திறமையும் பயன்படுத்திப் பணி செய்த ஒற்றர்களைப் பற்றிய சில குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணக்கிடைக்கின்றன. எனவே இவர்கள் சமுதாயத்தில் மிக முக்கியத் தொழில்களில் தம் உயிரைப் பணையம் வைத்து ஒற்றர்களாகச் செயல்பட்டதால் இவர்கள் சங்க அடுக்கமைவுச் சமுதாயத்தில் முதல்நிலைத் தொழிற்பிரிவினர்களில் இருந்திருக்கலாம் எனக் கருத இடம் இருக்கின்றது.
குறிப்புகள்
1.இளம் பூரணர் (உரை), 1973, தொல்,பொருள்.28, கழகம், பக்.30.
2.நச்சினார்க்கினியார் (உரை), தொல், பொருள்.58. கழகம். சென்னை
3.நச்சினார்க்கினியார் (உரை),1974 பத்துப்பாட்டு, உ.வே.சாமிநாதையர் (பதி), ப.396. உ. வே. சாமிநாதர் நூல் நிலையம், சென்னை.
4.VRR. Dikshiter : Mauryan polity, பக்.181. 5.https://www.tamilvu.org/ta/courses-degree-a031-a0311-html-a0311661-6941
பார்வை நூல்கள்
1.திவாகர நிகண்டு, திவாகரர்.
2.தமிழில் தூது இலக்கியம், முனைவர் வே.இரா.மாதவன்., அன்னம் பதிப்பகம், தஞ்சை-007.
3.பிரபந்தப் பாட்டியல் (மரபியல்-15), கு.சுந்தரமூர்த்தி, கழக வெளியீடு..
4.தொல்காப்பியம் (பொருளதிகாரம்), இளம்பூரணம், கழக வெளியீடு.
5.புறநானூறு, ஔவை துரைசாமிப்பிள்ளை, சாரதா பதிப்பகம், சென்னை-14, 2015.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர். த. தினேஷ்,
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
வி. இ. டி கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
(வேளாளர் கல்வி நிறுவனம்) ஈரோடு.