முன்னுரை
பழந்தமிழகம் சேர நாடு சோழநாடு பாண்டி நாடு என முப்பெரும் பிரிவுகளாக இருந்தது. சேர சோழ பாண்டிய நாடுகளேயன்றித் தமிழகத்தே கொங்கு நாடு,தொண்டை நாடு என்று இரு பிரிவுகள் உண்டு.இவற்றுள் கொங்கு நாடு என்னும் பிரிவு தொன்று தொட்டு இருந்து. சேர நாடு முதலிய 5 முறையே சேர மண்டலம், சோழ மண்டலம்,பாண்டிய மண்டலம், தொண்டை மண்டலம் எனவும் பெயர் பெற்று விளங்கியது.
கொங்கு நாடு
கொங்கு என்பதற்கு பல பெயர்கள் உண்டு. தேன் பூந்தாது குரங்கு என்று பெயர் உண்டு. குறிஞ்சி நிலம் முல்லை வளம்,மருதம் நிலமும் மிகுந்து காணப்பட்ட நாடு, மலையும் காடும் நிறைந்த நாடு தேன் மிகுந்த நாடு கொங்கு நாடு என்ற புகழ் பெற்றது. குன்று செழுநாடு என்றே சங்க கால புலவர்கள் புகழ் பாடி மகிழ்ந்தனார்.”குன்றும்,பல பின்னொழிய வந்தனன்” என்றனர். தேனும், பூந்தாதுகளும், குரங்குகளும் குறிஞ்சி நிலத்துக்குரியவை என்பர்.
சங்க இலக்கியத்தில் கொங்கு நாடு
”கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத்.தும்பி” (குறுந் *1)
இறையனார் பாடல் கொங்கு என்ற சொல்லைத் தேன் என்று பொருள் கொண்டு பாடினர். சிறுபாணாற்றுப் படையில்,
“கொங்கு கவர் நிலமும், செங்கண்சேல்” (சிறுபா*184)
எனக்கூறும். தேனை நுகர்கின்ற வண்டு என இதற்கு உ.வே.ச. உரைகூறினார். கொங்கு முதிர்நறு விழை” (குறிஞ்*83) என்ற குறிஞ்சிப்படல் பூந்தாது என்ற பொருளில் கூறியுள்ளார். தேன்நிறைந்த நாட்டை, கொங்குநாடு என்றே வழங்கினர். கொங்குநாட்டு அமைப்பு சங்ககாலத்திலேயே அமைந்துவிட்டது என்றும் கூறலாம்.
“கொங்கில் குரும்பில் குரக்குத்தளியாய்” – ஊர்த்தொகை
“கொங்கே புகினும் கூறை கொண்டா றலைப்பாரில்லை” – அவிநாசித் தேவாரம்
“கொங்கில் அணி காஞ்சிவாய்ப் பேரூரர் பெருனானை” – பேரூர் கோவில் திருப்பதிகம்
“கோதைநனி யாண்ட தொரு கொங்குவள நாடு”
என்று அருணகிரிநாதர் பாட பின் திருப்பேரூர் புராண ஆசிரியர் வர்ணித்து பாடியுள்ளார். அவிநாசிப்புராணம், கரூர்ப் புராணம், பவானிப்புராணம், திருச்செங்கோடுப் புராணம்,திருமுருகன்பூண்டிப்புராணம் முதலியபுராணங்களில் கொங்கு நாடு பற்றி அருணகிரிநாதர் தனது பாடல்களில் பாடியுள்ளார்.
கொங்கு நாட்டின் எல்லைகள்
கொங்குநாடு பழம்பெரும் நாடாகவும் பல சிறப்புகள் பெற்ற நாடாகவும் விளக்குகிறது. மேலும் பல குன்றுகளையும் காடுகளையும் கொண்டு மலை வளம் சிறந்த நாடாக திகழ்கிறது. நான்கு புறமும் மலைகளை அரனாக கொண்டு விளக்கு பழனி மலையும்,மேற்கில் வெள்ளி( வெள்ளியங்கிரி)மலையும், வடக்கில் தலைமலை, பெரும்பாலை கிழக்கில் குளித்தலை,மதில் கரை என்று சொல்லப்படுகின்ற மதுக்கரையையும் எல்லையா கொண்ட கொங்குநாடு விளங்குகிறது. கொங்கு சோழர்கள் ஆட்சியில் கொங்கு நாடு ஏழு மண்டல பிரிக்கப்பட்டிருந்தது.கொங்கு நாட்டை அதிராச மண்டலம் என்று பிரித்தனர். 13 ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசு தோன்றியது காலகட்டில் இசைய நகர பேரரசு கொங்கு நாட்டை 24 நாடுகளாக பிரித்தது நாயக்க மன்னர்கள் பிரதிநிதிகளாக இருந்து ஆட்சி செய்தார்கள் என்ற செய்தியும் உண்டு. இலக்கியங்கள் ஆவணங்களும் பிற்கால கல்வெட்டுகளும் குறிப்புகளை தருகின்றன
கொங்கு மண்டல 24 நாடுகள்
கொங்கு நாட்டில் 24 நாடுகளும் இணை நாடுகளும் இணைந்துள்ளன என்பது பற்றி கொங்கு மண்டல சதகம் குறிப்பிட்டுள்ளது. அவை தற்கால அமைப்புப்படி கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, கரூர், நாமக்கல், பல்லடம், பழனி, தாராபுரம், தர்மபுரி ஆகியன கொங்கு நாட்டில் அடங்கி இருந்தன.
1. பூந்துறை நாடு – ஈரோடு, திருச்செங்கோடு, வட்டங்கள்
2. தென்கரை நாடு – தாராபுரம், கரூர், வட்டப்பகுதிகள்
3. காங்கேய நாடு – தாராபுரம், காங்கேயம் பகுதிகள்
4. பொங்கலூர் நாடு – பல்லடம், தாராபுரம் வட்டப்பகுதிகள்
5. ஆரை நாடு – கோவை, அவினாசி, வட்டப்பகுதிகள்
6. வாரக்கா நாடு – பல்லடம், பொள்ளாச்சி வட்டப்பகுதிகள்
7. திருஆவின் நன்குடி நாடு – பழனி, உடுமலை, வட்டப்பகுதிகள்
8. மணநாடு – கரூர், வட்டம் தெற்கு பகுதி
9. தலையூர் நாடு – கரூரின் தெற்கு, மேற்குப் பகுதிகள்.
10. தட்டயூர் நாடு – குளித்தலை வட்டம்
11. பூவாணிய நாடு – ஓமலூர், தர்மபுரி வட்டப்பகுதிகள்
12. அரைய நாடு – ஈரோடு, நாமக்கல், பகுதிகள்.
13. ஒடுவங்கநாடு – கோபி வட்டம்
14. வடகரைநாடு – பாவனி வட்டம்
15. கிழங்கு நாடு – கரூர், குளித்தலை வட்டம்
16. நல்லுருக்கா நாடு – உடுமலைப்பேட்டை
17. வாழவந்தி நாடு – நாமக்கல் வட பாகம், கரூர்
18. அண்ட நாடு – பழனி வட்டம் , தென்கீழ்ப்பகுதி
19. வெங்கால நாடு – கரூர் வட்டம் , கிழக்குப்பகுதி
20. காவழக்கால நாடு – பொள்ளாச்சி வட்டம்
21. ஆனைமலை நாடு – பொள்ளாச்சி தென்மேற்கு
22. இராசிபுர நாடு – சேலம், ராசிபுரம், கொல்லிமலை
23. காஞ்சிக் கோயில் நாடு – கோபி, பவானிப் பகுதி
24. குறும்பு நாடு – ஈரோடுப் பகுதி
என்றவாறு கொங்கு மண்டலம் 24 பகுதிகளாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
கொங்கு நாடு மலைகள்
ஒதியமலை, குருந்தமலை சிரவணம் பட்டிமலை, மருதமலை, ரத்தினகிரி, பாலமலை, பெருமாள்,வெள்ளியங்கிரிமலை, ஆனைமலை, பொன்மலை, திருமூர்த்தி மலை, செஞ்சேரிமலை அழகுமலை, குமார மலை ஊதியூர்மலை, சிவன் மலை, சென்னிமலை, கைதித்தமலை, அலகுமலை,பெருமாள் மலை, தவளகிரி, குன்றத்தூர், பச்சை மலை, பவளமலை, பாலமலை,நாக மலை,ஊராட்சிக் கோட்டை மலை,மாதேசுவரன் மலை, சங்ககிரி, மோரூர் மலை, திருச்செங்கோடு, கொங்கணமலை, கொல்லிமலை, சேர்வராயன் மலை, ஏற்காடு, கந்தகிரி நாமக்கல் – கொல்லிமலை, கபிலர் மலை, நைனாமலை, தான்தோன்றி மலை, வெண்ணெய் மலை, புகழிமலை,ஐவர் மலை, பழனி மலை ,கொண்டல் தங்கி மலை என்று பல மலைகளையும் இயற்கை வளங்ளோடு கொண்டுள்ளது
கொங்கு நாட்டுக் கோட்டைகள்
கோயம்புத்தூர், சத்தியமங்கலம், கொள்ளேகால், தணாய்க்கன், பொள்ளாச்சி, ஆனைமலை, திண்டுக்கல், தாராபுரம், பொன்னாபுரம், பெருந்துறை, எழுமாத்தூர், ஈரோடு, காங்கேயம், கரூர், விஜயமங்கலம், அரவக்குறிச்சி, பரமத்தி, பவானி, மோகனூர், நெருஞ்சிப்பேட்டை, மேட்டூர், சரம்பள்ளி ,காவேரிபுரம், சேலம், தகடூர், ராயக்கோட்டை, அமதன் கோட்டை, ஓமலூர், காவேரிப்பட்டினம், தேன்கனிக்கோட்டை, பெண்ணகரம், பெரும்பாலை, சோழப்பாவு, தொப்பூர், அரூர், தென்கரைக்கோட்டை, ஆத்தூர், சேந்தமங்கலம், நாமக்கல், சங்ககிரி, கனககிரி,மகாராசக்கடை தட்டைக்கல் துர்க்கம், இரத்தினகிரி, சூளகிரி ஆகிய பகுதிகளில் கோட்டைகள் இருந்தன என்று வரலாற்று ஆய்வுகள் கூறுகிறது.
14 ஆம் நூற்றாண்டு வரை இந்தக் கோட்டைகள் பெருமையுடன் இருந்தன. குறுநில மன்னர்கள் ஆண்டனர். 15 ஆம் நூற்றாண்டுக்குப்பின் முகமதிய, ஆங்கிலேயப் படையெடுப்பால் அழிந்தன. திண்டுகள், நாமக்கல், கோட்டைகள் மட்டும் அழியாமல் இருக்கின்றன. சங்ககிரி, கிருஷ்ணகிரி, மகராஜக் கடை ஆகிய கோட்டைகள் சிதைந்துள்ளன. பிற முழுதும் சிதைந்து போயின. குறுநில மன்னர்களுடன் கோட்டைகளும் அழிந்து போயின என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொங்கு நாட்டின் புனித நதி மற்றும் ஆறுகள்
கொங்கு நாட்டு நதிகளும், புண்ணியத் தலங்களும், சிறப்பானவை. குடகிலே பிறந்த காவிரி கொங்கிலே தவழ்ந்து, சோழ நாட்டிலே தாயாகிச் சிறக்கின்றாள். கொங்கின் தவமணியாகப் பவனி வருகிறது. பவானியாறு, வெள்ளி மலையில் பிறந்து காஞ்சியாறு பேரூர், வழியாக வந்து நொய்யல் நதியாக, நொய்யல் காவிரியில் கலக்கிறது. ஆன் பெருனை என்று இலக்கியங்கள் புகழும் அமராவதி கரூர் அருகில் காவிரியில் கலக்கிறது.
அவிநாசி, நாமக்கல், பவானி, வெண்ணைய் மலை, சென்னிமலை, கொல்லிமலை அறைப்பள்ளி, ஈசன், வேஞ்மாக்கூடல், திருமுருகன், பூண்டி, ஆகியன புண்ணியத்தலங்களாம். “கொங்கு மலிந்தால் எங்கும் மலியும்” என்பது பழமொழி. கொங்கு நாடு சங்க காலம் தொட்டே வறட்சியும், வளமும், மாறி மாறிப் பெற்று வந்துள்ளது. மலைவளம் மிக்க கொங்கு நாடு மழை நலங் கெட்டு அவ்வப்போது வறட்சியாலும், வாடி வந்துள்ளது. இந்த நாடே வளமாகுமானால் தமிழகத்தின் எல்லா நாடுகளும் வளம் பெற்றிருக்கும் என்பதையே இப்பழமொழி உணர்த்தும்
சரவணபவனின் தொண்டர்களைப் புனித நீரால் தூய்மைப்படுத்தும் சண்முக நதி. கொல்லியாறு அறைப்பள்ளி ஈசன் திருவடி வணங்கி ஐயாறாக இழிந்து காவிரியில் கலக்கிறது. கொல்லி மலையின் கரைபோட்டான் ஆறு, பாலையாறு, வாழையாறு, நள்ளாயாறு, குடவாறு, தொப்பையாறு, திருமணிமுத்தாறு, ஆகிய நதிகளும் கொங்கு நாட்டில் புண்ணியத் தலங்கள் எங்கும் புகழ்பெற்றனவாம். திருப்பாண்டிக் கொடுமுடி, காஞ்சிவாய்ப் பேரூர் திரு ஆவின் நன்குடி, திருச்செங்கோடு, திருஆநிலைக் கரூர், ஆகியன பாடல் பெற்ற தலைங்களாம்.
தேவார பாடல் பெற்ற தலங்கள்
அவிநாசி, திருமுருகன் பூண்டி பவானி, திருச்செங்கோடு, கொடுமுடி கரூர், வெஞ்சமாக் கூடல் ஆகிய 7 திருத்தலங்களும் அப்பர் சம்பந்தர் சுந்தர் ஆகியோர் தேவாரம் பாடுபட்ட திருத்தலமாகும்.
திருப்புகழ் பாட பெற்ற தலங்கள்
பழனி, செஞ்சேரிமலை, முட்டம்,கோவை, குருடிமலை, அவிநாசி, விஜயாபுரம், பழனி, கனககிரி, பேரூர், மருதமலை, ஓதிமலை, திருமுருகன் பூண்டி, விஜயமங்கலம், பவானி, கடபுரம், தீர்த்தமலை, கொங்கணகிரி, கொல்லிமலை, புகழிமலை, நெரூர், கண்ணாபுரம், சிவன்மலை, கீரனூர், திருச்செங்கோடு, சேலம், ராசிபுரம், ஏழுமலை கொடுமுடி, கரூர், காங்கேயம், சென்னிமலை, வெஞ்சமாக் கூடல் ஆகியோர்களில் திருப்புகழ் பாடப்பட்ட புனித தலங்களாக பார்க்கப்படுகிறது.. (கொ. நா. பு. கு)
கொங்கு நாட்டில் புராணம் பெற்ற தலங்கள்
பேரூர்ப் புரணம், துடிசைப் புராணம், அவிநாசிப் புராணம், திருமுருகன் பூண்டிப் புராணம், பவானிப்புராணம் திருச்செங்கோடுப்புராணம் ,பூத்துறைப்புராணம், சென்னிமலைப்புராணம், சிவன்மலைப்புராணம், தாராபுரத்தலப்புராணம், திருமூர்த்தி மலைப்புராணம், பழனி தலப் புராணம், வெஞ்சமாக் கூடல் புராணம், கரூர்ப்புராணம், கொடுமுடிப்புராணம், குரக்குத்தளிப்புராணம், சேவூர்ப்புராணம், செஞ்சேரிகிரிப்புராணம், அன்னியூர் தலப்புராணம், கவசைப் புராணம், காரமடைப்புராணம், திருவெள்ளூர்ப்புராணம், தீர்த்தகிரிப்புராணம், கரபுரதலப் புராணம் ஆகிய புராணங்கள் கொங்கு நாட்டில் இயற்றப்பட்டு எழுதப்பட்டது. (கொ. நா. பு. கு)
கொங்கு நாட்டில் சங்க கால தலைவர்கள் மற்றும் பிற்கால தலைவர்கள்
சங்க காலத் தலைவர்கள்
பேகன், அதியமான், ஓரி, குமணன், கடிய நெடுவேட்டுவன், நன்னன், பூந்துறை, ஈந்தூர்க்கிழான், கொண்கானங் கிழான், விச்சிக்கோ, தாமன் தோன்றி கோன், மோகூர்ப் பழையன்
பழைய கோட்டைக் சர்க்கரை, அழகன் சர்க்கரை, பெரியன் சர்க்கரை, சேனாபதி சர்க்கரை, சம்மந்த சர்க்கரை, நல்லதம்பி சர்க்கரை, சொட்டைப்படை, மும்முடிப் பல்லவராயர், பல்லவராயன் சிறுவன், காடையூர் காங்கேயர், கொற்றை வேணாடுடையார், மோரூர் காங்கேயர், சூரிய காங்கேயன், பொப்பண காங்கேயன், காங்கேயன்,நல்லதம்பி காங்கேயன்,குமார காங்கேயன், மசக்காளி மன்றாடியார், முளசை வேலப்பன்,கோபண மன்றாடி, வணங்காமுடி வாணராயன், காளிங்கராயன்,, பாரியூரான், செய்யான் பல்லவராயன், உலகுடையன், ஐவேலசதி, அகளங்கன், பூத்துறைக் குப்பிச்சி, வணக்காமுடிக்கட்டி, அல்லாளன் இளையான், தொண்டை மான், அருமைப் பிள்ளை, தீரன் சின்னமலை, கொல்லி மழவன், சீயகங்கன், வரபதி யாட்கொண்டான், கொங்கு மங்கலை ஆகியோர் கொங்கு நாட்டில் சங்க கால தலைவர்கள் மற்றும் பிற்கால தலைவர்களாக சிறப்பாக ஆட்சி செய்து வந்தனர் பெரும் புகழும் வீரத்தையும் இந்த மண்ணில் விதைத்தனர்.
முடிவுரை
கொங்கு நாடு என்பது பல சிறப்புகளையும் புகழையும் கொண்ட பகுதியே ஆகும். இங்கு இயற்கை வளமும் மலை வளமும் கனிம வளங்களை கொண்டு சிறப்பாக அமையப்பெற்றது. அனைத்து தொழில்களுக்கும் அனைத்து மக்களுக்கும் அனைத்து சமுதாயத்திற்கும் அடைக்கலம் கொடுத்து வாழ்விலே மேம்படுத்தி வந்தோரை வாழ வைத்து கொண்டு இருக்கிறது கொங்கு நாடு…
பார்வை நூல்கள்
1.கொங்கு நாடு -புலவர் குழந்தை
2.கொங்கு நாட்டு வரலாறு -கோ. ம. இராமச்சந்திரன் செட்டியார்
3.கொங்கு வேளாளர் கவுண்டர்களின் வரலாறும் பண்பாட்டும்- கவியருவி தே. ப. சின்னசாமி கவுண்டர் M.A, M.Ed
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
வெ. கெளதம்,
துறைத்தலைவர் மற்றும் உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
சசூரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
விஜயமங்கலம்,
திருப்பூர் மாவட்டம்.