கிராமத்துச் சிறுகதைகள்
அந்த இடத்தில்தான் நாய்கள் எல்லாம் ஒன்று கூடின. எங்கெங்கிருந்தோ நாய்களெல்லாம் வந்த வண்ணம் இருந்தன. பணக்கார நாய்களிலிருந்து தெருநாய்கள் வரையும் சில வெளிநாட்டு நாய்களும் வௌவ் வௌவ் என்று குலைத்துக் கொண்டும் வாலை ஆட்டிக்கொண்டும் இங்கிட்டும் அங்கிட்டும் நடப்பதுமாய் போவதுமாய் இருந்தன. கூட்டத்தில் வந்திருந்த நாய்கள் அனைத்தும் தன்னுடைய சாதி நாய்களுடன் சேர்ந்து நின்று கொண்டன.
போர் வீரனுக்கு இணையான ஆற்றலைப் படைத்த ராஜபாளையம் நாய், வேகமாக ஓடுவதும் புத்திசாலிதனமான சிப்பி பாறை என்கிற நாய், அலங்கு, கோம்பை, மலையேறி, கன்னி, டாபர்மேன், ராட்வீலர், லாப்ரடோர் போன்ற நாய்களும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டன.
ராஜபாளையம் நாய்தான் அந்தக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தது. முக்கியமாக வரவேண்டிய நாய் இனங்கள் அனைத்தும் வந்து விட்டனவா என்று ஒருமுறை பார்த்துக்கொண்டு பேச ஆரமித்தது,
”நாம இங்கு எதற்கு கூடி இருக்கின்றோம் தெரியுமா? ”
”தலைவரே, நீங்களே சொல்லி விடுங்கள்” என்றது மலையேறி
“இந்த உலகத்துல ஆட்டுக்குச் சந்தை இருக்கு. மாட்டுக்குச் சந்தை இருக்கு. அதைபோல நமக்கும் இந்த மக்கள் சந்தைகள் வைக்கனும். அப்பதான் நம்முடைய மதிப்பு இந்த மனுச பயலுக்கெல்லாம் தெரியும்”
”நீங்க சொல்றது சரிதான் தலைவரே! ஒரு பயலும் எங்கள மதிக்க மாட்டங்குறான். கேவலமா வேற பாக்குறான். அதனால நமக்கும் சந்தை வச்சி பணத்தால மதிப்பிடறபோதுதான் எங்களுக்கும் கௌரவம் அதிகமாகும் இல்ல” என்றது தெருநாய்களெல்லாம் கூட்டாக..
இதற்கெல்லாம் என்ன செய்யலாம் என்று நாய்களெல்லாம் யோசனை செய்து கொண்டிருந்தன. இறுதியாக நம்மை படைத்த சிவனிடம் சென்று முறையிடலாம் என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி ஒரு நல்ல நாளில் கைலாயத்திற்கு நாய்கள் எல்லாம் சென்றன.
நாய்கள் எல்லாம் கூட்டாக வந்ததைப் பார்த்தவுடன் கைலாயித்தில் இருக்கும் சிவபெருமான் ஒருநிமிடம் ஆடிப்போய்விட்டார். ஏதோ பிரச்சனையைக் கொண்டு வருகிறார்கள் என்று மட்டும் அவர் மனதில் தோன்றியது.
“எங்களுக்கென்று சந்தை ஒன்று வேண்டும். நாங்களெல்லாம் கூட்டாக இருக்க வேணடும். எங்களையும் மதித்து பணம் கொடுத்து இந்த மக்கள் வாங்க வேண்டும். இந்த உலகத்தில் எங்களுக்கு மதிப்பும் மரியாதையும் இருக்க வேண்டும்” என்று சிவபெருமானிடத்தில் நாய்களெல்லாம் கோரிக்கை வைத்தன.
”வந்திருந்த நாய்களைப் பார்த்துச் சிவபெருமான் சிரித்தார். அவரவர் நிலைகளுக்கு ஏற்பதான் ஒவ்வொரு உயிரும் படைக்கப்பட்டுள்ளன. அதனால் இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம். வீட்டை காவல் காக்கவும் காவல் துறைக்கும் உங்களுடைய செயல்பாடுகள் மகிழ்ச்சி தருவனதாகவே இருக்கிறது. மக்கள் அனைவரும் உங்களை நண்பனாகவே பார்க்கிறார்கள். அதனால் போய் வாருங்கள்” என்றார் கடவுள்.
நாய்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றின் முகத்தைப் பார்த்துக் கொண்டன. சில மணித்துளிகள் வௌவ் வௌவ் என்று குலைத்துக் கொண்டன. அவ்விடத்தை விட்டு யாரும் நகரப் போவதாக இல்லை.
”என்னவாயிற்று” என்று சிவபெருமான் கேட்டார்
”எங்களுக்கு சந்தை வைக்க அருள் புரிய வேண்டும். இல்லையென்றால் நாங்கள் அனைவரும் இங்கிருந்து போகமாட்டோம்” என்றன கூட்டாக..
கடவுள் யோசனை செய்தார். நாய்களை அழைத்துக்கொண்டு பூமிக்கு வந்தார். முதலில் மாட்டுச் சந்தைக்குக் கூட்டிச்சென்றார். சந்தையில் மாடுகள் விற்கப்பட்டன. வாங்கப்பட்டன. வாங்கிய மாடுகளைக் கூட்டாகப் பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. இரவு முழுவதும் அதுஅது பாட்டுக்கும் தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வைக்கோலை உண்ணுவதும் அசைப்போடுவதுமாய் இருந்தன.
அடுத்து ஆட்டுச் சந்தைக்குக் கடவுள் கூட்டி வந்தார். அங்கும் அமைதியாகவே சந்தை நடந்தது. சரியென்று பறவைகளிடத்தில் கூட்டிச்சென்றார். மரத்தில் காக்கை ஒன்று உட்காந்திருந்தது. கடவுள் காக்கைக்கு உணவு இட்டார். காகம் மரத்தை விட்டு பறந்து ஓடியது. காகம் பறந்து ஓடியதைப் பார்த்த நாய்கள் சிரித்தன. கொஞ்ச நேரத்தில் சென்ற காக்கை மீண்டும் தன் கூட்டத்தோடு திரும்பி வந்தன. அனைத்து காக்கைகளும் ஒன்றாகச் சேர்ந்த அந்த உணவினைச் சாப்பிட்டன.
அடுத்துக் கறிக்கடைக்காரர் இடத்திற்குக் கடவுள் வந்தார். தேவையில்லாத எலும்பு துண்டுகளைக் கீழே கொட்டினார். கடவுள் கூட வந்திருக்கும் நாய்கள் அனைத்திற்கும் நாவில் எச்சில் ஊறின. அனைத்து நாய்களும் எலும்பு துண்டுகளையே பார்த்துக்கொண்டிருந்தன. கடவுள் நாய்களிடத்தில் திரும்பி ஏதோ சொல்ல வாயெடுத்தார். அதற்குள்…
எலும்பு துண்டுகளைச் சாப்பிட கூட்டாக வந்த நாய்கள் ஒவ்வொன்றும் குலைத்துக்கொண்டன. அடித்துக்கொண்டன. முறைத்துக் கொண்டன. பற்கள் தெரிய கத்திக்கொண்டன. கடவுள் எவ்வளவு சமாதானப்படுத்த முயற்சி செய்தும் ஒன்றும பலனளிக்கவில்லை. வந்த வழியே கடவுள் மீண்டும் கயிலாயத்திற்கே சென்றார்.
குறிப்பு : சேலம் மாவட்ட கிராமத்துச் சிறுகதைகள்
சிறுகதையின் ஆசிரியர்
முனைவர் க.லெனின்
உதவிப்பேராசிரியர்,
எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.