ஒலியும்! ஒளியும்!!|சிறுகதை|முனைவர் க.லெனின்

ஒலியும் ஒளியும் - முனைவர் க.லெனின்
“அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்
  
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
 
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
 
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்”

           என்று ஆல் இந்தியா ரேடியோவில் பாடல் பாடிக்கொண்டிருந்தது. அந்தப் பாடலில் சிறுவன் குமரன் லயித்துபோயிருந்தான். அங்கிருக்கும் வீடுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாய்தான் ரேடியோக்கள் இருக்கின்றன. அதிலும் ரேடியோக்களில் இருந்து ஒலிக்கின்ற பாடல் அந்தப்பக்கம் போவோரை நின்று கேட்டுவிட்டுதான் போகத்தோன்றும். “சத்தத்தைக் கொஞ்சம் ஜாஸ்தியா வையுங்களேன்” என்று ஒருசிலர் வாய்விட்டே கேட்பார்கள். அந்தக்காலத்தில் ரேடியோக்களில் பாட்டுக் கேட்பது என்பது ஒரு அலாதியான சுகம்தான். ரேடியோ வைத்திருந்தாலே அவர்கள் வீடு பெரிய வீடுதான். எத்தனை எருமை மாடுகள் உள்ளன. எத்தனை பசு மாடுகள் உள்ளன. எத்தனை ஆட்டுக்குட்டிகள் உள்ளன என்பது போய் இப்போது ரேடியோ இருக்கிறதா… அப்போ அவன்தான் பணக்காரன். ரேடியோ வைத்திருப்பவர்களும் தங்களைக் கொஞ்சம் பிகுபண்ணி அதிகமாகவே காட்டியும் கொள்வார்கள்.

        அன்றைய நாளில் ஒரு வீட்டின் முன்வாசல் ஓரமாய் விளையாடுவது போல சிறுவர்கள் குமரன், ஆனந்த், பாபு, சங்கர் ஆகியோர் எம்.ஜி.ஆரின் ரம்மியமான பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். மண்ணில் குழியைத் தோண்டி தேங்காய் ஓட்டை மூடியபடி மணல்வீடு கட்டிக்கொண்டு இருந்தார்கள்.  அவர்களின் விளையாட்டு ஒருபுறம் இருந்தாலும் பாடல்கள் கேட்பதில்தான் அச்சிறுவர்கள் உன்னிப்பாக இருந்தார்கள். இப்போதும் கூட யாரோ உள்ளிருந்துதான் பாடல்களைப் பாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று அச்சிறுவர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். அதுகூட அவர்களுக்கு அந்த ஊருக்கு வந்த நாடோடி ஒருவன் சொல்லிவிட்டுப் போனதுதான். சின்ன பெட்டிக்குள்ள எப்படி ஒரு ஆள் உள்ள போயி பாட முடியும் என்று நிறைய நாட்கள் ரேடியோவைப் பற்றி அச்சிறுவர்கள் பேசியிருக்கிறார்கள். எம்.ஜி.ஆரின் பாடலை ரசித்துக் கொண்டிருந்தபோதுதான் வேகவேகமாய் ஓடி வந்தான் செல்வம். தலையைக் குனிந்து கொண்டு உவ்வே..உவ்வே.. எச்சிலைத் துப்பினான். ஓடி வந்ததில் செல்வத்திற்குத் தொண்டை அடைத்துப் போனது. இன்னமும் மூச்சி வாங்கிக்கொண்டே இருந்தான். இடையிடையே பேசவும் வாயெடுத்தான்.

“கொஞ்சம் மூச்சி வாங்கிக்கோடா… எதுக்கு இப்படி ஓடீயாந்த.. என்ன வச்சிருக்க.. ” குமரன்தான் கேட்டான்.

“கட்டமா சின்னதா பெட்டி மாதிரி இருக்குடா… அதுக்குள்ள ஆம்பளையும் பொம்பளையும் சேர்ந்து பாட்டுப் பாடிகிட்டே டேன்ஸ் ஆடுறாங்கடா” மூச்சிறைக்க சொன்னான் செல்வம்.

“கனவு ஏதாவது கண்டியாடா” என்றான் சங்கர்.

“இல்ல நிஜமாலுந்தான் சொல்றன். நான் பாத்தேன். இதுவரை பாட்ட நாம ரேடியோக்கள்ளதான கேட்டுட்டு இருந்தோம். அங்க பாட்டோட ஆளுங்களும் தெரியறாங்க” கண்ணை விரித்து மனசு பறந்து கைகள் ஆட்டி சொன்னான் செல்வம்.

“எங்கடா.. யார் வீட்டுல பாத்த..” பரபரப்புடன் கேட்டான் ஆனந்த்
.
“நம்ம கிராமத்துல கடைசி வீட்டுக்கு ஒரு டாக்டர் குடி வந்திருக்கார்ல்ல..”
“ஆமா வந்திருக்கிறாரு.. அவரு வந்து பதினைஞ்சு நாளுக்கு மேல ஆகுது. அவருக்கென்ன?” பாபுதான் அவசரப்பட்டான்.

“அவருக்கெல்லாம் ஒன்னுமில்ல. அவரோட வீட்டுக்கு இன்னிக்குதான் வீட்டு பாத்திரமெல்லாம் வண்டியில வந்து இறங்கினிச்சு. பொருளையெல்லாம் இறக்கிறதுக்கு எங்க அப்பா கூட நானும் அவுங்க வீட்டுக்குப் போயிருந்தேன். வண்டி நிறைய சாமான்கள்தான். எதுஎது எதுக்கின்னே தெரியல. அப்பதான் அங்கிருந்த பொட்டிய பாத்தேன்.  அது என்னன்னு கூட எனக்கு தெரியல. கொஞ்ச நேரத்துல அந்தப் பொட்டிய கரண்ட்ல சொருவுனாங்க.  அப்பதான் அதை பாத்தன். பொட்டி முழுக்க வெள்ளையா இருந்தது. உன்னிப்பா கவனிச்சுப் பார்த்த போதுதான் ஆம்பளையும் பொம்பளையும் டேன்ஸ் ஆடிக்கிட்டே பாட்டு பாடிக்கிட்டு இருந்தாங்க. நான் பிரமிச்சுப் போயிட்டேன். அந்த வீட்டுல இருந்து வரதுக்கு மனசே வரல” சோகத்துடன் சொன்னான் செல்வம்.

செல்வம் சொல்ல சொல்ல குமரனுக்கு எப்படியாவது அந்தப் பொட்டிய பாத்துப்புடனுமுன்னு நினைச்சான். கிராமத்தில் கிழக்குப் பக்கமா இருக்குற அந்த வீட்டுக்கு ஓடினான். அந்த வீட்டுக்கு இதுக்கு முன்னாடி பலமுறை வந்திருக்கிறான். ஆனால் அப்பொழுதெல்லாம் அது தேங்காய் குடோனோவாகத்தான் இருந்தது. ஆனால் இன்று கூட்டி மொழுகி அழகாய் வீடு போல்தான் தோன்றியது. வாசலில் பெரியதாய் கோலம் போடப்பட்டிருந்தது. கண்டிப்பாக நம்மூர்க்கார பெண்கள்தான் போட்டிருக்க வேண்டும் என்று நினைத்தான். கேட்டைத் தாண்டி தயங்கியபடியே உள்ளே நுழைந்தான். ஓட்டு வீடு என்றாலும் இன்றைக்கு என்னமோ புதுவீடு போல இருந்தது. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தான் குமரன்.  வீட்டினுள்ளே டாக்டர் சேரில் உட்காந்து கொண்டிருந்தார். உள்ளே நுழைந்த குமரனைப் பார்த்து,

“என்னப்பா… யார் நீ? உனக்கு என்ன வேண்டும்” என்று கேட்டார்.

குமரனின் கண்கள் அந்த அறை முழுவதும் தேடின. ஆம்! பார்த்து விட்டன கண்கள்! ஆச்சர்யம்! ஆனந்தம்! வியப்பு! எல்லாம் ஓரெங்கே குமரனின் முகத்தில். புன்னகைத்தான். சிரித்தான். அந்தப் பெட்டியப் பார்த்து, “அது என்ன? அதுக்கு பேரு என்ன?” என்றான் குமரன்.

”டிவி..“ என்று அமைதியாய் பதில் சொன்னார் டாக்டர்.

“டிவி..டிவி… ஆ…” வாயைப் பிளந்தான் குமரன்.

“இது என்ன பண்ணும்? மனுஷங்க உருவமெல்லாம் தெரியுதே! எப்படி தெரியுது? இவங்கெல்லாம் யாரு? இதுக்குள்ள எப்படி உள்ள போனாங்க? அவுங்க மட்டும் ஏன் குள்ளமா இருக்கிறாங்க? அந்த டிவியில பூவெல்லம் தெரியுதே! டிவியில பூ பூக்குமா?” மனத்திற்கு என்னவெல்லாம் தோன்றியதோ அவன்பாட்டுக்கும் வரிசையா கேட்டுக்கொண்டே இருந்தான் குமரன்.

“என்னப்பா கேள்வி இப்படி கேட்குற.. நான் எதுக்கு பதில் சொல்லட்டும்“ என்றார் டாக்டர்

தலையைச் சாய்த்துக் கொண்டே “எல்லாத்துக்கும் சொல்லுங்க அண்ணா” என்றான்.
“நீ திரைப்படமெல்லாம் பார்த்து இருக்கியா?“

“அப்படின்னா என்னா அண்ணா?”

“நம்மள மாதிரி மனுஷங்க நடிச்சத கேமிராவுல புடிச்சி பெரிய திரையில காட்டுவாங்க… ஆடுவாங்க.. பாடுவாங்க.. பேசுவாங்க… இயற்கையையெல்லாம் காண்பிப்பாங்க”

“நான் மட்டும் இல்ல இந்தக் கிராமத்துக்காரங்க யாரும் அப்படி பார்த்தது இல்ல. ஆனா ரேடியோவுல மட்டும் பாட்டுக் கேட்டுருக்கோம். ஆனா அதுவே சின்ன டப்பா மாதிரி இருக்கு. அது எப்படி பாடுதுன்னே தெரியல?”

டாக்டர் வாய்விட்டே சிரித்தார். குமரன் பேசுவது அழகாய் இருந்தது. நகரத்தில் வாழும் மக்களிடையே இப்பொழுதுதான் கொஞ்சகொஞ்சமாய் டிவி என்கிற ஒன்று பரவி வருகிறது. அப்படி இருக்கும்போது இந்தக் கிராமத்தில் எப்படி சாத்தியமாகும்? குமரனுக்கு டிவி செயல்படும் விதம் பற்றி புரிய வைத்தார். ஆனால் குமரனுக்கு ஏதோ புரிஞ்ச மாதிரிதான் இருந்தது. வெளியே வந்து கேட்டிற்கு முன் நின்று அந்த வீட்டை ஒருமுறை கண்கள் அசையாமல் அப்படியே பார்த்தான்.  அப்பொழுதுதான் கவனித்தான் வீட்டின் மேற்கூறையில் சிலுவைப் போன்று நீளமான கம்பிகளால் குறுக்கும் நெடுக்குமாய் போடப்பட்டிருந்தன. டாக்டர் அந்தக் கம்பிகளைப் பற்றி சொன்னது நினைவுக்கு வந்தது.

இருட்டுகிற சமயம் வீட்டுக்கு வேகமாக ஓடினான் குமரன். மனசு முழுவதும் டிவி பற்றிய யோசனையாகவே இருந்தது.  சாப்பிட்டுவிட்டு படுக்க தயாரானான். வீட்டு முன் களத்தில் வக்கில் போர் அடிக்கப்பட்டிருந்தது. அதன் பக்கத்தில் கட்டில் போட்டு அண்ணாந்து வானத்தைப் பார்த்தான். அம்மாவும் அப்பாவும் பக்கத்தில் ஆளுக்கொரு கட்டிலில் படுத்துக்கொண்டனர். தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தான்.  வானில் உள்ள நட்சத்திரங்களை எண்ண முற்பட்டான். ஆனால் மனசு மீண்டும் டிவியின் பக்கம் வந்தது. களைப்பில் தூங்கிய பிறகும் கூட டிவியில் படம் ஓடிக்கொண்டிருப்பதாகக் கனவில் தொல்லை தந்தது. டிவி… டிவி… என்று பினாத்திக்கொண்டே இருந்தான். குமரனின் அம்மா வெண்ணிலா தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டாள்.

“குமரா.. குமரா… என்னாச்சுப்பா…“ என்று பக்கத்துக் கட்டிலில் படுத்திருந்த குமரனின் தலையைத் தொட்டுப்பார்த்தாள். இப்பொழுது குமரனின் பினாத்தல் நின்று விட்டிருந்தது.

“ஏதோ பினாத்துறான். ஆனா என்னன்னுதான் புரியல! காட்டுப்பக்கம் தனியா போவாதன்னு சொன்னா கேட்கிறானா இந்தப் பைய… சொல்ல சொல்ல பசங்க கூட சேர்ந்துகிட்டு ஊர சுத்துதுங்க. இப்ப என்னாடான்னா யாம நேரத்துல பினாத்திக்கிட்டு இருக்கு. காலையில எழுந்திரிச்ச உடனே புள்ளைக்குச் சுத்தி போடனும்” என்று மனதில் நினைத்துக் கொண்டு கட்டிலில் படுத்துக்கொண்டாள் வெண்ணிலா.

விடியற்காலையில் மேகம் இருண்டது. மழை வர ஆயுத்தமானது. தூரல் சின்ன சின்னதாய் விழ ஆரமித்தன. வெண்ணிலா டக்கென எழுந்து கொண்டாள்.

“என்னங்க.. என்னங்க… மழை வருது. நான் பையன தூக்கிட்டு உள்ள போற. நீங்க கட்டிலைத் தூக்கி தாவாரத்துல போட்டுட்டு உள்ள வந்துருங்க” என்று சொல்லிவிட்டு அவரின் பதிலை எதிர்பார்க்காமலே பையன தூக்கிட்டு வீட்டிற்குள்ளே ஓடினாள் வெண்ணிலா.

மழை கொஞ்சம் வேகமாகவே வந்தது.  அதற்குள் கட்டிலைத் தூக்கி தாவாரத்திலே போட்டுவிட்டிருந்தார் குமரனின் அப்பா விநாயகம். ஈரமான கைக்கால்களைத் துவட்டிக்கொண்டே பையனின் கால்மேட்டில் உட்காந்து கொண்டார். பொழுது விடிந்து நேரமாகிவிட்டது. மழை இன்னும் நிற்காமல் வந்து கொண்டே இருந்தது.  வீட்டை விட்டு யாராலும் வெளியே வர முடியாத நிலை. எப்போதும் நண்பர்களுடன் ஊர் சுற்றும் குமரனுக்கு இப்பொழுது அம்மா அப்பாவுடனே இருந்தான்.

“அப்பா, நீ திரைப்படமெல்லாம் பார்த்திருக்கியாப்பா?“ மெல்ல பேச்சை ஆரமித்தான் குமரன்.

“கேள்விபட்டுருக்கேன்டா.. ஆனா இதுவரையிலும் ஒரு திரைப்படம் கூட பார்க்கல..” உதட்டைப்பிதுக்கியபடியே விநாயகம் சொன்னார்.

“ஏன்பா பாக்குல?”

“நம்மூர்லயும் சரி இந்தச் சுற்று வட்டாரத்துல எங்கேயும் சரி சினிமா கொட்டா இல்ல. அதனால் பாக்கவும் வாய்ப்பு கிடைக்கல. ஏதோ வெளியூருக்கு வேலைக்குப் போன பயலுவதான்  சம்பாரிச்ச பணத்துல ரேடியோவ வாங்கி வச்சிருக்கானுவ.. அத அப்பப்ப பாட்டு கேட்கிறதோட சரி “ ஆசையோடு விரக்தியில்தான் பேசினார் விநாயகம்.

“அம்மாவும் பாக்கலையாப்பா..”

“என்னாலையே பாக்க முடியல. பாவம் உங்கம்மா! இந்த ஊரத்தவிர எங்கேயும் போனதில்ல”

குமரன் அம்மாவின் மூஞ்சை வைத்தகண் வாங்காமலே பார்த்தான். அப்பாவையும் ஓரக்கண்ணால் சுழற்றி சுழற்றி பார்த்தான்.

”நாம இதுவரையிலும் ரேடியோவலதான பாட்டுக் கேட்போம். இன்னிக்கு டாக்டர் வீட்டுக்குப் போயிருந்தேன்.  அங்க  பெட்டி போல டிவின்னு ஒன்னு இருந்துச்சி. அதுல பாட்டும் கேட்டுது. படமும் தெரிஞ்சது. நம்மள மாதிரியே மனுஷங்க அதுக்குள்ள ஆடிட்டும் பாடிட்டும் இருந்தாங்க. அவுங்கெல்லாம் ரொம்ப அழகா இருந்தாங்கப்பா!”

குமரன் சொல்வதைக் கேட்ட விநாயகமும் வெண்ணிலாவிற்கும் கூட அந்த டிவியைப் பாக்க வேணடும் போல தோன்றியது.

“அந்தப் பொட்டிய பாக்குற நிலைமை நமக்கெல்லாம் எங்கே கிடைக்க போகிறது? ஏதோ இருக்கிறத தின்னுபுட்டு ஓடுற மட்டும் வாழ்க்கையை ஓட்டிட்டு கிழக்கமா போயிட வேண்டியதுதான்”  என்று தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்தினாள் வெண்ணிலா.

கொஞ்ச நேரம் மூவரிடையே அமைதி நிலவியது. வெளியே மட்டும் இன்னமும் மழை சில்லென்று தூரலாய் பெய்து கொண்டிருந்தது.

“அப்பா.. நம்ம வீட்டிலேயும் அந்த மாதிரி ஒரு டிவி வாங்கலாமாப்பா” ஏக்கத்துடன் கெட்டான் குமரன்.

“இல்லடா… அது என்னன்னே எனக்கு தெரியாது. சுத்தமா புரியவேயில்ல.. நானும் அத முன்ன பின்ன பாத்தது கூட இல்ல. எப்படி வாங்கனும்? வாங்கிட்டு என்ன பன்னனும்? அத எப்படி பயன்படுத்தனுமுன்னு தெரியாது?“

“அதெல்லாம் எனக்கு தெரியாது! நீங்க எனக்கு டிவி வாங்கி தர்றீங்க..
”
எப்படியோ ஏதேதோ சொல்லி குமரனைச் சமாதானப்படுத்தினார்கள் வெண்ணிலாவும் விநாயகமும். ஆனாலும் அவனுடைய மனதில் டிவி ஆழமாகவே பதிந்து போனது.

அடுத்த நாளிலிருந்து சிறுவர்கள் டாக்டர் வீட்டுக்கு டிவி பார்ப்பதற்காகப் படையெடுத்துக்கொண்டிருந்தார்கள். பள்ளிக்கூடம் பொகிற நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் டாக்டர் வீட்டைச் சுற்றியே விளையாடிக் கொண்டிருந்தார்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் டிவி பார்ப்பதற்கு வீட்டினுள்ளே சென்று விடுவார்கள். டாக்டரின் மனைவி, அவரின் வயதான அம்மா மட்டுமே தங்கியிருந்தனர். டாக்டரின் இரண்டு பிள்ளைகளும் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். அவர்கள் இங்கு வந்து தங்குவது என்பது நடக்காத ஒன்று. டாக்டரின் அம்மாவுக்கு இந்தப் பிள்ளைகள் வீட்டிற்கு வந்து டிவி பார்ப்பது சுத்தமாகவே பிடிக்கவில்லை. அதுவும் கைக்கால்கள் கூட கழுவாமல் ஒரு மாதிரியாக வந்து ஷோபாவிலே உட்காந்து கொள்வார்கள். ஷோபாவிலே உட்காருவது மட்டுமில்லாமல் கால்கள் இரண்டையும் தூக்கி ஷோபாவிலே வைத்துக்கொள்வார்கள். காலில் ஒட்டியிருந்த அழுக்கு அப்படியே ஷோபா துணி மேல் படிந்து போகும்.  தினம்தினம் இதுபோலவே நடக்கும்போது  டாக்டரின் அம்மா கோபத்தின் உச்சிற்கே சென்றாள். ஒருநாள் பசங்களை எல்லாம் திட்டி தொரத்தியும் விட்டுவிட்டாள்.

அன்று மாலை டாக்டர்தான் அம்மாவைச் சமாதானம் செய்து வைத்தார். மனைவியிடம்,

“அம்மாதான் வயசானவங்க… நீயாவது பேசி அம்மாகிட்ட புரிய வைத்திருக்கலாமே! சின்ன பசங்க. ஏதோ ஆசையில டிவி பார்க்க வரானுங்க. அவுங்கள ஏன் தொரத்தனும். பாத்துட்டுப் போகட்டுமே!” என்றார் டாக்டர்.

டாக்டர் மனைவிக்கு முகம் கோணலாகிப்போனது.

“அம்மாவுக்கு மட்டும் இல்ல உனக்கும் இந்த பசங்க நம்ம வீட்டுக்கு வரது பிடிக்கலன்னு நினைக்கிறன்” என்றார் டாக்டர்.

ஆமாம்! என்பது போல கண்களும் சுழன்றன. அப்படித்தான் பார்வையும் இருந்தது.

“பசங்கள டிவி பார்க்க விடுங்க” என்று சொல்லிவிட்டு நேராக பாத்ரூம் நோக்கி நடந்தார்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு மீண்டும் பசங்கள வீட்டிற்குள் விடப்பட்டார்கள். குமரனுக்கும் அவனுடைய நண்பர்களுக்கும் ரொம்பவே சந்தோசம். ஆனால் இப்பொழுது  அந்த வீட்டில்  டிவியின் முன்னால் தரையில் அமர்ந்து பார்க்கிறார்கள்.  காலையில் டிவி போட்டுவிட்டால் அணைப்பதற்கு இரவு பதினொன்று மணிக்கு மேல் ஆகிவிடும். பகல் முழுவதும் டிவியில் ஏதோ ஒன்று ஓடிக்கிட்டே இருக்கும். டிவியில் ஓடும் படக்காட்சிகள் தெரியும். ஆனால் தமிழ்மொழி அல்லாது வேற்றுமொழியில் ஓடிக்கொண்டிருக்கும். ஒவ்வொரு நாளும் சாயுங்காலம் ஐந்து மணிக்கு மேலதான் தமிழ் மொழிக்கு மாற்றம் செய்வார்கள். பகலில் செய்திகளுக்கு மட்டும் அவ்வவ்போது தமிழில் ஒளிபரப்பாகும். ஞாயிற்றுக்கிழமை மட்டும் காலையில் எட்டு மணிக்கே தமிழ் மொழிக்கு மாற்றி விடுவார்கள். டிவியின் அலாதியான பிரியத்தின் காரணமாக வேற்றுமொழி என்றாலும் கூட குமரனும் அவனுடைய நண்பர்களும் போட்டிப்போட்டுக் கொண்டு டிவியின் முன்னாடி போய் தலையைத் தூக்கிக்கொண்டு உட்காந்துவிடுவார்கள்.

மற்றவர்களைக் காட்டிலும் குமரன் பேசுவதிலும் நடந்து கொள்வதிலும் துடுக்காகவே இருந்தான். இதனால் டாக்டரின் மனைவியும் அம்மாவும் அந்தக் கிராமத்தில் அவர்களுக்குத் தேவைப்படும் சின்னச்சின்ன வேலைகளுக்கு அவனை உபயோகித்துக் கொண்டார்கள்.  குமரன் டிவியை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பான். அப்போதுதான் டாக்டரின் மனைவி,

“டே குமரா.. கொஞ்சம் கடைக்குப் போயிட்டு வரீயாடா?” என்பார்.

குமரனுக்குக் கடுப்பாக இருக்கும். வேறுவழியின்றி காசை வாங்கிக்கொண்டு கடைக்கு ஓடுவான். போன சுருக்குத் தெரியாது. உடனே பொருட்களை வாங்கி வந்து விடுவான். மீண்டும் டிவியை உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பான். இப்பொழுது டாக்டரின் அம்மா,

“டே குமரா.. கொஞ்சம் கடைக்குப் போயிட்டு வரீயாடா?” என்பார்.

மீண்டும் கடைக்கு ஓடுவான். டிவி பாக்குற அவசரத்தில் வேகமாகவே வாங்கி வந்து விடுவான். இது அன்றாடம் நடக்கும் நிகழ்வாகவே மாறிவிட்டது. இவன் கடைக்குப் போன நேரத்தில் டிவியில் என்ன ஓடியது என்று தன்னுடைய நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வான். எப்பொழுது பார்த்தாலும் அந்தக் கிராமத்தில் டாக்டர் வீட்டு டிவி பற்றிய பேச்சுத்தான் அதிகமாகவே இருந்தது. நாளாக நாளாக டிவி பார்க்கின்ற ஆர்வத்தில் ஆண்களும் பெண்களுமாய் பெரியவர்களும் டாக்டர் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்கள். அதுவும் வாராவாரம் வெள்ளிக்கிழமை ஏழு மணிக்கு ஒளிப்பரப்பாகும் ஒலியும் ஒளியும் பாட்டுக்குப் பெரும் கூட்டமே கூடிடும்.  இங்கு குமரனின் வேண்டுதலுக்காக விநாயகமும் வெண்ணிலாவும் கூட இரண்டொரு நாட்கள் டாக்டர் வீட்டுக்கு டிவி பார்க்க வந்திருந்தனர். அவ்வளவுதான். அதற்குமேல் வருவதற்கு அவர்களுக்கு விருப்பமில்லை. திருவிழா கூட்டம் போல இருந்ததனால் வெட்கப்பட்டு வருவதை நிறுத்திக்கொண்டார்கள்.

கிராமத்து மக்கள் சாயுங்காலம் வந்து டிவி பார்க்க உட்காந்து விட்டால் இரவு பதினோரு மணி ஆகிவிட்டாலும் ஒருவர் கூட எழுந்து வீட்டுக்குச் செல்ல மாட்டார்கள். வீட்டில் பலகாரமோ கறியோ காரமோ இப்படி எதுவுமே செய்ய முடியாது. வீடும் சிறியதாக இருந்ததால் அவர்கள் சென்ற பின்பே சாப்பிடவும் உறங்கவும் முடியும். நல்லது கெட்டதை வீட்டில் பகிர்ந்து கொள்ள முடியாது. டாக்டரும், யாரையும் டிவி பார்க்க வர வேண்டாம் என்று சொல்லாதீர்கள் என்று கூறிவிட்டார். ஆனால் டிவி பார்க்கின்ற இடம் ஒரு பொது சினிமா கொட்டகையாகவே மாறிவிட்டிருந்தது. படத்தில் சிரிக்கும்போது எல்லோரும் ஓ..வென்று சத்தத்துடன் சிரிப்பார்கள். படத்தில் அழும்போது உண்மையாகவே இவர்களும் கண்ணீர் விட்டு அழத்தொடங்கி விடுவார்கள். 
 
டாக்டரின் மனைவிக்கு இது பெரும் எரிச்சலை உண்டு பண்ணியது. எந்தவொரு சத்தமும் இல்லாமல் அமைதியாய் ஒருநாள் இருக்க வேண்டம் என்று அவள் விரும்பினாள். கணவனுடன் அன்பாக சில நிமிடமாவது பேச வேண்டும் என்று மனதார ஏங்கினாள்.  டாக்டரும் மருத்துவமனைக்குச் சென்று இரவு நேரத்தில்தான் வருவார். அந்த மக்களுடன் சேர்ந்து டிவி பார்ப்பார். அவர்கள் சென்றவுடன் சாப்பிட்டுவிட்டு கொட்டாவி விட்டுக்கொண்டே தூங்கி விடுவார். கொஞ்ச நாளாகவே இதுவே டாக்டர் வீட்டின் தொடர் நிலைமையாகிப் போனது.

டாக்டர் வீட்டில் டிவி பார்ப்பதனால் நடக்கும் பிரச்சனை விநாயகத்தின் காதிற்கும் எட்டியது. மகன் குமரனை அழைத்து, “இனிமேல் டாக்டர் வீட்டுக்கு டிவி பார்க்கச் செல்ல வேண்டாம்“ என்று கண்டித்தார். ஆனாலும் குமரன் டிவி பார்க்கும் ஆசையினால் தொடர்ந்து டாக்டர் வீட்டுக்குச் செல்ல ஆரமித்தான். அதனால் படிப்பிலும் பின்தங்கியே இருந்தான்.  ஆனாலும் மகனின் மனதில் தோன்றிய ஆசையை களைத்துவிட்டால் வேறேதும் விபரீதம் நடந்து விடக்கூடும். அதனால் கொஞ்ச கொஞ்சமாயத்தான் டிவி பார்ப்பதிலிருந்து வெளியே கொணடு வர வேண்டும் என்று நினைத்தார். இனிமேலும் குமரனை அடக்கி வைக்காமல் இருந்தால் பையனின் வாழ்க்கை கெட்டு விடும் என்று அஞ்சினார் விநாயகம்.

“குமரா நீ டாக்டர் வீட்டுக்கு டிவி பார்க்க போ… நானும் அம்மாவும் எதுவும் சொல்ல மாட்டோம். ஆனா, இரவு எட்டு மணிக்குள்ள வீட்டுக்கு வந்திடனும். அப்படி வரலைன்ன கதவ பூட்டு போட்டுருவோம்” என்றார் விநாயகம்.

அப்பா சொன்னதைக் காதில் வாங்கிக்கொண்டவனாக தெரியவில்லை. அன்றே டிவி பார்த்து விட்டு பதினொரு மணிக்கு மேலதான் வீட்டுக்கே வந்தான் குமரன். இருட்டு ரொம்பவும் அதிகப்படியாக இருந்தது. வீட்டின் கதவு தாழிடப்பட்டிருந்தது. கதவை தட்டினான். கதவு திறக்கப்படவில்லை. மௌனமாகவே இருந்தார்கள்.

“கதவ தொறமா… கதவ தொறமா… பசிக்குது ”

உள்ளேயிருந்து எந்தவொரு சத்தமும் இல்லை. அணைக்கப்பட்ட விளக்கு சுடர் விட்டு எரியாமலே இருந்தது. மீண்டும் மீண்டும் அழைத்தான் குமரன். கதவு திறக்கபடவேயில்லை. பணியும் பயமும் அவனை நிலைகுழைய செய்தது. ஒரு கட்டத்திற்கு மேல் குமரன் சோர்ந்து போனான். வீட்டினுள்ளே இருவரும் பாசத்தை அடக்கிக்கொண்டு மகனின் குரல் ஒலியைக் கேட்டு வாயைப் பொத்திக்கொண்டு அழுது கொண்டிருந்தார்கள். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த வெண்ணிலா மகனின் குரல் அடங்கியவுடன் அவளுடைய ஈரக்குழையே அருந்து விழுந்தது போல ஆயிற்று.

“என்னங்க பையன் பாவுங்க..! கதவ தொறந்து கூப்பிட்டுகளாமுங்க..” வெண்ணிலா

“வாழ்க்கையில துன்பத்தையும் அனுபவிக்கனும். அப்பதான் வாழ்க்கன்னா என்னான்னு புரியும்.
கொஞ்ச நேரம் போகட்டும்” விநாயகம்
கொஞ்ச நேரம் கழித்து இருவரும் கதவை திறந்து வெளியே வந்து குமரனைப் பார்த்தார்கள். குமரன் பசியோடு தூங்கிவிட்டிருந்தான். குமரனை அள்ளி தூக்கி மார்போடு அணைத்துக்கொண்டாள் வெண்ணிலா. உடம்பு ரொம்பவும் சூடாகக் காய்ச்சல் அனலாகக் கொதித்தது. குமரன் கண் விழித்துப் பார்ப்பதற்கு ஒரு வாரத்திற்கு மேல் ஆயிற்று.

டாக்டர் தன்னுடைய வீட்டிலிருந்த டிவியை அதனுடைய பெட்டியில் போட்டு நான்றாக மூடி பழைய சாமான்கள் இருக்கும் அறையில் வைத்துவிட்டு வந்தார். டாக்டரின் மனைவி தன்னுடைய  கணவனுக்கு ஆவி பறக்க டீ போட்டுக்கொடுத்து உபசரித்தாள்.
சிறுகதையின் ஆசிரியர்
முனைவர் க.லெனின்
உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை,
எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130
முனைவர் க.லெனின் அவர்களின் படைப்புகளைக் காண…

 

Leave a Reply