இரட்டைக் காப்பியங்களில் சமூக நிறுவனங்களும் சமூக மதிப்புகளும்

iniyavaikatral.in

குடும்பம்

            தொல்பழஞ் சமுதாயம் தாய்வழிச் சமுதாயமாக இருந்து பின்னர் தந்தைவழிச் சமுதாயமாக மாற்றம் பெற்றிருக்க வேண்டும் என்பது சமூகவியலார் கருத்து. சிலப்பதிகாரத்தில் தாய்வழிச் சமூக எச்சங்களைக் காணமுடிகிறது. மங்கல வாழ்த்துப் பாடலில் தலைமைப் பாத்திரங்களை அறிமுகப்படுத்தும் இளங்கோவடிகள்.

            “போகநீன் புகழ்மன்னும் புகார் நகரதுதன்னில்

            மாக வாணிகர் வண்கை மாநாய்க்கன் குலக்கொம்பர்             (சிலம்பு.1:22,23)

                என முதலில் கண்ணகியை அறிமுகப்படுத்துகின்றார். இதற்கு உரை கூறும் அடியார்க்கு நல்லார் “சுவர்க்கம் பவணமென்னும் இவற்றிற்குள்ள புகழும் போகமும் நிலை பெற்ற அப்புகார் என்னும் நகரின்கண் மழைப்போல் வழங்கும் கையையுடைய மாநாய்க்கனுடைய குலத்தில் தோன்றிய கொம்பும் கொடியும் போல்வாள்” என்பார். எனவே இவள் கொழு கொம்பில் படர வந்த கொடி அல்லள் கொம்பும் கொடியும் இவளே என்பது இதன் பொருள். கொலைக்களக் காதையில் கோப்பெரும் தேவியைக் குறிப்பிடுமிடத்தும் ‘குலமுதல் தேவி’ என்றே குறிப்பிடுவதும் இங்கு எண்ணத்தக்கது. இருப்பினும் இவை வெறும் எச்சங்களாகவே எஞ்சி நிற்கின்றன.

            சிலம்பு மேகலை ஆகிய இருகாப்பியங்களில் இடம்பெறும் கண்ணகி, ஆதிரை ஆகிய இருவரின் குடும்பங்கள் ஒரே நிலையினவாகக் காட்சி அளிக்கின்றன. திருமணமாகி யாண்டு சிலவே கழிந்த நிலையில் மாதவிபால் சென்ற கோவலனை எண்ணி அவன் வரவுக்குக் காத்திருந்த கண்ணகி நிலையை,

            அஞ்செஞ் சீரடி யணிசிலம் பொழிய

            மென்துகில் அல்குல் மேகலை நீங்கக்

            கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்

            மங்கல அணியிற் பிரிதணி மகிழாள்

            கொடுங்குழை துறந்து வடிந்து வீழ் காதினள்

            செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பக்

            பவள வாணுதல் திலகம் இழப்ப

            மையிடுங் கூந்தல் நெய்யணி மறப்பக்

            கையறு நெஞ்சத்துக் கண்ணகியன்றியும் (சிலம்பு 4:47-57) என்று கூறுவார் என்று பாடுகின்றார். மங்கல அணியைத் தவிர பிறவற்றை எல்லாம் கண்ணகி இழப்ப தவள வாள் நகையை மட்டும் கோவலன் இழப்ப ஊதுலை குருகின் உயிர்த்து ஒடுங்கினள் என்கின்றார். சலம்புணர் கொள்கை சலதியோடு ஆடி குலம் தரும் வான்பொருள் குன்றம் தொலைத்த இலம்பாடு நாணுத் தகும் என்று கோவலன் தன் மீதே கழிவிரக்கம் கொள்ளுகின்றார்.

            ஆதிரையை

            ‘ஒரு தனி ஓங்கிய திருமலர் போன்று

            வான்தரு கற்பின் மனையுறை மகளிரின்

            தான் தனி ஓங்கிய தகைமைய ளன்றோ

            ஆதிரை நல்லாள்”                                                                         (மணி. 16:76-79)

என்று அறிமுகப்படுத்துகின்றார். ஆதிரையின் கணவன் சாதுவனை,

            ஆதிரை கணவன் ஆயிழை கேளாய்

            சாதுவன் என்போன் தகவிலன் ஆகி

            அணியிழை தன்னை அகன்றனன் போகிக்

            கணிகை ஒருத்தி கைதூண் நல்க

            வட்டினும் சூதினும் வரன் பொருள் வழங்கி

என்று குறிப்பிடுகின்றார்.

            தன் செல்வத்தையெல்லாம் மாதவிக்கு ஈந்தவன் கோவலன் பரத்தையர் தொடர்பு மட்டும் அல்லாது வட்டினும் சூதினும் வான்பொருள் இழந்தவன் சாதுவன். இத்தகு கணவன்மாரையும் தெய்வங்களாகக் கருதி வாழும் குடும்ப அமைப்பைத்தான் சிலம்பும் மேகலையும் காட்டுகின்றன.

திருமணம்

            களவும் கற்பும் பழந்தமிழரின் மணமுறைகளாகக் காணப்பட்டன. “கற்பாவது நல்வாழ்வு என்றும் களவாவது அவ்வாழ்வை எய்துவிக்கும் ஒரு நன்னெறியே என்றும் கொள்க” என்பர். “கற்பெனப்படுவது களவின் வழிந்தே” என்கிறது இறையனார் களவியல் உரை (ஐ.15) எனவே களவும் கற்பும் பழந்தமிழரின் இல்லறாவாழ்வின் இரு முக்கிய கூறுகள் என்பது புலனாகும் இதைதான் தொல்காப்பியம்

            “கற்பெனப் படுவது கரணமொடு புணரக்

            கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்

            கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வது (தொல்.கற்பு.140) என்றும்

            கொடுப்போர் இன்றியும் கரண முண்டே

            புணர்ந்துடன் போகிய காளையான”            (தொல்.பொருள்.கற்பு.141) என்றும் கூறுவர்.

      தலைவன் தலைவியின் களவு கற்பாக மாற இருவழிகள் வழக்கில் இருந்தன. ஒன்று கொடுப்பக் கொள்வது – அதாவது தலைவியின் பெற்றோர் தம் மகளைத் தலைவனுக்குக் கொடுக்கக் கொள்வது. இரண்டாவது கொடுப்போர் இன்றி உடன்போக்கை மேற்கொண்டு கொள்வது.

வ.சுப.மாணிக்கனார், பெற்றோர் கூட்டுவிக்கும் இயல்பு மணம் வழக்கில் இருந்தது எனக் கூறுகின்றார். அதற்குச் சான்றாக.

“கழியக் காதலராயினும் சான்றோர்

பழியொடு வரும் இன்பம் வெஃகார்

வரையின் எவனோ வான்தோய் வெற்ப

கணக்கலை இருக்கும் கறியிவர் சிலம்பின்

மணப்பருங் காமம் புணர்ந்தனம யறியார்

தொன்றியல் மரபின் மன்றல் அயர (அகம்.112)

என்னும் பாடலை எடுத்துக்காட்டுகின்றார்.

            ‘தொன்றியல் மரபின் மன்றல்’ என இயல்பு மணத்தைப் பெற்றோர் கூட்டுவிக்கும் மணத்தைத் தோழி சுட்டுதலை நினைக.

            மிளகுக் கொடி படர்ந்த மலைச்சாரலில் நிகழ்த்தியக் காமக் களவினைத் தலைவியின் பெற்றோர் அறியாத நிலையில் வைத்தே மரபு மன்றல் செய்து விடவேண்டும் என்று தோழி ஆசைப்படுகிறாள். காதலனுக்குள் எவ்வளவு அன்பிருந்தாலும் நீடித்தக் களவின்பம் பழிதருவது என்று தலைவனை இடித்துரைக்கிறாள். களவுக்கு அஞ்சுகின்றனர் என்பதுதானே இதன் உட்கிடை. (தமிழ்க்காதல்-ப.110) என்பார்.

            இங்கு நீடித்த களவின்பம் பழி தருவது என்று அவரே குறிப்பிட்டுள்ளமையும் எண்ணத்தக்கது. எனவே அவன் கூறுவதுபோல களவு பழி தருவது அன்று நீடித்த களவே பழிதருவது எனத் தலைவி கூறுவது இங்கு எண்ணத்தக்கது. எனவே இறையனார் களவியல் உரை கூறுவதுபோல் “கற்பெனப்படுவது களவின் வழித்தே” (இறையனார் களவியல். 15) என்பதும் களவொழுக்கமின்றி தனிக் கற்புமுறை முன்பு வழங்கியதில்லை. (தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி. பு.12) என்னும் கருத்துமே ஏற்புடையதாகத் தோன்றுகிறது.

            பழந்தமிழர் மரபு திருவள்ளுவர் தொடங்கி பின்வந்த கம்பர் வரை தொடருகின்றது. சுயம்வரத் திருமணத்தில் அதுவும் போட்டியை மையமாகக் கொண்ட சுயம்வரத்தில் களவுக்கான வாய்ப்பே இல்லை என்றாலும் இப்பழுந்தமிழர் மரபைப் புகுத்தி கம்பர் காப்பியத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

            ஆனால் பெற்றோர் நிச்சயித்த மணத்தை அதாவது களவற்ற மணத்தை இளங்கோவடிகள் அறிமுகப்படுத்துகின்றார்.

            அவரை

            இருபெரு குரவரு மொருபெரு நாளான்

            மணவணி காண மகிழ்ந்தனர் என்றும்                   

(மங்கல வாழ்த்துப் பாடல். 40-43)

            சாலி யொருமீன் தகையாளைக் கோவலன்

            மாமுது பார்ப்பான் மறைவழி காட்டித்

            தீவலஞ் செய்வது காண்பார் ணோன்பென்னை”

                                                                        (மங்கல வாழ்த்து.51-3) என்று கூறுகின்றார்.

            இதற்கு உ.வே.சா. அவர்கள் “மதியம் சகடணைந்த நாளிலே பார்ப்பான் மறையிற் சோதிடாங்கத்துள் வணிகர்க்குக் கூறிய நெறியிலே சடங்குகாட்ட இவன் இங்ஙனம் தீவலம் செய்கின்ற இதனைக் காண்கின்றவர் கண்கள் முற்பவந்திற் செய்த தவம் யாதுகாண் ணெண்பாராயும்.” என்று விளக்கம் தருவார் அடியார்க்கு நல்வார். (ப.41)

            இரண்டுவிதமான மரபு மாற்றங்கள் இங்கு நிகழ்ந்துள்ளன. ஒன்று இங்கு தமிழருக்கு உரியதாக இருந்த பொதுவான மணச் சடங்குகள் சாதிவாரியான சடங்குகளாக மாற்றம் பெற்றமையை அறியமுடிகிறது. கிடைநிலை திணைமுறை வாழ்க்கை செங்குத்து அமைப்பிலான சாதிய அமைப்பு வாழ்க்கை முறையாக மாற்றம் பெற்றதையும் இது காட்டுகிறது.

இனக்குழு / சாதி

            சங்க இலக்கியங்களில் இனக்குழு வாழ்க்கை முறைக்கு மாறான சாதிய அமைப்பு முறை பற்றிய சான்றுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்பட்டாலும் இனக்குழு வாழ்க்கைமுறையே வழக்கில் இருந்துள்ளது. சங்க காலத்தில் ஆரியர்கள் தமிழகத்தில் குடியேறிவிட்டார்கள் என்றாலும் அவருடைய பண்பாடு பழக்கவழக்கங்கள் பழந்தமிழருடைய வாழ்க்கை முறையில் எந்த அளவிலும் பாதிக்கவில்லை என்ற சீனிவாச ஐயங்காருடைய கூற்றும் இதனை அரண் செய்யும்.

            சங்கம் மருவிய காலத்திலேதான் ஆரிய பண்பாட்டுக்கூறுகள் குறிப்பாக, சாதிய அமைப்பு முறைகள் கால்கொள்ளத் தொடங்கின. எனவேதான் கிடையின் நிலை சமுதாய அமைப்பான இனக்குழு வாழ்க்கை முறையும் செங்குத்துநிலை சமுதாய அமைப்பான சாதிய அமைப்புமுறையும் இரட்டைக் காப்பியங்களில் பதிவாகியுள்ளன.

            மரக்குடி தாயத்து வழிவளம் சுரவாது

            அறக்கொடிபோல் அவிந்து அடங்கினர் எயினர்

மரக்குடி மக்கள் தம் கடமையான ஆநிரை கவர்தலை மறந்து அறக்குடி மக்களாக மாறிவிட்டனர்.

            பொற்றொடிமாதர் பிறந்த குடிப்பிறந்த

            விற்றொழில் வேடர்குலனே குலனும்

            பையரவு அல்குல் பிறந்த குடிப்பிறந்த

            எய்வில் எயினர் குலனே குலனும்

            ஆய்தொடி நல்வாள் பிறந்த குடிப்பிறந்த

            வெய்வில் எயினர் குலனே குலனும்                           (சிலம்பு 12:5,6,7)

            இந்தப் பாடல் வரிகளைப் பாடும்போது இளங்கோவடிகள் எயினர் குலத்தவராகவே மாறி பெருமிதம் கொள்வதைக் காணமுடிகிறது. ஒரு பார்வையாளனாக இருந்து எழுதாமல் பங்காளனாகவே மாறிவிடுகிறார்.

            ஆய்ச்சியர் பாடுகின்ற ஆய்ச்சியர் குரவையிலும்

            மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடிய

            சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே

            திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே           (சிலம்பு 17:35)

என்று பாடுகின்றார்.

            மனம், மெய், மொழி ஆகியவற்றால் வழிபடுவதை முக்கரணவழிபாடு என்பர். இளங்கோவடிகள் மாற்றான முக்கரண வழிபாட்டுமுறையை அறிமுகப்படுத்துகின்றார். இப்பாடல் வரிகள் ஊணோடும் உயிரோடும் கலந்து இளங்கோவடிகளைத் திருமால் பக்தனாகவே காட்டுகின்றன. குன்றக்குரவையிலும் இதே நிலை காணப்படுகிறது.

            சிலப்பதிகாரம் சாதிய அமைப்பு முறையையும் சிறப்பாக பதிவு செய்துள்ளது. மங்கல வாழ்த்துப்பாடல் இயற்கை வாழ்த்தாகக் காணப்படினும் உண்மையில் அது அரச வாழ்த்தே எனலாம். சோழனின் அருள்மிகுந்த வெண்கொற்றக்குடை போல் தண்ணொளி பரப்பியதால் திங்களையும் சோழனின் ஆணைச்சக்கரம்போல் மேருவை வலம் வருதலால் ஞாயிற்றையும் அவன் அருள்போல் மேநின்று சொரிதலால் மாமழையையும் போற்றுவோம் என்கிறார். மூவேந்தருடைய தலைநகரங்கள் ஆட்சிக் சிறப்பு போன்றவையும் சிறப்பாகவே பேசப்படுகின்றன.

            அந்தணர் சிறப்பு அவர்களது அறுந்தொழிலாகிய ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் ஆகியவையும் சிறப்பித்தது பேசப்படுகின்றன. சேரனிடம் பரிசு பெற்று வந்த பராசகன் தக்கிணன் என்ற சிறுவன் வேதம் ஓதியதைக் கேட்டு பரிசு பொருள்கள் தந்து அவன் வழிச் சென்றான். காவலர் அப்பொருள் கண்டு படுபொருள் வவ்விய பார்ப்பான் இவன் என சிறைக்கோட்டத்தே இட்டனர். வார்த்திகன் மனைவி விட்ட கண்ணீரைக் கண்டு ஐயைக் கோயில் கதவும் அடைத்தது அறிந்த அரசன் என் இறைமுறை பிழைத்தது பொறுத்தல் நும் கடனென திருத்தங்கால் வயலூரை இறையிலி நிலமாகக் தந்து கார்த்திகைக் கணவன் வார்த்திகன் முன்னர் இருநில மடந்தைக்கு திருமார்பினை அளித்து அவளது தணியா வேட்கையைச் சிறிது தணித்தார் என்பார்.

            ஆக ஒரு காவலன் செய்த குற்றத்திற்கு அரசனை மார்பு நிலத்தில் படும்படி வணங்கவைத்து அரசரும் வணங்கும் உயர்ந்தோர் அந்தணர் என்பதைக் காட்டவே இக்கதையைப் படைத்துள்ளார் எனலாம்.

            நால்வகை வருணத்து நலங்கே மொழியுவும் (சிலம்பு: 182) என்னும் தொடருக்கு உரைகூறும் அடியார்க்கு நல்லார் நால்வகை வருணத்து ஒளியாவன அந்தணன் – வெள்ளை, அரசன் – சிவப்பு, வசியன் – பச்சை, சூத்திரன் அந்தமில் கருமை என்பர். கொலைக்களக் காதையில் உணவு உண்ணும் கோவலனை

            அரசர் பின்னோர்க்கு அருமறை மருங்கின்

            உரியவல்லாம் ஒருமுறை கழித்து (சிலம்பு:16:44,45)

என்று பாடுகின்றார். இவற்றை நோக்கும்போது அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற வரிசை முறை சிலப்பதிகார காலத்தில் இருந்ததை அறிய முடிகிறது.

            எனவே இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது இனக்குழு அமைப்பு முறைக்கு மாற்றான சாதி அமைப்பு முறையும் கிடைநிலை அமைப்புக்கு மாறான செங்குத்து அமைப்பு முறையும் உறுதிபட்டுவிட்டதை நமக்குத் தெளிவுபடுத்துகின்றன.

கற்பு

            சமூக மதிப்புகளில் கற்புக்குக் குறிப்பிடத்தக்க இடமுண்டு. சமூகத்தின் சீரான இயக்கத்திற்குக் கற்பு அவசியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. கற்பு என்பதற்கு ஒழுக்கம் என்று பொருள் கொள்ளலாம். கற்பைப் பெண்ணுக்கு மட்டுமே வலியுறுத்தும் தொல்காப்பியர் பெண்ணுக்கு இலக்கணம் கூறுமிடத்து கற்பை முதல் தகுதியாகக் குறிப்பிடுகின்றார். உயிரினும் சிறந்தது நாண். நாணினும் சிறந்தது கற்பு என்று கூறுகின்றார். இந்நூற்பாவுக்கு ‘கற்பித்தபடி ஒழுகுவது’ அதாவது கணவன் கற்பித்தபடி ஒழுகுவது என்று உரை வகுக்கின்றனர். வள்ளுவர் உள்ளத் திண்மையைக் கற்பு என்று கூறுகின்றார். திண்மை என்பதற்கு ‘உள்ள உறுதி’ எனப் பொருள் கொண்டால் மன உறுதியே கற்பு எனலாம். பிற்கால ஒளவையார் கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை என்கிறார். இதற்கு உரை எழுதும் ஈ.மு.வேங்கடசாமி நாட்டார் போன்றோர் சொன்ன சொல்லில் இருந்து வழுவாமல் இருப்பது பெண்ணுக்குக் கற்பு ஆகும் என்று கூறியுள்ளனர். ஆக கற்பு என்பது பெண்ணுக்கு மட்டுமே உரியதாகக் கொள்ளப்பட்டமை புலனாகிறது.

            பிற ஆடவர் நெஞ்சில் இடம்பெறாமல் இருப்பது பெண்ணுக்குக் கற்பு என்பது சாத்தனார் தரும் விளக்கம்.

            மண்டிணி ஞாலத்து மழைவளம் தரூஉம்

            பெண்டீராயிற் பிறர் நெஞ்சு புகாஅர்                                                (மணிமேகலை 22:45, 46)

ஒரு பெண்ணை பார்க்கும் ஆண் அவளைத் தன் உள்ளத்தில் இருத்திவிட்டால் அந்தப் பெண்ணின் கற்புக்கு பங்கம் நேர்ந்து விட்டதாகவே கொள்வர்.

            ககந்தன் என்னும் மன்னனுடைய மகன் காவிரியாடி விட்டு வந்த மாருதி என்ற பெண்ணைப் பார்த்து ‘நீ வா’ என்று அழைத்து விட்டான். எனவே முத்தீப் பேணும் முறையை யான் இழந்தேன் என்று சதுக்க பூதத்திடம் முறையிட்டனள்.

மேலும்,

            “தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள்

            பெய்யென பெய்யும் பெருமழை யென்றவப்

            பொய்யில் புலவன் பொருளுறை கேளாய்                          (மணிமேகலை 22: 59-61)

என்ற வள்ளுவர் வாக்கை அப்படியே ஏற்றுக்கொள்கின்றார். கொண்டவனையே முதல் தெய்வமாய் வழிபடும் பெண் இயற்கையைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெறுகின்றாள் என்ற வள்ளுவரின் கருத்து, சாத்தனாருக்கும் உடன்பாடே எனலாம். எனவேதான் அத்தகு பெண்ணை ‘வான்தரும் கற்பினள்’ என்று கூறுகின்றார்.

            துறவியான கவுந்தியடிகள் கற்பில் சிறந்த கண்ணகியைத் தன் தோழி என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள்ளுகின்றார்.

            கற்புக் கடம்பூண்ட இத்தெய்வமல்லது

            பொற்டிடை தெய்வம் யாம் கண்டிலமால்                           (சிலம்பு.2:143,144)

என்று கூறி மேலும் இத்தகு பெண்டிர் உள்ள நாட்டில் வானம் பொய்யாது, வளம் குன்றாது வேந்தர் கொற்றம் சிதையாது என்று கூறுகின்றார். ஊரலருரைத்த காதையில் மணிமேகலை இந்திரவிழாவில் ஆடவேண்டும் என்றதற்கு

            கணவற்கு உற்ற கடுந்துயர் பொறாஅள்

            மணமலி கூந்தல் சிறுபுறம் புதைப்பக்

            கண்ணீராடிய கதிரிள வனமுலை

            திண்ணிதிற் திருகித் தீயில் பொத்திக்

            காவலன் பேரூர் களையெரி யூட்டிய

            மாபெரும் பத்தினி மகள் மணிமேகலை                              (மணி 2: 50-55)

என்கிறாள்.

            எனவே மணிமேகலையைத் தன்னுடைய மகள் என்பதைக் காட்டிலும் மாபெரும் பத்தினியாகிய கண்ணகியின் மகள் என்று கூறுவதில் பெருமிதம் கொள்கின்றாள்.

அறம்

            அறம் என்ற சொல் நுட்பமான பொருளுடையது. இச்சொல் காலத்துக்கும் இடத்திற்கும் ஏற்பப் பல்வேறு பொருள்களைத் தந்து செறிவுடையச் சொல்லாகச் சிறப்புற்று விளங்கி வந்துள்ளது. அறம் இறைவனின் ஆணை என்றும் அறத்திற்கு மாறான, செயல்களைச் செய்தல் இறைவனையே மீறுதல் என்றும் சைவ சித்தாந்த நூல்கள் கூறுகின்றன. ‘தக்கன சொல்லி நிற்றல்’ அறம் என்று இறையனார் களவியல் உரை கூறுகின்றது. மனத்துக்கண் மாசிலன் ஆதலே அறம் என்று வள்ளுவர் கூறுகின்றார். ஆக மனத்தையும் வாக்கையும் செயலையும் தூய்மையாக வைத்துக்கொள்வதே அறம் எனலாம்.

            அறத்துக்கு, சாத்தனார் புது விளக்கத்தைத் தருகின்றார். ‘பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பது பழமொழி’

            பிறந்த குலம் மாயும் பேராண்மை மாயும்

            சிறந்த தம் கல்வியும் மாயும்                                                                (நாலடி.285)

என்கிறது நாலடியார். இப்பசிப்பிணியால் ஏற்படும் இழிவை சாத்தனார்

            குடிப்பிறப்பு அழிக்கம் விழுப்பம் கொல்லும்

            பிடித்த கல்வி பெரும்புணை விடூஉம்

            நாண் அணி களையும் மாண் எழில் நீக்கும்

            பூண்மூலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்

            பசிப்பிணி என்னும் பாவி                                                                       (மணி.11:76-80)

உயர்குடி பிற்பை அழக்கும், கல்வியாகிய பெரிய தெப்பத்தை நீக்கும். நாணமாகிய ஆபரணத்தை நீக்கும். மனை மக்களோடு புறங்கடை நிறுத்தும். எனவே உலகில் பல துன்பங்களுக்கு நிலைகளனாயுள்ள இப்பசிப்பிணியைப் போக்குதலே தலையாய அறம் என்று கூறுகின்றார் சாத்தனார்.

            யாருக்கு அறம் செய்ய வேண்டும் என்பதையும் சாத்தனார் வரையறுக்கின்றார்.

            ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வார்

            ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்

            மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை

            மண்டினி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்

            உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே                                 (மணி.11:93-96)

        என்கிறார் கைமாறு எதிர்ப்பார்த்துச் செய்யப்படும் அறம் ஒரு வியாபாரம். எனவேதான் அத்தகையோரை அறவிலை வணிகன் என்று கூறுகின்றார்.

            மறுமை கருதிச் செய்யப்படும் அறமும்கூட ஒருவகையில் வாணிகம் தான் இம்மைச் செய்தது மறுகைக்காமெனும் அறவிலை வணிகன் ஆய் அல்லன் என்று பாடுகின்றார் முடமோசியார். (புறம்.134)

            எனவே எவ்வகையிலும் கைமாறு செய்ய இயலாத நிலையில் உள்ள காணார் கேளார் கால் முடப்பட்டோர் பேணுதல் இல்லோர் பிணி நடுக்குற்றோர் யாவரும் வருக இசைந்து உடன் ஊட்டிட வேண்டும் (மணி 13:111-113) என்கிறார்.

            ஒருவனுடைய மறுமை இம்மை ஆகிய இரண்டையும் கெடுப்பதான இப்பசிப்பிணியைப் போக்குவதுதான் உலகின் மிகச் சிறந்த அறம். இதை அருளறம், அன்புகொள்ளறம், தாங்கா நல்லறம், பெருமைசால் நல்லறம், மலையாவறம், மிக்கவறம் முன்னவன் போதியின் நல்லறம் என்றெல்லாம் வழங்கி அறத்தின் இன்றியமையாமையைக் காட்டுகின்றார்.

            “அறம் எனப்பட்டது யாதென கேட்பின்

            மறவாது இதுகேள் மன்னுயிர்க் கெல்லாம்

            உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டதில்

            மேன்மக்களுக்குரியதாக இலக்கியம் வலம் வந்த காலத்திலேயே சாமான்ய மக்களைப் பற்றி சிந்தித்த முதல் சமுதாயச் சிந்தனையாளர் சாத்தனார். ஒரு நாட்டின் குடிமகன்கள் அனைவரும் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றை அரசு வழங்கவேண்டும் என்று கூறுகின்றார். இதை அவர் செயலாக்கம் செய்த விதம் வேண்டுமானால் குறைபாடுடையதாக இருக்கலாம். ஆனால் அவருடைய திட்டம் ஃ சிந்தனை ஆட்சியாளர்களால் நடைமுறைப்படுத்தக் கூடியதே. அவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுமானால் நாடு தன்னிறைவு பெற்றுவிடும் என்பதில் எவ்விதமான ஐயமுமில்லை.

முடிவுரை

            தாய்வழிச் சமூக அமைப்பு சிதைவுற்று, தந்தை வழிச் சமூக அமைப்பு தோற்றம் கொண்டமையையும் தாய்வழிக் குடும்ப அமைப்பு தந்தைவழிக் குடும்ப அமைப்பாக மாற்றம் எய்தியமையையும் சிலம்பும் மேகலையும் தெளிவுபடுத்துகின்றன.

            கணவன் பரத்தையர் ஒழுக்கமுடையவனாக வட்டு, சூது போன்ற தீய பழக்கவழக்கங்களால் வான், பொருள் இழந்தவனாக இருப்பினும் மனைவி மட்டும் ஒழுக்கமுடையவளாகவும் கணவன் நலத்திற்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொள்பவளாகவும் இருக்க வேண்டும் என்று இரு நூல்களும் வலியுறுத்துகின்றன.

            சமத்துவமாகக் கிடைநிலையில் இருந்த இனக்குழு சமுதாய அமைப்பு சிதைந்து உயர்வு தாழ்வு கொண்ட செங்குத்து அமைப்பான சாதிய சமுதாய அமைப்பு உருப்பெற்றுவிட்டமையை இரட்டைக் காப்பியங்கள் தெளிவுபடுத்துகின்றன.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

பேராசிரியர்.வ.இராசரத்தினம்,

தமிழ்த்துறை,

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்,

காந்திகிராமம்.

Leave a Reply