Abstract
The Tamilians acquired wealth, practiced virtue (Dharma/Aram), and lived with joy, embracing domestic life (Il Vazhkai) as a morally upright way of living. Even if the entire world were presented as a reward, they refused to engage in blameworthy acts, steadfastly following the path of righteousness and thereby attaining enduring blessings. Literature indicates that the people of the Sangam era considered virtue (Aram) to be central to human sentiment. In this context, this research elucidates the concept of virtue (Aram) as expounded in Kalittokai.
“கலித்தொகையில் அறங்கள்”
ஆய்வுச் சுருக்கம்
தமிழர்கள் பொருள் ஈட்டி அறம் செய்து இன்புற்று வாழ்ந்து வந்தனர். இல்வாழ்க்கையை அற வாழ்க்கையாக மேற்கொண்டனர். உலகே பரிசாக கிடைத்தாலும் பழிதரும் செயல்கள் செய்ய மறுத்து நல்வழியைக் கடைப்பிடித்து நிலைபெற்றப் பேறெய்தினர். சங்க கால மக்கள் அறத்தை மனித உணர்வின் மையமாகக் கொண்டிருந்தனர் என்பதை இலக்கியங்கள் வெளிப்படுத்துகின்றன. இவ்வகையில் கலித்தொகை கூறும் அறம் பற்றிய தெளிவே இவ்வாய்வாகும்.
முன்னுரை
சங்க இலக்கியம் பழமை வளமும், புதுமை நலமும் பொருந்தியது. சங்க கால மக்களின் வாழ்க்கையை எடுத்துக்காட்டும் பெட்டகமாக சங்க இலக்கிய நூல்கள் திகழ்கின்றன. தமிழனின் தொன்மைக்கும், பெருமைக்கும் சான்றுகளாக இருப்பன எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் ஆகும். சங்க இலக்கியங்கள் என்று போற்றப்படும் தொகையும், பாட்டும் அகம், புறம் என்ற இரண்டு ஒழுக்கங்களை அடிப்படையாகக் கொண்டு பாடப்பட்டுள்ளன. இவற்றை தமிழர்கள் தம் இரு கண்களாகப் போற்றினர். அகவாழ்க்கையை விளக்கும் நூல்களுள் ஒன்று கலித்தொகை. இக்கலித்தொகையில் அறக் கருத்துகள் நிறைந்துள்ளன. இக்கருத்துகளை வெளிக் கொணவர்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கலித்தொகை நூலின் அமைப்பு
எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாக அமைந்திருப்பது கலித்தொகை ஆகும். “கற்றறிந்தார் ஏத்தும் கலி” என்று போற்றப்படுகின்ற சிறப்புக்குரிய இந்நூலில் மதுரையாசிரியர் நல்லந்துவனார் இயற்றிய கடவுள் வாழ்த்துச் செய்யுள் பாடல்1, பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடிய பாலைக்கலி பாடல்கள் 35, கபிலர் இயற்றிய குறிஞ்சிப் பாடல்கள் 29 மதுரை மருதன் இளநாகனார் புனைந்துள்ள மருதக்கலி பாடல்கள் 35, சோழன் நல்லுருத்திரன் இயற்றிய முல்லைக்கலிப்பாடல்கள் 17. கடவுள் வாழ்த்துப் பாடிய மதுரை ஆசிரியர் நல்லந்துவனாரே எழுதி முடித்துள்ள நெய்தல் கலிப்பாடல்கள் 33 ஆக மொத்தம் 150 பாடல்கள். இவ்வாறாக இந்நூலின் அமைப்பு அழகுற அமைந்துள்ளன. இந்நூலின் மூலமாகப் பண்டைத்தமிழர் தம் வாழ்வியல், பழக்கவழக்கங்கள். பண்பு நலன் முதலியவற்றைத் தெளிவாக உணர முடியும். இவை மட்டுமல்லாமல் தலைவன், தலைவி தோழி செவிலியர் என இவர்களின் கூற்றுகளில் மனிதநேயக் கருத்துகளும், அறக்கருத்துக்களும் காணப்படுகின்றன.
அறப்பண்பு
அறம் என்பது ஒழுக்க நெறியாகும். இவ்வறம் பிறர்க்கு உதவி செய்வது; மற்ற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் இருப்பது போன்ற நற்செயல்களை கடைப்பிடிப்பதாகும். சங்ககால மக்கள் பசி, பிணி, வறுமை, இருப்பிடம் ஆகிய வாழ்க்கைப் போராட்டங்களிடையே இன்பமும், பொருளும் பெற பல வழிகளைப் பின்பற்றினர். பிறர்க்கு துன்பம் தராமல் இவற்றை நன்னெறியில் பெற வேண்டும் என்ற உணர்வே அறநெறியாகும். வாழ்வின் அடிப்படை நிலைக்களன்களாக காதல், போர், அரசியல், சமுதாயம் அமைந்திருந்தன. இவற்றுள் சிக்கல்கள், முரண்பாடுகள் தோன்றிய காலத்தில் வாழ்க்கையை செம்மைப்படுத்த அறக்கருத்துகள் தோன்றின. எக்காலத்தும் பயன்படுத்த வேண்டிய வாழ்விற்கு ஏற்ற அறக் கருத்துகளை கலித்தொகை எடுத்தியம்புகின்றது. கலித்தொகையில் ஆங்காங்கே பல அறக்கருத்துக்கள் காணப்பட்டாலும், ஒரே பாடலில் அறவுரைக் கருத்துகள் அனைத்தையும் தொகுத்துக் கூறியுள்ளது. இதனை,
“ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரிதல்
பண்பெனப் படுவது பாடு அறிந்து ஒழுகுதல்
அன்பெனப் படுவது தன்கிளை செறாமை
அறிவெனப் படுவது பேதையர் சொல் நோன்றல்.
செறிவெனப் படுவது கூறியது மறாஅமை
நிறையெனப் படுவது கண்ணோடாது உயிர் வௌவல்
பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்” (கலி.பா.133)
என்ற பாடல் தெளிவாக்குகிறது. ஆற்றுதல் என்பது வருந்தி வந்தோர்க்கு உதவுதல்; போற்றுதல் என்பது அன்புடையோரைப் பிரியாது வாழ்தல்; பண்பெனப்படுவது சான்றோர் வழி அறிந்து ஒழுகுதல்; அன்பெனப்படுவது சுற்றம் தழுவி வாழ்தல்; அறிவெனப்படுவது அறிவிலார் சொல் பொறுத்தல்; செறிவு என்பது கொடுத்த வாக்கைக் காத்து நிற்றல்; நிறைவு எனப்படுவது பிறர் அறியாது மறை பொருள் காத்தல் நீதி முறைமை எனப்படுவது ஒரு பால் கோடாது ஒறுத்தல் பொறுமை எனப்படுவது இகழ்வாரையும் பொறுத்துக் கொள்ளல் முதலிய அறக்கருத்துகளை உள்ளடக்கியது கலித்தொகையில் பாடல்கள். இந்நூல் வாழ்க்கையில் அனைவரும் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் கொண்டதாக திகழ்கின்றது.
நடுவு நிலைமை
நடுவு நிலைமை என்பது யார்க்கும் பாரபட்சம் பாராமல் எல்லார்க்கும் ஒப்ப நிற்கும் நிலை ஆகும். கலித்தொகை வேண்டியவர், வேண்டாதவர் எனும் கண்ணோட்டம் இல்லாமல் நடுவு நிலையாக நிற்கும் பண்பினைப் போற்றிக் கூறுகின்றது. நடுவு நிலைமையோடு செயலாற்றிட வேண்டும் எனும் அறக் கருத்தினைத் தெளிவுறுத்துகின்றது. மரத்தின் மையத்தில் உள்ள ஆணி போல ஒரு பக்கத்திலும் சாயாது சிறப்புடன் விளங்க வேண்டும் என்று தாய் மகனுக்குச் சொல்வது போலக் கலித்தொகையில் பாடலொன்று காணப்படுகின்றது.
“பால் கொளல் இன்றி, பகல் போல் முறைக்கு ஒல்காக்
கோல் செம்மை ஒத்தி பெரும”(கலி.பா.86)
என்ற பாடல் விளக்குகிறது. நடவு நடுவுநிலைமை பற்றி வள்ளுவரும்,
“சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி”(குறள்.118)
என்ற குறளில் துலாக்கோல் போல் நேர்மையாக நின்று சிறிதும் மாறாமல் தனக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற காழ்ப்புணர்ச்சியின்றி வழக்கின் தன்மையை ஆய்ந்து நீதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றார். மேலும்,
“நன்றே வரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்”(குறள்.113)
என்ற குறள் எவ்வளவு நல்லதாயினும் நடுவுநிலைமையான நேர்மையை விட்டு விட்டு அடையக்கூடிய செல்வத்தை அப்போதே விலக்கிவிட வேண்டும் என்றுரைக்கின்றது. நடுவுநிலைமையைக் கடைப்பிடித்து ஒழுகும் அனைவருடைய வாழ்விலும் மேன்மை உண்டாகும் என்பது தெளிவாகிறது.
பிறர்க்குதவும் ஈகைப் பண்பு
வறுமையால் இரந்து வந்து கேட்பவர்க்கு இல்லை என்று சொல்லாது கொடுத்தல் கொடிய வறுமைக்கண் பசி தீர்க்கும் உணவைக் கொடுப்பது ஈகை எனப்படும். இவ் ஈகையானது கொடையிலிருந்து வேறுபட்டதாகும் என வகுத்துள்ளார் வள்ளுவர். இதனை,
“வறியார்க் கொன்று ஈவதே ஈகை மற்றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து”(குறள்.221)
என்னும் குறளில் பதில் உதவி செய்ய முடியாத ஏழைகளுக்குக் கொடுப்பதே ஈகையாகும். பிற கொடைகள் யாவும் பயன் எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மையை உடையது என்கிறார். இதிலிருந்து ஈகை என்பது வறியவர்க்கு பதில் உதவி எதிர்பாராது கொடுக்கும் சிறு உதவியே ஈகை எனக் கருதமுடிகிறது. வறியோர் பசி தீர்ந்தலே ஒருவன் தான் செல்வத்தைச் சேர்த்து வைக்கும் இடமென்று சங்க கால மக்கள் எண்ணி வாழ்ந்தனர். காற்றை விட விரைந்து செல்லும் தேர்களை மட்டுமின்றி யானைகளையும் தன்னை நாடி வரும் புலவர்களுக்கு பரிசாக அளித்த தன்மையினை,
“நீயே வளியின் இகல் மிகும் தேரும் களிறும்
தளியின் சிறந்தனை வந்த புலவர்க்கு
அளியொடு கைதூவலை”(கலி.பா150)
என்ற பாடலின் மூலம் அறிய முடிகிறது. மேலும்,
”நீரினும் சாயல் உடையன், நயந்தோர்க்குத்
தேர் ஈயும் வண் கையவன்”(கலி.பா.6)
என்ற கலித்தொகைப் பாடலும் குறிப்பிடுகிறது. இதனைப் பார்க்கும் போது இரந்து வந்தோர்க்கு பொன், பொருள் மட்டும் அல்ல தேரையே வழங்கக் கூடிய மனிதநேயம் மேலோங்கி இருந்த செய்தியை அறிய முடிகின்றது. ஈகையின் சிறப்பினை,
“சீறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய”(சிறுபாண்.பா.162)
என்ற பாடல் வரியிலும்,
“மகிழாது ஈத்த இழையணி நெடுந்தேர்
பயன்கெழு முள்ளூர் மீமிசைப்
பட்ட மாரி உறையினும் பலவே”(புறம்.பா.123)
என்ற புறநானூற்று பாடலின் மூலமும் அறிய முடிகிறது. சங்க கால மக்கள் ஈகையில் சிறந்து விளங்கி, மனிதநேய அறங்களை உலகிற்கு எடுத்துரைத்துள்ளனர். தன்னை நாடி வந்தவர்க்கு இல்லை என்று கூறக் கூடாது என்றப் பண்பு சங்ககாலத்தில் இருந்து வந்துள்ளதை அறிய முடிகிறது. தம் வாழ்க்கைக்கு வேண்டியப் பொருள் தம்மிடம் இல்லை என்று சொல்லி வந்து இரந்தவர்க்குச் சிறு பொருளையும் தராதிருப்பது இழிவாகும். இதனை,
“இடன் இன்றி இரந்தோர்க்கு ஒன்று
ஈயாமை இழிவு…..(கலி.பா.2) என்றும்,
“இன்மை உரைத்தார்க்கு அது நிறைக்கல் ஆற்றாக்கால்
தன் மெய் துறப்பான் மலை”(கலி.பா.7)
என்னும் கலித்தொகைப் பாடல்கள் விளக்குகின்றன. இதனை,
”இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே உள”(குறள்.223)
என்ற குறள் வழி இல்லை என்று கூறாது பிறருக்கு கொடுக்கும் சிறந்த பண்பு ஈதல் தன்மை உடையவனுக்கே உண்டு என்பதை காணமுடிகின்றது. ஈதலில் குறை காட்டாது இரந்தவர் மனம் மகிழக் கொடுக்கும் தன்மையை,
“ஈதலில் குறை காட்டாது. அதன் அறிந்து ஒழுகிய
தீதிலான் செல்வம் போல”(கலி.பா.27)
என்ற கலித்தொகைப் பாடல் விளக்குகிறது.
“நட்டோர் உவப்ப நடையரி காரம்
முட்டாது கொடுத்த முனை விளக்கு தடக்கை
துளி மழை பொழியும் வளி துஞ்சு நெடுங்கோட்டு
நளிமலை நாடன் நள்ளியும்”(சிறுபாண்.பா.162)
தன்னை நாடி வந்தவர் மனம் மகிழ, அவர் இல்லத்திற்கு இயன்ற பொருள்களைக் குறிப்பறிந்து வழங்கியவன் நள்ளி என்னும் வள்ளல் என்பது சிறுபாணாற்றுப்படை பாடலின் மூலம் விளங்குகிறது. கொடுத்து வாழ்வது சிறப்பானது. அச்சிறப்பினை,
“கொடுப்பின் அசனம் கொடுக்க
வெகுளி கெடுத்து விடல்”(நான்மணி.பா.79)
நான்மணிக்கடிகை பாடல் இல்லார்க்குக் கொடுத்தலும், ஏழை உறவினரை எடுத்துயர்த்தலும் சிறந்ததெனக் கூறுகின்றது. தலைவியின் தந்தை இரப்பவர் மீதுள்ள அன்பால் எவருக்கும் சிறந்த பொருளைத் தருபவராக விளங்குகிறார். இரந்தவர்க்கு ஏதேனும் ஒன்றை முகம் மாறுபடாமல் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்க முடியாவிட்டால் வாழ்வதைவிட சாவதே மேல் என வாழ்ந்துள்ளனர் சங்கத் தமிழர்கள். இதனை,
“செறா அதுஈதல் இரந்தவர்க்கு ஒன்று ஆற்றாது வாழ்தலின்
சாதலும் கூடுமாம் மற்று”(கலி.பா.363)
என்று கூறுகிறது கலித்தொகை. இதன் மூலம் ஈகைக் குணம் மட்டும் இல்லாமல் மனித நேயமும் வெளிப்படுவதைக் காண முடிகிறது.
விருந்தோம்பல் பண்பு
தமிழ் மக்களின் பண்டைக்கால பழக்க வழக்கங்களில் ஒன்று விருந்தோம்பல் பண்பாகும்.
“கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே
வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி” (புறப். 35)
தமிழ்க்குடி என்று அனைவராலும் போற்றப்படும் தமிழ் மக்களின் பண்பாட்டில் விருந்தோம்பல் சிறப்புமிக்கதாகும். விருந்தோம்பலின் சிறப்பை விளக்கும் இலக்கண நூலான தொல்காப்பியம் மனிதநேயப் பண்புகளுள் தலைசிறந்த ஒன்றாக விருந்தினைக் குறிக்கின்றது. இதனை,
“விருந்து புறந் தருலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்”(தொல்.கற்பு.நூ.11)
என்ற தொல்காப்பிய கற்பியல் நூற்பா தெளிவாக்குகிறது. விருந்தோம்பல் சிறந்திருந்ததை சங்கப் புலவர்கள் குறிப்பிட்டுள்ளனர். முன்பின் அறிமுகம் இல்லாத நிலையிலும் கூட வழிப்போக்கர்களை அழைத்து உபசரிக்க வேண்டும். இவ்வுபசரிப்பு விருந்தோம்பலில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்களாகக் கலித்தொகை ஒரு காட்சியின் வழிக் சுட்டுகிறது. தலைவியும், தோழியும் சிறுமியாய்த் தெருவில் மணல் வீடு கட்டி ஆடும் காலத்தே வீட்டைக் காலால் அழித்தும், கூந்தலில் சூடியிருந்த பறித்துப் பாழாக்கியும், பந்தைக் கவர்ந்து ஓடியும், மனம் நோவத்தக்கனவற்றையே செய்யும் கொடியவனாகிய சிறுவயதிலிருந்த தலைவன் பிற்காலத்தில் பருவ மெய்திய தலைவியைக் காண விரும்பினான். தலைவியும், அவள் அன்னையும் வீட்டிலிருக்கும் போது அவர்தம் மனைக்குச் சென்றான். தாகத்திற்கு நீர் கேட்டான். தலைவியின் தாயும் தலைவியை நீர் கொண்டு தருமாறு பணித்தாள் என்பதனை.
“உண்ணுதி வேட்டேன் என வந்தாற்கு, அன்னை
அடர் பொற் சிரகத்தா வாக்கி, சுடரிழாய்
உண்ணு நீர் ஊட்டி வா என்றாள், என யானும்
தன்னை அறியாது சென்றேன் ; மற்று என்னை
வளை முன்கை பற்றி நலிய, தெருமந்திட்டு”(கலித்தொகை.பா.51)
என்ற கலித்தொகை பாடல் அழகுற எடுத்துரைக்கிறது. எத்தகைய சூழலிலும் தவறாது விருந்தோம்பலைக் கடைப்பிடித்தனர் என்பதை கலித்தொகையில் காண முடிகிறது. மனையிலிருக்கும் பரத்தையருடன் கூடி வீடு திரும்புகின்ற கணவன் தன்னுடன் விருந்தினரையும் அழைத்து வருவான் இவ்வாறு அழைத்து வருவதால் மனைவியானவள் அவனொடு ஊடல் மறந்து வரும் விருந்தினரை வரவேற்று விருந்து படைப்பாள் என்பதை,
“விருந்து எதிர் கொள்ளவும், பொய்ச்சூள் அஞ்சவும்” (கலித்.பா.70)
என்ற பாடல் வழி அறிய முடிகின்றது. எந்த வேளையில் விருந்தினார் வரினும் முகம் கோணாமல் விருந்தினரை வரவேற்றுப் பேணும் பண்புடைய தலைவியைப் பற்றி நற்றிணைப் பாடலில் அறிய முடிகிறது.
“அல்லி வாயினும் விருந்துவரின் உவக்கும்
முல்லை சான்ற கற்பின் மெல்லியல்”(நற்றிணை.பா.142)
மேலும், வீட்டிற்கு வரும் விருந்தினர்களை முகமலர்ச்சியோடு வரவேற்றால் அவர்கள் மகிழ்வர். முகத்தில் மாறுபாடு தோன்ற அழைத்தால், அவர்களது முகம் வாடிவிடும் என்பதை.
“மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரித்து
நோக்கக் குழையும் விருந்து”(குறள்.90)
என்ற குறள் உணர்த்துகிறது. விருந்தினரைப் போற்றி பாதுகாப்பது தமிழர்களின் பண்பாக விளங்கியுள்ளமை வெளிப்படுகிறது.
முடிவுரை
பதினெண் கீழ்க்கணக்கில் அற நூல்கள் கூறும் கருத்துகள் போன்றே கலித்தொகையும் வாழ்க்கைக்கு தேவையான பிறருக்கு உதவும் ஈகைப் பண்பு, விருந்தோம்பல் பண்பு, நடுவுநிலைமை முதலிய அறக்கருத்துக்களை தெளிவுறுத்துகின்றன. இவ்வறக் கருத்துக்களை கடைப்பிடித்து வாழ்ந்தால் ஒவ்வொருவருடைய வாழ்வும் சிறந்து விளங்கும்.
துணை நூல்கள்
1.கலித்தொகை, நச்சினார்கினியர்(உ.ஆ), கழக வெளியீடு, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை.
2.தொல்காப்பியம், இளம்பூரணர் (உ.ஆ), சாரதா பதிப்பகம், சென்னை.
3.நற்றிணை, ஔவை துரைசாமி பிள்ளை.சு, பூம்புகார் பதிப்பகம், சென்னை.
4.புறப்பொருள் வெண்பாமாலை, முனைவர் ச. திருஞானசம்பந்தம், கதிர் பதிப்பகம், திருவையாறு.
5.பத்துப்பாட்டு, மாணிக்கம். புலவர். அ. (உ.ஆ) வர்த்தமானன் பதிப்பகம், சென்னை.
6.திருக்குறள், பரிமேலழகர் உரை, ராம் பிரசுரம், சென்னை.
7.நான்மணிக்கடிகை, மாதவன்[ப.ஆ]. வே.இரா, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
ஆய்வாளர்
ச.ஆருத்ரா,
முதுகலைத் தமிழ் இரண்டாமாண்டு,
இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரி,
திருவாரூர்.
நெறியாளர்
முனைவர் பெ. வெற்றிச்செல்வி,
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரி,
திருவாரூர்.




ஆய்வாளர்


