The Sound of the Twisted Bow by Rama and the Distance it Reached|Dr.G.Mangaiyarkkarasi

இராமன் வளைத்த வில்லும், வில்லின் ஒலி கேட்ட தொலைவும் - முனைவர் க.மங்கையர்க்கரசி
Synopsis
        Rama, an incarnation of Thirumal, was born for Raavana’s demise only. Lord Rama will hold the Godandum (Bow) in his hand. He married Sita by twisting Lord Shiva’s Triyambaka bow, which was imposed as a precondition by King Janaka for the marriage of his lovely daughter Sita. The sound of twisting and breaking of that Divine bow was heard even in the heaven. It was heard even in Ayodhya, where Dasharatha ruled, and even in Mahendra Hill, where Parashurama lived, and even in Sri Lanka, where Ravana ruled. Kambar says that as  Sita  was in the palace of Mithila, she could not hear that sound and she came to know  that Rama had twisted and has broken  that  bow only after it was conveyed by her own  close associate  Neela Malai and the same has been elegantly expressed out in Ramayana by the legendary poet Kambar. Here it is imagined that   Sita did not hear that voice because of her ecstacy of love towards Rama her Life Partner.

Key words: Ram, Seetha, Breaking Sound o the Bow, Enthusiasm of the Divine Beings.


இராமன் வளைத்த வில்லும், வில்லின் ஒலி கேட்ட தொலைவும்

ஆய்வுச் சுருக்கம்
           திருமாலின் அவதாரமான இராமன் பிறப்பெடுத்ததே இராவண வதத்திற்காக தான். இராமன் கையில் எப்போதும் கோதண்டம் இருக்கும். திருமண நிபந்தனையாக ஜனகன் விதித்த சிவனின் திரியம்பகம் வில்லை வளைத்தே சீதையை மணம் புரிந்தார். அவன் வளைத்த வில்லின் ஓசை விண்ணுலகம் வரை கேட்டது. தசரதன் ஆட்சிபுரிந்த அயோத்தி வரை,பரசுராமர் வாழ்ந்து வந்த மகேந்திர மலை வரை, இலங்கை வேந்தன் இராவணன் ஆண்ட இலங்கை வரை கேட்டது என்றும், மிதிலையில் அரண்மனையில் இருந்த சீதைக்குக் கேட்கவில்லை, தோழி நீலமாலை வந்து சொன்ன பிறகுதான், இராமன் வில்லை வளைத்ததையே சீதை அறிந்து கொண்டாள் என்று கம்பர் தம் இராமாயணத்தில் சுவையாகக் கூறி சென்றுள்ளார். தலைவனைப் பற்றிய காதல் நினைவிலேயே இருந்ததால் அவளுக்கு அவ் ஓசை கேட்கவில்லை போலும்.

திறவுச் சொற்கள்: இராமன், சீதை, வில், ஒடித்த போது கேட்ட ஓசை,   தேவர்களின் மகிழ்ச்சி.

முன்னுரை
        இராமன் கையில் வில் (கோதண்டம்) எப்பொழுதும் நீங்கா இடம் பெற்றிருக்கும். வில்லேந்திய இராமனையை நாம் கம்பராமாயணம் முழுவதும் காண்கிறோம். தாடகை வதத்தில் ஆரம்பித்து இராவணவதம் முடிய நாம் கோதண்டராமனையேப் பார்க்கிறோம். ஒரு சொல், ஒரு வில், இரு இல் என்றே வாழ்ந்தவன் நம் கதாநாயகன் இராமன். நூல் முழுவதும் இராமபிரானின் அளவிடமுடியாத வில்லாற்றலை நம் கண்முன் காட்டுகிறார் கம்பர். கிடைத்தற்கரிய, சீதையைப் பெறவேண்டுமானால் சிவதனுசை வளைத்து நாணேற்ற வேண்டும் என்ற நிபந்தனையின்படி, வில்லை வளைத்து நாணேற்றி, திருமகளாம் சீதையை மணந்தான். வில்லின் பெருமையையும்,அதன் வரலாற்றையும், அதைச் சுமந்து வந்த வீரர்களின் எண்ணிக்கையையும், வில்லின் ஒலி எவ்வளவு தொலைவிற்குக் கேட்டது என்பது குறித்தும் கம்பர் தம் இராமாயணத்தில் கூறியுள்ள கருத்துக்களைக் இக்கட்டுரையில் ஆராய்வோம்.

வில்லின் வரலாறு
      வில்லின் வரலாற்றை சதானந்த முனிவர் கூற ஆரம்பித்தார். சிவன், உமாதேவியைத் தந்தையான தக்கன் இகழ்ந்தான் என்பதால், பொறுமை சிறிதுமற்று பொங்கிய சினத்தோடு இந்த வில்லைக் கையில் எடுத்துக்கொண்டு, தக்கன் வேள்வி செய்யும் இடத்துக்குச் சிவன்,  சென்றான். வேள்விக்கு வந்திருந்த தேவர்கள் சிலருடைய பற்களும், கைகளும் சிதறின. அதுவரை அவர்கள் புகுந்திடாத மறைவிடங்களில் எல்லாம் தேவர்கள் ஓடிப் புகுந்தனர். தக்கனது வேள்வி குண்டத்தில் இருந்த அக்னியும் அழிந்தது. பின்பே சிவன் சினம் தணிந்தான். அவர் கையில் இருந்த வில்லைக் கண்ட தேவர்கள் நடுங்கினார்கள். அவர்கள் இன்னும் வாழ வேண்டிய வாழ்நாளைப் பெற்றவர்கள். அதனால் வலிமை பொருந்திய அடிதண்டையும் கட்டமைப்பையும் பெற்ற தனது வில்லை  ஜனகனது குலத்திலே தோன்றிய வாள் கொண்டு உழும் வல்லமை பெற்ற தேவராஜன் என்னும் அரசனிடம் கொடுத்துவிட்டான். இத்தன்மை பெற்ற இவ்வில்லின் வலிமையை நான் எடுத்துச் சொல்லவும் வேண்டுமோ என்று சதானந்தர் கூறினார்.(கார்முகப்படலம் 628)

வில்லை வளைத்தவனுக்கே சீதை
 
            அழகுமிக்க சீதையை மணக்க ஜனகன் ஒரு நிபந்தனை விதித்திருந்தார். சிவபெருமான் கைக்கொண்டு போரிட்ட வில்லை வளைத்தவனே சீதையை மணப்பதற்கு உரிமை உடையவன் என்று நாங்கள் உறுதியாக உரைத்தோம் என்ற சதானந்தர் கூறினார். வில்லை 60,000 வீரர்கள் சுமந்து வந்து நில மகளின் முதுகு நெளிந்து போகும் படி கீழே வைத்தனர். இந்த வில்லை எடுத்து வளைக்கப் போகின்றவர் யாரோ என்று கூறி கை நடுக்கம் அடைந்தார். (கார்முகப்படலம் 624) பெண்ணைப் பெற்ற ஜனகர் தன் மகள் சீதைக்குத் திருமணம் செய்ய விரும்பினார். வில்லை வளைத்தவர்க்கே பெண் என்ற நிபந்தனையை விதித்திருந்தார். யாராலும் அந்த வில்லைத் தூக்கக் கூட முடியவில்லை. திருமணமும் தள்ளிப்போனது.
பருவமடைந்த பெண்ணுக்குத் திருமணம் தாமதமானால் அவள் தந்தையின் மனநிலை மிகவும் வருத்தமடையும். சிவதனுசின் வரலாற்றை சதானந்த முனிவர் அவையோர்க்கு சொல்லத் தொடங்குகிறார். இம்முறையாவது சிவதனுசை யாராவது முறித்தால் சீதைக்குத் திருமணம் நடைபெறும். நடைபெற வேண்டுமே என்ற கவலையோடு அந்த சிவதனுசை ஜனகர் வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதையும் கவனித்த சதானந்த முனிவர், கூறத்தொடங்கினார்.

“போதகம் அனையவன் பொலிவை நோக்கி அவ் 
வேதனை தருகின்ற வில்லை நோக்கித் தன் 
மாதினை நோக்குவான் மணத்தினை நோக்கிய
கோதமன் காதலன் கூறல் மேவினான்” (கார்முகப்படலம் 625)
இராமன் வில்லை வளைத்தல்
       விசுவாமித்திரரின் குறிப்பை உணர்ந்த இராமன் வில்லைப் பார்த்து அதை நோக்கி நடந்தான். சீதை என்பவளுக்குச் சூட்டும் பொருட்டு நீட்டுகின்ற இதழ் விரிந்த மாலை என்று எண்ணும் படி மிக எளிதாக அந்த வில்லை இராமன் கையில் எடுத்தான். அக்காட்சியைக் கண்டவர் தம் இமைகள் அசைவதைத் தடுத்து இமைக்காத விழிகளோடு மேலே நடக்கப் போவதைக் காண காத்திருந்தனர். ஆனாலும் அவர்கள் இராமன் அந்த வில்லின் ஒரு முனையைத் தன் காலின் கீழ் இருக்குமாறு மிதித்துக்கொண்டு, அதன் மற்றொரு முனையை வளைத்ததையும் அதில் நாணினைப் பூட்டியதையும் அச்செயல்கள் நிகழ்ந்த வேகத்தால் காணாதவரானார்கள். அவை நிகழ்ந்த தன்மையை மனதாலும் அவர்கள் அறியவில்லை. முதலில் இராமன் அந்த வில்லை எடுத்ததைக் கண்டார்கள். உடனே அந்த வில் இற்றதை முறிந்ததைக் கேட்டார்கள். அவ்வளவுதான்.

“தடுத்தது இமையாமல் இருந்தவர் தாளில் 
மடுத்ததும் நாண் நுதி வைத்ததும் நோக்கார் 
கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால் 
எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்”  (கார்முகப்படலம் 648)
வில்லோசை கேட்ட தேவர்கள்
      வில் ஒடிந்த பேரோசையால் மூவுலகத்துக்கும் தோன்றிய அச்சம் வில்முறிந்த வல்லோசையைக் கேட்டதை இவர்கள் பிரம்மன் படைத்த பெருமை மிகுந்த அண்ட கோளம் பிளந்துவிட்டது என்று கருதி கவலை அடைந்து, இப்போது நாம் யாரிடம் அடைக்கலம் கேட்டு போவோம் என்று எண்ணி வருந்தினர். தேவர்களின் நிலை இவ்வாறானால் உலகத்து மக்கள் அடைந்த நிலையை வீணாக ஏன் சொல்ல வேண்டும். இந்த பூமியைத் தாங்கிக்கொண்டு, பூமி என்னும் மரத்தின் வேர் போல விளங்கும் ஆதிசேஷன் இடி தன்மையில் விழுந்துவிட்டது என்று நினைத்து பயந்தான். (கார்முகப்படலம் 649)
பகைவருக்கு அச்சமளித்து தனக்கு வெற்றியை அளிக்கும் வேலை உடைய ஜனகன் செய்த புண்ணியம் இன்று பயனளித்து விட்டது என்று எண்ணிய தேவர்கள் பூமழை சொறிந்தார்கள். (கார்முகப்படலம் 650)

வில்லோசை கேட்ட மிதிலை மக்கள்
       மேகங்கள் பொன் மழையைப் பொழிந்தன. உலகைச் சுற்றி பறந்துள்ள கடல்கள் பலவகையான சிறந்த ரத்தினங்களை அள்ளி வீசி ஆரவாரம் செய்தன. சிறந்த முனிவர்களில் குழுக்கள் எல்லாம் நல்வாழ்த்துக்கள் கூறினார்கள். மிதிலை நகரில் ஆரவாரம் மிகுந்திருந்தது. (கார்முகப்படலம் 650, 651)
 விரும்பி அருந்தத் தக்க கள்ளைப் பருகியவர்கள் போல சிவந்து காணப்படும் கரிய மைப்பூசிய கண்களை உடைய மகளிர் தம் மனதிற்கு புண்ணைத் தந்த ஊடல் நீங்கியதால் தன் கணவரைத் தழுவிக்கொண்டனர். வீசும் அலைகளால் பரப்பளவை மேலும் விரியச் செய்யும் கடலிலே வெண்மேகங்கள் தண்ணீரைப் பருகுவது போல வறுமையுடையவர்கள் இவ்வுலகில் குவிந்திருக்கும் ஜனகனது பெருஞ்செல்வதை அவரது ஆணையின்படி வாரி சென்றார்கள்.

மிதிலை நகரத்தார் கூறிய உவகை மொழிகள்
         மிதிலை நகரத்து மக்களில் சிலர் இவன் தசரதன் புதல்வன் என்று கூறுவர். சிலர் செந்தாமரைக் கண்ணனான பெருமாளே இவன் என்று சொல்லுவர். சிலர் இவனது திருமேனி ஒரு கருமேகமே என்று உரைப்பர். சிலர் அத்திருமேனி காயாம்பூ வண்ணத்தையும் ஒத்தது என்று புகழ்வர். சிலர் இவன் மனிதன் அல்லன் என்று உறுதி செய்வர். சிலர் கயல் மீன்கள் வாழும் பாற்கடலில் வாழும் பெருமாளே இவன் என்று ஐயம் இன்றி அறைவர். சிலர் இவனை மானுடன் என்று கூறும் உலகத்தினர் அறியாமை பெற்றவர் என்று கூறுவர். (கார்முகப்படலம் 656)
இராமனின் அழகைக் காண்பதற்கு சீதைக்கு ஆயிரம் கண்கள் வேண்டும். சீதையை ஒவ்வொரு முறைக் காணவும் அதைப்போல இராமனுக்கும் ஆயிரம் கண்கள் வேண்டும். இந்த அழகனின் தம்பியினுடைய அழகையும் பாருங்கள் என்று சிலர் சொல்லுவர். அந்த அழகர்களை பெற்றுள்ள இவ்வுலகம் தவம் பெற்றுள்ளது என்பவர். சிலர் இவ்வுலகில் தோன்றிய அழகர்களான இவ்விருவரையும் நாம் காணுமாறு இந்த மிதிலை நகருக்கு அழைத்து வந்த விசுவாமித்திரனை வணங்குங்கள் என்பார் சிலர். (கார்முகப்படலம் 657)
இவைஎல்லாம் இராமன் வில்லில் நாணேற்றிய ஒலியைக் கேட்டவுடன் மிதிலை மக்கள் அடைந்த மகிழ்ச்சியைக் குறிப்பிடுகிறது.

அயோத்தியில் கேட்ட வில்லின் ஒலி
        ஜனகனின் தூதர்கள் திருமண ஓலையை எடுத்துக் கொண்டு சக்கரவர்த்தி தசரதனின் அரண்மனையை அடைந்து ஓலையை வணங்கி வழங்கினர். அதைப் படித்து செய்தியை அறிந்த மன்னன், வெற்றி பெற்ற வேலை உடைய தசரதன் தொகுதியான நீண்ட ஜடை முடியை உடைய சிவபெருமான், தக்கனது வேள்வியை அழித்த போது, ஏழு உலகங்களையும் வெற்றி கொண்ட வலிமையான அந்த வில்லை இராமன் முறித்த போது உண்டான பேரொளி தானா? அன்று இங்கே இடிஒலியாகக் கேட்டது என்று கூறினான்.               

“வெற்றிவேல் மன்னவன் தக்கன் வேள்வியில் 
கற்றை வாறு சடை முடிக் கணிச்சி வானவன் 
முற்ற ஏழ் உலகையும் வென்ற மூரி வில்
இற்ற பேர் ஒலிகொலாம் இடித்தது ஈங்கு என்றான்” (எழுச்சிப் படலம் 685)       
        மிதிலையில் இராமன் ஒடித்த வில்லின் ஒலியானது அயோத்தியில் கேட்டது என்று தசரதன் குறிப்பிடுகிறான் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. 

மகேந்திர மலையில் கேட்ட ஒலி
        பரசுராமர் படலத்தில் திருமணம் முடித்து அயோத்தி செல்லும் வழியில் தசரதனையும், அவருடன் வந்தவர்களின் எதிரில் வந்த பரசுராமர் மறித்தார். நான் வென்ற உலகம் முழுவதையும் காசிப முனிவருக்கு தானமாகத் தந்துவிட்டேன். வெளிப்பகைகளை அடக்கி வென்ற நான், உட்பகைகளை வெல்வதற்காக மகேந்திர மலையில் தங்கி அளவில்லாத பெரிய தவங்களைச் செய்து வந்தேன். நீ சிவன் வில்லை முறித்த ஓசை, அங்கிருந்த என் செவியில் பட, சினம் கொண்டு இங்கு வந்தேன். உனக்கு வலிமை இருக்குமானால், உன்னுடன் நான் போரிடுவேன். முதலில் இந்த திருமாலின் வில்லை வாங்கி வளைத்திடு என்றான் பரசுராமன்.

“உலகமெல்லாம் முனிவதற்கு ஏந்தேன். ஒரு பகை ஒடுங்கிப் போந்தேன் 
அலகு இல் மாதவங்கள் செய்து ஓர் அருவரை இருந்தேன் ஆண்டை 
சிலையை நீ இறுத்த ஓசை செவியுறச் சீறி வந்தேன் 
மலைகுவென் வல்லை ஆகின் வாங்குதி தனுவை என்றான்”(பரசுராமப் படலம் 1242)
         
       மிதிலையில் இராமன் ஒடித்த வில்லின் ஒலியானது மகேந்திர மலையில் கேட்டது என்று பரசுராமன் குறிப்பிடுகிறான் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

இலங்கையில் கேட்ட ஒலி
        நிந்தனைப் படலத்தில் சீதை, இராவணனிடம் கயிலை மலையை நீ எடுத்த போது கால் விரலால் அழுத்தி உன்னை வென்ற சிவபெருமான், திரிபுரங்கள் தீ பற்றி எரியும் பொருட்டு ஒப்பற்ற ஒரு அம்பை செலுத்துவதற்கு வில்லாக இருந்தது மேருமலை. அந்த மேரு மலையாகிய சிவனது வில் என் கணவனின் வலிமையைத் தாங்கும் வல்லமை அற்றதாய் முறிந்து வீழ்ந்த போது எழுந்த பேரொளியினை நீ கேட்கவில்லை போலும். அது என்ன அதிசயம் என்று கேட்கிறாள்.

“குன்று நீ எடுத்த நாள் தன் சேவடிக்கொழுந்தால் உன்னை 
வென்றவன் புரங்கள் வேவத் தனிச்சரம் துரந்த மேரு 
என் துணைக் கணவன் ஆற்றற்கு உரன் இலாது இற்று வீழ்ந்த 
அன்று எழுந்த உயர்ந்த ஓசை கேட்டிலை போலும் அம்மா”  (நிந்தனைப் படலம் 450)
         
        படைக்காட்சிப் படலத்தில் மூலப்பல சேனைகள் இலங்கை வந்து சேர்ந்தன. அவர்களை வரவேற்று நலம் விசாரித்தான் இராவணன். இராம லக்ஷ்மணர்கள் குறித்து  புஷ்கர தீவின் மன்னன் வன்னி வினவிய போது பகைவரின் வலிமையை மாலியவான் எடுத்துக் கூறுகிறான். நீங்கள் இராம லக்ஷ்மணரின் வலிமையினைப் பற்றி இங்கு வந்து கேட்பது ஏன்? இராமனின் அக்னி ஆஸ்திரத்தால் அலை வீசுகின்ற கடல் அங்கு வேகவில்லையா அது இராமனால் ஏற்பட்டது என்பதை நீங்கள் சிறிதும் அறியவில்லையோ, கங்கையில் தலையில் கொண்டுள்ள சிவனது கடுமையான வில்லை சீதையின் பொருட்டு அக்காலத்தில் முறித்ததினால் உண்டான பேரொலி உங்களது செவியில் புகவில்லையோ என்று கேட்டான்.

“இங்கு வந்து நீர் வினாயது? என் எறி திரைப் பரவை
அங்கு வெந்திலதோ சிறிது அறிந்ததும் இலிரோ,
கங்கை சூடி தன் கடுஞ்சிலை ஒடித்த அக்காலம்
உங்கள் வான்செவி புகுந்திலதோ முழங்கு ஓதை”(படைக்காட்சிப் படலம் 3,227)
         
    மிதிலையில் இராமன் ஒடித்த வில்லின் ஒலியானது இலங்கையில் கேட்டது என்று  மாலியவான் குறிப்பிடுகிறான் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

வில் ஒடித்த செய்தியை நீலமாலை சீதைக்குத் தெரிவித்தல்
         சீதையின் தோழி நீலமாலை மலையை ஒத்த சிவனது வில் முறிந்த செயலை நேரில் கண்டாள். அதை சீதையிடம் சொல்வதற்காக விரைவாக ஓடி வந்தாள் அந்த நீலமாலை. வந்த உடனே வழக்கம் போல சீதையின் திருவடிகளை வணங்கவில்லை. மாறாக ஆரவாரம் செய்தாள். எல்லையற்ற மகிழ்ச்சி கொண்டவளாக ஆடினாள். பாடினாள். அதைக் கண்ட சீதை அழகு மிக்க தோழியே, உன் மனமகிழ்ச்சியையும், அந்த மகிழ்ச்சி தோன்றியதற்கான காரணமான செய்தியையும் சொல்லுக என்று கேட்டாள். உடனே நீலமாலை செய்தியை வணங்கிச் சொல்ல தொடங்கினாள். யானை, தேர், குதிரை ஆகிய படை கடல்களைப் படைத்தவனும், கல்விக் கடலை உடையவனும் மாரி போல வாரி வழங்கும் நீண்ட கைகளை உடையவராகிய தசரதன் என்னும் பெயரை உடையவன். இந்த உலகம் முழுவதையும் ஒப்பற்ற முறையில் ஆட்சி செய்து வருகிறான். அவனுடைய புதல்வன் மலர் அம்புகளைக் கொண்டு காதல் மயக்கம் உண்டாகும் மன்மதனை விட, சிறந்த அழகைப் பெற்றவன். இவை மராமரங்கள் என்று சொல்லத்தக்க தோள்களை உடையவன். பாம்பணையில் துயிலும் பரந்தாமனோ என்று ஐயுறச் செய்யும் ஆற்றலை உடையவன். அவன் பெயர் இராமன். அவன் தன் தம்பியோடும் போற்றுதலுக்குரிய விசுவாமித்திரோடும் நம் நகருக்கு வந்துள்ளான்.  வலிமை மிகுந்தவனான அந்த இராமன், புனிதராகிய சிவபெருமான் எழுத வில்லை காணும் பொருட்டு வந்துள்ளார் என்று விசுவாமித்திரர் உரைத்தான். உடனே ஜனக மன்னனின் கட்டளையின்படி வில் வந்தது. வில்லை வளைத்து மிக எளிதாக நாண் ஏற்றினான். அதைக் கண்டு விண்ணுலகம் நடுங்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வில்லின் ஒரு முனையைக் காலின் கீழ் மிதித்து முன்பு தனக்கு பழக்கமான படை கருவி இது என்று கண்டோர் கூறும் படி தன் தோள் வலிமையால் அதை வளைத்துவிட்டான். உடனே தேவர்கள் இராமனைப் புகழ்ந்து பூ மழை சொறிந்தார்கள். அவர்கள் அரசவை நடுக்கம் அடைய அந்த வில் முறிந்து விழுந்தது என்று நீலமாலைக் கூறி முடித்தாள். விசுவாமித்திர முனிவருடன் வந்த மேகம் போன்றவன் என்று கூறிய பிறகு அவன் செந்தாமரை கண்ணனான திருமாலைப் போன்றவன் என்றும், நீலமாலை கூறியதால், நான் காதல் கொண்ட அந்த நம்பியே அவன் என்று துணிந்து அவன் தானோ என்று முதலில் பிறந்த ஐயத்தை அகற்றிக் கொண்டாள். தாமரையை விட்டு தரணிக்கு வந்த திருமகளாகிய சிறப்பு மிக்க சீதை,

“மாத்திரை அளவில் தாள் மடுத்து முன் பயில்
சூத்திரம் இது எனத் தோளின் வாங்கினான்
ஏத்தினர் இமையவர் இழிந்த பூ மழை
வேத்தவை நடுக்குற முறிந்து வீழ்ந்ததே” (கார்முகப்படலம் 675)         
     மிதிலையில் இராமன் வில்லை ஒடித்து போது எழுந்த ஓசை, அதே மிதிலையில் அரண்மனையில் இருந்த சீதைக்கு கேட்கவில்லையாம். இராமன் மேல் அவள் கொண்ட காதல் மயக்கத்தில் இருந்ததால் வில் ஓடித்தபோது எழுந்த ஓசை சீதைக்குக் கேட்கவில்லை போலும். தோழி நீலமாலை வந்து சொன்ன பின்புதான் தெரிந்தது என்று கம்பர் நாடகநயம் போலும் குறிப்பிடுகிறார். (காதல் மயக்கத்தில் அவன் நினைவிலேயே இருந்ததால் கேட்காதோ என்னவோ)

முடிவுரை 
         ஜனகனின் அரண்மனை மண்டபத்தில் இருந்த சிவபெருமான் வைத்திருந்த திரியம்பகம் என்ற வில்லை இராமன் எடுத்து வளைத்தான். வில்லும் முறிந்தது. அந்தப் பேரொலியைக் கேட்ட வானத்து தேவர்களும் நடுங்கினர் என்று கூறுகிறார் கம்பர். அப்படியானால் அந்த பேரொலி விண்ணுலகம் வரை கேட்டது என்று ஆகிறது. தூதர் கொண்டு வந்த ஓலையைப் படித்து விவரம் அறிந்த மன்னன் தசரதன் அன்று கேட்ட ஒலி இதுதானோ என்ற போது மிதிலையில் ஒடித்த வில்லோசை அயோத்தி வரை கேட்டது என்பது புலப்படுகிறது. பரசுராமன் மகேந்திரமலையில் தவம் செய்து கொண்டிருந்தபோது வில்லோசை கேட்டதால் தான் நான் இங்கு வந்தேன் என்ற போது, மிதிலையில் ஒடித்த ஓசை மகேந்திரமலை வரை கேட்டது என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது. அசோகவனத்தில் இருந்த சீதை இராவணனிடம் இராமன் வளைத்த வில்லோசை உனக்கு அன்று கேட்கவில்லையோ (காட்டிற்கு இராமருடன் சீதை வந்து 13 வருடங்கள் ஆகிவிட்டது. அத்தனை வருடங்களுக்கு முன் கேட்கப்பட்ட ஓசை உனக்கு  கேட்கவில்லையோ என்கிறாள்). படைக்காட்சிப் படலத்தில் இராவணனின் பாட்டனார் புஷ்பகர தீவின் மன்னன் வன்னியிடம் சீதையை மணக்கும் பொருட்டாக அன்று இராமன் சிவபெருமானின் வில்லை வளைத்த ஓசை உங்களுக்கு கேட்கவில்லையோ என்று கேட்கிறான். இதிலிருந்து இராமன் வளைத்த வில்லின் ஓசை இலங்கை வரை கேட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அதே மிதிலையின் அரண்மனையில் இருந்த சீதைக்கு, இராமன் வில்லை வளைத்த போது எழுந்த பேரொலி குறித்த செய்தியை தோழி நீலமாலை  அவளுக்கு கூறினாள் என்றும், கம்பராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது என்பதையும் நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.

துணைநூற்பட்டியல்
1.செல்வம்.கோ,கம்பன் புதையல்,   சாரு பதிப்பகம், சென்னை 2016.     

2.ஞானசந்தரத்தரசு அ.அ., கம்பன் புதிய தேடல், தமிழ்ச்சோலைப் பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.

3.ஞானசம்பந்தன் அ.ச இராமன் பன்முகநோக்கில், சாரு பதிப்பகம், சென்னை,2016.

4.பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி  2,3,4,5,6,7,8. வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.

Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் க.மங்கையர்க்கரசி
உதவிப்பேராசிரியர்

அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II)

மீனம்பாக்கம்,
சென்னை 600061.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here