Thamizh Ilakkiyangalil Palluyirgal|Dr.Geetha Ramanan

Abstract
        
        Many messages regarding biodiversity have been mentioned in Tamil literature. The excellence of the Tamils-who, even in ancient times, categorized life forms through direct observation, gathered information, and subtle intuition-is rarely found in other languages. We find numerous poems composed by poets who, while traversing forests and diverse landscapes, sang about what they encountered along the way. Just as indigenous forest dwellers gain intricate knowledge of animals, birds, and trees through experience, we must recognize that the poets of that era researched and documented these details with similar authenticity. Sangam poets illustrate in their verses which life forms are found in specific natural environments. Knowledge, education, and a deep sense of involvement with nature were essential for this. In this article, we shall explore some of those literary records.


“தமிழ் இலக்கியங்களில் பல்லுயிர்கள்”

ஆய்வுச்சுருக்கம்
         
        தமிழிலக்கியங்களில் பல்லுயிர்கள் குறித்த பல செய்திகள் கூறப்பட்டுள்ளன. பண்டைக்காலத்திலேயே கண்ணால் கண்டும் செய்திகளால் அறிந்தும் நுண்ணிய உணர்வினால் பாகுபடுத்திக் கூறிய தமிழர்களின் மேன்மையை வேற்று மொழிகளில் காண முடியாது. புலவர்கள் காடுகளையும் பல்வகை நிலங்களையும் கடந்து சென்றபோது, வழியில் கண்டவற்றைப் பாடிய பல பாடல்களைக் காண்கிறோம். காட்டில் வாழும் பழங்குடிகள் விலங்குகள், பறவைகள், மரங்கள் பற்றிய பல நுண்ணிய செய்திகளை அனுபவ வாயிலாக அறிந்திருப்பதைப் போன்றே அக்காலத்தில் இத்தகைய செய்திகளை மேலும் ஆராய்ந்து கண்டறிந்து புலவர்கள் கூறியதே உண்மையெனக் கொள்ள வேண்டும். இயற்கையில் எந்தெந்தச் சூழ்நிலையில் எந்த உயிர்கள் காணப்படுகின்றன என்பதை சங்கப் புலவர்கள் பாடல்களில் காட்டுகின்றனர். இதற்கு அறிவும் கல்வியும் இயற்கை ஈடுபாட்டு உணர்வும் இன்றியமையாதனவாகும். அத்தகைய இலக்கியத் தரவுகள் சிலவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

திறவுச்சொற்கள்:  முதலை, அன்றில்,நாரை, மான் கொம்பு, யானை, குரங்கு, புலி

முன்னுரை
         
      மேற்போக்காக உயிரினங்களின் நடமாட்டத்தைக் கண்டு மகிழ்வதும், அவற்றால் ஆபத்து நேரிடக்கூடிய சூழல்களில் அஞ்சி ஒதுங்குவதும் மனித இயல்பு. அவற்றைப் பயன்படுத்திக் கொள்வதும், கொன்று தின்பதும் கூட மனிதர்கள் நெடுகிலும் செய்துவருவதே. அறிவு முதிர்ந்து முன்னேறிய நிலையில் மனிதன் இயற்கையில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு அவற்றால் புதிய பொருள்களைப்படைத்து வாழ்வுத்தரத்தால் விலங்கினத்திலிருந்து விலகி உயர்ந்த இனமாக முன்னேறினான். தனதறிவைப் பகிரும் விதமாக மொழியறிவால் மேம்பட்டான். மொழியின் துணையால் காலத்தால் அழியாதவாறு தனதறிவை இலக்கியங்களாகத் தந்தான். அத்தகைய தரவுகளில் தன்னைச் சுற்றியுள்ள பல்லுயிர்கள் குறித்த தனது ஆய்வுகளை வெளிப்படுத்திய தமிழர் இலக்கியத்துளிகளுள் சிலவற்றைக் காணப்புகுவோம்.

முதலை
         
        பழந்தொகை நூல்களில் முதலைகளை இடங்கர், கராம், முதலை என்று பல பெயர்களில் இலக்கியப் பாடல் வரிகள் குறிப்பிடுகின்றன.

பிள்ளை தின்னும் முதலைத்து அவனூர்” (ஐங்குறுநூறு 24)
         
தன் குட்டியைத் தானே தின்னும் முதலைகளும் உள்ளதை ஐங்குறுநூறு 24ஆம் பாடலில் உள்ள இவ்வரி கூறுகிறது. பலரும் அறியாத முதலையின் இத்தகைய செயல் இப்பாடல் வரியால்  புலனாகிறது.
மேலும்

தாள் படு சில் நீர்க் களிறு அட்டு வீழ்க்கும்
ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்னை (புறநானூறு 104)
         
       முழங்கால் அளவேயான சிறிது நீரில் யானையைக் கொன்று வீழ்த்துமளவு இழுக்கும் ஆற்றலையுடைய முதலை (புறநானூறு 104, வரி 3-4);
என்று இவற்றின் பண்பு புலவரால் சங்க இலக்கியத்தில் ஆவணப்படுத்தப் பட்டுள்ளது. முழங்காலளவு நீருள்ள நிலையில் நீர் பருக வரும் யானையின் காலை முதலை பற்றி  இழுப்பது காணுதற்கரிய காட்சி. இதை நேரில் கண்டோ, அல்லது கேள்விப்பட்டோ புலவர் நாமறியும்படி தமது படைப்பில் குறித்துள்ளார்.

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்                                   
நீங்கின் அதனைப் பிற          (குறள் 495)
         
        இது குறள் கூறும் இயற்கை உண்மை. திருவள்ளுவர் தொடாத துறைகள் இல்லையெனலாம். இயற்கையின் பல பரிமாணங்களைத் திருக்குறள் நெடுகிலும் காண்கிறோம். ஆழமற்ற நீரில் யானையையும் இழுக்கும் வலிமை பெற்ற முதலையைப் புறநானூறு காட்டியது. ஆனால் புனலில் மற்ற உயிர்களை வெல்லும் முதலை  நீரிலிருந்து விலகிக் கரைக்கு வந்தால் அந்த முதலையை மற்ற உயிர்கள் வென்றுவிடும். நிலத்தில் முதலை வலுவிழந்து வேட்டையாடும் தன்மை இழப்பதோடல்லாமல் தற்காத்துக்கொள்வதும் இயலாததாகிறது.

அன்றில் பறவை
         
      பனை மரங்களில் கூடு கட்டி வாழக்கூடிய அன்றில் பறவை நீர்ப்பறவைவகைகளில் ஒன்றாகும். கரு நிறத்தில் கொக்கு வடிவில் உடலும் வளைந்த அலகும் கொண்ட இப்பறவை பெரும்பாலும் கருநிறம் கொண்டதாம். இப்போது இப்பறவை இருக்கிறதா இல்லையா என்பதே நமக்குத்தெரியாது. காணவே முடியாததாகி விட்ட இப்பறவை குறித்தும் பழந்தமிழ்ப் புலவர்கள் பாடியுள்ளனர்.

பூவிடைப் படினும் யாண்டு கழிந்தன்ன                                            
நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப்                                               
பிரிவரி தாகிய தண்டாக் காமமொடு                                                      
உடனுயிர் போகுக தில்ல கடனறிந்                                             
திருவேம் ஆகிய வுலகத்                                                                                
தொருவே மாகிய புன்மை நாம் உயற்கே.      (குறுந்தொகை 56)
         
        இப்பாடலில் தலைவி தன் தோழியிடம் “தோழி, செய்ய வேண்டிய கடமைகளுக்காக இருவேறு உடல் உடையவர்களாக இந்த உலகத்தில் நானும் என் தலைவனும் இருந்தாலும் உள்ளத்தால் இணைந்து ஓருயிர் ஈருடலாகக் கருத்தொருமித்த காதலர்களாக இருந்தோம். இப்பொழுது, ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாத சூழ்நிலையில் பிரிந்து வாழ்கிறோம்.  நீரில் நீந்துகையிலும் எப்பொழுதும் சேர்ந்தே இருக்கும் மகன்றில் பறவைகள், நீர் மலரான ஏதேனும் ஒரு பூ தம்மிடையில் வந்ததால் சிறிது நேரம் பிரிய நேரிடும் பொழுது, அந்தப்பிரிவும் ஓராண்டு காலம் கடந்தாற் போல அப்பறவைகளுக்குத் துன்பத்தை உண்டாக்குமாம். இந்தப் பிரிவினால் நாங்கள் அந்தப் பறவைகளைப் போல வருந்துகிறோம். இந்தத் துன்பத்திலிருந்து தப்புவதற்கு ஒரேவழி, பிரிதலே இல்லாமல், நீங்காத காதலோடு எங்கள் இருவரின் உயிரும் ஒருங்கே போகட்டும் என்பதே” என்று வருந்தி முறையிடுவதாகப் புலவர் அமைத்திருக்கிறார். 
         
         அன்றில் எனப் பொதுவாகக் கூறப்படும் பறவைகளுள் மகன்றிலும் ஒன்று. இப்பறவைகளுள், ஆணும் பெண்ணும் எப்பொழுதும் பிரிவின்றி இணைந்து வாழ்வனவாகக் கருதப்படுகின்றன. எப்பொழுதும் இணைந்தே இருப்பதால், அவை நீரில் சென்றுகொண்டிருக்கும் பொழுது அவை செல்லும் வழியில் ஒரு பூ குறுக்கே வந்தாலும் அந்தக் குறுகிய காலப் பிரிவைக்கூட இப்பறவைகள் தாங்க முடியாமல் வருந்தும் என்ற இயல்பை அறிந்து கூறும் நோக்கு எந்த அளவு தமிழ்ப்புலவர்கள் நுண்ணிய நெடு நோக்குடன் உயிரினங்களை ஆய்ந்து அவற்றின் சிறப்பியல்பைக் கண்டுள்ளனர் எனக் காட்டுகிறது.

நாரை
         
       இன்றளவும் கோடிக்கரை உள்ளிட்ட நம் தமிழ்நாட்டு நீர் நிலைகளுக்குச் செங்கால்கள் உடைய நாரைகள் வந்து செல்கின்றன. உலகில் நெடுந்தூரம் பறந்து இடம்பெயரும் பறவைகளுள் நாரையும் அடங்கும். பெரும்பாலும் பெரிய கூட்டங்களாகவே இவை இடப்பெயர்ச்சி செய்கின்றன. சத்திமுத்தம் என்ற சிற்றூர் சார்ந்த புலவர் ஒருவர் மதுரை சென்று பாண்டிய மன்னரிடம் பரிசு பெற்றுவர முயல்கிறார். மதுரையை அடைந்த அவர் தங்குவதற்கு ஏற்ற இடமின்றி வாடைக் காற்றில் சுருண்டு படுக்கும் துன்ப நிலை அடைகிறார். அப்போது வானில் தென் திசை நோக்கிச் செல்லும் நாரைகளைக் காண்கிறார். உடனே அவர் பாடிய பாடல் இது

நாராய்! நாராய்! செங்கால் நாராய்                                              
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன                                                     
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்!                                                      
நீயுநின் மனைவியும் தென்றிசை குமரியாடி                                                    
வடதிசைக் கேகுவீ ராயின்                                                                 
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி                                                    
நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி                                                        
பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு                                                 
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்                                                           
ஆடை யின்றி வாடையின் மெலிந்து                                                       
கையது கொண்டு மெய்யது பொத்திக்                                                         
காலது கொண்டு மேலது தழீஇப்                                                            
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்                                                          
ஏழை யாளனைக் கண்டனம் எனுமே.
         
       இத் தனிப்பாடலில் சத்திமுத்தப் புலவர் ‘பவளக்கூர்வாய்ச் செங்கால் நாராய்!’ என்று விளித்து தன்னுடைய நிலையைத் தன் மனைவிக்கு உணர்த்துமாறு நாரையைத் தூது அனுப்புகிறார். பறவைகள் கண்டம் விட்டு கண்டம் பறந்து சென்று தனது இனப்பெருக்கத்தை மேற்கொள்ளும் என்ற அறிவியலாளர் கருத்தை மிக எளிமையாகப் இப்பாடலில் உணர்த்தும் புலவர் நாரையை நோக்கி “நீவீர் தென்திசைக் குமரி ஆடி வடதிசை நோக்கிச் செல்லுகையில் எங்கள் சத்திமுத்த வாவியில் தங்கி அவ்வூரில் என் வரவுக்காகக் காத்திருக்கும் எனது மனைவியிடம் “பேழைக்குள் இருக்கும் பாம்பென உயிர்க்கும் ஏழையாளனைக் கண்டேன்” என்று உரைப்பீர்களாக என்று தன் நிலையை மிக நயமாக எடுத்துரைக்கிறார் புலவர்.
 நாரை சென்று மீளும் திசைகளை உற்றாய்ந்து அதனைத் தூதாக அனுப்பிய விதம் வியப்பளிக்கிறது.

யானை       
     யானை மனிதர்களுடன் வாழக்கூடிய இயல்புடையது. எனினும் அது காடுகளில் தனது அடிப்படை இயற்கையில் வாழும்போது அதன் தனித்தன்மையான குணங்கள் வெளிப்படும்.
யானன தன் கொம்பால் புலியைக் கொன்றுவிட்டு தன் கொம்பையும் உடலையும் கழுவிக் கொள்வதைச் சங்ககாலப் புலவர்கள் கீழ்க்காணும் பாடல்களில் கூறியுள்ளனர்

“இரும்புலி தொலைத்த பெருங்கை வேழத்துப்                                           
புலவுநாறு புகர்நுதல் கழுவக் கங்குல்                                              
அருவி தந்த அணங்குடை நெடுங்கோட்டு”     (அகம்.272)
         
       பெரிய கையை உடைய ஆண்யானை வலிமை மிக்க புலியைக் குத்தி அதனைக் கொன்றது. புலவு நாற்றம் அடிக்கும் தன் முகத்தைக் கழுவுவதற்காக, பெருமலைப் பிளவில் அணங்குப் பெண்கள் வாழும் அருவிக்கு வந்தது. புலவர்கள் உவமைகள் வாயிலாகவும், சொல்நய வாயிலாகவும் படம்பிடித்துக் காட்டியதை விலங்கியல் நூலாரும் யானனயின் செயலாகக் குறிப்பிடுகின்றனர்.

உழுவையொடு உழந்த உயங்கு நடை ஒருத்தல்                                              
நெடு வகிர் விழுப் புண் கழாஅ, கங்குல்                                                      
ஆலி அழி துளி பொழிந்த வைகறை,             (அகம் 308)
         
     புலியோடு போராடி, தளர்வுற்று நடக்கும் யானையின் விழுப்புண்ணை, அதாவது புலியின் பற்களாலும் நகங்களாலும் கிழிபட்டிருக்கும் புண்ணைப் பனிக்கட்டியுடன் பொழியும் மழை நீரானது கழுவும் இரவு நிறைவுறும் வைகறை வேளை நிகழ்வாகக் காட்டுகிறார். இப்பாடலில் யானைக்கும் புலிக்கும் அரியதாக இரவின் இருளில் நடைபெறும் போர் குறித்து அறிகிறோம்.

மான்       
     சங்க இலக்கியங்களில் ஐந்து வகையான மான்கள் பற்றிய செய்திகள் கூறப் பட்டுள்ளன. அவை இரலி, நவ்வி, மரையான், உழை, கடமா என்பனவாம். அகநானூறு 151ஆம் பாடலில் கலைமானின் தலையில் முதன் முதலாகக் கவையுடன் கொம்பு முளைப்பதும், பிறகு கொம்பு முதிர வைகறை வேளையில் புதிய களைகள் கொம்பில் தோன்றிக் கவை கவையாக கிளைவிட்டுக் காணப்படும் என்றும் கீழ்க்காணும் பாடலில் கூறப்பட்டுள்ளது.

கலைமான் தலையின் முதன்முதல் கவர்த்த                                                     
கோடல் அம் கவற்ற குறுங்கால் உறிஞ்சில்          (அகம் 151)         
      இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புலவர்கள் இதை எழுதியிருப்பது விந்தையாக உள்ளது. முதிர்ந்த கொம்புகளைக் கலைமான் உதிர்த்து விடுகிறது என்பதைக் கீழ்க்காணும் பாடலும் உணர்த்துகிறது.

கள்ளிஅம் காட்ட புள்ளியம் பொறிக் கலை                                         
 
வறன்உறல் அம்கோடு உதிர வலங் கடந்து                                                 
புலவுப்புலி துறந்த கலவுக்கழி கடுமுடை             (அகம் 97)
         
       உதிர்ந்த முற்றிய கொம்பை ‘அறுககாட்டு முற்றல்’ என்று நற்றிணை அழைக்கிறது. கலைமானிற்கு அதனுடைய கொம்பே புலியிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள உதவுகிறது. வறண்ட கொம்பு உதிரவே கலைமானை எளிதில் வென்று புலி கொன்றதாக அகநானூறு கூறுகின்றது. கலைமானின் கொம்பு முளைப்பதும், கினள விடுவதும், வளர்வதும், உதிர்ப்பதும், திரும்ப முளைப்பதும் ஆகியவற்றைத்  தற்காலத்திலும் விலங்கியல் ஆய்வாளர்கள்  ஆராய்ந்து எழுதியுள்ளார்கள்.

குரங்கு
         
       சங்க இலக்கியங்களில் செம்முகமந்தி, முசு, கணக்கலை, ஊகம் என நான்கு குரங்கு வகைகள் பற்றிய பதிவுகளைக் காணலாம். இதில் செம்முகமந்தி என்பது தமிழ்நாட்டில் எங்கும் காணக் கூடியது.

“நோன் பகட்டு உமணர் ஒழுகையொடு வந்த                                     
மகாஅர் அன்ன மந்தி,”         (சிறுபாணாற்றுப்படை- வரி- 55-56)         
       என்று சிறுபாணாற்றுப்படை கூறுவதில் இருந்து மந்திகளை மக்கள் வளர்த்து வந்தது தெரிகின்றது. அழும் குழந்தைகளுக்குக் குரங்குக் குட்டிகள் கிளுகிளுப்பை ஆட்டிக் காட்டுவதாக சிறுபாணாற்றுப்படை கூறுவதில் இருந்து இக்குரங்குகள் மக்களிடம் நெருங்கிப் பழகிய குரங்கு வகை எனத் தெரிகிறது.
குரங்கு வகைகளில் மற்றொரு வகையான  முசுக்குரங்கின் முக்கிய எதிரி சிறுத்தை. சிறுத்தைப்புலி, வேங்கைப்புலி கண்டு குரங்குகள் மிகவும் அஞ்சும்.

புலி உரி வரி அதள் கடுப்ப, கலி சிறந்து,                                            
நாட் பூ வேங்கை நறு மலர் உதிர,                                                   
மேக்கு எழு பெருஞ் சினை ஏறி, கணக் கலை                                              
கூப்பிடூஉ உகளும் குன்றகச் சிறு நெறி           (அகம் 205)
         
        மஞ்சள் நிறமான வேங்கைப் பூக்கள் கரிய பாறைகளில் உதிர்ந்து கிடப்பது வரி உடைய புலி என்று எண்ணி ஆண் முசுக் கூட்டம் கிளைகளில் ஏறி மற்ற குரங்குகளையும் கூப்பிட்டுத் தாவும் என்று அகநானூறு 205ஆம் பாடல் சொல்லியிருப்பது வேட்டையாளரும் விலங்கு நூலாளரும் கூறிய உண்மைச் செய்திகளை ஒத்து இருக்கின்றது.

புலி         
     புலியானது பூனை இனத்தை சேர்ந்தது. இந்த இன விலங்குகள் இரைக்காக வேட்டையாடும்போது பதுங்கி ஒதுங்கி தக்க சமயம் பார்த்து திடுமென பாய்ந்து தாக்கிக் கொல்லும். இதே கருத்தை

களிற்றிரை தெரீஇய பார்வ லொதுக்கி                                           
னொளித்தியங்கு மரபின் வயப்புலி போல        (அகம் 22)
         
       சமயம் பார்த்துக் கொண்டே ஒதுங்கிப் பதுங்கிக் கொண்டிருக்கும் புலி போல என்று அகநானூறு கூறுவது அரிய விளக்கமாகும் புலி பதுங்கி இருந்து தாக்கும் போது பெரும்பாலும் இரையாகும் விலங்குகளை கழுத்தை முறித்துக் கீழே விழச் செய்யும் என்று விலங்கு நூலார் கூறுவர். கழுத்தின் அடிப்பாகமான தொண்டையை கவ்வும் போது எந்த விலங்கும் தப்பித்து ஓடுவது அரிது.

“கறுழ் பொருத செவ் வாயான்,                                                                
எருத்து வவ்விய புலி போன்றன”              (புறநானூறு 4)
       என்று புறநானூறு கூறுவது உற்று நோக்கத்தக்கது.
மேலும் புலி வேட்டையாடிய தனது இரையைக் கொன்ற இடத்தில் உண்ணாது இழுத்துச் சென்று பதுக்கி உண்ணும். இது புலியின் தனிக் குணமென விலங்கியலார் கூறுவர், புலி தான் உண்டது போக மிஞ்சிய உணவைத் தனது குகையிலோ முழையிலோ பதுக்கி வைத்து, கெட்ட நாற்றம் அடித்து புழுத்துப் போனாலும் மீண்டும் அதையே உண்ணும் என்று கூறுவர். புலியின் இக்குணங்களையும் சங்கப் புலவர்கள் கண்டு கூறியிருக்கின்றனர்.

“ஆடு கழை நரலும் அணங்குடைக் கவாஅன்                                          
ஈர் உயிர்ப் பிணவின் வயவுப் பசி களைஇய                                            
இருங்களிறு அட்ட பெருஞ்சின உழுவை                                                           
நாம நல் அராக் கதிர்பட உமிழ்ந்த                                                                  
மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும்                                                                 
வாள் நடந்தன்ன வழக்கு அருங்கவலை                                                               
உள்ளுநர் உட்கும் கல் அடர்ச் சிறு நெறி”         (அகம் 72)
“புலிபுகா வுறுத்த புலவுநாறு கல்லளை”           (குறுந்தொகை 253)
        
        என்று அகநானூறு 72ஆம் பாடலிலும் குறுந்தொகை 253 ஆம் பாடலிலும் தெளிவாகக் கூறப்படுகிறது. இதிலிருந்து புலி தனது இரையை இழுத்துச் சென்று பதுக்குவதையும் கெடு நாற்றம் அடிக்க வைத்ததையும் நன்கு கண்டறிந்து பாடினர் என்பது புலனாகிறது.

முடிவுரை
         
       இன்று நாம் திரைகளில் விலங்குகளுடன் மிக நெருங்கி  வாழ்வதைப் போலவே அவற்றின் வாழ்வைக் கண்டு விவரங்களை அறிகிறோம். ஆயின் பண்டைக்காலத்தில் எவ்வித வசதிகளும் இல்லாத சூழலில் தம்மைச் சுற்றி நிறைந்த இயற்கையையும், உயிர்களையும் கண்டு அவற்றின் வாழ்வு முறைகளை ஏட்டில் பதித்துவைத்த நம் தமிழறிஞர்களின் புலமையும் திறனும் வியந்து போற்றவேண்டியதாகும் என்பதை மிகச்சில எடுத்துக்காட்டுகளுடன் கண்டோம். மேலும் பல செய்திகள் பல்லுயிர்களைக் குறித்து நம் இலக்கியங்களில் உள்ளன. பல ஆய்வுக் கட்டுரைகள் தருமளவில் அவை நிறை குவையாக உள்ளன.

துணைநூற் பட்டியல்
1. Jungle Lore, Jim Corbett, 1953 Oxford University Press, (UK/USA)

2. Every Creature Has a Story, Janaki Lenin, 2023 Harper Collins, India

3. சங்கஇலக்கியத்தில் விலங்கின விளக்கம், பி.எல்.சாமி, பி.எஸ்ஸி, ஆகஸ்ட் 1970, அப்பர் அச்சகம், மெட்ராஸ் – 600 001.

4.சங்க இலக்கியத்தில் அறிவியற் கலை, பி.எல்.சாமி, ஐ.ஏ.எஸ்.(ஓய்வு), டிசம்பர் 1991, அமுதன் அச்சகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர், சென்னை – 600 078

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் கீதா ரமணன்
உதவிப்பேராசிரியர்,

அண்ணா ஆதர்ச மகளிர் கல்லூரி,
(தமிழ்த்துறை : சுழற்சி-2)
AI – 9 வது மெயின் ரோடு,
அண்ணா நகர்,சென்னை – 600 040

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here