Thamilar Vaalviyalil Ariviyal|Dr A.Parimala

தமிழர் வாழ்வியலில் அறிவியல் - முனைவர் ஆ.பரிமளா
Abstract         
           In the life of the ancient Tamils, science was intricately woven into every aspect, extending from the atom to the universe. Tamil literature was not composed merely for aesthetic pleasure, but rather as a synthesis of experience and scientific thought. The visions conceived by the Tamils of the past are now materializing as present-day realities. Indeed, it would not be an exaggeration to assert that the very foundation of modern scientific advancement can be traced to the life and knowledge of the ancient Tamils, as reflected in their literary works. For instance, with reference to natural science, a verse states:

“Splitting the atom could stir even the seven seas.”
               
          This highlights the profound foresight regarding scientific principles. The concept of the atom as an indivisible, minute particle, invisible to the naked eye, is recognized as a discovery of modern science. However, it is astonishing that Avvaiyar, who lived more than a millennium ago, not only identified the atom but also articulated the idea of splitting it in her poetry. Similarly, Subramania Bharathi vividly illustrates the dynamic nature of atomic motion in his verse:

“We have heard scholars proclaim that atoms ceaselessly move in orbits.”
               
            Thus, Tamil literature serves as a remarkable testimony to the scientific acumen of the Tamils. This essay, therefore, seeks to analyze and emphasize the scientific insights embedded within Tamil literary traditions.

KEYWORDS: Ancient Tamils, Science, Literature, Atom, Avvaiyar, Innovation, Scientific knowledge


தமிழர் வாழ்வியலில் அறிவியல்

அறிமுகம்        
     பழந்தமிழரின் வாழ்வில், அணுவில் தொடங்கி அண்டம் வரையிலும் அறிவியல் பரவிக் கிடக்கின்றது. இலக்கியங்கள், வெறும் இரசனைக்குரிய ஒன்றாக மட்டுமல்லாமல் அனுபவமும் அறிவியலும் கலந்த படைப்பாகவே ஆக்கப்பட்டுள்ளன. அன்றைய தமிழர் கண்ட கனவுகளே இன்றைய நிஜங்களாக உருவாகி வருகின்றன.  இன்று நம் வாழ்வின் அறிவியல் வளர்ச்சியின் ஆணிவேராக பழந்தமிழர் வாழ்க்கை அமைந்துள்ளது என்றால் மிகையில்லை. இதனைத் தமிழ் இலக்கியங்கள்  பறைசாற்றுகின்றன. இயற்கை அறிவியல்,

அணுவைப் பிளந்து ஏழ்கடலைப் புகட்டி
குறுகத் தெறித்த குறள்.
         
         என்று அறிவியலின்  பெருமையை உரைக்கிறது. அணு என்பது கண்களுக்குப் புலப்படாத மிகச் சிறிய மூலக்கூறு என்பது அறிவியலின் கண்டுபிடிப்பு. ஆயினும் பன்னூறு ஆண்டுகட்கு முன்பு வாழ்ந்த ஔவை அதனை அறிந்திருந்ததும் அணுவைப் பிளப்பது குறித்து பாடலில் கூறியிருப்பதும் வியப்பிற்குரியது.

இடையின்றி அணுக்க ளெல்லாம் சுற்றுமென
இயல் நூலார் இசைத்தல் கேட்டோம்
         
       என்று பாரதி அணுக்களின் அசைவுகள் குறித்து அழகு தமிழ் படைக்கின்றார். அவ்வகையில் தமிழ் இலக்கியங்களில் அறிவியலின் ஆற்றல் பற்றி இக்கட்டுரை ஆய்கிறது.

முன்னுரை 
      
    ஐம்பூதங்களால் உருவானது இவ்வுலகம். அதனை,

நுண்முறை வெள்ள முழ்கியார் தருபு
உள்ளிபிகிய இருநிலத் தூழியும் (பரி.2:5- 12)
         
     என்று பரிபாடல் விளக்குகிறது. இதில் வானிலிருந்து காற்றும் காற்றிலிருந்து தீயும் தீயிலிருந்து நீரும் நீரிலிருந்து நிலமும் தோன்றிய நிலைகளைப் புலவர் கூறியுள்ளார். இவை மட்டுமன்றி கதிரவனில் பிரிந்து பூமி நீண்ட காலத்திற்கு நெருப்புக் கோளமாக இருந்தது என்றும் அது  காலப்போக்கில்   சிறிது   சிறிதாக    குளிர்ந்து    பனிப்படலமாக   மாறி, பின் நிலம் தோன்றியது என்றும், உலகத்தின் தோற்றம் குறித்த பல அறிவியல் உண்மைகளை விளக்குகிறது, பரிபாடல்.  மேகம் கடல் நீரை பெற்று மழையாகப் பொழிகிறது என்பது அறிவியல் கண்டுபிடிப்பு. அதனை ,

நிறைகடல் முகந்துராய் நிறைந்து நீர்தளும்பும் தன்
பொறை தவிர்பு அசைவிட (பரி. 6:1 – 2)
         
     என்று பாரிபாடலில்,  முகில்கள் கடலின்கண் நீரை முகந்து கொண்டு வந்து ஊழி முடிவின்கண் முழுகுவிக்க முயன்றது போல் மழை பெய்தது என்ற கருத்து, கூறப்பட்டுள்ளது. மேலும், இன்றைய மருத்துவ உலகம் மனிதனைக் காப்பாற்ற மரணத்தின் வாயில் வரை செல்கிறது. மருத்துவப் படிப்புகளோ, செயல்முறைப் பயிற்சிகளோ இல்லாத அந்தக் காலகட்டத்திலும் சித்தர்களும், சிறந்த வைத்தியர்களும் வாழ்ந்துள்ளதை அவர்கள் படைத்த  இலக்கியங்கள் நமக்குக் கூறுகின்றன.                                                       
மாதா உதிரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதிரத்தில் வைத்த குழவிக்கே  (திருமந்திரம்)
         
      என்று திருமூலர் இயற்றிய திருமந்திரப் பாடல் விளம்புகின்றது. தாயின் உதிரத்தில் மலம் மிகுந்தால் பிறக்கும் குழுந்தை மந்தபுத்தி உடையதாகவும், நீர் மிகுந்தால் குழந்தை ஊமையாகவும் மலம், நீர் இரண்டும் மிகுதியாக இருந்தால் குழந்தை குருடாகப் பிறக்கும், என்ற கருத்துக்கள் இப்பாடலில் பயின்று வருகின்றன. இக்கருத்துக்கள் மருத்துவர்களின் ஆலோசனைகளிலும் அமைந்திருப்பதை அறிய முடிகிறது. மேலும், பழுதுபட்ட ஒரு உடல் உறுப்பை எடுத்துவிட்டு வேறொரு உறுப்பினைப் பொருத்துதல் என்பது இன்றைய மருத்துவ உலகின் சாதனை. அதனை,   

நாடுவிளங் கொண்புகழ் நடுகதல் வேண்டித்தன்
ஆடு மழைத் தடக்கை யறுத்து முறைசெய்த
பொற்கை நறுந்தார்ப் புனைதேர்ப் பாண்டியன் (சிலப்பதிகாரம்)
என்ற சிலப்பதிகாரப் பாடலின்வழி உணரமுடிகிறது.  பெரியபுராணத்திலும்,

மதர்த்தெழும் உள்ளத்தோடு மகிழ்ந்துமுன் இருந்து தங்கண்
முதற்சர மடுத்து வாங்கி முதல்வர்தங் கண்ணில் அப்ப (பெ.பு.2)
         
       என்ற அடிகளில் விளக்கப்படுகின்றது. இன்று கண்பார்வையற்றவர்க்கு பிறருடைய கண்ணினை வைத்து அறுவை சிகிச்சை செய்து பார்வை பெற வைக்கும் மருத்துவ அறிவினை மிக எளிமையாக கண்ணப்பர் கதை மூலம் வெளிப்படுத்தியுள்ளார் சேக்கிழார். மேலும்,  அறிவியல் உலகின் அறிய சாதனையான அறுவைச் சிகிச்சையினை பதிற்றுப்பத்தில்,

அம்புசே ருடம்பினர்ச் சேர்ந்தோ ரல்லது
தும்பை சூடாது மலைந்த மாட்சி (பதிற்றுப்பத்து 42: 2 – 6)
         
       என்று ஐந்தாம் பத்தின் இரண்டாம் பாடலடியில் போரில் வெட்டுண்ட உடலை வெள்ளுசி கொண்டு தைத்த மருத்துவன் செயலை விளக்குகின்றன. இன்றைய மருத்துவ முறையின் அறிவியல் சார்ந்த சிகிக்சைகள் அனைத்தும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழரால் கையாளப்பட்டு வந்துள்ளன என்பது பெருமை கொள்ளச் செய்கின்றன.

ஆய்வுநோக்கம்
             நம் முன்னோர்களின் வாழ்வில் அனு முதல் அண்டம் வரை அறிவியல் எல்லா நிலைகளிலும் பரவியிருக்கிறது இலக்கியத்தினை வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல் தன்னுடைய அனுபவங்களையும் அறிவியலையும் கலந்து, படைப்பாகவே நல்கி இருக்கின்றனர். அன்றைய நம் சான்றோர்கள் கண்ட கனவுகளே இன்று பல நிலைகளில் நிஜங்கள் ஆக வலம் வருவதைக் காணமுடிகின்றது. இன்றைய அறிவியல் வளர்ச்சி நிலையின் ஆதாரத்தினை நாம் நம்முடைய சான்றோர்களின் வாயிலாகவே பெற்றிருக்கிறோம் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். அத்தகைய அறிவியல் அறத்தினை, இத்தலைமுறை  செம்மொழியுடன் இணைத்துப் பாதுகாத்துப் பயில வேண்டும் என்பதே இவ்வாய்வின் நல்நோக்கம் ஆகும்.

பழந்தமிழர் வாழ்வியலில் அறிவியல்         
         அமுதாம்பிகை பிள்ளைத் தமிழில் ஊசற் பருவத்தில், அமுதாம்பிகை ஊசலாடும் நிகழ்வினைக் குறிக்கும்போது சிவஞான முனிவர்,

நின்னகை நிலவெழிலுக்கு அவர் முகத்
திங்கள் சாய (அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் – ஊசல் பருவம்)
         
       என்ற அடிகளில் அமுதாம்பிகை ஆடும் ஊசலின் கயிறு  நீளமாக இருந்ததால் மெதுவாக ஆடுகிறது என்றும் ஆனால் அவள் காதில் அணிந்திருக்கும் குண்டலம் குறைவான நீளத்தில் தொங்குவதால் விரைவாக ஆடுகிறது என்றும் கூறியுள்ளார். இதனையே கலிலியோ ஊசலின் நீளம் குறித்த தம் ஆய்வில் ‘‘ஊசலின் நீளம் குறைவாக இருந்தால் விரைவாக ஆடும். ஊசலின் நீளம் அதிகமாக இருந்தால் மெதுவாக ஆடும்’’ என்றும் கூறியுள்ளார்.  இவ்வாறு ஆய்வுகளின் மூலமாக அறியப்பட்ட பல அறிவியல் உண்மைகள் வெறும் அனுபவத்தின் மூலமாகவும்,  பண்டைய தமிழர்களின் அறிவுத் தேடலின் விளைவுகளாகவும் பெறப்பட்டவை என்பதனை உணரலாம். அன்றைய மனிதன் கண்ட கனவை  இன்றைய அறிவியல் முன்னேற்றம்  நிஜமாக்கியது.   தேடல் இருக்கும் இடத்தில்தான் வெற்றி  கிடைக்கிறது.  பறவையைக் கண்ட மனிதன் தானும் பறக்க நினைத்தான். இறக்கைகள் இல்லாதபோதும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. விளைவு விமானத்தின் துணையோடு விண்ணில் பறந்தான் என்பதனை,   

வலவன் ஏவ வானவூர்தி (புறம் 27)
         
என்ற குறிப்புகள்  சங்கப் பாடல்களிலேயே பயின்று வந்துள்ளமையைக் காண முடிகிறது. மேலும், சிலப்பதிகாரத்தில் கண்ணகி, கோவலனோடு ஆகாயத்திலிருந்து வந்திறங்கிய விமான ஊர்தியில் ஏறிச் சென்றதாக அமைந்த  காட்சியினை  இளங்கோவடிகள்,

வானவூர்தி ஏறினள் மாதோ
கானமலர் புரிகுழல் கண்ணகி தானென் (3:196 – 200 )
         
        என்ற வரிகளில் கூறப்பட்டுள்ளது. சீவக சிந்தாமணியில், கட்டியங்காரன் போருக்கு வந்ததால் சச்சந்தன் தன் மனைவியை காப்பாற்ற அவளை மயிற்பொறியில் ஏற்றி அனுப்பினான் என்பது செய்தி.  கட்டியங்காரனின் வெற்றி முழக்கத்தை வான் வழியே கேட்டு விசயை மயங்கி வீழ்ந்தாள். மயிற்பொறி இடப்புறமாகத் திரும்பி ஒரு சுடுகாட்டில் இறங்கி கால் ஊன்றி நின்றது என்பதாக அமைந்துள்ளது. இதனை,

வெஃகிய புகழிவால தன் வென்று வெம்முரசம் ஆர்ப்ப
எஃகு எறி பினையின் மாழ்கி மெம்மறந்து சோர்ந்தாள் (நா.இ., பா. 299)
என்றும்,

பல் பொறி நெற்றிக்
குஞ்சிமா மஞ்சை வீழ்ந்து கால்குவித்து இருந்து (நா.இ., பா,30)         
        போன்ற வரிகளிலும் வானவூர்தி பற்றிய செய்திகளைக் காண முடிகிறது. இத்தகைய இலக்கியங்களை நோக்கும்போது தொகையும் பாட்டுமாக, சித்தர்களின் அரிய பொக்கிஷமாக, நாட்டுப்புற இலக்கியமாக இன்னும் எண்ணற்ற அறிவியல் உண்மைகள் இவற்றுள் பொதிந்து கிடக்கின்றன என்பதை உணர முடிகிறது. இவற்றுள் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின்வழி  மனித இனத்திற்குத் தேவையான மகத்தான  அறிவியல் அறிவும் பல மருத்துவத் தீர்வுகளும் கிடைக்கும் என்பது தெளிவாகிறது.
 மண்ணிலிருந்து எடுக்கப்படும் பொன் முழுவதும் தூய்மையானது அல்ல அதில் இடம்பெற்றுள்ள வேண்டாத பொருள்களை அகற்றினால் மட்டுமே தூய்மையான பயன்பாட்டிற்கு உடைய நிலையில் தங்கம் கிடைக்கும். அவ்வாறு பயன்பாட்டிற்கு உரிய நிலையில் தங்கத்தை மாற்றுவதற்கு முக்கிய இடத்தைப் பெறுவது நெருப்பாகும். தங்கத்தை நெருப்பினால் உருக்கித் தேவையில்லாத கழிவுகளை நீக்கியதும் தங்கம் தன்னுடைய ஒளியைப் பெற்று விடுகிறது இதனை வள்ளுவர்
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோக்கில் பவருக்கு. (குறள்-267)
         
      என்ற பாக்களின் வாயிலாக எடுத்துரைத்துள்ளார். இயற்பியலின் ஒரு பிரிவாக விளங்குவது அணுவியல். அண்மைக்கால அறிவியல் வரலாற்றில் அற்புதமான வளர்ச்சி பெற்று இருப்பது அணுவியலாகும். முதலில் அணுவைப் பிளக்க இயலாது என்ற கொள்கை தோன்றியது. மேலும், சந்திர கிரகணத்தைக் குறிக்க வந்த புலவர்கள், திங்களைப் பாம்பு விழுங்கியது என்று குறித்துள்ளனர்.  அக்காலத்தில் ராகு கேது என்றும் பாம்புகள் சூரியனையும் சந்திரனையும் விழுங்க முயல்வதாக மக்கள் கருதியிருந்த கருத்தே அதற்குக் காரணமாகும்.  பழங்காலத்தில் மேகம் கடலுக்கு சென்று நீரை முகந்து கொண்டு வானத்தில் ஏறிவந்து மழை பொழிவதாக மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பதனை,

விசும்புஇவர் கல்லாது தாங்குபு புணரி
செழும்பல் குன்றம் நோக்கிப்
பெருங்கலி வானம் ஏர்தரும் பொழுதே (குறுந்தொகை: 287)
         
         என்ற பாடலின்வழி அறியலாம். தமிழர் மரபுப்படி சனிக்கிழமை நீராடுவது வழக்கம், இதன் பொருள் சனிக்கிழமை மட்டும் நீராடுவது அல்ல.  உடல் ஆரோக்கியத்துடன் இருக்க கந்தகத்தன்மை சேர்ந்த தண்ணீரில் குளி என்பது பொருள்படும்.  இதன்படி சனிக்கோளில் (கரிக்கோள்), கந்தகத்தன்மை உள்ளதாக அறிவியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.  பலகோடி விண்மீன்கள் விண்வெளியில் உள்ளன. அதன்வழி 12 வட்டங்களாக ராசி என்ற பெயரிட்டு அழைத்தமையை,

தெருவிடைப் படுத்த மூன்று ஒன்பதிற் றிருக்கையுள்
உருகெழு வெள்ளிவந்த தேற்றியல் சேர (பரிபாடல் 11,1-4) 
என்ற பாடல் விளக்குகின்றது.

தமிழ் இலக்கியங்களில் அறிவியல் கோட்பாடுகள்
            
          தமிழிலக்கிய வரலாற்றில் பல அறிவியல் கோட்பாடுகள் பொதிந்துள்ளன. அவற்றில் சங்க கால இலக்கியங்களின் சான்றுகள் உள்ளன.  கரு, முதல் மாதத்தில் கரு 4.மி.மீ உள்ளதாக இருக்கும்.  இது இருபது நாட்களில் வளர்ச்சியுற்று இருதயம் துடிக்கச் செய்யும். இரண்டாவது மாதத்தில் கருவானது கருமுட்டையை விட 40,000 மடங்கு அதிகரிக்கும், என்கிறது கருவியல் நூல், அதனையே,

வயவுறு மகளிர் வேட்டுணி னல்லது
பகைவருண்ணா வருமண்ணினையே (புற:20 14.15)
         என்ற பாடல் விளக்குகின்றது. மேலும், மூன்று மாதத்தில் கரு அசைவு, நான்காம் மாதத்தில் பார்வைப்புலன் வளர்ச்சி அடையும் என்பதை மணிவாசகர்,

“பேரிருள் பிழைத்தும்”
      என்று விளக்குகிறார். இந்தப் படிநிலைகள் பல விஞ்ஞான வளர்ச்சியடைந்த போதிலும் கருவியல் கூறும் படிநிலைகள் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருக்கின்றது என்பது கருவியலில் உள்ள ஆச்சரியமாகும். மேலும், அறிவியல் மின்னனுக்களுடன் தொடர்புடைய துறையாக உள்ளது எனலாம். மூலக்கூறு என்பது அந்த பொருள்களில் உள்ள அணுக்களைப் பொருத்து அமைந்துள்ளது என்பதனை

தீயினுள் தெறல்நீ பூவினுள் நாற்றம் நீ
கல்லினுள் மணியும்நீ (பரி: 3,63-64)
         
       என்கிறது இப்பாடல். உலகத்தில் அழிவு ஒன்று உண்டு அழிந்து மீண்டும் தோன்றும் என்று பழமை நூல்களும், வேத சாஸ்திரங்களும் கூறுகின்றன.  கிருத்துவ புனித நூலான விவிலியத்தில் உலகம் பல்வேறு மாற்றங்களால் அழிவு நேரிடும் என்று கூறுகின்றது. இயற்கையின் பேரழிவால் உலகம் அழிய வாய்ப்பு இருக்கிறது என்றும் இந்த உலகம் அழிந்து மீண்டும் தோன்றும் முறையினை,

பசும்பொன் னுலகமும் மண்ணும் பாழ்பட
விசும்பில் ஊழி ஊழ்ஊழ் செல்ல(பரி:2, 1-4)
என்று பரிபாடல் கூறுகிறது. மேலும், அறத்துப்பாலில் வான்சிறப்பு எனும் அதிகாரத்தில்,

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்(குறள்-17)         
     என்ற குறட்பா வாயிலாகக்  கடல் நீர் ஆவியாகி மழையாகிப்  பெய்கின்ற நிகழ்வினை மிகத்தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார், வள்ளுவர். இதுவே இன்று நாம் நம் கல்வி முறையில் பயிலும் வாட்டர் சைக்கிள் (எவாபொரேஷன் ) ஆகும். விஞ்ஞானத்தைக் கூட அறம் வாயிலாக சுட்டி உரைத்தது நம் இலக்கியங்களில் மிகப்பெரிய தலையாயப் பண்பாகும். அறிவியலை வாழ்வியலுடன் இணைத்துக் கூற, தமிழால் மட்டுமே முடியும். கணிதம், மக்களின் வாழ்வோடு ஒட்டியது. கணிதம் இல்லாமல் வாழ்வியல் முறை இல்லை என்றே கூறலாம்.

நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்
மைஇல் கமலமும் வெள்ளமும் நுதலிய (பரி:2,13-14)
         
          என்கிறது பரிபாடல். இப்பாடலில்,  கணக்கற்ற பல ஊழிகள் பலகோடி ஆயிரம் காலத்தை குறிக்கின்றது.  இதில் ஆம்பல் என்பது ஆயிரம் கோடி என்ற பேரியல் எண்ணைக் குறிக்கின்றது. வெள்ளம் என்பது கோடி கோடியையும், கமலம் என்பது நூறு ஆயிரம் கோடியையும், பத்மம் என்பது சங்கம் பத்து நூறாயிரம் கோடி, நெய்தல் அல்லது குவளை நூறுகோடி எனவும், பாழ் என்பது பூஜ்யம் என்பது முதல் பல் அடுக்கு ஆம்பலான ஆயிரம் கோடி வரையிலும். ஆதற்கு மேலும் கணிதமுறையில் பின்னல்கள் முறையிலும் தனித் தனி பெயர்களைத் தமிழர்கள் கையாண்டு வந்திருக்கின்றனர் என்பது இதன் மூலம் நாம் அறியமுடிகிறது.

தொகுப்புரை
         
        20-ஆம் நூற்றாண்டை, “அறிவியல் யுகம்’ என்று கூறலாம். அறிவியல் கண்டுபிடிப்புகளும் சாதனைகளும் கணக்கில் அடங்காதவை. அறிவியல் வளர்ச்சி பெற்று விளங்கும் கருத்துகளுக்கான வித்துக்களைப் புராண இதிகாசங்கள், சங்க இலக்கியம் தொடங்கி ஆரம்பகாலக் கண்ணாடியான இலக்கியத்தில் காணலாம். மேலும், இந்நூற்றாண்டில் ஈடு இணையற்ற கவி பாரதியார் ஆவார். எதிர்காலச் சமுதாயம் அறிவியல் துறையில் என்னென்ன சாதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்னும் தம் கனவினை,

வானை அளப்போம் கடல் மீனை அளப்போம்
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்…         
என்று தம் பாடல் வழி உணர்த்துகிறார். இத்தகைய ஆய்வுகளின் வாயிலாக வரும் தலைமுறையினர் தம்முடைய எதிர்காலத்திற்குத் தேவையான அறிவியல் அறிவினையும் அதற்கான தீர்வையும் நம் சான்றோர்கள் முன்கூட்டியே சுட்டிக்காட்டி இருப்பார்கள் என்பதனை தெள்ளத்தெளிவாக அறியமுடிகின்றது.

துணைநூற்பட்டியல்
1.wikipedia

2.google

3.தமிழ் அகராதி – தமிழ் அகரமுதலி, சென்னைப் பல்கலைக்கழக அகராதி.

4.தமிழ் இலக்கிய வரலாறு – மு. வரதராசன்

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர். ஆ. பரிமளா
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
கே. பி. ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, கோவை.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here