Abstract
Thoothu Ilakkiyam (Messenger Literature) is a literary genre where a person sends a non-human entity as a messenger to convey one’s thoughts or message to another person. Often, birds, animals, or states of mind are used as messengers in this literary genre. It is also known as “Vaayil Ilakkiyam” or “Sandhu Ilakkiyam”. This genre emerged as a distinct literary form in the 14th century, but its elements can be found in Sangam literature and the literary works of epics. A woman in love with Somesundara Kadavul sends the message in Tamil to express her love and suffering. The heroine’s message highlights the greatness of Tamil language showcasing its excellence in literature and grammar. Tamil literature is renowned for its poetic forms, five types of landscapes, colours, origin, seasons, and grammatical aspects such as phonetics, morphology, and semantics. The heroine mentions the names of all the books of Tamil illakkanam, emphasizing the richness of Tamil language.
“தமிழ்விடு தூதில் இலக்கணச் செய்திகள்”
ஆய்வுச் சுருக்கம்
தூது இலக்கியம் என்பது ஒருவர் தனது கருத்தை அல்லது செய்தியை இன்னொருவருக்கு அறிவிக்க மனிதரல்லாத அஃறிணை பொருளைத் தூதாக அனுப்பும் ஒரு இலக்கிய வகையாகும். பெரும்பாலும் பறவைகள், விலங்குகள், அல்லது மனதின் நிலைகள் தூது போகும் பொருட்களாக அமைகின்றன. இது “வாயில் இலக்கியம்” அல்லது “சந்து இலக்கியம்” என்றும் அழைக்கப்படுகிறது. 14 நூற்றாண்டில் இது தனித்ததொரு இலக்கிய வகையாக உருவெடுத்தது. ஆனால் சங்க இலக்கியங்கள் மற்றும் காப்பியங்களிலும் இதன் கூறுகள் காணப்படுகின்றன. சோமசுந்தரக்க கடவுடளிடம் காதல் கொண்ட ஒரு பெண் தன் காதல் துன்பத்தை வெளிபடுத்துவதற்காக தமிழைத் தூதாக விடுகின்றாள். தான் சொல்ல விரும்பும் கருத்தைக் கூறவந்த தலைவி தமிழின் பெருமையை எடுத்துக்கூறும் விதமாக அமைந்துள்ளது. தமிழ் மொழி, இலக்கியத்திலும், இலக்கணத்திலும், சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. பா, ஐம்பால் வகைகள், வண்ணங்கள், மொழியின் பிறப்பு, பருவங்கள், எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருளிலக்கணம் என்ற இலக்கண வகைகள் மட்டுமல்லாமல் தமிழ் இலக்கியங்களில் உள்ள அனைத்து நூல்களின் பெயர்களையும் கூறி தலைவி தூது விடுகின்றாள்.
முன்னுரை
தலைவன் அல்லது தலைவி பிரிவுத்துயரைத் தெரிவிக்க, மனதின் துயரங்களைத் தத்தையோ, நெஞ்சத்தையோ தூதாக அனுப்புவதாகும். தமிழ்விடு தூது என்ற நூல் மதுரையில் எழுந்தருளி உள்ள சோமசுந்தரக் கடவுளிடம் ஒரு பெண் தன் காதல் துன்பத்தை கூறி தமிழ் மொழிய தூது அனுப்பியதாக அமைந்துள்ளது .இந்த நூல் 268 கண்களைக் கொண்டுள்ளது. இதனை இயற்றியவர் யார் என்று தெரியவில்லை. கலி வெண்பா யாப்பில் எழுதப்பட்ட இந்நூல் தூது இலக்கிய வகையை சார்ந்தது. மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழித் தமிழ்மொழியாகும். அம்மொழியினைத் தூதாக அனுப்புவது போல தமிழின் சிறப்பினை எடுத்துக்கூறுகின்றது. அந்த வகையில் தமிழ்விடு தூது நூலிலுள்ள இலக்கணச் செய்திகளைக் காண்போம்.
தூது இலக்கிய நூலின் சிறப்பு
🦋 தூது செல்லும் தமிழ் மொழியின் பெருமைகளைக் கூறுதல்.
🦋 பிற பொருட்களைத் தூதாக அனுப்பாமைக்குரிய காரணங்களைத் தலைவி தூதுப் பொருளிடம் கூறுதல்.
🦋 தூது பெறும் தலைவன் ஆகிய சோமசுந்தரக் கடவுளைப் புகழ்ந்து கூறுதல்.
🦋 தலைவி தன் துன்பம் கூறுதல்.
🦋 தலைவி தமிழிடம் தன் தூதுச் செய்தியைக் கூறித் தூது வேண்டுதல்.
என்ற பகுதிகளைக் கொண்டு திகழ்கின்றது.
தமிழின் பத்து குணங்கள்
🎯 இனிமை: தமிழ்மொழி இனிமையானது, தேனீயின் தேனை விட இனிமையானது.
🎯 செம்மை: தமிழ்மொழி செம்மையானது. தவறு இல்லாதது.
🎯வளமை: தமிழ்மொழி வளமானது. பல சொற்களையும், இலக்கணங்களையும் கொண்டது.
🎯 எளிமை: தமிழ்மொழி எளிமையானது. கற்றுக் கொள்ள எளிதானது.
🎯கடிமை: தமிழ்மொழி கடினமானது. ஆழமான கருத்துக்களை வெளிப்படுத்தக்கூடியது.
🎯 அழகு: தமிழ்மொழி அழகானது. செய்யுள்களில் இனிமையாக ஒலிக்கும்.
🎯நன்மை: தமிழ்மொழி நல்லது. நற்கருத்துக்களை வெளிப்படுத்தக்கூடியது.
🎯 தெளிவு: தமிழ்மொழி தெளிவானது. எளிதில் புரிந்துகொள்ளக்கூடியது.
🎯 ஆற்றல்: தமிழ்மொழி ஆற்றல் வாய்ந்தது. மக்களை ஈர்க்கக்கூடியது.
🎯 பண்பு: தமிழ்மொழி பண்பு வாய்ந்தது. நல்லொழுக்கங்களை போதிக்கக்கூடியது. தமிழ் விடு தூது பாடலில், தமிழ்மொழியின் பத்து குணங்களை பாடலாசிரியர் புகழ்ந்து பாடுகிறார்.
பா வகைகள்
தமிழ் இலக்கியத்தில் “பா” என்பது செய்யுளைக் குறிக்கும் சொல்லாகும். நான்கு வகை பாக்கள் உள்ளன. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, மற்றும் வஞ்சிப்பா ஆகும். இதனுடன் மருட்பாவையும் சேர்த்து ஐந்து வகைப்படும். இவை ஒவ்வொன்றும் தனித்துவமான ஓசை, சீர், தளை, மற்றும் தாள வகைகளைக் கொண்டிருக்கும். எந்தக் குலத்திலும் பிறக்காமலும் இறக்காமலும் உயிருக்குள் உயிராய் நின்று பிறப்பும் இறப்பும் இல்லாமல் ஐந்து குலமாக தமிழ் மொழி வளர்ந்தது என்பதை
“தொருகுலத்தும் வாரா துயிர்க்குயிராய் நின்றாய்
வருகுலமோ ரைந்தாயும் வந்தாய் – இருநிலத்துப்” (த.வி.தூ: 19) பாடல் வழி அறிய முடிகிறது. அதுமட்டுமல்லாமல்
ஆங்கமைசெப் பற்பண் ணகவற்பண் டுள்ளற்பண்
தூங்கற்பண் பட்டத்துத் தோகையரா – ஓங்கு மனத் (த.வி.தூ. – 30)
என்ற வரியில் தமிழ் மொழியின் குலமாகிய பாவில் செப்பலோசை, அகவலோசை, துள்ளல் ஓசை, தூங்கல் ஓசை ஆகிய பண்கள் பட்டத்து அரசிகளாகவும் விளங்குகின்றது. விரிந்து நிறைந்த நால்வகைப் பாக்களுக்கும், எல்லை வரப்பாக அமையப் பெறுகின்றது. பெருமைமிகு தாழிசை, துறை, விருத்தம், ஆகிய இனங்கள் மடைப்போக்காகவும் இருக்கின்றது.
வண்ணங்கள்
மை தீட்டிக் கண்ணை அழகுபடுத்துவது போலப் பாட்டுக்கு ஒலி-வண்ணம் (Tonal Colour) கொடுத்துப் பாடலை அழகுபடுத்துவதாகும். சொல் பாடலில் வரும் நடைநலத்தைக் குறிக்கும். பலவகை வண்ணங்களால் நம்மை நாமே அழகுப்படுத்துகின்றோம். அதைப்போல செய்யுள்களை அழகுப்படுத்துவது வண்ணங்கள் ஆகும். இதனை வடநூலார் சந்தம் என்று கூறுவார். தொல்காப்பியர் கூறும் செய்யுள் உறுப்புகள் 34-இல் வண்ணமும் ஒன்று.
“மாட்டே வண்ணமொடு யாப்பியல் வகையின்” (தொல். செய்யு. – 310) “வண்ணம் தானே நாலைந்து என்ப” (தொல். செய்யு. – 513)
அவ்வண்ணங்கள் 20 வகைப்படும். அப்படிப்பட்ட வண்ணங்களாக தமிழ் மொழி இருக்கின்றது என்பதை
“ஆக்கிய வண்ணங்க ளைந்தின்மே லுண்டோ நீ
நோக்கிய வண்ணங்க னூறுடையாய் – நாக்குலவும்” (த.வி.தூ: – 74)
என்னும் வரிகள் உணர்த்துகின்றது.
மொழியின் பிறப்பு
பெருமை நிலைபெற்ற இப்பூவுலகில் புண்ணியம் வாய்ந்த தொப்புளில் காற்றுத் தங்கி வாக்காகச் சூல் கொண்டு நாம் அனைவரும் மொழியைப் பேசுகின்றோம்.
“தலைமிடறு மூக்குரத்திற் சார்ந்திதழ்நாத் தந்தம்
உலைவிலா வண்ணத் துருவாய்த் – தலைதிரும்பி” (த.வி.தூ: 21)
தலை, கழுத்து, மூக்கு, நெஞ்சு, ஆகிய நான்கு இடங்களைச் சார்ந்து, உதடும் நாக்கும் பல்லும் கெடாத மேல்வாயும் ஆகிய கருவிகளால் பிறக்கின்றது.
“ஏற்பமுதன் முப்பதெழுத் தாய்ச்சார் பிருநூற்று
நாற்ப தெழுத்தா நனிபிறந்தாய் – மேற்படவே” (த.வி.தூ: 22)
அவ்வாறு தலையில் இருந்து பிறந்தவை, பன்னிரண்டு உயிர் எழுத்துகளாகவும், பதினெட்டு மெய்யெழுத்துகளாகவும் சேர்ந்து முதல் எழுத்துக்கள் முப்பது ஆகும். உயிர்மெய் (216) உயிரளபெடை(7), ஒற்றளபெடை(11). குற்றியலுகரம்(1) குற்றியலிகரம்(1), ஆய்தம்(1), ஐகாரக்குறுக்கம்(1), ஔகாரக் குறுக்கம்(1), மகரக்குறுக்கம்(1) எனச் சார்பெழுத்துகள் இருநூற்று நாற்பதாகும்.
எழுத்திலக்கணம்
“எண்முதலா கப்பகரு மீரா றெனும் பருவம்
மண்முதலோர் செய்து வளர்க்குநாட் – கண்மணியோற்”(த.வி.தூ: 23)
முதல் சார்பு எழுத்துகளாய்ப் பிறந்தபின் மேலும், எண், பெயர், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை, முதல், ஈறு, இடைநிலை, போலி, பதம், புணர்ச்சி, எனப் பன்னிரண்டு பருவங்களாக மண்ணுலகில் வாழும் கல்வியில் முதன்மை உடையோர் வளர்த்து எழுத்திலக்கணம் தோன்றியது. இதனையே நன்னூலார்
“எண்பெயர் முறைபிறப் புருவ மாத்திரை
முதலீ றிடைநிலை போலி யென்றா
பதம்புணர் பெனப்பன் னிருபாற் றதுவே” (நன். எழுத்த – 02)
கூறுகின்றார்.
பருவங்கள்
தமிழர் பண்பாட்டில் முதல் 2 திங்கள் குழந்தையை வெளியில் கொண்டு வர மாட்டார்கள். எனவே, பிள்ளைத்தமிழ், 3-ஆம் திங்கள் முதல் பாமாலைகளால் தொடுக்கப்படும்.
3-ஆம் திங்கள்: காப்பு
5-ஆம் திங்கள்: செங்கீரை
7-ஆம் திங்கள்: தாலாட்டு
9-ஆம் திங்கள்: சப்பாணி
11-ஆம் திங்கள்: முத்தம்
13-ஆம் திங்கள்: வருகை
15-ஆம் திங்கள்: அம்புலி
17-ஆம் திங்கள்: சிற்றில் (ஆண்பால் பிள்ளைத்தமிழுக்குரியது) நீராடல் (பெண்பால் பிள்ளைத்தமிழுக்குரியது)
19-ஆம் திங்கள்: சிறுபறை (ஆண்பால் பிள்ளைத்தமிழுக்குரியது) அம்மானை (பெண்பால் பிள்ளைத்தமிழுக்குரியது)
21-ஆம் திங்கள்: சிறுதேர் (ஆண்பால் பிள்ளைத்தமிழுக்குரியது) ஊசல் (பெண்பால் பிள்ளைத்தமிழுக்குரியது)
இப்படி பிறந்த குழந்தையை (தமிழ் மொழி) காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி (சிற்றில் சிறுபறை சிறுதேர்) (கழங்கு, அம்மானை, ஊசல்) என்னும் பத்துப் பருவங்களாக வளர்த்தாய். அத்தகைய சிறப்புடைய உன்னை யாரால் வளர்க்க இயலும்? இதனை
பன்னியொரு பத்துப் பருவமிட்டு நீ வளர்த்தாய்
உன்னை வளர்த்துவிட வொண்ணுமோ – முன்னே (த.வி.தூ: 26)
என்ற பாடல் மூலம் அறியலாம். பிள்ளைத்தமிழ் பத்து பருவங்களில் தான் அமைய வேண்டும் என்பது வரையறை ஆகும். வெண்பாப் பாட்டியல், பன்னிரு பாட்டியல் இலக்கண விளக்கப் பாட்டியல், போன்றபெரும்பாலான பிள்ளைத்தமிழ் நூல்கள் இவ்வாறே பாடப்பட்டுள்ளன. ஆனால் ஆண்டாள் பிள்ளைத்தமிழ் 11 பருவங்களையும் தில்லை சிவகாமியம்மைப் பிள்ளைத்தமிழ் 12 பருவங்களையும் கொண்டுள்ளது.
சொல் – திணை வகைகள்
செய்யுளை அழகு செய்வது சொல்லாகும். அச்சொல்லை இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் சொற்கள் நான்கும், உயர்வு பொருந்திய பெயர், வினை, இடை, உரி என்னும் நான்கு சொற்களும், இலக்கிய இலக்கணத்தில் உள்ளன.
“செய்யுட்சொன் னான்குமுயர் செந்தமிழ்ச்சொல் லோர் நான்கும்
மெய்யுட் பொருளேழ் விதத்திணையும் மையிலெழுத்” (த.வி.தூ: 28)
ஐந்திணைகள் நம் வாழ்க்கையோடு பின்னிப்பிணைக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியமும், சங்க இலக்கியமும் திணைகளைப் பற்றி கூறுகின்றது. கைக்கிளை, குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல், பெருந்திணை ஆகிய ஏழு திணைககள் ஆகும். புறத்திணைகள் பன்னிரெண்டு. அகத்திணைகளுக்குரிய புறத்திணைகளாக வெட்சி, காஞ்சி, வஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை வாகை ஆகிய ஏழு திணைகளும் குறிப்பிடப்படுகிறது.
யாப்பு – அணி
யாப்பிலக்கணம் என்பது செய்யுள் எழுதுவதற்குரிய இலக்கணத்தைக் குறிக்கும். யாத்தல் என்பதற்கு கட்டுதல் என்று பொருள். யாப்பிலக்கணம் என்பது செய்யுளின் இலக்கணம் என்றும், பொருள் தரும்.எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை போன்ற உறுப்புக்களை கட்டி அமைப்பதால் இதனை செய்யுள் யாத்தல் என்கிறார்கள். பாட்டு, தூக்கு, தொடர், கவிதை செய்யுள் போன்றவை யாப்பிற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் ஆகும். அணி என்பதற்கு அழகு என்று பொருள்படும். அதாவது ஒரு செய்யுளில் இருக்கும் சொல்லின் அழகு மற்றும் பொருளின் அழகு ஆகியவற்றை எடுத்து கூறுவது அணி இலக்கணம் எனப்படும்.
“தாதியாப் பெட்டு மலங்கார மேழைந்தும்
பேதியாப் பேரெழின்மாப் பிள்ளையாய்ச் – சாதியிலே” (த.வி.தூ: 29)
குற்றம் இல்லாத எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, ஓசை, இனம் என்னும் யாப்பின் உறுப்புகள் எட்டும், தன்மை, உவமை, உருவகம், தீவகம், பின்வருநிலையணி, முன்ன விலக்கணி, வேற்றுப் பொருள் வைப்பணி, வேற்றுமை, விபாவனை, ஒட்டு, அதிசயம், தற்குறிப்பேற்றம், ஏது, நுட்பம், இலேசம், நிரல் நிறை, ஆர்வமொழி, சுவை, தன்மேம்பாட்டுரை, பரியாயம், சமாகிதம், உதாத்தம், அரிதுணர், அவநுதி, சிலேடை, விசேடம், ஒப்புமைக் கூட்டம், விரோதம், மாறுபடு புகழ்நிலை, புகழாப் புகழ்ச்சி, நிதர்சனம், புணர்நிலை, பரிவர்த்தனம், வாழ்த்து, சங்கிரணம், பாவிகம் என்னும் அணிகள் ஒன்றுடன் ஒன்று வேறுபட்டு பேரழகு வாய்ந்த மாப்பிள்ளையாக, இந்த தமிழ்மொழி யாப்பும் அணியுமாம் இருக்கிறது என்பதை அறியமுடிகிறது.
பொருள்கோள்கள்
செய்யுளில் அமைந்திருக்கும் வாக்கிய அமைப்பை வழக்குத்தமிழ் வாக்கியமாக கொள்வதற்கு பொருள்கோள் என்று பெயர். தானாக வரகூடியப் பொருள்கள், ஏற்றுமதி இறக்குமதி வரியாகிய சுங்கவரியால் வரகூடிய பொருள்கள், பகைவரை வெற்றிக்கொண்டு கவர்ந்த பொருள்கள் என மூன்றும் நாடாளும் மன்னனுக்குக் கிடைக்கக்கூடிய பொருட்கள் ஆகும். செய்யுளில் இடம்பெறும் சொற்களை அமைந்துள்ளவாறே பொருள் கொண்டால் சரியான பொருள் கிடைக்காது. யாப்பு முதலிய காரணங்களுக்காகச் சொற்களை முன்பின்னாக மாற்றி, பல நிலைகளில் சொற்களைச் சேர்த்தும், பிரித்தும் பொருள் கொண்டால் அச்செய்யுளின் பொருள் விளங்கும். இவ்வாறு செய்யுளில் காணப்படும் தொடர்களைப் பொருள் கொள்ளும் முறையை விளக்குவது பொருள்கோள் ஆகும். பொருள்கோள் எட்டு வகைப்படும். இதை நன்னூலார்
“யாற்றுநீர் மொழிமாற்று நிரனிறை விற்பூண்
தாப்பிசை அளைமறி பாப்புக் கொண்டுகூட்டு
அடிமறி மாற்றெனப் பொருள்கோள் எட்டே” (நன். சொல்: 411)
கூறுகின்றார். அவை,
1.ஆற்றுநீர்ப் பொருள்கோள்
2.மொழிமாற்றுப் பொருள்கோள் (சுண்ணம் –தொல்காப்பியர், பாசி நீக்கம்-மயிலை நாதர்)
3.நிரனிறைப் பொருள்கோள்
4.விற்பூட்டு பொருள்கோள் (பூட்டுவிற் பொருள்கோள்)
5.தாப்பிசைப் பொருள்கோள்
6.அளைமறிப் பாப்புப் பொருள்கோள்
7.கொண்டுகூட்டுப் பொருள்கோள்
8.அடிமறி மாற்றுப் பொருள்கோள் என்பனவாகும். இதனையே
வாங்கு பொருள்கோள வகைமூன்றே பெற்றார்நீ
ஓங்குபொருள் கோள்வகையெட் டுள்ளாயே –பாங்குபெற (த.வி.தூ: – 77)
என்ற வரிகள் மூலம் தமிழ்மொழியோ உயர்ந்த பொருள் கோள்களக பெற்றிருக்கின்றது என்பதை அறியமுடிகிறது.
ஐம்பால் – சீர்
மக்களை உயர்திணை என்றும் மக்கள் அல்லாத ஏனைய உயிர்களை அஃறிணை என்றும் அவற்றுள் ஆண்பால் பெண்பால் பலர்பால் ஒன்றன்பால் பலவின்பால் என இருதிணைக்கும் ஐம்பால்களையும் தொல்காப்பியர் கூறுவார். இதனையே
“இருதிணை ஐம்பால் பொருளையும் தன்னையும்”; (நன். சொல்: 259-2)
என்று நன்னூலார் கூறியுள்ளார். நேர் நிரை என்னும் இருவகை அசைகளும் தனித்தோ தொடர்ந்தோ அளவுற அமைவது சீராகும். இச்சீர் இசைக்கு உதவுகின்றது. சீர் என்பதற்கு ஓசை என்று பொருள் அசைகள் பொருந்தி ஓசை புலப்பட நிற்பதால் சீர் என்பது காரணப்பெயராகும். அப்படிப்பட்ட சீர்களுக்குரிய வாய்ப்பாட்டினையும்
“தேமா புளிமா கருவிளங் கூவிளஞ் சீரகவற்
காமாங் கடைகா யடையின்வெண் பாவிற்கந் தங்கனியா
வாமாண் கலையல்குன் மாதே வகுத்தவஞ் சிக்கரிச்சீர்
நாமாண் புரைத்த வசைச்சீர்க் குதாரண நாண்மலரே”(யாப்பரு: 7)
கூறியுள்ளார். இதனையே தமிழ்விடுதூது அழகு பொருந்திய அறம், பொருள் இன்பம் என்னும் மூன்று பால்களைக் கொண்டிருப்பதோடு அன்றி ஆண்பால் பெண்பால் பலர்பால் ஒன்றன்பால் பலவின்பால் என்னும் ஐந்து பால்களையும் நாள், மலர், தேமா, புளிமா, கூவிளம், கருவிளம், தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய், தேமாங்கனி, புளிமாங்கனி, கூவிளங்கனி, கருவிளங்கனி, தேமாந்தண்ணிழல், புளிமாந்தண்ணிழல், கருவிளந்தண்ணிழல், கூவிளந்தண்ணிழல், தேமா நறுநிழல், புளிமா நறுநிழல், கருவிளநறுநிழல், கூவிளநறுநிழல், தேமாந்தண்பூ, புளிமாந்தண்பூ, கருவிளந்தண்பூ, கூவிளந்தண்பூ, தேமாநறும்பூ, புளிமாநறும்பூ, கருவிளநறும்பூ, கூவிளந்நறும்பூ, என்னும் முப்பது சீர்களை உடைய மிக பெரிய செல்வர்களையும் தமிழ் மொழி பெற்றெடுத்தது என்பதை
ஓர்முப்பா லன்றியைம்பா லுள்ளா யுனைப்போலச்
சீர்முப்ப தும்படைத்த செல்வரார் – சேரமான் (த.வி.தூ: – 78)
என்ற பாடல் வரிகள் உணர்த்துகின்றது.
பத்து பொருத்தங்கள்
காதலன் காதலியை முதன்முதலில் பார்ப்பது காட்சியாகும். அவ்வாறு தலைவன் தலைவியை பார்க்கும்போது பத்து வகை பொருத்தங்களை உடையவராக இருத்தல் வேண்டும் சங்க இலக்கியத்தில் பத்து பொருத்தங்கள் என்பது 1.ஒத்த குலத்தில் பிறத்தல் 2.அக்குலத்திலும் நற்குடியராய் இருத்தல் 3.ஆளும் தன்மை 4.ஒத்த வயது 5.தோற்றப்பொலிவு 6.அன்பு 7.மன அடக்கம் 8.அருளுடைமை 9.நுண்ணறிவு 10.செல்வம் என்பனவாகும். தற்பொழுதும் திருமணம் செய்யும்போது பொருத்தம் பார்க்கின்றனர். இலக்கணமுடைய பாடலில் மங்கலம். சொல் எழுத்து தானம் பால் உண்டி வருணம் நாள் கதி கணம் என்னும் பத்துப் பொருத்தங்கள் உள்ளது. தமிழ் மொழி இத்தகைய இலக்கண இலக்கிய பொருத்தங்களைப் பெற்றிருக்கின்றது என்பதை
“பொருத்தமொரு பத்துப் பொருந்துமுனைத் தானே
விருத்தமென்று சொல்லல விதியோ – இருட்குவையை (த.வி.தூ: – 83)
என்னும் அடிகள் வழி அறியலாம்.
தொடை
தொடை என்பது யாப்பிலக்கணத்தில் செய்யுள் உறுப்புகள் வகையைச் சேர்ந்தது. செய்யுள்களின் சீர்களும், அடிகளும் தொடுத்துச் செல்லுவதால் தொடை என வழங்கப்படுகின்றது. செய்யுள்களின் ஓசை நயத்துக்கும், அவற்றின் இனிமைக்கும் தொடைகள் முக்கியமானவை.
“மெய்பெறு மரபின் தொடை வகை தாமே
ஐ ஈர் ஆயிரத்து ஆறு ஐஞ் ஞ}ற்றொடு
தொண்டு தலையிட்ட பத்துக்குறை எழுநூற்று
ஒன்பஃது என்ப உணர்ந்திசினோரே” (தொல். செய்யு: 1358)
என்று தொல்காப்பியர் கூறுகின்றார். நீ தூதாகச் சென்றாலும் முன்னோர்கள் படைத்த பத்தொன்பதாயிரத்து இருநூற்றுத் தொண்ணூற்று ஒன்று என்னும் எண்ணிக்கையிலான தொடைகளுக்கு தமிழ் மொழி உரிமை பெற்றுள்ளது என்பதை
பண்ணிய பத்தொன் பதினா யிரத்திருநூற
றெண்ணியதொண் ணூற்றொன் றெனுந்தொடையாய (த.வி.தூ: – 113)
என்ற பாடல் வரிகள் உணர்த்துக்கின்றது.
பொருள் இலக்கணம்
வாழ்விற்கு பொருள் தரும் கூறுகளை விளக்கிக் காட்டுவது பொருள் இலக்கணமாகும். பொருள் இலக்கணம் தமிழ் மொழியில் மட்டுமே உள்ளது. மற்ற மொழிகளில் பொருள் இலக்கணம் இடம் பெறவில்லை. பாடல்களில் வரும் பொருள் எப்படி எல்லாம் இருக்கும் என்று எடுத்துக் கூறும் பொருள் இலக்கணம் தமிழுக்குத் தனிச் சிறப்பு வாய்ந்ததாகும். பொருள் இலக்கணம் அகப்பொருள் புறப்பொருள் என்று இருவகைப்படும். அகப்பொருள் என்பது ஓர் ஆணுக்கும் ஒருபெண்ணுக்கும் இடையில் ஏற்படும் காதல் உணர்ச்சியைப் பற்றிக்கூறுவதாகும். புறப்பொருள் என்பது வீரம் போர் வெற்றி கொடை நிலையாமை முதலிய புறப்பொருள்களைக் கூறுவதாகும்.
நாத்திரமா மேவுபொரு ணன்றா வறுபதெனும்
சூத்திரமாப் பாடியரு டோற்றமும் – மாத்திரமோ (த.வி.தூ: – 118)
பாட்டு இலக்கணத்தில் நாவால் உறுதியாகக் கூறப்படும் பொருள் இலக்கணத்தை அறுபது நூற் பாக்களாய் பாடித்தந்த காட்சியை பார்த்தால் தமிழ் மொழிக்கு அழகு தருவது போல உள்ளது.
முடிவுரை
தலைவன் தலைவியை களவு மேற்கொள்ளும் போது சில இடையுறுகள் வரும். அப்போது தலைவன் தலைவியைக் காணமல் இருப்பான். அந்த நேரத்தில் தலைவி தலைவனுக்கு தூது அனுப்புவாள். இங்கு தூதாக தமிழைத் தூது விடுகின்றாள். நமக்கு ஒரு செயல் நடக்க வேண்டுமென்றால் நாம் அதன் பெருமையைப் புகழ்ந்து பேசுவோம். இங்கு தலைவி தமிழைத் தூது விடுவதற்காக அதன் பெருமையைப் பேசுகின்றாள். தமிழ் இலக்கியத்திலும் இலக்கணத்திலும் சிறப்புற்று இருக்கின்றது. “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிப்போல் இனிதாவது எங்கு காணேம்” என்று பாரதியார் கூறியது மிகையாகாது.
பார்வை நூல்கள்
1.முருகேசன். கதி. முனைவர், (உரையாசிரியர்) தமிழ்விடுதூது மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், சென்னை – 14. பதினாறாம் பதிப்பு – 2023
2.இளம்பூரணர் உரை, தொல்காப்பியம் பொருளதிகாரம், சாரதா பதிப்பகம், சென்னை – 5. மூன்றாம் பதிப்பு – 2006
3.திருஞானசம்பந்தம். சு முனைவர், யாப்பருங்கலக்காரிகை மூலமும் உரையும், கதிர் பதிப்பகம், திருவையாறு. முதல் பதிப்பு – 2007.
4.இளவரசு. சோம, நன்னூல் எழுத்ததிகாரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை – 108. நான்காம் பதிப்பகம் – 2009.
5.இளவரசு. சோம, நன்னூல் சொல்லதிகாரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை – 108. இரண்டாம் பதிப்பகம் – 2007.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
மோ. பிரியங்கா,

தமிழ்த்துறை,
இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரி,
திருவாரூர்.
நெறியாளர்
முனைவர் கி. சர்மிளா,
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரி,
திருவாரூர்.






