Tamil literature and Sigmund Freud|Dr.V.Bhuvaneswari

தமிழ் இலக்கியமும் சிக்மண்ட் பிராய்டும்
Abstract
        
        Mind is a collection of cognitive and emotional aspects manifested in thought, perception, emotion, conviction, imagination etc. The mind of man thinks better than animals. Stops the imagination from thinking. Mind is the cause of the word man. It is the mind that acts by itself with the power to think. The mind is the body and soul working together. To the extent that we elevate the mind, to the extent that we keep it pure, to the extent that we strengthen it, to the extent that man’s life will rise and become successful. The mind is related to the brain. What is perceived by the senses is thought by the brain and manifests as actions of the mind. This is reported by modern neuroscientists in their studies.


தமிழ் இலக்கியமும் சிக்மண்ட் பிராய்டும்”

        மனம் என்பது சிந்தனை, நோக்கு, உணர்ச்சி, மனஉறுதி, கற்பனை போன்றவற்றில் வெளிப்படுகின்ற அறிவு மற்றும் உணர்வுநிலை சார்ந்த அம்சங்களின் தொகுப்பாகும். பிராணிகளை விட மனிதனின் மனமே சிந்தனை செய்கிறது. நினைக்கும் கற்பனைக் காட்சிகளைக் கண்முன்னே நிறுத்துகிறது. மனிதன் என்கிற சொல்லாடல் வருவதற்கு மனமே காரணமாகும். மனம்தான் சிந்திக்கும் ஆற்றலைத் தன்னகத்தே கொண்டுச் செயல்கிறது. உடலும்,  உயிரும் இணைந்து செயல்படுவதே மனம் ஆகும். மனதை எந்த அளவிற்கு உயர்த்திக் கொள்கிறோமோ,  எந்த அளவிற்கு தூய்மையாக வைத்திருக்கிறோமோ, எந்த அளவிற்கு வலுப்படுத்திக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு மனிதனின் வாழ்வு உயர்வு, வெற்றி அடையும். மனம் மூளையுடன் தொடர்பு உடையது. புலன்களால் உணரப்படுவதை மூளை சிந்தித்து மனதின் செயல்களாக வெளிக்கொண்டு வருகிறது. இதனைத் தற்கால நரம்பியல் வல்லுநர்கள் தம் ஆய்வுகளில்  தெரிவிக்கின்றனர்.

     மனம் என்பது பொதுவாக அனுபவங்கள் மற்றும் சமூக செயல்கள் மூலமாக வடிவமைக்கப்படுகிறது. சந்தேகம் எழும்போது மனதிற்கு மனம் என்கிற பெயரும் பார்த்தவை, கேட்டவை, உணர்ந்தவை என வாழ்வில் பெறப்பட்ட அனுபவங்கள் அனைத்தையும் சேமிக்கும் இடமாக செயல்படுவதால் சித்தம் என்றும் ஒருவர் அல்லது ஒரு பொருளைப் பற்றி அறிந்திருக்கும் தருணத்தில் நான் என்ற உணர்வாக தோன்றும் போது அகங்காரம் எனப்படும். மனம், மனிதன் நடத்தையுடன் தொடர்புடைய ஒன்றாக சிக்மண்ட் பிராய்டு உளப்பகுப்பாய்வுக் கொள்கைகளின் மூலம் விளக்குகிறார். நனவுநிலை, துணை நனவுநிலை அல்லது இடை மனநிலை, நிலையான அடிமன நனவிலி நிலை மூன்று நிலைகளிலும் மனத்தின் இயல்பினை அடையாளம் காணப் பொதுவாக ஆழ்மனம், வெளிமனம் என்னும் இரு சொல்லாடல்களும் பயன்படுத்தப்படுகிறது.

சிக்மண்ட் பிராய்டின் ஆழ்மனத்தின் செயல்பாடுகள்
       நம்முடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு ஆழ்மனதிலேயே உள்ளது. உறங்கச் செல்லும் முன் உங்கள் ஆழ்மனதிடம் நான் காலை ஆறு மணிக்கு எழ வேண்டும் என்று சொல்லிவிட்டு படுக்கச் சென்றால், அது சரியான நேரத்தில் எழுப்பிவிடும். உடல் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் ஆழ்மனத்தால் நம்மை குணப்படுத்த முடியும். ஒவ்வொரு இரவும் பரிபூரண ஆரோக்கியம் என்கிற கருத்தை மனதில் கொண்டு படுக்கச் செல்லுங்கள் உங்கள் நம்பிக்கை கூறிய பணியாளனான ஆழ்மனம் உங்களுக்கு  கட்டுப்பட்டு நிற்கும்.

      நாம் செய்ய விரும்பும் செயலை ஆழ்மனத்திடம் அன்பாகவும், உணர்வுபூர்வமாகவும் தெரிவித்தால் ஆழ்மனம் நம்முடைய கட்டளைப்படி நடக்கும். எதிர்மறையான வாக்கியங்களை ஆழ்மனத்திடம் கூறக்கூடாது. நம் மனத்தில் தோன்றுகின்ற எண்ணமே ஆழ்மன வெளிப்பாடு எண்ணங்களை மாற்றினால் தலைவிதியே மாறும். நினைவிலி மனத்தின் அமுக்கப்பட்ட இச்சை உணர்வுகளை பிராய்டு பகுத்தாய்வு செய்கிற பொழுது அதனை பாலுணர்வுக் கோட்பாடு எனப் பெயரிட்டு அழைக்கிறார். நனவிலி மனத்தில் இருந்து வெளிவருகின்ற இச்சை உணர்ச்சிகள் வாழ்விச்சை, சாவிச்சை ஆகிய நிலைகளில் பிரிக்கின்றன.

‘கானக நாடன் கலந்தான் இவன் என்ற 
மேனி சிதையும் பசந்து’ (கைந்நிலை பா.எண்01)
    எனும் குறிஞ்சிப் பாடலில் தலைவி தன்னுடைய நிறைவேறாத ஆசையினால் தன்னுடைய மேனி சிதைந்து போவதாக எண்ணுகிற எண்ணம் சாவிச்சை உணர்ச்சியின் வெளிப்பாடாக உள்ளது. பாலைப் பாடலில் தலைவனின் பிரிவைப் பிறர் சொல்லைக் கேட்டதும், அதனைத் தாங்க முடியாமல் தலைவியின் கண்கள் குளமாயின எனும் தோழியின் கூற்று சாவிச்சை உணர்ச்சியின் வெளிப்பாடாகும்.

‘நெடுவுடை அத்தம் செலவு உரைப்பக் கேட்டே
வடுவிடை மெல்கின கண்’  (கைந்நிலை பா.எண் 13)
     குறிஞ்சிப் பாடலில் தலைவன் வருவான் எனும் தலைவியின் நம்பிக்கையானது தன்னைத்தானே ஆற்றுப்படுத்திக் கொள்ளும் தன்மையைக் காட்டுகிறது. இது சாவிச்சை உணர்ச்சியிலிருந்து ஒருவர் வாழ்விச்சை உணர்ச்சிக்கு மாறுவதற்கான எடுத்துக்காட்டாக உள்ளது.  இச்செய்தியைப் பின்வரும் கைந்நிலை பாடலானது உணர்த்தும்,

‘முடியுங்கொல் என்ற முனிவான் ஒருவன்
வடிவேல் கைஏந்தி வரும்’ (கைந்நிலை பா.எண் 12)
     நெய்தல் நிலப் பாடலிலும் தலைவன் வருகின்றான் என்ற தலைவியைத் தோழி தேற்றுகிற கூற்றில் வாழ்விச்சை உணர்ச்சி வெளிப்பட்டுள்ளது. பாடலில் பின்வருமாறு

‘ஒருபுறம் கண்ட ஒன்தாரான் தேர்இதோ
கூடல் அணைய வரவு’ (கைந்நிலை பா.எண்60)
    இவ்வாறாக ஐவகை நிலப்பாடல்களிலும் தலைவியின் அமுக்கப்பட்ட நிறைவேறாத ஆசைகள் முதலில் சாவிச்சை உணர்ச்சியாக வெளிப்பட்டிருக்கிறது. அவை தோழி போன்ற புறசக்திகளால் தூண்டப்பட்டு வாழ்விச்சை உணர்ச்சியாக மாறுகிறது. இன்றைய வளர் இனம் பருவ மாணவ, மாணவியர்களுக்கு மனம், மனத்தின் போக்கு வாழ்வியல் நிலைகள் பற்றிய புரிதலை இலக்கியங்களின் வாயிலாக உணர்த்துவதும் மனதைப் பற்றிய புரிதலை கல்விச்சூழலில் புகட்டுவதும் இன்றியமையாத தேவையாகும்.
         புற,அகச்சூழல்களால் தனிமனிதனுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் அவனுடைய நனவிலி மனத்தில் ஆழமாகப் பதிவாகுகின்றன என்பது பிராய்டினுடைய இம்மன அமுக்கக் கோட்பாடாகும். இவ்வாறாக பதிவாகின்ற பதிவுகள் ஆழ்மனதில் அமுக்கப்பெற்று அவை கனவாகவும், படைப்பாகவும் வெளிவருகின்றன. பிராய்டினுடைய இம்மன அமுக்கக் கோட்பாட்டின் நிலையினைக் கைந்நிலையின் குறிஞ்சி முல்லை மருதம் பாலை நெய்தல் ஆகிய ஐந்து நிலப்பாடல்களிலும் காண முடிகிறது.

‘வெந்த புனத்துக்கு வாசம் உடைத்தாகச் 
சந்தனம் ஏந்தி அருவி கொணர்ந்திடூஉம் 
வஞ்ச மலைநாடன் வாரான் கொல்? தோழ_! என் 
நெஞ்சம் நடுங்கி விடும்’; (கைந்நிலை பா.எண் 2)
      இன்பம் துய்க்கத் தலைவன் வருவான் என்கிற ஐயப்பாடு தலைவியின் மன அழுத்தத்திற்குக் காரணமாகிறது. நிறைவேறாத ஆசையினால் தலைவிக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தினை ‘நெஞ்சம் நடுங்கிடும’; என்னும் தொடரால் வெளிப்படுத்தப்பட்டிருப்பதைக் காண முடிகிறது.

‘பண்பில் அஞ்சுரம் என்பவரால் ஆய்தொடி
நண்பிலார் சென்ற நெறி’ (கைந்நிலை பா.எண் 24)
     பாலைத்திணைப் பாடலும் இம்மன அமுக்கக் கோட்பாட்டினைக் காண முடிகிறது. தன்னை மறந்து சென்ற தலைவனை நட்பு இல்லாமல் சென்றாகக் கூறிய தலைவியின் கூற்றில் இன்பம் துய்க்க முடியாமல் துடிக்கின்றத் தன்மையை அறிய முடிகிறது.

‘வருவார் நம் காதலர் வாள் தடங் கண்ணாய்
பருவரல் பைதல் நோய் கொண்டு’ (கைந்நிலை பா.எண் 25)
     எனும் முல்லை நிலப்பாடலிலும், வருவார் நம் காதலர் என்று தோழி தலைவியை  ஆற்றுப்படுத்துதலால் தலைவி தன்னுடைய நிறைவேறாத ஆசையினால் மன அழுத்தத்தோடு இருந்ததை அறிய முடிகிறது.

‘பாந்துஇல் பயமொழி பண்பு பல கூறி
நீத்தல் அறிந்திலேம் இன்று’ (கைந்நிலை பா.எண் 45)
       எனும் மருதநிலப் பாடலிலும் தலைவன் பிரிவான் என்பதை நாங்கள் முன்னமே அறிந்திலோம் என்ற தலைவி கூறுவதால் அவளுடைய நிறைவேறாத ஆசையும் மன அழுத்தத்தின் புலப்பாடு புரிகிறது.

‘புலவுமீன் குப்பை கவரும் துறைவன்
கலவான்கொல் தோழி நமக்கு’ (கைந்நிலை பா.எண் 53)
       எனும் நெய்தல் நிலப்பாடலிலும் தலைவன் இன்பம் துய்க்க இனி வருவானோ எனத் தலைவி தோழியிடம் கேட்பதை ‘கலவான் கொல்தோழி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. மேற்கண்ட பாடல்களனைத்தும் தலைவியினுடைய நனவிலி மனத்தில் உள்ள நிறைவேறாத ஆசைகள் பண்பாட்டுச் சூழலில் பெற்று வெளிவந்திருப்பதைக் காண முடிகிறது. மனிதனின் நிறைவேறாத எண்ணங்கள் அவனது நனவிலி மனத்தில் ஆழமாகப் புதைந்து காணப்பெறும். அவையே கனவுகளாகத் தோன்றும். கண்ணதாசன் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ என்னும் இசைத்தட்டுச் சொற்பொழிவில் ‘கனவுகள் ஆழ்ந்த உறக்கத்திலேயே தோன்றுகின்றன’ என்று குறிப்பிட்டுள்ளமை நினைவு கூறத்தக்கது.

வெளிமனம் மற்றும் ஆழ்மனம்
       இலக்கியத்தில் உளவியல் அணுகுமுறை பெரிதும் பயன்பாடு உடையதாகும். அது மனித மனத்தைத் தெளிவாக அறிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் உதவுகிறது. இதன் மூலம் வெளிமனம், ஆழ்மனம் நினைக்கின்ற எண்ணங்களை ஒவ்வொரு தனிமனிதனும் எளிதில் பகுத்தாராய முடிகிறது. இதையே கண்ணதாசன்,

‘உன்னையறிந்தால் நீ உன்னை யறிந்தால் 
உலகத்தில் போராடலாம்
 
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை 
வணங்காமல் நீ வாழலாம்’ (கண்ணதாசன் திரையிசைப்பாடல்)
      எனக் குறிப்பிட்டார். தன்னை மட்டுமல்லாது ஒருவன் பிறர் உள்ளத்தையும் அறிவதால் மனதையும் எவ்விதக் குழப்பமும், கலக்கமும் இல்லாமல் தெளிவான சிந்தனையோடு வாழலாம். மனித மனம் மிகவும் விசித்திரமான போக்கினைக் கொண்டது. அதனால்தான் மனிதன், விலங்குகளிலிருந்து மாறுபட்டுப் பகுத்தறிவுச் சிந்தனையோடு செயலாற்றுகின்றான். மனம் என்பதை சிலர் மூளையே மனம் என்கின்றனர். சிலர் ஆன்மாவையே மனம் என்கின்றனர்.


முடிவுரை

      ‘ஆன்மாக்களுக்கு மறுபிறப்பு உண்டென்ற கருத்து வேதங்களில் வெளிப்படையாகக் காணப்படவில்லை. உடல் அழியும் ஆன்மா அழியாது. ஒருவன் இறந்தாலும் அவனுடைய ஆன்மா அவன் செய்த நல்வினை தீவினைகளுக்கேற்ப மோட்சத்திற்கோ நரகத்திற்கோ செல்லும் என்ற கருத்துக்கள்’ ஆன்மாவைப் பற்றி நிலவுகின்றன. ஆழ்மனத்தில் நினைக்கும் எண்ணங்களும், அதனால் எழும் விளைவுகளுமே காரணியாகத் திகழும் ஆழ்மனமானது வெளிமனத்தின் எண்ணங்களால் செயல்படுகிறது. ஆழ்மனதில் காணப்படும் அறிவும் ஞானமும் வெளிமனத்தின் எண்ணங்களால் இயங்குகின்றது. ஆழ்மனமானது எண்ணங்களின் தன்மைக்கு ஏற்றவாறு செயலாற்றும். வெளிமனத்தில் கவலை, கலக்கம் ஆகியவை நிரம்பியிருக்கும்போது ஆழ்மனதில் இது தொடர்பான எதிர்மறை உணர்ச்சிகள் உருவாகும். ஆழ்மனம் வெளிமனத்தைச் சார்ந்தது. எனவே அதனை கீழ்மனம் என்றும் அழைப்பர். நாம் செய்ய விரும்பும் செயலை ஆழ்மனத்திடம் அன்பாகவும், உணர்வுபூர்வமாகவும் தெரிவித்தால் ஆழ்மனம் நம்முடைய கட்டளைப்படி நடக்கும்.
Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் வி.புவனேஸ்வரி,

தமிழ்த்துறை,

உதவிப் பேராசிரியர்,

ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி,

ஈரோடு.

ஆஆஆஆ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here