Reflections on the Teachers in the Works of V.Iraianbu|Dr P. Vignesh kumar

ஆசிரியர் குறித்தான சிந்தனைகள்
Abstract
      Teacher Introduction The responsibility of transmitting a nation’s culture and heritage to the next generation rests fundamentally with education. Civilizational progress and education share an intrinsic connection, for education possesses the transformative power to reshape society. In keeping with the demands of changing times, both education and pedagogical methods have evolved. Yet, the significance of education has never diminished. In imparting this education, the role of the teacher remains paramount. A true teacher must serve as a model and guide for the students they instruct. In this regard, V. Irai Anbu is a distinguished contemporary thinker who, through his literary works, consistently articulates insightful reflections on education and the role of the teacher. This paper examines how he expresses his ideas concerning the teacher’s role in his writings.

Keywords: Teacher, Education, Pedagogy, Eloquence, Motivation, Society


“வெ.இறையன்பு படைப்புகளில் காணலாகும்ஆசிரியர் குறித்தான சிந்தனைகள்

ஆய்வுச் சுருக்கம்
     கல்வி ஒருமனிதனை மதிப்புமிக்க மனிதனாகப் பரிணமிக்கச் செய்யும். ஒருநாட்டின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பு கல்விக்குரியது. நாகரீக வளர்ச்சிக்கும் கல்விக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஏனெனில் ஒரு சமுதாயத்தை மாற்றியமைக்கும் ஆற்றல் கல்விக்கு உண்டு. காலத்தின் தேவைக்கு ஏற்ப கல்வியும், கற்பிக்கும் முறைகளும் மாற்றமடைந்துள்ளன. ஆனால் கல்வியின் முக்கியத்துவம் குறையவில்லை. அக்கல்வியைக் கற்றுக் கொடுப்பதில் ஆசிரியரின் பங்கு மகத்தானது. அத்தகைய ஆசிரியர் தான் கற்றுக் கொடுக்கும் மாணவர்களுக்கு முன்னுதாரணமாகவும் வழிகாட்டுபவராகவும் திகழவேண்டும். அவ்வகையில் சமகாலத்தில் கல்வி குறித்தும், ஆசிரியர் குறித்தும்  சிந்தனைமிக்க கருத்துகளைத் தன்னுடைய படைப்பின் வாயிலாக வெளிப்படுத்தி வருபவர். வெ.இறையன்பு அவர்கள். அவர் தன்னுடைய படைப்புகளில் ஆசிரியர் குறித்தான சிந்தனைகளை எவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார் என்பதைப் பற்றி ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

குறிப்புச் சொற்கள்
        ஆசிரியர், கல்வி, கற்பிக்கும் முறை, சொல்வன்மை, ஆர்வம், சமுதாயம்

முன்னுரை
        சமுதாய மாற்றத்தில் கல்வி என்பது முக்கியப் பங்கு வகிக்கிறது. சமுதாயம்  மாற்றம் பெற வேண்டுமெனில் தனிமனிதன் மாற்றம் பெற வேண்டும். அதற்கு உறுதுணையாக இருப்பது கல்வி.  அக்கல்வியைக் கற்றுத் தரும் ஆசிரியர்களுக்கு மனிதர்களின் மனத்தில் உள்ள தீமையான எண்ணங்களை அகற்றி, நன்மை தருகின்ற செயல்களை மேற்கொள்ளச் செய்து, ஒரு சிறந்த மனிதனைப் உருவாக்கும் ஆற்றல்  உண்டு. அத்தகைய ஆற்றல் மிக்க  ஆசிரியர் குறித்தான சிந்தனைகளை வெ.இறையன்பு அவர்கள் எவ்வாறு தன்னுடைய படைப்புகளில் வெளிப்படுத்தியுள்ளார் என்பதைப் பற்றி இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

ஆசிரியர்
       மாணவர்களிடம் இருக்கும் குற்றங்களை நீக்கி. அவர்களிடம் உள்ள திறமைகளை வெளிக்கொணர்பவரே ஆசிரியர். இவ்வாசிரியரே சிறந்த மாணவர்களை உருவாக்கும் தன்மையுடையவர். அதனால் தான் நம் சான்றோர்கள் ஆசிரியப்பணியை அறப்பணி என்றனர். ஆசிரியர் என்பதை ஆசு + இரியர் என்பர். ஆசு – குற்றம், இரியர் – நீக்குவர் குற்றத்தை நீக்குபவர் என்பது பொருள். ஆசிரியருக்குரிய தகுதிகளை நாமக்கல் கவிஞர்,

“தாயென அன்பு செய்து  
தந்தை போற் பரிந்து சொந்தச் 
சேயென அனைத்துப் பேசிச் 
செவ்விய அறிவு கூறித் 
தூயநன் னடத்தை கற்கத் துணையென  
நடந்து காட்டும் 
ஆய நற்குணமுளோனே 
ஆசான் என்றழைக்க தக்கோன்.”      (நாமக்கல் கவிஞர்)
         
       என்னும் வரிகளில் அன்பு, பரிவு, அரவணைப்பு, அறிவுக் கூர்மை, நன்மை தரும் நடத்தை, கற்க உதவும் தன்மையுடையவர்களே ஆசிரியர்; என்கிறார். இப்பண்பு நலன்களைப் பெற்றவர்களையே அனைவரும் போற்றுவர். பாலையன் அவர்கள் ஆசிரியர் மாணவர் உறவுநிலை என்னும் நூலில் ஆசிரியர் “மாணவர்களோடு மாணவர்களாகத் தாமும் இருந்து அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று, அவர்கள் உற்சாகமாக வேலை செய்யத் தூண்டுகோலாய் இருத்தல் வேண்டும். இத்தகைய ஆசிரியப் பெருமக்கள் தாம் நாளைய நம் நாட்டில் அனைத்துத் துறைகளிலும் ஒளிவீசும் மாணிக்கங்களைத் தரக்கூடியவர்கள் ஆவர்.” (ஆசிரியர் மாணவர் உறவுநிலை, ப.67) என்கிறார். ஆசிரியர் மாணவர்களிடம் சாதி, மத வேறுபாடுகளும், ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாது அனைவரையும் சமமாகக் கருதவேண்டும்.
ஒர் ஆசிரியரிடம் தொடர்ந்து அறிவைப் பெறுவதற்கான தேடுதல் இருந்துகொண்டே இருக்க வேண்டும். அவற்றுடன் தனது பாடத்துடன் சேர்ந்து பிற பாடங்களிலும் புலமை உடையவராக இருக்க வேண்டும். கொடுக்கக் கொடுக்க குறையாதது கல்வி என்பர். அதற்கேற்ப ஆசிரியர் மாணவர்களுக்குப் பாடத்துடன் சேர்த்துப் புதிய புதிய செய்திகளைக் கற்றுத்தர வேண்டும். அதனுடன் மாணவர்களிடம் தேடுதலை ஏற்படுத்துபவராகவும் இருக்க வேண்டும் என்பதை சேவியர் வாத்தியார் என்னும் கதையில் இறையன்பு “புத்தகங்களை மட்டும் படித்துவிட்டு வந்து அவர் பாடம் எடுப்பவர் அல்ல. புதிதாக வரும் இதழ்கள், ஆய்வுக்குறிப்புகள் எல்லாவற்றையும் படித்து விட்டு அண்மை நிகழ்வுகள் வரை அலசி ஆராய்வார். மாணவர்களிடையே தேடுதலை உண்டு பண்ணுவதே தன்னுடைய பணி என்பதில் தெளிவாக இருந்தார்” (பூனாத்தி, சேவியர் வாத்தியார், ப.17) என்கிறார்.
         
‘அவருக்குப் பாடம் நடத்துவது தவம்.’
       அவரே அவர் நடத்துகிற பாடத்தில் முற்றிலுமாகக் கரைந்து போவார். அவருடைய விடுமுறை நாட்களில் வனவிலங்கு சரணாலயங்களுக்கும், தேசிய பூங்காக்களுக்கும் சென்று, பல விலங்குகளைப் பற்றி நேரடியாகத் தகவல்களைச் சேகரிப்பார். வந்து அவற்றைப் பற்றிய ஆய்வுக் குறிப்புகள் எழுதி அறிவியல் பத்திரிகைகளுக்கு அனுப்பி வைப்பார். அவர் மான்களைப் பற்றிப் புத்தகம் கூட வெளியிட்டிருக்கிறார். “அவர் அடிக்கடி சொல்லும் வரி நான் இன்னும் மாணவன்தான். மாணவனாக எப்போதும் இருக்கச் சம்மதிப்பவர்கள் தான் நல்ல ஆசிரியர்களாக இருக்க முடியும்.” (சேவியர் வாத்தியார், ப.18) என்கிறார். ஆசிரியர் பாடத்தைக் கற்பிக்கும் முன்பு, தான் முதலில் அந்த பாடத்தைப் படித்து உணர்ந்து, அதனுடன் தொடர்புடைய பிற செய்திகளையும் கண்டறிந்து அச்செய்தி அன்றாட வாழ்க்கையில்  எவ்வாறு பயன்படுகிறது என்பதைச் சேர்த்து பாடத்தைக் கற்பிக்க வேண்டும். அதனுடன் சேர்த்து ஆசிரியர் தன் துறையில் களஆய்வுகளை மேற்கொண்டு அதனை மாணவர்களுக்குச் சொல்லலாம் அல்லது அதனை ஒரு நூலாகவும் வெளியிடுதல் மாணவர்களுக்குப் பயன் தரும் வகையில் அமையும். ஆசிரியர் பற்றி மரியா மாண்டிசோரி கூறுகையில் “அவ்வாசிரியர் குழந்தைகளுக்கு முழு சுதந்திரம் அளித்து, அவர்களைத் தாங்களே இயங்க வைக்க வேண்டும். ஆசிரியர் குழந்தைகளைக் கண்காணிக்க வேண்டுமே தவிர எவ்வித குறுக்கீட்டையோ, தடையையோ ஏற்படுத்தக் கூடாது. தேவைப்படும் கற்றல் கருவிகளைக் குழந்தைகளுக்கு வழங்குவதும், அவர்கள் செயல்படும் விதங்களைக் கவனிப்பதும் ஆசிரியரின் பங்காகும்” (கல்விச் சிந்தனையாளர் மரியா மாண்டிசோரி, பக்,51,52) என்கிறார்.
       அத்துடன்  ஆசிரியர் வகுப்பில் உள்ள அனைவரையும் சமமாக எண்ணுதல் வேண்டும். அவற்றுடன் சேர்த்து ஆசிரியர் கற்பித்தல் உத்திகளைக் கற்றுணர்ந்து. மாணவர்களின் மன நிலைக்கு ஏற்ப எளிமையிலிருந்து கடினமான பாடத்திற்கும் செல்வதுடன் மாணவர்களின் சூழலுக்கும், மனநிலைக்கும் ஏற்றவாறு பாடம் நடத்துதல் அவசியம். 
ஒர் ஆசிரியருக்கு இன்றியமையாத பண்பு தொடர்ந்து கற்கும் பழக்கம். தொடர்ந்து கற்கும் ஆசிரியர்களே நல்ல ஆசிரியர்களாக விளங்க முடியும். ஏதோ ஒன்றிரண்டு செய்திகளை மட்டும் பாடப் புத்தகத்தில் உள்ளவாறு சொல்லும் ஆசிரியர்களை மாணவர்கள் விரும்புவதில்லை. மாறாகப் புதிய புதிய செய்திகளைச் சொல்பவர்களையே மாணவர்கள் விரும்புகிறார்கள். அவ்வாறு சொல்லாததால்தான் பாட வேளையானது அவர்களுக்குச் சோர்வைத் தருவதாகவும் கற்றலில் ஆர்வத்தைக் குறைப்பதாகவும் அமைகிறது. ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கற்பித்தலின்போது புதிய புதிய செய்திகளைச் சொல்ல வேண்டும். அதுவும் மாணவர்களுக்கு கற்றலில் ஆர்வத்தை ஏற்படுத்தும்.

 கற்றலில் ஆர்வத்தை ஏற்படுத்துதல்
        ஆசிரியர் மாணவர்களிடம் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதம் பாடம் நடத்த வேண்டும். ஒரு சில மாணவர்கள் பாடம் நடத்தும் ஆசிரியர்களின் புலமையைக் கண்டே வகுப்பிற்கு வருவார்கள். அத்தகைய ஆசிரியர்களையே மாணவர்கள் விரும்புகிறார்கள் என்பதை இறையன்பு, ‘இழப்பீடு’ என்னும் கதையில் வேத நாயகம் என்ற ஆசிரியரை பற்றிச் சொல்லும்போது “விலங்கியல் துறையில் பேராசிரியர் அத்துறையில் மிகவும் பிரபலம். இரண்டு கைகளிலும் சாக்பீசைப் பிடித்துக்கொண்டு கரும்பலகையில் படங்களை வரைபவர். அவர் படம் வரைந்து பாகங்களைக் குறிக்கும் அழகை பார்க்கும் பொருட்டே மாணவர்கள் அவர் வகுப்புக்கு வருவார்கள.;”  (நரிப்பல், இழப்பீடு, ப.97) என்கிறார். மாணவர்களுக்குப் பாடத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு ஆசிரியர்கள் பாடம் நடத்த வேண்டும். அவ்வாறு நடத்துவதாலேயே கல்வியை மாணவர்களிடம் கற்கண்டாக மாற்ற முடியும்.

மாணவர்களின் இடைநிற்றலைத் தவிர்ப்பவர்
        ஆசிரியர் தன் பணியை மனம் உவந்து செய்ய வேண்டும். தான் பணியாற்றும் இடத்தில் மாணவர்கள் பள்ளிக்குச் சரியாக வரவில்லை எனில் கல்வியின் பயனையும், அவசியத்தையும் பெற்றோர்களிடம் எடுத்துச் சொல்லி மாணவர்களைப் பள்ளிக்கு அழைத்து வருபவராக ஆசிரியர் இருக்க வேண்டும் என்பதை ‘சமர்ப்பணம்’ என்னும் கதையில் ஆசிரியரைப் பற்றி சொல்லும் போது “ஆசிரியர் பணி தான் கொஞ்சம் கொஞ்சமாக தலைமை ஆசிரியர் ஆனார். நகரப் பள்ளிகளில் வீட்டுக்குப் பக்கத்தில் வேலைக்காக அழுத்தம் கொடுப்பவர்கள் மத்தியில் மாவட்டத்திற்கு ஒதுக்குப்புறமாக உள்ள இடத்திற்கு மாறுதல் கேட்டு வாங்கிக்கொண்டு போவார். அங்கு ஐந்து வருடங்கள் ஆழமாகப் பணியாற்றி விட்டு வருவார். வீடு வீடாகப் போய் பள்ளிக்கு வராத மாணவர்களை அனுப்பச் சொல்லி பெற்றோர்களிடம் நயமாக பேசிப் புரிய வைப்பார். பள்ளி மாணவர்களின் ஒழுக்கம், நடத்தை, கல்வி ஆகியவற்றில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைக் கண்டு மற்ற பெற்றோர்களும் குழந்தைகளை அனுப்பி வைப்பார்கள். மாணவர்கள் அவரை அப்பாவாகப் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள்” (நரிப்பல், சமர்ப்பணம், ப.115) என்கிறார்.
ஆசிரியர்களுக்கு எந்தப் பள்ளியில் பணியாற்றுகிறோம் என்பது முக்கியமல்ல. தான் பணியாற்றும் பள்ளியை நன்கு வழி நடத்துகிறோமா என்பதே முக்கியம். மாணவர்களிடம் ஒழுக்கத்தையும், நற்பண்பு நலனைக் கற்றுத்தருபவராகவும். அனைவரும் ஆர்வத்துடன் கல்வி கற்கும் சூழலை ஏற்படுத்துபவராக ஆசிரியர் இருக்க வேண்டும். அத்துடன் ஆசிரியர்கள் குழந்தையின் இரண்டாம் பெற்றோர் என்று கருதப்படுவதால் இன்னும் கூடுதல் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும். உலகில் புகழ் பெற்றவர்களாகத் திகழ்பவர்கள் அனைவரும் தான் ஒரு நல்ல ஆசிரியரால் உருவாக்கப்பட்டவன் என்பதை ஒப்புக் கொள்கிறார்கள்.

சொல்வன்மை
     கல்விக்கு அழகு கசடற மொழிதல் என்னும் சான்றோர் வாக்கிற்கு ஏற்ப, ஆசிரியர்களுக்குத் தான் கற்றதை மாணவர்கள் எளிமையாகப் புரிந்து கொள்ளும் வண்ணம் எடுத்துரைக்கும் சொல்வன்மை வேண்டும். பிறருக்குப் புரியும் விதம் எடுத்துரைக்கும் திறன் இல்லையெனில் கற்றும் எந்த ஒரு பயனுமில்லை. சொல்வன்மையே ஆசிரியர் பணியைச் செம்மையுறச் செய்யும்.

ஆசிரியர் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய பண்புகள்
        பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு ஆசிரியர்களே உலகமாகத் திகழ்கிறார்கள். ஆசிரியர் குழந்தைகளிடம் எவ்வளவு அன்பைக் காட்டுகிறார்களோ அந்த அளவு குழந்தைகளும் ஆசிரியரிடம் அன்பாகப் பழகுகிறார்கள். “ஆசிரியர்கள் பள்ளியில் கற்றுக் கொடுக்கப்பட வேண்டிய முதல் அம்சம் நற்பண்புநலன்கள். அன்னையின் வளர்ப்பைப் போலவே ஆசிரியரின் அன்பும் குழந்தைகளின் பண்பைத் தீர்மானிக்கிறது. பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் பெரியோருக்கும் வணக்கம் தெரிவிக்க வேண்டும் என்பதையும். தன்னோடு பழகும் பிள்ளைகளிடம் அன்பாக இருக்க வேண்டும். தன்னையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதை, குழந்தைகளிடம் சொல்லி அதனைப் பழக்கத்தில் கொண்டு வர வேண்டும.;” (இன்றைய கல்வி எதிர்கொள்ளும் சவால்கள் பக்கம்,40) என்கிறார். ஆசிரியர்கள் அன்றாடப் பழக்கங்களையும் கற்றுத்தர வேண்டும். அதனை அவர்கள் பின்பற்றுகிறார்களா என்பதையும் கவனித்தாலே நலம் பயக்கும். மாணவர்களுக்கு பாரதியாரின்,

“கூடி விளையாடு பாப்பா  
ஒரு குழந்தையை வையாதே பாப்பா.”(பாரதியார் கவிதைகள்,ப.94)
ஒளவையாரின்
‘அறம் செய்ய விரும்பு’ (ஒளவையார், ஆத்திசூடி,1)
         
       என்பன போன்ற பண்புநலன்களைப் பள்ளி மாணவர்களின் மனதில் பதியும் விதம் கற்றுத்தர வேணடும். அவற்றை மாணவப் பருவம் முதலே பின்பற்றும் வண்ணம் ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
மாணவர்கள் தங்கள் ஆசிரியர்கள் சொல்வதே சரியானது என்ற எண்ணம் உடையவர்களாகத் திகழ்கிறார்கள். ஏதேனும் ஒன்றைச் சொன்னாலும் அதனை ஆசிரியரிடம் சொல்லி அதன் உண்மைத்தன்மையைத் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். மாணவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப ஆசிரியர்களும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த ஒரு செய்தி என்றாலும் மாணவர்களை விட ஆசிரியர்கள் அதனை அறிவதில் ஆர்வமாகச் செயல்பாடுவரெனில் அவர் நன்றாக கற்பிக்கும் ஆற்றல் உடையவராகத் திகழ்வார்.

ஆசிரியருக்கு உரிய தகுதிகள்
         சங்க காலம் தொட்டே தமிழ்ச் சமூகம் கற்பிப்பவர்களுக்கு உயர்ந்த மதிப்பு அளித்து வருகிறர்கள் என்பதை பல்வேறு இலக்கியங்களும் சான்று தருகின்றன. ஆசிரியரின் தகுதிகள் எவை என்பதை ஏலாதி,

“அறுவர் தந்நூலு மறிந்துணர்வு பற்றி  
மறு வரவு மாறாய நீக்கி மறு வரவின்  
மாசா ரியனா மறுதலைச் சொல் மாற்றுதலே 
 
ஆசா ரியன தமைவு.”           (ஏலாதி, பா.75)
         என்னும் வரிகள் அறுவகை சமய நூல்களையும் கற்று. குற்றமுடைய கருத்துகளையும், மாறுபட்ட கருத்துகளையும் நீக்கி, குற்றமில்லாத சிறந்த ஒழுக்கத்தன்மை உடையவனாய். மாறுபட்ட கருத்தை மறுத்து. நன்மை தரும் கருத்துகளை நிலைநிறுத்தும் தன்மையுடையவரே ஆசிரியர் என நவில்கிறது.
ஆசிரியர் பணியில் எண்ணிலடங்கா மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 12ஆம் நூற்றாண்டில் பவணந்தியார் எழுதிய ஆசிரியருக்குரிய இலக்கணம் தற்காலத்திற்கும் பொருந்துவதாக உள்ளது எனில் பண்டைய காலம்தொட்டு தமிழர்கள் கற்பதிலும் கற்றுத்தருவதிலும் எவ்வளவு அக்கறையுடன் செயல்பட்டுள்ளனர் என்பது வியப்புக்குரியது.

ஆசிரியப் பணியின் பெருமிதம்
         
      ஓர் ஆசிரியர் தனது பணியை உள்ளத் திருப்தியுடன் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு ஏற்பவர்களே சிறந்த மாணவர்களை உருவாக்குகிறார்கள். அதன் பொருட்டு தானும் மகிழ்கிறார்கள் என்பதை இறையன்பு,

“மாணவர்களைச் செதுக்கும் பணியிலேயே
திருப்தி சொல்லும் திருப்தி எனக்கு.
ஒவ்வோர் ஆண்டும் பத்து மாணவர்களையாவது
பக்குவமடையச் செய்யும் பணியில்
என்னைக் கரைத்துக் கொள்கிறேன்.”        (வைகை மீன்கள், ப.123)
          என்னும் வரிகளில் ஆசிரியர் தன் பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்கிறார். ஓர் ஆசிரியர் செம்மையுறப் பணியாற்றிப் பிற ஆசிரியர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்பதும் புலனாகிறது.
ஆசிரியர், தான் கற்றுத் தந்த மாணவர்கள் உயர்வதைப் பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள் என்பதை இறையன்பு,

“கற்றுக்தருகிற மாணவரெல்லாம்  
பெற்று உயர்வதை பார்த்து ரசிப்பார்  
ஏணியாய் இருப்பார், தோணியாய் இருப்பார்  
கேணியாய் இருந்து தாகம் தணிப்பார் 
அவர்கள் பேச்சைத் தவிர்த்துப்  
பெருமை மிகுந்த செயல்களைச் செய்வார்” (தரிசனம், ப.88)
         என்னும் வரிகளில் ஆசிரியர் மாணவர்களை ஏணியாய் இருந்து ஏற்றி விடுகிறார். நீர் மிகுதியாக உள்ள இடத்தைக் கடக்க தோணி தேவைப்படுவதைப் போல மாணவர்கள் கல்வி கற்பதற்கு உறுதுணையாக இருந்து கல்விக் கடலைக் கடக்கச் செய்பவர். கேணி தன்னிடம் உள்ள தண்ணீரால் மக்களின் தாகத்தைத் தீர்ப்பதுபோல ஆசிரியர் தன்னிடமுள்ள கல்வியால் மாணவர்களின் கல்வித்தாகத்தைத் தணிப்பவராகவும். மாணவர்களுக்கும் சமுதாயத்திற்கும் பெருமை தரும் செயல்களைச் செய்பவராகவும் திகழ வேண்டும். எனவே ஆசிரியர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது வெளிப்படுகிறது.
ஆசிரியரைப் பற்றி, ‘திருச்சிற்றம்பலம்’ என்னும் கதையில் தியாகராஜர் என்பவர் நடனம் கற்றுத் தருபவர். அவரிடம் பயின்ற மாணவர்கள் நாடெங்கும் உள்ளார்கள் அவர்களை எண்ணி தியாகராஜர் மகிழ்ச்சி அடைவதாக ஆசிரியர் “இன்று என் மாணவர்கள் நாடெல்லாம் நர்த்தனம் ஆடுகிறார்கள். அவர்கள் பரம்பரையில் யாருக்கும் நடனம் தெரியாததாலேயே அவர்கள் நடனத்தில் என் முத்திரைகள் ஆழமாய் பதிந்து விடுகின்றன. அவர்கள் ஆடும் போதெல்லாம் நானே ஆடுவதாக துணிந்து கண்ணீர் மல்கி நிற்கிறேன்”; (அரிதாரம், ப.108) என்கிறார். தன்னிடம் பயின்ற மாணவர்களைப் பார்த்து ஆசிரியர் பெருமை கொள்ள வேண்டும் என்பதும், ஒரு கலை என்றால் அதனைக் கற்றுக் கொடுப்பவர் கற்பவரின் குடும்பத்தில் அந்தக் கலையைக் கற்று இருந்தால் மட்டும் கலையைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில்லை, கலை பயிலாத குடும்பத்திலிருந்து வரும் மாணவர்களுக்கும். உரிய தகுதி இருப்பின் ஆசிரியர்கள் கலையை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதும் புலனாகிறது.
        ஒரு சில பள்ளிகளில் பெற்றோர்கள் படித்திருந்தால் மட்டுமே பள்ளியில் குழந்தைகளுக்குக் கல்வி கற்பதற்கு உண்டான வாய்ப்பு கிடைக்கிறது. அவ்வாறு இல்லாமல், பெற்றோர் கல்வி பயின்றாலும் பயிலாவிட்டாலும் பெற்றோர்கள் விரும்பும் பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்வதே அனைத்து மாணவர்களும் கல்வி கற்பதற்கு உண்டான வழி.
தியாகராஜர் சொல்கிறார் “என் சொந்த மகனுக்கு நான் சொல்லித் தந்தால் என்னையும் அறியாமல் அதிக அக்கறையைச் செலுத்தத் தூண்டும். அது இதுகாறும் இருந்த தன்மையை நீர்த்துப் போகச் செய்து விடும். எல்லாரையும் விடவும் அவன் நன்றாக ஆட வேண்டும் என்ற எண்ணம் எட்டிப்பார்த்து மற்றவர்களுக்குக் குறைத்துச் சொல்லித் தர வைத்து விடக்கூடும். எங்கு சென்றாலும் அவனுக்கு உண்மையான சிரத்தையிருந்தால் அவன் சிறந்த கலைஞனாக வந்துவிட்டுப் போகட்டும். நடனம் யாருக்கும் பரம்பரை தொழில் இல்லையே” என்றார். (அரிதாரம், ப.108) என்னும் வரிகளால் ஒர் ஆசிரியருக்கு முக்கியமான பண்பு அனைவரையும் சமமாக எண்ணுதல் என்பதை ஆசிரியர் வெளிப்படுத்தியிருக்கிறார். ஓர் ஆசிரியர் பிற மாணவர்களுடன் சேர்த்து தன் குழந்தைக்கும் கற்பிக்கும்போது தன் குழந்தையிடம் அதிக கவனம் செலுத்த வாய்ப்புள்ளதால். ஆசிரியர் கற்பிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்.  திறமையுள்ள மாணவன் எங்கு போனாலும்  கற்பதில் வெற்றி பெறுகிறார்கள். திறமையும் விடாமுயற்சியும் இருந்தால் வெற்றி பெறலாம் என்பது வெளிப்படுகிறது.

ஆசிரியரும் சமுதாயமும்
      சமுதாய முன்னேற்றத்தில் ஆசிரியரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு சமுதாயம் முன்னேற்றமடைய சமுதாயத்தில் உள்ள அனைவரும் கல்வி கற்றவர்களாக இருக்க வேண்டும். கல்வி கற்றுக் கொடுப்பதில் “ஒரு நல்ல ஆசிரியர் சமூகத்தை அன்புடன் நோக்குகிறார். ஒரு கர்வமான ஆசிரியர் துச்சமாகப் பார்க்கிறார். ஒரு உழைக்காத ஆசிரியர் குற்ற உணர்வோடு பார்க்கிறார். ஒரு திறமை குறைந்த ஆசிரியர் அச்ச உணர்வோடு பார்க்கிறார்.” (கற்றல் கற்பித்தல், ப.59) ஒரு சிறந்த ஆசிரியர் சமூகத்தை நேசிக்கிறார். அதன் பொருட்டு சமூகத்தில் வாழ்பவர்களுக்கு நன்மை தரும் செயல்களையே செய்கிறார். அவ்வாசிரியர் தன்னிடம் பயிலும் மாணவர்கள் பிற்காலத்தில் உலகம் போற்றக்கூடிய பண்பு நலன்கள் உடையவர்களாக வாழ வேண்டும் என்னும் எண்ணத்துடன் மாணவர்களுக்குக் கற்பிக்கிறார்.

முடிவுரை
      ஒர் ஆசிரியரின்  இன்றியமையாத பண்பு நலன்களில் ஒன்று தொடர்ந்து கற்கும் பழக்கம். தொடர்ந்து கற்கும் ஆசிரியர்களே நல்ல ஆசிரியர்களாக விளங்க முடியும். அத்துடன் ஆசிரியர்கள் தன்னிடம் பயிலும் மாணவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்தல் என்பது மாணவர்களிடம் கற்றலை மேம்படுத்த உதவுகிறது. ஒழுக்கம், அறம், பண்பாடு, கலாச்சாரம் போன்ற சிந்தனைகளை ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும். ஆசிரியர்களுக்கு தான் கற்றதை மாணவர்கள் எளிமையாகப் புரிந்து கொள்ளும் வண்ணம் எடுத்துரைக்கும் சொல்வன்மை வேண்டும். திறமையுள்ள மாணவன் எங்கு போனாலும்  கற்பதில் வெற்றி பெறுகிறார்கள். திறமையும் விடாமுயற்சியும் இருந்தால் வெற்றி பெறலாம். ஆசிரியர்கள் மாணவர்களுக்கும் சமுதாயத்திற்கும் பயன் தரும் செயல்களைச் செய்பவர்களாகத் திகழ வேண்டும்.

துணைநின்ற நூல்கள்
1. வெ.இறையன்பு – அரிதாரம், நியூ செஞ்சுரி புக் (பி) லிட், அம்பத்தூர், சென்னை – 600050. ஒன்பதாம் பதிப்பு, 2019.

2. வெ.இறையன்பு – தரிசனம் விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர் – 641001. முதல் பதிப்பு 2018.

3. வெ.இறையன்பு – வைகை மீன்கள், விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர் – 641001. முதல் பதிப்பு 2020

4. வெ.இறையன்பு – பூனாத்தி, விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர் -641001. மூன்றாம் பதிப்பு 2017.

5. வெ.இறையன்பு – நரிப்பல் நியூ செஞ்சுரி புக் (பி) லிட், அம்பத்தூர், சென்னை – 600050. ஏழாம் பதிப்பு 2019.

6. ஆசிரியர் பிரதிபா –   இன்றைய கல்வி எதிர்கொள்ளும் சவால்கள், சாரதா பதிப்பகம,; சென்னை – 600014 எட்டாம் பதிப்பு 2012

7. ஏற்காடு இளங்கோ –   கல்விச் சிந்தனையாளர் மரியா மாண்டிச்சோரி,  சாரதா பதிப்பகம், நாலாம் பதிப்பு ஜூலை 2012

8. சரவணமுத்து. இரா.  –   கற்றல் கற்பித்தல், சாரதா பதிப்பகம், சென்னை – 600 014 ஆறாம் பதிப்பு 2014

9.  அடியார் மணிவாசகன் –   நன்னூல், சாரதா பதிப்பகம், சென்னை – 600 014 நான்காம் பதிப்பு 2016

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர்  பா. விக்னேஷ்குமார்,

உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,

எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
சென்னை-600 077.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here