Abstract
In the Ancient era, womenfolk were living in such a bitter position that they cannot even ask as an information about the blenders or mistakes committed by their respective life partners. This kind of state of affairs were not only confined to the normal women force of the society but was also very much prevalent even with the Queens of the Great Kings of several empires. Though King Ravana’s second wife Dhaaniyanmaali and the mother of Adhikayan who has not even had the sight of others cry was aware that there were a few other wives and women in thousands were havng rights over Lanka’s King, she was not questioning and was serious about those issues. Because of the death of his beloved son Adhikaya, who fought with Rama and Lakshmana and defeated Indra, the leader of the gods, with unutterable grief and anger, she though Ravana as the cause of her Son’s death. She direcly accused that Ravana’s lust for Goddess Sita for the loss of her Son .With more anger and fury she asks him. Where did your courage has gone? Don’t you understand what I mean? Won’t you listen to me ? You never listen to your younger brothers Kumbakarna and Vebeeedanan. You, being the root cause for the loss of everyone including Akkumaran and Adhikayan, still ruling the Empire ! Now, only Mandothari’s son, Indrajit, is alive. Will you go for Successive Wars again with him? In this way she started raising series of questions to Ravana without fear. Though Dhaaniyamaali was very well aware that her own husband Lanka’s King Ravana is the wrong doer she was firm in her statement that Blender is still a Blender and she also says “ Already you have incurred more loss of Brave personalities of your Empire and because of your lust towards Devi Sita, you may have to incur further more bravery from your side.” Here Poet Kambar through his exemplary expressions, has depicted Dhaaniyamaali as a Revolutionary lady through her above explicit and fiery contentions in this Epic.
Keywords: Dhaaniyamaali ,Ravan, Raman, Sita, Lakshmanan, Caution, Anger, Rage.
“கம்பராமாயணத்தில் புரட்சிப் பெண் தானியமாலி”
ஆய்வுச் சுருக்கம்
முற்காலத்தில் கணவன் என்ன தவறுதான் செய்தாலும் அதனை தகவலாகக் கேட்க கூட முடியாத நிலையில் தான் பெண்கள் இருந்தனர். சாதாரண பெண்களுக்கு மட்டுமல்ல, மன்னனின் தேவியாக இருந்தாலும் இதேநிலைதான். இராவணனின் இரண்டாவது மனைவி தானியமாலி. பிறர் அழுததைக் கூட பார்த்தறியாதவள். அதிகாயனின் அம்மா. இலங்கை வேந்தனுக்கு சில மனைவியரும், பல்லாயிரம் உரிமை மகளிரும் இருந்ததை அறிந்த போதிலும், எதையும் கேட்கவும் எண்ணாதவளாய் இருந்தாள். இராமலட்சுமணரோடு போரிட்டு தேவர்களின் தலைவனான இந்திரனையும் வென்ற தன் அருமை மகன் அதிகாயன் இறந்ததால், சொல்ல முடியாத துயரத்தில் வந்த கோபத்தோடும், ஆத்திரத்தோடும் அவன் இறப்புக்கு காரணம் இராவணன் தான். அவன் லோகநாயகி சீதை மேல் கொண்ட காமமே என்பதை நேரடியாகவே இராவணனிடம் கேட்டாள். மகனின் இழப்பினால் வந்த சோகத்தால் வந்த கோபமே. உன்னுடைய வீரம் எங்கே போனது? நான் சொல்வதைக் கேட்டு பொருள் உணரவில்லையா? நான் சொல்வதைக் கேட்க மாட்டாயா? உன் தம்பி கும்பகர்ணன், வீடணன் பேச்சை நீ கேட்கவில்லை முன்பு அக்ககுமரன் உள்ளிட்ட அதிகாயன் வரை அனைவரின் இழப்பிற்கும் காரணமான நீ, இன்னும் அரசு செய்கிறாயா? இப்போது மண்டோதரியின் மகன் இந்திரஜித் மட்டுமே உயிருடன் இருக்கிறான். அவனை வைத்துக் கொண்டு இன்னொரு முறை திக்கு விஜயம் செய்வாயோ? என்றெல்லாம் அடுக்கடுக்காக கேள்விக் கணைகளைத் தொடுக்கிறாள். தவறு செய்தது இலங்கை வேந்தனான தன் கணவனே ஆனாலும் தவறு தவறுதான் என்றும், இதுவரை பல இழப்புகளைச் சந்தித்த நீ, இன்னும் சீதை மேல் கொண்ட காமத்தால் நீ அடைய இருக்கும் இழப்புகள் நிறையவே என்றும், கணவனை எச்சரிக்கும் ஒரு புரட்சிப் பெண்ணாகக் கம்பர் தன் காப்பியத்தில் தானியமாலியைப் படைத்துள்ளார்.
திறவுச்சொற்கள் : தானியமாலி, இராவணன், இராமன், சீதை, இலட்சுமணன், எச்சரிப்பு, கோபம்,ஆத்திரம்.
முன்னுரை
கம்பராமாயணத்தில் எத்தனையோ பெண்பாத்திரங்கள் வருகின்றன. இராவணனின் இரண்டாவது மனைவி தானியமாலி.அவளை ஒரு புரட்சிப் பெண்ணாகக் கம்பர் படைத்திருக்கிறார். இராவணன் காமத்தினால் எத்தனையோப் பெண்களைக் கவர்ந்தும் வந்திருக்கிறான். அவனுக்கு உரிமை மகளிர் பலர் இருப்பதையும் அறிந்தவள்.அதை எதிர்க்க எண்ணவும் இல்லை. அதிகாயன் இறந்தபோது அவளுக்கு ஏற்பட்ட ஆற்றொணாத் துயத்தில் வந்த கோபத்தாலும், ஆத்திரத்தாலும், ஆதங்கத்தாலும் தன் அருமை மகனின் இழப்பிற்குக் காரணம் கணவன் இராவணனே, அவன் சீதைமேல் கொண்ட தவறான காதலாலே, காமத்தாலே என்பதால் அதுவரை எதுவுமே பேசாத அவள் இராவணனிடமே அவனுடைய தவறுகளை அடுக்கடுக்காகக் கேள்விகளைத் தொடுக்கிறாள்.தவறு செய்தது தன் கணவனேயானாலும் அரக்கர் குல அரசனேயானாலும் தவறு தவறுதான் என்று எண்ணியேக் கொந்தளித்து அடுக்கடுக்காகக் கேள்விக்கணைகளைத் தொடுத்தாள் என்பதை கம்பராமாயணத்தின் மூலம் இக்கட்டுரையின் வழி ஆராய்வோம்.
அதிகாயனின் அன்னை தானியமாலி
தசகிரீவன் இராவணனின் இரண்டாவது மனைவி தானியமாலி. தேவேந்திரனையேத் தோற்கடித்த அதிகாயனின் தாய்.பிறர் அழுததைக்கூட பார்த்தறியாதவள். பல பெண்களை உரிமைமகளிராக வைத்திருக்கிறான் என்பதை தெரிந்திருந்தாலும் கணவனிடம் இத்தன்மையைக் கேட்காதவள்.
அடித்து அழுது கொண்டு ஓடி வந்தாள்
இராம, இலட்சுமணர்களோடு போரிட்டு அதிகாயன் இறந்துவிட்டான் என்ற செய்தியை அறிந்து அலறி அடித்துக் கொண்டும் மார்பில் அடித்துக் கொண்டும் இராவணன் முன் வந்தாள். கதறியபடி வந்த தானியமாலி மலை உச்சியில் இடி தாக்கியதைப் போல, தன் கை வளையல்களும், கழுத்தில் அணிந்துள்ள மாலைகளும் ஒலி எழுப்ப, தன் முலைகளின் உச்சியில் அடித்துக்கொண்டு அழுதாள். புத்திரசோகத்தினால் குகை திறந்ததைப் போன்ற வாயைக் கொண்டவளாய் அரற்றிக் கொண்டும், கதறிக்கொண்டும் செம்பட்டை மயிற்குழல்கள் குழைந்து எங்கும் விரிந்து பரவ, ரத்த கண்ணீரைச் சொரிந்தபடியே அரற்றி அழுதாள்.
“மலைக் குவட்டு இடி வீழ்ந்தென்ன வளைகளோடு ஆரம் ஏங்க
முலைக் குவட்டு ஏற்றும் கையால் முழை திறந்தென்ன வாயாள்
தலைக் குவட்டு அணைந்த செக்கர் சரிந்தன குழல்கள் தத்தி
உலைக் குவட்டு உருகு செம்பு ஒத்து உதிர நீர் ஒழுகும் கண்ணாள்” (அதிகாயன் வதைப் படலம் 1934)
மலைப்பாம்பு போலப் புரண்டாள்
இதுவரை பிறர் அழுவதையேப் பார்த்து அறியாத அவள், தன் தோள்கள் மண்ணைப் பொருந்த இராவணனின் பாதத்தில் விழுந்தாள். துயரம் மிகுதியால் புலம்பி உடைந்து அழுதாள். பெரிய பாம்பைப் போலப் புரண்டாள். இராவணனிடம் எனக்குக் கொடுமை செய்துவிட்டாய் என்று கூறிப் புலம்பத் தொடங்கினாள்.
என்னுடைய கண்மணியைக் காட்டமாட்டாயோ?
இப்போது வல்லவர்களாக திகழும் பகைவர்களான இராம லட்சுமணர்களின் வலிமையைப் போக்க மாட்டாயோ? உன் வீரத்தை வெளியே செல்ல விடாமல் உள்ளுக்குள்ளேயேத் தடுத்து நிறுத்தி விட்டாயோ? தோள் வலிமை தளரப்பெற்றாயோ? நான் சொல்வதைக் கேட்டு அதன் பொருளை அறிந்து கொள்ளவில்லையோ? அல்லது நான் சொல்வதைக் காது கொடுத்து கேட்க மாட்டாயோ? என் கண்மணியாகிய அதிகாயனை என் கண்முன் காட்ட மாட்டாயோ என்று கூறி அழுதாள்.
“மாட்டாயோ இக்காயம் வல்லோர் வலி தீர்க்க
மீட்டாயோ வீரம் மெலிந்தாயோ தோள் ஆற்றல்
கேட்டாய் உணர்ந்திலையோ என் உரையும் கேளாயோ
காட்டாயோ என்னுடைய கண்மணியைக் காட்டாயோ” (அதிகாயன் வதைப்படலம் 1936)
அதிகாயனின் சிறப்புகள்
அதிகாயனின் சிறப்புகளாக வீடணன் கூறுகிறான். அறம் இல்லாதவற்றை அன்றி மற்றொன்றை அறியாதவன். வீரம் என்னும் அணிகலனைத் தவிர, வேறான பல அணிகலன்களை அணியாதவன். வலிமை அற்றிருக்கின்ற எந்த உயிரையும் அழிக்காதவன். பெரும் புகழைப் பெறுவதே சிறந்தது என்பதை அறிந்தவன். (அதிகாயன் வதைப் படலம் 1732) போர்க்களத்தில் உடலில் உள்ள உயிரை விட நேரும் போதும், மாயச் செயலில் வல்லவர்கள் கூடிப் போரிட்டாலும், தேசத்தில் உள்ள அனைவரும் தந்திர செயல்கள் செய்தாலும், அவற்றுக்கு எதிராக மாயத் தொழிலைச் செய்ய நினைக்க மாட்டான் என்று கூறினார்.
“காயத்து உயிரே விடு காலையினும்
மாயத்தவர் கூடி மலைந்திடினும்
தேயத்தவர் செய்குதல் செய்திடினும்
மாயத் தொழில் செய்ய மதித்திலனால்” (அதிகாயன் வதைப்படலம் 1733)
தேவர்களின் தலைவனையே வென்றவன்
இந்திரனுக்கும் தோற்காத சிறந்த புதல்வனை இவள் பெற்றெடுத்தாள் என்று வானத்தில் வாழும் தேவர்களும் போற்றும் போற்றுதலுக்குப் பாத்திரமான எளியேன் நான். என்னுடைய மந்திர மலையைப் போன்ற தோளைப் பெற்ற மகனை, அவனுக்குச் சமமாக மாட்டாத மனிதன் ஒருவனது வில் விட்ட அம்புக்கு இரையாகக் கொடுத்து விட்டேனே என்று கதறினாள்.
“இந்திரற்கும் தோலாத நன்மகனை ஈன்றால் என்று
அந்தரத்து வாழ்வாரும் ஏத்தும் அளியத்தேன்
மந்தரத்தோள் என் மகனை மாட்டா மனிதன் தன்
உந்து சிலைப் பகழிக்கு உண்ணக்கொடுத்தேனே” (அதிகாயன் வதைப்படலம் 1937)
திசை தோறும் சென்று வெற்றி பெறுவாயோ
இதற்கு முன்பே அக்ககுமரன் இறந்துவிட்டான். அதிகாயன் இப்போது இறந்து போனான். மிக்க வலிமை பெற்ற அனைவரும் அழிந்தனர். இப்போது உன் புதல்வர்களில் உயிரோடு இருப்பவன் மண்டோதரியின் மகன் இந்திரஜித் மட்டுமே. இனிமேல் திசை தோறும் சென்று வெற்றி பெறுவாயோ என்று வினவினாள்.
“அக்கன் உலந்தான் அதிகாயன் தான் பட்டான்
மிக்க திறந்து உள்ளார்கள் எல்லோரும் வீடினார்
மக்கள் இனி நின்று உள்ளான் மண்டோதரி மகனே
திக்கு விஜயம் இனி ஒரு கால் செய்யாயோ?” (அதிகாயன் வதைப் படலம் 1938)
இன்னும் வர இருப்பவை சிலவோ
ஐயனே நீ எதனை எண்ணிக் கொண்டிருக்கிறாய்? வெற்றி மாலை சூடிய வேலாயுதம் ஏந்திய எண்ணற்றவரான இறந்து போன அரக்கரை உயிர்ப் பிழைத்து வருமாறு கூப்பிட மாட்டாயோ? அறிவற்றவராய்க் காமத்தால் பிணிக்கப் பட்டவர் தப்பி பிழைப்பாரோ? சீதையால் இதுவரை வந்த துன்பங்கள் போக, இன்னும் வர விருப்பவை சிலவோ. அவை மிகப் பலவாகும் என்று கூறினாள்.(சீதை மேல் நீ கொண்ட காமத்தால் முதலில் கிங்கரர், சம்புமாலி ,பஞ்சசேனாபதியர், அக்ககுமரன், கும்பகர்ணன் ஆகியோர் இறந்தனர். இப்போது அதிகாயன் இறந்தான்.. இனி இந்திரசித் , நீ, மண்டோதரி இறக்கப்போகிறீர்கள் என்பதைக் குறிப்பாகக் கூறினாள்))
“ஏது ஐயா சிந்தித்திருக்கின்றாய் எண் இறந்த
கோதை ஆர் வேல் அரக்கர் பட்டாரைக் கூவாயோ
பேதை ஆய் காமம் பிடித்தார் பிழைப்பாரோ
சீதையால் இன்னும் வருவ சிலவேயோ” (அதிகாயன் வதைப் படலம் 1939)
நீ இன்னும் அரசாட்சி செய்கின்றாய்
அறிவு நிறைந்த உன் தம்பியான கும்பகர்ணன் உரைத்த நல்லுரையை நீ ஏற்றுக்கொள்ளவில்லை. குலத்துக்கு உரிமை உள்ள மற்றொரு தம்பியான வீடணன் கூறிய சொற்களில் பொருந்திய தன்மையை நீ உணர்ந்து கொள்ளவில்லை. கும்பகர்ணனை முதலில் கொலை செய்துவிட்டு, இப்போது என் மகனான இளவரசன் அதிகாயனையும் அம்புக்குப் பலியாக்கி, நீ இன்னும் அரசாட்சி செய்கின்றாய் என்று கோபத்துடன் கேட்டாள்.
“உம்பி உணர்வுடையான் சொன்ன உரை கேளாய்
நம்பி குலக் கிழவன் கூறும் நலம் ஓராய்
கும்பகர்ணனையும் கொல்வித்து என் கோமகனை
அம்புக்கு இரையாக்கி ஆண்டாய் அரசு ஐயா (அதிகாயன் வதைப் படலம் 1940)
இவ்வாறாகப் பற்பலவற்றைத் தொடர்ந்து கூறி குரல் உயர்த்தி, கூவி தன் கன்று இறந்து போகத், தான் மட்டும் உயிர்ப் பிழைத்திருக்க நேர்ந்த தாய் பசுவைப் போலக் கவலை கொண்ட தானியமாலியை அருகே நின்ற ஊர்வசியும், மேனகையும் நெருங்கிச் சென்று எடுத்து மலையை ஒத்த உயர்ந்த அரண்மனைக்குள்ளே சேர்த்தனர். முதன்மை இடத்தைப் பெற்ற அந்த இலங்கை நகரத்து அரக்கர்கள் ஒன்று கூடி தத்தம் மகனை இழந்தவர் போல, அதிகாயன் முதலியோர்களின் அழிவுக்காக வருந்தி அழுதனர். அந்நகரில் இருந்த எண்ணற்றவரான வான மகளிரும் மிக இரங்கியத் தன் வாயைத் திறந்து கதறி அழுதனர் என்று சொன்னால் அரக்க மகளிர் நிலை எத்தகையதாக இருக்கும்.
முடிவுரை
பல உரிமை மகளிரைக் கொண்டு தன் வாழ்நாள் முழுவதும் அனுபவித்து தான் விரும்பினால் அந்தப் பெண்களை எப்படியாவது தன் வயப்படுத்தும் திறம்படைத்த இலங்கை வேந்தன் இராவணனால், அவன் சீதைமேல் கொண்ட காமத்தால் தன் மகன் அதிகாயன் இறந்ததால் , அதிகாயனின் அம்மா தானியமாலி அடங்காத சோகம் மற்றும் கோபத்துடன் கணவனைத் திட்டிக் கேட்டாள். தட்டிக்கேட்டாள். கணவன் செய்தது தவறாகவே இருந்தாலும், அது குறித்து மனைவி எதுவும் கேட்டமாட்டாள் என்பதே அக்காலத்தில் இருந்த நடைமுறையாகும். தகவலாகக்கூட கேட்க இயலாத அன்றைய சூழ்நிலையில், அடுக்கடுக்காகக் கேள்விகள் கேட்கும், நீ செய்தது தவறே,உன்னால்தான் என் மகன் இறந்தான் என்றும்,அவனைக் கொன்றது நீ தான் என்றும், உன் தம்பிகளைக் கொன்றாய் என்று அடுக்கடுக்காகக் கேள்விக் கணைகளைத் தொடுக்கும் புரட்சிப் பெண்ணாகக் கம்பர் தம் இராமாயணத்தில் கூறியுள்ளார் என்பதை நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.
துணைநூற்பட்டியல்
1.சுப்பிரமணியம்.வ.த.இராம.தண்டியலங்காரம்,முல்லைநிலையம்,சென்னை, 2019.
2.ஞானசந்தரத்தரசு அ.அ., கம்பன் புதிய தேடல், தமிழ்ச்சோலைப் பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.
3.ஞானசம்பந்தன் அ.ச இராமன் பன்முகநோக்கில், ,சாரு பதிப்பகம், சென்னை,2016.
4.நடராசன்.பி.ரா. தண்டியலங்காரம்,சாரதா பதிப்பகம், சென்னை,2012.
5.பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1,2,3,4,5,6,7,8. வர்த்தமானன் வெளியீடு,
சென்னை, 2011.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் க.மங்கையர்க்கரசி,
உதவிப்பேராசிரியர்,
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II),
மீனம்பாக்கம், சென்னை 600061.




ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்


