Abstract
Nature itself manifests many wonders within. We live a life deeply connected with such nature. This study’s summary is to understand the way Pillay Perumal Iyangar has employed the description of nature in his work, Ashtaprabandham.
Key Words
Nature – Scene – Imagination – Metaphysics – Devotion – Hymn – Devotional Verse – Sea – Spiritual Enthusiasm – Religious fervor – Dragonfly
பிள்ளைப்பெருமாளையாங்கார் பாசுரங்களில் இயற்கை
சுருக்கம்
இயற்கையானது பல அதிசயங்களை தன்னகத்தே கொண்டு திகழ்கிறது. அத்தகு இயற்கையோடு பின்னிப்பிணைந்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து வருகிறோம். அவ்வகையிலே பிள்ளைப்பெருமாளையங்கார் தன் படைப்பான அஷ்டப்பிரபந்தத்தில் இயற்கை வருணனையை கையாண்டுள்ள விதத்தை அறிவது இவ்ஆய்வின் சுருக்கம் ஆகும்.
கலைச்சொற்கள்
இயற்கை – காட்சி – கற்பனை – மெய்ப்பொருளியல் – பக்தி – பாசுரம் – கடற்கானல் – மதப்பெருக்கு – வேழம் – பிடி – முகில் – அரவு – தும்பி.
முன்னுரை
இயற்கை பல அரிய அதிசயங்களை தன்னகம் கொண்டு திகழ்கிறது. இயற்கையோடு இயைந்து பாடும் கவிஞர்கள் அதில் பல காட்சிகளைக் கற்பனையில் காணுகின்றனர். கவிஞர்கள் தாம் பெற்ற மெய்யுணர்வு அனுவத்தை ஒரு விருந்தாக படைக்கிறான். அந்த வகையில் பிள்ளைப்பெருமாளையங்காரும் திருமால் குடி கொண்டு இருக்கும் திருத்தலங்களின் இயற்கையெழிலில் மனதினை செலுத்தி பக்தி உணர்வுடன் சொற்கவியை இயற்றியுள்ளார்.
சங்க இலக்கியங்களில் இயற்கை
சங்க காலம், இயற்கையில் இறைவனைக் கண்டு இன்புற்ற காலம். அக்காலத்து வாழ்ந்த மெய்பொருளியல் புலவர்களான நக்கீரர், கபிலர், பரணர் போன்றோர் இயற்கையைக் கொண்டு இறைவனின் பெரும் புகழை எடுத்தியம்பினர். அந்த பாடல்கள் எவற்றிலும் சுட்டி ஒருவர் பெயர் கூறப் பெறாததால் இன்னார் என்று உணரமுடியாத தலைவன் தலைவி காதல் பாடல்கள் தோன்றி, பிறகு தெய்வத்தின் மீது கொண்ட காதலாக மாறி பாசுரங்களாக வளர்ந்து செழித்தன. மன்னர்களின் வீரச் செயல்களை பாடும் நிலைமாறி, இறைவனின் அறிபுதச் செயல்களைப் பாடும் நிலை வளர்ந்தது. வள்ளல்களின் வள்ளல் தன்மையை பாடும் பாடல்களுக்கு ஈடாக இறைவனின் அற்புதச் செயல்களைப் பாடும் பாசுரங்கள் தோன்றின.
கற்பனைக் காதலுக்குப் பின்னணனியாக அந்தந்த ஊர்களின் இயற்கைச் சூழல் வருணிக்கப் பெற்றிருந்தது மாறி இறைவனிடம் செலுத்தும் பக்தி மாண்புக்கு பின்னணியாக அந்தந்த திருக்கோயில் தலங்களைச் சூழ்ந்த இயற்கை எழில்களைப் பற்றிய வருணனைகள் அமைந்தன. இயற்கைக் காட்சிகளோடு இறைவனை, இறைவன் எழுந்தருளியிருக்கும் இடத்தைக் காட்டுவதால் மக்களின் மனதைக் கொள்ளை கொள்ளும்படி இறைவன் மீது பாடப்பட்ட பாசுரங்கள் அமைகின்றன. சங்க காலத்தில் இருந்தே இறைவனை இயற்கையோடு இணைத்து பாடி வந்துள்ளனர்.
கலித்தொகையில் சூரியன் மேற்குத் திசையில் மலையில் சென்று மறைய இருள் வந்த காட்சியினை விளக்குமிடத்தில் “போரில் வல்ல சக்கரப் படையினையுடைய திருமாலின் நிறம் போல எம்மருங்கும் இருள் சூழ்ந்தது” (சக்திதாசன் சுப்பிரமணியன், 1958) என்று அவனது கரிய நிறத்தின் தன்மை தோன்ற இயற்கைக் காட்சியில் வர்ணிக்கப்படுகிறான்.பரிபாடல் திருமாலின் திருமேனியழகைக் காட்டுமிடத்தில் இயற்கைக் காட்சியோடு இணைத்துக் கூறுகின்றது.
“நீண்ட மேகம், காயாம்பூ, கடல், இருள், நீலமணி என்னும் ஐந்து பொருள்களையும் ஒக்கும் அழகு விளங்கு திருமேனியை உடையாய்” (பரிமேலழகர்,1956) என்று போற்றப்படுகிறான். நெய்தற்கலியில் வண்டொலி முழங்கும் கடற்கானலின் இயற்கைக் காட்சியைச் சிறப்பிக்குமிடத்து, “பெருங்கடலும் துயில்வது போல ஒலி வந்து கிடக்கின்ற காட்சி, அரும்பொருள்கள் முறையோடு இசைந்து வருகின்ற பாடலோடு, கலந்து கேட்கும் யாழிசையை அனுபவித்தவாறே, திருமால் பாற்கடலின் மீது கிடந்து உறங்குவது போன்று இருந்தது” என்று கூறுமிடத்தில் பாம்பணையில் கிடந்த தோற்றத்தில் திருமால் காட்சி தரும் நிலை காட்டப்படுகிறது.
கண்ணபிரான் இயல்பாகவே வலிமையுடையவன் என்ற பெருமை தோன்ற “மாயோன் பற்றார் களிற்றின் முகத்தெறிந்த சக்கரம் போல் ஞாயிறு குடமாலையைச் சேரன் பலராமன் நிறம் போல மதி தோன்றியது” (சக்திதாசன் சுப்பிரமணியன், 1958) முல்லைத் திணையின் முதல் தெய்வமாக மாயவன் போற்றப்படுவதால் அவன் நிறமும், ஆற்றலும் ஒருங்கே தோன்றப் போற்றப்படுவதைக் காண்கிறோம்.
மாந்தர் கண்களால் காணமாட்டாத கடவுளை அவனது படைப்புப் பொருள்களின் வாயிலாகக் காண்டல் கூடும் என்பது இளங்கோவடிகள் கருத்து. இறைவனுடைய பண்புகளில் அருட்பண்பே தலைசிறந்தது. ஆதலால், அப்பண்பு திங்களிடத்திலும், அவனுடைய முத்தொழில்களை முகிலிடத்திலும் காணப்படுவதால் இவற்றில் இக்கடவுட்பண்பையே அடிகளார் கண்டு வழிபடுகின்றார் எனலாம். உயிரில்லாப் பொருளாகிய இவற்றிலும் உயிர்களிடத்தே கடவுட் பண்பு, இறைத்தன்மையாக வெளிப்படுவதால் இவற்றிற்கு உவமையாகக் காவிரி நாடன் குடை முதலியவற்றை எடுத்தோதி வணங்குகிறார். இது அவருடைய கடவுட் கொள்கையை ஒருவாரு அறிவுறுத்திக் காட்டுகின்றது. இவ்வாறு எப்பொருளிலும் கடவுளைக் காணும் இயல்பு சமயக் கணக்கர் மதி வழிச் செல்லாது உயரிய உணர்ச்சி வாயிலாக கடவுளைக் கண்டு வழிபடுகின்ற உண்மை நெறி எனலாம்.
ஆழ்வார் பாசுரங்களில் இயற்கை
மதப்பெருக்கால் செருக்கித் திரிகின்ற ஆண் யானை ஒன்று, அது தன் பெண் யானையைக் காண்கிறது. அதற்கு இனிய உணவு கொடுத்து அதன் மனம் நிறைவிக்க விரும்புகிறது. அந்த ஆண் யானை அருகிலிருந்த மூங்கில் குருத்தைப் பிடுங்கி மலையிலுள்ள ஒரு தேனடையில் தோய்த்து அப்பெண் யானைக்கு ஊட்டுவதை,
பெருகு மதவேழம் மாப்பிடிக்கு முன்நின்று
இருகண் இளமூங்கில் வாங்கி – அருகிருந்த
தேன்கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர் (ஜெகத்ரட்சகன், 1993)
என்று இரண்டாம் திருவந்தாதி பாடும். இதே கருத்தினை,
……. ……. …….. அலைமடு தேன் தோய்த்துப்
பிரச வாரிதன் இளம்பிடிக் கருள்செய்யும் (ஜெகத்ரட்சகன், 1993)
என்று பெரியதிருவந்தாதி பேசும்.
முருகு நூறுசெந் தோளினை முழைநின்றும் வாங்கி
பெருகு சூழ்இளம் பிடிக்கு ஒருபிறை மருப்பியானை (இராஜம். எஸ், 1958)
என்று கம்பரும் இக்காட்சியை வருணிப்பது நினையத்தக்கதாகும்.
பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டங் குறைவதற்குக் கோவில் போல் – வண்டு
வளங்கிளரும் நீள்சோலை வண்பூங் கடிகை
இளங்குமரன் றன்விண் ணகர்(ஜெகத்ரட்சகன், 1993)
என்பது பாசுரம். பண்டு திருவேங்கடம், திருப்பாற்கடல், திருவைகுண்டம் போன்றவற்றைத் தன் இருப்பிடமாகக் கொண்டு உறைந்தவர்க்குத் தற்பொழுது வண்டுகள் திரளாக இருக்கின்ற மலர்மிகுந்த சோலைகளை உடைய அழகிய திருக்கடிகைக்குன்றையே ஆதாரமாகக் கொண்டுள்ளான் என்று பொருள் கொள்ள இப்பாசுரம் இடமளிக்கின்றது. எங்கெல்லாம் அழகுள்ளதோ அங்கெல்லாம் இறைவன் இருப்பதாகக் கொள்வது சமயக் கொள்கை. இக்கொள்கையை ஒட்டியே பக்தர்களும் இயற்கையில் தோய்ந்து இறைவனை அனுபவிக்கின்றனர். எல்லா இடங்களிலும் காணும் இயற்கை அழகில் எம்பெருமானின் அழகுக்கூறுகளில் மனதைப் பறிகொடுக்கின்றனர். இயற்கை அழகினை தம் உள்ளத்து அழகுடன் குழைத்துத் தம்மனம் விரும்பும் கடவுள் வடிவத்தின் தெய்வீக அழகாகக் கொள்கின்றனர். இதனை பிள்ளைப்பெருமாளையங்கார் தன்னுடைய படைப்பான அஷ்டப்பிரபந்தத்தில் இணைத்துப் பாடியுள்ளார்.
செவிலி இரங்கல்
தலைமகளின் நிலையைக் கண்டு செவிலித்தாய் மிக்க துயர் கொள்கிறாள். அப்பொழுது திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை நோக்கிப் பேசுகின்றாள். இக்காட்சியை ஐயங்கார், இயற்கையோடு செவிலித்தாய் சேர்த்து திருமாலைப் பேசுவதாகக் காட்டுகிறார். “திரு அரங்கநாதனே! தாமரை போன்ற இரு கண்கள் வாடவும், கண்களிலிருந்து பெருகி வருகின்ற கண்ணீரானது மலையருவி போல் வழிந்தோடவும், மன்மதனின் மலரம்புகள் உள்ளே ஊடுருவிச் செல்லவும், வாடைக் காற்று இடையே நுழைந்து செல்லவும், அன்றில் பறவை எழுப்பும் குரல் ஒலியானது காதினைக் குடையவும், வளமான துளசிமாலையின் ஆசையுடனே, எங்கள் பேதைப் பெண்ணாகிய இவள் உயிர் நீங்கப் பெறுதல் உமக்கு அறமாகுமா? ஆகாதே!” என்று செவிலித்தாயின் நிலையில் இருந்து தலைமகளாகத் தன்னை நினைத்துக் கொண்டு திருமால் அருள் கிடைக்காததால் தான் வருந்தும் துயரை செவிலித்தாய் எடுத்துக் கூறுவது போலத் திருமாலிடம் தன் உள்ளத் துன்பத்தை எடுத்துரைக்கிறார். இதனை,
வாடி ஓட வசைம் அன்ன இருகண் வெள்ளம் அருவிபோல்
மருவி ஓட, மதனன் வாளி உருவி ஓட, வாடை ஊடு
ஆடி ஓட, அன்றில் ஓசை செவியில் ஓட, வண் தூழாய்
ஆசையோடு எங்கள் பேதை ஆவி ஓடல் நீதியோ?
திரு அரங்க ராசரே! (வை. மு. கோ.)
என வரும் பாசுரவடிகளால் அறியலாம்.
தலைவி இரங்கல்
தலைமனின் பிரிவைத் தாங்க மாட்டாமல் ஆறாத் துயரில் இருக்கின்ற தலைவி நிலையில் இருந்து பாடுகின்ற நிலையில் இயற்கைக் காட்சிகளை அமைத்து “திருமாலை அழைத்து வந்து என்னிடம் சேருங்கள் என்று பாடுகிறார் பிள்ளைப்பெருமாளையங்கார். அரிய பெரிய புன்னை மரச் சோலையே! ஆசை என் மனதில் அடங்குவதில்லை. தாமரை மலரில் பொருந்திய வண்டே! அழுகின்ற விழிநீர் ஒழுக கண் உறங்குகின்றேன் இல்லை. பரந்த கடலில் ஊர்கின்ற மரக்கலமே! பாவிக்கு அலர்தூற்றும் ஊராரின் நாவும் வாயும் பகையாம். கரைமேல் பெரிய சுறாவே! வருந்துகின்ற எனக்குக் குற்றமுள்ள உறவினரும் அயலாராவார். தாழை மலர்கள் சிந்தும் மணற்குன்றே! இரவுப் பொழுது பல ஊழிக் காலமாக நீளும். பனையே! கரும்புவில் காமனை அழைக்கும் நாரைகளே! சங்கு உலவும் அழகியே கரையே! என அரங்கநாதனை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று பாடுகின்றார் ஐயங்கார். இச்செய்தியை,
அரும் புன்னாகத் தடங்காவே! அவா என் ஆகத்து அடங்காவே
அம்போருகக்கண் பொரும் தேனே! அழுநீர் உகக் கண் பொருந்தேனே
……………. ………………. ………………. …………..
குருகீர்! நந்து அமர் அம் கரையே! கொணரீர், நம்தம் அரங்கரையே! (வை. மு. கோ.)
என வரும் பாசுர அடிகளால் அறியலாம்.
திருமாலின் சிறப்பு
திருமாலின் சிறப்பினை எடுத்துக் கூறும்போது, “வானகத்தில் திரளாகத் தோன்றுபவை விண்மீன் கூட்டங்களோ, உன்னைத் தொழும் தேவர்கள் அன்பொடு சொரிகின்ற மலர்களோ? ஒளிப்பிளம்பாகத் தோன்றும் பதினாறு கலைகளும் நிரம்பிய வெண்மதியோ, உன்னைத் தேவமாதர்கள் மங்களார்த்தமாக ஆலத்தி எடுத்த கற்பூரத் தட்டோ? நாங்கள் அறிய முடியவில்லை. இப்பொழுது நீண்ட திருக்கண்கள் அறிதுயில் கொள்ளுதற்கு இடமான திருப்பாற்கடலிலிருந்து எழுந்தருளி வந்த எம்பெருமாளே! என்று பாடுகின்றார். இதனை,
உடுத் திரளோ, வானவர்கள் சொரிந்த பூவோ,
உதித்து எழுந்த கலை மதியோ, உம்பர் மாதர்
எடுத்திடு கர்ப்பூர ஆரத்திதானோ,
யாம் தெளியோம் இன்று, நீள் திருக்கண் சாத்திப்
படுத்த திருப்பாற்கடலுள் நின்று போந்து(வை. மு. கோ.)
என வரும் பாசுர அடிகளால் அறியலாம். இங்கு திருமாலின் சிறப்பினை எடுத்து ஊதினால் உலகங்கள் அனைத்தும் செழித்து வளர்கின்றன என்று காட்டி இயற்கையின் செயல்கள் அனைத்தும் திருமாலின் கீழ் நடக்கின்றன என்று காட்டுகின்றார் ஐயங்கார்.
திருமால் வடிவம்
திருமாலது வடிவத்தை ஐயங்கார் பாடியுள்ளார். “கருங்குழல் காளமேகத்தையும், நெற்றி இளம்பிறையையும், புருவம் வில்லையும், விழிகள் வேலையும், காது வள்ளை இலையையும், மூக்கு எள்ளுப் பூவையும், இதழ்கள் இலவம் பூவையும், பற்கள் முல்லை மலரையும், முகம் முழு நிலவையும், கழுத்து சங்கையும், தோள் இளமூங்கிலையும், முன்னங்கை வீணையையும், உள்ளங்கை தாமரை மலரையும், கைவிரல் கெளிற்று மீனையும், கை நகம் கிளியலகையும், கொங்கை குடத்தையும், முலைக்கண் நீலமணியையும், வயிறு ஆலிலையையும், இடை உடுக்கையையும், கொப்பூழ் நீர்ச்சுழியையும், அல்குல் பாம்பின் படத்தையும், தொடை வாழையையும், முழங்கால் நண்டையும், கணைக்கால் விரால் மீனையும், புறங்கால் பந்தையும், கால் விரல்கள் பவளத்தையும், கால் நகம் முத்தையும், பாதங்கள் மலர்த் தாமரையையும் ஒத்திருந்தன” என்று திருமாலின் திரு அவயங்களை ஒப்புமை செய்து வடித்துள்ளார் பிள்ளைப்பெருமாளையங்கார். இதனை,
மழை பிறை சிலை வேல் வள்ளை எள் இலவின்
மலர் முல்லை மதி வளை கழை யாழ்
வாரிசம் கெளிறு தந்தை வாய் கலசம்
மணி வடபத்திரம் எறும்பு ஊர்
அழகு நீர்த் தரங்கம் துடி சுழி அரவம்
அரம்பை ஞெண்டு இளவாரல் ஆமை
அணி தராக இணை கந்துகம் துகிர் தரளம்
அம்புயம் அரங்க நாடு அனையார்
குழல் நுதல் புருவம் விலோசனம் காது
நாசி வாய் நகை முகம் கண்டம்
குலவு தோள் முன்கை அங்கை மெல்விரல்கள்
கூர் உகிர் கொங்கை கண் வயிறு
விழைதரும் உரோமம் வரை இடை உந்தி
விரும்பும் அல்குல் தொடை முழந்தாள்
மிளிர் கணைக் கால்கள் புறவடி பரடு
மென் குறி விரல் நகம் தானே(வை. மு. கோ.)
என்ற பாசுரத்தால் அறியலாம். என்று ஆசிரியர் திருமாலின் வடிவழகைப் பாடுகிறார்.
திருமாலிருஞ்சோலையின் சிறப்பு
திருமால் அருளி நிற்கின்ற நூற்றெட்டுப்பதிகளில் ஒன்றாக விளங்குகின்ற திருமாலிருஞ்சோலை என்ற தலம் எப்படியெல்லாம் இருக்கிறது என்பதை இயற்கையோடு காட்டியுள்ளார் ஐயங்கார். ‘மனமே தீவினையை உடையவனான எனக்கும், தூயவனான பிரம்மனுக்கும், தலைவரும், அன்புள்ள அடியவர்களது உள்ளத் தாமரையில் எழுந்தருளியிருப்பவனுமான எம்பெருமானது, நீர்ப்பூக்களில் மொய்த்தற்கு வருகின்ற இன்னிசை கொண்ட தடாகங்களின் நீர், அம்மலர்களின் நறுமணம் கமழுகின்ற திருமாலிருஞ்சோலையைக் கண்ணால் கண்டவுடன் நமது தீவினைகள் தீரும். ஆதலால் அங்குச் செல்வதற்கு தலைப்படுவாய்’ என்று தனது மனதை நோக்கிக் கூறுகிறார் ஐயங்கார். இவ்வழியாக, திருமாலிருஞ்சோலையின் சிறப்பை இயற்கையோடு பின்னிப் பாடியுள்ளதை அறியமுடிகிறது. இதனை,
பாவிக்கு அமல விரிஞ்சற்கு இறையவர் பத்தர் தங்கள் ஆவிக்
கமலத்து வீற்றிருப்பார் அளிப்பாடல் கொண்ட
வாலிக் கமல மணம் நாறும் சோலை மலையைக் கண்ணால்
சேவிக்க மலம் ஆறும் – மனமே! எழு செல்லுதற்கே(வை. மு. கோ.)
என்று வரும் பாசுர அடிகளில் விவரிக்கிறார்.
திருவரங்கத்தின் இயற்கை சிறப்பு
உலகங்களைக் காத்து வருகின்ற திருமால் பள்ளி கொண்டிருக்கும் தலம் திருவரங்கம் என்று கூறும்போது ஐயங்கார் இப்பதியின் சிறப்பினை இயற்கையோடு பிணைத்து பாடுகிறார். ‘மண்ணகத்தையும், விண்ணகத்தையும், நின்ற இமயமலையையும், அதனைச் சூழ்ந்து நின்ற மலைகளையும், கடல்களையும், இவற்றைக் கொண்ட புடவியையும், அதனின் விரிவான எல்லையையும், ஊழிக்காலத்தில் உண்டு வந்த எம்பெருமான் பள்ளி கொண்டுள்ள திருப்பதி எதுவெனில், முகில்கள் முழங்கி மேற்கு மலையிலிருந்து பெருகிப் பெருக்கெடுத்து அகிற்கட்டைகளை வாரி வருகின்ற காவேரி அலைகள் முத்துக்களையும், பொன்னையும் சிந்துகின்ற தென் திருவரங்கம் ஆகும்’ என்று கூறுகின்றார் பிள்ளைப்பெருமாளையங்கார். இச்செய்தியினை,
கொண்டல் குமுறும் குடகு கிழிந்து மதகு உந்தி அகில்
கொண்டு நுரை மண்டி வரு நீர்
தென் திரைதோறும் தரளமும் ககைமும் சிதறு
தென் திரு அரங்க நகரே (வை. மு. கோ.)
என வரும் பாசுரத்தால் உணரலாம். மேலும்,
ஆழம் உடைய கருங் கடலின்
அகடு கிழியர் கழித்து ஓடி
அலைக்கும் குட காவிரி நாப்பண்
ஐவாய் அரவில் துயில் அழுதை(வை. மு. கோ.)
என்று இயற்கையோடு இணைத்து திருவரங்கத்தின் புகழைப்பாடுகிறார் ஆசிரியர்.
திருவேங்கடத்தின் சிறப்பு
திருமாலின் நூற்றெட்டுப்பதிகளில் மற்றொன்று திருமலை எனப்படும் திருவேங்கடம் என்னும் பதி ஆகும். இயற்கையை தன் போர்வையாக போர்த்திய ஊர் ஆகும். இந்த இயற்கை அழகை பிள்ளைப்பெருமாளையங்கார் அஷ்டப்பிரபந்தத்தில் வர்ணித்து உள்ளார். கொம்பில் கட்டிய தேங்கூட்டை எடுத்தற்கு நீட்டிய யானையின் துதிக்கை நிலவினை கவ்வும் இராகு என்னும் பாம்பு போல் தோன்றும் வேங்கடமே, வண்டுகள் நெருங்கி மொய்த்த குளிர்ந்த மலர்மாலை தரித்த வஞ்சமகள் மூக்கையும், காதையும் அறுத்த எளிதின் எய்தப்படானின் திருமலை ஆகும் என்று விளக்குகிறார். இதனை,
கொம்பின் இறால் வாங்க நிமிர் குஞ்சரக் கை அம்புலிமேல்
வெம்பி எழும் கோள் அரவுஆம் வேங்கடமே – தும்பி பல
போர் காதும் ஈர்ந்தார் புனை அரக்கி மூக்கினொடு
வார் காதும் ஈர்ந்தார் வரை (வை. மு. கோ.)
என்னும் பாசுரத்தில் விளம்புகிறார். திருவேங்கடத்து அந்தாதியில், வேங்கட மலையின் சிறப்பாக ஐயங்கார் காட்டுகிறார்.
ஏறு கடாவுவர் அன்னம் கடாவுவர் ஈர்இரு கோட்டு
ஊறு கடா மழை ஓங்கல் கடாவுவர் ஓடு அருவி
ஆறு கடாத அமுது எனப் பாய அரி கமுகம்
தாறுகள் தாவும் வட வேங்கடவரைத் தாழ்ந்தவரே(வை. மு. கோ.)
என்னும் பாசுரத்தில் திருவேங்கடத்தின் சிறப்பினையும், அங்கு எழுந்தருளியிருக்கும் இறைவனது சிறப்பினையும் பாடுகிறார் ஐயங்கார்.
முடிவுரை
இயற்கையோடு இயைந்து பாசுரங்களையும், பாடல்களையும் பாடிய ஆழ்வார்களையும், சான்றோர்களையும் இவ் ஆய்வில் அறியமுடிந்தது. இயற்கையை அவர்கள் காட்டுமிடத்து அவர்கள் தங்களது கற்பனைத்திறன் வெளிப்படும் அளவில் சிறப்பாகப் படைத்துள்ளனர். பாசுரங்கள் அனைத்தும் இயற்கை ததும்பும் அமிர்தமாக படைக்கப்பட்டுள்ளன. பிள்ளைப் பெருமாளையங்கார் திருவரங்கம் மற்றும் திருவேங்கட மலைகளின் இயற்கை சிறப்பினை மிகவும் அழகாக படம் பிடித்துக் காட்டியுள்ளார் என்பதை அறியமுடிகிறது.
பார்வை நூல்கள்
1.இராஜம். எஸ் – கம்பராமாயணம்: மூலமும் உரையும் – மர்ரே அண்டு கம்பெனி – மு.ப.958
2.சக்திதாசன் சுப்பிரமணியன் –கலித்தொகை –அன்பு வெளியீடு, புதுச்சேரி – மு.ப.958
3.சாமிநாதையர், உ. வே. – பரிபாடல் மூலமும் பரிமேலழகர் உரையும் – சென்னை – நா.ப.956
4.வை. மு. கோ. – அஷ்டபிரபந்தம்: மூலமும் உரையும் – உமா பதிப்பகம், சென்னை
5.ஜெகத்ரட்சகன், முனைவர் – நாலாயிர திவ்யப் பிரபந்தம் – ஆழ்வார்கள் ஆய்வு மையம், சென்னை- மு.ப.993
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்