Friday, September 12, 2025
Home Blog Page 31

இலக்கியத் திறனாய்வு என்றால் என்ன? வகைகளைக் குறிப்பிடுக? | What is literary Criticism? Specify types?

திறனாய்வு வகைகள்

        இலக்கியத் திறனாய்வானது இலக்கியக் மற்றும் கோட்பாட்டோடு, மனித சிந்தனைக் கருத்துநிலைகளை உட்படுத்திஅமைந்துள்ளது.  திறனாய்வு நிகழ்வதற்கான காரணங்களை வகுத்துக் கொண்டு, அதன்வழி திறனாய்வினைப் பலவகைகளாகப் பிரித்துள்ளனர். கொள்கை அதனை வெளிப்படுத்தும் சமுதாயவியல் கருத்து அணுகுமுறையாக விதிமுறை, விளக்கமுறை, பகுப்புமுறை, செலுத்துமுறை, எனப் பலவழிப்பட்ட செல்நெறிகளை உடையதாக திறனாய்வு அமைந்தாலும், மேலைநாட்டினர் விளக்கமுறைத் திறனாய்வுக்கு தற்போது முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். விளக்க முறைத் திறனாய்வானது திறனாய்வு வகைதனில் பொதுவானதாக தோற்றமளிக்கிறது. இவ்வகைத் திறனாய்வை ஒப்பீட்டு முறையில் அடக்கிக் கூறுவதும் உண்டு.

இலக்கியத் திறனாய்வின் வகைகள் (What is literary Criticism? Specify types?)

1.விளக்கமுறைத் திறனாய்வு (Interpretation Criticism) – Click Here

2.விதிமுறைத் திறனாய்வு (Prescriptive Criticism) – Click Here

3.உளவியல் முறைத் திறனாய்வு (Phychological Approach) – Click Here

4.வரலாற்று முறைத் திறனாய்வு (Biographical Criticism) – Click Here

5.சமுதாயவியல் திறனாய்வு (Sociological Criticism) – Click Here

6.ஒப்பீட்டுத் திறனாய்வு (Comparative Criticism) – Click Here

7.பாராட்டுமுறைத் திறனாய்வு (Appreciative Criticism) – Click Here

8.செலுத்துநிலை அல்லது படைப்புவழித் திறனாய்வு (Judicial Method) – Click Here

9.பகுப்பு முறைத் திறனாய்வு (Analytical Criticism) – Click Here

10.ரசனை முறை அல்லது அழகியல் திறனாய்வு (Aesthetic Criticism) – Click Here 

11.முடிபுமுறைத் திறனாய்வு (Judicial Criticism) – Click Here

12.மதிப்பீட்டு முறைத் திறனாய்வு ( Evaluation method performance) – Click Here

       திறனாய்வானது ஓர் இலக்கியத்தின் பாடுபொருள்கள் மற்றும் அவற்றின் உட்கூறுகளை அறியச் செய்வதோடு, நூல்கள் பற்றிய பொதுவான ரசனையை வெளிக்கொணரவும், அபிப்பிராயங்களை தெரிவிக்கவும், கருத்து நிலைத் தொகுப்பாகவும், காரண, காரியங்களைச் செயற்படுத்த பல்வேறுப்பட்ட திறனாய்வு வகைகள் துணைசெய்கின்றன.

 

 

கீழ்க்கண்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டவை

இலக்கியத் திறனாய்வு – வகைகளும் வளர்ச்சியும்

பேராசிரியர் இரா.மருதநாயகம்

மதிப்பீட்டு முறைத் திறனாய்வு | What is the Evaluation method performance

மதிப்பீட்டு முறைத் திறனாய்வு

      திறனாய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் இலக்கியத்தைப் பற்றிய முழு மதிப்பீட்டு நிலையை (Evaluation) அடியொற்றி அமைவது மதிப்பீட்டு முறைத் திறனாய்வு ஆகும். ஓர் இலக்கியத்தை பகுத்தும், தொகுத்தும், விளக்கியும், ஆய்தற்கும் உளவியல் தன்மையையோ, சமுதாய உண்மையையோ, அளவிட்டுரைப்பதற்கும், அதனின் உண்மை நிலையை மதிப்பீடு செய்வதற்கும் இத்திறனாய்வு முறை முக்கியப் பங்கு வகிக்கிறது.

       அவற்றோடு மட்டுமல்லாமல், ஓர் இலக்கியத்தில் சமுதாயம் பற்றிய உண்மையை ஆழமாகவும், திறம்படவும் ஆராய்வதற்கு மதிப்பீட்டு முறை இன்றியமையாதது ஆகிறது, மதிப்பீட்டு முறையில் இலக்கியத்தின் தரம், தகுதி. சிறப்பு, சீர்மை, பண்பு பற்றியக் கூறுகளும், இலக்கியத்தின் மதிப்பும் (Literary Value) விழுமிய நிலையில் மதிப்பீட்டுரைக்கப்படுகிறது. இத்தகைய மதிப்பீட்டு சிலமுறையில் சில வகையான அளவுகோல்கள் மற்றும் வரையறைகள் காணப்படுகின்றன. அவை ‘சமுதாய மதிப்பு’ என்ற நிலையில் அமைந்துள்ளது. 

     இத்திறனாய்வு முறையானது திறனாய்வுக் கோட்பாட்டிற்கு ஒரு தூண்போல விளங்குகிறது என்கிறார் ஐ.ஏ. ரிச்சர்ட்ஸ் (Principles of Literary Criticism) அவர்கள். அவரின் கூற்றுப்படி நோக்குகையில்,

1. மதிப்பு பற்றிய கணக்கீடு

2. தகவல் பரிமாற்றம் பற்றிய கணக்கீடு

       இவை இரண்டும் மதிப்பீட்டு முறைத் திறனாய்வுக்கு இரு தூண்களாக விளங்குகின்றன. சிறந்த இலக்கியம் எது என்பதற்கும், அல்லாத இலக்கியம் எது என்பதையும் கண்டறிய இவைப் பெரிதும் துணை செய்கின்றன.

      ‘சுடர்த்தொடீஇ கேளாய்’ – எனத் தொடங்கும் குறிஞ்சிக்கலி பாட்டில், ‘நகைக்கூட்டம் செய்தான் அக்கள்வன் மகன்’ – என்று தலைவி தான் காதலுற்ற தலைவனின் இயல்பினைத் தோழியிடம் சொல்லுமிடத்து,

1. தலைவியின் உளப்பாங்கு

2. தாயின் பரிவு

3. சமுதாய ஒழுக்கம்

       ஆகியவை இப்பாடலில் ஆழமாகவும், உண்மையாகவும், சொல்லப்பட்டிருப்பதற்கு காரணம், உள்ளடக்கம் பற்றி எழுந்த முதல்நிலை மதிப்பீட்டின் அடித்தளமான நிகழ்வே ஆகும். மதிப்பீட்டு முறைத் திறனாய்வில்

1. கதை

2. கதை சொல்கிற பாணி

3. நாடகப் பாங்கு

4.நடையியல் கூறுகள்

5.மெல்லிய உணர்வுகள்

         என இவை இலக்கிய முறையில் கவனம் சார்ந்தவையாக உள்ளன.

          திறனாய்வானது ஓர் இலக்கியத்தின் பாடுபொருள்கள் மற்றும் அவற்றின் உட்கூறுகளை அறியச் செய்வதோடு, நூல்கள் பற்றிய பொதுவான ரசனையை வெளிக்கொணரவும், அபிப்பிராயங்களை தெரிவிக்கவும், கருத்து நிலைத் தொகுப்பாகவும், காரண, காரியங்களைச் செயற்படுத்த பல்வேறுப்பட்ட திறனாய்வு வகைகள் துணைசெய்கின்றன.

கீழ்க்கண்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டவை

இலக்கியத் திறனாய்வு – வகைகளும் வளர்ச்சியும்

பேராசிரியர் இரா.மருதநாயகம்

முடிபுமுறைத் திறனாய்வு (Judicial Criticism)

முடிபுமுறைத் திறனாய்வு

   

முடிபுமுறைத் திறனாய்வு (Judicial Criticism)

     திறனாய்வாளன் தனக்குத்தானே வகுத்துக் கொண்ட வரையறைகளையும், அளவுகோல்களையும் கொண்டு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஒரு இலக்கியம் பற்றிய முடிவினை அல்லது தீர்ப்பினைத் தரக்கூடிய தன்மைப் பெற்றதாக அமைவது முடிபுமுறைத் திறனாய்வு ஆகும்.

      முடிபுமுறைத் திறனாய்வில், மேலைநாட்டினரான சாட்விக் (Chadwick), கெர் (W.P. Ker), பவுரா (C.M. Bowra) போன்றோர் கூறிய கோட்பாடு முறைகள் ஒட்டியேத் தீர்வு அமைகிறது. இதனை தண்டியலங்காரம் கூறும் பெருங்காப்பிய நிலைக் கண்டோ, சிறுகாப்பியத்தின் தன்மையை வைத்தோ, இளங்கோவின் சிலம்பினையும், கம்பனின் இராமாயணத்தையும், செவ்வியல் பண்புகளை வைத்து ஆய்வு செய்து. மேலைநாட்டினரின் கோட்பாடுகளோடு பொருத்தி, இது சரியான காப்பியம், சரியான காப்பியம் அன்று என்ற முடிவினை ஒருவர் தருபவராயின் அதனை ஏற்றுக்கொள்ளுதல் முடிபுமுறைத் திறனாய்வு ஆகும். முடிபுமுறைத் திறனாய்வு : (Judicial Criticism)

           இன்றையக் காலகட்டத்தில், நாவல்கள் மற்றும் சிறுகதைகள், கவிதைகள், என இக்காலத்தில் வெளிவரக்கூடிய இலக்கியங்கள் அனைத்தும் மேலைநாட்டார் கூறுகின்ற விதிகளை பெற்று, முடிபுகளைக் கூறுகின்றன. ஒன்றிற்கு மேற்பட்ட இலக்கியங்களில் ஒரே அளவுடைய அல்லது ஓரேவிதமான வரையறை கூறுகளை உடைய விதிகளைப் பொருத்திப் பார்த்து இலக்கியத்தின் தரத்தை உயர்த்தச் செய்வது இந்த வகையானத் திறனாய்வின் பண்பு ஆகும்.

       மேலைநாட்டினரின் கூற்றுகள், குறிப்புரைகள். எல்லாம் கல்வியில் சார்ந்த பட்ட ஆய்வேடுகளில் மேற்கோளாகக் காட்டப்பட்டு, தமிழில் பின்பற்றப்பட்டு வருகிறது. இத்தகைய நிலை எல்லா வகையான இலக்கியங்களுக்கும் பொருந்துவதாக இல்லை. ஏனெனில் ஒரே காலகட்டத்தில் தோன்றிய இலக்கியங்கள் கூட ஒரே வரன்முறையைப் பெற்று அமையவில்லை. முடிபுமுறைத் திறனாய்வு : (Judicial Criticism)

      முடிபுமுறைத் திறனாய்வானது இலக்கியங்களைப் போற்றுவதற்கு ஓரளவு துணைபுரிகின்றன. புதிய வடிவங்களை வளர்த்தெடுக்கச் செய்கிறது. சோதனை முறைகளைத் தவிர்த்து வருகிறது. புதிய இலக்கியங்களைப் போற்றும் தன்மை பழங்காலம் முதல் இருந்துள்ளது. முடிபுமுறைத் திறனாய்வின் இந்தப் போக்கினை பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் இலக்கியக் கலை என்னும் நூலில் சாடியுள்ளார்.

        சங்க இலக்கியப் பாடல்களை முடிபு முறைத் திறனாய்வில் திறனாய்வு செய்தோமானால் ஒரே கருத்தை திரும்பக் கூறுவது போன்று அமைந்துவிடுவதால், இவ்வகையானத் திறனாய்வுக்குச் சிலர் அஞ்சுவதும் உண்டு.

 

கீழ்க்கண்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டவை

இலக்கியத் திறனாய்வு – வகைகளும் வளர்ச்சியும்

பேராசிரியர் இரா.மருதநாயகம்

ரசனை முறை அல்லது அழகியல் திறனாய்வு என்றால் என்ன? What is the Aesthetic Criticism?

அழகியல் திறனாய்வு

          ஒரு இலக்கியத்தில் காணப்படும் கலைத்தன்மை மற்றும் அழகினைப் பற்றி (Aesthetic Criticism) ஆராய்வது ரசனை முறை அல்லது அழகியல் திறனாய்வாகும். இத்திறனாய்வு, ஓர் அழகிய தோற்றமுடையப் பொருளின் திரட்சி, நயம், நளினம் என்ற மூன்றையும் முதலில் ரசித்தல் வேண்டுமென்றும், அந்த ரசித்தலினால் கிடைக்கக்கூடிய சுகானுபவம் ரசனை முறையை வளர்க்கிறது என்கின்றனர்.

ரசனை முறை அல்லது அழகியல் திறனாய்வு

        இவ்வகையானத் திறனாய்வு அறிவியல் முறைக்கு உட்படுத்தப்பட்டதல்ல. ஆனால் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய மனப்பதிவு (Impression) முறையினைக் கொண்டது.

1. சொல்லின் ஓசையில் காணக்கூடிய ஒழுங்கு முறை

2.வார்த்தை தொனி

3. பொருளினது சுழற்சி

4. உணர்ச்சி

5. வடிவங்கள்

6. உவம, உருவகங்கள்

7. மனதினுள் எழும் தூண்டல் உணர்வுகள்

       முதலியவற்றை ரசனைக்குறியப் பகுதியாக அறிவித்துக் கொண்டு. பின்பு விளக்கி வர்ணிக்கிறது. இவ்வகையான திறனாய்வினால், இலக்கியத்தின் கொள்கையோ, போக்கோ. வரலாறோ பெரிதும் பாதிப்படைவதில்லை. உள்ளடக்கத்தின் கருத்தை விட உருவத்தின் தன்மைக்கே இதனுள் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. 

       கவிக்கு சிரசே பிரதானம் – என்பது போலக் கவிக்கு வடிவம் என்று மெருகூட்டுகிறது. இதனை ஆங்கிலத்தில் Theoretical Criticism/ Aesthetic Criticism விஷயமல்ல-உருவமே பிரதானம்’ – என்ற வார்த்தைகளை முன்னோடியாகக் கொண்டு ரசனை முறைத் திறனாய்வு நடைப்பெறுகிறது. ‘என்சாண் உடம்பிற்கு என்று வழங்குகின்றனர். ரசனை ஆசிரியர்களின் கருத்துக்கள் (Ideologies) கீழ்க்கண்டவற்றுடன் ஒப்பீடு செய்யப்படுகிறது.

1. குழந்தைப் பாடல்கள்

2. பெண்கள் சிந்தனை

3. யாப்பு அமைதிகள்

4. பாவகைகள்

5. நடை அமைவுகள்

        முதலியன ரசனை முறையில் ஒப்பிடப்படுகின்றன. கவிதை எளியத்தன்மையில் இருத்தல் வேண்டும், ரசிப்பதற்கு சிரமம் கூடாது. உடனடியாகப் புரிதல் வேண்டும் என்பதை ரசனை முறைக்கு அளவுகோலாக வைத்திருந்தனர். ஆனால் சங்க இலக்கியப் பாடல்களை ரசனை முறைத் திறனாய்வு உட்படுத்தாமல் டி.கே. சி. போன்றவர்கள் புறக்கணித்தனர். ஏனெனில் கடினமானச் சொற்கள் அதனில் பயன்படுத்தப்பட்டிருப்பதே ஆகும். பாட்டில் வரும் சந்த நயங்களை கவனித்தோம் என்றால், சுகம் என்று சொல்லத் தோன்றுமே ஒழிய, வாயோ, செவியோ, மனமோ, சலியாது நிற்பது ரசனைமுறைத் திறனாய்விற்கு சிறப்பாகும்.

      தமிழிலக்கியத்தில் இத்தகைய ரசனை முறையைப் பற்றி பேசுபவர்கள் ரசிகமணி டி.கே.சி, கல்கி, ராஜாஜி, பேராசிரியர் அ. சீனிவாச ராகவன், ஆ. முத்துசிவன், பி.ஸ்ரீ, நீதிபதி எஸ். மகாராஜன், தொ.மு. பாஸ்கரன், வித்வான் ல. சண்முகசுந்தரம், அ.ச. ஞானசம்பந்தன் எனப் பலராவர். சந்த முறையில் சொற்பொழிவு ஆற்றக்கூடியவர்கள், எழுத்தாளர்கள், இவர்களிடம் ரசனை முறைப்பார்வை பின்பற்றப்பட்டது. எளிமை, தாளம், லயம், உணர்வு என்ற நிலையில் கம்பனின் பாடல்கள் அதிகளவில் ரசனை முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

ரசனை முறை அல்லது அழகியல் திறனாய்வு

            மேலைநாடுகளில் அழகியல் திறனாய்வுக் கோட்பாட்டிலான முன்னோடியாக இம்மானுவோல் காண்ட் என்பவர் விளங்குகிறார். புலன்களால் நுகரப்படக்கூடிய இன்பமும்,அது தரக்கூடிய பொருளியல் அழகும், ஒன்றோடு ஒன்று இணைந்தவை என்கிறார்.

        இவ்வகையான இன்ப நிகழ்வு, தனிப்பட்ட புலனின்ப நுகர்ச்சியை விட மேன்மையானதாகவே உள்ளது. இத்தகைய அழகு நிலை ‘சுயாதிக்கமானது” (autonomy) என்றும். ரசனை முறையிலுள்ள ஆர்வம், உணர்ச்சி, தொகுத்துக் காணும் அறிவு முதலியவற்றிலிருந்து வேறுபட்டது என்றும் (Critique of Judgement) இம்மானுவோல் காண்ட் கூறுகிறார்.

       ரசனை முறைத் திறனாய்வின் வழிநிலையாக தோன்றியதுதான் ‘கலை கலைக்காகவே’ என்ற அமைப்பாகும். இதனில். கலை வேறு, வாழ்க்கை வேறு என்ற கருத்தினை வற்புறுத்தியுள்ளனர். ஆங்கிலக் கவிஞர் எட்கார் ஆலன் போ, அழகியல் விமர்சகர்கள் ஏ.சி. பிராட்லி போன்றோர். அழகு என்பதையோ, அதனை ரசிப்பது என்பதோ, வாழ்க்கையின் உள்ளடக்கத்திலிருந்து வேறுபட்டது என்கின்றனர்.

      இத்திறனாய்வினை, வாழ்க்கைச் சூழலிலிருந்தும், சமூக சூழலிலிருந்தும் சற்று வேறுபடுத்தியேப் பார்க்க வேண்டியுள்ளது.

கீழ்க்கண்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டவை

இலக்கியத் திறனாய்வு – வகைகளும் வளர்ச்சியும்

பேராசிரியர் இரா.மருதநாயகம்

பகுப்பு முறைத் திறனாய்வு என்றால் என்ன? What is Analytical Criticism?

பகுப்புமுறைத் திறனாய்வு

          ஆறறிவுக் கொண்ட மானுட வர்க்கத்தில் தொகுத்தல், பகுத்தல் என்ற அடிப்படை சிந்தனையானது இருந்து வருகிறது. உலகத்தில் உள்ளப் பொருட்களை ஒரேத் தன்மையுடையதாக இருந்தால் அதனை தொகுத்தும், சிறப்புப்பண்புகளைக் கொண்டிருந்தால் அதனை வேற்றுமைப்படுத்தியும், பகுத்துப் பார்ப்பது இலக்கியத் திறனாய்விற்கு வேண்டப்பட்ட ஒன்றாகும்.

              பகுப்பு முறைத் திறனாய்வு (Analytical Criticism) என்பது. இலக்கியத்தின் பண்புகள், மற்றும் கூறுகளை வரையறை செய்து கொண்டு. ஓர் நோக்குடன் பகுத்துக் காண்பது ஆகும். பகுத்துக் கொண்டு செய்யப்படும் திறனாய்வில், ஓர் இலக்கியம் அல்லது பொருளின் முழுத்தன்மை அல்லது சிறப்புப் பண்புகளை சிதைத்துவிடக் கூடிய நிலையில் அவை அமைதல் கூடாது.

           ஒற்றுமை, வேற்றுமை என்ற இரண்டு நிலைகளில் நோக்கும்போது, ஓர் நூலின் முழுமையான நிறை, குறைகள் தெரிவதோடு சிறப்புத் தன்மைகளும் வெளிப்படுகிறது. எந்த திறனாய்விற்கும் அடிப்படையாக அமையக்கூடியதாக பகுப்புமுறைத் திறனாய்வு உள்ளது. இதனை ‘அலசல்’ முறைத் திறனாய்வு என்றும் கூறுகின்றனர்.

பகுப்பு முறைத் திறனாய்வு (Analytical Criticism)

           சி.சு. செல்லப்பா அவர்கள் இத்தகைய திறனாய்வு முறை மேற்கொண்டுள்ளார். கவிதை, கட்டுரை, சிறுகதைகளில் இடம்பெறக் கூடிய உத்திகளையும், உணர்வுநிலைகளையும் இத்திறனாய்வு முறை விவரித்துள்ளது.

             வ.வே.சு ஐயரின் பல்வேறுபட்ட சிறுகதைகள் பகுப்பு முறையில் திறனாய்வு செய்யப்பட்டு, ஒன்றன் பின் ஒன்றாக, கதைகூறும் பண்புகளில் வளர்ச்சியும், மாற்றத்தையும் பெற்றுள்ளன. ‘குளத்தங்கரை அரசமரம்’ முதற்கொண்டு பல சிறுகதைகளை, சி.சு. செல்லப்பா அவர்கள்,

1. உருவக் குறை

2. தேர்ந்தகையும், புதுக்கையும்

3. கைவன்மைக் குறைவு

4.நிறையும், குறையும்

5. தனிரகம்

               என்ற தலைப்புகளில் கதைகளின் பண்புகளைக் கொண்டு பகுத்து ஆராய்ந்துள்ளார். கல்வியியல் சார்ந்த ஆராய்ச்சிகள், மற்றும் ஆய்வேடுகளில் பெரிதும் பயன்படுகிறது. ஒரு படைப்புதனில்,

1. புனைகதை உத்திகள்

2. பாத்திரப் படைப்பு

3. நோக்குநிலை

4.கதைப்பின்னல்

5. தொடக்கம், முடிவு

6. வருணிப்பு

7. மொழிநடை

பகுப்பு முறைத் திறனாய்வு (Analytical Criticism)

              என்ற நிலைகளில் பல பகுப்புகளையும், உட்பகுப்புகளையும் பெற்று வலம் வரும் பகுப்புமுறைத் திறனாய்வு ஏனைய திறனாய்வுக்கும் அணி சேர்ப்பதாய் அமைந்துள்ளது.

 

செலுத்துநிலை அல்லது படைப்புவழித் திறனாய்வு |Inductive Criticism

படைப்புவழித் திறனாய்வு

       ஓர் இலக்கியத்தை ஆய்வு செய்யும்போது அதனிலுள்ள நிறை, குறைகளை ஆய்வதற்கு முன்னர் அதற்குரிய வழிமுறைகளை வகுத்துக் கொண்டு செயல்படுவது செலுத்துநிலை அல்லது படைப்புவழித் திறனாய்வு (Inductive Criticism) ஆகும். திறனாய்வின் முடிவானது ஒருபுடை ஒப்புமையுடையதாக அமையும். ஆனால் இத்திறனாய்வு முறையானது இது உயர்ந்தது, இவை தாழ்ந்தது என்று கூறும் தீர்வு முறையிலிருந்து (Judicial Method) முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. ஒரு வரையறை உடைய அல்லது கலைஞனின் வழிமுறையை உடைய படைப்பை வேறொரு கலைஞனின் படைப்பில் பொருத்திப் பார்த்தல் என்பது படைப்புவழி திறனாய்வில் வேண்டத்தகாது ஆகும்.

செலுத்துநிலை அல்லது படைப்புவழித் திறனாய்வு

       படைப்புப் பற்றியோ, படைப்பாளிப் பற்றியோ பேச விழைவோர், அவரவரின் விதிமுறைக்கு ஒட்டியே பேசுதல் வேண்டும். அதனையும் மீறி செலுத்துமுறைத் திறனாய்வினை மேற்கொள்கின்ற திறனாய்வாளர்கள், படைப்பின் வளர்நிலையையும், தனித்தன்மையும் எடுத்துக்காட்டுவது கவனத்திற்குரியது ஆகும். எல்லா வகையான திறனாய்வு மேற்கொள்வதற்கும் செலுத்துநிலை (Indefine Method ) யாகிய திறனாய்வின் பங்களிப்பினை மேற்கொள்ளாமல் இருக்கமுடியாது.

         ஆனால் மதிப்பீட்டு முறை, ஒப்பீட்டு முறை மற்றும் தீர்வுமுறைத் திறனாய்வு என்ற மூன்றையும் செலுத்துநிலை ஆய்வு தவிர்க்கிறது. ஒரு குறிப்பிட்ட வரையறைக்கு உட்பட்டு அதனுடைய எல்லைத் தன்மைகளில் இத்திறனாய்வு அமைகிறது.

செலுத்துநிலை அல்லது படைப்புவழித் திறனாய்வு

பாராட்டுமுறைத் திறனாய்வு | Appreciative Criticism

பாராட்டுமுறைத் திறனாய்வு

         குறையொன்றையும் காணாமல் நிறையினை மட்டுமே கண்டு விதந்து பேசும் நிலையை பாராட்டு என்கிறோம். தமிழ் இலக்கியத்தில் காணப்படும் உரைகள் மூல நூலாசிரியனின் குறைகளைச் சுட்டிக்காட்டாமல், ஏதோ ஒரு காரணத்திற்காக இந்த கருத்தினை கூறியுள்ளார் என்று பாராட்டிப் பேசியுள்ளனர். பாராட்டு முறைத் திறனாய்வுக்கு (Appreciative Criticism) பண்டைய கால உரைகளே அடித்தளமாக அமைந்துள்ளன.

பாராட்டுமுறைத் திறனாய்வு | Appreciative Criticism

     இன்றைய காலகட்டத்தில் பாராட்டுமுறைத் திறனாய்வானது பரவலாக அமைந்துள்ளது. பாராட்டு முறையின் மூலமாக ஒருவரின் சிறப்புப் பண்புகளை மிகையாக எடுத்துக் கூறுகின்றனர்.

1. இலக்கியச் சொற்பொழிவாளர்கள்

2. கல்வியாளர்கள்

     இவர்களிடம் பாராட்டு முறையானது சில வகையான மேடை உத்தியாகவும், விருப்பத்தின் காரணமாக நிகழக்கூடிய ஒருபக்கச் சார்பாகவும், இப்பாராட்டு முறை நிறையவே இடம்பெறுகிறது. கம்பனை காலமுள்ளவரை பாராட்டக் கூடியவர்கள் நிறைய பேர் உள்ளனர். ஜெகவீரபாண்டின், டி.கே.சி. ஏ.சி. பால்நாடார். கம்பனடிப்பொடி. சா. கணேசன், ப. ஜுவானந்தம், எஸ். ராமகிருஷ்ணன், பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன், மு.மு. இஸ்மாயில், தெ. ஞானசுந்தரம் போன்றோரும், இன்னும் பலர் கம்பனைப் பாராட்டிக்கொண்டே உள்ளனர்.

பாராட்டுமுறைத் திறனாய்வு | Appreciative Criticism

     பாராட்டு முறைத் திறனாய்வில் பாராட்டுரைகளை ஒரு குறிப்பிட்ட அளவாக எடுத்துக்கொள்ள வேண்டுமே ஒழிய, திறனாய்வில் வெற்றுரைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ‘எதுவும் சற்று அளவு கடக்குமானால் கரிக்கும்’ என்பதுபோல பாராட்டுகளும் ஒரு அளவோடு எடுத்துக் கொள்ளப்பட்டால் அது சிறப்புடைய திறனாய்வாக அமையும். திறனாய்வுக்கு உண்மை மட்டுமே அவசியமான ஒன்றாகும்.

கீழ்க்கண்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டவை

இலக்கியத் திறனாய்வு – வகைகளும் வளர்ச்சியும்

பேராசிரியர் இரா.மருதநாயகம்

ஒப்பீட்டுமுறைத் திறனாய்வு (Comparative Criticism) என்றால் என்ன?

ஒப்பீட்டுமுறைத் திறனாய்வு

      இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்களை நிறுத்தி, அதனின் ஒற்றுமையையும், வேற்றுமையையும் ஆய்ந்துப் பார்ப்பது மனிதனின் இயல்பாகும். அத்தகைய வழிநின்று தோன்றியதே ஒப்பீட்டு முறைத் திறனாய்வு ஆகும். ஒரேக் கூறாக அமைந்தப் பொருட்களை ஒப்பீடு செய்வது என்பது சாத்தியமில்லை. நேர்முரணாக உள்ளப் பொருட்களையும் ஒப்பீடு செய்வது வழக்கமில்லை. ஒப்பீட்டு முறைத் திறனாய்வுக்கு இருபொருள்களின் ஒத்த தன்மைகள் மட்டுமே போதுமானதாக உள்ளது.

1. ஒத்த சமுதாய – வரலாற்றுச் சூழல்களில் பிறக்கும் இலக்கியங்கள், ஒத்த தன்மை உடையதாக இருத்தல்.

2. ஏற்புத்திறனை அதிகளவில் கொண்டு, ஓர் இலக்கியம், இன்னோர் இலக்கியத்தை தனது செல்வாக்கில் உட்படுத்துதல்

3. மொழி, இனம், நாடு, கடந்து, பலதரப்பட்ட புவியியல் கூறுகளை மீறி, இலக்கியங்கள் தன்னகத்தே ஒன்றுபட்ட பண்பகளைக் கொண்டிருத்தல்

4. குறிப்பிட்ட இலக்கியத்தின் பண்புகளும், கூறுகளும், தெளிவான நிலையில் விளக்கமாக காணக்கூடிய கருத்து நிலை ஒப்பீடு ஒப்பீட்டுத் திறனாய்வில் கருதுகோளாக அமைந்துள்ளது.

     ஒன்றனை ஒன்று ஒப்பீடு செய்வது உயர்ந்தப் பண்புகளை வெளிப்படுத்துவதற்கு மட்டுமே ஒழிய, என்னுடைய இலக்கியம்தான் உயர்ந்தது என்று செம்மாப்புக் கொள்வதற்கு அல்ல. சில உலக இலக்கியங்கள் ஒப்பீட்டு முறையில் திறனாய்வு செய்யப்பட்டதன் காரணமாக, அதனின் பொதுமைப் பண்புகள் கண்டறியப்பட்டு, மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. இதனின் பின்னணி இயங்கியல் முறையில் சரியாக இனம் காணப்படுகிறது. ஏனைய திறனாய்வு வகைகளைப் போன்று சிறந்த முறையில் அமைந்திருந்தாலும், இது பரந்த தளத்தை உடையதாக உள்ளது.

ஒப்பீட்டுமுறைத் திறனாய்வு (Comparative Criticism) என்றால் என்ன?

      ஒப்பீட்டுத் திறனாய்வானது, இன்று வளர்ச்சிப் பெற்று “ஒப்பிலக்கியம்” (Comparative Literature) என்று தனி அறிவுத்துறையாக செயல்பட்டு வருகிறது. இத்தகைய வளர்ச்சி நிலைக்கு வித்திட்டப் பெருமை ஃபிரான்சு நாட்டினைச் சாகும். பிறகு சில மாற்றங்களுடன் அமெரிக்காவில் வளர்ச்சியடையத் தொடங்கியது. அமெரிக்கா – இந்தியானா பல்கலைக் கழகப் பேராசிரியர் ஹெச். ஹெச். ரீமாக் (H.H.Remarce) கூறிய வரையறையே ஒப்பிலக்கியத் துறையில் பெரிதும் பின்பற்றப்படுகிறது. ஒரு நாட்டின இலக்கியத்தை இன்னொரு நாட்டு இலக்கியத்தோடு ஒப்பிடுகையில்

1. அவற்றிற்கிடையேயான உறவு நிலை

2) சமுதாயவியல் கொள்கை

3) தத்துவம்

4). இசை, ஓவியம், கூத்து போன்ற கலைநிலை வடிவங்கள்,

     எனப் பலதரப்பட்ட நிர்ணயக் கூறுகளை உடைய இலக்கியங்களின் மேன்மையை வெளிப்படுத்தி மனித உள்ளத்தில் ஒரு ஒற்றுமை உணர்வினை வளர்க்கச் செய்கிறது என்கிறார்.

1. ஹேரி லெவின்

2. ரெனே வெல்லக்

3. ரெனே எதேம்பிள்

4.பால் வான்தீகம்

5. உல்ரிச் வெய்ஸ்டீன்

போன்ற பலர் ஒப்பீட்டு திறனாய்வுத் துறையில் பல விளக்கங்களை அளித்துள்ளனர். பிரெஞ்சு ஒப்பிலக்கியக் கொள்கையானது. பிற கருத்து நிலைகளையோ, கலைக் கொள்கையையோ ஏற்றுக்கொள்வதில்லை. ஒப்பிலக்கியத் துறையானதுதிறனாய்வுத் துறையோடு இணைந்தே வளர்கிறது.

தமிழில் ஒப்பீட்டுத் துறை

         இலக்கியத்தையும், படைப்பாளியையும் ஒப்பிட்டுப் பார்ப்பது என்பது நம்நாட்டில் தொன்றுதொட்டு பழங்காலம் முதல் இன்றைய காலம் வரை இருந்து வருகிறது. தமிழ் உரையாசிரியர்கள் தாம் உரைகூறும் நூற்களுக்கும், பாடல் வரிகளுக்கும் பிற-இணையான இலக்கண-இலக்கிய மேற்கோள்களை ஒப்பீட்டு முறையில் எடுத்துக் காட்டுகின்ற போக்கு, பாராட்டத் தகுந்த அளவிலே இருந்து வருகிறது. 19ஆம் நூற்றாண்டில் இத்தகைய சிறப்புவாய்ந்த ஒப்பியல் நோக்கு தமிழகத்தில் பரவலாகவே வளர்ச்சியடைந்து விரைந்து வளர்ந்தும் வருகிறது.

ஒப்பீட்டுமுறைத் திறனாய்வு (Comparative Criticism) என்றால் என்ன?

     1885ஆம் ஆண்டில் ஜி.யூ.போப் அவர்கள் தமிழிலக்கியத்தைப் பார்த்து “பழைய தமிழ்க்காப்பியங்களைப் பார்க்கிற பொழுது, அவற்றிற்கும், அவற்றிற்குச் சமமான கிரேக்க இலக்கியத்திற்கும் இடையேயுள்ள ஒற்றுமைப் புலனாகிறது என்கிறார்.”

1. உருவம்

2. உள்ளடக்கம்

3. சமுதாய நிலை

       என்ற மூன்றும் பெருமளவில் ஒத்துப்போகின்றது. அதேபோல் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் கூறுகையில்  “தமிழின் புறப்பாடல்கள் ஹோமரின் காவியத்திற்கு அடிநிலையான இசைப்பாடல்களோடு ஒத்து முடிகின்றன.’ என்கிறார். எஸ்.வையாபுரிப்பிள்ளை தனது காவிய காலம் (1952) நூலில் குறிப்பிடுகையில் இதனின் கருத்துக்கள் ‘Heroic Age’ எனப்படும் கிரேக்க கருத்து நிலையோடு ஒத்து முடிகின்றன என்கிறார். இத்தகைய கருத்து நிலையை அடிப்படையாகக் கொண்டு கலாநிதி. க. கைலாசபதி அவர்கள் ‘Tamil Heroic Poetry’ என்னும் தலைப்பில் பிரிட்டன் பர்மிங்ஹாம் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டார். அவ்வாராய்ச்சிக்கு அடிநிலையாக இருந்தது ஒப்பீட்டு முறைத் திறனாய்வு ஆகும்.

          தமிழில் ஒப்பீட்டு முறைத் திறனாய்வின் வளர்ச்சியினை வ.வே.சு அய்யரின் “Kamba Ramayana – A Study” எனும் நூல் கம்பனை, வால்மீகி, மில்டனுடன் ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளது ஒப்பீட்டு திறனாய்வுக்கு நல்ல சான்றாக அமைந்துள்ளது.

கீழ்க்கண்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டவை

இலக்கியத் திறனாய்வு – வகைகளும் வளர்ச்சியும்

பேராசிரியர் இரா.மருதநாயகம்

சமுதாயவியல் திறனாய்வு (Sociological Criticism)

கேள்வியும் பதிலும் - சமுதாயவியல் திறனாய்வ

   இலக்கியம் என்பது சமுதாயத்தில் வாழக்கூடிய மனிதர்களின் வாழ்க்கை வெளிப்பாட்டினைக் வெளிக்கொணருவதாகும். அதனில் மனிதனின் வாழ்க்கைத் தன்மையானது சமுதாயத்தோடு, இணைந்தும். முரண்பட்டும் வாழ்ந்த நிலையினை உணர்வுப்பூர்வமாக வெளிக்காட்டுகிறது. அவ்விலக்கியத்தில் அதனின் தோற்றம், பொருள், பயன்பாடு, ஆகிய மூன்று நிலைகளிலும் மனிதனுக்கு உள்ள தொடர்பினை விளக்குவது சமுதாயவியல் திறனாய்வின் அடிப்படை ஆகும்.

          சமுதாய வரலாற்று மரபில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தோன்றுகின்ற இலக்கியம், படைப்பாளியின் அனுபவ உணர்வுகளையும், படைப்பாற்றலுக்கு ஏற்ற நோக்கு மற்றும் கருத்தின் தன்மையையும், பெற்றதாக அமைகிறது.

        இலக்கியம், சமுதாயம் இரண்டிற்குமுள்ளத் தொடர்பானது புலனறிவு (Sensory Perception) போல மிகவும் இயல்பான, எளிமையான ஒன்றாக உள்ளது.         தே பொனால்ட் (De Bonald) எனும் பிரான்சு நாட்டு அறிஞர். இலக்கியத்தை சமுதாயத்தின் புலப்பாடு (Literature is the expression of society) என்கிறார். ரெனி வெல்லக் (Rene Wellak) அவர்கள். தன்னுடைய ‘இலக்கியக் கொள்கை” என்னும் நூலில், ‘இலக்கியம் என்பது சமுதாய காரணங்களின் விளைவு மட்டுமல்ல, சமுதாய விளைவுகளின் காரணமாகவும் தோன்றப்பட்டது’ என்று சமுதாயத்திற்கும், இலக்கியத்திற்கு முள்ள உறவுநிலையை விளக்கியுள்ளார். சமுதாய மதிப்புகளானது காலம் செல்ல, செல்ல சூழ்நிலைக்கு ஏற்ப மாறிய வண்ணமாக உள்ளன.

      மார்க்சிய வாதிகளின் சிந்தனைகளானது சமுதாயத்திற்கும். இலக்கியத்திற்கும் உள்ள உறவுநிலைப் பற்றி ஆழமாகவும், அதிகமாகவும் சிந்திக்கக் கூடிய தன்மைப் பெற்றதாக அமைந்துள்ளது. மார்க்சிய கொள்கைகளில், சமுதாயச் சிந்தனையானது,

1. அடிப்படையான பொருளியல் (Material)

2. வாழ்க்கைக்கான ‘சமுதாய இருப்பு’ (Social Being)

3. கருத்து நிலையால் ஏற்படும் சமுதாய உணர்வுகள் (Social consciousness)

      இவற்றைப் பற்றிதான் இலக்கியம் பேசுகின்றது என்கின்றனர். இவ்வுலகின் தன்மையை வெளிக்கொணருவதற்குச் சமுதாயவியல் திறனாய்வு சிறப்புடையதாக அமைகிறது.

சமுதாயவியல் திறனாய்விற்கு அடிப்படை

         ஓர் இலக்கியம் இயற்றப்படும்போது, அவ்விலக்கியத்திற்கும். சமுதாயத்திற்கும் நெரு தொடர்புண்டு என்பதைக் கருத்தில் கொண்டு, படைக்க முயல்வோர், சமுதாயப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதத்தில் வெளிப்படுத்த வேண்டும். திறனாய்வாளர், சமுதாய நிலை இலக்கியமாகக் காணப்படும் இதனுள்,

1. இலக்கியம் புலப்படுத்தும் உண்மைகளைக் காரண, காரியங்களோடு (Cultural Factors) கண்டு விளக்குதல்

2. சமுதாய நிகழ்வுகளை (Social Determinants) வெளிக்கொணருதல்

3. இலக்கியத்தின் அமைப்புமுறைப் பற்றி பேசுதல்

4 அதனின் இடம்பெற்றுள்ள பொருளமைவுகள் பற்றி கூறுதல்.

     இவற்றைக் கருதுகோளாக வைத்து சமுதாயவியல் திறனாய்வின் அணுகுமுறையானது அமைகிறது. இலக்கியத்திற்கும். சமுதாயத்திற்கும் உள்ள உறவுநிலையைக் கீழ்க்கண்ட பரிணாமங்களின் துணைக்கொண்டு திறனாய்வாளர்கள் விளக்குகின்றனர்.

(1) சமுதாயப் பின்னணி (Social Context)

¤ படைப்பிற்குரிய காலப் பின்னணி

¤ படைப்பாளனுடைய காலப் பின்னணி

(2) எதிர்கோள் (Reader’s Response)

¤ சூழலை எதிர்கொள்ளுதல்

¤ சூழலைப் போற்றுதல்

(3) சமுதாயத்தைக் காட்டும் விதம் (Social Content)

1. குடும்ப அமைப்பு

2. உறவு நிலை

3 நிறுவனங்கள்

4. அரசாட்சிமுறை

5. சமுதாய நிலைப்பாடு

         1. கிராம மக்களின் வாழ்வு

         2. நகர்ப்புற மக்களின் வாழ்வு

         3. சாதி நிலை

        4. சீரழிவான நிகழ்வுகள்

        5. சிக்கல்களைக் கொண்ட சமுதாயச் செயல்கள்

        6. பிரச்சனையை தீர்க்கும் வழிகள்

        7. கருத்துநிலை மாற்றங்கள்

     என்ற தன்மைகளில், முரண்பட்ட சமுதாயச் சூழலைத் திறனாய்வு செய்து தீர்வினைக் காண்கின்றனர். சமுதாயத்தில் நிகழக்கூடிய இவ்வகையான மாற்றங்கள் எப்போதும் முன்னோக்கியே  நடைபெற்றுள்ளதாகும்.

        படைப்பாளன் – படைப்பு – சமுதாயம் இம்மூன்றும் ஒன்றை ஒன்றுத் தழுவி நெருக்கமுற பிணைப்புக் கொண்டதாக சமுதாயவியல் திறனாய்வாளர்கள் கூறுகின்றனர். இலக்கியத்தின் கலையுருவாக்க தன்மைகளுக்கு ஏற்பவும், சமுதாயத்தின் நெறிமுறைகளுக்கு தகுந்த முறையிலும் அதனின் மதிப்பீடுகள் அமைகிறது. அதனடிப்படையில் அப்பரின் உழவாரத் தொண்டுகள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. முடிவாக, அப்பர் வைத்திருந்த உழவாரப்படை வேளாள எழுச்சியின் ஆயுதமாகவோ வெறும் அடையாளப் படுத்திக் கொள்ளும் குறியீடாகவோ. எண்ணாமல், அன்றைய காலக்கட்டத்தின் சமுதாயச் சூழ்நிலைகளைப் புரிந்துக் கொள்வதற்கான கருவியாக எண்ணுதல் வேண்டும் என்கின்றனர்.

எதிர்கொள்ளும் தன்மை

       ஒரு குறிப்பிட்ட படைப்பு குறிப்பிட்ட சமுதாயத்தினால் எவ்வாறு எதிர்கொள்ளப்படுகிறது என்றும் அதனின் தரம், பயிற்சி, முதலிய தகைமைகள் நிர்ணயம் செய்யப்படும் தன்மை ஆகியவைப் பற்றி சமுதாயவியல் திறனாய்வாளர்கள் பேசுகின்றனர். மேலும், குறிப்பிட்ட படைப்பினை வாசகர்கள் எவ்வாறு எதிர்கொள்கின்றனர் அவர்களின் மனநிலை மாறுதல்கள் என்ன என்பது பற்றியும் பிரெஞ்சு இலக்கிய அறிஞர் ஹென்னக்யுன் (E.Hennequin) மற்றும் ருசிய அறிஞர்கள் பொதப்னியா (A. Potebnya) முதலியவர்கள் ஆராய்ந்துள்ளனர்.

      ஆங்கிலத் திறனாய்வாளர்களான 1) க்யூ டி. லீவிஸ் – விரிவாக்க முயற்சியில் சமுதாயவியல் (Fiction and the Reading – Public) கொள்கையை, ஒப்பிலக்கியம் ‘ஏற்றல் கொள்கை’ (Reception Theory) மூலமாக வெளிப்படுத்தியுள்ளார். எதிர்கொள்வின் இன்றியமையாமை:

1. வாசகரின் நேரடிப் பேட்டிகள்

2. விற்பனை பற்றிய குறிப்பு

3. தொடர்ச்சியாக வெளிவரக்கூடிய பதிப்பு

4. மதிப்புரை மற்றும் விமர்சனங்கள்

5. மேற்கோள்கள்

6.பிறரால் மொழிபெயர்க்கப்பட்டது

7. பிறரால் எடுத்தாளப் பெற்ற வரிகள்

    முதலியவை குறிப்பிட்டகலை இலக்கியப் படைப்பின் எதிர்கொள்வாக திறனாய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் சமுதாய சூழலின் சித்தரிப்பில் இடம்பெறுகின்றதாக

(1) சாதிகள்

(2) குலங்கள்

(3) மொழி அடிப்படையில் அமைந்த சமுதாயப் பிரிவுகள் மற்றும் குழுக்கள் (Social Ethnic Groups) பற்றிய விரிவான ஆய்வுத் தன்மையும், வட்டாரம், மொழி. அடிப்படையில் பகுக்கப்பட்ட

              (1) தேசியம்,

             (2) துணைதேசியம் இனங்கள்

            (3) வர்க்கப் பிரிவினைகள்,

            (4) பழக்க வழக்கங்கள் (Social Habits)

            (5) நம்பிக்கைகள்

           (6) சடபங்குகள்

           (7) சமுதாயத்தின் தேக்கச் சீரழிவுகள்

           (8) வறுமை

           (9) வேலையின்மை

         (10) குடும்பச் சிதைவின் வழி வரும் சமுதாயச் சீர்க்கேடுகள்

         (11) சமுதாய மாற்றங்கள்

     என்று சமுதாயவியல் திறனாய்வின் அணுகுமுறையானது விசாலமானப் பார்வைக் கொண்டதாக பரந்துபட்டுச் செல்கிறது.

    சமுதாயவியல் திறனாய்வானது கலைப் படைப்பில், நுணுகி ஆராயும் தன்மைக் கொண்ட விஞ்ஞானியின் பார்வையைப் போன்று ஆழ்ந்து நோக்கும் தன்மையினைக் கொண்டதாகவும், உலகக் கண்ணோட்டத்தினை (World outlook) உடையதாகவும் அமைந்துள்ளது. ஏனைய திறனாய்வினை விட மிகச் சிறப்பிற்குரிய திறனாய்வாக இதனை அடையாளம் காட்டுகிறது.

வரலாற்று முறைத் திறனாய்வு |Biographical Criticism

இனியவை கற்றல்

       இலக்கியப் படைப்பாளரின் படைப்பிலிருந்து, அவரின் வாழ்க்கை வரலாற்று முறையினை ஆய்வது வரலாற்று முறைத் திறனாய்வு ஆகும்.

     பாரதியாரின் படைப்புகளைக் கொண்டு அவரின் வாழ்க்கைக் குறிப்புகளை ஆராய்ந்தது இவ்வகையானத் திறனாய்வு முறையாகும். இத்தகைய திறனாய்வு முறை இரண்டு விதமானக் கூறுகளில் நடைபெறுகிறது.

1. அகவயமுறை (Subjective)

அகவயமுறை என்பது ஆசிரியரின் படைப்பினைக் கொண்டு திறனாய்வு செய்வது.

2. புறவயமுறை (Objective)

புறவயமுறை என்பது ஆசிரியர் பற்றி செய்தியினை, பிறத் தகவல்களைக் கொண்டு ஆய்வு செய்வது ஆகும்.

     வாழ்க்கை வரலாற்று முறைத் திறனாய்வில் சிறப்புடையதாக அகவயமுறையே காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக, கம்பனின் படைப்பில் வரும் தசரதன் – இராமனின் பிரிவு நிலையைப் படித்தோர். அதனை கம்பர் – அம்பிகாபதியின் பிரிவு என்றே கருதினர். அதே போன்று பாரதியாரின் விடுதலை உணர்வுப் பாடல்களை நோக்கும்போது – பாரதியின் விடுதலை வேட்கை நிலையையும், தேசியத்திற்காக தன்னை அர்ப்பணித்த தன்மையையும் காண முடிகிறது. வாழ்க்கை வரலாற்று முறைத் திறனாய்வில் ஒருவரைப் பற்றி அறிய அவருடைய படைப்புகள் தேவைப்படுவது மட்டுமல்லாமல், புறச்சான்றுகளும் இன்றியமையாதது ஆகிறது.

கீழ்க்கண்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டவை

இலக்கியத் திறனாய்வு – வகைகளும் வளர்ச்சியும்

பேராசிரியர் இரா.மருதநாயகம்

1.விளக்கமுறைத் திறனாய்வு (Interpretation Criticism)

2. விதிமுறைத் திறனாய்வு (Prescriptive Criticism)

3.உளவியல் முறைத் திறனாய்வு

உளவியல் முறைத் திறனாய்வு (Psychological Approach)

இனியவை கற்றல்

          உளவியல் முறைத் திறனாய்வானது ஓர் இலக்கியப் படைப்பாளியின் படைப்பின் வழி அவனுடைய உள்ளக் கருத்தை ஆராய்வது ஆகும். இதனை “Phychological Approach’ என்று கூறுவர். படைப்பாளியின் மனநிலையை அப்படைப்பில் வரும் பாத்திரங்களின் மனநிலையைக் கொண்டு அறியமுடியும்.

        ‘தாய்’ நாவலில் வரும் ‘பாவெல்’ என்னும் பாத்திரத்தின் மனநிலையும், சிந்தனையும் படைப்பாளரின் மார்க்சிய சிந்தனையை வெளிக்காட்டுவதாக உள்ளது என்று ஆராய்ந்துள்ள ‘ஃபிராய்டு’ போன்ற உளவியலாளரின் கொள்கை அந்நூலினது சரியானத் தினாய்வு முடிவினைக் காட்டுகிறது.

       உளவியல் அணுகுமுறையில் ஃபிராய்டு அவர்கள் மகள் தந்தையிடமும், மகன் தாயிடமும் நெருங்கி இருப்பது பாலியல் அடிப்படை என்றும், பெற்றோரை விட்டு விலகி இருக்கக் கூடிய பாதுகாப்பற்ற குழந்தைகளைத் ‘தெரிந்த உணர்வு’ என்றும் பகுத்துள்ளார்.

    மேற்கண்ட உளவியல் கொள்கைகளை ஒரு சாரமாகக் கொண்டு அதனை இலக்கியத்தில் உட்புகுத்தி முடிபுகளைக் கூறுவதாக உளவியல் திறனாய்வு முறை அமைந்துள்ளது. மேலும்,

1. குழந்தை உளவியல் (Children’s Psychology)

2. மிகை உளவியல் (Abnormal Psychology)

3. தொழிற்சாலை உளவியல் (Industrial Psychology)

4. மூன்றும் சேர்ந்த மனித உளவியல் (Human Psychology)

         என்பதனுள் அடங்கும். இக்கொள்கைகளைப் (Theories) பயன்படுத்தி (applied) முடிவினைக் கூறுவது சிறந்த உளவியல் முறைத் திறனாய்வுக்குச் சான்றாகும்.

உளவியல் திறனாய்வின் பயன்கள்

1.இலக்கியம் படைக்கப்பட்டதற்கான காரணத்தை அறிதல்

2. படைப்பாளியின் உள்ள நிலையை அறிதல்

3. பாத்திரங்களின் தன்மையை அறிதல்

4. கதைமாந்தர்களின் உணர்வினை அறிதல்

5. படைப்புக்கும், வாசகத்திற்கும் உள்ள உணர்வு நிலையை அறிதல்

6.படைப்பாளரின் முழுவரலாற்றை ஆய்தல்

7. கனவு நிலையைக் காண்டல்

8. நிறைவேறாத எண்ணத்தை எடுத்தியம்பல்

9. உண்மைத் தன்மைக் கொண்ட உணர்வினை ஆய்தல்

போன்ற உளவியல் திறனாய்வின் பயன்களாக அமைகின்றன.

கீழ்க்கண்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டவை

இலக்கியத் திறனாய்வு – வகைகளும் வளர்ச்சியும்

பேராசிரியர் இரா.மருதநாயகம்

விதிமுறைத் திறனாய்வு (Prescriptive Criticism)

iniyavaikatral.in

          முடிபுமுறைத் திறனாய்வினை ஒத்ததாகக் காணப்படுவது விதிமுறைத் திறனாய்வு ஆகும். முடிபுமுறை என்பது ஒரு குறிப்பிட்ட சில அளவை முறைகளைக் கொண்டு ஓர் இலக்கியத்திற்கு முடிவினை வழங்குவது ஆகும். விதிமுறைத் திறனாய்வு என்பது (Prescriptive Criticism) வரையறை மற்றும் அளவுகோல்களை இலக்கியத்தில் பொருத்திக் காண முற்படுவது ஆகும். இத்திறனாய்வின் வழி தீர்வினை அறுதியிட்டுக் கூறுதல் முடியாது. சிலவகையான. வரையறைகளைக் கொண்டுள்ள இலக்கியத்தை விளக்குதற்கு விதிமுறைத் திறனாய்வு பயன்படுகிறது.

      ‘நெடுநல்வாடை’ – என்னும் நூல் அகமா, புறமா என்று சர்சைக்குள்ளான காலக்கட்டத்தின் பின்பு பத்து நூற்றாண்டுகளுக்குப் பிறகு வந்த நச்சினார்க்கினியர் நெடுநல்வாடை புறத்தைச் சார்ந்த நூல் என்ற முடிவினைத் தந்தார். ‘நெடுநல்வாடை – புறநூல்’ – என்பதை நிருபிக்க அவர் சில விதிமுறைகளைப் பின்பற்றினார்.

1. நெடுநல்வாடையில் அதிக அளவில் பேசப்படுகின்ற செய்தியானது புறத்தைப் பற்றியது என்றும்.

 2. இறுதி நிலையில் மட்டும்தான் அகம் பற்றி பேசப்படுகின்றது. அதனால் தொல்காப்பியரின் விதிப்படி இது அகம் ஆகாது என்று வரையறை செய்துள்ளார்.

3. அன்பின் ஐந்திணையில் தலைவனோ, தலைவியோ “சுட்டி ஒருவர்ப் பெயர் கொளப்பெறாஅர்” – என்ற தொல்காப்பியரின் கூற்று நெடுநல்வாடையில் இடம்பெறவில்லை. அதனில் ‘வேம்பு தலையாத்த நோன்காழ் எஃகம்’ – என பாண்டிய மன்னனின் அடையாள மாலை பற்றிக் கூறப்படுவதால் இது புறமாயிற்று. இதனின் தலைவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்று அறுதியிட்டுக் கூறியுள்ளார்.

மரபு ரீதியான முறையில் பின்பற்றப்பட்ட செய்திகளை மாற்றி, சில விதிமுறைகள் கொண்டு வலிந்து பொருள் கொள்ளச் செய்வது விதிமுறைத் திறனாய்வு ஆகும்.

கீழ்க்கண்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டவை

இலக்கியத் திறனாய்வு – வகைகளும் வளர்ச்சியும்

பேராசிரியர் இரா.மருதநாயகம்

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »