Friday, September 12, 2025
Home Blog Page 19

நெல்லுக்கு இறைத்த நீர் | சிறுகதை |பழ.பாலசுந்தரம்

நெல்லுக்கு இறைத்த நீர் - பாலசுந்தரம்
     அந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் போதெல்லாம் சம்பத்திற்கு  ஒரு உந்துதல் ஏற்படும். ‘வினோத விருப்பங்கள்’ என்ற தலைப்பில், தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று. வாரந்தோறும் நடத்தும் நிகழ்ச்சி அது. நேயர்களின் வித்தியாசமான, நிறைவேறாத ஆசைகளை ஈடேற்றித் தருவதே அதன் நோக்கமாக இருந்தது. நேயர்களிடம் நல்ல வரவேற்பும் இருந்தது. தன் ஆசையை, லட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ள சம்பத்திற்கு வேறு வழி தோன்றவில்லை. தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எழுதி ஒப்புதலும் வந்துவிட்டது. நகரின் பெரிய துணிக்கடை ஒன்று செலவுகளை ஏற்றுக் கொள்ள முன்வந்தது. அவன் மிகுந்த எதிர்பார்ப்போடு அக்டோபர் ஏழாம் தேதிக்காகக் காத்திருக்க ஆரம்பித்தான்.
           
        ராமநாதனுக்கு சம்பத் மட்டுமே வாரிசு. அவர் அரசு ஊழியத்திலிருந்தபோதே மகனுக்கு மணமுடித்து வைத்தார். பணியாற்றிக் கொண்டிருந்த வரை எல்லாம் நன்றாகவே நடந்து கொண்டிருந்தது. கிட்டத்தட்ட ஐந்து லட்சங்களோடு ஓய்வு பெற்ற பிறகுதான் அவருக்கு மருமகளின் சுயரூபம் புரிய ஆரம்பித்தது. பணத்தை சம்பத் பெயரில் வங்கியில் இட்டு வைக்க வேண்டும் என்ற பரிணாமத்திற்கு வளர்த்துவிட்டாள். மனைவியின் என்பதை ஒரு வேண்டுகோளாக ஆரம்பித்து, கட்டளை செயல்கள் அனைத்தும் சரிதான் என்ற நிலைக்குப் போ யிருந்த சம்பத் தந்தையை வற்புறுத்த ஆரம்பித்தான். பணம் தன் கட்டுப்பாட்டில் இருக்கும்வரைக்குதான் தனக்குப் பாதுகாப்பு என்பது ராமநாதனின் அசைக்க முடியாத சித்தாந்தம். கடைசிவரை அவர் மசியாததால் மருமகள் அவரைத் துச்சமாக நடத்த ஆரம்பித்தாள். ஒரு தினம் கழிவதற்குள் அவர் பல ரூபங்களில் அவமதிப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது.
           
      பொறுக்க முடியாத கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறுவதென முடிவு செய்தார். நகரின் ஒதுக்குப்புறமாய் இருந்த முதியோர் காப்பகம், சரணாலயம் அவருக்கு அன்போடு அடைக்கலம் கொடுத்தது. மாதா மாதம் வங்கி பிலிருந்து கிடைத்த வட்டியை காப்பக நிர்வாகத்திற்கு அளித்து வந்தார். வாழ்க்கை நிம்மதியாய் நகர்ந்து கொண்டிருந்தது. சம்பத் அதை எதிர்பார்க்கவில்லை. எப்படியும் தன் வற்புறுத்தல்கள் தந்தையைப் பணியவைத்துவிடும் என்றிருந்தவனுக்கு அவரின் மாறுதலான முடிவு அதிர்ச்சிதான். அதுவும் சாகும்வரை அவன் கையால் ஒரு பருக்கை கூட உண்ணப் போவதில்லை என்றும், அவன் தனக்குக் கொள்ளி போடக் கூடாதெனவும் தெருவில் நின்று பிரகடனப்படுத்தி வெளியேறுவார் என்பது அவன் யூக எல்லைக்குள்ளேயே வராதது. ஒரு வேளையாவது அவருக்கு உணவிட வேண்டும் என்பதை ஒரு லட்சியமாக, வைராக்கியமாக மனதிற்குள் வளர்த்து வந்தவனுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒரு பெரிய வாய்ப்பாகிவிட்டது.

அன்று ஏழாம் தேதி, சரணாலயம் பரபரப்பாக இருந்தது.

“நம்ம நேரத்தப் பார்த்தியா.. ஸ்டார் ஹோட்டல்ல லஞ்ச் சாப்பிடப் போகிறோம். டீவில இன்னொரு நாள் அதப் பார்க்கப் போறோம்… நெனச்சிப் பாத்திருப்பமா?”

”ஏதோ ஒரு புண்ணியவான் மனசு வெச்சதால இது நடக்குது.. அவன் நல்லாயிருக்கட்டும்…”
           
        இரு முதியவர்கள் புறப்பட்டவாறே பேசிக் கொண்டிருந்தனர். நகரின் பிரபலமான நட்சத்திர உணவு விடுதியின் வாகனம், இருபத்தி இரண்டு முதியவர்களையும், காப்பக மேலாளர் நடேசனையும் சுமந்து கொண்டு
விரைந்தது.
           
      உணவு விடுதியில் நுழைந்த நொடியிலிருந்தே அவர்களால் பிரமிப்பிலிருந்து மீள முடியவில்லை. திரைப்படங்களில் மட்டுமே காணக் கிடைத்தவை, நேரில் அனுபவிக்கவும் கிடைத்த விந்தையை அவர்களால் நம்ப முடியவில்லை. அலங்காரமான உணவுக் கூடத்தில் விருந்து துவங்கியது. பெயர் தெரியாத பதார்த்தங்களையெல்லாம் ருசித்து முடித்தனர். அனைவருக்கும் சமமான விதத்தில் பண்டங்கள் பரிமாறப்பட்டன. யாருக்கும் கூடுதலோ, குறைவோ இன்றி சீரான முறையில் கவனிப்பு இருந்தது.
           
      ஒரு வழியாய் விருந்து முடிந்ததும், அவர்களுக்கு ஆவல் மேலிட்டது. தங்கள் பொருட்டு அத்தனை கருணை சிந்திய அந்த மனிதன் யாரென் அறிந்து கொள்ளத் துடித்தனர்.
           
          சம்பத் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டபோது, ஆரவாரம் எழுந்தது. பலரும் அவனைப் பாராட்ட, மனம் குளிர்ந்தது. வெற்றிப் பெருமிதத்தோடு தந்தையை நோக்க, அவர் சலனமின்றி நின்று கொண்டிருந்தார். தொலைக்காட்சி நிறுவனத்தினர், துணிக்கடை அதிபரையும் அறிமுகப்படுத்த அவரும் பாராட்டு மழையில் நனைந்தார். உணவுக் கூடத்தின் மேலாளர், பளபளத்த புத்தக அட்டைக்குள் கட்டணச் சீட்டை வைத்து துணிக்கடை அதிபரிடம் நீட்டினார். முன்பே செய்து கொண்டிருந்த ஏற்பாட்டின்பேரில், மொத்த தொகை இருபத்து மூன்றால் வகுக்கப்பட்டது. ஒருவருக்கான கட்டணத்தை மட்டும் சம்பத் செலுத்த, மீதிக் கட்டணம் துணிக்கடை அதிபரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. வினோதமான அந்த நடவடிக்கைப் பற்றி அனைவரும் வியப்போடு உரையாட ஆரம்பித்தனர். தன் லட்சியம் நிறைவேறியதாக சம்பத் சொன்னதை, புகைப்படக் கருவி நெருக்கத்தில் பதிவு செய்ய படப்பிடிப்பும் முடிந்தது. முதியவர்கள் விடைபெற்றுக் கொண்டு மீண்டும் வாகனத்தை நிரப்பினர்.

அடுத்த நாள் காப்பக மேலாளர் அறைக்கு வந்தார் ராமநாதன்.
          
           சார்… உங்க உதவிய எப்பவும் மறக்க முடியாது.. கடைசிவரைக்கும்… நம்ம பேசி வெச்சுகிட்ட மாதிரி நடந்து சம்பத்த நம்ப வெச்சிட்டிங்க.. தான் ஜெயிச்சட்டதா இன்னும் நெனச்சிக்கிட்டிருப்பான்… அவனப் பொறுத்தவரை நா தோத்தவனாகவே இருந்துட்டுப் போறேன்…”
        
    “அட நீங்க வேற… உங்களுக்குப் பரிமாறுன எல்லா அயிட்டத்தையும் நானும் பீட்டரும் சாப்பிட முடியாம சாப்பிட்டு வயிறு ஒரு வழியாயிடுச்சு… பீட்டர் இன்னும் எழுந்திருச்சே வராம படுக்கையிலேயே கெடக்கறாரு..”

       சாரி சார்… எனக்கு வேற வழி தெரியர… அவனோட குறுக்கு வழி திட்டத்த நீங்க முன்னாடியே தெரிஞ்சுகிட்டு எங்கிட்ட சொன்னதுக்கப்பறம்.. மொதல்ல ஹோட்டலுக்கே வராம அவாய்ட் பண்ணிடலாம்னுதான் நெனச்சேன் அப்படி செஞ்சிருந்தா அவன் ஏமாந்து போயிருப்பான்… ஆனா இப்ப… அவனோட எண்ணம் ஈடேறினதா ஒரு திருப்தி வந்திருக்கும்… அது போதும்… என்னோட வைராக்கியத்துக்கும் எந்த பங்கமும் ஏற்படாம காப்பாத்திட்டிங்க… ரொம்ப நன்றி…”
          
         “பரவால்ல சார்… ஆனா… எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கு… என்னிக்காவது உங்க பையன் இங்க வந்து உங்கள கூட்டிக்கிட்டுப் போவான் பாருங்க…“

சிறுகதையின் ஆசிரியர்
பழ.பாலசுந்தரம்
ஓசூர்

பழ.பாலசுந்தரம் அவர்களின் சிறுகதைகளைப் படிக்க..

 

வேற்றுமை என்றால் என்ன? எத்தனை வகைப்படும்? அவை யாவை?

வேற்றுமை உருபுகள்

வேற்றுமை என்றால் என்ன?
           

பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது வேற்றுமை ஆகும்.

(உ.ம்)                         கபிலன் பாராட்டினார்.
                                     கபிலனைப் பாராட்டினர்.
          
        முதல் சொற்றொடரில் பாராட்டியவர் கபிலன் எனப் பொருள் தருகிறது. இரண்டாவது சொற்றொடரில் ‘ஐ’ எழுத்தைச் சேர்த்த பிறகு பாராட்டப்பட்டவன் கபிலன் எனும் பொருளில் முழுமையாக வேறுபடுகிறது.

இதையே வேற்றுமை என்கிறோம். ‘ஐ’ என்பது இங்கு ‘வேற்றுமை உருபு’ எனப்படுகிறது.

பெயர்ச் சொல்லின் இறுதியில் அமைந்து பொருள் வேறுபாட்டைச் செய்யும் இடைச் சொற்கள் வேற்றுமை உருபுகள் எனப்படுகின்றன.

வேற்றுமை – வகை பிரித்தல் எனலாம்.

பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவதன் அடிப்படையில் வேற்றுமையை எட்டு வகைப்படுத்துவர். அவை


1. முதல் வேற்றுமை (எழுவாய் வேற்றுமை)

2. இரண்டாம் வேற்றுமை

3. மூன்றாம் வேற்றுமை

4. நான்காம் வேற்றுமை

5. ஐந்தாம் வேற்றுமை

6. ஆறாம் வேற்றுமை

7. ஏழாம் வேற்றுமை

8. எட்டாம் வேற்றுமை (விளி வேற்றுமை)

1.முதல் வேற்றுமை
           

பெயர்ச்சொல் இயல்பாக வந்து எழுவாயாக நின்று, பயனிலையைக் கொண்டு முடிவது ‘முதல் வேற்றுமை` எனப்படும். இதனை ‘எழுவாய் வேற்றுமை’ எனவும் கூறுவர்.

(உம்) தமிழ்ச் செல்வன் பம்பரம் விளையாடினான்.
தமிழ்ச் செல்வன் தலைவர்.
தமிழ்ச் செல்வன் யார்?
மேற்கண்ட தொடர்களில் தமிழ்ச் செல்வன் என்பது இயல்பான பெயராய் நிற்கிறது பயனிலை கொண்டு முடிகிறது. எனவே இது முதல் வேற்றுமை அல்லது எழுவாய் வேற்றுமை  எனப்படுகிறது.


முதல் வேற்றுமைக்கு வேற்றுமை உருபு கிடையாது


2. இரண்டாம் வேற்றுமை
           

ஒரு பெயர்ச் சொல்லின் பொருளைச் செயப்படுபொருளாக வேறுபடுத்துவது இரண்டாம் வேற்றுமை எனப்படும். இதனை ‘செயப்படுபொருள் வேற்றுமை’ என்றும் வழங்குவர்.

(உம்) மாடு பயிரை மேய்ந்தது.
         
   இத்தொடரிலுள்ள பயிர் என்னும் பெயர்ச்சொல் ‘ஐ’ என்னும் உருபை ஏற்றுச் செயப்படுபொருளாக வேறுபடுகின்றது. இவ்வாறு பெயர்ச் சொல்லினது பொருளைச் செயப்படுபொளாக வேறுபடுத்துவது இரண்டாம் வேற்றுமையாகும்.

இரண்டாம் வேற்றுமை உருபு ‘ஐ’
           

ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை என்னும் ஆறு வகையினவாக இரண்டாம் வேற்றுமை அமையும்.

உதாரணம்
1.அழகன் சிலையைச் செய்தான் – ஆக்கல்
2.அதியன் பகைவரைக் கொன்றான் – அழித்தல்
3.தேன்மொழி ஊரை அடைந்தாள் – அடைதல்
4.கண்ணன் சினத்தை விடுத்தான் – நீத்தல்
5.எழிலன் காளையைப் போன்றவன் – ஒத்தல்
6.கார்மேகம் செல்வத்தை உடையவன் –  உடைமை.

3.மூன்றாம் வேற்றுமை

திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது.

மரம் வாளால் அறுபட்டது.

ஆசிரியரொடு மாணவன் வந்தான்.

தாயோடு மகளும் வந்தாள்.

தந்தையுடன் மகனும் வந்தான்.
 

           இத்தொடர்களில் ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன் ஆகிய உருபுகள் வந்துள்ளன. இவை மூன்றாம் வேற்றுமை உருபுகள் ஆகும்.

‘உடன்’ என்பது பேச்சு வழக்கில் பயன்படும் சொல் உருபு ஆகும்.
 
           இவை பெயர்ச் சொல்லின் பொருளைக் கருவிப் பொருளாகவும், கருத்தாப் பொருளாகவும், உடனிகழ்ச்சிப் பொருளாகவும் வேறுபடுத்துகின்றன.

கருவிப்பொருள்
           
தமிழால் வாழ்ந்தான்  – வாழ்வதற்குத் தமிழ் கருவியாக இருந்தது என்பதை விளக்குகிறது.           
அறத்தான் வருவதே இன்பம் – வருவதற்கு அறமே கருவி என்பதை இத்தொடர் உணர்த்துகிறது.
          
  ‘இச்செயலுக்கு இது கருவியாக இருந்தது’ என்பதை விளக்குவதற்காகப் பெயர்ச் சொற்களுடன் ஆல், ஆன் என்னும் உருபுகள் இணைந்துள்ளன. இதுவே கருவிப் பொருளில் அமைந்த மூன்றாம் வேற்றுமையாகும்.
கருத்தாப் பொருள்
கரிகாலனால் கல்லணை கட்டப்பட்டது.
           
கல்லணை கட்ட கரிகாலன் கருத்தாவாக இருந்தான் என்பதை கரிகாலன் என்னும் சொல்லோடு ‘ஆல்’ உருபு சேர்ந்து உணர்த்துகிறது. எனவே இது கருத்தாப் பொருள் ஆகும்.

கருத்தாப் பொருள் இருவகைப்படும்.
1. ஏவுதற் கருத்தா
2. இயற்றுதற் கருத்தா
1.ஏவுதற் கருத்தா
கரிகாலனால் கல்லணை கட்டப்பட்டது.
         
   கல்லணையைக் கரிகாலன் தாமே கட்டவில்லை. உரிய பணியாட்களை ஏவி கல்லணையைக் கட்டி முடித்தான் என்பது இதன் பொருள். எனவே கரிகாலன் என்பது ‘ஏவுதற் கருத்தாட் ஆவார்.

2. இயற்றுதற் கருத்தா
தச்சரால் கட்டில் செய்யப்பட்டது
           
தச்சர் தாமே முயன்று கருவிகளைக் கொண்டு கட்டிலைச் செய்து முடித்துள்ளது விளங்குகிறது எனவே ‘தச்சர்’ இயற்றுதல் கருத்தா ஆவார்.
உடனிகழ்ச்சிப் பொருள்
           
உருபுகள், பெயர்ச்சொல்லின் பொருளை, உடன் நிகழ்வுப் பொருளாகக் காட்டினால் அது உடனிகழ்ச்சிப் பொருள் எனப்படும்.

கடிதத்தொடு பணமும் வந்தது.
           
இத்தொடரில் உள்ள ‘ஒடு’ என்னும் உருபு கடிதமும், பணமும் உடன் வந்ததை உணர்த்துகிறது.

தலைவரோடு தொண்டரும் வந்தனர்.
           
இத்தொடரில் உள்ள ‘ஓடு’ என்னும் உருபு இருவரும் இணைந்து வந்தனர் எனப் பொருள் தருகிறது. இவ்வாறு ஒடு, ஓடு என்னும் உருபுகள் பெயர்ச் சொல்லின் பொருளை உடன் நிகழ்வுப் பொருளாகக் காட்டுவதால் ‘உடனிகழ்ச்சிப் பொருள்’ எனப்படும்.
 
சொல்லுருபு
           
வேற்றுமை உருபுகள் தவிர, சில சொற்களும் வேற்றுமைக்கு உருபுகளாக அமைவதுண்டு. அதுவே ‘சொல்லுருபு’ என அழைக்கப்படுகின்றது.

ஊசி கொண்டு தைத்தான்.
இடி மின்னலுடன் மழை பெய்தது.
           
இத்தொடர்களில் ‘கொண்டு’, ‘உடன்’ என்பவை மூன்றாம் வேற்றுமையின் சொல்லுருபுகளாகும்.


4.நான்காம் வேற்றுமை

தாய் குழந்தைக்குப் பாலூட்டுகிறாள்.
           
தாய் என்னும் பெயர்ச்சொல் ‘கு` என்னும் உருபையேற்று, பொருள் வேறுபாட்டை உணர்த்தி வருகிறது. இதுவே நான்காம் வேற்றுமையாகும்.

நான்காம் வேற்றுமை உருபு ‘கு’
           

இது கோடற் பொருளை உணர்த்துகிறது. (கொடுப்பதை ஏற்றுக் கொள்வது ‘கோடல்’ ஆகும்)
           
நான்காம் வேற்றுமை உணர்த்தும் கோடற் பொருளானது கொடை, பகை, நேர்ச்சி, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை என ஏழு வகைப்படும்.

உதாரணம்
மன்னன் புலவருக்குப் பரிசளித்தான்  – கொடை

புகைத்தல் மனிதனுக்குப் பகை – பகை

பாரிக்கு நண்பர் கபிலர்  – நேர்ச்சி (நட்பு)

கண்ணனுக்கு அணிகலன் கண்ணோட்டம்  – தகுதி

தயிருக்குப் பால் வாங்கினான் – அதுவாதல்

நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்டனர்  – பொருட்டு

வளவனுக்குத் தங்கை வளர்மதி – முறை

சொல்லுருபுகள்
பணத்திற்காகத் தீயவை செய்யேல்
தலைவர் பொருட்டுச் செயலாளர் பேசினார்.
           
இவற்றில் ஆக. பொருட்டு என்பவை நான்காம் வேற்றுமைக்குரிய சொல்லுருபுகளாகும்.


5. ஐந்தாம் வேற்றுமை

பண்பாட்டில் சிறந்தது தமிழ்நாடு.
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை.
           
இத்தொடர்களில் பண்பாடு, ஒழுக்கம் என்னும் சொற்களின் இல், இன் என்னும் உருபுகள் சேர்ந்து பொருளை வேறுபடுத்துகின்றன. இது ஐந்தாம் வேற்றுமை ஆகும்.


ஐந்தாம் வேற்றுமை உருபுகள் – ‘இல்’, ‘இன்’


இவை நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது (காரணம்) என்னும் நான்கு பொருளை உணர்த்தி வரும்.

தலையின் இழிந்த மயிர் – நீங்கல்
கடலின் விரிந்த புகழுடையர் ஒப்பு
பழனியின் கிழக்கு மதுரை – எல்லை
வீணை வாசிப்பதில் வல்லவன் – ஏது.
சொல்லுருபுகள்
அன்பு ஊரிலிருந்து வந்தான்
வெண்ணிலா மேகத்தினின்று வெளிப்பட்டது.
மன்னனைவிடக் கற்றோரே சிறப்புடையர்.
தமிழைக் காட்டிலும் இனிமையான மொழியுண்டோ!
 
           இத்தொடர்களிலுள்ள இருந்து, நின்று, விட, காட்டிலும் என்பவை ஐந்தாம் வேற்றுமைக்குரிய சொல்லுருபுகளாகும்


6. ஆறாம் வேற்றுமை

மன்னது கை

எனாது கை        – அரிதாக வரும்

என கை

            இத்தொடர்களில் வரும் அது, ஆது, அ என்னும் உருபுகள் பெயர்ச்சொல்லைச் சேர்ந்து நின்று பொருள் வேறுபாட்டை உணர்த்துகின்றன. இது ஆறாம் வேற்றுமையாகும்.
          
  இது கிழமைப் பொருளில் வரும் – (கிழமை -உரிமை)


ஆறாம் வேற்றுமை உருபுகள் – அது, ஆது, அ


சொல்லுருபுகள்
நண்பருடைய இல்லம்.
ஆசிரியருடைய இருக்கை.
           
இத்தொடர்களிலுள்ள உடைய என்பது ஆறாம் வேற்றுமைக்குரிய செல்லுருபாகும்.


7. ஏழாம் வேற்றுமை

கிளையின்கண் அமர்ந்துள்ள பறவை.
பெட்டிக்குள் பணம் இருக்கிறது.
பிறரிடம் பகை கொள்ளாதே.
தலைமேலுள்ள சுமை.
வீட்டில் சோலை உள்ளது.
           
மேற்கண்ட தொடர்களில் கிளை, பெட்டி, மாணவர்கள், தலை வீடு போன்ற பெயர்ச்சொற்களுடன் கண், உள், இடம், மேல், இல் என்னும் உருபுகள் சேர்ந்து பொருள் வேறுபாட்டைத் தருகின்றன. இதுவே ஏழாம் வேற்றுமை ஆகும்.
           

ஏழாம் வேற்றுமை உருபுகள்: இல், சண், இடம், உள், மேல் இந்த ஏழாம் வேற்றுமை இடப்பொருளை உணர்த்தும்.
          

  ஐந்தாம் வேற்றுமையில் ‘இல்’ ஒப்புப் பொருளிலும் ஏதுப் பொருளிலும் வரும். ஏழாம் வேற்றுமையில் இடப் பொருளில் மட்டும் வரும். ‘இல்’ உருபை இட முடிவைக் கொண்டு வேற்றுமைப் பொருளை அறிய வேண்டும்.

(எ.கா.) பணம் பெட்டியில் இருக்கிறது – ஏழாம் வேற்றுமை.
  
          பணத்தைப் பெட்டியிலிருந்து எடுத்தான் – நீங்கல் பொருள் – ஐந்தாம் வேற்றுமை

8. எட்டாம் வேற்றுமை
          

  பெயர்ச்சொல் விளித்தல் பொருளில் வேறுபட்டு வருவது எட்டாம் வேற்றுமை ஆகும் இதனை ‘விளி வேற்றுமை’ என்றும் அழைப்பர்.(விளித்தல் – அழைத்தல்)
                                      கண்ணா வா!
           
இத்தொடரில் ‘கண்ணன்’ என்ற சொல்லின் இறுதி எழுத்து கெட்டு அயல் (முந்தைய) எழுத்து நீண்டு, அழைத்தல் பொருளைத் தருகிறது. எனவே இது எட்டாம் வேற்றுமை ஆகும்.

படர்க்கையில் உள்ள பொருளை முன்னிலைப் பொருளாக்கி அழைக்க இவ்வேற்றுமை பயன்படுகிறது.


எட்டாம் வேற்றுமைக்கு உருபு கிடையாது.

வேற்றுமை உருபுகளின் வகைகள்
   

                                                                  உருபுகள்                                      வேற்றுமை

குமரன் பாடினான்                    உருபு இல்லை              முதல் வேற்றுமை (எழுவாய்)

குமரனைக் கண்டேன்                             ஐ                        இரண்டாம் வேற்றுமை

குமரனால் முடியும்                                   ஆல்                  மூன்றாம் வேற்றுமை

குமரனுக்குக் கொடு                                கு                       நான்காம் வேற்றுமை

குமரனின் நல்லவன்                                இன்                 ஐந்தாம் வேற்றுமை

குமரனது புத்தகம்                                    அது                  ஆறாம் வேற்றுமை
குமரன்
கண் உள்ளது                                             கண்                   ஏழாம் வேற்றுமை

குமரா! வா!                                 தனி உருபு இல்லை    எட்டாம் வேற்றுமை

 

 

எனக்குள் ஒருவன்|சிறுகதை |முனைவர் க.லெனின்

எனக்குள் ஒருவன் - சிறுகதை
        யாருமில்லாத சாலையில் வேகமாய்ப் போய்க்கொண்டிருந்தது அந்தக் கார். எதிரே வந்த லாரியின் மீது மோதிய விபத்தில் இரண்டு குட்டிக்கரணம் போட்டு தலைக்கீழாய் மல்லாந்து விழுந்தது. காருக்குள் இருந்த கணவனும் மனைவியும் இரத்த வெள்ளத்தில் அவ்விடத்திலேயே உயிரை விட்டனர். லாரிக்காரன் பயம்கொண்டு வண்டியைத் திருப்பி எப்படியாவது தப்பித்துவிட வேண்டுமென வேகமாக ஓட்டினான். அந்தப் பக்கமாய் அப்போது வேறொரு கார் வந்து கொண்டிருந்தது. விபத்து நடந்த காருக்குப் பக்கத்தில் போய் வந்து கொண்டிருந்த கார் நிறுத்தப்பட்டது. அமைதியான சூழ்நிலை. அழுகுரல் இல்லை. பேச்சுக்குரல் இல்லை. சாலையில் பிற போக்குவரத்தும் இல்லை. அப்போது விழுந்து கிடந்த காருக்குள் பின்சீட்டிலிருந்து ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது.  நின்று கொண்டிருந்த காரில் இருந்து இறங்கிய கணவனும் மனைவியும் அடிப்பட்ட காரில் இருந்து அந்த ஆண்குழந்தையைத் தூக்கிக் கொண்டனர். அந்தக் காரும் வேகமாய் வந்த திசையை நோக்கி சென்று கொண்டிருந்தது.

“என்னங்க… நமக்கு ரொம்ப வருசமா குழந்தை இல்ல. இந்தக் குழந்தைய நம்ம குழந்தையா நினைச்சி வளக்கலாங்க…” என்றாள் மனைவி.

”ஆமாம்! அந்தக் கார்ல வந்த கணவனும் மனைவியும் செத்துப்போயிட்டாங்க… சொந்தகாரங்க இருந்தாலும் இனிமேல் இவன் அநாதைதான். அவன நாம நல்லபடியா படிக்க வச்சு ஆளாக்கிடலாம். அதுவும் ஆண் குழந்தை வேற” என்றான் கணவன். அதன்பிறகு அந்தக் கார் எந்தத் திசையில் சென்றது என்றே தெரியவில்லை.

கொஞ்ச நேரத்தில் விபத்து நடந்த இடத்தில் கூட்டம் கூடியது. போலிஸ்சும் வந்தார்கள். ஆம்புலன்சும் வந்திருந்தது. பணியாட்கள் காருக்குள் மாட்டிக்கொண்டிருந்த ஒவ்வொருவராய் வெளியே எடுத்துக்கொண்டிருந்தனர். கணவனையும் மனைவியையும் வெளியே எடுத்தார்கள். மனைவி அமர்ந்திருந்த சீட்டின் கீழ்ப்பகுதியில் ஒரு குழந்தை மௌனாமாய்க் கண்ணை உருட்டி உருட்டி பார்த்துக்கொண்டிருந்தது.  பணியாள் ஒருவன் டக்கென்று குழந்தையைத் தூக்கிக்கொண்டான்.

“சார் இந்தக் குழந்தை மட்டும் உயிரோட இருக்கு!“ என்று போலிஸிடம் சொன்னான் அவன்.

சுற்றியிருந்தவர்கள் அனைவரும் அந்தக்குழந்தையை நோட்டமிட்டனர். குழந்தை ஸ்டேஷனுக்குத் தூக்கி வரப்பட்டது. இறந்தவர்களை எரித்தனர். உறவுகள் ஒவ்வொருவராய் பிரிந்து போயினர்.  பெண் குழந்தை அல்லவா! யார் கொண்டு போய் வயிற்றில் நெருப்பை சுமப்பது? என்றுகூட நினைத்திருக்கலாம். கடைசியில் கான்ஸ்டபில் கைக்கு வந்தது அந்தக் குழந்தை. அவர் நேராகக்  கிருஷ்த்துவ ஆசிரமத்திற்குக் கொண்டு சென்றார். அந்த ஆசிரமத்திலே குழந்தை தேவகி வளர்ந்தாள்! படித்தாள்! நல்லவையைக் கற்றுக் கொண்டாள்! இன்று பெரிய மனுசியாகவும் ஆகிவிட்டாள்.

தேவகி ரொம்பவும் கூச்ச சுபாவம் உடையவளாக இருந்தாள். சிறுவயது முதலே மனதில் பலவிதமான எண்ணங்களும் உணர்ச்சிகளும் தோன்றும். அப்பொழுதெல்லாம் கத்துவாள். அழுவாள். ஃபாதர்தான் ஆறுதல் சொல்லுவார். தாயையும் தந்தையையும் பறிக்கொடுத்தவள். அந்தவொரு பாதிப்புதான் குழந்தையாக இருந்தாலும் அவளுடைய மனதை ஆட்டுவிக்கிறது என்று எண்ணினார். ஒவ்வொரு நாளும் அதுவே ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்து இன்று பிரச்சனையாக வந்து நிற்கிறது.

இரவு நேரங்களில் கெட்ட கெட்ட கனவுகள் வேறு தூங்க விடாமல் தேவகியைத் துரத்தும். ஆண் நண்பர்களுடன் பேசுவது போலவும் பழகுவது போலவும் தோன்றும். அதுவும் அதுவரை பார்க்காத முகங்களும் அவர்கள் பேசிய உணர்ச்சி மிகு வார்த்தைகள்கூட காலையில் எழுந்தவுடன் தெவகிக்கு நன்றாக நினைவிருக்கும்.  ஏதோ தான்தான் அந்த நபரிடம் சென்று பேசிவிட்டு வந்திருப்பதை போல் உணர்வாள். எத்தனையோ முறை யோசித்து யோசித்துப் பார்ப்பாள்.  இந்த முகங்கள் எல்லாம் உண்மையாகவே இருக்கின்றனவா? எதற்காக எனக்கு இவ்வாறு தோன்றுகிறது? அவர்கள் பேசும் வார்த்தைகள் கூட உண்மையாலும் என்னிடமே பேசுவது போல்லல்வா உள்ளது. யார் இவர்கள்? என்னிடம் என்ன சொல்ல வருகிறார்கள்? பல நேரங்களில் குழம்பிப்போய் அப்படியே தூங்கியும் விடுவாள்.

தனக்குள்ள ஏற்பட்ட பிரச்சனையை ஃபாதரிடம் சென்று சொல்லலாம் என்று நினைத்திருந்தாள் தேவகி. அவளுடைய அப்பா, அம்மா, கடவுள் எல்லாமே ஃபாதர்தான். ஒருவேளை தனக்கு பைத்தியம் என்று மருத்துவமனையில் சேர்த்து விட்டால் என்ன செய்வது? வாழ்க்கையே நிர்மூலமாகி விடுமே என்று பயந்தாள். அதனால் இந்த விஷியத்தை யாரிடமும் சொல்லாமல் மறைத்தாள்.  இப்பொழுதெல்லாம் முடிந்தவரை இரவு நேரங்களில் கத்தாமல் தனக்குள்ளாகவே ஏற்படும் அந்த மிருகத்தை அடக்கி ஆள பழகிக்கொண்டாள்.

ஆனாலும் வயதுக்கு வந்த பிறகு இன்னும் சில உணர்ச்சிகளும் எண்ணங்களும் தேவகிக்கு ஏற்பட்டன. அறையில் தனியாக இருக்கும்போது விளையாட்டாக ஒருசில நேரங்களில் கண்ணாடியைப் பார்த்து ஆணைப் போல நெஞ்சை நிமிர்த்தி நடக்கவும் பேசவும் செய்வாள். பின்பு வாய்விட்டு சிரிப்பாள். ஏன் நாம் இவ்வாறு செய்கிறோம் என்று தன்னைத்தானே நொந்தும் கொள்வாள்? இனிமேல் இவ்வாறு செய்யக்கூடாது என்று மனதால் எண்ணினாள்.

கொஞ்ச நாளாகவே தன்னுடைய அறைத்தோழிகளுடன்கூட தொட்டுப் பேசுவதை நிறுத்திக்கொண்டாள் தேவகி. ஒரே அறையில் இருக்கும்பொழுது சக தோழி துணி மாற்றும்போதும் கண்களை இறுக மூடிக்கொள்வாள்.இப்பொழுதெல்லாம் தேவகிக்குப் பெண்கள் மேலும் அதித ஈர்ப்பு ஏற்படுவதை உணர முடிந்தது. பெண்களின் ஆடை விலகும்போது தன்னையும் அறியாமலும் தான் பெண்தான் என்று உணராமலும் கண்கள் அலைமோதியது.      பல நேரங்களில் தான் ஒருவேளை ஆணாக இருப்போமோ என்ற பயமும் கூட அவளுக்கு இருந்தது. தன்னுடைய மனம் சக தோழிகளுக்குத் தெரிந்து விட்டால் என்ன செய்வது என்று மிகவும் பயந்தாள். இதனால் அவளை அவளே தனிமைப்படுத்திக் கொண்டாள்.

படித்த படிப்பிற்கு ஒரு நல்ல வேலையும் தேவகிக்குக்  கிடைத்து விட்டது. தன்னுடைய முதல்மாத சம்பளத்தை அப்படியே எடுத்து வந்து ஃபாதரிடம் கொடுத்தாள்.

“இது நீ செய்த வேலைக்கான ஊதியம். இந்தப் பணத்த நீ  உன் விருப்பம் போல் செலவு செய்” என்றார் ஃபாதர்

“இவ்வளவு பணத்த வச்சி நான் என்ன பன்றது. இந்த ஆசிரமத்துல என்னைப் போல அநாதை குழந்தைகளுக்கு உதவியா நினைச்சி வச்சிக்கோங்க ஃபாதர்” என்றாள் தேவகி.

“அது தப்புமா! நாங்க ஒரு குழந்தைய வளர்த்துப் படிக்க வச்சி ஆளாக்கி விடுறோம். அவ்வளவுதான் எங்க வேலை. அவன் வேலைக்குப் போயி சம்பாரிச்சு கல்யாணம் பண்ணி குடும்பத்துக்குப் போவ ஏதோ இந்த ஆசிரமத்துக்குக் கொடுத்தா போதும். அவனால முடிஞ்சது. அதுவும் கட்டாயம் இல்ல. இங்க வளர்ர குழந்தைங்க நல்ல நிலைமையில இருந்தா அதுபோதும்” என்றார் ஃபாதர்.

“எனகென்ன கல்யாணமா ஆயிடுச்சி! அதுவெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். இப்ப இந்தப் பணத்த வச்சிக்கொங்க. முதன்முதலா என்னை வளர்த்த ஆசிரமத்துக்கு நான் செய்யுற உதவி. வேண்டாம் சொல்லி என்னை பிரிச்சிராதீங்க ஃபாதர்” என்றாள் தேவகி. வேறுவழியில்லாமல் பணத்தை வாங்கிக் கொண்டார் ஃபாதர். தேவகிக்கும் ரொம்ப சந்தோசம்தான்.

ஃபாதரைப் பார்த்துவிட்டு அறைக்கு வந்தவள் ஒருகனம் திகைத்துப் போய் நின்று விட்டாள். தன்னுடைய அறைத்தோழி  ஒருத்தி அரை நிர்வானத்தில் தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியாகிறாள். எவ்வளவுதான் தன்னை கட்டுப்படுத்தியும் அந்தப் பெண்ணை ரசிக்காமல் தேவகிக்கு இருக்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் மனமும் கண்களும் தூங்கிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணைப் பார்க்கத் தூண்டியது. இதற்குமேல் இங்கே இருந்தால் ஏதாவது விபரீதம் நடந்து விடக்கூடும் என்று நினைத்து அறையை விட்டு வெளியேறுகிறாள் தேவகி.

மழை கொட்டோ கொட்டோவென்று கொட்டியது. மொட்டை மாடியில் மழையில் நனைந்தபடி அழுத கண்ணீரோடு நின்று கொண்டிருந்தாள் தேவகி. கண்களிலிருந்து வழிந்த கண்ணீரானது மழைத்துளிகளில் கலந்து வெறுமையாய் காரணமின்றி வழிந்தோடியது. அம்மாவின் தேவை இப்போதுதான் தேவகிக்கு புரிந்தது. இதுவரை  இப்படியொரு நினைப்பே இல்லாமல் இருந்தவளுக்கு அம்மா இருந்தால் கட்டிப்பிடித்து அழுவலாம் என்றிருந்தது.

அடுத்தநாள் காலையில் ஒரு சைக்காஸிஸ்ட் பெண் டாக்டரைப் பார்க்கச் சென்றிருந்தாள் தேவகி. டாக்டரிடம் எதையும் மறைக்காமல் முழுமையாக நடந்த அனைத்தையும் சொன்னாள்.

டாக்டர் சிரித்துக்கொண்டே, “நீ ஆணாக இருக்க விரும்புகிறாயா? அல்லது பெண்ணாக இருக்க விரும்புகிறாயா?”  என்றார்.

பட்டென்று ”நான் பெண்ணாக இருக்கவே விரும்புகிறேன். இன்னமும் என்னை பெண்ணென்றே உணர்கிறேன். பெண்ணாகவே வாழவும் ஆசைப்படுகிறேன்” என்றாள் தேவகி.

டாக்டர் மீண்டும் சிரிக்கின்றார். தேவகியை நன்கு பரிசோதித்து விட்டு ”நீ முழுமையான பெண்தான். ஆனால் உன்னுடைய மனசில் ஏன் அவ்வாறு தோன்றுகிறது என்று மட்டும் பரிசோதனை செய்ய வேண்டும். ஒருவேளை நீ திருநம்பியாகக் கூட இருக்கலாம்” என்றார்.

“நிச்சயமாக இல்லை டாக்டர். நான் திருநம்பியாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் என்னில் நான் முழுமையான பெண்மையை உணர்கிறேன். அதுமட்டும் இல்லாமல் அவ்வவ்போதுதான் ஆண்தன்மை என்னிடம் வெளிப்பட்டு நிற்கிறது” என்கிறாள் தேவகி.

கிட்டத்தட்ட மூன்று மணித்துளிகளுக்கும் மேலாகத் தேவகிக்குப் பரிசோதனை நடைபெற்றது. தேவகியின் ஜீன்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதையும் சில ஜீன்கள் தனித்து இருப்பதையும் கண்டறிகிறார் டாக்டர். தனித்து விடப்பட்ட ஜீன்களை வெளியேற்றினால்தான் அவளின் முழுமையான பெண்மையைக் கொண்டு வரமுடியும் என்கிறார்.  

டாக்டர் சொன்னது போல தன்னால் அப்படியொரு சிகிச்சையை செய்துகொள்ள முடியுமா? அதற்கு ஆகின்ற செலவினை எவ்வாறு சமாளிப்பது? ஃபாதரிடம் இதுபற்றி சொல்லலாமா? தேவகி மனக்குழப்பத்துடன் மருத்துவமனையை விட்டு வெளியே வருகிறாள்.  தனக்கு முன்னால் வந்த பேருந்தில் ஏறி ஒரு பெண் மட்டும் அமர்ந்திருக்கும் சீட்டில் உட்காருகிறாள்.  கொஞ்சதூர பயணம். இரண்டு பெண்களும் ஒருவரை ஒருவர் பாத்துக் கொள்கிறார்கள். தேவகிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி!

அடிக்கடி நினைவில் வந்த முகம். இந்தப் பெண்ணிடம் நிறைய பேசியதாகவும் பழகியதாகவும் தோன்றுகின்றது. இது எப்படி சாத்தியம்? ஓட்டுநர் போட்ட பிரேக்கில் இரண்டு தோள்களும் உரசிக்கொண்டன. ஏதோ பலநாள் பழகிய மாதிரி உணர்வு தேவகிக்கு. மீண்டும் தானாக உரசுகின்ற மாதிரி வேண்டுமென்றே அப்பெண்ணின் உடலைத் தொடுகிறாள். சத்தியமாக இந்த பெண்ணோடு நான் உறவாடியிருக்கிறேன். தேவகியின் மூளையின் வேகம் படுவேகமாய் சுற்றியது.
“என்னங்க… நீங்க யாரு? என்ன இதுக்கு முன்னால எங்கையாவது பாத்திருக்கீங்களா?” என்றாள் தேவகி.

“எதுக்கு கேட்குறீங்க… நான் உங்கள இப்பதான் முதல்முறையா பாக்குறன்” என்றாள் அப்பெண்.

”நல்லா யோசனை பண்ணி பாருங்க. உங்களுக்கும் எனக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு” என்றாள் தேவகி.

உதட்டை சுழித்தவாறு ஜன்னல் பக்கமாய் திரும்பிக்கொண்டாள் அப்பெண்.

“என்னை கல்யாணம் பண்ணிக்கோ… ஒரு தாய் எப்படி குழந்தைய பாத்துப்பாங்களோ அதுபோல உன்னை கடைசிவரை பாத்துப்பேன். ஐ லவ் மை சுதா…” என்றாள் தேவகி.

ஜன்னல் பக்கமாய் பார்த்துக் கொண்டிருந்த அப்பெண், தேவகி சொன்னதைக் கேட்டு பதறித்தான் போனாள். ”என்னுடைய கணவன் என்னிடம் முதன்முதலாகக் காதலைச் சொன்னதை அப்படியே பெயரோடு சேர்த்துச் சொல்கிறாயே.. நீங்கள் யார்? என்றாள் சுதா.

“நான் சொன்னது சரியா? அப்படியானால் உன்னுடைய கணவனை நான் பார்க்க வேண்டும்” என்கிறாள் தேவகி.

இருவரும் வீட்டை நோக்கி பயணிக்கிறார்கள். அங்கு மதுராவை பார்க்கிறாள். தன்னுடைய உடன்பிறந்த அண்ணன்தான் மதுரா என்று எண்ணுகிறாள். நாம் இருவரும் ஒட்டிப்பிறந்த உடன்பிறப்புகள். அதனால்தான் நீ செய்கின்ற பார்க்கின்ற பழகுகின்ற அத்தனை நபரையும் நானும் பார்த்தேன் என்கிறாள் தேவகி. தேவகி எவ்வாறு கஷ்டப்பட்டாலோ அதே போல மதுராவும் தன்னுள் பெண்மையை அவ்வவ்போது உணர்ந்துதான் இருந்தான்.
 
ஓடிச்சென்று அண்ணன் மதுராவை கட்டிக்கொண்டாள். தனக்கொரு சொந்தம் கிடைத்து விட்டதை எண்ணி தேம்பி தேம்பி அழுதாள். சுதா இருவரையும் பார்த்து மகிழ்ச்சிப் பொங்கினாள். அண்ணனைப் பார்த்த பிறகு தனக்கு இனி எந்தவொரு சிகிச்சையும் தேவையில்லை. என்னுடைய உடன்பிறந்தவனின் ஜீனை என்னுலிருந்து எடுக்க நான் அனுமதிக்க மாட்டேன் என்று முடிவெடுத்துக்கொண்டாள் தேவகி.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

முதன்மை ஆசிரியர்

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்

அகப்பொருள் : முதல், உரி, கருப்பொருட்களின் விளக்கம்

அகப்பொருள் முதல், உரி கருப்பொருட்களின் விளக்கம்
ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் இல்லறத்தின் வாயிலாக இணைப்பது அகத்திணை எனப்படும். நல்லொழுக்கங்களால் சிறந்த இவ்விருவரும் நன்மக்களைப் பெற்றும் மனையறம் காத்தும் உலக நலத்திற்கு உயர்த்துவதே அகத்திணை எனக் கொள்ளலாம். நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பர். கணவன் மனைவி என்போர் மக்களைப் பெற்று பேரின்பம் அடைபவரையே இறைவனின் பாதத்தை அடையமுடியும். அதுவே உலகியல் வாழ்வாகும். தொல்காப்பியர் முதற்கொண்டு பின்வந்த இலக்கண ஆசிரியர்கள் அனைவரும் அன்பால் இணையப்பட்ட உறவையே சொல்லி செல்கின்றனர். இலக்கண நூலாசிரியர்கள் அகத்திணையை மூன்று வகைகளாகப் பிரித்துக்கொண்டார்கள். அவை,
ஒரு பெரும்பொழுது என்பது வருடத்தில் இரண்டு மாதங்களாகக் கொள்ளலாம்.

முல்லைப்பாட்டில் தமிழர் பண்பாடு |ஆய்வுக்கட்டுரை|முனைவர் இரா.வனிதாமணி

முல்லைப்பாட்டில் தமிழா் பண்பாடு - வனிதாமணி
முன்னுரை    
               
         தமிழரின் பண்டைய வரலாற்றையும், பண்பாட்டையும் அறிந்துக் கொள்ள நமக்கு பயன்படுவது தமிழ்மக்களின் உயிர்நாடியாக விளங்கக்கூடிய தமிழ்மொழி ஆகும். எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும், பதினெண் கீழ்க்கணக்கும், சிலம்பும், மேகலையும், பழந்தமிழரின் சால்பை விளக்கி காட்டுகின்றன. தாம் வாழும் நிலத்தின் இயல்புக்கு ஏற்றவாறு மக்களின் வாழ்க்கை முறையும், பண்பாடும் அமையும் என்பது பண்டைய தமிழா்களின் சிறப்பான கொள்கை ஆகும். ”பண்பாடு என்பது திருந்திய ஒழுக்கம், நாகரிகம் என்பது திருந்திய வாழ்க்கை முன்னது “அகக்கூறு“ பின்னது புறக்கூறு, மேலும் நாகரிகம் சேர்ந்த பண்பாடு” என்பர்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்”
               
என தனக்கென முயலாது பிறர்க்கென வாழும் பண்பாளரால் தான் உலகம் நிலைபெற்றிருக்கிறது.

முல்லைப்பாட்டு ஒரு பார்வை
               
      தமிழகத்தை நில அடிப்படையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப்பாகுபடுத்திய நம் முன்னோர்கள் அந்நிலத்தின் வழி, அந்நில மக்களின் பண்பாட்டை வளர்த்துள்ளனர்.

“பண்பெனபடுவது பாடறிந் தொழுகல்”    (கலித்.133)
               
     கூறுகின்றது. பத்துப்பாட்டில் நான்கு ஆற்றுப்படைக் 103 அடிகளால் ஆன இப்பாட்டு அளவால் மிகச் சிறியது பாடியவர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் ஆவார். சங்க இலக்கியத் தொகை நூல்களுள் இவர் பாடியதாக வேறு எந்தப் பாடலும் காணப்படவில்லை. முல்லைப்பாட்டு, முல்லைத்திணையின் இயல்புகளை மட்டுமல்ல”

“வஞ்சி தானே முல்லையது புறனே”  (தொல் – புறந்-61)
               
     எனக் கூறுவதோடு வஞ்சித்திணை இயல்புகளையும் இயைத்துப் பாடுகின்றது. இவ்வகையி்ல் அகத்திணை ஒன்றினை முதன்மையாகக் கொண்டு, அதற்கு இயைபான புறத்திணையையும் சேர்த்து பாடும் ஓர் அரிய நூலாக முல்லைப்பாட்டு விளங்குகின்றது புறத்திணையான வஞ்சி, முல்லைத்திணையோடு நொடுக்கப்பட்ட போதிலும்,

“மக்கள் நுதலிய அகன்ஐந் திணையும்           
                                             சுட்டி ஒருவா்ப் பெயா்கொளப் பெறாஅா்”  (தொல்.அகம்.நூ.57)
               
       என்னும் அகநூல் மரபைப் பின்பற்றி, பாட்டுடைத்தலைவனின் இயற்பெயரைச் சுட்டாகக் கூறாத அகப்பொருள் சார்ந்த இலக்கியமாக விளங்குகிறது. முல்லைத்திணைக்கு நிலம் காடு வஞ்சித்திணையின் நிலமும் காடேயாகும். இவ்வாறாக பல சிறப்புகளை உடைய முல்லைப்பாட்டில் தமிழா் பண்பாடானது சிறப்பான முறையில் அமைந்துள்ளன.

முல்லைப்பாட்டில் தமிழர் பண்பாடு
             
   மனித இனத்தைப் பிற உயிரினங்களிலிருந்து வேறுபடுத்தி தமக்குரிய செம்மையையும், உயர்வையும் எடுத்துக்காட்டுவது பண்பாடாகும். மேலும் ”உரைறுறந்த வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகின்ற உள்ளப்பாங்கின் வெளிப்பாட்டையெ பண்பாடு, என்கிறோம்.

1.கற்பு நெறி
2.விரிச்சி
3.விளக்கு ஏற்றிடல்
4.காவல் காத்தல்
5.நாழிகை பார்த்தல்
ஆகியவற்றை பற்றிக் காண்போம்.

1.கற்பு நெறி           
         மனித வாழ்வில் ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் காதலுக்கும், கற்பிற்கும் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். தலைவனுக்குத் தலைவியை அவளுடைய பெற்றோர்கள் உரிய சடங்குகளோடு திருமணம் புரிந்து கொடுப்பது கற்பு ஆகும்.
           
“செய்ர்நீர் கற்பிற் சேயிழை கணவ” (புறம்)
               
       கற்புடைமை கணவனின் புகழை மிருவந்நிம் என புற நானூறுப்பாடல் கூறுகின்றன. இதன் மூலம் மனைவியின் தூய்மையான கற்பு அவளுடைய தலைசிறந்த பண்பாடாகப் போற்றப்பட்டது. மனைவியின் கற்பு, கணவன் புகழை மென்மேலும் சிறப்பிக்கும் என்பதாகும்.
           
“முல்லை சான்ற கற்பு” 
        என்று கற்புடன் தொடா்புபடுத்திப் பேசப்படுகின்றது. போர் காரணமாகவோ அல்லது  பொருள் தேடல் காரணமாகவோ பிரிந்து சென்ற தலைவன் காலகாலத் தொடக்கத்திற்குள் வந்துவிடுவதாகக் கூறிப்பிரிவான் அவ்வாறு அவன் வரும்வரை ஆற்றியிருந்தல் தலைவியின் கடமை ஆகும். இதுவே முல்லைத்திணை என்று சிறப்பாகப் போற்றப்படுகின்றது. தலைவனது பிரிவினால் தலைவி துன்பப்படுகிறாள். பின்பனிக் காலத்தில் பிரிந்து செல்வம் தலைவன் கார் காலத்தில் திரும்பி வருவது இயல்பு. அதுவரை ஆற்றியிருத்தல் தலைவியின் கடமை ஆகும். தலைவன் ”ஆற்றியிரு” எனக் கற்பித்த சொல்லைக் கடப்பதுது கற்புநெறிக்கு மாறானது என்பதை எல்லாம் நினைத்து தலைவி ஆற்றியிருக்கின்றாள் இதனை,
“இன்துயில் வதியுறற் காணாள் துயா் உழந்து
                                 நெஞ்சு ஆற்றுப் படுத்த நிறைநபு புலம்பொடு”  (முல்.80)
               
         என்ற வரிகளின் மூலம் அறியலாம். மேலும் நம் தமிழா் பண்பாட்டில் கற்பு என்பது மிகவும் மிக்கியமான ஒன்றாக போற்றப்படுகின்றது.

2.விரிச்சி
               
          விரிச்சி என்பது நற்சொல்லாகும். இது சங்ககாலப் பழக்கவழக்கங்களுள் ஒன்றாகும். பழந்தமிழ் மக்களிடம் நிலவிய ஒரு நம்பிக்கை ஆகும். தாம் விரும்பி  மேற்கொள்ளும் செயல் நன்கு முடிதலை விரும்பி, அதற்கான நன்னிமிந்தம் பெறும் வகையில், ஊரின் புறந்தே, படியில் நெல்லும், மலரும் கொண்டு சென்று தெய்வத்தை வழிபட்டு நிற்பா். அப்பக்கம் செல்வோர் கூறும் சொல் தமக்கு ஏற்றதாக இருப்பின் தாம் மேற்கொள்ளும் செயல் இனிது நிறைவேறும் என நினைப்பது அக்கால மக்களின் நம்பிக்கையை உணா்த்துவதாகும்.

நெல்லொடு”
நாழி கொண்ட நறுவி முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய் கைதொழுது
பெருமுது பெண்டிர், விரிச்சி நிற்ப” (முல் -10)
என்ற பாடலின் மூலம் அறிய முடிகிறது.
 
“ஞால மூன்றடித்தாய முதல்வன்”
என்ற வாமன அவதாரச் செய்தி மூலம் அறியலாம்.

“மூவுலாகும் ஈரடியால் முறைநிரம்பா வகை
முடியத்தாவிய சேவடி”  (சிலப் 17-35)

“காலை யரும்பிப் பகலெல்லாம் போராகி
மாலை மலருமிந்நோய்” (குறள்1227)

       என்ற குறளின் மூலம் நாம் ஒப்பிட்டு பார்க்க முடிகின்றது. இவ்வாறாக, விரிச்சி கேட்பது என்ற நம்பிக்கை நம் பண்பாடாக விளங்குகின்றன.
3.விளக்கு ஏற்றிடல்           
       நம்முடைய வாழ்வில் விளக்கு ஏற்றுதல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். நம்மிடையே இருக்கும் எதிர்மறை எண்ணங்களை நீக்கும் தன்மை விளக்கிற்கு உண்டு. விளக்கு இல்லா வீடு பொழிவிழந்துக் காணப்படும் அவ்வகையிலே” அரசனுக்கென அமைந்த பாசறையிலே திண்மையான பிடியமைந்த வாளினைக் கச்சோடு சோ்த்துக்கட்டிய மகளிர், பாவை விளக்கில் நீண்ட திரியை இட்டு, நெய் வார்க்கும் குழாயால் நெய் வார்த்து விளக்கேற்றினா்.இதனை,
விரவரிக் கச்சின் பூண்ட மங்கையர்
நெய்உமிழ் கரையர் நெடுந்திரிக் கொளீ
                                                    கைஅமை விளக்கம் நந்துதொறும் மாட்ட (முல் – 497)
       என்பதாகும்.

4.காவல் காத்தல்
               
           காவல் என்பது ஒரு முக்கிய சொல்லாக இருந்து வருகின்றது. பண்டைய காலம் முதலே காவல் காத்தல் ஒரு தொழிலாகவும் இருந்து வந்தது. பகைவர்களிடமிருந்து தம்முடைய உடைமைகளை பாதுகாப்பது என்பது மிகவும் முக்கியமானதாகக் கருதப்பட்டது. அரசனுக்கு காவலராக இருக்கும் மெய் காப்பாளா்கள் மன்னனைச் சூழ்ந்து காவலராக நின்றனா் என்பதை,

“துகில் முடித்துப் போர்த்த தூங்கல் ஓங்குநடைப்
பெருமூ தாளர் ஏமம் சூழ”
      (முல்-50)

என்ற பாடலின் மூலம் அறியலாம்.

5.நாழிகை பார்த்தல்
     
           நாழிகை என்ற சொல், அக்கால மக்களிடையே புழக்கத்தில் இருந்து வந்தது. நாழிகை கணக்கா் என்பவா் தனியே இருந்தனா். அவா்கள் நாழிகையை அளர்து இவ்வளவு என்று அறியும் தொழிலனை செய்தனர். மேலும், கடல் சூழ்ந்த உலகத்தே பகைவரை வெல்லச் செல்கின்றவனே! உன்னுடைய நாழிகை வட்டிலிற்சென்ற நாழிகை இத்துணை காண்” என்று மன்னனுக்கு அறிவிக்கின்றனர், இதனை,

“பொழுதுஅளர்து அறியும், பொய்யா மாக்கள்
தொழுதுகாண் கையா், தோன்ற வாழ்த்தி
எறிநீா் வையகம் வெரீஇய செல்வோம் நின்
குறுநீர்க் கின்னல் இனைத்து”  (முல்-55)

     என்பவற்றின் மூலம் அறிய முடிகிறது. இவ்வாறாக, முல்லைப்பாட்டில் தமிழர் பண்பாடு இடம்பெற்றுள்ளன.

முடிவுரை
                 
       பண்டைய தமிழ் மக்கள் அளவற்ற இன்பத்துடன் இவ்வாழ்வில் ஈடுபட்டனர். தொழில் புரிவதை தலைவன் நம் உயிராக மதித்தனர். மகளிர் நம் கணவரைத் தம் உயிருக்கு நேராகக் கருதி வாழ்ந்தனா். மேலும், உணவு, உடை, அணிகலன்கள், உறையுள், வாணிகம், கலைகள், கல்வி, மொழி, நிலங்கள், விளையாட்டுகள், அரசியல் ஆகிய அணைத்திலும் சிறந்து விளங்கியும், பின்பற்றியும் வாழ்ந்து வந்தனா். முல்லைப்பாட்டில் தமிழா் பண்பாடு சிறப்புடன் வீற்றிருந்தது. இப்பண்பாட்டு முறையை நாமும் பின்பற்றி வாழ்ந்தால் நல்ல சிறப்பானதொரு வாழ்வை வாழலாம் என்பதில் ஐயமில்லை.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் இரா.வனிதாமணி,

உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,

குயின்ஸ் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி,

புனல்குளம், புதுக்கோட்டை 

 

அணி இலக்கணம் – அணிகளின் வகைகள் (தண்டியலங்காரம் முன்வைத்து)

அணி இலக்கணம் - அணிகளின் வகைகள்
அணி இலக்கணம் – அணிகளின் வகைகள் (தண்டியலங்காரம் முன்வைத்து)

திணைமாலை நூற்றைம்பதில் தோழி கூற்று|முனைவர் இரா. அருணா| ஆய்வுக்கட்டுரை

திணைமாலை நூற்றைம்பதில் தோழி கூற்று
ஆய்வுச் சுருக்கம்
   சங்க இலக்கியங்களில் அகப்பாடல்களில் தோழி கூற்று முக்கியப் பங்கு வகிக்கிறது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான திணைமாலை நூற்றைம்பதில் தோழி கூற்றின் பங்கு பற்றி இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியத்தில் தோழி கூற்றுப் பற்றிக் கூறப்பட்டுள்ளதை இங்கு விவரிக்கப்படுகிறது. பதினெண்மேற்கணக்கு நூல்களில் அகம் ஐந்திணையில் தோழி கூற்று எவ்வகையில் அமைந்துள்ளது என்பது பற்றி விளக்கப்பட்டுள்ளது. திணைமாலை நூற்றைம்பதில் இடம் பெற்றுள்ள ஐந்திணையில் தோழி கூற்று வரும் இடங்களை இங்குச் சுட்டப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் தோழி கூற்றின் முக்கியத்துவத்தை எளிதாக விவரிக்கப்பட்டுள்ளது.

திறவுச் சொற்கள்
     திணைமாலை நூற்றைம்பது, தோழி கூற்று, ஐந்திணைகள், தொல்காப்பியம், சங்க இலக்கியம், பதினெண் கீழ்க்கணக்கு நூல்.

முன்னுரை
     திணைமாலை நூற்றைம்பது என்ற நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகும். இந்நூலை எழுதியவர் கணிமேதாவியார். இவர் சமணச் சமயத்தைச் சார்ந்தவர். இந்நூல் 153 அகப்பொருள் சார்ந்த பாடல்களைக் கொண்டது ஆகும். ஐந்திணை ஒழுக்கங்களைக் கோவையாக அமைத்து மாலைப் போலத் தந்துள்ளமையால் திணைமாலை என்றும், பாடல் அளவினால் திணைமாலை நூற்றைம்பது என்றும் இந்நூல் பெயர் பெற்றது. இந்நூல்,

குறிஞ்சி – 31 பாடல்கள்

நெய்தல் – 31 பாடல்கள்

பாலை – 30 பாடல்கள்

முல்லை – 31 பாடல்கள்

மருதம் – 30 பாடல்கள்  – மொத்தம் 153 பாடல்களை உள்ளடக்கியது.

இந்நூலில் உள்ள பாடல்களில் தோழி கூற்றின் பங்கு பற்றி ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

      அறவோர் என்பவர்கள் அறத்தின் வழி நடப்பவர்கள், அறத்தைப் பற்றி சிந்திப்பவர்கள், அறத்தின் வழி இயங்கச் சமுதாயத்தை நல்லாற்றுப் படுத்துபவர்கள், மனித நல மேம்பாட்டையே முதன்மைப்படுத்திச் செயற்படுபவர்கள். இத்தகைய அற உணர்வாளர்களில் அகப்பாடல்களில் பங்குபெறும் தோழி கூற்றின் பங்கு பற்றி இனி விரிவாகக் காண்போம்.

அகப்பாடல்களில் தோழிக்கான அறம்
     அறம் எனப்படுவது பல பண்புகளைத் தழுவிய பொதுச் சொல்லாயினும், ஈண்டு பெண்ணுக்கு உரிய முதற்பண்பான கற்பையே குறிக்கும். இறையனார் களவியல் உரையாசிரியரும் “அறம் என்பது தக்கது; தக்கதைச் சொல்லி நிற்றல் தோழிக்கும் உரியது” என்று கூறப்பட்டுள்ளதை அறிகிறோம்.

அறத்தொடு நிற்றலில் தோழியின் பங்கு
       கற்பென்னும் கடைப்பிடியில் நின்று களவொழுக்கத்தைப் பெற்றோர்க்கு வெளிப்படுத்தல் என்பது பொருள். களவொழுக்கத்தைப் பெற்றோர் அறிந்துகொள்ள வேண்டும் என்பது நோக்கமில்லை. தலைவி ஏற்கனவே கற்பு நெறிப்பட்டு விட்டாள் என்பதை முதன்மையாக வலியுறுத்துவதே அறத்தொடு நிற்றலின் நோக்கம். வேறு வழியெல்லாம் பயனற்றுப் போற காலை “அறத்தொடு நிற்றல்” என்னும் நேர்நெறியைத் தலைவியும் தோழியும் மேற்கொள்வர் என்பதிலிருந்து தோழிக்கூற்றின் அறம் விளங்குகிறது.

தொல்காப்பியர் கூறும் அறத்தொடு நிற்றலில் தோழியின் பங்கு
      தொல்காப்பியர் களவையும் காந்தருவத்தையும் இணைத்துக்காட்டி இரண்டின் இயல்பும் ஒன்றெனக் கூறுவது போல் தோன்றினாலும் இரண்டையும் இனங்கண்டு அறியப் பயன்படுவது அறத்தொடு நிற்றல் ஆகும்.

“காந்தருவருக்குக் கற்பின்றிக் களவு அமையவும்பெறும்;
ஈண்டுக் கற்பின்றிக் களவே அமையாது”
என்ற நச்சினார்க்கினியர் தெளிவுரையில் தலைவி தோழி குரைத்த பின் அல்லது தோழி தானே அறிந்த பின் இருவருக்கும் மணமுடித்து வைக்கத் துணிவாள். அதன் பின்னரே அறத்தொடு நிற்றல் முறையாக நிகழும் என்பதை இப்பாடல் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

வாயில்களின் கடமையில் தோழியின் பங்கு
தலைமகன் தலைமகள் ஆகியோருக்கிடையேயான அன்பின் பிணைப்பு இழை அறுபடாமல் காக்கும் அற உணர்வு வாய்க்கப் பெற்றவர்களாகவே வாயில்கள் அமைவதைத் தொல்காப்பியத்தின் வழி அறிய முடிகின்றது. இதில் குறிப்பாகத் தோழி என்பவள் பெரிதும் கடமை உணர்வில் பொலிவுற்று விளங்குகின்றாள். அதானால்தான் தோழியைத் தொல்காப்பியர்,

“சூழ்தலும் உசாத்துணை நிலைமையிற் பொலிமே(தொல்.1072)
எனவரும் தோழியைப் பற்றிய வரையறையிலும் வாயில்களின் கடமை உணர்வின் வெளிப்பாட்டை உணர முடிகின்றது.

பிரிவு காலக் கூற்றில் தோழியின் பங்கு
எதிர்வரும் துயர் நிலை உரைத்தல்

போக்கற்கண் உரைத்தல்

விடுத்தற்கண் உரைத்தல்

பிரிவினால் தன் துயர் உரைத்தல்

தலைபெயர்த்து உரைத்தல்

வன்புறை உரைத்தல்

இவை அனைத்துமே பிரிவு காலக் கூற்றில் தோழியின் பங்கு ஆகும்.

சங்க இலக்கியத்தில் ஐந்திணையில் தோழி கூற்றின் பங்கு
      சங்கக் கால நூற்களாக விளங்கும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய இலக்கியங்களில் அகப்பொருள் ஏழு திணைகளாக வகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு திணையிலும் பல துறைகள் இடம் பெற்றுள்ளன. அன்பின் ஐந்திணையாக அகனைந் திணையாகப் போற்றப்பட்ட முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் ஆகிய ஐந்து திணைகளும் நிறைந்த அளவு தோழி கூற்றுப் பெருவாரியாகப் பாடல்கள் பங்கு பெற்றன என்பதை அறிய முடிகிறது.

குறிஞ்சித் திணையில் தோழி கூற்று – 289 பாடல்கள்

பாலைத் திணையில் தோழி கூற்று – 178 பாடல்கள்

முல்லைத் திணையில் தோழி கூற்று – 52 பாடல்கள்

மருதத் திணையில் தோழி கூற்று – 96 பாடல்கள்

நெய்தல் திணையில் தோழி கூற்று – 180 பாடல்கள்

ஐந்திணையில் தோழி கூற்று – 795 பாடல்கள்

உவமப்போலி கூறுவார் வரையறையில் தோழி கூற்று
     உவமை ஒன்று கூற, அதனுள் உள்ளுறையாக அமையும் பொருள் வேறாக அமைபவை உவமப்போலிகள். இந்நிலையில், அகத்திணை மாந்தர்களில் தோழி அறிந்த கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டே உவமப்போலிகள் வரையறுத்தால்தான் உவமப்போலி சிறப்பு பெற்று உண்மை உணர்வு ஒளிகிறது.
“கிழவி சொல்லின் அவளறி கிளவி;
தோழிக் காயின் நிலம்பெயர்ந் துரையாது”        (தொல்.1247)
“தோழியும் செவிலியும் பொருந்துவழி நோக்கிக்
கூறுதற் குரியர் கொள்வழி யான”                   (தொல்.1252)
இப்பாடலில், தோழியும் செவிலியும் பொருந்தும் இடம் பார்த்து, கேட்போர் கொள்ளும் முறை அறிந்து உவமப்போலி அமைய உரை நிகழ்வதை அறிய முடிகிறது.

சங்க இலக்கிய வாசிப்பில் முக்கியப் பங்குபெறும் தோழி கூற்று
      ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துநிலை உடைய வாசகர்கள் இருக்கமுடியும் என்பதை வாசிப்புக் கோட்பாடு உணர்த்துகிறது. அடுத்த நிலையில் தொகுப்பாசிரியரே பதிவுசெய்யப்பட்ட வாசகர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். சங்க அகப்பாடல்களில் திணை துறைக் குறிப்புகள் ஆகியவற்றை ஆராயும் போது உணர்வுகளை அறிவு அடிப்படையில் பகுப்பதில் ஏற்படும் பல்வேறு கருத்து மாறுபாடுகள் ஏற்படுவதை அறிய முடிகிறது.

“நிலந்தொட்டு புகாஅர் வானம் ஏறார்
விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார்நாட்டின்
நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரிற்
கெடுநரும் உளரோநம் காதலோரே”
                                                                                                                                   (குறுந்.130வெள்ளிவீதியார்)
இந்தப் பாடலைத் தலைவி கூற்றாகவும், தோழி கூற்றாகவும் துறை வகுக்கப்பட்டுள்ளது
.
தோழி – பிரிவிடை ஆற்றுவித்தது,

தலைவி – பிரிவு ஆற்றாமை,

செவிலி – தலைவியைத் தேடத் துணிந்து.

தோழி கூற்று என்பதற்கு,

     “பிரிவிடை அழிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. நீ அவர் பிரிந்தார் என்று ஆற்றாமையாகின்றது என்னை? யான் அவர் உள்வழி அறிந்து தூதுவிட்டுக் கொணர்வேன், நின் ஆற்றாமை நீக்குக எனத் தோழி தலைமகளை ஆற்றுவித்தது.”
“தோழி தூதுவிடுவாளாகத் தலைமகள் தனது ஆற்றாமையைக் கூறியதுமாம்” என்பது தலைவியின் ஆற்றாமையை விளக்குகிறது.
திணைமாலை நூற்றைம்பதில் ஐவகைத் திணையில் தோழி கூற்றுகுறிஞ்சித் திணையில் தோழி கூற்று
1.தலைமகளும் தோழியும் ஒருங்கு இருந்தவழிச் சென்று, தலைமகன் தோழியை மதியுடம்படுத்தது

2.தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது

3.பகற்குறிக்கண் வந்த தலைமகனைக் கண்டு, தோழி செறிப்பு அறிவுறீஇயது

4.தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி செறிப்பு அறிவுறீஇயது

5.இரவுக்குறி வேண்டிய தலைமகற்குத் தோழி மறுத்துச் சொல்லியது

6.பின்னிலை முடியாது நின்ற தலைமகன் தோழியை மதி உடம்படுத்தது

7.தோழி நெறி விலக்கியது

8.வெறி விலக்கி, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது

9.நெறியினது அருமை கூறி, தோழி இரவுக்குறி மறுத்தது

10.செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது

11.தோழி சேட்படுத்த இடத்து, தலைமகன் தனது ஆற்றாமையால் சொல்லியது

12.’நின்னால் சொல்லப்பட்டவளை அறியேனா’ என்ற தோழிக்குத் தலைமகன் அறிய உரைத்தது

13.பகற்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது

14.பின்னின்ற தலைமகன் தோழி குறை மறாமல் தனது ஆற்றாமை மிகுதி சொல்லியது

15.கையுறை மறை

16.ஆற்றானாய தலைமகனைத் தோழி ஏற்றுக்கொண்டு கையுறை எதிர்த்தது

17.பகற்குறிக்கண் தலைமகள் குறிப்பு இன்றிச் சார்கிலாத தலைமகன் தனது ஆற்றாமை சொல்லியது

18.’நின்னால் குறிக்கப்பட்டாளை யான் அறியேன்’ என்ற தோழிக்குத் தலைமகன் கூறியது; பாங்கற்குக் கூறியதூஉம் ஆம்

19.தோழி குறை மறாமல் தலைமகன் தனது ஆற்றாமை மிகுதியைச் சொல்லியது

20.தோழி தலைமகனை நெறி விலக்கி, வரைவு கடாயது

21.தோழி படைத்து மொழி கிளவியான் வரைவு கடாயது

22.பகற்குறிக்கண் இடம் காட்டியது

23.தோழி தலைமகளை மெலிதாகச் சொல்லி, குறை நயப்புக் கூறியது

நெய்தல் திணையில் தோழி கூற்று
1.புணர்ந்து நீங்கும் தலைமகனைக் கண்ணுற்று நின்ற தோழி வரைவு கடாயது

2.இரவும் பகலும் வாரல்’ என்று தலைமகனைத் தோழி வரைவு கடாயது

3.தோழி வரைவு கடாயது

4.நொதுமலர் வரைந்து புகுந்த பருவத்து, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது

5.வலிதாகச் சொல்லிக் குறை நயப்பித்தது

6.தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழியால் சொல் எடுக்கப்பட்டு, தலைமகள் தனது ஆற்றாமையால் சொல்லியது

7.நயப்பு; கையுறையும் ஆம்

8.தலைமகனைத் தோழி வரைவு கடாயது

9.பகற்குறியிடம் காட்டியது

10.தோழி நெறி விலக்கி, வரைவு கடாயது

11.தலைமகற்கு இரவுக்குறி மறுத்தது

12.தோழி வரைவு கடாயது

13.தலைமகற்குத் தோழி குறை நேர்ந்து, பகற்குறியிடம் அறியச் சொல்லியது

14.தலைமகனைத் தோழி வரைவு கடாயது

15.தலைமகற்கு இரவுக்குறி நேர்ந்த தோழி, இடம் காட்டியது

16.தோழி வரைவு கடாயது

17.தலைமகற்குத் தோழி பகற்குறி நேர்ந்து, இடம் காட்டியது

18.இப்பொழுது வாரல்!’ என்று தோழி வரைவு கடாயது

19.பாங்கற்குத் தலைமகன் கூறியது

20.தலைமகற்குத் தோழி இரவுக்குறி மறுத்தது

21.தலைமகளை ஒருநாள் கோலம் செய்து, அடியிற் கொண்டு முடிகாறும் நோக்கி, இவட்குத் தக்கான் யாவனாவன் கொல்லோ?’ என்று ஆராய்ந்த செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது

பாலைத் திணையில் தோழி கூற்று
1.தலைமகளைத் தோழி பருவம் காட்டி, வற்புறீஇயது

2.தோழி பருவம் காட்டி வற்புறுத்தியது

3.பருவம் கண்டு ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது

4.முன்னை ஞான்று, உடன்போக்கு வலித்து, தலைமகனையும் தலைமகளையும் உடன்படுவித்து, பின்னை அறத்தொடு நிலை மாட்சிமைப்பட்டமையால் தலைமகளைக் கண்டு, தோழி உடன்போக்கு அழுங்குவித்தது

5.ஆற்றாள்!’ எனக் கவன்ற தோழிக்கு, ‘ஆற்றுவல்’ என்பதுபடச் சொல்லியது

6.பருவம் காட்டி, தலைமகளைத் தோழி வற்புறுத்தியது

7.தலைமகனது செலவுக் குறிப்பு அறிந்து ஆற்றாளாய தலைமகளைத் தோழி உலகினது இயற்கை கூறி, ஆற்றாது உடன்படுத்துவித்தது

8.தலைமகன் செலவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் உடன்படாது சொல்லியது

9.தலைமகனைத் தோழி செலவு அழுங்குவித்தது

10.தலைமகள் தோழிக்குச் செலவு உடன்படாது சொல்லியது

11.புணர்ந்து உடன்போக்கு நயப்பித்த தோழிக்குத் தலைமகள் உடன்பட்டுச் சொல்லியது

12.புணர்ந்து உடன் போவான் ஒருப்பட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது

13.சுரத்திடைச் சென்ற செவிலிக்குத் தலைமகனையும் தலைமகளையும் கண்டமை எதிர்ப்பட்டார் சொல்லி, ஆற்றுவித்தது

14.தலைமகன் செலவு உடன்படாத தலைமகள் தோழிக்குச் சொல்லியது

முல்லைத் திணையில் தோழி கூற்று

1.பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது

2.தோழி தலைமகளைப் பருவம் காட்டி வற்புறுத்தியது

3.மாலைப் பொழுது கண்டு ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது

4.பருவம் அன்று’ என்று வற்புறுத்திய தோழிக்குத் தலைமகள் வன்புறை எதிர் அழிந்து சொல்லியது

5.பருவம் கண்டு அழிந்த கிழத்தி தோழிக்குச் சொல்லியது

6.பருவம் அன்று’ என்று வற்புறுத்தின தோழிக்குத் தலைமகள், ‘பருவமே’ என்று அழிந்து சொல்லியது

7.பருவம் கண்டு அழிந்த கிழத்தி கொன்றைக்குச் சொல்லுவாளாய்த் தோழி கேட்பச் சொல்லியது

8.பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது

9.வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் வன்புறை எதிர் அழிந்து சொல்லியது

10.பருவம் கண்டு அழிந்த கிழத்திக்குத் தோழி சொல்லியது

11.பருவம் அன்று’ என்று வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் ஆற்றாது சொல்லியது

12.பருவம் கண்டு ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது

13.பருவம் காட்டி, தோழி, தலைமகளை வற்புறுத்தியது

14.பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது

15.பருவம் கண்டு அழிந்த தலைமகள் கேட்ப, தோழி குருந்த மரத்திற்குச் சொல்லுவாளாய், ‘பருவம் அன்று’ என்று வற்புறுத்தியது

16.வினை முற்றி மீண்ட தலைமகன், தலைமகட்குத் தூது விடுகின்றான், தூதிற்குச் சொல்லியது

17.பருவம் கண்டு, ஆற்றாளாய தலைமகள் ஆற்றல் வேண்டி, தோழி தான் ஆற்றாளாய்ச் சொல்லியது

18.தலைமகளைத் தோழி பருவம் காட்டி, வற்புறுத்தியது

19.பருவம் அன்று’ என்று, வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் வன்புறை எதிர் அழிந்து சொல்லியது

20.குறித்த பருவத்தின்கண் வந்த தலைமகனைப் புணர்ந்திருந்த தலைமகள் முன்பு தன்னை நலிந்த குழல் ஓசை அந்திமாலைப் பொழுதின்கண் கேட்டதனால், துயர் உறாதாளாய்த் தோழிக்குச் சொல்லியது

மருதத்திணையில் தோழி கூற்று
1.விறலி தோழியிடம் கூறியது.

2.காமக்கிழத்தி தோழியிடம் கூறியது.

3.தலைவி தோழிக்குக் கூறியது.

4.தலைவி மகனைப் புகழ்வதுபோல் தந்தையைத் (தலைவனை) புகழ்ந்து தோழியிடம் கூறியது.

5.தோழி செவிலிக்குக் கூறியது.

6.தோழி தலைவனிடம் கூறியது.

7.தோழி செவிலிக்குக் கூறியது

8.தோழி கூறியது.
9.தலைவி தோழியிடம் வினவியது.

தொகுப்புரை
♣ அக்காலம் முதல் இக்காலம் வரை அறம் என்பது வாழ்வின் முக்கிய அங்கமாகத் திகழ்கிறது.

இலக்கண நூல்கள், சங்க நூல்கள் மற்றும் இக்கால நூல்கள் அறத்தை முதன்மையாக உணர்த்துகிறது.

திணைமாலை நூற்றைம்பதில் தோழி கூற்று என்பது முக்கிய இடம் பிடித்துள்ளதற்கு அறத்தொடு நிற்றலே காரணமாகும் என்பதை விளக்கப்பட்டுள்ளது.

அகம் ஐந்திணைப் பாடல்களில் தோழியின் கூற்றே முக்கியப் பங்கு வகிக்துள்ளதை நாம் இவ்வாய்வின் மூலம் அறிந்து கொள்ளமுடிகிறது.

இலக்கண மரபின் அடிப்படையிலும் தெளிவான கருத்துகளைக் கொண்ட அகப்பாடல்களில் தோழி கூற்று நிலைபெற்றுள்ளதை உணர முடிகிறது.

இக்கால வாசிப்பிற்கு உட்படுத்தப்பட்ட அகப்பாடல்களில் சிறப்பு மிக்கதாக அமைவது தோழி கூற்றே என்பது அறிய முடிகிறது.

திணைமாலை நூற்றைம்பதில் அறத்தொடு நிற்றலில் தோழி கூற்று முக்கித்துவம் பெறுவதை இவ்வாய்வு கட்டுரையின் வழி தெளிவாகிறது.

துணை நூற்பட்டியல்
1.திணைமாலை நூற்றைம்பது மூலமும் உரையும் – ஞா. மாணிக்க வாசகன் – முதல் பதிப்பு-நவம்பர்,2011 – உமா பதிப்பகம், 18,பவளக்காரத் தெரு, மண்ணடி, சென்னை – 600001.

2.தமிழ் இலக்கியத்தில் அகப்பொருள் கொள்கைகள் – ந.வள்ளியம்மாள் – சாரதா பதிப்பகம் – ஜி-4, சாந்தி அடுக்ககம், 3ஸ்ரீ கிருஷ்ணாபுரம் தெரு, ராயப்பேட்டை, சென்னை-14.

3.தொல்காப்பிய ஆய்வுத் தெளிவுகள் – பேராசிரியர் முனைவர் கு. மோகனராசு – முதல் பதிப்பு-ஆகஸ்ட்,2016 – மணிவாசகர் பதிப்பகம், 31,சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை-600108.

4.சங்க அகப்பாடல்கள் தோழி கூற்று – முனைவர் இரா. நிர்மலா – முதல்பதிப்பு-2010 – உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில் நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600113.

5.சங்க இலக்கியத்தில் உவமைகள் – டாக்டர் ஆர். சீனிவாசன் – முதல் பதிப்பு-2012 – ஹர்ஷா புக் ஹவுஸ், எண்.22/73, காந்தி தெரு, மேற்கு மாம்பலம், சென்னை-600033.

6.யாப்பும் நோக்கும்(தொல்காப்பியரின் இலக்கியக் கோட்பாடுகள்) – முனைவர் செ. வை. சண்முகம் – முதல் பதிப்பு-2006 – மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத்தெரு, சிதம்பரம்-608001.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் இரா. அருணா,
மொழியியல் ஆய்வாளர்,

கோபிசெட்டிபாளையம்
arunatamilgobi@gmail.com
 

விடியாத இரவு |சிறுகதை|முனைவர் கை.சிவக்குமார்

          கரு கும்மென்று இருட்டு. இரவு இரண்டு மணி இருக்கும்.  மாயவன் பணி முடித்துவிட்டு விடியற்காலை இரண்டுமணி பேருந்திற்காகக் காத்திருந்தான்.
அவன் ஒசூரில் இருந்து கிருஷ்ணகிரிக்குச் செல்லவேண்டும். அதற்காக ஒசூர் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்தான்.

அவன் சற்று வித்தியாசமானவன். தனியார் பேருந்தில் ஏறுவதைவிட அரசு பேருந்தில் ஏறுவதை மிகவும் விரும்புவான். அதற்குக் காரணம் உண்டு. அரசு பேருந்து என்றால் சொகுசாக உறங்கிக்கொண்டு செல்லலாம், தனியார் பேருந்தில் கூட்டம் அதிகம். இரண்டு ஆள் அமரவேண்டிய இடத்தில் மூன்று பேர் உட்கார வைப்பார்கள். மக்கள் கூட்டத்தை அடுக்குவார்கள்.

ஆனால் நாமொன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்பது போல  தனியார் பேருந்துதான் கிருஷ்ணகிரி செல்ல தயாராக இருந்தது. அரசு பேருந்து சற்று நேரத்திற்கு முன்புதான் சென்றிருக்கிறது. 

இரவுதானே பஸ்ல கூட்டம் ஒன்னும் இருக்காது என்று ஏறிவிட்டான். வேலைக்குப் போன அலுப்பில் “சீட்டுப் புடுச்சி உக்காந்திட்டு நல்லா தூங்கிட்டுப் போகலாம்” என்று பார்த்தால் இடமும் இல்லை ஒன்றும் இல்லை.. கீழே இறங்கிடலாமென்று நினைக்கும்போது பேருந்தை எடுத்துவிட்டார்கள். ‘சரி என்ன பண்றது. அடுத்த பஸ் வரதுக்குள்ளார கொஞ்சநேரம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டா வீட்டுக்கே போயிறலாம்’ என்று நினைத்தான்.

சுற்றும் முற்றுமாக பார்த்தான். அமர்வதற்கு வாய்ப்புக் கிடைக்குமா என்று. டிரைவருக்கு பக்கத்தில் இருக்கும் இன்ஜின் மேல் யாரும் உட்காரவில்லை.

இதுதான் சமயமென்று மியுசிக்கல் நாற்காலியில் அமர்வதுபோல் ஓடி போய் உட்கார்ந்து கொண்டான். படியில் இருந்தவர்கள் மட்டும் சிலர் “யாருடா ராத்திரியில நின்னுகிட்டே ஒருமணிநேரம் போறது”என்று இறங்கி கொண்டார்கள்.

கண்டக்டர்  பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வரும் வரை கிருஷ்ணகிரி…. கிருஷ்ணகிரி ….எனக் கூவிக்கொண்டே வந்தார்.

மாயவன் ஒருவழியாக எஞ்சின் சீட்டு கிடைத்த சந்தோசத்தில் பயணிகளைப் பார்த்ததுபோல் அமர்ந்துவிட்டான். பயணிகள் அனைவருக்கும் நந்திபோல இவன் அமர்ந்திருந்தான்.

ஓட்டுநர் பஸ்சை எடுத்த உடனே வேகம்தான். மாயவனுக்கு கொஞ்சம் பயந்த சுபாவம். ‘இன்னைக்கு கத முடிஞ்சிது’ என நினைத்தான். அவ்வளவு வேகம். கொஞ்சதூரம் தான் அப்படி வேகமாக வந்தார். அதற்குப் பிறகு வழக்கம் போலதான்..

டிக்கெட்… டிக்கெட் என்றபடியே கண்டக்டர் வந்தார். முன் இருக்கையில் இருந்து ஆரம்பித்தார். டிக்கெட்…டிக்கெட்… என்ற சப்தம்… வண்டி நகரத்தொடங்கியது…. “சில்லரைய எடுத்து வச்சிக்கோங்க.. இராத்திரியில என்ன இம்ச பண்ணாதிங்க…” என்ற குரலோடு முதல் பயணியிடம் “எங்கப் போகனும்” என்றார்.

பயணி ஒருவர், “என் வீட்டுக்குத்தான் போகனும்” என்றார். கடுப்பான கண்டக்டர் “சுடுகாட்டுலதான் இறக்கிவிடப்போறேம் பாரு” என்றார்…

வாயை மூடிய பயணி 500 ரூபாய் நோட்டைக் கொடுத்துக் கிருஷ்ணகிரிக்கு ஒரு டிக்கெட் கேட்டார்…  டிக்கெட்டின் பின்புறம் எதையோ கிறுக்கினார். அதை பயணியிடம் கொடுத்துவிட்டு ”மீதியைக் கிருஷ்ணகிரி பஸ்டாண்டில் வந்து வாங்கிக்கோ” என்றார். வாய் பேசாமல் தலையசைத்த பயணி ‘மீதப்பணத்தை எப்படி வாங்குவது’ என்ற கவலையில் உறங்க முடியாமல் தவித்தார்.

கண்டக்டர் கிருஷ்ணகிரிக்கு 34 ரூபாய் டிக்கெட் போக மீதி ஆறு ரூபாய் சில்லறையை கொடுப்பது இல்லை. அதனால் பயணிகள் எல்லோரும் அவர்கள் பையில் இருக்கும் சில்லறை காசுகளை எல்லாம் தேடி பிடித்துச்  சரியான சில்லறை கொடுத்து டிக்கெட் வாங்க தொடங்கினார்கள்.

டிக்கெட் வாங்கியவர்கள் காசையும், டிக்கட்டையும் பத்திரப்படுத்திக்கொண்டு ஜன்னல் ஓரமாக தலையைச் சாய்த்துக்கொண்டார்கள். சீட்டின் நடுவில் உட்கார்ந்திருந்தவர்கள் தன் கையில் வைத்திருந்த பையைக் கட்டிபிடித்துக்கொண்டு தலையை அப்படியே சாய்த்துக்கொண்டார்கள். உறங்கிய வேகத்தில் சிலர் கும்பகர்ணனையே மிஞ்சினார்கள். சிலர் தவளை கத்துவதுபோல் குறட்டைவிடத்தொடங்கினர்.

கம்பி ஓரமாய் இருந்தவர்கள் கம்பிக்குள் கையை விட்டு கம்பி மேல் சாய்ந்துகொண்டார்கள்.சிலர் தூங்கி அருகில் இருந்தவர்கள் மீது விழுந்தார்கள். வாயில் இருந்து விழும் எச்சில் ஆடையை ஈரமாக்கியதுகூட தெரியாமல் உறங்கிக் கொண்டிருந்தனர் சிலர்.

“டிக்கெட் எடுக்காதவங்க யாராவது இருந்தா டிக்கெட் வாங்கிக்கோங்க” என்றார் கண்டக்டர். அதைப் பற்றி யாரும் கண்டு கொள்ளவில்லை. பயணிகளைச் சரிபார்த்து தான்கொடுத்த டிக்கெட்டும் சரியாக இருக்கிறதா எனச் சோதித்துப் பார்த்துக்கொண்டார்.

சில்லரை பாக்கி வேண்டும் என்றனர். கண்டக்டர் “இறங்கும்போது தர்றேன்”என்று கூறிவிட்டு கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரும் முடிந்தவரையில் கொடுக்கவேண்டிய சில்லரைகளைக் கொடுத்துவிட்டார். ஒரு சிலருக்கு மட்டும் கொடுக்கவில்லை.

பேருந்தில் நின்று பயணித்தவர்கள் மட்டும் காதில் எதையோ விதவிதமாக மாட்டிக்கொண்டு மொபைல் போனை பார்த்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்குத் தூக்கம் வந்தாலும் வேறுவழி இல்லை.தூங்கிதூங்கி விழுந்து கொண்டுதான் இருந்தார்கள். முடியாத சிலர் உட்கார்ந்து கொண்டார்கள்.

சீட்டில் உட்க்கார்ந்திருந்த சில இளசுகள் பேஷ்புக், இன்ஷ்டாகிராம், வாட்ஸ் ஆப் போன்ற சமூக ஊடகங்களில் தவழ்ந்தனர். சிலர் அவர்களுக்குப் பிடித்திருந்த சினிமா படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

பேருந்தில் இளையராஜாவின் இசையில் கவிஞர் வாலியினுடைய வரிகளை எஸ்.ஜானகி அம்மாவும், மலேசியா வாசுதேவனும் “நிலா காயுது நேரம் நல்ல நேரம், நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்” என்ற பாடலை மென்மையாக ஒலிபெருக்கி வழியே ஒலித்துக் கொண்டிருந்தார்கள்.

டிரைவர் அதிக ஒளிதரும் விளக்குகளை அணைத்து விட்டு நீலவண்ண விளக்கை மட்டும் லேசாகத் தெரிவதுபோல வைத்திருந்தார். அதிக வெளிச்சம் இல்லாததால் ஆட்கள் இருப்பது தெரியும். முகம் தெரியாது. இதனால் சிலருக்கு இல்லை பலருக்குப் பேருதவியாக இருந்தது.
 
குறிப்பாக அதில் சிலர் இன்பமாக உறங்கினர். சிலருக்கு அதுவே இன்பமாகக் கூட இருந்தது.

மாயவனுக்கு கொட்டாவி வந்தது.. தூங்கி விழுந்தால் டிரைவர் ஏதாவது சொல்வாரோ என நினைத்தான். தன் மொபைலை எடுத்து ஏதாவது நோண்டலாம் என நினைத்தான்.

அந்த நேரம் பார்த்து படியின் ஓரத்தில் உள்ள “மாற்றுத்திறனாளிகள் அமருமிடம்”என்ற இருக்கைக்கு கீழே அரும்புவிடும் மீசையை உடைய பையனும், காமக்கண்களையுடைய பெண்ணும் அமர்ந்திருந்தனர். வயது சுமார் பதினெட்டு, பத்தொன்பது இருக்கும். அவர்கள் இருவரும் பேருந்தில் யாரும் இல்லை என எண்ணியதுபோல இருந்தனர்.

இருவரும் நீல ஒளியில் ஒரே நிறமாகத்தான் தெரிந்தனர். அவர்கள் இருவரும் காதலர்கள் என்பதற்கு அடையாளமாக இருவர் அமரும் அந்த இருக்கையில் ஜன்னல் ஓரமாக அந்தப்பெண் அமர்ந்திருந்தாள். அவளது வலதுகை விரல்களை அவன் இடதுகை விரல்களால் கோர்த்து இருக்கமாய் பிடித்திருந்தான். அந்த இளம் வெளிச்சம் அவர்களின் காதல் சுகத்திற்கு ஏதுவாக அமைந்திருந்தது.

அவன் பெண்ணின் காதில் ஏதோ “குசு குசு” எனக் கூறினான். பெண்ணின் முகத்தில் புன்சிரிப்பு. அவன் தன் பையில் வைத்திருந்த நூறுரூபாய் மதிப்பிற்கும் மேலேவுள்ள  சாக்லேட்டை எடுத்து அவளிடம் கொடுக்கிறான்.  அதை வாங்கியதும் அந்த பெண்ணுக்கு ஆனந்தம். இருவருக்கும் தான். அவன் மடியில் அவள் சாய்கின்றாள். அவள் கன்னங்களை வருடியவாரே காதோரம் பேசுவது போல முத்தங்களை இடுகிறான் சத்தமில்லாமல். யாராவது பார்த்துவிடுவார்கள் என்ற அச்சம் அவனுக்குச் சிறிதும் இல்லை.  அந்தப் பெண்ணும் அதை ஏற்றுக்கொள்வதைப் போல எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.

இதை பார்த்த உடன் மாயவனுக்கு ஒரே அறுவறுப்பு. பேருந்து, மக்கள் கூட்டம் என்றுகூட அவர்கள் பார்க்கவில்லை. பொதுவெளியில் இப்படி அசிங்கமாக நடந்துகொள்கிறார்களே. இதனால்தான் நாட்டில் மழை பெய்யவில்லையோ!. சகித்துக்கொள்ள முடியாத மாயவன் “மூதேவிகளா! பஸ்னு கூட பாக்காம என்ன பண்றீங்க. வெட்கமா இல்ல. உங்க வீட்ல செய்ய வேண்டியதெல்லாம் இங்க செய்ரீங்க. ஆளும் மூஞ்சியும் பாரு” என்றெல்லாம் திட்ட நினைத்தான். “எல்லோரும் பாத்துட்டு சும்மா தான இருக்காங்க.. நமக்கு எதுக்குடா வம்பு” என்று வாய் பேசமுடியாமல் தன் மனதின் ஆதங்கத்தை அடக்கிக்கொண்டு வெளியில் பார்க்கலாம் என்று திரும்பினான். அவன் கண்ணில் கக்கிருட்டுதான் பட்டது. இருந்தாலும் அதையாவது பார்க்கலாம் எனச் சிந்தனையை மாற்றினான்.

காதலரை துன்பப்படுத்துவது போல பயணிகளின் பின் இருக்கை பக்கமாக இருந்து சத்தம் வந்தது. அதைக் கேட்டதும் மாயவன் தன் பார்வையைச் செலுத்தினான். அதேபோல் காதலன் மடியில் படுத்திருந்த பெண்ணும் சத்தம் கேட்டு எழுந்து திரும்பிப் பார்த்தாள். அதற்குள் பேருந்து சூளகிரியைக் கடந்துவிட்டது.

அவர்கள் மட்டுமல்ல பேருந்தே சத்தம் வந்த பின்பக்கத்தைத் திரும்பி பார்த்தது. பாதி தூக்கத்தில் இருந்தவர்கள் கூட விழித்துக்கொண்டார்கள். சொர்க்கம் அடைந்தவர்கள் எதையும் கண்டுகொள்ளவில்லை.

ஆடி 18 விழாவுக்குச் சொந்த ஊருக்குச் செல்வதற்காகத் தன்குடும்பத்துடன் கூலித் தொழிலாளி செல்கிறார். அவர் மது பருகியதால் ஏதோ தவறுதலாகப் பேச … பின்சீட்டில் இருந்த ஒரு குடும்பத் தலைவர் நல்ல முறையாக, “லேடிஸ்லாம் இருக்காங்க தப்பா பேசாத” என இரண்டு வார்த்தை சொல்லியிருக்கிறார். குறிப்பாக ஆபாச வார்த்தைகள் பேசவேண்டாம் என எச்சரித்துப் பார்த்திருக்கிறார். ஆனால் குடிமகனுக்கோ உள்ளுக்குள் இருந்து ஆபாச  வார்த்தைகளே வந்துகொண்டு இருந்திருக்கிறது.

கோபம் கொண்ட, பின் சீட்டுக்காரர் எழுந்து அவர் தலைமுடியைப் பிடித்து ஆட்டி, கொட்டு வைத்திருக்கிறார். தலையைத் தேய்த்தபடி முறைத்துப் பார்த்து ஏதோ வாய்க்குள் முனங்கியபடி இருந்துள்ளார்.

குடிமகனின் மனைவி தன் கணவனிடம், “அசிங்கப்படுத்தாதீங்க” என தன் கணவனை அமைதிப்படுத்திப் பார்க்கின்றாள். மனைவியின் பேச்சை தட்டாதவன்போல் சில நிமிடங்கள்  அமைதியாக இருந்தான்.

பேருந்து அமைதியானது. நின்று கொண்டிருந்தவர்கள் நமக்கு என்ன ? எனத் தன் பணிகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். காதல் ஜோடியும் மீண்டும் தனது லீலைகளைத் தொடங்கினர்.
           
அவன் மடியில் அவள் படுத்துக்கொள்ள இரவு வெளிச்சம் அவர்களுக்கு இன்பமாக இருந்தது. படிக்கட்டில் கண்டக்டர் அவருடைய நண்பருடன் அமர்ந்திருந்தனர்.
 
ஆனால் காதலர்கள் அதைப் பற்றி கண்டு கொள்ளவே இல்லை.

அவன் அவள் மீது இருக்கின்ற உணர்வை வெளிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான். பஞ்சும், நெருப்பும் தங்கள் எல்லையைத் தாண்டிய போதும் நெருப்பு மட்டும் உண்டாகவில்லை. ஆச்சரியம்தான்.அந்த விஷயத்தில் அவர்கள் தங்கள் எல்லையை மீறவில்லை என்று தான் மாயவனுக்குப் பட்டது.

அதற்குள் இவர்களுக்கு இடையூறாகவே மீண்டும் அங்கு ஒரு சலசலப்பு. மீண்டும் ஏதோ குடிகாரன் பேச பின்சீட்டில் இருக்கக்கூடியவர் ஓங்கி தலையில் அடித்து விட்டார். குடிகாரனின் மனைவிக்கு கோபம் வந்தது. அவளுக்கு வந்த கோபத்தைப் பார்த்தவுடன் தன்கணவனை அடித்தவரை உண்டு இல்லை என்று செய்துவிடுவாள் என எண்ணிய நேரத்தில் தன் கணவனின் கன்னத்தில் ஒரு அறை அறைந்தாள்.

“சும்மா இருக்க மாட்டியாடா” என்று கத்தினாள்.  மீண்டும் அமைதியானான். இப்பொழுது அந்தச் சத்தத்திற்கு அவர்கள் செவி சாய்க்கவில்லை. அது வழக்கமாகிவிட்டது. இவர்கள் அவர்களது வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சத்தம் வந்தாலும்கூட அங்கு திரும்பி பார்க்கின்ற எண்ணம் வரவில்லை. மீண்டும் குடிகாரனிடம் இருந்து சத்தம். பொறுத்திருந்து கண்டக்டர் குடிகாரனிடம் சென்று “அமைதியா இல்லன்னா நீ கீழ இறங்க வேண்டியது தான்” என்றார். அதையும் அப்பொழுது ஏற்றுக் கொண்ட குடிகாரன்.

இரண்டாவது முறை மனைவி அவனை அடிக்கும்போது “வீட்டுக்கு வாடி உன்னைய வச்சிக்கிறேன்” என்றபடி கூறி அமைதியானான். பாவம் அவன் கூறிய வார்த்தைக்கு அவளிடம் வந்த வார்த்தைகளை சொல்லமுடியவில்லை.
 
மாயவனுக்கு இந்த இரண்டு நிகழ்ச்சியையும் பார்க்கும் பொழுது சுத்தமாக உறங்கும் எண்ணமே இல்லை. சமூகத்தின் மீது கோபம் வந்தது. ஒருநொடியில் நிதானம் அடைந்து சிரித்து விட்டான். பாவம் அந்தப் பையன் என்ன ஆகப்போறானோ…. குடிகாரன் வீட்டிற்குச் செல்லும் வரை எத்தனை அடி வாங்கப்போறானோ? என்று நினைத்தபடி, எப்போது கிருஷ்ணகிரி வரும் எனக் காத்துக்கொண்டிருந்தான் மாயவன்.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் கை.சிவக்குமார்

உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை ,
முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)
இராசிபுரம்.

சங்கத்தமிழர் உணவுகள்|ஆய்வுக்கட்டுரை|ர. அரவிந்த்

சங்கத்தமிழர் உணவுகள்
முன்னுரை
           
     உலகத்தில் உள்ள அனைவருக்கும் மிகவும் இன்றியமையாதது உணவு, உடை, இருப்பிடமாகும். அவரவர் வாழ்விடங்களில் கிடைக்கப்பெற்ற உணவுகளையே உண்டு வாழக்கையினை நடத்தினர். பிறகு பண்பாடு மூலம்  அனைத்து இடங்களிலும் உணவுப் பொருட்கள் கிடைக்கப்பெற்றன. சங்க தமிழர்களுக்குக் காட்டில் வாழும் விலங்குகளும், கடல்வாழ் உயிரினங்களும் மிகவும் முக்கியமான உணவாக இருந்தன. அதன் பின் இயற்கையாகக் காய்களும், உழவர்களால் விளைவிக்கப்பட்ட செந்நெல், வெண்ணெல், மலைநெல், வரகு போன்றவையும் இது தவிர பிற சிறுதானியங்களும், கிழங்கு வகைகளும் உணவாகப் பயன்படுத்தி இருப்பதை இவ்வாய்வு கட்டுரை வெளிப்படுத்த முயலுகின்றது.

உணவு வகைகள்
           
     சோற்றை வல்சி, சொன்றி, மிதவை, அடிசில், புன்கம், விதவை, துழவை, கூழ், என்ற பல பெயர்களில் உணவுப் பொருள்களையும், சமையல் முறைகளையும் குறிக்கும் பெயராகும். உணவுகள்  உழுந்து, அவரை, பருப்பு சேர்த்த கலவையான உணவும், நெய், புளி, சோறு கலந்த உணவும், முல்லை நில மக்கள் செம்மறியாட்டின் பாலிலிருந்து எடுக்கப்பட்ட தயிரை உலையாகவைத்து, வரகு அரிசியை சேர்த்து அதோடு ஈசல் சேர்த்த உணவுகளும் மக்களிடம் பயன்பாட்டில் இருந்துள்ளது. புளி, தயிர் கலந்த சோற்றுடன் மாமிசத்தை, கலசிகம் உண்டுள்ளதை,

“படமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பிஞ்
வழுக்குறிணம் பாணரொடு, ஒராங்கு” (புறம்,326:9-10)
     இப்பாடலின் மூலம் அறியவருகிறது. மோருக்கு அளவான புளியம்பழம் சேர்த்தும், தினைமாவையும் கொழியலரிசினையும், கள்களை சேர்த்தும், பழந்சோற்றையும் கட்குடிகளுக்கு மயக்கதருவனாவாக இருந்துள்ளது. பாரிநாட்டில் மூங்கில்நெல், பலாப்பழம், வள்ளிக்கிழங்கு, தேன் போன்றவை இயற்கையாகக் கிடைக்கப்பெற்றுள்ளதை,
           
“உழவர் உழாபலேயே நான்கு பயன்உடைத்தே           
ஒன்றே, சிறியிலைவெதிரின், நெல்விளை யும்மே           
இரண்டே, தீஞ்சுளைப் பலவின்வழம் ஊழ்கிகும்மே           
மூன்றே கொழுங்கொடி வள்ளிகிழங்கு வீழ்க்கும்மே” (புறம், 109:3-6)
எனும் பாடலில் கொண்டு அறியலாம். மேலும், தமிழர் உணவுவகைகளைப் பின்வருமாறு காண்போம்.

கறி வகைகள்
      குழம்பு, பொரிக்கறிகள், இறைச்சியால் செய்யப்பட்ட கறிவகைகள், புளியுடன் மீன்கறி, தயிர், கொம்மட்டி உணவு, மாதுளையின் மசிய காயொடு மிளகு பொடி கருவேப்பிலை, அளாவிப் பசு வெண்னையும் சேர்த்து உணவாக அந்தணர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
கீரையுண்ணுதலைப் “பாசபத மிசைதல்” என்பார்கள். நண்டு பீர்க்கங்காய், வெள்ளரிக்காயால் செய்த கூட்டும் சோறும். மழைக்கால பருவத்தில் விளையும் வேளைக்கீரை, குப்பைக்கீரை, சிறிய இலைகளையுடைய இலைக்கறிகள் சேர்த்த கறிவகைள் உணவுகளாகப் பயன்படுத்தியுள்ளனர்.

கிழங்குகள்
    கிழங்குவகைளான, வள்ளிக் கிழங்கு, சேப்பங் கிழங்கு, கூவைக்கிழங்கு, மற்றும் பலாபழக்கொட்டையும் போன்றவையும்  பிற கிழங்குகளும் பயன்படுத்தியுள்ளார்கள்.

ஊறுகாய்
     உணவிற்கு துணையாக ஊறுகாயை வைப்பது சங்க கால மக்கள் பழக்கத்தில் இருந்துள்ளது. அந்தணர்கள் “மாவடு” என்ற பெயரில் பயன்படுத்தினர். குறிப்பாக, மாங்காய் ஊறுகாய், மாங்காயுடன் புளியம்பழம் சேர்த்தும் ஊருகாய் தாயரித்துள்ளார்கள். “கூட்டு நுகரும் இயல்பினை மாங்காய் நறுங்காடி கூட்டுவோம்” (109:23)  என வரும் கலித்தொகை பாடல் மூலம் அறியலாகிறது.

மாமிச உணவு
      தமிழ் மக்களிடையே விலங்குகள், பறவைகள், மீன், நத்தை, நீர்வாழ் உயிரினங்கள் முக்கியமான உணவாகும். ஆடு, கடமான், மான், முயல், உடும்பு, எலி, கோழி,  போன்றவற்றை வேகவைத்தோ, தீயில் சுட்டோ, நெய்யில் இட்டோ பொரித்தே மாமிசத்தை உண்டுள்ளார்கள்.
நெயில் பொரித்த இறைச்சியை வறை, வாட்டு, செதுக்கண், குறை எனும் பெயர்களில் வழங்கியுள்ளனர். பச்சை மீனைச் சுட்டு காயவைத்து உப்பு கண்டம் போட்டும், இயற்கையாக எழும் தீயில் புகை நாற்றம் இல்லாத வகையில் வதக்கி, அவற்றின் மேலுள்ள மயிரையும், தோலையும் நீக்கி விட்டு இறைச்சியை உண்டுவாழ்ந்துள்ளனர்.
ஆண்பன்றிக்கு நெல்லை இடித்த உணவைக் கொடுத்து பெண் பன்றிகளுடன் கூடப் புணராமல் தவிர்த்து விலநாள் குழியிலே நிறுத்தி வளர்த்து, பின் வேண்டிய நேரத்தில் உணவாகப்பயன்படுத்தியுள்ளார்கள்.
இறைச்சியை மேற்சொன்னபடியல்;லாமல் பச்சை இறைச்சியையும் உண்பதும் மக்களிடம் வழக்கத்தில் இருந்துள்ளதை,
“……………….. தீம் ந்தாரம்
நிறுத்தஆயம் தலைச் சென்று உண்டு,
பச்சூன் தின்று, பைந்நிணம் பெருத்த
எச்சில் ஈர்ங்கை விற்புறம் திமிறி
புல்புக்கனனே, புல் கணற் காளை
ஒருமுறை உண்ணி அளவை, பெருநிரை
ஊர்ப்புறம் நிறையத் தருகுபவன்” (புறம், 258:2-8)

      எனும் பாடலில், வீரர்கள் வேற்றுநாட்டிற்கு சென்று ஆநிரைகளைக் கவர்ந்து செல்லும் போது போர் முனைக்கு செல்லும் வேகத்தில் பச்சை ஊனைத்தின்று கள்ளை அருத்திவிட்டு கையை வில்லிலே துடைத்துக் கொண்டு சென்றுள்ளனர். எனவே அவசரகாலத்தில் பச்சை உணவை உட்கொண்டுள்ளார்கள் என்பதை அறியமுடிகிறது. புலால் நாற்றம் வீசும் பச்சை இறைச்சிக்குப் பூநாற்றம் உடைய புகையையூட்டி சமைத்த ஊனும் உண்ணப்பட்டது.
பச்சூன் என்பது எவ்வகை மாற்றமும் செய்யப்படாத பச்சை இறைச்சி என்பதை,
“பச்சூன் பெய்த கவல்பினி பைந்தோல்கோல்வல்
பாண் மகனே” (பெரும்,283-284)
எனும் அடிகளின் மூலம் பச்சை இறைச்சியையே குறிப்பிடுகிறது.

கள் வகைகள்
ஊனோடும் விருப்பமாக உட்கொண்ட மற்றொன்று கள்ளே. என்பதை,
“மட்டுவாய் திறப்பவும் மைவிடை வீழ்ப்புவும்” (புறம்,113)

எனும் பாடலில், இவ்விரண்டின் முக்கியத்துவத்தினை உணர்த்துகின்றது. பானையில் இருந்து இறக்கும் கள்ளும், தேனும் அரிசிதிணை முதலிய தானியங்களிலிருந்து வடிக்கப்பட்ட கள் அக்காலத்தில் அதிகம் பயன்பாட்டில் இருந்துள்ளது. பனைஅரும்புகளிலிருந்தும், தேனை பக்குவபடுத்தியும், இல்லத்திலிருந்தும் கள்ளினை தோப்பி என்னும் பெயரரல் வழக்கத்தில் இருந்தது. கள்ளை பன்னாடையில் வடிக்கட்டி சாடியிலும், மூங்கில் குழாயிலும் இட்டு பக்குவப்படுத்தி உண்டனர். நாட்பட்ட பழங்கள் மிக்க போதையைக் கொடுப்பதற்கு அதிகமாக பயன்படுத்தியுள்ளதை,

“அரவு வெகுண்டன்ன தேறல்” (புறம்,376:14)
“பாம்பு வெகுண்டன்ன தேறல்” (சிறுபாண்,237)
“பாப்புக் சுடுப்பன்ன தொப்பி” (அகம்,348:7)
“தேற்கடுப்பன்ன நாட்பவ தேறல்” (புறம்,392:16)
என வரும் பாடல்களின் மூலம் அறியலாம்.
கள்ளை மகிழ்தால் மரபின் மட்டு” (புறம்,390:16)
         
   என்ற பாடலில் கள் மகிழ்ச்சியைக் கொடுப்பது பானமாகப் பயன்படுத்தியுள்ளனர். இது ஒரு மரபு என்பதையும் அறிய முடிகிறது. கமுகம் பூவின் பாளையைக் கள் வைக்கும் குப்பிற்க்கு ஒப்பிட்டு கூறுதலின, பச்சை நிறமான குப்பிகள் கள் வைப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. கள்ளின் நாற்றத்தை மாற்றப் பூவும் கட்குடியும் காலத்து கட்குடிக்கும் காலத்தில் இடை இடையே கட்டியும், இஞ்சியையும் பயன்படுத்தியுள்ளார்கள். களிப்பு மிகுதியால் கள்ளுண்டவர் உடல் ஆடுவதைப் போல கட்குடம் கள்ளின் முதிர்ச்சியால் அசைவதும் உண்டாம்.
யவனர்களின் மது
           
யவனர்கள் தங்கள் நாட்டிலிருந்து பக்கல் வழியாகக் கொண்டு வந்த மது வகைகள் பழந்தமிழர்கள் மிகவும் விரும்பி உண்டனர். செல்வர் மனைகளில் இளம் பெண்கள் இதனைப் பொற்கலத்தில் ஊற்றி ஆடவரை உண்பித்தனர் என்பதை (புறநானூறு,24:32-34,56:18-21), (மதுரைக்காஞ்சி,779-78)  இப்பாடல்கள் மூலம் மதுக்களைப் பற்றி அறிந்துக் கொள்ள முடிகிறது.

            அந்தணர்களும் ஊன், மது, உண்ணும் பழக்கத்தைப் பெற்றிருந்துள்ளனர் என்பதை, அந்தணர் மரபில் இருந்து புலவராகிய கபிலர் (புறம்,113) கூறியுள்ளார்.

இனிப்புவகைகள்
    இனிப்பு உணவுகள் பண்டைய தமிழ்மக்கள் ஊன், கள்ளையும் முதன்மையான உணவாகவும், அதன் பிறகு அனைவரும் இனிப்பையே அதிகமாக விரும்பி உண்டுள்ளனர்.
பருப்புடன் வெல்லம் கலந்த பொங்கலும், வெல்லப்பாகுடன் மாவைக் கலந்து அப்பமும், வரகில் பால் கலந்த உணவும் கரும்பஞ்சாற்றுப் பாகுடன் பால், நெல், அவலை சேர்த்து இனிப்பு உணவும், தேன், பால் சேர்ந்த இனிய இனிப்பு வகையாக மக்களிடையே வழக்கத்தில் இருந்திருக்கின்றன.
பலாப்பழம், இளநீர், வாழை, பனைநுங்கு, இனிய  பழங்ளையும் இனிப்பு உணவாகவும் மற்றும் பிற பழங்களையும் உணவாக பயன்படுத்தியுள்ளதை,

“தாழ்கோட் பலவின் சூழ்களைப் பெரும்பழம்
வீழ்இல் தாழைக் குலவித் தீம்நீர்
கவைமுலை இரும் பிடிக்கவுள் மருபு ஏய்க்கும்
மிரள் அரைப் பெண்ணை நு{ற்கொடு, பிளவும்
தீம்பால் தாரம் முனையின்” (பெரும்,356:36)
     என்னும் பாடல் மூலம் இனிய பழங்களையும் “பிறவும் தீம்பல் தாரம்” எனக் குறிப்பிட்டுள்ளதை கொண்டு அறியமுடிகிறது.
கரிகாலன் பொருநர்களுக்கு ஊனையும், கள்ளையுமே முதன்மையான உணவாக கொடுத்தனர். பிறகு அவற்றில் அவர்களுக்கு வெறுப்பு ஏற்பட்டதால் பலகாரங்களும், சோறும் வழங்கப்பட்டதை,

“ஊனும் ஊணும் மனையின் இனிதுஎன
பாலின் பெய்தவுமு;, பாகின் கொண்டவும்
அளவுபு கலந்து, மெல்லியது பருகி
விருந்துறுத்த, ஆற்றி இருந்த னமாக” (புறம்,381:1-4)
என்பதை இப்பாடல் வாயிலாக இனிப்புவகையான உணவுகளையும் மக்கள் பயன்பாட்டில் இருந்துள்ளமையை அறிந்துக் கொள்ள முடிகிறது.
முடிவுரை
      சங்கத் தமிழர்கள் வாழ்விடங்களில் கிடைக்கப் பெற்ற இயற்கையான உணவுகளையும், காட்டு விலங்குகளையும், நீர்வாழ் உயிரினங்களையும், தினைவகைகளையும், பழங்களையும் உண்டு வாழ்க்கையினை வாழந்திருக்கின்றனர். பிறகு உழவர்கள் உழவின் மூலம் நெல்வகைகளை விளைவித்து அறுவடை செய்து  களத்தில் அடித்து பிறருக்கு கொடுத்தும் அங்கு வருபவர்களுக்கு உணவுகளையும் கொடுத்து அறங்களையும் செய்துள்ளனர். மேலும், ஆண்பன்றியை,  பெண்பன்றிகளுடன் புணர்ச்சியில் இருந்து முற்றிலுமாக தடுத்து தனியாக வளர்த்து  உணவுகளை சேமித்து தேவையான போது பயன்படுத்தயிருக்கின்றன.
    கிழக்குகள், தென், கீரை போன்ற இயற்கையான உணவுகள் இக்காலத்தில் சிறந்த உணவாகவும் இந்நாளில் சைவ உணவாகவும் பின்பற்றப்படுகிறது.
நாடிவரும் பாணர்களுக்கு ஊன், சோறு, கள் போன்றவுணவுகள் கொடுக்கப்பட்டு பின்னர் வெறுக்கப்பட்டதின் காரணமாக இனிப்புவகை உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளது. சங்கநூல்களை உற்று நோக்கும் போது தமிழர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்துள்ளதையும், உணவு பழங்கள் வழக்கங்களை அறிந்துக் கொள்ள முடிகின்றது.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
ர. அரவிந்த்

உதவிப் பேராசிரியர்

தமிழாய்வுத்துறை,

எம்.ஜி.ஆர். கல்லூரி,

ஓசூர் – 635 001.


இ-மெயில்: omarivuom.999@gmail.com
ர. அரவிந்த்
 அவர்களின் ஆய்வுக்கட்டுரைகளைப் படிக்க…

 

அவளின் காதலோ ! 60 ஆண்டின் காதலோ!!|கவிதை|க.கலைவாணன்

அவளின் காதலோ ! 60 ஆண்டின் காதலோ!!

ஆசிரியரின் பிற கவிதைகளைப் படிக்க – You searched for க.கலைவாணன் » இனியவை கற்றல் | பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (iniyavaikatral.in)

யாப்பு இலக்கணமும் அதன் உறுப்புகளும் | சுருக்கக் கையேடு

யாப்பு இலக்கணம் | இனியவை கற்றல்

புறப்பொருள் வெண்பாமாலை|பொருள் விளக்கம்|சுருக்க கையேடு

புறப்பொருள் வெண்பாமாலை – பொருள் விளக்கம்

        இந்நூலின் ஆசிரியர் ஐயனாரிதனார் ஆவார். புறப்பொருள் இலக்கணத்தைப் பற்றிக் கூறுவதால் இது புறப்பொருள் வெண்பாமாலை ஆயிற்று. வெண்பாக்களால் அமையப்பெற்றுள்ளது. தொல்காப்பியர் தன்னுடைய தொல்காப்பியத்தில் புறத்திணை இலக்கணத்தை ஏழு திணைகளாகப் பிரித்துக் கூறுவார்.  ஆனால் புறப்பொருள் வெண்பாமாலை பன்னிரெண்டு தினைகளாகப் பகுத்து விரிவுப்படப் பேசுகின்றது.


        பன்னிருப்படலம் என்னும் இலக்கண நூலை அடியொற்றி இந்நூல் ஆசிரியர் புறப்பொருள் வெண்பாமாலையைச் செய்ததாகக் கூறுவார்கள். இந்நூலில் அமைந்துள்ள துறைகளை விளக்கும் நூற்பாக்களுக்கு ‘கொளு’ என்று அழைக்கப்படுகிறது.


தொல்காப்பியர் – வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி,
 பாடாண் என ஏழாக உரைப்பார்.


ஐயனாரிதனார் – வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை,
 தும்பை, வாகை, பாடாண், பொதுவியல்                                    எனப்
 பத்தாகப் பகுப்பார்.
           

          போர்க்களத்தில் நடக்கும் தன்மையை, நிகழ்வை, குறிப்பை இருபக்கமும் நின்று விளக்குவதுதான் புறப்பொருள் வெண்பாமாலை. இவ்வகையான இலக்கணத்தை நேரடியாகப் பார்த்தும் அல்லது இப்படி எல்லாம் நடைபெற்று இருக்கலாம் என்று எண்ணியும் இலக்கண ஆசிரியர்கள் வரையறுத்துச் சொல்லியுள்ளது இன்றைய தலைமுறையினரை வியக்கச் செய்கிறது.


1.வெட்சிப்படலம்:


வெட்சிப்பூவைச் (குறிஞ்சி நிலத்திற்குரியது, சிவந்த நிறத்தை உடையது) சூடிய மறவர்கள் பகை நாட்டில் உள்ள மலையிலும், பிற நிலப்பகுதிகளிலும் மேய்ந்து கொண்டிருக்கின்ற ஆநிரைகளை (பசு) பிறர் அறியாதவாறு கவர்ந்து வருவர்.  இவ் ஒழுக்கத்தை வெட்சித்திணை என்பர். இது இருவகையாக நடக்கும் என்கிறார் ஆசிரியர்.


1.மன்னுறு தொழில் : அரசனின் கட்டளையை ஏற்று ஆநிரைகளைக் கவரச் செல்வது.


2.தன்னுறு தொழில் : அரசனின் ஏவலின்றி மறவர்கள் தானே பகைவர் நாட்டு ஆநிரைகளை கவர்தல்.


வெட்சித்திணை துறைகள் மொத்தம்  – 19


1.வெட்சி அரவம்: பகைவரின் ஆநிரைகளைக் கவரச் செல்லும்போது பல்வகை இசைக்கருவிகளை முழங்கி ஆராவாரித்துச் செல்லல்.


2.விரிச்சி: தாம் மேற்கொள்ளும் செயலின் நிலையை ஆராய்தல். நற்சொல் கேட்டல்.


3.செலவு (பயணம்): வெட்சி மறவர்கள் ஆநிரைகளை கவர பகைவர் நாட்டிற்கு செல்லுதல்.


4.வேய்(ஒற்று) : ஆநிரைப் பற்றியச் செய்திகளை ஒற்றர் ஆராய்ந்து வந்து கூறுதல்.


5.புறத்திறை: பகைவரின் மதிலைச் சுற்றி வளைத்துப் புறத்தே (வெளியே) தங்குதல்.


6.ஊர்கொலை: பகைவரின் மதிலைத் தீயிட்டு அழித்து, ஊரில் உள்ளாரைக் கொள்வது.


7.ஆகொள்: பகைவருடைய ஆக்களைக் கன்றுடன் கவர்வது.


8.பூசல்மாற்று: எதிர்த்துப் போர் செய்து, இனிப் போர் இல்லை என்று சொல்லுவது.


9.சுரத்துய்த்தல்: தம்மால் கவரப்பட்ட ஆநிரைகளுக்குத் துன்பம் நேராமல் காட்டு வழியே ஓட்டிச் செல்லுதல்.


10.தலைத்தோற்றம்: ஆநிரைகளைக் கவர்ந்து வந்த வெட்சித் தலைவன் முன்னே வந்து ஊரார்க்கு மகிழ்ச்சித் தோன்றும் படிச் சொல்வது.


11.தந்துநிறை: வெட்சியார் தாம் கைப்பற்றி வந்த ஆநிரைகளை ஊரின்கண் வந்து நிறுத்தியது.


12.பாதீடு: மறவர்களின் தகுதிக்கேற்ப ஆநிரைகளைப் பங்கிட்டுக் கொடுப்பது.


13.உண்டாட்டு: மறவர்கள் கள்ளினை உண்டு தன் மகிழ்ச்சியினை வெளிப்படுத்துவது ஆகும்.


14.கொடை: மறவர்கள் தான் பிரித்துக்கொண்ட ஆக்களைப் பிறருக்கு கொடையாகக் கொடுப்பது.


15.புலனறி சிறப்பு: சரியாக ஒற்று அறிந்தவர்களுக்கு சிறப்புச் செய்வது.


16.பிள்ளை வழக்கு: நிமித்தமாகிய சகுனம் சொன்னவர்களுக்கு ஆக்களைப் பரிசாகக் கொடுத்து சிறப்பிப்பது.


17.துடிநிலை: தொன்று தொட்டு மரபு மாறாமல் துடி கொட்பவனுடைய குடிப்பெருமையைப் புகழ்ந்துக் கூறுவது.


18.கொற்றவை நிலை: வெற்றிக்குக் காரணமாக விளங்கும் கொற்றவைத் தெய்வத்தை வணங்குதல்.


19.வெறியாட்டு: மறக்குடி மகளிர் வேலனோடு வள்ளிக் கூத்தினை ஆடுவது ஆகும்.


2.கரந்தைப் படலம்:


கரந்தைப் பூவினைச் சூடி மாற்றார் கவர்ந்து சென்ற ஆக்களை மீட்கச் செல்வது கரந்தைத் திணை எனப்படும்.

கரந்தை திணை துறைகள் மொத்தம்  – 13


1.கரந்தை அரவம்: வெட்சி வீரர்களால் கவரப்பட்ட ஆநிரைகளை மீட்பதற்காக கரந்தை மறவர்கள ஓரிடத்தில் கூடுதல். அதனால் ஏற்பட்ட போர் ஓசையே ஆகும்.


2.அதரிடைச் செலவு: வெட்சி மறவர்களைப் பின்பற்றி கரந்தை மறவர்களும் பின்னால் செல்லுதல்.


3.போர்மலைதல்:வெட்சி மறவர்களோடு கரந்தை மறவர்கள் போர் புரிவது.


4.புண்ணோடு வருதல்: கரந்தை மறவர்கள் விழுப்புண்ணைத் தாங்கி வருவது.


5.போர்க்களத்து ஒழிதல்: வெட்சியாருடன் போரிட்டு கரந்தை மறவர்கள் போர்களத்தில் இறப்பது.


6.ஆளெரி பிள்ளை: தான் ஒருவனாக நின்று வெட்சி மறவர்களை வெட்டி விழ்த்திய கரந்தை வீரன் ஒருவனின் நிலையைக் கூறுவது.


7.பிள்ளைத் தெளிவு: விழுப்புண் பட்ட கரந்தை மறவன் தான் பெற்ற புண்ணைக் கண்டு மகிழ்ந்துக் கூத்தாடுவது.


8.பிள்ளைப்பாட்டு: பகை மறவனின் குடலை வேலுக்கு மாலையாக அணிந்து அவ்வேலைச் சுற்றி மறவன் ஆடுவது.


9.கையறுநிலை: தன் தலைவனின் இறப்பால் செய்வதறியாது பாணன் திகைத்து நிற்றல்.


10.நெடுமொழி கூறல்: ஒரு வீரன் தன் ஆற்றலைத் (பெருமையை) தானே எடுத்துக் கூறுவது.


11.பிள்ளைப் பெயர்ச்சி: தீய நிமித்தங்களைப் பொருட்படுத்தாது நிரை மீட்கச் சென்றவனுடைய ஆற்றலை அரசன் சிறப்பிப்பது.


12.வேத்தியன் மலிபு: மறவர்கள் தம் அரசனைப் போற்றிக் கொண்டாடுவது ஆகும்.


13.குடிநிலை: கரந்தை மறவர்கள் தம்முடைய குடிப்பெருமையைக் கூறுவது.


3.வஞ்சிப்படலம்:


வஞ்சிப்பூவினைச் சூடி மாற்றான் மண்ணைக் கவரக் கருதி படையெடுத்துச் செல்லுதல் வஞ்சித்திணை எனப்படும்.


வஞ்சித்திணை துறைகள் மொத்தம்  – 20


1.வஞ்சி அரவம்: அணி வகுத்துச் சென்ற ஆரவார ஒலியே ஆகும்.


2.குடைநிலை: வஞ்சி அரசன் நல்ல நாளில் படையெடுப்பிற்கு முன்னால் தன்னுடைய வெண்கொற்ற குடையை எடுத்து ஊர்ச் சுற்றிச் செல்வது.


3.வாள்நிலை: நல்ல நாளில் தன்னுடைய வெற்றி வாளைப் புறவீடு விட்டது.


4.கொற்றவை நிலை: கொற்றவையின் அருளுடைமையினைப் பாராட்டி வணங்குதல் மற்றும் வஞ்சி மறவரின் போர்த்தொழிலைப் பாராட்டுதல்.


5.கொற்ற வஞ்சி: வஞ்சி அரசனின் வாள் வலிமையைச் சிறப்பித்துக் கூறுவது.


6.கொற்றவள்ளை: வஞ்சி அரசனின் வெற்றியைக் கூறி, பகை நாட்டின் அழிவிற்கு மனம் வருந்துதல்.


7.பேராண் வஞ்சி: பகைவென்ற மறவனை அரசன் பாராட்டி பரிசளித்தல், தோல்வியுற்ற பகை அரசனிடமிருந்து திறைப்பொருட்களைப் பெற்று தன் நாட்டிற்குத் திரும்புதல்.


8.மாராய வஞ்சி: அரசனால் சிறப்பிக்கப்பட்ட மறவரின் மாண்பினைக் கூறுவது.


9.நெடுமொழி வஞ்சி: வஞ்சி மறவன் பனைவர்களின் முன்னே தன்னுடைய ஆண்மையைத் தானே புகழ்ந்துக் கூறுவது.


10.முதுமொழிக் காஞ்சி: மறவன் ஒருவன் தான் பிறந்த குடியின் முதல்வனைப் புகழ்ந்துப் பாடுதல்.


11.உழபுல வஞ்சி: வஞ்சி மன்னன் பகைவர் நாட்டினைத் தீயிட்டுக் கொளுத்துதல்.


12.மழபுல வஞ்சி: வஞ்சி மன்னன் பகைவர் நாட்டுப் பொருட்களைக் கொள்ளையடித்தல்.


13.கொடை வஞ்சி: தனது வெற்றியைப் பாடிய புலவர்க்கு வஞ்சியரசன் பரிசு வழங்குதல்.


14.குறவஞ்சி: வஞ்சியரசனை எதிர்த்துப் போர் செய்யும் பகையரசன் பணிந்து திறை செலுத்துவது மற்றும் போர் செய்யாமல் பகைவரை பணிய வைத்து பாசறையிலே தங்கியிருத்தல்.


15.ஒரு தனிநிலை: தன்னந் தனியாளாக நின்று பகைவரைத் தடுத்த வஞ்சி மறவனின் நிலையைக் கூறுவது.


16.தழிஞ்சி: போரில் அஞ்சி ஓடுபவர்கள் மீது படைத் தொடுக்காத தன்மையினைக் கூறுவது.


17.பாசறை நிலை: பகையரசன் பணிந்த பின்னரும் வஞ்சி அரசன் பாசறைக்கண் தங்கியிருப்பது.


18.பெருவஞ்சி: முன்பு தீயிட்டும் (உழபுலவஞ்சி) பணியாத பகை மன்னனது நாட்டின் மீது மறுமுறையும் தீயிட்டு அழிப்பது.


19.பெருஞ்சோற்று நிலை: வஞ்சி வேந்தன் தனது படை மறவர்களுக்கு மிகுந்த சோற்றைக் கொடுத்தது.


20.நல்லிசை வஞ்சி: வஞ்சி வேந்தனது வெற்றியைப் புகழ்ந்துப் பாடுதல் மற்றும் அவனால் அழிந்துப் பட்ட பகை நாட்டிற்காக வருந்திப் பாடுதல் ஆகியவையும் ஆகும்.


4.காஞ்சிப் படலம்:


தன் நாட்டைக் கவருவதற்காக பகையரசன் (வஞ்சியரசன்) படையெடுத்து வருவதை அறிந்தான் ஒரு வேந்தன். அப்படைகள் தம் நாட்டிற்குள் வராமல் தடுக்கும் பொருட்டு காஞ்சி மறவர்கள் காஞ்சிப் பூவினைச் சூடிக்கொண்டு தம் எல்லையில் நின்று தடுத்துப் போர் புரிவது காஞ்சித்திணை எனப்படும்.


காஞ்சித்திணை துறைகள் மொத்தம்  – 21


1.காஞ்சி எதிர்வு: வஞ்சி வேந்தன் படையெடுத்து வர அதனைக் கண்ட காஞ்சி வேல்மறவனின் ஆற்றலை மிகுத்துச் சொல்வது.


2.தழிஞ்சி: வஞ்சியரசனின் படை தம் நாட்டின் எல்லையைத் தொடாத படி காத்து நிற்பது.


3.படை வழக்கு: காஞ்சி வேந்தன் தன் படைமறவர்களுக்கு துணைப்படையை வழங்குவது மற்றும் படைக் கருவிகளைப் பெற்ற மறவன் தன் ஆற்றலைத் தானேப் புகழ்ந்துக் கூறுவது.


4.பெருங்காஞ்சி: காஞ்சி மறவர் போரின்கண் தமது மறப்பெருமையை வெளிப்படுத்துவது.


5.வாள் செலவு: காஞ்சி அரசன் தன் வாளைப் போர்களத்திற்கு எடுத்துச் செல்லுமாறுக் கூறியது.


6.குடை செலவு: காஞ்சியரசன் தன் குடையைப் போர்களத்திற்கு எடுத்துச் செல்ல விடுவது.


7.வஞ்சினக் காஞ்சி: காஞ்சி மன்னன் சூளுரைப்பது. உறுதிபட சினந்து கூறுதல்.


8.பூக்கோள் நிலை: மறவர்கள் தம் அரசனிடமிருந்து காஞ்சிப்பூவினைப் பெறுதல்.


9.தலைக்காஞ்சி: போர்க்களத்தில் செயற்கரும் செயலைச் செய்து இறந்த மறவனின் தலையைப் பாராட்டுவது.


10.தலை மாராயம்:ஒரு பகை மறவனின் தலையைக் கொண்டு வந்த காஞ்சி மறவனுக்கு மன்னன் பெரும்பொருளைக் கொடுத்து சிறப்பிப்பது.


11.தலையோடு முடிதல்: இறந்த தலைவனின் தலையைக் கண்டு அவனுடைய மனைவி இறந்துபடுவதே ஆகும்.


12.மறக்காஞ்சி: வஞ்சி மறவர்கள் அஞ்சும்படியாகப் போர் செய்தல் மற்றும் ஒரு மறவன் தன்னுடையப் புண்ணைத் தானே கிழித்துக்கொண்டு உயிர்விடுதல்.


13.பேய்நிலை: புண்பட்டு இறந்த மறவனைப் பேய் காவல் காப்பது.


14. பேய்க்காஞ்சி: புண்பட்டுக் கிடப்பவனைப் பேய் அச்சுறுத்துவது.


15.தொட் காஞ்சி: மறவனின் புண்ணைப் பேய் தீண்டுவது.


16.தொடாக் காஞ்சி: மறவனின் புண்ணைத் தீண்டப் பேய் அஞ்சுவது.


17.மன்னைக் காஞ்சி: இறந்த மறவனின் புகழைப் பாராட்டி மனம் வருந்துவது.


18.கட்காஞ்சி: காஞ்சி வேந்தன் தன் வீரருக்குக் கள்ளினை வழங்கியது.


19.ஆஞ்சிக் காஞ்சி: கணவனின் இறப்பிற்குப் பின்னர் அவனுடைய மனைவி வாழ அஞ்சுவது மற்றும் போரில் இறந்த கணவனுடன் மனைவியும் உயிர்விடுதல் மற்றும் கணவனை அழித்தக் கருவியால் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டு உயிர் விடுதல்.


20.மகட்பாற் காஞ்சி: தன் மகளைக் கேட்கும் வஞ்சியரசனோடு காஞ்சியரசன் மாறுபட்டு நிற்பது.


21.முனைகடி முன்னிருப்பு: காஞ்சி வேந்தன் வஞ்சியரசனின் படையைப் புறமுதுகிட்டு ஓடச்செய்வது.


5.நொச்சிப் படலம்:  (நொச்சி – மதிலைக் காப்பது)


ஓர் அரசன் பகை அரசனின் கோட்டையைக் கைப்பற்றிவளைத்துக் கொள்வான். அப்போது முற்றுகையிடப்பட்ட அரசன் கோட்டைக்குள் இருந்துதன் மதிலைப் பகையரசன் கைப்பற்றாதவாறு நொச்சிப்பூவினைச் சூடிக்கொண்டு போரிடுதலை நொச்சித்திணை எனப்படும்.


நொச்சித்திணை துறைகள் மொத்தம்  – 8


1.மறனுடைப் பாசி: உழிஞை மறவர்களுக்குப் புறங்கொடாமல் நொச்சி மறசர்கள் போர் செய்வது.


2.ஊர்ச்செரு: அரணுக்குப் புறத்தே உள்ள ஊரின்கண் பகைவரோடு நொச்சியார் போர் புரிவது.


3.செருவிடை வீழ்தல்: பகைவர் உள்ளே நுழைய முடியாதபடி அரணைக் காக்கப் போரிட்டு இறந்த மறவனைப் பாராட்டுவது

.
4.குதிரை மறம்: குதிரைப் படையின் மற மாண்பினைப் பாராட்டிக் கூறுவது.


5.எயிற்போர்: மதிலைக் காத்து நிற்கும் நொச்சி மறவரின் மறமாண்பினைச் சிறப்பித்துக் கூறுவது.


6.எயில்தனை அழித்தல்: எயிலைக் காக்கின்ற நொச்சி மறவர்களை பகைவர் வீழ்த்துவது.


7. அழிபடை தாங்கல்: பகைவரால் அழிந்து பட்ட காவல் படைக்கு மாறாக பிற மறவர்கள் அக்காவலில் நின்று தடுத்தல்.


8.மகள் மறுத்து மொழிதல்: மகளைக் கேட்ட பகையரசனுக்கு நொச்சி வேந்தன் பெண் கொடுக்க மறுப்பது.


6.உழிஞைப் படலம்:


பகையரசனின் கோட்டையைக் கவரக் கருதும் உழிஞை அரசன், பகைநாட்டின் காவற்காட்டையும் அகழியையும் அழித்துக் கோட்டையைக் கைப்பற்ற நினைப்பான். அதன் பொருட்டு மறவர்கள் உழிஞைப்பூவினைச் சூடி போருக்குச் செல்வது உழிஞைத் திணை எனப்படும்.


உழிஞைத்திணை துறைகள் மொத்தம்  – 28

1.குடைநாட்கோள்:உழிஞையரசன் நல்ல நாளில் தன் வெண்கொற்றக் குடையைப் போருக்கு அனுப்புவது.


2.வாள்நாட்கோள்: உழிஞையரசன் தன்னுடைய வெற்றி வாளை நல்ல நாளில் புறவீடு விட்டது.


3.முரச உழிஞை: பொன்னால் ஆகிய உழிஞைப் பூக்களை அணிவித்து முரசினை வழிபடுவது.


4.கொற்ற உழிஞை: பகைவரின் அரணைக் கைப்பற்ற உழிஞையரசன் படையெடுத்துச் செல்வது.


5.அரச உழிஞை: உழிஞை வேந்தனது புகழினைப் பாராட்டுவது.


6.கந்தழி: உழிஞை வேந்தனை திருமாலாகக் கொண்டு புகழ்ந்துரைப்பது.


7.முற்றுழிஞை: சிவப்பெருமான் சூடிய உழிஞைப்பூவின் சிறப்பைக் கூறுவது.


8.காந்தள்: முருகப்பெருமான் சூடிய காந்தள் பூவின் சிறப்பினைக் கூறுவது.


9.புறத்திறை: பகைவர் நாட்டின் மதிலுக்குப் புறத்தே தங்குவது.


10.ஆர்எயில் உழிஞை: நொச்சியரசனுடைய அரண் வலிமையை மறவர்கள் எடுத்துக் கூறுவது.


11.தோல் உழிஞை: உழிஞையரசன் தனது கிடுகுப் (ஒரு வகைப் போர்கருவி) படையைப் பாராட்டியது. தோல் – கிடுகுக்கருவி


12.குற்றுழிஞை: உழிஞை வேந்தன் தான் ஒருவனாக நின்று போர்செய்து அரணைக் கைப்பற்றியது மற்றும் உழிஞை வேந்தனது படை காவற்காட்டைக் கடந்து செல்லுதல் மற்றும் அப்படையானது கூத்தாடிக் கொண்டு நொச்சியாரின் கோட்டைக்குள் புகுதல்.


13.புறத்துழிஞை: உழிஞை மறவர் நொச்சியாரின் காவல்காட்டைக் கடந்து அகழியை அடைதல்.


14.பாசிநிலை: உழிஞையார் அகழிக்கரையில் நொச்சியாரின் வலிமைக் கெடப் போர் புரிவது.


15.ஏணி நிலை: உழிஞை மறவர்கள் நொச்சியாளாரின் மதில்மேல் ஏணியைச் சாத்தியது.


16.எயிற்பாசி: உழிஞையார் ஏணிமீது ஏறிச் செல்லும் நிலை.

17.முது உழிஞை: உழிஞையார் பகைவருடைய மதிலின் மீது குதித்தல் மற்றும் உழிஞை ஒற்றன் பகைவர் நிலையை அறிவித்தல்.


18.அகத்து உழிஞை: மதிலின் அகத்து உழிஞையார் நொச்சியாரை வென்றது.


19.முற்றுமுதிர்வு: நொச்சி வேந்தனின் முரசினது ஒலி கேட்டு உழிஞை வேந்தன் மிகுந்த சினம் கொள்வது.


20.யானை கைக்கோள்: நொச்சியாரின் யானைகளை உழிஞை மறவர்கள் கைப்பற்றுவது.


21.வேற்றுப்படை வரவு: நொச்சியரசனுக்கு துணை செய்ய வேற்றரசன் வருவது.
2

2.உழுது வித்திடுதல் : நொச்சியாரின் அரணை அழித்து, கழுதைப் பூட்டி உழுது கவடி(உண்ணா வரகு) விதைப்பது.


23.வாள் மண்ணுநிலை: உழிஞை வேந்தனின் வெற்றி வாளைப் புனித நீராட்டுவது.


24.மண்ணுமங்கலம்: வெற்றிப்பெற்ற உழிஞை வேந்தன் தன்னை மணமகனாக ஒப்பனைச் செய்வது.


25.மகட்பால் இகல்: நொச்சியாரின் மகளை விரும்பி உழிஞையரசன் மதிற்புறத்தில் தங்கியிருத்தல்.


26.திறைகொண்டு பெயர்தல்: நொச்சி வேந்தனிடமிருந்து திறைப்பொருளைப் பெற்று உழிஞையரசன் தன் நாட்டிற்குத் திரும்புதல்.


27.அடிப்பட இருத்தல்: பகைவர் நாடு தன்கீழ் அடிமைப்பட்டு இருப்பதற்காகப் பாசறைக்கண் தங்கியிருப்பது.


28.தொகை நிலை: உழிஞை வேந்தனின் ஆற்றலைக் கண்ட பகைவேந்தர்கள் பலரும் அவனிடம் தஞ்சம் புகுவது.


7.தும்பைப் படலம்:


பகையரசர் இருவர் ஓரிடத்தைப் போர்களமாகக் கொண்டு வெற்றியைக் குறிக்கோளாக வைத்துக் கடும் போர் செய்வர். இப்போர் தத்தம் ஆற்றலை வெளிப்படுத்துவதாக அமையும். இப் போரிடத்து தும்பைப் பூவினைச் சூடி போரிடுவதுதும்பைத் திணை எனப்படும்.


தும்பைத்திணை துறைகள் மொத்தம்  – 23


1.தும்பை அரவம் : அரசனிடமிருந்து பொருள் பெற்ற படைமறவர் மகிழ்ந்து ஆரவாரம்செய்வது ஆகும்.


2.தானை மறம்: இருதிறத்துப் படைகளும் போர் செய்து அழியாமல் காத்தது. போரினை விரைந்து மேற்கொள்வதற்கு ஊக்கப்படுத்துவது. வேற்படை மறவரின் சிறப்பினை எடுத்துக் கூறுவது.


3.யானை மறம்: தும்பை அரசனுடைய யானையின் வெற்றியை கண்டவர்கள் வியந்து போற்றியது ஆகும்.


4.குதிரை மறம்: தும்பை அரசனுடைய குதிரையின் திறத்தை மிகுத்துச் சொல்லியது.


5.தார்நிலை: பகைவரின் தார்படையை (தரைப்படை) தான் ஒருவனாக நின்று தகர்ப்பேன் என ஒரு வீரன் கூறுவது மற்றும் தன் அரசனை சூழ்ந்து கொண்ட பகையரசர்களை தான் ஒருவனாக நின்று போர் செய்து காத்தல்.


6.தேர்மறம்: தும்பை அரசனுடைய தேர் வலிமையைக் கூறுவது.


7.பாண்பாட்டு: போர்களத்தில் இறந்துப்பட்ட மறவர்களுக்குரிய இறுதிக்கடன்களை பாணர்கள் செய்வது ஆகும்.


8.இருவரும் தபுநிலை: போர்களத்தில் இருதிறப் படைகளோடு அரசரும் இறந்துபடுவது ஆகும். (தபுதல் – சாதல்)


9.எருமை மறம்: புறமுதுகிட்டு ஓடும் தன்படையைச் சினந்து, தான் மட்டும் பகைவரை எதிர்த்து நின்று தடுக்கும் மறவனின் ஆண்மையைப் போற்றியது.


10.ஏம எருமை: தன்னிடமிருந்த ஒரே வேலினை யானை மீது எறிந்த பின்பும் கருவி தேடி அலையாமல் தன் தோள் வலிமையால் பகைவரை வெற்றிக் கொண்டது ஆகும்.


11.நூழில் :பகைவரின் மார்பை பிளந்த மறவன் தன் மகிழ்ச்சியின் காரணமாக போர்க்களத்தில் வேலினை கீழும் மேலுமாக சுழற்றி ஆடியது.


12.நூழில் ஆட்டு: தும்பை மறவன் ஒருவன் எறிந்த வேலானது பகைவனின் மார்பைப் பிளந்தது. அவ்வேலினைப் பறித்து பகைவர்கள் போர்க்களத்தை விட்டு ஓடும்படியாக வீசியது.


13.முன்தேர்க் குரவை: தும்பை மறவர்கள் தம் அரசனின் தேருக்கு முன் நின்று குரவைக் கூத்தினை ஆடுவது.


14.பின்தேர்க் குரவை: தும்பை மறவர்களும் விறலியரும் தம் அரசனின் தேருக்கு பின் நின்று குரவைக் கூத்தினை ஆடுவது.


15.பேய்க்குரவை: தும்பை அரசனின் தேருக்கு முனனும் பின்னும் பேய்மகள் நின்று ஆடுவது.


16.களிற்றுடனிலை: தன்னால் வீழ்த்தப்பட்ட யானையின் கீழ் வீழ்ந்து மறவன் ஒருவன் அதனுடன் ஒருங்கே இறப்பது.


17.ஒள்வாள் அமலை: போரில் இறந்த பகையரசனைச் சூழ்ந்து நின்று தும்பை மறவர்கள் வாளினை வீசி ஆடுவது.


18.தானை நிலை: இருபக்கத்து மறவர்களும் தன் புகழைப் பேசும்படி மறவன் ஒருவன் மேம்பட்டு நிற்றலைச் சிறப்பித்துக் கூறுவது.


19.வெருவெரு நிலை: ஒருவனுடைய உடலை துளைத்த அம்புகள் அவனை நிலத்தில் விழாதபடி தடுத்து நிற்பது.


20.சிருங்கார நிலை: போர்க்களத்தில் இறந்து கிடக்கும் மறவனது உடலை அவன் மனைவி தழுவி நிற்பது.


21.உவகைக் கலுழ்ச்சி: விழுப்புண் பட்டு இறந்த கணவனைக் கண்டு அவன் மனைவி மகிழ்ந்து கண்ணீர் சிந்துவது.


22.தன்னை வேட்டல்: தன் அரசன் போர்க்களத்தில் இறந்ததைக் கேட்ட மறவன் அப்போர்க்களத்திலே உயிரை விடுதல் மற்றும் களத்தில் இறந்த கணவனைக் காண மனைவி வருதல்.


23.தொகை நிலை: இருநாட்டு அரசாகளும் இறந்துபட அவர்தம் போர் மறவர்கள் மட்டும் தொடர்ந்து போர் செய்து இறப்பது.


8.வாகைப் படலம்:


பகைவரை வென்று அதற்கு அறிகுறியாக வாகை மாலையைச் சூடுவது வாகைத்திணை எனப்படும்.


வாகைத்திணை துறைகள் மொத்தம்  – 32


1.வாகை அரவம்: போர் மறவர் வாகைப்பூச் சூடியும், வீரக்கழல் அணிந்தும் ஆரவாரிப்பது.


2.அரச வாகை: வாகை வேந்தனின் செங்கோல் சிறப்பை எடுத்துரைப்பது.
3.முரச வாகை: வாகை வேந்தனின் வெற்றி முரசைச் சிறப்பிப்பது.


4.மறக்களவழி: செங்கோல் மன்னனை உழவனாக உருவகம் செய்து பாடுவது.

5.களவேள்வி: வாகை அரசன் போர்க்களத்தில் வேள்வி செய்வது.


6.முன்தேர்க்குரவை: வெற்றிப் பெற்ற அரசனுடைய தேரின் முன் பேய் கூத்தாடுவது. (தும்பை.13)


7.பின்தேர்க்குரவை: வாகை அரசனின் தேரின் பின்னர் மறவர்களும் விறலியரும் நின்று குரவைக் கூத்தினை ஆடுவது. (தும்பை.14)


8.பார்ப்பன வாகை: வேதம் உணர்ந்த பார்ப்பனனின் மேம்பாட்டைக் கொண்டாடுவது.


9.வாணிக வாகை: அறுவகைத் தொழிலினையும் சிறக்கச் செய்கின்ற வணிகர் தம் மேம்பாட்டைக் கூறுவது.


10.வேளாண் வாகை: வேளாளரைச் சிறப்பித்துக் கூறுவது.


11.பொருந வாகை: பிறருடைய ஒவ்வாமை நோக்கி யாரையும் இகழ வேண்டாம் என்பது.


12.அறிவன் வாகை: மூன்று காலத்தையும் உணர்ந்த அறிவனின் நிலையைஎடுத்துரைப்பது.


13.தாபத வாகை: துறவியரின் தவநெறி பிறழாத வாழ்வினைப் போற்றி உரைப்பது.


14.கூதிர்ப் பாசறை: காமத்தை மிகுதிப்படுத்தும் கூதிர்ப்பருவத்திலும் அரசன் பாசறைக்கண் தங்குவது.


15.வாடைப் பாசறை: வாடைக்காற்று வீசிய நிலையிலும் அரசன் பாசறைக்கண் இருப்பது.


16.அரச முல்லை: மற மாண்பினை உடைய அரசனின் நல்இயல்புகளை மிகுத்துக் கூறுவது.


17.பார்ப்பன முல்லை: அரசரின் பகை நீக்கிச் சந்து செய்து நட்பாக்கும் நடுவுநிலைமை உடைய பார்ப்பனனின் சிறப்பைக் கூறுவது.


18.அவைய முல்லை: அறம்கூறும் சான்றோரின் தன்மையைக் கூறுவது.


19.கணிவன் முல்லை: காலத்தின் பகுதிகளைக் கணக்கிட்டு ஆராய்ந்து கூறும் புலவனின் திறத்தைச் சிறப்பிப்பது.


20.மூதின் முல்லை: பழமை வாய்ந்த மறக்குடியில் பிறந்த பெண்டியரின் மறப்பண்பினைச் சிறப்பித்துக் கூறுவது.


21.ஏறாண் முல்லை: மறக்குடியின் மேலோங்கும் ஒழுக்கத்தினைச் சிறப்பித்துக் கூறுவது.


22.வல்லாண் முல்லை: மறவன் ஒருவனின் ஆண்மைத் தன்மையை எடுத்துரைப்பது

.
23.காவல் முல்லை: ஓர் அரசனின் காவல் தொழிலைச் சிறப்பித்துக் கூறுதல் மற்றும் அக்காவலைச் சான்றோர் எடுத்துரைத்தல் ஆகிய இரண்டும்.


24.பேராண் முல்லை: அரசன் தன் பகைவரை வென்று அக்களத்தை தனதாக்கிக் கொண்ட சிறப்பினைக் கூறுவது.


25.மறமுல்லை: மறவன் ஒருவனின் மேன்மையைச் சிறப்பித்துக் கூறுவது.


26.குடைமுல்லை: அரசனது வெற்றிக்குடையைச் சிறப்பித்துக் கூறுவது.


27.கண்படை நிலை: அரசனின் துயில் சிறப்பைக் கூறுவது.


28.அவிப்பலி:மறவன் அரசனுக்காகத் தம் உயிரைப் போர்க்களத்தில் நீத்தல்.


29.சால்பு முல்லை: நற்குணங்கள் நிறைந்த சான்றோரின் நல்லியல்புகளை எடுத்துக் கூறுவது.


30.கிணை நிலை: வேளாளனைக் கிணை கொட்டுவோன் புகழ்ந்து கூறுவது.


31.பொருளொடு புகறல்: மெய்ப்பொருள் மீது பற்றுக்கொள்ளுமாறு கூறுதல்.


32.அருளொடு நீங்கல்: உலகப்பற்றிலிருந்து விலக வேண்டுமெனக் கூறுவது.

9.பாடாண் படலம்:


புகழ், வலிமை, கொடைத்தன்மை, இரக்கம் ஆகியவற்றில் சிறப்பைப் பெற்ற ஓர் ஆண்மகனுடைய ஒழுக்கத்தைக் கூறுவது பாடாண் திணை எனப்படும்.

பாடாண் திணை துறைகள் மொத்தம்  – 47


1.வாயில் நிலை: புலவன் ஒருவன் தன் வருகையை மன்னனுக்கு உரைப்பாய் என வாயிற்காவலனிடம் கூறுவது.


2.கடவுள் வாழ்த்து: அரசனால் வணங்கப்படுகின்ற கடவுளருள் ஒருவரை உயர்த்திக் கூறுவது.


3.பூவை நிலை: காயாம் பூவினைப் புகழ்ந்துக் கூறுவது.


4.பரிசில் துறை: இரவலன் தான் விரும்பியப் பொருளை அரசனிடமிருந்து கேட்பது.


5.இயல்மொழி வாழ்த்து: முன்னோர் கொடுத்ததைப் போல நீயும் கொடுக்க வேண்டும் என்றல் மற்றும் அரசனுடைய இயல்பினை எடுத்துக் கூறுவது.


6.கண்படை நிலை: அரசனுடைய ஆழ்ந்த உறக்கத்தைச் சிறப்பிப்பது.


7.துயில் நிலை: உறங்கும் அரசனை அவ் உறக்கத்திலிருந்து எழுப்புவது.


8.மங்கல நிலை: துயில் எழுந்த அரசனுக்கு வாழ்த்துக் கூறுதல் மற்றும் ஓர் அரசன் இயல்பாகவே ஆக்கத்தைப் பெற்றான் எனக் கூறுதல்.


9.விளக்கு நிலை: அரசனுடைய திருவிளக்கு நிலையைக் கூறுவது மற்றும் அரசனைக் கதிரவனோடு ஒப்பிட்டுக் கூறுதல்.


10.கபிலை கண்ணிய புண்ணிய நிலை: அரசன் கொடையாகக் கொடுக்கும் பசுவினுடையச் சிறப்பினைக் கூறுதல்.


11.வேள்வி நிலை: அரசனுடைய வேள்வியைச் சிறப்பித்துக் கூறுவது.


12.வெள்ளி நிலை: அரசனின் செங்கோன்மையைக் கோள் வழிச் சிறப்பிப்பது.


13.நாடு வாழ்த்து: ஓர் அரசனுடைய நாட்டை வாழ்த்திக் கூறுவது.


14.கிணை நிலை: கிணைப்பறை கொட்டுபவனுடைய நிலையை உரைப்பது. (வாகை.30)


15.களவழி வாழ்த்து: போரில் பெற்ற செல்வத்தை வாழ்த்துவது.


16.வீற்று இனிதிருந்த பெருமங்கலம்: அரசன் வீற்றிருந்த அரியணைச் சிறப்பைக் கூறுவது.


17.குடுமி களைந்த புகழ்சாற்று நிலை: பகையரசரை வென்று அவர்தம் குடுமியைக் களைந்த நிலையைக் கூறுவது.


18.மண் மங்கலம்: அரசன் மகளிரோடு புணர்ந்து மகிழ்வது.


19.பொலிவு மங்கலம்: மன்னனின் மகப்பேற்றினைப் புகழ்ந்துக் கூறுவது.


20.நாள் மங்கலம்: அரசனது பிறந்தநாளைச் சிறப்பித்துக் கூறுவது.


21.பரிசில் நிலை: பரிசு பெற்றோன் தன் ஊருக்குச் செல்ல விரும்புவது.


22.பரிசில் விடை: பரிசிலருக்குப் பொருள் வழங்கிச் சென்று வருக என விடைக் கொடுப்பது.


23.ஆள்வினை வேள்வி: அரசன் இல்லறம் நடத்தும் பாங்கைச் சிறப்பித்துக் கூறுவது.


24.பாணாற்றுப்படை: ஒரு பாணன் மற்றொரு பாணனை ஆற்றுப்படுத்துவது.


25.கூத்தராற்றுப்படை: பரிசில் பெற்றுச் செல்லும் ஒரு கூத்தன் மற்றொரு கூத்தனை ஆற்றுப்படுத்துவது.


26.பொருநர் ஆற்றுப்படை: பரிசில் பெற்றுச் செல்லும் ஒரு பொருநன் மற்றொரு
பொருநனை ஆற்றுப்படுத்துவது.


27.விறலியாற்றுப்படை:பரிசில் பெற விரும்பும் ஒரு விறலியை ஒரு வள்ளலிடம் ஆற்றுப்படுத்துவது.


28.வாயுறை வாழ்த்து: பின்னர்ப் பலித்துப் பயன் தரும் தன் சொல்வழி நடக்குமாறு கூறுவது.


29.செவியறிவுறூஉ: ஓர் அரசனுக்கு அறிவுரைக் கூறுவது.


30.குடை மங்கலம்: அரசனுடைய குடையினைச் சிறப்பித்துக் கூறுவது.


31.வாள் மங்கலம்: அரசனுடைய வாளைச் சிறப்பித்துக் கூறுவது.


32.மண்ணுமங்கலம்:மன்னன் மங்கல நீராடுதலின் மாண்பினைக் கூறுவது.


33.ஓம்படை: அரசனுக்கு சான்றோர் அறிவுரைக் கூறுதல்.


34.புறநிலை வாழ்த்து: வழிபடு தெய்வம் காக்குமாறு வாழ்த்துவது.


35.கொடிநிலை: அரசனுடையக் கொடியைத் தெய்வக் கொடியோடு ஒப்பிட்டுக் கூறுவது.


36.கந்தழி: திருமாலின் வெற்றியைப் புகழ்ந்து கூறுவது.


37.வள்ளி: மகளிர் முருகனுக்கு வள்ளிக் கூத்தினை ஆடுவது.


38.புலவராற்றுப்படை: அருள்பெற்ற புலவன் அது பெறாத மற்றொரு புலவனை ஆற்றுப்படுத்துவது.


39.புகழ்ந்தனர் பரவல்: நினைத்ததைப் பெறுவதற்காக இறைவனைப் போற்றி வணங்குவது.


40.பழிச்சினர் பணிதல்: உலக இன்பத்தை நுகர்தல் பொருட்டு இறைவனை வணங்குதல்.


41. கைக்களை: ஒரு பெண் தலைவனுடைய மாலையினைப் பெற விரும்புவது.


42.பெருந்திணை: தன்னை விரும்பாத தலைவனை ஒருத்தி தழுவ விரும்புவது.


43.புலவி பொருளாகத் தோன்றிய பாடாண் பாட்டு: தலைவனின் மார்பினை இனித் தழுவ மாட்டேன் என ஊடலுற்றப் பெண் கூறுவது.


44.கடவுள் மாட்டுக் கடவுள் பெண்டிர் நயந்த பக்கம்: தெய்வப்பெண்கள் தன் இனத்தைச் சார்ந்த ஆண் தெய்வங்களை விரும்பியது.


45.கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம்: மானிடப் பெண்கள் கடவுளை விரும்புவது.


46.குழவிக்கண் தோன்றிய காமப்பகுதி: சிறுவனை மங்கைப்பருவ பெண்ணொருத்தி விரும்புவது.


47.ஊரின்கண் தோன்றிய காமப்பகுதி: காதல் நிகழ்வுகள் வெளிப்படத் தோன்றும் ஊரைச் சிறப்பித்துக் கூறுவது.


10.பொதுவியல் படலம்:


வெட்சி முதல் பாடாண் ஈறாக கூறப்பட்ட படலங்கள் ஒன்பது. ஆவற்றுக்குப் பொதுவாக அமைந்த துறைகளை விளக்குவதால் இது பொதுவியல் திணை எனப்பட்டது.  ஆசிரியர் இத்திணையை நான்காகப் பகுத்துள்ளார். அவை,


I.பொதுவியற்பால


II.சிறப்பில் பொதுவியற்பால


III.காஞ்சி பொதுவியற்பால


IV.முல்லை பொதுவியற்பால என்பவனாம்.

I . பொதுவியற்பால : (12 துறைகள்)


1.போந்தை: சிறப்பு பொருந்திய பனம்பூ மாலையைப் புகழ்தல். (சேர நாட்டு பூ)


2.வேம்பு : வேப்பம் பூமாலையைப் புகழ்தல். (பாண்டிய நாட்டுப் பூ)


3.ஆர்: அத்திப்பூ மாலையைச் சிறப்பித்துக் கூறுவது. (சோழ நாட்டு பூ)


4.உன்னநிலை: உன்னம் என்னும் மரத்தினது நிலையைக் கூறுவது. இம்மரம் நிமித்தம் உணர்த்தும் மரம் ஆகும்.


5.ஏழக நிலை: அரசிளங் குமாரனாய் ஆட்டுக்கிடாயில் ஏறிவருதல் மற்றும் இளமையைப் பொருட்படுத்தாமல் அரசுரிமையை ஏற்றல்.


6.கழல்நிலை: ஓர் அரசனின் வீரக்கழலைப் புகழ்ந்து கூறுவது.


7.கற்காண்டல்: இறந்தவனுக்குக் கல் நிறுத்த நல்ல கல்லை தேர்ந்தெடுப்பதைக் கூறுவது.

8.கற்கோள் நிலை: தேர்ந்தெடுத்த கல்லைக் கைக்கொள்வது.


9.கல் நீர்ப்படுத்தல்: தேர்ந்து எடுத்து வந்த கல்லை நீரில் போட்டு வைத்தல் மற்றும் நடுதற்குரிய இடத்தில் சேர்த்தலும்.


10.கல் நடுதல்: மறவரின் நினைவாகக் கல்லை நடுதல்.


11.கல்முறை பழிச்சல்: நட்ட கல்லினை வாழ்த்துவது.


12.இற்கொண்டு புகுதல்: கோயிலை எழுப்பி அதனுள் நடுகல்லை எடுத்துச் செல்வது.


II. சிறப்பில் பொதுவியற்பால: (11 துறைகள்)


1.முதுபாலை: பாலை நிலத்தில் தன்னுடன் வந்த தலைவன் இறந்ததால் தலைவிவருந்துவது.


2.சுரநடை: காட்டில் மனைவியை இழந்து கணவன் வருந்துவது.


3.தபுதார நிலை: மனைவியை இழந்த கணவன் வருத்தத்துடன் தனியே வாழ்வது.


4.தாபத நிலை: கணவனை இழந்த பெண் கைம்மை நோன்பினை மேற்கொள்வது.


5.தலைப்பெயல் நிலை: குழந்தையைப் பெற்றெடுத்த பெண் இறந்து பட்டதை கூறுவது.


6.பூசல் மயக்கு: போரில் இறந்த இளைஞனின் சுற்றந்தார் அழுது ஆரவாரம் செய்வது மற்றும் மன்னன் இறந்ததற்கு வருந்துதல் ஆகியவையும்.


7.மாலை நிலை: கணவனை இழந்ததால் உயிர் விடக்கருதி மனைவி மாலைப்பொழுதில் தீப்புக நின்றது.


8.மூதானந்தம்: இறந்த கணவனோடு உயிர் விட்ட மனைவியின் நிலையைக் கண்டோர் புகழ்வது மற்றும் தான் எண்ணியதை முடிக்காமல் வீரன் இறந்துபடுதல்.


9.ஆனந்தம்: நிமித்தம் வேறுபட்டதால் தலைவன் நிலையை எண்ணித் தலைவி நடுங்குதல் மற்றும் இறந்துபட்ட மறவனுக்காக வருந்துவது.


10.ஆனந்தப் பையுள்: போரில் இறந்த கணவனை எண்ணி மனைவி மகவும் வருந்துவது.


11.கையறுநிலை: தலைவனின் இறப்பைக் கண்டு சூழ்ந்திருந்தோரின் செயலற்ற நிலையைக் கூறுவது மற்றும் இறந்தோனுடைய புகழை எடுத்துக் கூறி வருந்துவதும் ஆகும்.


III. காஞ்சி பொதுவியற்பால: (6 துறைகள்)


1.முதுமொழிக் காஞ்சி: முன்னோர்களால் மொழியப்பபட்ட அறம் முதலான பொருட்களைக் கூறுதல்.


2.பெருங்காஞ்சி: கண்ணுக்குப் புலனாகும் அனைத்துப் பொருள்களும் நிலைபெறாமல் அழியும் என்பது.


3.பொருண்மொழிக்காஞ்சி: மெய்ப்பொருளை உணர்த்துவது ஆகும்.


4.புலவர் ஏத்தும் புத்தேள் நாடு: வீட்டுலகத்தின் இயல்பினை எடுத்துரைப்பது.


5.முதுகாஞ்சி: உணர்தற்கு உரிய பொருளை உணர்த்துவது.


6.காடு வாழ்த்து: இடுகாட்டினைச் சிறப்பித்துக் கூறுவது.


IV. முல்லை பொதுவியற்பால: (8 துறைகள்)


1.முல்லை: தலைவன் தலைவியோடு கூடிக் களித்த இன்பத்தின் மிகுதியை எடுத்துரைப்பது.


2.கார்முல்லை: தலைவனின் வரவுக்கு முன்னால் கார்காலம் வந்ததை கூறுவது.


3.தேர்முல்லை: பகைவென்று தேரின்மீது ஏறி வரும் தலைலவனின் நிலையைக் கூறுவது.


4.நாண்முல்லை: பெண் ஒருத்தி நாணத்தின் துணையால் தன்னைக் காத்துக் கொண்டது.


5.இல்லாள் முல்லை: கற்புடை மகளிரின் இயல்பினைக் கூறுவது.


6.பகட்டு முல்லை: வேளாளனை எருதோடு ஒப்பிட்டுக் கூறுவது.


7.பால் முல்லை: ஊழினது மிகுதியைச் சிறப்பித்துக் கூறுவது.


8.கற்பு முல்லை: தலைவி தலைவனின் அழகைப் பாராட்டுதல் மற்றும் தலைவன் பிரியனும் தலைவி தன் கற்பைக் காத்தல் மற்றும் தலைவன் தலைவியரின் மனைவளத்தைப் பாராட்டுதல் ஆகிய மூன்றும் ஆகும்.

 

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »