Friday, September 12, 2025
Home Blog Page 13

திரிகடுகம் கூறும் இல்லறம்|ஆய்வுக்கட்டுரை| க.சதீஷ்குமார்

திரிகடுகம் கூறும் இல்லறம் - க.சதீஷ்குமார்
முன்னுரை
          
இல்+வாழ்க்கை – இல்வாழ்க்கை. இவ்வாழ்க்கையில் இல்லாலோடு கூடி வாழ்தலே சிறப்புடையதாகும். இல்லால் இல்லாத வாழ்க்கை இலையற்ற மரம், வாசனையில்லா பூ போன்றதாகும். அவ்வகையில் கணவனும், மனைவியும் விட்டுக்கொடுத்து வாழும் வாழ்க்கை என்றும் கெட்டுப்போவதில்லை. அவ்வகையில் இல்வாழ்க்கை பயனில் மனையாளின் பங்கு மிக முக்கியமாகும். அத்தகைய இல்வாழ்க்கையைப் பற்றி பதினெண்கீழ்க்கணக்கு நூலான திரிகடுகத்தில் நல்லாதனார் கூறும் விதத்தை இக்கட்டுரை ஆராய்கிறது.

இல்லறம் – இனிய அறம்
               
‘அறம்’ என்பது ஒழுக்கத்திலிருந்து விலகாமல் இருப்பதாகும். அவ்வகையில் மனைவி என்பாள் அருந்ததி (ஏழு முனிவருள் ஒருவராகிய வசிட்டர் மனைவி) போன்று கற்புடையவராக  இருக்கவேண்டும். அவ்வாறு இருந்தால் இம்மை மட்டுமின்றி மறுமையிலும் துன்பங்களைத் தீர்த்து இன்பத்துடன் வாழ்வாள் என்பதை,
            
“அருந்ததிக் கற்பினாள் தோளும் திருந்திய             
தொல்கொடியின் மாண்டார் தொடர்ச்சியும்”              ( திரிகடுகம்.பாடல் எண். 1)
               
என்னும்  பாடல் வரிகள் மூலம் அறிய முடிகிறது. இதன்மூலம் கணவன் என்பான் மனைவியை ஐயப்படாமலும், மனைவி என்பாள் கணவனை  ஐயப்படாமலுல்  வாழவேண்டும் என்பதை அறிய முடிகிறது.

விருந்தோம்பலின் அறம்              
               
பிறருக்கு விருந்து வைப்பவனுக்கு அவன் பொருள் குறையாது, பொருள் மேன்மேலும் பெருகும். கடன்பட்டாவது செய்வதைச் செய்தே ஆக வேண்டும் என்பது விருந்தோம்பல் பண்புகளில் ஒன்றாகும். இதனை திருவள்ளுவர்,
            
“வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை             
பருவந்து பாழ்படுதல் இன்று”    (திருக்குறள். விருந்தோம்பல் கூறல்; குறள். எண் -83 )

எனக் குறிப்பிட்டிருப்பதை அறிந்துகொள்ள முடிகின்றது. அந்த வகையில் வீட்டுக்கு வந்த உறவினரை வரவேற்று, உபசரித்து அனுப்புதலே தமிழரின் தலையாய செய்கையாகும். வறுமையால் வருந்துவோருக்கு ஈதலும், வறுமையற்ற இடத்து தன் குடிப்பிறப்புக்குத் தாழ்வானவற்றைச் செய்யாமலிருத்தலும் சிறந்த இல்வாழ்க்கைக்கான அறமாக கருதப்படுகிறது. இதனை,

 “அலர்ந்தார்கொன்  றீந்த புகழும் துளங்கினுந்            
 தன்குடிமை குன்றாத் தகைமையும் … ”        (திரிகடுகம்.பாடல் எண்.41)

என்ற செய்யுள் அடிகள் தெளிவுப்படுத்துகின்றன. மேலும், விருந்தோம்பல் பண்பு இல்லாத மனைவி, நற்குணமில்லாதவரின் வீட்டின் அருகே குடியிருப்பது போன்றதாகும். கணவனுக்கும், மனைவிக்கும் ஊடல் வரும்போது ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து  வாழ்தல் வேண்டும். விருந்தினர்கள் வீடு வரும்போது, தங்களின் ஊடலை மறந்து அவர்களுக்கு விருந்து உபசரிப்பதே சிறந்த விருந்தோம்பல் அறமென்பதை ஆசிரியர் உணர்த்துகின்றார். 

இம்மையில் அறம்
               
மனிதன் என்பவன்; பிறருக்கு உதவி செய்யவேண்டும். செய்யாதவர்கள் இப்பிறவியில் மட்டுமன்றி அடுத்த பிறவியிலும் அறத்துடன் வாழப்பயனற்றவர்கள் என்பதனை,
            
“ஏவாது மாற்றும் இளங்கிளையும் காவாது             
வைதள்ளிச் சொல்லுந் தலைமகனும் – பொய்தள்ளி             
அம்மனை தேய்க்கும் மனையாளும் இம்மூவர்             
இம்மைக்கு உறுதி இல்லார்”       (திரிகடுகம்.பாடல் எண்.49)
               
என்ற பாடல் அடிகள் சுட்டுகின்றன. அதாவது பெற்றோர் சொல்லை கேளாத பிள்ளையும், குடும்பததை பாதுகாக்காத தலைவனும், தேவையற்ற பொய்களைப்பேசி குடும்பத்தை நடத்தும் பெண்ணும் ஆகிய மூவரும் இம்மையில் அறமற்றவர்கள் என்பதை ஆசிரியர் சுட்டுகின்றார்.
பிள்ளைகள் பெற்றோர் சொல்கேட்டு வாழவேண்டும், கணவன் மனைவி இடையே மறைவுத்தன்மை இல்லாமல் வெளிப்படைத் தன்மையோடு வாழ்க்கையை அமைத்துக்கொண்டு வாழவேண்டும் என்பதை அறியமுடிகின்றது.

கெட்டுபோகும் செல்வம்
               
செல்வம் மிகுதிப் படின் அது நம்மை அழிக்கும். பிறரிடம் நாம் கொடுக்கும் செல்வம் அதிகப்படின் அது நம்மைக் காக்கும்.
            
“அருளோடும் அன்போடும் வாராப் பொருளாக்கம்             
புல்லார் புரள விடல்”       (திரிகடுகம்.பொருள் செயல்வகை.குறள்; எண் – 5)

தன்னுடைய உறவினர்களைக் காக்காத செல்வம், விளையும் காலத்தில்  காக்காத பயிர் போன்றது. உறவினர் எனும் நற்பயிருக்கு செல்வம் எனும் உரமூட்டுதலே நல் இல்லறத்திற்கு எடுத்துகாட்;டாகும். இது, உயிரோடு இருக்கும்போது ஒருவர்க்கு நீர் கொடுக்காமல் விட்டு, அவர் இறக்கும் போது பால் ஊற்றுவதற்கு சமமாகும்.
           
“கிளைஞர்க்கு உதவாதான் செல்வமும் பைங்கூழ்            
விளைவின்கண் போற்றான் உழவும் – இளையனாயக்;” (திரிகடுகம்.பாடல் எண். 59)

மேலும். செல்வம் என்பது இறைக்க இறைக்க ஊறும் கிணற்று நீர் போன்றது. நீர் இறைத்தால் பயிர் பயன் பெறும். செல்வம் அளித்தால் பிறர் வாழ்க்கை மேம்படும் என்பதைக் காணலாகிறது.

தவறாது பெய்யும் மழை
               
 வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண இயலாது என்பதனை,
        
“விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே         
பசும்புல்  தலைகாண்பு அரிது”   (திருக்குறள்.வான்சிறப்பு  குறள் எண் – 6)
               
மழையானது விளைநிலம், களர்நிலம் எனப் பாராது அனைத்து இடங்களிலும் பெய்கிறது. அதுபோல் நாம் செய்யும் உதவியானது உறவினர், நண்பர் என்றிலாது அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது என்பதை அறிய வேண்டும்.
குறிப்பறிந்து நடக்கும் மனையாள், நோன்புகளை முறைதவறாது நடத்தும் தவசி, குடிமக்களுக்கு தீமையை விளக்கி நன்மைகளையே செய்கின்ற அரசன் அம்மூவரும் ஒரு நாட்டின் கண் அமைந்தால் அந்நாட்டின்கண் மாதம் மும்மாரி மழையானது தவறாது பொழியும் என நல்லாதனார் குறிப்பிடுகிறார்.
           
“கொண்டான் குறிப்பறிவாள்  பெண்டாட்டி கொண்டன           
செய்வகை செய்வான் தவசி கொடிதொரீஇ”        (திரிகடுகம்.பாடல் எண்.96)

முடிவுரை
               
இல்லறமாவது நல்லறமாகும். இல்லற வாழ்க்கை என்பது ஒரே வண்டியில் பூட்டிய  இருமாடுகள் போன்றது. மாடுகள் ஒன்றாக சென்றால் பயணம் சிறக்கும். இல்லற வாழ்வைப் பற்றி சங்க இலக்கியங்கள் கூறியிருந்தாலும், உடல் நோயைத் தீர்க்கும் மும்மருந்துப் போல நல்லாதனார் கூறும் ஒவ்வொரு வெண்பாவின் மூன்று கருத்துக்களும் மிகுபயனுடைவையாகும். மேற்கண்ட இக்கருத்துக்களை எடுத்தாளும் ஒவ்வொரு கணவனும், மனைவியும் இல்லறம் சிறக்க பயனுடையவராவர் என்பதே நிதர்சனமாகும்.

பார்வை நூல்கள்
1.திரிகடுகம்,
ந.மு.வேங்கடசாமி நாட்டார் (ஆசிரியர்),
இரண்டாம் பதிப்பு (சனவரி – 2019),
பாரி நிலையம்,
சென்னை – 600001.

2.திருக்குறள்
பரிமேலழகர் உரை,
சாரதா பதிப்பகம்,
ராயப்பேட்டை,
சென்னை – 600014,
 ISBN – 978-93-80217-37-6.

3.நீதிக்களஞ்சியம் (மூலமும், உரையும்)
டாக்டர் கதிர் முருகு,
முதல்  பதிப்பு ( ஜீன் 2007),
சீதைப் பதிப்பகம் ,
10 /14 தோப்பு வெங்கடாசலம்,
திருவல்லிகேணி, சென்னை – 5.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
க.சதீஷ்குமார்
உதவிப்பேராசிரியர்,

தமிழ்த்துறை,

முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),

இராசிபுரம் (வ), நாமக்கல் (மா) 637408.

 

அவள் எனும் பெரும் பொருண்மை|கவிதை| ச.நவநீதனா

அவள் எனும் பெரும் பொருண்மை- ச.நவநீதனா
🎯 அவள் எனும் பெரும் பொருண்மையில்
செங்கோல் ஆட்சி நடத்தும் மகாராணி!
🎯 தித்திக்கும் இடமெலாம்..

இவள் வாசம் முத்திரை!

 
🎯 திகட்டும் இடமெலாம்…
பொருட்போர் தலைமை ஏற்கும்

பட்டத்து ராணி!

 
🎯 எண்ணும் பொழுதெலாம்

எனைத் தொலைக்க வித்திட்ட

கள்வ நெஞ்சக்காரி!

 
🎯 பேசும் பொழுதெலாம்

பக்கம் பக்கமாய்

சொற்களை அடுக்கும் பேரகராதி!

 
🎯 ஆனால்!
அவளுக்கென எழுத முற்படும்போது…

சொற்கள் தராத கல்நெஞ்சக்காரி!
 
🎯 மனதினைச் சாலக் கவர்ந்திடும்
கவர்ச்சிப் பொருளல்ல இவள்!
நம்மைக் கவரும்

பொருளுக்கே பொருளூட்டும்

மாய வித்தைக்காரி அவள்!

 
🎯 இப்படி அவளைப்பற்றிப் பல..

எண்ணிலே அடங்காதவை…

எண்ணும் நோக்கம்
அவள் கொடுத்த வரம்..

 
🎯 வீழும் நோக்கம்!
அவளுக்கு அவளிட்ட சாபம்..!

ஏன்?
முதுமையும் கூட

முதிர்ந்து விடும்!
முடி சூடிய மகாராணி

போர்க்களம் புகுந்துவிட்டால்!

 
🎯 இப்படி…
போர்புரியும் பேரரசி!
எனக்கு மட்டும்

ஏனோ பணம் கேட்கா மருத்துவச்சி

ஆகிவிட்டாள் அனுதினமும்!

🎯 ஆனால்!
உலகமே அவள் வசம் எனினும்,
அவளுக்கு ஒன்றுமட்டும் தெரியாது

என் நோய்க்கு, முதற்காரணம் அவளென்று!

 
🎯 அவள் எனும் பொருண்மையிலே

அனுதினமும் எமைத் தாலாட்டும்

என்னவள் – தமிழே!

என்னவள் – தாய்த்தமிழே!!
 
கவிதையின் ஆசிரியர்


கவிஞர் ச.நவநீதனா

இளங்கலை இரண்டாம் ஆண்டு,

வணிகவியல் துறை, 

கே. பி. ஆர். கலை அறிவியல் மற்றும்
 ஆராய்ச்சிக் கல்லூரி,
கோவை.

 

பர்கூர் வட்டார சோளகர்களின் வாழ்வியல்|ஆய்வுக்கட்டுரை|கு.பூர்ணிமா

பர்கூர் வட்டார சோளகர்களின் வாழ்வியல் - கு.பூர்ணிமா
முன்னுரை

தமிழகத்தின் பெரும்பாலான பழங்குடிகள் மலைப்பகுதிகளில் வசிக்கின்றனர். கிழக்கு மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இவர்கள் தற்கள் வாழ்வாதாரத்தைப் பண்டைய காலந்தொட்டு அமைத்துக் கொண்டுள்ளனர். மலைகள் மட்டுமல்லாது சமவெளியிலும் சில பழங்குடிகள் வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலும் வேட்டையாடு;தலையும், வனத்தில் உள்ளபொருட்களைச் சேகரித்து உண்ணுதலையும் செய்து வந்தவர்கள், தற்பொழுது அரசாங்கத்தின் வனக் கட்டுப்பாட்டால், வனவிலங்கு பாதுகாப்பு சட்டங்களால் வேட்டையாடுதலை கைவிட்டு விவசாயத் தொழிலுக்கு மாறி வருகின்றனர். சோளகப் பழங்குடிகள் பூர்வீகமாகவே வனப்பகுதிகளில் வாழ்ந்து வருபவர்கள். மற்ற பழங்குடிகளோடு ஏற்ற தாழ்வின்றி பழகும் தன்மை கொண்டோராய் விளங்குகின்றனர்.

சோளகர் பெயர்காரணம்
சோளா என்றால் காடு. காட்டில் வாழ்வதால் சோளர்களுக்கு இப்பெயர். சோளகர் என்றால் சோலைகளை ஆள்பவர் என்று பொருள். மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள பழங்குடியினரில் சோளகரும் அடங்குவர். இவர்கள் தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்திலும் அதன் அருகில் உள்ள கர்நாடக எல்லைப்புற மாவட்டங்களிலும் நிறைந்து வாழ்கின்றனர். சோளகரைப் பொறுத்தவரை தமிழகத்தின் பழங்குடி மக்கள் தொகையில் இவர்களின் எண்ணிக்கை ஒரு சதவிகிதத்திற்கும் குறைவே ஆகும். இவர்களின் சமூக – வாழ்வியலில் வனத்திற்கு முக்கிய இடமுண்டு, வனம் என்பது அவர்களின் வாழ்வில் பிரிக்க முடியாத ஓர் பகுதியாகும்.

சோளகர்களின் வேறுபெயர்கள்
🎯 சோளகர்

🎯 கஷாலகர்

🎯 சோளகா
🎯 சோளக நாயக்கன்
என்னும் பெயர்களால் அழைக்கப்படுகின்றனர்.

வாழ்விடங்கள்
சோளகர்கள் தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்திலும் தென் கர்நாடகத்தின் பிலிகிரிரங்க மலைப்பகுதிகளிலும் பரவி வாழ்கின்றனர். சத்தியமங்கலம், பர்கூர் பகுதிகளில் நிறைந்து காணப்படுகின்றனர். திம்பம் மலைப்பகுதியில் உள்ள ஆசனூர், தாளவாடி, கெத்தேசால், கானக்கரை, கேர்மலா, ஒரத்தி,மாவளம், தெங்குமராடா, கோட்டமலா, பெடுகுழி, பெஜலட்டி, புழிஞ்சூர், கோட்டடம், பார்டு, பாடர் தொட்டீ, புத்திபவுகா, நோக்கநல்லி மற்றும் மனுக்காய் ஆகிய இடங்களில் வசிக்கின்றனர்.
மொழி

இவர்களது பேச்சு மொழி தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய இரண்டு மொழிகளின் கலவையாக உள்ளது. இதனைச் சோளகர் வழக்காறு என்றே சொல்லலாம். கன்னடம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளையும் சரளமாகப் பேசுகின்றனர். பள்ளிக் கல்வி பெற்றவர்கள் மட்டும் தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாக உள்ளனர்.

வழிபடும் கடவுள்கள்

                          மாதேஷ்வரன்

🎯 சிவன் (கோத்திரம்)

🎯 பால் (வம்சம்)

🎯 ஏழு (குலம்)

                    சித்தேஷ்வரன்

🎯 விஷ்ணு (கோத்திரம்)
🎯 பொங்கர் (வம்சம்)
🎯 ஐந்து (குலம்)

சோளகருக்குப் பொதுக்கடவுளாக சிவனை வழிபடுகின்றனர், ஒவ்வொரு இனத்திற்கும் தனித்தனியே குல தெய்வங்களும் உண்டு. வாரம் தோறும் தங்கள் குல தெய்வக் கோயிலுக்குச் சென்று பூசை வைக்கின்றனர்.

குலம்
சோளகர்கள் தங்களை ஐந்து குலங்களாகப் பிரித்துள்ளனர்,

🎯 செளிகர்

🎯 பெள்ளீர்

🎯 சூருள்
🎯 தென்னீர்

🎯 ஆலர்

சோளகர்களின் தோற்றக்கதை

(சோளகர்தொட்டி மற்றும் இலிங்காயத்துகள் இனவரைவியல் ஆய்வு நூலில் உள்ளது)

ஒரு காலத்தில் கெத்தேசால் மலையில் காரையன், பில்லையன் என்ற இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். இருவரும் தெய்வ சக்தி மிக்கவர்கள். அதில் காரையன் மூத்தவன். பில்லையன் இளையவன். அவனை மாதேஸ்வரன் என்றும் கூப்பிட்டார்கள். அப்போது சாவண்ணா என்ற மிகப்பெரிய அரக்கன் மலையைப் போன்றவன் இந்த வனம் முழுவதையும் தனது பிடியில் வைத்திருந்தான். அவனது மந்திர சக்தியால் தேவர்களையெல்லாம் அடிமையாக்கினான். கடவுளர்கள் கூட அவனிடம் அடிமை வேலை செய்ய வேண்டிய நிலை வந்தது. காரையனும், பில்லையனான மாதேஸ்வரனும் அவனிடம் அடிமைகளாக ஆக்கப்பட்டிருந்தார்கள். மூத்தவன் காரையன் அரக்கன் சாவண்ணாவின் சக்தியை அறிந்து சற்றுப் பொறுத்துத் தான் அவனிடம் மோத வேண்டுமென்று முடிவு செய்து அவனுக்குப் பணிவது போல நடந்து கொண்டான். சாவண்ணா, காரையனை மலையின் தென் பக்கம் வேலை செய்ய அனுப்பி விட்டான். ஆனால், இளையவன் மாதேஸ்வரன் அரக்கனிடம் அலட்சியமாகவே நடந்து கொண்டான்.

அரக்கன் இட்ட கட்டளைகளை மெதுவாக, தூங்குபவனைப் போலச் செய்து வந்தான். அதனால், கோபம் கொண்ட அரக்கன் சாவண்ணா, மாதேஸ்வரனைத் தூரத்திலிருந்து கூப்பிட்டு, கோபமுடன் உன் பெயரென்னடா? என்றான். “மாதேஸ்வரன்” என்று பதிலுரைத்தான். அது “மாதாரி” என அரக்கன் காதில் விழுந்தது. அரக்கன் மாதேஸ்வரன் செருப்புத் தைக்கும் தொழில் புரிபவன் என முடிவு செய்து, “என் கால்கள் வெப்பத்தில் வாடுகிறது. ஒரு ஜோடி செருப்புகளை எனக்குத் தைத்துக் குடுடா” என்றான். மாதேஸ்வரன் தயங்கவே, தனது கட்டளையை நிறைவேற்றத் தயங்குவதாகக் கருதிக் கோபமுற்றான் சாவண்ணா. உடனே, மாதேஸ்வரன் சமாளித்து, “தங்களைப் போன்ற மகா ராஜாக்களுக்கு நேர்த்தியாக செருப்பு செய்ய காலமும்,உழைப்பும் தேவை. எனவே, தற்காலிகமாக என்னை அடிமையிலிருந்து விடுவிக்க வேண்டும்” என்று பணிவுடன் கேட்டான். உன் செருப்பு சிறப்பானதாக இருந்தால், தற்காலிகமென்ன, நிரந்தரமாகவே விடுதலை தருகிறேன். ஆனால், சரியில்லாததாகக் காலைக் கடித்தால், உன் தலையைச் சீவி விடுவேன்” என்று அவனை செருப்பைச் செய்ய வேண்டி விடுவித்தான். மாதேஸ்வரனுக்கு செருப்பை எப்படி செய்வது என்று தெரியவில்லை.

அதே சமயம் கடவுள்களையே அடிமைப்படுத்திய சாவண்ணாவை அழிக்கவும் எண்ணினான். அப்போது அடிமைகளுடன் சக அடிமையாயிருந்த கிருஷ்ணனிடம் தனக்கு உதவுமாறு கேட்டான். சக அடிமைகளைக் கொண்டு அழகிய மெழுகினால் செய்த ஒரு ஜோடி செருப்பைச் செய்து மாதேஸ்வரனிடம் கொடுத்து, சாவண்ணாவை கெத்தேசால் மலைக்கு வடக்கேயுள்ள பெரிய வழுக்குப்பாறை மலைக்கு கூட்டி வரும்படியும், மற்றதைத் தான் கவனித்துக் கொள்வதாகவும் கூறி அனுப்பினான் கிருஷ்ணன். அதே போல், மாதேஸ்வரன் ஒரு ஜோடி மெழுகிலான அழகிய பெரிய செருப்பை மாட்டு வண்டியில் வைத்து சாவண்ணா முன் கொண்டு வந்து நிறுத்தினான். சாவண்ணா வேலைப்பாடு மிக்க செருப்பில் மனதைப் பறிகொடுத்தான். அதனைப் போட்டுக் கொள்ளப் பிரியமானான். ஆனால், தனது செருப்பை அணிந்து கெத்தேசால் மலையின் வடக்கேயுள்ள வழுக்குப் பாறை மலையில் சாவண்ணா நடப்பதைப் பார்க்க வேண்டும் என்று பணிந்து வேண்டினான். சாவண்ணாவும், அவ்வாறே செய்வதாக ஒப்புக் கொண்டான். அப்போது கிருஷ்ணன் மற்ற தேவர்களின் உதவியுடன் வழுக்குப் பாறை மலை முழுவதையும் இலை, தழைகளை நிரப்பித் தீயிட்டு நன்றாகச் சூடேற்றி அதனை அனல் பிழம்பாக மாற்றி வைத்திருந்தான்.

இதனை அறியாத சாவண்ணா மெழுகுச் செருப்பை அணிந்து தீச் சுவாலை மிக்க பாறையில் நடந்தபோது மெழுகுச் செருப்பு உருகி சாவண்ணா மலையிலிருந்து கீழே உருண்டான். அப்போது மறைந்திருந்த தெய்வங்கள் கற்களை சாவண்ணாவின் மீது உருட்டித்தள்ளி அவனைக் கொன்று சமாதியாக்கினார்கள். சாவண்ணாவைக் கொன்று தெய்வங்களை விடுவித்ததால், தெய்வங்கள் அனைத்தும் மாதேஸ்வரனுக்கு அருளாசி கூறியதால், மாதேஸ்வரனை மக்களும் வழிபடத் தொடங்கினார்கள். மாதேஸ்வரன் கத்திரி மலைப் பக்கம் போய்த் தங்கிக் கொண்டான். காரையன் கெத்தேசால் மலைக்குத் திரும்பி வந்தபோது, அவன் தம்பி மாதேஸ்வரனை மக்கள் தெய்வமாக வழிபடுவதையும், அவன் சாவண்ணாவைக் கொன்றதையும் கேட்டு ஆனந்தமடையாமல் இளையவனான மாதேஸ்வரன் இந்தச் செயல்களைப் புரிவதற்கு முன்பு, தன்னிடம் ஆலோசனையும், உதவியையும் பெற்றிருக்க வேண்டுமல்லவா? தனித்துப் புகழடைய சகோதரனான என்னையே நம்பாமல் அனைத்தையும் மறைத்து விட்டானே துரோகி. அவனை உயிருடன் விடமாட்டேன் என்று மிகப் பெரிய கத்தியை எடுத்துக் கொண்டு கத்திரிமலை நோக்கிக் கோபமாகப் பயணமானான் காரையன். காரையன் பெரிய கத்தியுடன் மாதேஸ்வரனைக் கொல்ல வரும் செய்தி மாதேஸ்வரனுக்கு கத்திரி மலையில் எட்டியதும், அவன் கிருஷ்ணனிடம் மீண்டும் அபயம் தேடினான்.
 
அப்போது சூறாவளியைப் போல காரையன் கத்தரி மலையினை நெருங்கிவிட்டிருந்தான். உடனடியாகக் கிருஷ்ணன் மாதேஸ்வரனைத் தூக்கிக் கொண்டு ஒரே தாவில் கத்திரிமலையிலிருந்து உருகமலைக்குத் தாவினான். கிருஷ்ணனின் கால் வேகமாகப் பதிந்ததில் உருகமலை உருகிப் போனது. எனவே, கிருஷ்ணன், மாதேஸ்வரனை அடுத்த நொடியிலேயே தூக்கிக் கொண்டு ஏக்ரா மலைக்குத் தாவினான். காரையன் கத்தியைச் சுழட்டிக் கொண்டு அங்கும் பாய்ந்து வந்தான். எனவே, கிருஷ்ணன் மீண்டும் மாதேஸ்வரனை வனத்திற்குத் தூக்கிப் போய் அங்கிருந்த ஒரு பாறைக் குகையில் ஒளித்து வைத்தான். ஆனால், காரையன் அந்தப் பாறையையே கத்தியால் இரண் டாகப் பிளந்தான். மாதேஸ்வரன் அங்கிருந்து வேறு வழியின்றி ஒரு எலிப் பொந்தில் புகுந்து ஒளிந்து கொண்டான். காரையன் அங்கிருந்த மேய்ப்பர்களைக் கூப்பிட்டு கால்நடைகளால் எல்லா எலிப் பொந்துகளையும் அடைக்குமாறு உத்தரவிட்டான். அதனால், எலிப் பொந்தில் காற்றோட்டமின்றி வெப்பம் அதிகமாகவே, மாதேஸ்வரன் வெளியே வந்து காரையனிடம் அவனுக்கு மதிப்புத் தராமல், ஆலோசனை பெறாமல் நடந்ததற் காக மன்னிப்புக் கோரினான். காரையன் ஒரு நிபந்தனை விதித்தான். மாதேஸ்வரனுக்கு வழிபாடு செய்வதற்கு முன்பு மூத்தவனான தன்னை வணங்க மாதேஸ்வரன் மக்களுக்குக் கட்டளையிட வேண்டுமென்றான். மாதேஸ்வரனும் அதற்கு ஒப்புக் கொண்டான். அதன் பின்பே. வந்தவன் சாந்தமடைந்தான். மாதேஸ்வரனின் வம்சத்தில் சோளர்கள் இலிங்காயத்துக்கள், காரையனின் வம்சத்தவர்கள் காரையன் வம்சத்தில் வந்த சோளகன் ஒருவன் கறி சாப்பிடப் பிரியப்பட்டுத் தன் கழுத்திலிருந்த லிங்கத்தைக் கழற்றி ஒரு இலிங்காயத்திடம் கொடுத்தான். பின்னர், அதை வாங்கி அணிய மறந்தே போய்விட்டான். எனவேதான், இலிங்காயத்துக்கள் லிங்கம் அணிகிறார்கள், சோளகர்கள் அணிவதில்லை.

தொழில் மற்றும் பொருளாதாரம்

சோளகர்கள் ஆரம்ப காலகட்டங்களில் வேட்டையாடுதலையே முதன்மைத் தொழிலாக கொண்டிருந்தனர். வேட்டையாடிய விலங்கின் தோலையும், எலும்பையும் மண்ணில் குழி தோண்டி புதைத்து விடுகின்றனர். கறிக்கூறு போடும் போது முதலில் விதவை பெண்ணுக்கு ஒதுக்குவர். பிறகு வேட்டையாடியவர்களுக்கு அதிக பங்கும் தொட்டியினருக்கு மீதமும் பிரித்துக் கொடுக்கின்றனர். தற்பொழுது இவர்கள் வேட்டை மற்றும் உணவு சேகரிப்பில் இருந்து பயிரிடுதல் முறைக்கு மாறியுள்ளனர். வனத்தில் வனக்காவல் துறையின் கட்டுப்பாடு அதிகரிக்க அதிகரிக்கப் பழங்குடிகளின் காட்டின் மீதான உரிமை குறைந்துகொண்டே போகிறது. வேட்டையாடிய காலத்தில் கிடைத்த பொருள் தொட்டியில் உள்ள அனைவருக்கும் பொதுவாகப் பகிரப்படுகிறது, வேட்டையாடிய நபருக்கு அதிகப் பங்கு கொடுக்கப்படுகிறது.

உணவு
               
கேழ்வரகு இவர்களின் பிரதான உணவாக உள்ளது. அத்துடன் ஏதேனும் காய்கறி வகையினைச் சேர்த்துக் கொள்கின்றனர். சமீப காலமாக அரிசி இவர்களின் உணவின் முக்கிய அங்கமாக மாறி வருகிறது. இவர்கள் தாங்கள் விளைவிக்கும் பீன்ஸ், அவரை ஆகியவற்றையும் சேகரிக்கும் தேன் முதலியவற்றையும் அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்கின்றனர். கேழ்வரகுக் களி, கஞ்சி மற்றும் கேழ்வரகு அடை ஆகியன இவர்களின் தின உணவாக உள்ளன. 

வேளாண்மை
                 
வேட்டையாடுதலைக் கைவிட்டுப் பயிரிடுதலை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளனர். தற்போதைய பயிரிடுதல் முறையினைக் கடந்த இருபது ஆண்டுகளாகப் பின்பற்றிவருகின்றனர். சோளகர் தற்போது வேளாண் குழுவாக முழுமையாக மாறிவிட்டனர். வேளாண் சார்ந்த உற்பத்தியே சோளகரின் பிரதான வருவாயாக உள்ளது. ஆடிப்பட்டத்தில் ராகியினை விதைக்கின்றனர். ராகி விதைப்பின் போது இவர்கள் கூறும் பழமொழியான,
காத்தவர் தின்னது போக
கண்டவர் தின்னது போக           
கள்ளர் தின்னது போக           
விளையணும் விளையணும் சாமி…
தற்போது ராகிப்பயிர் பயிரிடுவது மட்டுமின்றி  கேழ்வரகு, பீன்ஸ், அவரை, உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ் மற்றும் கேரட் முதலானவற்றை வெவ்வேறு காலங்களில் பயிரிடுகின்றனர். ஆண்டிற்கு ஒரு முறை கேழ்வரகையும் ஆண்டிற்கு இரண்டு முறை பீன்ஸ் அல்லது அவரையையும்  விளைவிக்கின்றனர். மழை பொழியும் போதே கேழ்வரகு விதைக்கின்றனர். பயிரிடுதலைச் சுழற்சி முறையில் கேழ்வரகையும் பிற காய்கறி வகைகளையும் அடுத்தடுத்து விளைவிக்கின்றனர்.

தேன் சேகரிப்பில் இவர்களின் பங்கு
 
தேன்சேகரித்தல் இவர்களின் பிரதான பருவம் சார்ந்த வருவாயாக உள்ளது. தேன் எடுத்தலுக்குரிய காலமாக மழைக்காலம் முடிந்த பின்பு வனத்தில் வேங்கை பூக்களும் மற்ற மலர்களும் பூத்துக் கிடப்பதால் தேனீக்கள் தேன் சேகரித்து அதன் கூடுகளை கனமாக்கி வைத்திருக்கும். எனவே இம்மக்கள் அமாவாசைக்குள் தேன் எடுக்கின்றனர்.
சோளகர் சேகரிக்கும் தேன் வகைகள் நான்கு,
🎯 பெருந்தேன்

🎯 அடுக்குத்தேன்

🎯 கொம்புத்தேன்

🎯 கொசுத்தேன்

என்பவைகளாகும் ஆகும். தேன் எடுக்க செல்லும் போது தகர டின்னும், கயிறும் எடுத்துச்  செல்கின்றனர். தேனினை எடுத்தப் பின்பு சிறிது பிய்த்து (பிரித்து) அதனை மண் தரையில் வைத்து சாமிக்கு நன்றி சொல்வதை இவர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

முடிவுரை
இந்தியா பல்வேறு இனத்தவர்கள் வாழும் ஒரு மதச்சார்பற்ற நாடாகும். இங்கு வாழும் மக்களில் பெரும்பான்மையினர் பழங்குடிகள் பற்றியும், அவர்களது பண்பாடுகள் பற்றியும் அறியாமல் உள்ளனர். அதனை பற்றி ஒரு புரிதலை ஏற்படுத்தும் விதமாக இவ்வாய்வு அமைக்கப்பட்டுள்ளது. எழில் கொஞ்சும் இயற்கையின் அழகை நாகரிக வாழ்க்கையில் ரசிக்க மறந்த நம் மக்களுக்கு, தமிழகப் பழங்குடிகள், அவர்களின் இன்றைய நிலை, வனப் பாதுகாப்பில் பழங்குடிகளின் பங்கு, பண்பாடுகளின் வெளிப்பாடாய் திகழும் சோளக மக்களின் வாழ்க்கையை அறிய இவ்வாய்வேடு பயனுடையதாக அமையும்.

பார்வை நூல்கள்
1.சு. சக்திவேல், நாட்டுப்புறவியல்.

2.பெ. கோவிந்தசாமி, இலிங்காயத்துகள் இனவரைவியல்.

3.அ. பகத்சிங், சோளகர் வாழ்வும் பண்பாடும்.

4.ச. பாலமுருகன், சோளகர் தொட்டி.

5.பக்தவச்சல பாரதி, தமிழகப் பழங்குடிகள்.

6.பக்தவச்சல பாரதி, தமிழக நாடோடிகள் (சங்க காலம் முதல் சமகாலம் வரை)

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
                                                                                                                                                                    ஆய்வாளர்
                                            
                                                                                                                                                                                 திருமதி கு.பூர்ணிமா                 
 பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வாளர்
 
                                                                                                                                                                                                   தமிழ்த்துறை                       
பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரி
 
                                                                                                                                                                     கோபிச்செட்டிபாளையம்
                                                                                                   

மாக்காளை நாவல் காட்டும் தீபாவளி பண்டிகை|ஆய்வுக்கட்டுரை|சு.கீதா

மாக்காளை நாவல் காட்டும் தீபாவளி பண்டிகை - சு.கீதா
முன்னுரை
               
உலகில் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களால் பல்வேறு பட்ட பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அவ்வகையில் தீபாவளி பண்டிகையும் ஒன்றாகும். பண்டிகைகள் நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட ஓர் நிகழ்வாகும். தனி மனித சமூகத்தின் நல்வாழ்கை கருதி மிகுந்த சிந்தனையுடன் நம் முன்னோர்கள் பண்டிகைகளை ஏற்படுத்தியுள்ளனர். மனிதநேய ஒருமைப்பாட்டை தமது வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்வதற்கு பண்டிகைகள் துணைபுரிகின்றன. இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு வகையாக கொண்டாடுகின்றனர். அந்த வகையில் கலாப்ரியா அவர்கள் மாக்காளை நாவலின் மூலம் விஸ்வம் அண்ணாச்சி பெரிய கோவிலுக்கு செல்வதைப் பற்றியும், அங்கு சாமியை வணங்கிவிட்டு காளையின் முன்பு அமர்ந்து அது அசைவு போடுவதன் மூலம் நம்மளிடம் பேசுவதைப் போலவும் அதனால் விஸ்வம் அண்ணாச்சி தன் வாழ்க்கையை முன்நோக்கி யோசித்து கொள்வதன் மூலம் அன்று தீபாவளி பண்டிகையை தன் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் கொண்டாடுவதை இக்கட்டுரை மூலம் உணர்த்துகின்றனர்.

விஸ்வம் அண்ணாச்சி கோயிலுக்கு செல்லும் செய்தி
               
விஸ்வம் அண்ணாச்சி அதிகாலையிலேயே எழுந்து தேனீர் குடித்து விட்டு பெரிய கோவிலுக்கு சென்று விடுவார். வழக்கமாக எப்பொழுதும் போல் பொற்றாமரைக் குளத்தில் கால் கழுவிட்டு கோயிலின் பக்கத்தில் உள்ள கொடிமரத்தருகே எட்டு முறை தரையில் விழுந்து, விழுந்து கும்பிட்டு வழிபாட்டு முறைகள் ஒன்றினைக் கூட குறை இல்லாமல் தன் வழிபாட்டை செய்துக் கொண்டிருந்தார். காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் பாட்டு ஒன்றையோ மற்றும் அபிராமி அந்தாதி ஒன்றிரண்டோ வாசித்தபடி அம்மையைக் வணங்கிடுவார். அன்று அம்மன் சன்னதியில் பிள்ளைத்தமிழ் பாடலை அந்நாளைப் பொறுத்து வேகமாகவும், சாவகாசத்தைப் பொறுத்து நன்றாக அனுபவித்தும் வாசிப்பார்.
               
“பிரியமுடன் (ஒக்கலையில்) வைத்துத் தேரார் வீதி வளங்காட்டேன், செய்யக் கனிவாய் முத்தமிடேன், திகழும் மணிக்கட்டிலில் ஏற்றி திருக்கண் வளரச் சீராட்டேன், தாரார் இமவான் தடமார்பில் தவழுங்குந்தாய் வருகவே, சாலிப்பதிவாழ் காந்திமதித் தாயே வருக வருகவே”1 என்று ‘ஒக்கலையில் வைத்து’ என்ற வார்த்தையை அனுபவித்துச் சொல்வார்.

மாக்காளையிடம் பேசுவது போல் நினைவு
               
அம்மையைக் வணங்கி முடித்த பிறகு சாமி கோயிலுக்கு வருவார். சாமி தரிசனமெல்லாம் முடிந்த பிறகு நந்தி மண்டபத்தில் உள்ள சுதைச் சிலையான பெரிய மாக்காளை முன்னாடி இடது புறமாக அமர்ந்து ஏதோ ஒன்றை பேசிக் கொண்டேயிருப்பார் விஸ்வம் அண்ணாச்சி. அம்மாக்காளை, அண்ணாச்சியின் மூக்கை தடவுவது போல் உணர்வார். அக்காளையின் கண்கள் இரண்டும் அழகாக இருக்கும். அது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருப்பது என்றும் கோயில் கூரையை தொடும் போது உலகமே அழிஞ்சி போய்விடும் என்ற ஒரு கதை உண்டு. விஸ்வ அண்ணாச்சி சிறு வயதாக இருக்கும் போது மாக்காளை வளர்ந்திருக்குமா என்று பார்ப்பதற்கு தன் நண்பர்களோடு கோயிலுக்கு தினமும் வந்து கொண்டே இருப்பார். “ஆமாலே, கொஞ்சம் வளர்ந்திருக்கும்”2 ம்ப்பான் ஒருத்தன். “எங்கலே அதெல்லாம் டூப்புலே”3 ம்பான் இன்னொருவர்.

மாக்காளை கோயில் கட்டும் முறை
               
கோயிலுக்குள் நுழைந்ததும் மிக பெரிய நந்தியை தனி மண்டபமாக கட்டி உண்டாக்கி வைப்பது அந்த கால நாயக்க மன்னர்களோட ஆட்சியில் தான் நடைபெறும். தஞ்சாவு+ரில் உள்ள நந்தியை பார்த்து இங்கு உள்ள நாயக்கர் ஒருத்தர் நந்தி செய்து அதற்கு வழுவழுவென்று சுண்ணாம்புப் பாலை தடவி பூசி, மாவு போலத் தேய்த்து மாக்காளையை செய்து வைத்திருந்தார். இன்றைக்கு அந்த காளை முன்னால் அமர்ந்து பழைய நினைவுகளை சொல்வதற்கு எப்பவும் போல எனக்கு அவகாசம் இல்லை. வேகமாக அவ்வேளையை முடித்து விட்டு நந்தியைப் பார்த்தபடி இரண்டு நிமிடம் அமரலாம் என்று நினைத்தார். நின்ற காலோட கோயிலைவிட்டு போக கூடாதுன்னு அமர்ந்தார். விஸ்வம் அண்ணாச்சி காளையின் முன்னால் அமர்ந்ததால் அது அசை போட, போட மனசை சும்மா இரு என்று சொல்ல முடியுமா. மறுபடியும் அது ஓட ஆரம்பித்துவிட்டது.

அண்ணாச்சியின்  தீபாவளி குளியல்
               
இன்னைக்கு ஏதோ வென்னீர் போட்டுக் குடுத்தாள் புண்ணியவாதி வேம்பு என்னைக்கும் இல்லாமல் இன்னைக்கு “வீட்டுக்குள்ள இருக்கற குடத்துத் தண்ணி வெது வெதுன்னுதான் இருக்கு. ரெண்டு குடம் ஊத்திட்டுப் போங்க. எனக்கு தலைக்கு மேல வேலை கிடக்கு. இதுல ஓலையைப் போட்டுக் கொளுத்தி வென்னீர் வைக்கவா நேரமிருக்கு”4 என்று கத்துவாள்.

தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்
               
இன்று தீபாவளி பண்டிகை தலைக்கு மேல் வேலைகள் இருக்கிறது. வேம்பு தனக்கும் வென்னீர் போட்டு விட்டு விஸ்வ அண்ணாச்சிக்கும் வென்னீர் போட்டு வைத்திருக்கிறாள். அவர் குளிக்கறதுக்கு கோவணத்தோட குளியலறையில் நின்று கொண்டிருக்கும் போது வேம்பு ஓடிவந்து “இந்தாங்க இங்கு வாங்க. இம்புட்டு நல்லெண்னை தலையில வச்சுக்கிடுங்க”5 என்று வீட்டு வாசலில் நின்று ஒரு பாத்திரத்தில் கை நீட்டினார்.
              
  “ஏளா என்னத்த அங்கன வந்து எண்ணெய் வைக்க ஒரு செம்புத் தண்ணிய தோளுக்கு விட்டாச்சே”6 என்று அண்ணாச்சி சலிப்புடன் இருக்கும் போது வேம்பு அவன் பக்கத்தில் வந்து ஒரு கை எண்ணெயைத் தலையில் தேய்த்துவிட்டு எதையோ நினைத்து தானே சிரித்துக் கொண்டிருந்தாள். அவள் சிரித்ததுக்கு காரணம் கோவணம் துணி சற்று விலிகியிருந்தது அதை பார்த்துக் கொண்டு தான் வேம்பு சிரித்தாள். “ஆமா இப்ப என்ன நீதானே நிக்கற வேற யாருமா இருக்காங்க”7
               
“உங்களுக்கு வெக்கமே கிடையாதா? புள்ளை வள்ளி எந்திரிச்சுரவா, சீக்கிரம் குளியுங்க.”8 என்று வேம்பு விளையாட்டாக கோவிச்சிக்கிட்டாள். விஸ்வா அண்ணாச்சியின் தலையில் வேம்பு எண்ணெயை தேய்கும் போது அவள் கையில் ஊறின கடலைப் பருப்போட வாசம் மூக்கை நுளைத்தது. அண்ணாச்சி வேம்புவிடம் குளிச்சதும் கோயிலுக்குச் சென்று வரலாம் என்றார். தீபாவளி பண்டிகை போது எட்டு மணிக்கு முதல் காட்சின்னு சொன்னாள், ஏழு மணிக்கலாம் போய் நிக்கணும்பாரு மேனேஜரு.

சினிமா பற்றிய செய்திகள்
               
ஒரு நாளும் இல்லாத திருநாளா, இந்த தீபாவளிக்கு அஞ்சு ஷோவுக்கு அனுமதி வாங்கிட்டாக முதலாளி. நேற்று தீபாவளி கடைசிவாரம் ஆகும். மாலைநேரத்தில் இருந்தே ரத வீதியில் கூட்டம் அதிகரித்து கொண்டே இருந்தது. என்னப்பா இந்த நடுஇரவு நேரத்திலும் கூட மக்கள் கூட்டம் ரத வீதியில் இருக்கும். அதுவும் சரிதான். நம்மள போல ஆட்களுக்கு இப்பத்தான் நல்ல நாள் வரும் என்று நினைத்துக் கொண்டார்.
               
இன்று தீபாவளி தினத்தன்று திரைப்படம் வெளியாக இருகின்றது. அந்த பட் நேந்து பப்படமா ஒரு பாடாவதிப் படம்தான் போட்டியிருந்தார்கள். அந்த படத்துக்கு நூறு பேர் வந்திருந்தார்கள். தியேட்டரில் ஐந்து ரூபாய்க்கு பீடி விற்று, பத்து ரூபாய்க்கு முறுக்கு விற்று, இந்த வியாபாரத்துக்கு மூணு மணி நேரம் நின்று கால் புண்ணுதான் ஆனது மிச்சம். அந்த புண்ணு ஒரு பரு மாதிரியாகத் தான் இருந்தது. இப்பொழுது பெரிய காயமாக ஆயிற்று. கால் வீக்கம் குறையும் என்று சொன்னார்கள் ஆனால் வைத்தியம் எல்லாம் செய்து பார்த்தாச்சி. இரண்டாவது ஷோவே முடிஞ்சிடுச்சி. மாப்பிள்ளை முதலாளி வந்து ஒரு வேட்டியும் துண்டையும் ஐம்பது ரூபாயும் தந்தார் படம் ஓடும்போது எவனோ ஐந்து ரூபாய் குடுத்துவிட்டு இரண்டு முறுக்கு வாங்கி இருக்கான்.

                “என்னப்பா பத்து பைசாவுக்கு அஞ்சு ரூவா குடுக்கே சரி, படம் விட்டுப் போகும்போது வாங்கிக்க”9 என்று சொல்லி மீதி ரூபாயை எடுத்து வைத்திருந்தான். படம் முடிந்து விட்டும் லைட் எல்லாமே அனைத்த பிறகும் கூட ஆள் வரவே இல்லை. அது ஐந்து ரூபாய் இருக்கும். அதை எடுத்து கொண்டு கடைத்தெருவிற்கு வந்து பார்த்தால் கூட்டம் அதிகமாக உள்ளது. பெரிய கடையில் கூட கூட்டம் அதிகமாக தான் இருந்தன. ஆனால் வேலைக்கு போகும் மக்கள் தான் பாவம் கை, கால் எல்லாம் அயர்ந்து போகும் வரையில் நின்று கொண்டிருப்பார்கள்.

முடிவுரை
               
தீபாவளிப் பண்டிகை என்றாலே மக்கள் அனைவரும் எண்ணெய் குளியில் என்ற பழக்கம் இன்றைக்கும் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர் மக்கள். கோவிலுக்கு செல்லுதல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளம், இனிப்பு வகைகளும், புத்தாடைகளும் நினைவுக்கு வருகின்றது. அதோடு சத்தம் அதிகமாக இருக்கும் வண்ண வெடிகள் வெடித்து மகிழ்வதும் ஒருபுறம் நடக்கிறது. இவ்வாறு கலாப்ரியா அவர்கள் மாக்காளை நாவலின் மூலம் விஸ்வம் அண்ணாச்சியின் குடும்பம் தீபாவளி திருநாளை நம் உறவினர்களோடும், நண்பர்களோடும், அனைத்து மக்களோடும் மற்றும் பெரிய கோயிலில் உள்ள மாக்காளை அசை போடுவதன் மூலம் விஸ்வம் அண்ணாச்சி பின்னோக்கி நடக்கும் நிகழ்வுகளையும் இக்கட்டுரையின் மூலம் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

சான்றெண் விளக்கம்
1. மாக்காளை – கலாப்ரியா., ப.21.

2. மேலது., ப.22.

3. மேலது., ப.22.

4. மேலது., ப.22.

5. மேலது., ப.22.

6. மேலது., ப.22.

7. மேலது., ப.23.

8. மேலது., ப.23.

9. மேலது., ப.23.

10. மேலது., ப.24.

11. மேலது., ப.24.

12. மேலது., ப.24.

13. மேலது., ப.24.

14. மேலது., ப.25.

துணைநூற் பட்டியல்
மாக்காளை – கலாப்ரியா 
சந்தியா பதிப்பகம்
 
புதிய எண் 77, 53 வது தெரு,
 
9-வது அவன்யூ,
அசோக் நகர்
  சென்னை 600083.

பக்தி நெறியில் சைவமும் வைணவமும்|ஆய்வுக்கட்டுரை| ச.குமார்

பக்தி நெறியில் சைவமும் வைணவமும் - ச.குமார்
முன்னுரை
               
பக்தியின் மொழி தமிழ் என்பதினால். தமிழ் இலக்கியங்களில் சமயக் கருத்துக்கள் ஆங்காங்கே பரவிக் கிடக்கின்றன. தமிழை அனைத்து சமயங்களும் வளர்த்தன. அதேப் போன்று சமயங்கள் தமிழால் வளர்ச்சிக் கண்டது. நாயன்மார்களும் ஆழ்வார்களும் கல் நெஞ்சையும் கனிவிக்கும் பக்திப் பாடல்களை இயற்றிப் பரம்பொருளை வழிபடும் மரபைத் தோற்றுவித்தனர்.  சைவமும் வைணவமும் செல்வாக்கு பெற்றன இவ்வாறு சமயச் சான்றோர்களாம் ஞானச் செல்வர்கள் அருளியவை சமய இலக்கியங்களாம்

பக்தி நெறி
               
கடவுள் மீது கொண்ட காதலைப் பாடும் பாடல்களாக வளர்ச்சிபெற்றன. மன்னர்களின் வீரம் மற்றும் கொடைகளைப் பாடிய பாடல்கள்இ இறைவனின் திருவிளையாடல்களையும் கடவுளின் அருட்செயல்களையும் பாடும் பாடல்களாக காலப்போக்கில் மாறின. தாங்கள் இயற்றிய செய்யுளில் கற்பனைக் காதலுக்குப் பின்னணியாக இயற்கைச் சூழல் அழகாக வருணிக்கப்பட்டது போலவே இறைவனிடத்தில்  செலுத்தும் பக்திக்குப் பின்னணியாகக் கோவில் தலங்களைச் சூழ்ந்த அவ்வூர்களின் இயற்கையழகைப் பாடும் நிலையே உருவானது.
               
நாயன்மார்களும் ஆழ்வார்களும் தோன்றி பக்தி இலக்கியத்தை செம்மையாக வளர்த்தனர் “உலக இன்பங்களைத் துய்த்தவாறே இறைவனிடத்தில் பக்தி செலுத்தலாம்;என்பதே அவர்களின் நோக்கமாக அமைந்தது எனில் அது மிகையல்ல .இறைவன் என்பவன் அன்பின் வடிவானவன்; அன்பு ஒன்றே அவனை அடையும் உயர்ந்த வழி என இல்லறத்திற்கும் அவர்கள்  முதன்மை கொடுத்தனர்.
              
  தாங்கள் செல்லும் ஊர்கள் தோறும் அங்குள்ள கோவில்களுக்குச் சென்று இசைப்பாடல்களால் மனமுருக இறைவனைப் பாடிப் பரவசப்பட்டனர். நாளையடைவில் அப்பாடல்கள் கற்றவர்களோடு மற்றவர்களும் கூடிப் பாடுமாறு எளிய இனிய தமிழில் பக்திப்பாடல்களாய் இடம் பெற்றன..
இறைவனை ஆண்டான், தந்தை, தோழன், நாயகன் என பல பரிமாணங்களில் கண்டு அவர்தம் இசைப்பாடல்களின் வழியே போற்றினர். இவற்றையே தாச, சற்புத்திர,  சக, ஞான மார்க்கங்கள் என்று பக்தி இலக்கியங்கள் குறிப்பிடுகின்றது

ஆண்டான் (அடிமை) ஸ்ரீ தாச மார்க்கம்

தந்தைஸ்ரீ சற்புத்திர மார்க்கம்

தோழன் ஸ்ரீ சக மார்க்கம்

நாயகன் ஸ்ரீ ஞான மார்க்கம்

என்பனவாகும்.

அடிமை நெறி
               
சைவ இவைணவ இலக்கியங்களில் பெரிதும் போற்றப்படும் திருநாவுக்கரசர், குலசேகராழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார் போன்றோர் அடிமை நெறியை கொண்டிருந்தனர் என பக்தி இலக்கியங்கள் சுட்டுகின்றது.

பிள்ளைமை நெறி
               
சைவ பற்றானரான திருஞானசம்பந்தர் பிள்ளைமை நெறியை கொண்டிருந்தார் வைணவ பற்றாளரான பெரியாழ்வார் இறைவனைக் குழந்தையாகக் கருதித் தாலாட்டுப் பாடல்கள் பலவும் பாடியுள்ளார்.

தோழமை நெறி

தம்பிரான் தோழர் என்றழைக்கப்படும் சுந்தரர் மற்றும் வைவ ஆழ்வாரில் ஒருவரான திருமழிசையாழ்வார் போன்றோர் தோழமை நெறியை கொண்டு ஒழுகினர்.

நாயகன் நாயகி நெறியை பாடியவர்கள்
               
சைவ சமய குரவர் நால்வரில் ஒருவரான நம் மாணிக்கவாசகர்இ மடல் இலக்கியம் தந்த நம் திருமங்கையாழ்வார் போன்றோர் நாயகன் நாயகி நெறியை தத்தம் பாடல்களில் சிறப்பாக அருளிப் போந்தனர். பெரியாழ்வார் வளர்ப்பு மகளான ஆண்டாள் இறைவனையே தன் தலைவனாகப் பாவித்து வாழ்ந்தாள் என்பதற்கு திருப்பாவை  சான்றாக அமைந்தது. சைவ சமய நூல்களும் அவற்றை பாடிய நாயன்மார்களும் பன்னிரு திருமுறை அட்டவணையாக கீழே தரப்பட்டுள்ளது.

தமிழ் மொழி|கவிதை|ச.யோகேஸ்குமார்

தமிழின் சிறப்பு கவிதை - யோகுஸ்குமார்

குறிஞ்சி நில மகளிர் வாழ்வியல்|ஆய்வுக்கட்டுரை|ந.இந்திரா

குறிஞ்சி நில மகளிர் வாழ்வியல் - ந.இந்திரா
மலைநாட்டினைச் சார்ந்த தலைவனும் தலைவியும் தம்முள் தாமே கண்டு, காதலித்து, களவு உறவிலே கூடித் திளைத்து, மகிழ்ந்து வருகின்றனர். இவர்கள் மலைநாட்டு குன்றவரிடையே மதிப்புடன் சிறந்து விளங்கிய பெருங்குடியினைச் சேர்ந்தவர்களாகக் காணப்படுகின்றனர். பொதுவாகக் குன்றவர் குலத்தாரிடையே அந்தநாளின் நிலவிய பழக்கவழக்கங்கள் தற்போது ஓரளவு காணப்படுகிறது. தலைவி தன் தோழியருடன் குல மரபுப்படி தினைப்புனம் காவலுக்குச் செல்கிறாள். தலைவனும் தம் குல மரபுப்படி காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். அங்கு இவர்களின் சந்திப்பு நிகழ்கின்றது. ஊழின் வலிமை பெரிது. உழுவலன்பின் தொடர்போ மிகவும் நெருக்கமானது. அவர்கள் தம்முள் தாமே ஒருவரையொருவர் பார்ப்பதும் பேசுவதும் உள்ளத்தை இழந்து பித்தாகி நிற்கவும் நேரிடுகிறது. இப்படித் தொடங்கியச் சந்திப்பு வளர்ந்து களவாகி, இருவரும் தனித்துக்கூடி இன்புறும் நிலை வரை வளர்ந்தது. எளிமையாக தொடர்ந்த சந்திப்பு பல்வேறு சூழல்களால் கடினமானதாக மாறி இருவரும் மனம்வருந்தும்படியான நிலை ஏற்படுகின்றது. 
களவு, கற்பு 
வாழ்க்கை
அகவாழ்வில் களவு, கற்பு என இருவொழுக்க முறை முக்கியத்துவம் பெறுகின்றன. இதில் ‘வரைவு’ என்னும் திருமணத்திற்கு முந்திய நிலையைக் ‘களவு’ என்றும் அதற்கு அடுத்து திருமணம் முடிந்தப் பிறகு வாழுகின்ற வாழ்க்கை முறையைக் கற்பியல் என்று குறிப்பர்;. சங்க காலங்களில் திருமணம் பெரும்பாலும் களவு வழியிலேயே நடைபெறும். ‘களவுக் காதல் கற்பாக மலர்தல் வேண்டும்’ என்பதே பழந்தமிழர் கோட்பாடாகக் கருதப்படுகிறது. ஒருவனும் ஒருத்தியும் எதிர்பட்டு இருவர் தம் தலைமைக் குணங்களை இழந்து மெய்யுறுப் புணர்ச்சியில் கூடி மகிழும் இயல்பே கந்தர்வமனம் ஆகும்.

வேட்கை மிகுதியால் கூடிப் பின்னர் அன்பின்றிப் பிரிந்து மாறும் நிலையும் உள்ளது. இவ்வகைத் தமிழர் கூறும் களவொழுக்கம் இருவர் உள்ளத்திலும் உள்நின்று தோன்றிய அன்பின் பெருக்கினால்தான் அவள் வேற்றுமையின்றி இருவரும் ஒருவராய் ஒழுகும் உள்ளப் புணர்ச்சியே களவாகும். இதனையே இறையனார் அகப்பொருள் விளக்கத்தில்

“தானே அவளே தமியர் காணக் 
காமப் புணர்ச்சி இருவயின் ஒத்தல்”1
என்று குறிப்பிடுகிறது. களவு கற்பாக மாறும் நிலையில் அது இல்லறத்திற்கு வாயிலாகக் கருதப்படுகிறது. களவு திருமணத்தில் முடியாமல் இடையூறு ஏற்பட்டு நிகழாத அந்நிலையைக் ‘கள்ளத்தனம்’ என்றும் ‘ஒழுக்கக்கேடு’ என்றும் கருதுவர். சமுதாயத்தில் ஆண், பெண் இடையே காதல் அன்பினால் ஏற்பட்ட களவு ஒழுக்கமானது திருமணம் செய்து கற்பு ஒழுக்கமாக மாறிய இல்லற மாட்சிமையை சங்க அகப்படல்களில் குறிஞ்சி நிலப் பாடல்கள் குறிப்பிடுகின்றது.

களவியல் முறை
அகத்திணை ஒழுக்கத்தில் களவியல் பகுதி மிகச் சிறப்பான இடத்தை பெறுகின்றது. களவொழுக்கக் காலம் இரண்டுத் திங்கள் நடைபெறும் என்பதை இறையனார் அகப்பொருளில் குறிப்பிடுகிறார் என்பதனை
“களவினுள் தவிர்ச்சி வரைவின் நீட்டல் 
திங்கள் இரண்டின் அகமென மொழிப”2
என்று அமைந்துள்ளதைக் காணமுடிகிறது. களவானது “பிணி மூப்புகளின்றி எஞ்ஞான்றும் ஒரு தன்மையராய் உருவும், திருவும் பருவமும் குலனுங் குலமும் அன்பும் முதலியவற்றால் ஒப்புமையுடையவராக தலைமகனும், தலைமகளும் பிறர் கொடுப்பவும், அடுப்பவுமின்றி ஊழ் வகையால் தாமே எதிர்பட்டுக் கூடுவது களவு”3 என்று குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். மேலும் தமது மகள் பிறருக்கு உரியவள் என்று பெற்றோரால் நினைத்தாலும் கொடை எதிர்தற்குரிய தலைவியை அவர் கொடுப்பக் கொள்ளாது இருவரும் கரந்த உள்ளத்தோடு எதிர்ப்பட்டுப் புணர்தலே களவாகும் என்னும் கருத்தும் இங்கு நோக்கத்தக்கது.

இக்களவு அன்போடு புணர்ந்ததாதலின் ‘காமக்கூட்டம்’ என்றும் ‘மறைந்த ஒழுக்கம்’ ‘மறை அரும்மறை’ என்னும் சொற்கள் கொண்டு குறிப்பிடுவர். களவினைப் பிறர்க்குரியப் பொருளான ‘மறைக்கோடல்’ என்ற பொருள் கொண்டு இளம்பூரணர் குறிப்பிடுகிறார். வேதத்தை ‘மறைநூல்’ என்று சொல்வதைப் போலவே அறநிலை வழுவாமல் காதலர்கள் கரந்து ஒழுகும் செயலைக் ‘களவு’ என்னும் பெயரால் பண்டையோர் குறித்தனர்.

காதல் பருவம் எய்திய பெண் ஒருத்தியும் குமரப்பருவம் எய்திய ஆண் ஒருவரும் சந்திக்கின்றனர். இருவர் கண்களும் நட்புக் கொள்கின்றன. காதலாக மாறுகிறது. காமத்தீ பற்றுகிறது. கண்டதும் காதல் என்று மக்கள் கூறுவதுபோல குப்பைக்கோழியார் குறிப்பிடுகிறார். இதில் ’கண் தரவந்த காம ஒள்ளெரி’ என்று காமத்தின் பிறப்பிடமாகக் கண்ணைக் குறிப்பிடுகிறார்.

“சிக்கிமுக்கிக் கற்கள் இரண்டும் சேர்ந்து தீ உண்டாவதாக அறிவியலாளர் கூறுவர். அதுபோல கண்ணும் கண்ணும் சேர்ந்து காமத்தீயை உண்டாக்கும். கல்லில் பிறந்த தீ பஞ்சு முதலான விரைவில் தீப்பற்றும் அதுபோல் கண்ணில் பிறப்பித்தக் காமத்தீத் தானாகவே வளரவல்லது என்பது தான் ‘நள்ளெரி’ என்ற சொற்றொடர் குறிக்கின்றது”4 என்று செயபாலன் குறிப்பிடுகிறார்.

களவு வாழ்வில் காதல் கொள்கினறபோது கண்களின் பார்வைக்குள்ள வலிமைக் குறித்து திருவள்ளுவர் தம் குறளில்,

”நாட்டம் இரண்டும் அறிவுடம் படுத்தற்குக்
கூட்டி யுரைக்கும் குறிப்புரை யாகும்”5
என்று குறிப்பிடுகிறார். ஒன்றுபட்ட உள்ளக் குறிப்பினைக் கொண்ட இருவர் கண்களும் பரிமாறிக் கொள்கின்றன. காதல் களத்தில் கண்ணுக்குரிய மதிப்பு வாய்க்கு இல்லை. வாய்ச்சொற்களால் எந்தப் பயனுமில்லை என்கிறார். இதில் பார்வைக்குப் பேச்சைக் காட்டிலும் அதிக சக்தி இருக்கின்றதை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது.

களவின் நிலைகள்

தமிழ் இலக்கணவழக்கில் குறிப்பிடப்படும் அகவாழ்வை இயற்கைப்புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற்கூட்டம், பாங்கியற்கூட்டம் என்னும் நான்குப் பிரிவினில் அடக்குவர். இதனைத் தொல்காப்பியர்,

“காமப் புணர்ச்சியும் இடந்தலைப் படலும்
பாங்கொடு தழா அலுந் தோழியற் புணர்வுமென்று
ஆங்கநால் வகையிலும் அடைந்த சார்வொடு
முறையென மொழிதல் மறையோர் ஆறே”6
என்று குறிப்பர். இதில் ஒவ்வொரு நிலையிலும் பல நிகழ்ச்சிகள் உண்டு. தனித்தனி நிகழ்ச்சியைத் துறை என்று இலக்கண நூலார் குறிப்பர்.  அவற்றில் “காமப்புணர்ச்சி என்பதற்குத் தலைமகனும் தலைமகளும் ஒரு பொழிலகத்து எதிர்ப்பட்டுத் தன் உணர்வின்றி வேட்கை மிகுதியால் புணர்வது”7 என்று சுப்புரெட்டி குறிப்பிடுகிறார்.

குறிஞ்சித் திணையில் இயற்கை புணர்ச்சி
காமப்பருவம் எய்தியத் தலைவி, தன் தாய் கூறியபடி திணைப்புலம் காக்கச் செல்கிறாள். தோழியர்களும் உடன் செல்கின்றனர். முற்றிய கதிர்களைக் கவரும் கிளிக் கூட்டத்தைத் தட்டை கருவிகளைக் கொண்டு விரட்டுகின்றாள். பின்னர் அருவியாடியும், தழைகொய்தும், மலர்தொடுத்தும், அசோக மர நிழலில் அமர்ந்தும் ஓய்வெடுக்கின்றனர். இதனை,

“கிள்ளை ஓப்பியும், கிளை இதழ் பறியாப் 
பை விரி அல்குல் கொய் தழை தைஇப் 
பல் வேறு உருவின் வனப்பு அமை கோதை எம் 
மெல் இரு முச்சிக் கவின் பெறக் கட்டி, 
எரி அவிர் உருவின் அம் குழைச் செயலைத் 
தாது படு தண்ணிழல் இருந்தனம்”8
என்று குறிஞ்சிப்பாட்டுக் குறிப்பிடுகிறது. குமரப் பருவம் எயதிய தலைவன் வேட்டை நாயோடு மலையைச் சுற்றித் திரிகிறான். பல்மணம் கமழும் தழைமாலை அணிந்த தலைவன், தலைவி இருக்கும் இடத்திற்குத் தானாகச் செல்கிறான். மார்பில் செங்கழுநீரும், தலையில் வெட்சிப்பூவும், முகத்தில் சந்தனப்பூச்சும், கையில் வில்லும், அம்பும் கொண்டு முன்னால் நிற்கின்றான். இதற்கிடையே தலைவன் கண்ணும் தலைவியின் கண்ணும் நட்புக் கொண்டன. காதலால் தீப்பற்றின இதனை,

“ஒண் செங்கழுநீர்க் கண் போல் ஆய் இதழ் 
ஊசி போகிய சூழ் செய் மாலையன், 
பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன்   
குயம் மண்டு ஆகம் செஞ்சாந்து நீவி, 
வரிபுனை வில்லன் ஒருகணை தெரிந்து கொண்டு”9
கண் பார்த்தும் காமத்தீத் தானாக வளர்ந்தது என்பதை ‘ஒள்ளெறி’ என்று குறிப்பிடலாம். கண்கள் கலந்த பின் காதலர் தம் உள்ளங்கள் கலக்கின்றன. பார்த்தவுடன் உள்ளங்கள் கலந்தமையைக் காட்டும் அறிகுறியாகக் கண்கலப்பே உள்ளது என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். இதனை,

“நாட்டம் இரண்டும் அறிவு உடன்படுத்தியதற்குக்
கூட்டி உரைக்கும் குறிப்பு ஆகும்”10
ஒன்றுபட்ட உள்ளக் குறிப்பைத் தலைவன் பார்வைத் தலைவிக்கும் தலைவி பார்வைத் தலைவனுக்கும் உரைக்கின்றன. ஒரு கருத்தை வாயினால் கூறினால் வெளிப்படையாக நன்கு விளங்கும். வாயால் சொல்லிக் கொள்ளுதல், காதல் உலகிற்குப் பொருந்துமா? அல்லது காதல் நோயை வளர்க்குமா? அதனால் காதலர்கள் உள்ளக்கருத்தைக் கண்களினால் சொல்லிக் கொள்வர். இதனை,

“கண்ணோடு கண்ணிணை நோக்கொக்கின்
வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல”11

என்று குறிப்பிடுகின்றன. ஆதலால் உள்ளம் காமக் கண்ணில் வெளிப்பட்டது. பாலுணர்வுப்பற்றி ஒரு பொருத்தமான கொள்கையை நாம் கூறுவதற்கு இல்லை என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். பெண் ஒருத்தியைக் காண்கின்றான். அவன் மொழியைக் கேட்கின்றான். அவள் மனதை மேய்க்கின்றான். அவன் மெய்யைத் தீண்டுகின்றான், கண்டு, கேட்டு. உண்டு, உயிர்த்து, உற்று அறியும்போது உள்ளம் காமத்தின் கொல்களம்; ஆகின்றது. உடம்பில் சில மாற்றங்கள் நிகழ்கின்றது. இவையெல்லாம் புணர்ச்சியிற் போய் முடிவடையும் காதல் என்று பேராசிரியர் வாக்கர் குறிப்பிடுகிறார்.

குறிஞ்சிப் பாடல்களில் இடந்தலைப்பாடு

தற்செயலாக ஒருநாள் கண்ட இருவர் உள்ளமும் புணர்ந்து காதலாயிற்று. அடங்கிய வேட்கைப் பெருகிற்று. முதல் நாள் கண்ட இடத்திலேயே இன்றும் காணலாம் என்ற நம்பிக்கையோடு தலைவன் அவ்விடத்திற்குச் செல்கிறான். ஆறாக்காதலுடையத் தலைவியும் அவன் முன்வந்து நிற்கிறாள். தலைவன் தலைவி ஆகிய இருவரும் சந்தித்த இந்த இடத்தையே இடந்தலைப்பாடு என்று கூறுவர். இடந்தலைப்பாடு பற்றியக் குறிஞ்சித்திணைப் பாடலில்,

“சொல்லின் சொல் எதிர் கொள்ளாய், யாழ நின் 
திருமுகம் இறைஞ்சி நாணுதி கதுமென் 
காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ? 
கொடுங் கேழ் இரும் புறம் நடுங்கக் குத்திப் 
புலி விளையாடிய புலவு நாறு வேழத்தின்  
தலை மருப்பு ஏய்ப்ப, கடை மணி சிவந்த நின் 
கண்ணே கதவ? அலல் நண்ணார்”12
என்று நற்றிணைக் குறிஞ்சிப் பாடல் குறிப்பிடுகின்றது. என் இனிய சொல்லுக்கு எதிர்ச்சொல் சொல்லாமல் நிற்கிறார். ஆனால் உன் அழகிய முகம் கவிழ நின்று வெட்கம் கொள்கிறாய். காமம் கை கடந்து போனால் காத்துக் கொள்ளுதல் எளிதாகும். புலியின் வளைந்த வரிகளுடைய பெரிய முதுகில் நடுங்கும்படி குத்தி விளையாடிய யானைக் கொம்பின் நுனிபோல கடைமணி சிவந்த உன் கண்கள் சினத்தை உடையது என்று தலைவன் தலைவியைக் கூறுகின்றான்.

குறிஞ்சிப் பாடல்களில் பாங்கற்கூட்டம்

இடந்தலைப்பாட்டின் பின்னர் தலைவனின் முகச்சோர்வைக் கண்ட பாங்கன் தலைவனிடம், ‘நீ இரவெல்லாம் உறங்கவில்லையா’ என்று கேட்கிறான். அதற்குத் தலைவன், ஒர் இளம்பெண்ணின்மீது நான் கொண்ட காதலால் எனக்கு இந்த நிலை வந்தது என்கின்றான். இந்த நிகழ்வை சங்கக் குறிஞ்சிப் பாடல்,
“சிறுகுடிக் குறவன் பெருந்தோள் குறுமகள், 
நீர் ஓரன்ன சாயல், 
தீ ஓரன்ன என் உரன் அவித்தன்றே”13
என்று குறுந்தொகைப் பாடலின்வழி அறியமுடிகின்றது. தலைவனின் நண்பர்கள் இவ்வொழுக்கம் உன் அறிவுக்கும், பெருமைக்கும், குடிமைக்கும், தகுதியானது அல்ல என்று கூறுகின்றனர். தலைவியின் நினைப்பை விட்டுவிட வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றனர். இதனை
“மலை உறை குறவன் காதல் மட மகள், 
பெறல் அருங்குரையள், அருங்கடிக் காப்பினள், 
சொல் எதிர் கொள்ளாள், இளையள், அனையோள் 
உள்ளல் கூடாது’ என்றோய்! மற்றும் 
செவ் வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லித்   
தெய்வம் காக்கும் தீது தீர் நெடுங்கோட்டு, 
அவ் வெள்ளருவிக் குடவரை அகத்து 
கால் பொருது இடிப்பினும், கதழ் உறை கடுகினும், 
உரும் உடன்று எறியினும் ஊறு பல தோன்றினும் 
பெரு நிலம் கிளரினும், திரு நல உருவின்  
மாயா இயற்கைப் பாவையின், 
போதல் ஒல்லாள் என் நெஞ்சத்தானே”14
என்று நற்றிணைக் குறிப்பிடுகிறது. மலையில் வாழும் குறவன் அன்பு மகளாகிய தலைவியை நீ பெறமுடியாது. அதனை நினைக்கக்கூடாது என்று நண்பர்கள் கூறுகின்றனர். அதற்குத் தலைவன் அவள் என் நெஞ்சை விட்டு நீங்காமல் இருக்கிறாள்.

அதனைத் தலைவன், செம்மையான வேர்ப்பலாவின் பயன் மிகுதியாக கிடைக்கும், கொல்லிமலையின் தெய்வம் காப்பாற்றிக் கொண்டிருக்கும். தீதற்ற மலைமுகட்டில் அருவி கொட்டும் பகுதியில் மேற்குப் பக்கப் பாறையில் காற்று மோதி இடித்தாலும், கடுமையான சினம் கொண்டு மழைப்பொழிந்தாலும், இடி இடித்தாலும் எந்த வகையான துன்பங்கள் நேர்ந்தாலும், நிலநடுக்கமே வந்தாலும், இயற்கைப் பொலிவுடன் காட்சித் தரும் பாவை, நிலையாக இருப்பது போல அவள் என் நெஞ்சை விட்டுப்போகாமல் இருக்கிறாள் என்று கூறுகின்றான்.

தலைவன் தலைவியின் மீது மிகுந்த காதல் உடையவனாக இருப்பதால் அவளோடு கூடி மகிழும் வாய்ப்பு அவனுக்குக் கிடைக்கவில்லை. அதனால் அவன் மிகுந்த வருத்தத்தோடு இருக்கின்றான். அவனுடைய நண்பர்கள் அவனுக்கு அறிவுரை கூறுவதை,
“கேளிர் வாழியோ, கேளிர்! நாளும் என் 
நெஞ்சு பிணிக் கொண்ட அம் சில் ஓதிப் 
பெரும் தோள் குறுமகள் சிறு மெல் ஆகம், 
ஒரு நாள் புணரப் புணரின், 
அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே”15
என்று குறுந்தொகைப் பாடல் குறிப்பிடுவதைக் காணமுடிகிறது. குறிஞ்சி நிலத்தலைவன் ஒரு பெண்மீது காதல் கொண்டிருக்கிறான் அவன் காதல் ஒருதலைக் காதலாக தோன்றுகிறது. தன்னுடைய காதல் வெற்றிப் பெறாததால் தலைவன் உடல்மெலிந்து காணப்படுகின்றான். தலைவனுடைய மெலிந்த தோற்றத்தைக் கண்ட பாங்கன் தலைவனுக்கு அறிவுரைக் கூறி அவனை தேற்றும் சூழலும் நிகழ்ந்துள்ளதை,

“பெருவரை மிசையது நெடுவெள் ளருவி 
முதுவாய்க் கோடியர் முழவின் ததும்பிச் 
சிலம்பின் இழிதரும் இலங்குமலை வெற்ப 
நோதக் கன்றே காமம் யாவதும் 
நன்றென உணரார் மாட்டும் 
சென்றே நிற்கும் பெரும்பே தைமைத்தே”16
என்று குறுந்தொகைப் பாடல் குறிப்பிடுகிறது. அதில் மிக உயர்ந்த மலையின் உச்சியிலுள்ள அருவி மிகத்தாழ்ந்த மலையில் விழுவதுபோல மிகுந்த பெருமையுடைய தலைவன் அவனுடைய பெருமையும், அறிவையும் நீக்கிக் காமம் கொண்டுள்ளதாகக் குறிப்பிடுவதைக் காணமுடிகிறது. இதனை வள்ளுவர்,

  “சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ
 நன்றின்பால் வைப்பது அறிவு”17
என்ற குறளில், தீயவழிகளில் மனதை செலுத்துதாது, நல்ல வழியில் மனதை செலுத்துவது அறிவு என்கிறார் திருவள்ளுவர். காமம் அதன் நன்மையை உணராதவரிடத்தில் செல்வதால் அதைப் ‘பேதை’ என்று குறிப்பிடுகின்றனர். இதனைக் காணும்போது ‘காமத்துக்கு கண்ணில்லை’ என்னும் பழமொழியை இங்கு நினைவுக்கோருவது பொருத்தமாக அமைவதைக் காணமுடிகிறது.

குறிஞ்சிப் பாடல்களில் பாங்கியற்கூட்டம்
களவு, கற்பு என்ற இருநிலைகளிலும் தலைவன் தலைவி ஆகிய இருவருக்கும் உறுதுணையாக இருந்து உதவுபவள் தோழியே ஆவாள். இருதலைப் புள்ளி ஓர் உயிர் தலைவியும் தோழியும் இப்படிப்பட்ட நட்புறவை கொண்டவர்கள். தலைவன், தலைவி திணைப்புனம் காக்கும் பகல் வேளையில் தலைவியைக் கண்டு சந்தித்து செல்வது வழக்கம். தற்போது தினை அறுவடைக்குப் பின் தலைவியை சந்திப்பது இயலாத ஒன்றாகும். பெற்றோரின் கடுங்காவல் தலைவிக்கு அதிகமாயிற்று. ஆதலால் தலைவனைக் காண இரவில் வரட்டுமா என்று தோழியரிடம் கேட்கிறான். அதற்குத் தோழி இவளது தாய் கண்ணை இமைக்காப்பது போலக் காக்கிறாள். இவளது தந்தை இவள் தசையின் அடியெடுத்து வைப்பதைக் கூட விரும்பவில்லை. எங்கே போகிறாய் என்கிறார். நானும் இவளும் துவர்ப்பு இல்லாத இனிய நண்பர்கள். ஓர் உயிரும் இரண்டு தலையும் கொண்ட பறவை போல வாழ்கின்றோம். தினைப்புனம் காப்பவர்களின் ஆரவாரத்தைக் கேட்டு கிளிகளும் அணில் பிள்ளைகளும் விளையாடும். 

பலாமர கிளைகளில் அமர்ந்து கொண்டு ஒன்றையொன்று அணைத்துக் கூச்சலிடும். அந்தப்பலாப்பழம் தரையில் விழுந்து அடிபடாமல் இருக்கக் குறவர்கள் கூரைப்போல் அமைத்திருப்பர். அதில் வேங்கை மலர் கொட்டிப் புலிப்போல தோற்றமளிக்கும். அதை யானைகள் கண்டு பயந்து ஓடும். இப்படிப்பட்ட மலைநாட்டுத் தலைவன் நீ வந்தால் தலைவியின் நிலையை நினைத்துப்பார். இவள் உயிர் வாழமாட்டாள் என்று தோழி கூறுவதாக

“யாயே கண்ணினும் கடுங்காதலளே, 
எந்தையும் நிலன் உறப் பொறாஅன், “சீறடி சிவப்ப 
எவன் இல குறுமகள் இயங்குதி?’ என்னும், 
யாமே பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின் 
இருதலைப் புள்ளின் ஓர் உயிரம்மே, 
ஏனல் அம் காவலர் ஆனாது ஆர்த்தொறும், 
கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெருஞ்சினை 
விழுக்கோட் பலவின் பழுப் பயங்கொண்மார், 
குறவர் ஊன்றிய குரம்பை புதைய, 
வேங்கை தாஅய தேம்பாய் தோற்றம்   
புலி செத்து  வெரீஇய புகர்முக வேழம், 
மழை படு சிலம்பில் கழை படப் பெயரும் 
நல் வரை நாட! நீ வரின் 
மெல்லியல் ஓரும் தான் வாழலளே”18
என்று அகநானூற்றுப் பாடல் குறிப்பிடுகிறது. தலைவியும் தோழியும் இணைபிரியா நட்பையும் தலைவியின் கட்டுக்காவல் பற்றியும் இப்பாடல் விளக்குகிறது. களவு தொடர்பைப் பற்றி தலைவன் தோழிக்கு வெளிப்படையாகவோ, குறிப்பாகவோ கலவை நயமாகப் புலப்படுத்துகின்றான். தலைவியின் நாணத்தைப் பற்றியும் உறவைப் பற்றியும் தோழிக்கு வெளிப்படுத்துகின்றான். இதனை,

“ஒன்று இரப்பான் போல் எளிவந்தும் சொல்லும் உலகம் 
புரப்பான் போல்வது ஓர் மதுகையும் உடையன் 
வல்லாரை வழிபட்டு ஒன்று அறிந்தான் போல் 
நல்லார் கண் தோன்றும் அடக்கமும் உடையன் 
இல்லோர் புன்கண் ஈகையின் தணிக்க  
வல்லான் போல்வது ஓர் வன்மையும் உடையன் 
அன்னான் ஒருவன் தன் ஆண்தகை விட்டு என்னைச் 
சொல்லும் சொல் கேட்டீ சுடர் இழாய், பல் மாணும்”19
என்று கலித்தொகைப் பாடல் குறிப்பிடுகிறது. இதில் தோழியிடம் தலைவன் தன் வேண்டுகோளைத் தெரிவித்தான். அவனது விருப்பத்தைத் தோழி தலைவியிடம் கூறுகிறார். அத்தலைவி இறுதியில் தலைவனின் வேண்டுகோளை ஏற்று நாணத்தால் தலை கவிழ்ந்தாள். அவளது குறிப்பறிந்து அவளுக்குக் கூற வேண்டியதைத் தன் நெஞ்சிற்குக் கூறுகின்றாள் என்று அகநானூற்று குறிஞ்சிப் பாடல் சிறப்பாகக் குறிப்பிடுகிறது. தலைவியுடன் அவன் களவு ஒழுக்கத்தைத் தொடர வழி செய்பவளாகத் தலைவி குறிப்பால் செயல்படுவதைக் காணமுடிகிறது.

முடிவுரை
               
சங்க இலக்கியத்தில் அகப்பாடல்கள் சிறப்பிடம் பெற்றிருப்பதைப் போலவே அகப்பொருள் பாத்திரங்களில் தலைவி சிறப்பிடம் பெற்றிருப்பதைக் காண முடிகிறது. அந்தவகையில் குறிஞ்சி நில வாழ்க்கை முறையை ஆராயும்போது தலைவனும் தலைவியும் குறிஞ்சி நிலத்தில் களவு வாழ்க்கை அதிகமாக ஈடுபட்டுள்ளதை சங்கப் பாடல்கள் மூலம் நம்மால் அறிய முடிகிறது.

சான்றெண் விளக்கம்
1.இறையனார் அகப்பொருள் உரை (களவு ), ப.28

2.மேலது, ப.65

3.என்.சுப்புரெட்டியார், அகத்திணை கொள்கைகள், ப.50, பாரி நிலையம், சென்னை -1, முதற்பதிப்பு – 1981.

4.மேலது, ப.51

5.பரிமேலழகர் (உ.ஆ), திருக்குறள் உரை, பா.1100, கழக வெளியீடு, சென்னை.

6.இளம்பூரணர் (உ.ஆ.), தொல்காப்பியம், செய்யுளியல், ப.178, கழக வெளியீடு, சென்னை – 1, முதற்பதிப்பு – 1953.

7.என்.சுப்புரெட்டியார், தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை, ப.94, பத்மாவதி ஆப்செட், சென்னை – 32, முதற்பதிப்பு – 2017.

8.ச.வே.சுப்பிரமணியம், பத்துப்பாட்டு மூலமும் உரையும், ப.387, மணவாசகர் பதிப்பகம், சென்னை.

9.அ.மாணிக்கம், அகநானூறு மூலமும் உரையும், ப.120, அருணா கிராபிக்ஸ், சென்னை – 17, முதற்பதிப்பு – 2013.

10.இளம்பூரணர் (உ.ஆ), தொல்காப்பியம், களவு, ப.62, கழக வெளியீடு, சென்னை -1, முதற்பதிப்பு – 1953.

11.பரிமேலழகர் (உ.ஆ), திருக்குறள் உரை, பா.1100, கழக வெளியீடு, சென்னை.

12.பாலசுப்பிரமணியன் கு.வெ., நற்றிணை மூலமும் உரையும், ப.80, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், ராயப்பேட்டை, சென்னை – 14, முதற்பதிப்பு – 2004.

13.வி.நாகராஜன், குறுந்தொகை மூலமும் உரையும், ப.180, பாவை பிரிண்டர்ஸ், சென்னை – 14, முதற்பதிப்பு – 2004.

14.பாலசுப்பிரமணியன் கு.வெ., நற்றிணை மூலமும் உரையும், ப.364, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், ராயப்பேட்டை, சென்னை – 14, முதற்பதிப்பு – 2004.

15.வி.நாகராஜன், குறுந்தொகை மூலமும் உரையும், ப.495, பாவை பிரிண்டர்ஸ், சென்னை – 14, முதற்பதிப்பு – 2004.

16.மேலது, ப.148

17.பரிமேலழகர் (உ.ஆ), திருக்குறள் உரை, பா.442, கழக வெளியீடு, சென்னை.

18.இரா.ஜெயபால், அகநானூறு மூலமும் உரையும், ப.47, அருணா கிராபிக்ஸ், சென்னை – 17, முதற்பதிப்பு – 2013

19.அ.மாணிக்கம், கலித்தொகை மூலமும் உரையும், ப.292, அருணா கிராபிக்ஸ், சென்னை -17, முதற்பதிப்பு – 2013.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
ந.இந்திரா
உதவிப்பேராசிரியர்
தமிழ்த்துறை
முத்தாயம்மாள் கலைக்கல்லூரி
இராசிபுரம் 637 408.
 

பொருநராற்றுப்படையில் அறநெறிச் சிந்தனைகள் |ஆய்வுக்கட்டுரைகள்|பா.சங்கீதா

பொருநராற்றுப்படையில் அறநெறிச் சிந்தனைகள் - பா.சங்கீதா
முன்னுரை
                 
சமுதாயத்தையும் மனிதனையும் செந்நெறிப்படுத்தும் ஒழுக்க நெறியே அறமாகும். அறம் என்பது எல்லையற்றதும் பரந்து விரிந்ததும் ஆகும். நற்செயல்கள் அனைத்துமே அறத்தின் பாற்படுவனவாகும். உண்மை, வாய்மை, மெய்ம்மை ஆகிய இம்மூன்றும் அறத்திற்கு அடிப்படையாக அமைந்து, நல்வினையை ஏற்படுத்துவதாக அமையும். அந்த வகையில் பொருநராற்றுப்படை காட்டும்  ஈகை சார்ந்த அறங்களை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

அறம் – அகராதி விளக்கம்
               
அறம் என்ற சொல்லுக்கு மதுரை தமிழ்ப்பேரகராதி  “தருமம், புண்ணியம், தகுதி, நோன்பு, அறச்சாலை,  புனிதம், ஒழுக்கம், இன்சொல், இல்வாழ்க்கை” (ப.எ-170) என்று பல்வேறு பொருள்களைத் தருகிறது.
க்ரியாவின் தற்கால தமிழ் அகராதி
                 
“அறம் என்பது தனிமனிதன் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கத்தின் அடிப்படையான நெறிமுறைகளுள் ஒன்று” (ப.எ 81) எனப் பொருள் கூறுகிறது.

அறத்தின் சிறப்பு
                 
“அறம் செய விரும்பு” (ஆத்தி சூடி.பா:1) என்றார் ஒளவையார். திருவள்ளுவரும் முப்பாலுள் அறத்தையே முதன்மையாகக் கொண்டு “மனத்துக்கண் மாசிலன் ஆதல்” (குறள்.34) என்று குறிப்பிடுகிறார். ஒழுக்கமே சிறந்த அறம் என்றும், அறத்தான் வருவதே இன்பம் என்று குறிப்பிடுவதையும் பார்க்கலாம். “அறமே அறிவு, அறிவே அறம்” என்கிறார் சாக்கரட்டீசு. அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கின் பயனாக அறம் விளங்குவதைக் காணலாம். தனிமனிதன், சமுதாயம், சமயம் ஆகிய எந்நிலையிலும் அறமே முதன்மையிடம் பெறுகிறது. அறத்தின் குறிக்கோள் என்பது மாந்தன் முழுமையடைய வேண்டும் என்பதேயாகும்.
  தமிழர்கள் போரிலும் அறத்தையே பின்பற்றினர் என்பதற்குப் பல்வேறு சான்றுகளும் உள்ளன. மணிமேகலையில்,
        
“அறமெனப்படுவது யாதெனக் கேட்டின்        
மறவாதி துகேள் மன்னுயிர்க் கெல்லாம்
‫
உண்டியும் உடையும் உறையுளும் அல்லதுகண்டதில்”    (மணிமேகலை : 228-230)

என்று குறிப்பிட்டு அறத்தை வலியுறத்துகிறது.

ஆற்றுப்படையில் அறம்
 
வாழ்வியல் அறங்கள் பல இருந்தாலும், இல்லையென இரந்தோர்க்கு ஈதல் மிகப்பெரிய செல்வமாகக் கருதப்பட்டது. அறநெறி வாழ்தலே சிறப்பான வாழ்வு என்றெண்ணி ஈகைக்குச் சங்ககால அரசர்களும் முன்னுரிமை வழங்கினர். உலகில் அறப்பண்பு வளர வேண்டி வறியவர்களுக்குத் தன்னிடம் உள்ள பொருளை வழங்கும் வள்ளல்களைப் புகழ்ந்து பாடுவதற்காகச் சங்ககாலப் புலவர்கள், பாடாண் திணையில் ஆற்றுப்படை என்னும் துறையை  உருவாக்கிக் கொண்டார்கள். ஒரு புலவனிடம் சென்று பெரும்பொருள்களைப் பரிசாகப் பெற்று வந்த பொருநர், பாணர், விறலியர், கூத்தர், புலவர் போன்றோருள் ஒருவர், பரிசில் பெறாதார் ஒருவருக்குத் தாம்பெற்ற பெருவளத்தைக் காட்டி, அதனை வழங்கிய தலைவனிடம் அவர்களைச் செலுத்துவதாக அமைவது ஆற்றுப்படையாகும். இதையே தொல்காப்பியரும்,
     
“கூத்தரும், பாணரும், பொருநரும் விறலியும்     
….. ……. …… ……..     
சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்” (தொல்.புறம்:36)
என்று குறிப்பிடுகிறார்.

பொருநராற்றுப்படை சிறப்பு
               
பொருநரை ஆற்றுப்படுத்தியமையால் இது பொருநராற்றுப்படையாகும். ஏர்க்களம் பாடுநர், போர்க்களம் பாடுநர், பரணி பாடுநர் என மூவகையாகப் பொருநர்கள் இருந்தாலும், இந்நூலில் வரும் பொருநன் போர்க்களம் பாடும் பொருநனாவான். கரிகாற் பெருவளத்தானின் சிறப்பினைக் கூறும் இந்நூலை இயற்றியவர் முடத்தாமக் கண்ணியார் ஆவார். இவ்வாற்றுப்படை காலத்தால் முந்தியதால், ஆற்றுப்படை நூல்களுள் முன்னதாக வைக்கப்பட்டுள்ளது.

அறமும் நீதியும்
                 
முதியோர் இருவருக்குள் முரண்பாடு ஏற்பட்டது. அவர்கள் தங்கள் முரண்பாட்டைப் பேசித் தீர்த்துக் கொள்ள முடியவில்லை; கரிகாலனிடம் வழக்குரைத்து நீதி பெறலாம் என்று நினைத்து அவனிடம் அணுகினர். அவன் இளைஞனாயிருப்பதைக் கண்டனர். அவனால் தங்கள் வழக்கை ஆராய்ந்து உண்மை உரைக்க முடியுமோ என்று ஐயுற்றனர். அவர்கள் ஐயத்தைக் குறிப்பால் உணர்ந்த கரிகாலன் அவர்களுடைய வழக்கை மற்றொரு வயது முதிர்ந்த அறநூல் அறிந்தவரிடம் மாற்றுவதாகக் கூறினான். பின்னர் தானே முதியவனைப் போல நரை முடியும் தாடியுடையவனாய் வந்து உட்கார்ந்து அவர்கள் வழக்கைக் கேட்டான். இருவரும் ஒப்புக் கொள்ளும்படி நீதி வழங்கினான். இந்த நிகழ்ச்சியை,
       
“முதியோர் அவை புகுபொழுதில் தம்       
பகைமுரண் செலவும்” (பொரு. 188)
               
என்ற அடிகளால் காணமுடிகிறது. அறம் அகத்தையும் அரசு புறத்தையும் துப்புரவு செய்ய எழுந்த இரு நெறிகளாகும். அரசு சட்டங்கள் செயற்பட இயலா நிலையில் அறக்கருத்துக்கள் மனித மனங்களைச் செம்மைப்படுத்துகின்றன என்று அர.சிங்காரவடிவேலன் (சங்க இலக்கிய உவமைகள் ப. 24) கூறுவதன் மூலம் மனித மனங்களைச் செம்மைப்படுத்துவதற்கு அறம் தேவை என்பதை அறியமுடிகிறது. இக்கருத்திற்கேற்ப பொருநராற்றுப்படையில் கரிகாற்சோழன் அறந்தவறாமல் நீதி வழங்குவதில் சிறந்தவன் என்பதை எடுத்துக் காட்டியுள்ளார் முடத்தாமக் கண்ணியார்.

பசிப்பிணி நீக்கல்
               
பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பர். அந்த வகையில் பசிப்பிணி நீங்க, அந்நாளிலும் விழாக்கள் முடிந்ததும் அனைவருக்கும் சோறு வழங்கப்பட்டிருக்கிறது என்பதை,
 
      “சாறுகழி வழிநாட் சோறுநசை யுறாது”( பொரு-2)
               
என்ற அடிகள் தெளிவுபடுத்துகிறது. மேலும், பொருநனுக்குச் செம்மறியாட்டின் இறைச்சி கலந்த உணவையும், புழுங்கல் அரிசியில் உணவையும் போதும்போதும் என்னும் அளவுக்கு முகம் கோணாமல் பரிமாறியதையும் விழாக்கள் வைத்து மக்களுக்கு உணவு என்னும் அறபண்பினை வழங்கியிருக்கின்றார் என்பதையும் பொருநராற்றுப்படையில் நாம் காணலாம்.

மானம் காக்க  ஆடை வழங்குதல்
          மானத்தின் பெருமை கூற விழைத்த வள்ளுவர்,
 
                 மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்             
                  உயிர்திப்பர் மானம் வரின் (திரு. 969)
               
என்ற குறள் மூலம் அதனை விளக்கியுள்ளார். “உடுக்கை இழந்தவன் கைபோல” என்ற வள்ளுவரின் உவமையும், “ஆள்பாதி ஆடைபாதி” என்ற பழமொழியும் மானம் காக்கும் ஆடையின் அவசியத்தை நமக்குப் புலப்படுத்தும். மிகவும் அழுக்கேறி இற்று நைந்து போன ஆடையுடன் தன்னை நாடி வந்த பொருநனுக்கு, முதலில் மற்றவரோடு ஒப்ப மதிக்கும் சிறந்த ஆடையைக் கரிகாலன் வழங்கினான் என்பதை
       
 ஈரும் பேணு இருந்து இறை கூடி        
……. ……… ……………….        
அரவுரி அன்ன அறுவை நல்கி   (பொரு.79-83)
மேற்கூறிய வரிகள் புலப்படுத்துகிறது.

இருப்பிடம் அளித்தல்
               
 தன்னை நாடி வந்த பொருநர்களுக்கும் அவனைச் சார்ந்தோர்களுக்கும் உணவு, உடை அளித்தது மட்டுமின்றி அவர்கள் தங்குவதற்கு தன்னுடைய அரன்மனையிலேயே இடமும் அளித்திருக்கிறான் கரிகாலன்.இச்செய்தியை,
                    
“……….. ….. மற்று அவன்        
திருக்கிளர் கோயில் ஒருசிறைத் தங்கி” (பொரு.89-90)
என்னும் வரிகள் தெளிவுபடுத்துகிறது.
இசையின் மூலம் நல்வழிப்படுத்துதல்
                 
ஆறலைகள்வர்கள் செல்லும் பாலை நிலத்தில் வாசிக்கப்படும் பாலை யாழின் மூலம் வரும் பாடலைக் கேட்டு, தம்கைகளில் உள்ள கொடிய படைக்கலங்களைப் போட்டுவிட்டு அடங்கி நிற்கும் பண்புடையவர்களாக மாறுவர் என்பதை,
      
“ஆறுஅலை கள்வர் படைவிட அருளின்      
மாறுதலை பெயர்க்கும் மருவுஇன் பாலை” (பொரு . 21-22)
 
               என்ற பாடலின் மூலம் அறியலாம். பொருநர்களால் வாசிக்கப்படும் யாழுக்கே தீயவர்களை நல்வழிப்படுத்தும் இயல்பு இருக்கிறது என்றால், அவர்களால் போற்றிப் பாடப்படும் மன்னனுக்கு அறப்பண்பு மிக்கிருப்பதில் வியப்பேதுமில்லை.

கரிகாலனின் ஈகைத் திறன்
 
பொருநர்கள் ஊருக்குச் செல்ல நினைத்த போது, அவர்களைப் பிரிய மனம் இல்லாத கரிகாலன் பொருநனுக்கும், அவன் குடும்பத்தார்க்கும் எண்ணற்ற கொடைகளை வழங்கி மகிழ்வித்தான். இல்லோரை மேலும் இல்லோராக்கித் தம்முடைய பொருளை மட்டும் பெருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவன் கரிகாலன் என்பதை,
 
“துடிஅடி என்ன தூங்குநடைக் குழவியொடு         
பிடிபுணர் வேழம் பெட்டவை கொள்க” (பொருந: 125-126)
 
               என்ற அடிகள் காட்டுகிறது. பொருநர்கள் விரும்பிக் கேட்பதற்கு முன்பே அனைத்தையும் கொடுத்தவன் கரிகாலன் என்பதை அறியமுடிகிறது.  உண்ண உணவும், உடுக்க உடையும் கொடுத்ததோடு, வாழ்நாள் துயர் நீங்க பொன்னும், மணியும், களிறும், வேழமும் தந்து, அவனுடைய தேரிலேயே பொருநனையும், அவனுடைய குடும்பத்தையும் ஏற்றி, அவர்கள் ஊரில் விடுவான் என்ற செய்தி கரிகாலனின் ஈகைத் திறனை அறிய ஏதுவாகிறது. “இல்லோர்க்கு இல் என்று இயைவது கரத்தல், வல்லா நெஞ்சம் வலிப்ப” (அகம்-53) என்று அகநானூறும், “மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம், உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” (மணி-11: 95-96) என்று மணிமேகலையும் ஈதலின் சிறப்பினை எடுத்துரைக்கிறது. ‘செல்வத்துப் பயனே ஈதல்” என்ற புறநானூற்று தொடருக்கு ஏற்ப, ஈதலறம் மிக்கவன் கரிகாலன்,
            
“பாசிவேரின் மாசொடு குறைந்த           
…….  …………. ………..            
‘பெறல் அருங்கலத்தில் பெட்டாங்கு உண்க” (பொருந:153-156)
என்ற அடிகள் கரிகாலனின் விருந்தோம்பல் மாண்பினை எடுத்துரைக்கிறது.

முடிவுரை
               
 ‘உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும்’ உலக இயல்பு. இத்தகைய இயல்பிற்கு ஏற்ப கரிகாலன் ஒருவருக்கு அடிப்படைத் தேவையான உண்ண உணவும், மானத்தைக் காக்க உடையும்,  மகிழ்ச்சியாக வாழ பொருளும் கொடுத்து அறம் வளர்த்திருக்கிறான் என்பதை பொருநறாற்றுப்படை மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

பார்வை நூல்கள்
1. பரிமணம், அ.மா., (உ.ஆ.)                     
சங்க இலக்கியங்கள் (தொகுப்பு )

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,
அம்பத்தூர், சென்னை – 600 098.
   முதற்பதிப்பு – 2007.
2.அண்ணாமலை, வெ.,                                        
சங்கஇலக்கியத் தொன்மக் களஞ்சியம்,
தொகுதி 1,2,

மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்,
முதற்பதிப்பு – 2000.

3.சிதம்பரனார்.சாமி.,                                                 
எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்,
 
அறிவுப்பதிப்பகம், சென்னை – 14,                                                                                                                             
இரண்டாம் பதிப்பு-2008.

4.சுப்பிரமண்யன்,ந., 
சங்ககால வாழ்வியல்,
   
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,
                                                                                               
அம்பத்தூர், சென்னை – 600 098,
முதல் பதிப்பு-1986

5.செல்லப்பன், சு.,                                                     
சங்க இலக்கியத்தேன்
அன்றில் பதிப்பகம்,
                                                                                               
சென்னை – 600 005,  முதற்பதிப்பு – 1996.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
பா.சங்கீதா,
தமிழ்த்துறை,

உதவிப்பேராசிரியர்,

முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி(தன்னாட்சி),

இராசிபுரம்.

தமிழ் இலக்கியத்தில் இயற்பியல் கூறுகள்| முனைவர். S.S. ஜெயபாலகிருஷ்ணன்

தமிழ் இலக்கியத்தில் இயற்பியல் கூறுகள் - ஜெயபாலகிருஷ்ணன்
முன்னுரை
                காலத்தில் மனித சமூகத்தில் ஏற்பட்ட அறிவியல் முன்னேற்றம் காரணமாக உலக மொழிகள் பலவற்றிலும் பலமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவ்வகை மாற்றங்கள் தமிழ் மொழியிலும் புதுமையாக்க மாற்றமும், வளர்ச்சியும் நடைபெற்றது எனலாம். ஒவ்வொருஇலக்கியமும் தான் தோன்றிய சமுதாயத்தை உள்ளடக்கமாகக் கொண்டு திகழ்கிறது. அறிஞர்களும், இலக்கியம் என்பது சமுதாயத்தைப் பிரதி பலிக்கும் கண்ணாடி என்கிறது. 21ஆம் நூற்றாண்டில் அறிவியல் தமிழ் என்பது புறநிலை வளர்ச்சியால் புதிய துறையாக வளர்ந்து வருகிறது. அறிவியல் கலைச்சொற்கள் கட்டிடங்களுக்கு செங்கலபோன்றது ஆகும்.ஆங்கிலத்தில் wisdom, knowledge என்ற இரு சொற்கள் நாம் அறிந்தவை. இவற்றிற்கு நேராக தமிழ்ச் சொற்களை பரிமேலழகர் மெய்யறிவு, கல்வியறிவு என்று இரு சொற்களை பயன்படுத்துகிறார். சில இடங்களில் வேதியியல், ஆங்கில மருத்துவம் மற்றும் பொறியியல் முதலியன பாடங்களைத் தமிழில் கற்பிக்கின்றனர். இதற்குமுன்பே அறிவியல்பற்றியதகவல்களை பண்டைய இலக்கியங்களில் குறிப்பிட்டதையும் இந்த கட்டுரையில் காணலாம்.

இலக்கியத்தில் அறிவியல் செய்திகள்
“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்பொருள் காண்ப அறிவு”  (குறள். 355)
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”  குறள். 423)           
என்ற குறளிலும் தெளிவுபடுத்தி உள்ளார் விருப்பு வெறுப்பற்ற தன்மை உடையது அறிவியல் என்பதைத் தம் சிந்தனையாக வைத்துள்ளார்.  இயற்பியல் ஒரு பிரிவாக விளங்குவது அறிவியல், அண்மைக்கால அறிவியல் வரலாற்றில் அற்புதமான வளர்ச்சி பெற்று இருப்பது தோன்றியது. பின்னர் ஓர் அறிஞர் அணுவை பிளக்க இயலும் என்ற புதிய அணுவியலாகும். முதலில் அணுவை பிளக்க இயலாது என்ற கொள்கை கருத்தை வெளியிட்டார். இக்கொள்கையுடைய தமிழ் சான்றோர்கள்சிலர் இருந்தமை இலக்கியத்தில் நாம் காணலாம்.
               
சந்திர கிரகணத்தை குறிக்க வந்த புலவர்கள் திங்களைப் பாம்பு விழுங்குவதாகக் குறித்துள்ளனர். அக்காலத்தில் ராகுகேது என்றும் பாம்புகள்சூரியனையும், சந்திரனையும் விழுங்க முயல்வதாக மக்கள் கருதி இருந்தனர். பழங்காலத்தில் மேகம் கடலுக்கு சென்று நீரை முகந்து கொண்டு வானத்தில் ஏறி வந்து மழை பொழிவதாக மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். இதற்கு சான்றாக,

“முந்நால் திங்கள் நிறைபொறுத்து அசை
ஒதுங்கல் செல்லாப் பசும்புளி வேட்கைக்
கடுஞ்சூழ் மகளிர் போல நீர்கொண்டு
விசும்புஇவர் கல்லாது தாங்குது புணரி
செழும்பல் குன்றம் நோக்கி                                               
பெருங்கலி வானம் ஏர்தரும் பொழுதே” ( குறுந்தொகை: 287)

நீரில் அறிவியல்
தமிழர் மரபு படி சனிக்கிழமை நீராடுவது வழக்கம், இதன் பொருள் சனிக்கிழமை மட்டும் நீராடுவது அல்ல. உடல் ஆரோக்கியத்துடன் இருக்க கந்தகத் தன்மை சேர்ந்த நீரில் குளி என்பது பொருள்படும். இதன்படி சனிக்கோளில் (கரிக்கோள்)  கந்தகத்தன்மை உள்ளதாக அறிவியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பல கோடி விண்மீன்கள் விண்வெளியில் உள்ளன. இதனைப் பார்த்த தமிழனின் எண்ண  ஓட்டம்  27 விண்மீன்களை மட்டும் எடுத்து ஒரு மாதத்தின் 27 நாட்களில் உரையாதி நாளிகை வேறுபாட்டை அறிகிறான்.  இந்த 27 விண்மீன்களையும் 12 ஆக பிரித்துப் பார்க்கிறான். இந்த விண்மீன் சுற்று பாதையில் வழியாக சூரியன் செல்லும் பாதை அமைகிறது. இதனையே பிற்காலத்தில் 12 வட்டங்களாக ராசி என்ற பெயரிட்டு அழைத்தார்கள்.

“விரிக்கதிர் மதியமொடு வியல் விசும்பு புணர்ப்ப
எரிசடை எழில் வேம் தலையென கீழிருந்து
தெருவிடை படுத்த மூன்று ஒன்புதிற் றிருக்கையுள்                                    
உருகெழு வெள்ளிவந்த தேற்றியல் சேர” (பரிபாடல் 11.1.4)
               
ஒளிக்கதிர்கள் எந்த அளவிற்கு பிரகாசம் என்பதையும் சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் அறிந்து வைத்திருக்கின்றனர். ஒளி பற்றிய ஆற்றலை பரிபாடல் கூறும் செய்தி ஒளியை முருகனுடைய ஒளி பொருந்திய சாயலுக்கும் அவன் வேலுக்கும் ஒப்பிட்டுள்ளன.
“வெண்சுடர் செவ்வேல் விரைமயில் மேல் ஞாயிறு”
என்கிற பரிபாடல் இந்த உலகம் நீரால் சூழப்பட்டது. உலகத்தில் ஒரு பகுதி நிலமும் மூன்று பகுதி நீராலும் சூழப்பட்டு உள்ளது என்பதை
“மாநிலம் தோன்றாமை மலிபெயல் தலை
எமநீர் எழில்வானம் இறுதிதரும் பொழுதினான்”
               
என்கிறது பரிபாடல்.  அறிவியல் மின்னணுகளுக்குடன் தொடர்புடைய துறையாக உள்ளது எனலாம். மூலக்கூறு என்பது அந்த பொருள்களில் உள்ள அணுக்களை பொறுத்து அமைந்துள்ளது. இதனை,
“தீயினுள் தெறல் நீ பூவினுள் நாற்றம் நீ
கல்லினுள் மணியும் நீ” (பரிபாடல் 3-63-64)

என்கிறது இந்தப் பாடல்.

அறிவியல் தமிழில் ஆழிப்பேரலைகள்
               
உலகத்தில் அழிவு ஒன்று உண்டு அழிந்து மீண்டும் தோன்றும் என்று பழமை நூல்களும் வேத சாஸ்திரங்களும் கூறுகின்றன. இயற்கையின் பேரழிவால் உலகம் அழிய வாய்ப்பிருக்கிறது என்றும் இந்த உலகம் அழிந்து மீண்டும் தோன்றும் முறையை பரிபாடல் கூறுகிறது. நிலம் நீராலும், நீர் தீயாலும் (சுனாமி)  அதாவது நீருக்குள் நெருப்பு ஏற்பட்டு வெடித்தால் சுனாமி கடலில் ஏற்படுகிறது.  காற்று வானத்திலும், வானம்  மூலப்பொருள்களிலும் ஒன்றனுள் ஒன்றாக ஒடுங்கும் முறையில் கோள்கள் அழிந்து சிதறுகிறது இதனை,

”தொல்முறை இயற்கையின் மதியொ
———————————————மரபிற்கு
ஆகபசும்பொன் னுலகமும் மண்ணும் பாழ்பட                             
விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல     (பரி:2,1–4) 
மீண்டும் பீடு உயர்வு ஈண்டு அவற்றிற்கும்                                  
உள்ளீடு ஆகிய இருநிலத்து ஊழியும்” (பரி:2,11-12)

என்கிறது பரிபாடல்.

அண்டப் பகுதியில் உண்டை பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்                       
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன் – திருவாசகம்
இப்பாடல் வானியலை பற்றி சொல்கிறது அண்டம் என்பது நம் பூமி அது உருண்டையானது என்பதை “உண்டைப் பிறக்கும்” என்ற சொற்கள் சொல்கின்றன. முற்கால இலக்கியங்களில் அறிவியல் செய்திகள் உள்ளன என்பதற்கு இது ஒரு உதாரணம்.

“திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக
விண்ணுறுப்பு திழிதரும் வீங்குசெல்ல மண்டிலத்து
முரணமி சிறப்பிய் செல்வனொடு நிலைய                                                
ரோகிணி………………………… (நெடுநல்வாடை-160)
               
அரசர்கள் தம் மாளிகையின் மேற்கூறையில், இன்று நாம் கோளரங்குகளின் உட்கூறையின் மீது காட்சிகளை காண்பதுபோல, ராசி மண்டலங்களையும், 27 விண்மீன் கூட்டங்களையும், அதனுடே நிலவு சஞ்சரிப்பதையும் ஓவியங்களாக வரைந்து வைத்தனர். இக்காட்சியை (159-163) பாடல்கள் தெரிவிக்கின்றன.

சூரியன்
                செவ்வியல் இலக்கியத்தின் சூரியன் உதிப்பதும், மறைவதை பற்றிய வருணங்கள் கீழக்கரை மக்களின் அனுபவமாக பாடப்பட்டுள்ளன.

”முந்நீர் மீமீசைப் பலர் தொழத் தேன்றி
என சூரியன்  உதிப்பதையும்         (நற்-283-6)
சுடர்கெழு மண்டிலம் மழுங்க ஞாயிறு
குடகடல் சேரும் படகூர் மாலையும்” (அகம் 378)
என காவட்டனாரின் பாடலின் வழி சூரியன் மேலைக் கடலில்மறைவதையும் பாடி டியுள்ள அறிவியல் சார்ந்த கருத்தை நாம் காண்கிறோம்.

சந்திரன்
         திங்கள் என்பது நிலவை குறிக்கும் இது பூமியின் துணைக்கோளாகும். திங்களின் தன்மையையும் வெண்மையையும் அழகும் குழந்தைகள் முதல்  பெரியவர் வரை உள்ளம் மகிழச் செய்யும்.

“முகிழ் நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்” (அகம்-54)
               
எனத் தலைவி தம் மகனை இளம்பிறையோடு ஒப்பிட்டு கூறியுள்ளார். தலைவியின் நெற்றி பிறை நுதல் என அகநானூற்றில் பாடல் 57, 179ஈ 192, 306, போன்றவற்றின் நெற்றிக்கு உண்மையாகச் சந்திரனை வைத்துப் பாடியுள்ளனர்.

மழை பெய்யும் முறை
               
மேகம் கடல் நீரை பெற்று மழையாக பொழிகிறது என்பது அறிவியல் கண்டுபிடிப்பு.

நிறைகடல் முகந்துராய் நிறைந்து நீர்த்தளும்பும் தன்
பொறை தவிர்பு அசைவிட        (பரி 6:1-2)
               
என்ற பரிபாடலில் முகில்கள் கடலின்கண் நீரை முகந்து கொண்டு வந்து ஊழி முடிவின் கண் முழுகுவிக்க முயன்றது போல மழை பெய்தது என்ற கருத்து கூறப்பட்டுள்ளது. இவை ஆய்வின் வெளிப்பாடுகள் அல்ல அன்றைய தமிழரின் அறிவின் வெளிப்பாடுகள். தமிழரின் இயற்பியல்அறிவும் நம்மை வியக்கவைக்கிறது. அமுதாம்பிகை பிள்ளைத்தமிழில் ஊசற்பருவத்தில் அமுதாம்பிகை ஊசலாடும் நிகழ்வினைக் குறிக்கும்போது சிவஞான முனிவர்,

“மகரக் குழைகளும் ஊசலாட
பங்கைய மடமாதர் நோக்கி இருவேம்
ஆட்ட அவ்வுசலில் பாய்ந்திலது
இவ்வுசல் என நனி ஆட்டுதோறும்
நின்னகை நிலவெழிலுக்கு அவர் முகத்                                               
திங்கள் சாய” (அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் – ஊசல் பருவம்)
               
என்ற அடிகளில் அமுதாம்பிகை ஆடும் ஊசலின் கயிறு நீளமாக இருந்ததால் மெதுவாக ஆடுகிறது என்றும் ஆனால் அவள் காதில் அணிந்திருக்கும் குண்டலம் குறைவான நீளத்தில் தொங்குவதால்விரைவாக ஆடுகிறது என்றும் கூறியுள்ளார். இதனையே கலிலியோ ஊசலின் நீளம் குறித்த தம் ஆய்வில், ஊசலின் நீளம் குறைந்தால் விரைவாக ஆடும் ஊசலின் நீளம் அதிகமாக இருந்தால் மெதுவாக ஆடும் என்றும் கூறியுள்ளார்.
விண்மீன்கள்
        வானில் தோன்றும் மற்றொரு அழகு பொருள் விண்மீன்கள் விண்ணில் மின்னுவதால் விண்மீன்கள் எனப்பட்டன தொலைநோக்கி  இல்லாத அக்காலத்த சங்க புலவர் ஒரு சிலர் விண்மீன்களை குறிப்பிட்டு பாடியுள்ளனர்.

”யாமம் கொள்வர் நாட்டிய நளிகடர்
வாகை மீனின் விளங்கித் தோன்றும்”   (அகம் – 114-10-11)

என்ற பாடல் வரிகள் மூலம் இரவில் காவல் புரிவோர் மதிலில் ஏற்றிவைத்த விளக்குகள் போல வானத்தே தோன்றும் விண்மீன்கள் இருந்ததை பதிவு செய்துள்ளார்.

வானூர்தி
          அன்றைய மனிதன்கண்ட கனவை இன்றைய அறிவியல் முன்னேற்றம் நிஜமாக்கியுள்ளது.


வலவன் ஏவ வானவுர்தி” (புறம் 27)
               
எனும் பாடல் அடியில் வானூர்தி என்ற அற்புதமான சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். இதைப்போலவே சிலப்பதிகாரத்தின் கண்ணகி கோவலனோடு ஆகாயத்திலிருந்து வந்திறங்கிய விமான ஊர்தியில் ஏறிச் சென்றதாக ஒரு காட்சி இதனை இளங்கோவடிகள்.

“வாடா மாமலர் மாரி பெய் தாங்கு
அமரர்க் கரசன் தமாவந் தேத்ரக்
கோ நகர் பிழைத்த கோவலன் தன்னோடு
வானூர்தி ஏறினன் மாதோ
கானமலர் புரிகுடில் கண்ணகி தாணென் (சிலம்பு.3:196-200)
               
என்ற வரிகளில் வாடாதபெரிய மலர்களை மலையாகச் சொறிந்து அமரர்களின் அரசனாக இந்திரனும் வானோடும்வந்து வாழ்ந்த தம் கணவன் கோவலனோடு கண்ணகி தேவ விமானத்தில் ஏறிச் சென்றாள் என்று கூறப்பட்டுள்ளது.

முடிவுரை
                ‘தமிழ் இலக்கியத்தில் இயற்பியல் சிந்தனைகள் நிறையவே கூறப்பட்டுள்ளது. அதனை வெளிக்கொணர்வதற்கு பல்துறை அறிவு இருந்தால் மட்டுமே தமிழ் இலக்கியத்தில் உள்ள இயற்பியல் பற்றிய கருத்துக்களை கொண்டுவர முடியும். தமிழ் இலக்கியங்களில் உள்ள இயல் அறிவினை வெளிக்கொண்டுவதற்கு நிறைய ஆய்வுகள் செய்தல் வேண்டும் அப்படி செய்தால் தமிழ் இலக்கியங்களை இவ்வுலகம் உணர்ந்து பாராட்டும் என்பதில் ஐய்யமில்லை.

பார்வை நூல்கள்
1. சங்க இலக்கியங்கள்

2. தமிழில் புது நோக்கு, முனைவர் ப.ஜெயகிருஷ்ணன்

3. தமிழ் புதுக்கவிதைகள் அறிவியல், முனைவர் க.முருகேசன்

4.சங்க இலக்கியத்தில் அறிவியல் செய்திகள், முனைவர் ப.ஜெயகிருஷ்ணன்

5.தமிழ்இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள், முனைவர்ப.ஜெயகிருஷ்ணன்

6. சங்க கால இலக்கியத்தில் அறிவியல் தமிழ் சங்கமம்

7. தமிழ் இலக்கியத்தில் அறிவியல் கூறுகள், முனைவர். பு.மு. அன்பு சிவா

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர். S.S. ஜெயபாலகிருஷ்ணன்

உதவிப்பேராசிரியர்

இயற்பியல் துறை

மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி

மதுரை,பசுமலை -04

 

நகரத்திற்கு வந்த கிழவி|சிறுகதை|கோ.தனுஷ்

நகரத்திற்கு வந்த கிழவி
அனைத்தையும் தொலைத்துவிட்டு ஏங்கி ஏங்கி மரத்துப் போன கண்கள்; வெற்றிலையும் பாக்கும் போட்டுப் போட்டுக் கறைப்படிந்த பற்கள்; அயராது உழைத்ததால் தளர்ந்துபோன உடல்; வறுமைக்கும் முதுமைக்கும் இடையேயான போட்டியில் சிக்கித் தவிக்கும் ஒரு கிழவி பேருந்தில் இருந்து இறங்கி நகரத்திற்கு முதல் முறையாக வருகிறாள்.
               
ஒரே கூட்ட நெறிசல், நகரத்தின் சப்தமும் குழப்பங்களும் அவளுக்குப் புதியது, அவள் தன்வாழ்க்கையில் அத்தனை வாகனங்களைக் கண்டதே கிடையாது. ‘இதென்னம்மா திருவிழாவில் கூட இவ்வளவு கூட்டத்தை நான் கண்டதில்லை! இத்தனைப் பேரா இந்த ஊரிலே வாழ்கிறார்கள்’ என்ற வியப்புடன் கூடிய பயம்.
               
பாவம் அவளுக்குச் சாலையைக் கூட கடக்க தெரியவில்லை, யாராவது கடந்தால் வேகமாக அவர்களின் அருகில் சென்று அவர்களோடே சாலையைக் கடப்பாள். இத்தகைய வேகமான ஓட்டங்கள் கிழவிக்குப் புதியது.  
               
கையிலே இரண்டு நூறுரூபாய் நோட்டுகளும் அவளின் இறந்த கணவர் வாங்கி தந்த ஒரு தங்க வளையலும் தவிர வேறு எதுவும் இல்லை, இவள் என்ன தைரியத்தில் நகரத்திற்கு வந்தாள் என்று தெரியவில்லை.
               
பள்ளியை முடித்து வீட்டிற்குச் செல்லும் குழந்தைகள் அவளின் பேரக்குழந்தைகளை நினைவுக்கூற மாலை மாலையாகக் கண்ணீர் வடித்தாள். மேலும் அவளின் நூறுரூபாய் நோட்டுக்கள் இரண்டு நாட்களே தங்கின. ஊருக்கெல்லாம் விருந்தோம்பல் செய்த கிழவிக்குப் பசி! இனி உழைக்க வலுவோ மனநிலையோ இல்லை, ஒன்று மட்டும் தெரிகிறது. அவள் பிழப்பைத் தேடி இங்கு வரவில்லை.
  
பசி அவளைச் சுருட்டி ஒரு பாலத்தின் அடியில் போட்டது. மெட்ரோ சப்தம் கேட்டு வளர்ந்த நகரம் மாங்குயில் சப்தம் கேட்டு வளர்ந்த கிழவியைத் திரும்பி கூட பார்க்கவில்லை. அவளின் பசி சப்தம் அந்தப் பாலத்தைத் தவிர வேறு யாருக்கும் கேட்கவில்லை. தன் கணவனோடு வாழ்ந்த நாட்களை நினைத்துக் கொண்டே மயக்கமடைந்து  படுத்துக் கிடக்கிறாள்.
               
சில மணி நேரங்கள் கழித்து அவளின் உடலைச் சுற்றி ஈக்கள் மொய்க்கிறது, ஆம்! அவள் வேறு உலகிற்குச் சென்றுவிட்டாள்..
               
வீட்டை விட்டுச் சென்றது கூட தெரியாமல் கிழவி படுத்திருந்த அறையில் எத்தனை நெல் மூட்டைகளை அடுக்கலாம் என்று வியூகித்துக் கொண்டிருக்கும் அவளின் மகனுக்கு நகரத்திற்கு வந்த கிழவி பசியால் மட்டும் இறக்கவில்லை என்று யார்தான் சொல்வது?
சிறுகதையின் ஆசிரியர்
கோ. தனுஷ் (பதிவு எண்: 132204050),
3-ஆம் ஆண்டு சட்ட மாணவன்,
சவீதா சட்டக் கல்லூரி, பூந்தமல்லி நெடுஞ்சாலை,
வேலப்பன்சாவடி, சென்னை – 600 077.

 

நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் | முனைவர் நா.சாரதாமணி

நேர்மையாக நடந்து கொள் முனைவர் நா.சாரதாமணி
      நேர்மை என்பதற்கு ஒரு நல்ல உதாரணமாக நிகழ்ச்சி ஒன்றைக் கூறலாம்.  பி.எம் நாயரின் நூலில் படித்த செய்தி, அப்துல்கலாம் அவர்கள் ஜனாதிபதியாகப் பதவி ஏற்று அவருக்கான மாளிகையில் நுழைகிறார். அப்போது அங்கிருந்த வெள்ளை ஆடையும் தலையில் தலைப்பாகையும் அணிந்த ஒருவன் தடாலென அமர்ந்தார். இதனை பார்த்த கலாமிற்கு மனதில் எல்லோரும் எழுந்து நிற்பார்கள்; நின்றால்தானே மரியாதை; ஆனால் இவன் அமர்கிறானே என்று நினைக்கும் வேளையில் அவரின் காலில் இருந்த ஷூவை கழட்டப்போனான். உடனே அவரை தடுத்து என்ன செய்கிறாய் என்று கேட்டார். ஐயா வைஸ்ராய் காலத்திலிருந்து எனக்கு இந்த வேலைதான் என்றான். உடனே, “எனது சூவை எனக்கு கழட்ட தெரியும். இன்றிலிருந்து நீ இந்த வேலைக்கு வேண்டாம் போ” என்றார் கலாம். உடனே அங்கிருந்தவர்கள் இதை பார்த்தவுடன் வந்த முதல்நாளே ஒருவரை வேலையைவிட்டு தூக்கி விட்டாரே என்று நினைத்தனர். இதனால் அவன் தனது நான்கு விரல்களைக் காண்பித்து ஏதோ சொன்னான். அப்போதுதான் தெரிந்தது அந்த மனிதனுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். மேலும் அவன் அழுகின்றான் என்பதை கண்டவுடன் கலாம் அவர்கள் கூறினார்; பின்னால் இருக்கும் தோட்டத்தில் தண்ணீர் ஊற்றும் வேலையைச் செய் என்று சொன்னார்.

பின்னர் ஐந்து ஆண்டுகள் கடந்தன. கலாம் அவர்கள் தனது 5 ஆண்டு பதவிக்காலம் முடிந்து மாளிகையை விட்டு வெளியேறும்போது தன்இரண்டு சூட்கேஸ்களையும் கையில் வைத்துக்கொண்டு தோட்டத்தில் தண்ணீர் தெளித்த அவனை அழைத்து வரச்சொன்னார். அவனிடம் “அன்னைக்கி உன்ன வேலையை விட்டு தூக்கிட்டேன்னு அழுத. இப்போ என்ன வேலையை விட்டுத் தூக்கிட்டாங்க” என்று கூறிவிட்டு நீ என்ன செய்கிறாய்? 2 வாலி நீரை கொண்டு வந்து இந்த சூட்கேஸ்களில் தெளி என்றார். வேண்டாம் ஐயா! உள்ள புக்ஸ், பேப்பர்ஸ் இருக்கும் எல்லாம் நனைந்து விடும் என்றான். பரவாயில்லை நீரைத் தெளி என்றார்.  அந்த வேலையால் தெளிக்கும்போது கலாம் அவர்கள் கூறினார் ஏன் தண்ணீர்  தெளிக்கச் சொன்னேன் தெரியுமா? இந்த ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஒரு தூசியைக் கூட நான் எடுத்துச் செல்லவில்லை என்பதை இந்தச்சமூகம் சொல்ல வேண்டும்; அதற்காகத் தெளிக்கச் சொன்னேன் என்றாராம் அந்த மாமனிதர் கலாம்.

இவ்வாறான நேர்மையைத் தருவதே சிறந்த கல்வி. இவ்வகையான கல்வி இன்றைய மனிதர்களுக்குக் கற்றுத்தரப்படுகிறதா? கல்வியானது ஒரு மனிதனுக்குப் போராட்டங்களை எதிர்கொள்ளும் துணிவைத் தரவேண்டும். துன்பங்களைக் கண்டவுடன் மற்றவருக்கு இன்னல்களை உருவாக்கும் பேடித்தனத்தை அளிக்கக்கூடாது. ஆயிரம்கோடிபேர் அமர்ந்திருக்கும் அவையில் கம்பீரமாகச் சமூகத்தில் நடத்தப்படும் அவலங்களைச் சுட்டிக்காட்டும் தைரியத்தைத் தரவேண்டும். கண்முன்னே அக்கிரமங்கள் நடந்தாலும் அவற்றை தடுக்கும் வல்லமையை தரவேண்டும். இது எனது தேசம். இங்கு தீங்கு விளைவிக்க ஒருபோதும் அனுமதியேன் என்ற நாட்டுப்பற்றினைத் தரவேண்டும். இதுதான் நேர்மையான கல்வி.

நொடிகளை வென்ற காளமேகம்
காளமேகப்புலவர் தமிழ்ப்புலமையால் நொடிகளை வென்றவர்.  கடுமையான போட்டிகளில் நேரத்தை வென்றவர். இதனால் அக்காலத்திலேயே புலவர்கள் நொடிக்கும் குறைவான நேரங்களைப் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெளிவாகிறது. நீங்கள் எவ்விடம் சென்றாலும் எங்கு வேலை பார்த்தாலும் அவ்விடத்தில் உங்களுக்கான சுவடுகளைப் பதித்துச் செல்லுங்கள்.  விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட்டுகள் திரும்பும்போது ஐந்து நிமிடங்களுக்கு முன்பே தரைஇறங்கி இருந்தால் கல்பனா சாவ்லா என்ற ஒரு அறிவியல் விஞ்ஞானியை இந்த நாடு இழந்திருக்காது. காலம் என்பது மனிதன் ஒருசெயலைச் செய்து முடிப்பதற்கான ஒரு வாய்ப்பு ஆகும்.  ஓர் அரசன் பகைவனை வெல்ல ஏற்றகாலத்தை நோக்கி இருப்பான். ஏற்றகாலம் என்பது பகைமன்னனின் உடல்நிலை சரியில்லாதபோது, அவனுடைய படைகள் வேறுநாட்டிற்கு சென்றபோது, நாட்டில் கலகம் நிகழ்ந்து கொண்டிருக்கும்போதுதெல்லாம் இவ்வாறு அந்தக்காலத்தை எதிர்நோக்கி இருந்து படைகளைத் திரட்டி பகை வெல்லவேண்டும்.

நேர்மையைக் கடைப்பிடிக்க நேரத்தை செலவழியுங்கள்
நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். முதலில் நீங்கள் நேர்மையைக் கடைபிடிப்பது பெற்றோரிடமாகும். கருவுற்றகாலத்திலிருந்து ஒரு குழந்தையைப் பாதுகாத்துக் கண்ணும் கருத்துமாக வளர்ப்பவர்கள்தான் பெற்றோர்கள். எனவே ஒருபோதும் அவர்களுக்கு துரோகம் இழைத்து விடாதீர்கள். தனக்கென்று எதையுமே எடுத்துக் கொள்ளாமல் பிள்ளைகள் வளரவேண்டும். பிள்ளைகளுக்காக எல்லாம் என்று தியாகம் செய்துவாழும் பெற்றோர்கள் ஆயிரம் ஆயிரம் பேர் நம் மண்ணில் வாழ்கின்றனர். ஆற்றங்கரை ஏரிகள் போன்றவற்றின் கரை பகுதியான மணல் பரப்பில் பார்த்திருப்பீர்கள். சிறுசிறு குவியலாக மணல் காணப்படும். அதனை தள்ளிவிட்டு பார்த்தோமானால் அதில் சிறு துவாரம் இருக்கும். அந்தத் துவாரத்தில் கொஞ்சம் நீரை ஊற்றினால் நண்டு வெளியே வரும். அந்த நண்டு பக்கவாட்டில்தான் நடக்கும். அதன் இனப்பெருக்கம் எவ்வாறு நடைபெறும் என்றால் பெண் நண்டின் வயிற்றில் குஞ்சுகள் இருக்கும். அவை சிறிதுசிறிதாக வளரும்போது அதன்வயிறு ஓரளவே விரிவடையும். அதற்குமேல் உள்ளே இருக்க இயலாமல் குஞ்சுகள் வெளியே வரும். அதாவது தாயின் வயிறு வெடித்து அதிலிருந்து குஞ்சுகள் வெளிவரும். தாய்நண்டு இறந்து விடும். பிள்ளைகளுக்குப் பிறப்பை கொடுத்துவிட்டு தான்இறப்பை தேடிக்கொள்ளும் தாய்நண்டு.

நண்டு போலவே பல பெற்றோர்களும் தமது பிள்ளைகளுக்கு நல்ல செழிப்பை வழங்கிவிட்டு அவர்கள் வறுமையில் வாழ்வார்கள். அவ்வாறு உங்களுக்காக தமது சந்தோசம், ஆசை, ஆடம்பரம் போன்றவற்றையெல்லாம் மரணிக்கச் செய்யும் உங்கள் பெற்றோர்களுக்கு. துரோகம் இழைக்காமல் நேர்மையுடன் நடந்து கொள்ளுங்கள். அவர்கள் கூறும் கருத்துக்களை ஏற்று கொள்ளுங்கள். அவர்களின் வார்த்தைகளுக்கு மாறாக செயல்பட வேண்டாம். நீங்கள் எந்த வயதினராக இருந்தாலும் சரி பெற்றோர்சொல் உங்களை நல்வழிப்படுத்தும் என்ற உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.

பிள்ளைகளின் நேர்மை
பெற்றோரிடம் நேர்மையாக நடந்து கொள்ளும் பிள்ளைகள் பள்ளியில் ஆசிரியரிடம் நேர்மையாக நடந்து கொள்வார்கள். அவ்வாறு நடந்து கொள்ளும் பிள்ளைகள்தான் தமது இளமைப்பருவத்தில் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் உண்மையுடன் தியாகம் செய்யும் மனநிலையைப் பெறுவார்கள். தன்னை மெழுகாக உருக்கி தன்பிள்ளைகளைச் சுடராக ஒளிரச் செய்யும் பெற்றோர்களுக்கு உண்மையாக இல்லை என்றால் நீங்கள் சரியான மனிதர் இல்லை. இளசுகள் சிலர் பெற்றோர்களை அவமதித்து உங்களுக்கு என்ன தெரியும் என்று கேலி செய்து அவர்களை ஒன்றும் பேசமுடியாமல் வாயடைக்கச் செய்துவிடுவார்கள்.

உங்களுக்கு வயதாகிவிட்டது. எங்கள் காலம் வேறு! உங்கள் காலம் வேறு! அதனால் நீங்கள் பேசாமல் இருங்கள் என்று அதட்டி அமர்த்திவிடுவார்கள். இவ்வாறான பிள்ளைகள்தான் சமுதாயத்தில் யாரையும் மதிக்காமல் தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற ஆணவத்தில் வாழத்தெரியாமல் ஊதாரிகளாகவும் போக்கிரிகளாகவும் திரிவார்கள். இவர்களால் அவர் பிறந்த குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் எந்த பயனும் இல்லை. நான் அறிந்த ஒரு பெண்மணி அவருக்கு திருமணமாகி எட்டு மாதங்களில் அவள் கணவர் ஒரு விபத்தில் சிக்கி இறந்துவிட்டார். அப்போது அப்பெண்ணின் வயிற்றில் 6 மாதக்குழந்தை வளர்கிறது. அவளின் பெற்றோர் என்ன கூறியும், அக்குழந்தையை வளர்ப்பேன் என்று பிடிவாதமாகப் பெற்றெடுத்து வளர்த்தாள். கூலி வேலைசெய்தாவது நான் வளர்ப்பேன்.  என் குழந்தை என் வயிற்றில் வந்து சேர்ந்துள்ளது எனவே நான் என் குழந்தைக்காகவே வாழ்வேன்  என்று வளர்த்தாள். நன்றாகவே அக்குழந்தையை வளர்த்தாள். நேர்மையைக் கற்றுக்கொடுத்து, உண்மையைச் சொல்லிக் கொடுத்தாள். அதர்மம், தியாகம், கருணை போன்ற நற்பண்புகளைப் பாலுடன் உணவுடன் சேர்த்து ஊட்டி வளர்த்தாள். அந்தக்குழந்தை பள்ளிப்பருவம் முடித்து கல்லூரிக்கு சென்றதும் மிகவும் மகிழ்ந்தாள். மகன் கூறுவதெல்லாம் உண்மை என்று நம்பினாள். அவனுடைய நண்பர்கள் சிறப்பானவர்கள் என்று ஆனந்தப்பட்டாள். அவள் சிறுவயதிலிருந்தே எதை செய்யக்கூடாது என்று சொல்லிச்சொல்லி வளர்த்தாளோ அதனை சாதாரணமாகச் செய்துவிட்டு வந்தான் அந்தத்தாயின் மகன். அதை பார்த்தவுடன் அவள் இறந்து விடவில்லை. அவள் மனம், மூளை இரண்டும் இறந்துவிட்டன. ஆமாம் அவள் பைத்தியம் ஆகி விட்டாள்.

தற்போது தெருத்தெருவாக என்பையன காணும் என்று கூறிக்கொண்டே நடக்கிறாள். இங்கு கவனித்தீர்கள் என்றால் அப்பெண் தன்கணவன் இறந்தவுடன் வேறுதிருமணம் செய்துகொள் என்றுகூறிய பெற்றோரின் வார்த்தைகளை ஏற்று இருக்கலாம். ஆனால் குழந்தைக்காகவே தன்வாழ்வை தியாகம் செய்தாள்.  அவ்வாறான தாயை புரிந்துகொள்ளாமல் பிள்ளை தவறு செய்தான்.

நண்டு பிள்ளைகளுக்காக வயிறு வெடித்து இறப்பதைப்போல தாயும் தன்நிலை இழந்தாள். உங்களுக்காக காலம் முழுவதும் உழைப்பவர்கள் பெற்றோர்கள்தான். அவர்களுக்காக ஒன்றும் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை; அவர்களிடம் உண்மையுடன் நேர்மையுடன் நடந்து கொள்ளுங்கள். உங்கள் வாழ்வில் உயர்வு வந்தால் பெருமைப்படுபவர்கள் அவர்கள்தான். நீங்கள் வாழ்வில் தாழ்ந்தால் வேதனைப்படுபவர்களும் அவர்கள்தான். எனவே பெற்றோர்களின் வாழ்க்கையை பொன்னான காலமாக மாற்றுவது உங்கள் கையில்தான் உள்ளது.
 
காலம் என்பது இறைவன் உங்களின் கண்முன் வைத்த சொர்க்கமான வரமாகும். அந்த வரத்தை கொண்டு நீங்கள் வாழும்போதே வாழ்க்கையைச் சொர்க்கமாக்கிக் கொள்வதும் அல்லது நரகமாக மாற்றிக் கொள்வதும் உங்கள் செயல்களில்தான் உள்ளது. பெற்றோர்களை அழவைக்கும் பிள்ளைகள் வாழ்ந்ததாக வரலாறு கிடையாது. நேர்மையை பெற்றோரிடம் காட்டுங்கள். உங்களின் முயற்சிகள் அனைத்தும் ஆக்கங்களைப் பெறும் என்பதில் ஐயமில்லை. தன்னையே பிள்ளைகளுக்காகத் தியாகம் செய்யும் பெற்றோர்கள் செய்யும் தவறு என்பிள்ளை தவறு செய்யமாட்டான். என் வார்த்தையைத் தட்ட மாட்டான் என்று சுதந்திரம் அளித்துவிடுவார்கள் என்பதும்தான். ஒன்று கவனத்தில் கொள்ளவேண்டும்; பிள்ளைகளை நம்பலாம். ஆனால் அவர்களின் வயதை நம்ப இயலாது. பெற்றோர்கள் கொடுக்கும் சுதந்திரம் பிள்ளைகளால் தவறாகப் பயன்படுத்தப்படுவதே பெற்றோர்களின் தோல்விக்கு காரணம்.
               
உங்களை ஆள் ஆக்குவதற்காக தம்வாழ்க்கையைப் பணயம் வைத்த பெற்றவர்களாகச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். நீங்கள் இந்த ஜென்மத்துல் பட்ட கடனை இந்த ஜென்மத்திலேயே அடைத்து விடுங்கள். அதுவே மிகவும் நலமாகும்.
கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் நா.சாரதாமணி,
உதவிப்பேராசிரியர்,
தமிழாய்வுத்துறை,
SMS கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர்.
முனைவர் நா.சாரதாமணியின் கட்டுரைகளைத் தொடர்ந்து படிக்க…

 

மீதம்|கவிதை|கலையன்பன்

மீதம் - கலையன்பன்

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »