Neelagirivaazh Mullukurumbar–Thirumanam|Dr.S.K.Umamagesvari

Abstract
          Throughout history, human beings have observed a wide range of ritual practices that mark different stages of life. The forms and meanings of these rituals vary across societies and are preserved through enduring traditions. In contemporary times, both rural and urban communities continue to attach significance to such life-cycle rituals. Among the Mullukurubar people, ritual practices are closely intertwined with their festivals and hold a distinctive place in their cultural identity.
For the hill communities, these rituals accompany every phase of existence—from birth to death—reflecting a worldview in which rituals are inseparable from life itself. This article explores the central role of marriage within the life-cycle rituals of the Mullukurumbar community residing in the Nilgiri Hills, where the Western and Eastern Ghats converge in South India.
ஆய்வுச் சுருக்கம்
     மனிதன் தன் வாழ்வுக் காலத்தில் பல்வேறு சடங்கு நிகழ்வுகளைக் கடைப்பிடித்து வருகின்றான். சமுதாயங்களுக்குள் மனிதனின் சடங்கு முறைகள் மாறுபடுகின்றன. மரபு வழியாகத் தொடர்ந்து சடங்குகள் பின்பற்றப்படுகின்றன. இன்றைய நாகரீக யுகத்தில் கிராமவாசி, நகர வாசி இருவரும் வாழ்வியல் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மனிதன் கொண்டாடும் விழாக்களுக்கு இணையாக அமைபவை சடங்கு முறைகள்.
மண்ணுலக வாழ்வின் முதல் நாளிலிருந்து இறுதி நாள் வரை ஒவ்வொரு பருவத்திலும் வாழ்வியல் சடங்குகள் மலைவாழ் மக்களின் வாழ்வில் தனித்துவம் பெறுகின்றன. நகரர்ப்புற, கிராமப்புற வாசிகளை விட மலைவாழ் மக்கள் வாழ்வியல் சடங்குகளை உயிராகக் கருதுகின்றனர். தென்னிந்தியாவில் மேற்குத் தொடர் மலைகளும் கிழக்குத் தொடர் மலைகளும் இணையும் நீலகிரி மலையில் வாழும் முள்ளுக் குறும்பர் இன மக்கள் தங்கள் வாழ்வியல் சடங்குகளில் திருமணத்திற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை இக்கட்டுரை ஆராய்கிறது.

நீலகிரிவாழ் முள்ளுக்குறும்பர் – திருமணம்”

முன்னுரை
        மனிதனின் ஒவ்வொரு பருவமும் மதம் மற்றும் மதங்கள் கூறும் வாழ்வியல் சடங்குகளோடும் பின்னிப் பிணைந்தது. மனிதன் வாழ்க்கை முழுதும் ஏதாவது ஒரு சடங்கைச் செய்து முழுமை அடைகின்றான். முன்னோர் மரபை பின்பற்றி வாழ்ந்தால் வாழ்க்கை துன்பங்களின்றி அமையும் என மனிதன் நம்புகின்றான். குறைவில்லா செல்வத்தோடு வாழவே ஆசைப்பட்ட மனிதன் சடங்குகளைக் கடைப்பிடித்து வருகின்றான். முள்ளுக்குறும்பர் இனத்தவரும் மரபு சார்ந்த சடங்குகளை தவறாமல் பின்பற்றி வருவதை கள ஆய்வில் காண முடிகிறது. சடங்குகளை பாரம்பரிய முறையில் பின்பற்றி வருவதால் தாங்களும் தங்கள் சந்ததிகளும் முன்னோர் ஆசியோடு வாழ்வதாகக் கூறுகின்றனர்.  

திருமணச் சடங்கு
       திருமணம் என்பது இருமணம் இணையும் பந்தம். பெற்றோர் சம்மதத்துடன் அல்லது ஆண் பெண் இருவரும் மனமொத்த முறையில் அவர்களே திருமண பந்தத்தில் இணைகின்றனர். முள்ளுக் குறம்பர் இனச் சமூகத் திருமணம் மற்ற குறும்பர்களின் திருமண நிகழ்வைக் காட்டிலும் முற்றிலும் மாறுபட்டது. முள்ளுக்குறும்பர் இனத்தின் குல அமைப்பு முறைகள் நான்கு. வில்லியப்ப குலம், வடக்கே குலம், காதிய குலம், வேங்கட குலம் என்பன. ஒரே குலத்தவருக்குள் திருமண பந்தம் அமையாது. ஏனெனில் ஒரே குலத்தவர்கள் அண்ணன், தங்கைகளாகக் கருதப்படுவர். இருவேறு குலத்தவர்கள் மட்டுமே திருமணம் செய்து கொள்வர். தங்கள் வசதிக்கேற்ப திருமணப் பரியத் தொகை அளிக்கப்படுகிறது.

    “கன்னி மாதத்தில் முதன் முதலாக பெண் பார்க்க அல்லது மாப்பிள்ளை பார்க்கத் தொடங்குவர். ஜாதகம் பார்த்து சரியான பொருத்தம் இருந்தால் பெண் பார்க்கத் தொடங்குவர். தந்தை, தாய்மாமன், சித்தப்பா இவர்கள் தான் முதலில் பெண் பார்க்கச் செல்வர். பெண் பிடித்துப் போனால் திருமணம் நாள் குறிக்க அனுமதி அளிப்பர். கும்பம், மீனம், மேடம், மிதும், இடவம் ஆகிய மாதங்கள் திருமணம் செய்ய உகந்த மாதங்கள். கர்க்கடை (ஆடி) மாதத்தில் திருமணம் நடைபெறாது. திருமணம் முடிவான பிறகு இருவீட்டாரும் ஒன்றாக உணவருந்தி திருமண உறவைத் தொடங்குவர். திருமணம் பெண் வீட்டில் நடைபெறும். திருமணத்திற்கு பெண்ணிற்குத் தேவையான ஆடைகளை ஆண் வீட்டாரே எடுத்து வருவர். இருவர் வீடும் நன்கு தூய்மை செய்யப்படும். திருமணம் மூன்று நாட்கள் நடைபெறும். திருமணத்திற்கு முந்தைய நாள் ஆண்-பெண் இருவீட்டாரும் அவரவர் இல்லத்தில் விருந்து வைப்பர். மதியம் தெய்வப்பிறை வீட்டில் உள்ள வில்லம்புவை வைத்து சாமி கும்பிடுவர். அதன்பின் குழுக்கள் இணைந்து வேட்டைக்குச் செல்வர். (வேட்டைக்குச் செல்வது காலங்காலமாக வரும் மரபு) வேட்டையின் போது கிடைக்கும் சிறிய வகை விலங்குகளை இரவு உணவாகப் பயன்படுத்துவர்.”1

        உறவினர்கள் இனிப்புப் பதார்த்தங்களான தோசை, அப்பம் ஆகியவற்றை திருமணம் நிகழும் வீட்டிற்கு எடுத்து வருவர். இனிப்புப் பதார்த்தங்கள் அங்குள்ள அனைவருக்கும் மாலை வேளையில் தேநீருடன் பகிர்ந்தளிக்கப்படும். ஆண், பெண் இருவர் வீட்டிலும் தாய்மாமன் முறையில் இரவு சடங்குகள் நடைபெரும். அச்சடங்கில் பெண்ணிற்கு அணிகலன்கள் (காதணிகள், கழுத்தணிகள், கைவளையல்கள், மெட்டி) அணிவிக்கப்படும். ஆண் வீட்டில் பரம்பரை பரம்பரையாக கையில் அணிவிக்கும் வெள்ளிக்காப்பு, காதில் அணியும் வெள்ளி வளையம் (காதலே வளையம்), கைவிரல் மோதிரம் ஆகியவை அணிவிக்கப்படும். பின்பு உற்றார் உறவினர்கள் வெற்றிலை பாக்குடன் தங்களால் இயன்ற தொகையை மணமக்களுக்கு தட்சினையாக கொடுத்து ஆசீர்வதிக்கிறார்கள். இரவு உணவு சாப்பிட்ட பின்பு முள்ளுக்குறும்ப இன ஆண்களால் வட்டக்கலி நடனம் ஆடப்படும். தெய்வப்பிறை வீட்டின் முன்பு பச்சை வாழை மரத்தை நட்டு வைப்பர். வாழை மரத்தின் மேல் தளத்தில் பசுஞ்சாணம் வைத்து அதன்மீது 5, 7 அல்லது 9 திரியுடன் கூடிய விளக்கைப் பதித்து வைப்பர். விடியும் வரை வாழை மரத்தைச் சுற்றி ஒவ்வொரு சுற்றாகச் சுற்றி பாட்டுப்பாடி வட்டக்கலி நடனம் ஆடுவர். ஓவ்வொரு பாடல் முடியும் போதும் ஒரு திரி அணைக்கப்படும்.

         இரண்டாவது நாள் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறும். மாப்பிள்ளை வீட்டார்கள் வருவர். அவர்களை நல்லமுறையில் பெண் வீட்டார்கள் வரவேற்பர். குறித்த நேரத்தில் ‘பெரியாளு’ என்று அழைக்கப்படும் ஊர்ப்பெரியவர் முன்னிலையில் தெய்வப்பிறை வீட்டில் திருமணம் நடைபெறும். தாய்மாமன் சடங்கு முறை திருமணத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. முற்காலத்தில் பெண்ணின் தாய்மாமன் தான் பெண்ணிற்குத் தாலி அணிவிக்கும் வழக்கம் இருந்துள்ளது. தற்போது மணமகனே தாலியைக் கட்டுகிறார். தாலி ஆல இலை வடிவில் இருக்கும். வெள்ளை நூலில் தாலியைக் கோர்த்து திருமணத்தில் கட்டப்படுகிறது. வசதியுள்ளவர்கள் திருமணத்திற்குப் பிறகு தாலியை தங்கச் சங்கிலியில் அணிந்து கொள்வர். திருமணம் முடிந்த பிறகு கோல்கலி நடனம் தொடங்கும். அனைவரும் உணவருந்துவர். உணவருந்திய பின் பெண்ணை மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்துச் செல்வர்.

         மூன்றாவது நாள் பெண் வீட்டார்கள் மாப்பிள்ளை வீட்டிற்குச் செல்வர். அங்கும் கோல்கலி நடனம் நடைபெறும். அங்கு பெண் வீட்டாருக்கு விருந்து அளிக்கப்படுகிறது. விருந்து முடிவுற்ற பிறகு, மாப்பிள்ளை வீட்டில் இருந்து இரண்டு சிறிய துணி மூட்டைகளில் தோசைகளை மணப்பெண் தன் தலையிலும் இடுப்பிலும் சுமந்து தன் தாய் வீட்டிற்கு கொண்டு வர வேண்டும். அதில் ஒரு மூட்டையை தெய்வப்பிறை வீட்டில் வைத்து தங்கள் முன்னோர்களுக்கு படைத்து வழிபட்ட பிறகு எல்லோருக்கும் பங்கிட்டு வழங்குவர். மற்றொரு மூட்டையை வீட்டிற்கு கொண்டு வந்து உறவினர்களுக்கு மற்றும் மாப்பிள்ளை வீட்டாருக்கும் விருந்துடன் வழங்குவர். மறுநாள் மணப்பெண் கணவன் வீடு செல்லும்போது தன் தாய் வீட்டிலிருந்து தோசை மற்றும் இனிப்பு வகைகளை எடுத்துச் செல்ல வேண்டுமென்பது வழக்கமாக இருந்து வருகிறது.

திருமணச் சடங்கு பாடல்கள்:கோல்கலி
“கரிவான் முகவன் கெணபதி வரிகா
சவா ஒரு வில்சிலா கோல்கலி கன்ம்மான்
மஞ்சுலா வனி சாரஷ்பதி ஏமுன்னான்
அம்முரா ரோஜன கரிரா முரேப்பன்
கலேம சிசு வலகன் அம்போல்
கலிகன் மேய்பதின் அரம்பிச்சு
கோலும் எடுத்து வலகன் அப்போல்
ஒடேக் குழல் விலி ஓடும்கூடி …
வட்டக்கலி
ஆதி கெணபதி ஆணமுகேன் தேவா
ஆங்காரம் முல்லோனே!
அன்பில் தூணைசெய்கா பலூ பழம் கோம்பன்
வெளுத்த நல்லா வெல்லியும்
சலே நிரமேரும் தேவி தூண செய்கா!
ஞங்கள் களிக்கும் களிக்கு வரம் நல்கா
ஒமேனா வைய்தேலே கிருஷ்ண தூண செயக்
ஆண முகம்தேவா கிருஷ்ண கை தொழுனே!
 
நலேங்ங நலேங்ங நழிகாரம்
அழிவுள்ள சர்கேரா வாழைப்பழம்
நீலக்கரும்பு நீர்; கடலேக்கையும்
நீலேமேல் பூண்ட தேங்ஙா புழும்
இரதயெல்லாம் வேட்சு கைதொழுனே
அளவூர் வழும் கெணபதிக்கு
பரதே வெட்சிதா பூஜா செய்து
வயாரன் கெணபதி தம்புரனே
ஞனிதா நின்பதம் கைதொழுதேனே
ஞனிதா நின்பதம் கைதொழுதேனே
 
பொன்னும் முத்தும் சான்னேனம் விழுவா சாந்து விசுவும்
பாச்சா முன்பில் நில்கா வேணும் மேண்டே வனவிக்கிரவ
ஆனேக் கால்லாடி கல்மேல்ட் சுவடே
அனையுடே சுவடா நல்ல ஆலுடே தனலோ
சிங்ஙையும் சலிர் முல்லும் அதிலுமுண்டரிகே
அவிடே வன் நரட்சோரு மனம்புலி தாடியன்
வட்ட முடியும் வாயும் மலமும் முகவும்
இஸ்ட் முல்லா சேர்பேன்னினு மலையிடுவான்
இன்பமோடே மரிஜன் போய் மனு குபமயித்து
காடு தன்னில் கலிச்சு வன்ன மரிமனே
ஓடி அப்போல் ராமதேவன் அஸ்திரவி…”2
உடன் போக்குத் திருமணம்
        சங்க இலக்கியக் குறிப்பின்படி உடன்போக்கு என்பது காதல் திருமணம். சங்க இலக்கியங்கள் இதைப்பற்றி இரவுக்குறி, பகற்குறி, பகற்குறி இடையீடு, இரவுக்குறி இடையீடு, உடன்போக்கு என முறைமைப்படுத்துகின்றன. திருமண வயதை அடைந்த ஆணும், பெண்ணும் அவர்களுடைய பெற்றோர்களின் சம்மதத்தைப் பெறாமல் அவர்களுடைய விருப்பத்தின் பேரில் நடத்துவது உடன்போக்குத் திருமணம். பெற்றோர்களின் சம்மதம் கிடைக்காவிடில் ஊருக்கு வெளியே சென்று திருமணம் செய்து கொள்கின்றனர். “முள்ளுக் குறும்பர்கள் இனத்தில் முந்தைய காலகட்டத்தில் இத்தகைய திருமண முறையை ஏற்றுக்கொள்ளவில்லை. உடன்போக்கு மேற்கொண்டவர்கள் திரும்ப அவர்கள் அந்த ஊருக்கே வரக்கூடாது. எந்த உறவினர்களோடும் கலந்து கொள்ளக்கூடாது என்ற வரைமுறை இருந்துள்ளது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் நாகரீக வளர்ச்சி மாற்றங்களினால் உடன்போக்கை ஏற்றுக் கொள்கின்றனர். அதாவது மணமக்கள் ஓரினத்தவராக இருந்தால் ஏற்றுக் கொள்கின்றனர். வேற்றினத்தவராக இருக்கும்போது ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டுகின்றனர்.”3
முள்ளுக் குறும்பர் இனத்தவர் சிலர் உடன் போக்குத் திருமணம் செய்து கொண்டு வேறு ஊர்களில் சென்று வாழ்வதைக் கள ஆய்வில் அறிய முடிகிறது. கள ஆய்வின்போது இந்நிகழ்வுகளைக் காண முடிந்தது.

மறுமணம்
      “முள்ளுக் குறும்பர்களது வாழ்வில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற முறையைப் பின்பற்றுகின்றனர். இவர்களிடையே மறுமணம் செய்யும் பழக்கம் உள்ளது. மறுமணத்தை அதன் சூழ்நிலையைப் பொறுத்து விதவை மறுமணம், விவாகரத்து திருமணம் என்று பிரித்துக் கருதுவது ஏற்றது. கணவனை இழந்தோர், கணவனால் கைவிடப்பட்டோர் இளம் வயதினராக இருக்கும் பட்சத்தில் இத்திருமணம் நடைபெறுகிறது.”4

விதவைத் திருமணம்
        கணவன் இறந்துவிட்டால் மனைவி விருப்பம் இருந்தால் மறுமணம் செய்து கொள்ளலாம். விதவைகள் எவ்விதமான சமூகக் கட்டுப்பாடுகளாலும் துன்புறுத்தப் படுவதில்லை. இறந்துபோன கணவரின் உறவினர் அல்லாத நபரையே மறுமணம் செய்ய ஒப்புக்கொள்கின்றனர். குலம் சார்ந்த சட்டதிட்டங்களைச் சரியாகக் கடைபிடித்து திருமணப் பந்தத்தை அமைத்துக் கொள்கின்றனர். விதவை மறுமணம் நடைபெற்றுவி;ட்டால் முன்னாள் கணவர் சொத்துக்களில் இருந்து எவ்விப் பங்கும் பெற இயலாது.
“கணவனை இழந்த பெண் (விதவை) மறுமணம் செய்யவில்லை எனில் அவளுக்கும், குழந்தைகள் இருப்பின் அவர்களுக்கும் கணவனின் வீட்டார் சொத்துக்களைக் கொடுத்து நன்கு கவனித்துக் கொள்கின்றனர். தன் தாய்வீட்டு நினைப்பில்லா வகையில் பார்த்தும், ஆதரித்தும் வருகின்றனர். இறந்த கணவன் அக்குடும்பத்திற்கு ஒரே மகன் எனில் மருமகளே மகனின் கடமைகளைச் செய்து அக்குடும்பத்தைக் கவனித்து வருவதையும் அறியமுடிகிறது.”5
மனைவி இறந்துவிட்டாலும், கணவன் மறுமணம் செய்து கொள்ளலாம். மறுமணம் செய்ய விரும்பும் ஆண்களும் குலம் போன்ற சட்ட திட்டங்களையும் கடைபிடிக்க வேண்டும். மறுமணம் எளிய முறையில் நடத்தப்படும்.

மைத்துனி மணம்
        பல கணவர் மணம், பல மனைவி மணம் ஆகியவற்றின் அங்கங்களாக மைத்துனி மணம் விளங்குகிறது. மைத்துனி மணம் என்பது ஒருவர் தன் மனைவி இறந்தாலோ, மனைவிக்கு குழந்தை பெறும் பாக்கியம் இல்லாமல் போனாலோ மனiவி மற்றும் பெரியவர்களின் அனுமதியோடு தன்னுடைய மனைவியின் தங்கையை மணந்து கொள்வது. முள்ளுக் குறும்பர்களிடையேயும் இவ்வகை மணமுறை காணப்படுகிறது.
“மனைவி இறந்து குழந்தைகளுடன் கணவன் தனது மனைவியின் சகோதரியை மணந்து அவளும் குழந்தைகள் பெற்று வாழ்வதைக் களப்பணியில் காணமுடிந்தது. மணமகளுக்கு பரிசத்தொகை (Bride Price) கொடுக்கும் சமுதாயங்களில் இது மிகுதியாகக் காணப்படுவதை இங்கு கருதத்தக்கது.”6

விவகாரத்து மறுமணம்
          “திருமணமானவர்கள் தங்களுக்குள் ஏதாவது கருத்து வேறுபாடு; காரணமாக ஒத்துவராத முறையில் விவாகரத்து செய்து கொண்டாலும் மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம். இவ்வாறு திருமணம் செய்யும்பொழுதும் பழைய மரபு சார்ந்த முறைகளை, சட்டதிட்டங்களைக் கடைபிடிக்க வேண்டும். முள்ளுக்குறும்பரின் மக்களுள் இவ்வகை மணத்தை அரிதாகவே காணமுடிகிறது.”7

முடிவுரை
      முள்ளுக் குறும்பர்களின் வாழ்வியல் சடங்குகள் நம்பிக்கைகள் மையமாகக் கொண்டே பின்பற்றப்பட்டு வருகின்றன.  குழந்தை பிறப்பிலிருந்து இறப்புவரை வாழ்வியல் சடங்குகள் ஏதேனும் ஒரு நம்பிக்கையை காட்டுவதாக அமைகின்றன. முள்ளுக் குறும்பர்கள் திருமண முறையில் மறுமணமும், விதவை திருமணமும் இன்றும் வழக்கில் உள்ளன. மனைவி இறந்தபின் கணவன் குழந்தைகளின் நலன்கருதி மனைவியின் சகோதரியைத் திருமணம் செய்து வாழ்வதைக் கள ஆய்வில் காணமுடிந்தது.

மேற்கோள் நூல்கள் / தகவலாளர்கள்:
1. தே.சாரதாமணி   –       ஆலுக்குறும்பர் இனவரைவியல் ஓர் ஆய்வு

2. தகவலாளர்                 –       ரமேஷ் (34) மாடக்குண்டு

3. தகவலாளர்                 –       பழனி (45) நெடுங்கோடு

4. தகவலாளர்                 –       அச்சுதன் (52) நெடுங்கோடு   

5. தகவலாளர்                 –       பாஸ்கரன் (67) நரிவலிப்பு

6. தகவலாளர்                 –       பாலன் (55) நரிவலிப்பு

7. தகவலாளர்                 –        கோபி (37) கொள்ளாடு

துணை நூற்பட்டியல்
1.இராசேந்திரன், மெக்கன்சி சுவடிகளில் தமிழகப் பழங்குடி மக்கள், கணையாழி படைப்பகம், திருவள்ளுவர் நகர், சென்னை – 600 041 (2003)

2.ச.அரிச்சந்திரன், தமிழகப் பழங்குடிகள் – வரலாறு சமூகம் பண்பாடு (தேசியக் கருத்தரங்கம் தொகுதி-1),கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி,ஞானாம்பிகை நூற்பாலை அஞ்சல், கோவை.

3.இராசேந்திரன்.அ., நாட்டுப்புறப் பண்பாட்டு வழக்கங்கள், ஜோதி புத்தக நிலையம்,9-மேக்மில்லன் காலனி,நங்கைநல்லூர், சென்னை -600061. (2008)

Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் ச.க.உமாமகேஸ்வரி,
உதவிப்பேராசிரியர்,
கோபி கலை அறிவியல் கல்லூரி,
கோபிசெட்டிபாளையம்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here