Abstract
Tamil literature possesses a unique and unparalleled excellence. The first works to speak about morality in the Eighteen Minor Works (Pathinenkeezhkanakku) are the ethical texts (Aranoolgal). These books stand as guides that elevate humankind. All these moral works are remarkable for laying down principles essential for human life. Thirigadugam, one of the eighteen minor Tamil anthologies (Pathinen Kilkanakku Noolgal), expounds on the essential virtues for human life, including domestic life (Il Vazhkai), good qualities, hospitality (Virundhombal), best features of befriending others, abstaining from coveting another’s spouse (Piranmanai Nayavaamai), aspects that warrant careful safeguarding, and the righteous actions of individuals in public life. By embracing these virtues, every individual can fulfill the true purpose of their existence. This study aims to examine precisely this aspect delving into the moral teachings of Thirigadugam which teaches a virtuous life.
ஆய்வு நோக்கம்
தமிழ் இலக்கியங்கள் தன்னிகரில்லா தனிச் சிறப்புடையது. முதன்முதலில் பதினெண்கீழ்க்கணக்கில் ஒழுக்கத்தைப் பற்றி கூறியிருப்பது அற நூல்களே. இந்நூல்கள் மனித இனத்தை மேம்படுத்தும் நூல்களாகத் திகழ்கிறது. அறநூல்கள் அனைத்தும் மனிதன் வாழ்வதற்குரிய கருத்துகளை வகுத்துக் கொடுத்தப் பெருமைக்குரியது. இப்பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான திரிகடுகம் மனித வாழ்க்கைக்குத் தேவையான நன்னெறிகளான இல்வாழ்க்கை, நற்பண்புகள், விருந்தோம்பல், நட்புகொள்ள வேண்டியவர், பிறன்மனை நயவாமை, காக்க வேண்டியவை, பொது வாழ்வில் ஈடுபடுவோரின் அறங்கள் ஆகியவை எடுத்துரைக்கின்றன. இந்நன்னெறிகளைக் கடைப்பிடிக்கின்ற பொழுது ஒவ்வொரு மனிதனும் பிறவிப் பயனை அடைய முடியும். அதனை ஆராய்வதே இவ்வாய்வின் தெளிவாகும்.
“திரிகடுகத்தில் வாழ்வியல் நெறிகள்”
முன்னுரை
சங்கம் மருவிய இலக்கியங்களான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய திரிகடுகம் அறம், ஒழுக்கம், கல்வி, அறிவு, தன்னலமற்ற வாழ்க்கை, மறுபிறவி, நம்பிக்கை, வாய்மை மற்றும் நட்பு போன்றவற்றை வாழ்வியல் நெறிகளாக வலியுறுத்துகிறது. இவ்வாழ்வியல் நெறியை வெளிக்கொணர்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
திரிகடுகம்
திரிகடுகம் நல்லதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். மருந்துப் பொருட்களை குறிக்கும் சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் ஒருவருடைய உடல் நோயைப் போக்குவது போல இந்நூலில் இடம்பெறும் ஒவ்வொரு பாட்டிலும் சொல்லப்படும் மூன்று அறநெறிகளும் மனிதர்களுடைய அறியாமை நோயைப் போக்கும் என்பதால் திரிகடுகம் என்று போற்றப்படுகின்றது.
கல்வியின் பயன்கள்
கல்வி என்பது மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றாகும். இக்கல்வி அறிவு, திறன், நல்லொழுக்கம் ஆகியவற்றை வளர்த்து, தனி மனித முன்னேற்றத்திற்கும், சமூக வளர்ச்சிக்கும் அடித்தளமிடுகிறது. திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு மற்றும் சங்க இலக்கியங்கள் கல்வியின் சிறப்பைப் பற்றியும், கற்றவர்களின் சிறப்பு, கல்வியின் வலிமை மற்றும் அது தரும் பலன்களைப் பற்றியும் விரிவாகப் பேசுகின்றன. பண்டைய காலம் முதல் கல்வியை மிக இன்றியமையாத செல்வமாகச் சான்றோர்கள் வலியுறுத்தி வந்தனர். கல்வியினால் மட்டுமே ஒரு சமுதாயத்தை நன்கு முன்னேற்றமடையச் செய்ய முடியும் என்பதைத் திரிகடுகம் எடுத்துக் கூறுகின்றது.
“பல்லவையுள் நல்லவை கற்றலும் பாத்துண்டாம்”(திரி.பா.31)
என்பது அப்பாடல். கல்வி கற்கும் போது பல்வேறு நூல்களிலுள்ள நல்ல அறவுரைகளைக் கற்றுணர வேண்டும் என்று கூறுவதனை திரிகடுகம் பாடலால் உணர முடிகின்றது. கல்வியின் சிறப்பினை,
“குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு”(நாலடி.பா.131)
என்ற பாடல் வழி ஒரு பெண்ணுக்குக் கூந்தல் அழகும், முந்தானை அழகும், மஞ்சள் பூசும் அழகும் அழகல்ல. நாம் நல்லவராய்க் கல்வியில் சிறந்து காணப்படுவதே அழகு என்று நாலடியார் விளக்கிக் கூறுகின்றது. நிலையில்லாத அழகை உடம்பிற்குச் சேர்ப்பதை விட்டு விட்டு, நிலைத்து நிற்கும் அழகானக் கல்வியைக் கற்க வேண்டும் என்ற சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளது.
அறம் மற்றும் ஒழுக்க நெறிகள்
இளமையில் கல்வி கற்பது, பெற்றோர்களை வழிபட்டுப் போற்றுவது, சான்றோர் நெறியில் செல்வது போன்றவை உயர்ந்த அறங்களாகும். அறவழியில் வாழ்வது வாழ்க்கையின் முக்கிய நோக்கமாகக் கூறப்படுகிறது. அறத்தினால் கிடைக்கும் இன்பத்தை,
“அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல”(குறள்.39)
என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர். தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும். அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது. ‘நல்ல நெறிகளைப் பின்பற்றி நடத்தல்’ஒழுக்கம் எனப்படும். ஒழுக்கத்தைத் தமிழர்கள் சிறப்பு வாய்ந்த பண்பாட்டுக் கூறாகக் கொண்டிருந்தனர். ஒழுக்கம்பற்றி வள்ளுவர் கூறும் கருத்துகள் இதை மெய்ப்பிக்கும். இல்வாழ்க்கையில் ஈடுபடுவாரின் ஒழுக்கம், ஒரு குடும்பத்தை மட்டுமல்ல ஒரு சமுதாயத்தையே மேம்பாடு அடையச் செய்யும். இதனை,
“ஒழுக்கத்தின் ஏய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி” (குறள்.137)
என்ற குறள் வழி அறிய முடிகிறது. இக்குறள் வழி ஒழுக்கத்தால் எல்லாரும் மேன்மை அடைவார்கள் ஒழுக்கம் கெட்டால் அடையத்தகாத பழியை அடைவார்கள் என்பது தெளிவாகிறது. நட்புத் தன்மை இல்லாதவரிடம் அன்புரிமையைக் காட்டுபவனும், மனைவியைப் பாதுகாப்பதை இகழ்கின்ற அறிவில்லாதவனும் குணமற்ற தவறுதலான சொல்லை சொல்பவனும் என்ற இம்மூவரும் தமக்குரிய ஒழுக்கத்தை உறுதியாகத் கடைப்பிடிக்காதவர் ஆவர் என்பதனை,
“பண்பில்லார் மாட்டு நசைக்கிழமை செய்வானும்
பெண் பாலைக் காப்பிகழும் பேதையும் – பண்பில்
இழுக்கான சொல்லிடு வானும் இம்முவர்
ஒழுக்கம் கடைப்பிடியா தார்”(திரி.பா.94)
என்று குறிப்பிடுகிறார் நல்லலாதனார்.
பிறந்தும் பிறவாதார்
அருளில்லாதவனும் பொருளினைத் தானும் அனுபவிக்காமல் பிறர்க்கும் கொடுக்காமல் பூமியில் புதைத்து வைப்பவனும், பிறர் மனம் வருத்தும் படி பேசுகின்றவனும், ஆகிய இம்முவரும் மக்களாய் பிறந்தும் பிறவாதவர் ஆவர் என்பதை,
“வீழுத்திணைத் தோன்றா தவனும் எழுத்தினை
யொன்றும் உணராத ஏழையும் – என்றும்
இறந்துரை காமுறு வானும் இம்முவர்
பிறந்தும் பிறவா தவர்”(திரி.பா.92) என்றும்,
“அருளியனை நெஞ்சத் தடைகொடா தானும்
பொருளினைத் துவ்வான் புதைத்து வைப் பானும்
இறந்து இன்னா சொல்லகிற் பானுமிம்மூவர்
பிறந்தும் பிறந்திலா தார்”(திரி.பா.89)
என்ற பாடலிலும் விளக்குகிறது திரிகடுகம். பெறுதற்கு அரிய மானிடப் பிறவியை எடுத்ததன் பயனாக அரிய பேற்றினைப் பெறுதல் வேண்டும். வாழ்வதற்கு வேண்டியப் பொருளை நல்ல நெறியில் ஈட்டுதல் வேண்டும். ஈட்டியப் பொருளை கொண்டு நாம் தூய்மையான அறநெறியில் செல்ல விட்டு அதனால் அந்த இன்பத்தை துய்த்து அருளைத் தேடிக் கொள்ள வேண்டும். உடலை விட்டு உயிர் போகும்போது நாம் ஈட்டிய சேர்த்து வைத்த பொருள் நம்மோடு வருவதில்லை. அதைக் கொண்டு செய்த நல்வினைப் பயனே தொடர்ந்து வரும். மேலும், அருளை தன் உள்ளத்தின் நிறுத்து வைக்காதவன் பொருளை தானும் அனுமதிக்காமல் பிறர்க்கும் தராமல் அதனைப் புதைத்து வைப்பவனும் தன்னிலை கடந்து பிறர்க்குத் துன்பம் தரும் சொற்களைக் கூற வல்லவனும் என்ற இம்மூவரும் மக்கள் பிறப்பில் பிறந்திருக்கும் பிறவாதவராகக் கருதப்படுவர் என்பது வெளிப்படுகிறது.
வாய்மையின் வலிமை
வாய்மையின் வலிமை என்பது தீமையான சொற்களை எப்பொழுதும் பேசாதிருப்பதாகும். மேலும், பிறருக்குத் தீங்கு விளைவிக்காத எந்த ஒரு சொல்லும் வாய்மையே ஆகும். இவ்வாய்மை பற்றி,
“வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்”(குறள்.291)
என்ற குறளில் குறிப்பிடுகிறார் வள்ளுவர். ஒருவனிடம் செல்வம் முதலான வசதிகள் சுருங்கும் போது அவனுடைய நட்பின் அளவை அறிந்து கொள்ளலாம் ஒருவன் துன்பப்படும் போது அவனது நற்குடி பிறப்பின் பொறுமையை அறிந்து கொள்ளலாம் பால் போன்ற தூய்மையின் அவனுடைய உண்மை நிலையையும் புரிந்து கொள்ள முடியும். இக்கருத்து,
“குறளையுள் நட்பளவு தோன்றும் உறவினிய
சால்பினில் தோன்றும் குடிமையும் பால் போலும்
தூய்மையுள் தோன்றும் பிரமாணம் இம்மூன்றும்
வாய்மை யுடை யார் வழக்கு”(திரி.பா.37)
என்றவாறு குறிப்பிடப்படுகிறது.
அறிவு அற்றங்காக்கும் கருவி
அறிவு எது சரி, எது தவறு என்பதைப் பிரித்துப் பார்க்க உதவுகிறது இதனால் சவாலான சூழ்நிலைகளைச் சிறப்பாக எதிர்கொள்ள முடியும் பகையால் அழிவு வராமல் பாதுகாக்கும் அரண் அறிவு ஒன்றுதான். இவ்வறிவு,
“அறிவு அற்றங்காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண்”(குறள்.421)
என்று இறுதிக்காலம் வரையும் காப்பாற்றும் கருவியாக விளங்குகிறது. பகைவரும் உட்புகுந்து அழிக்க இயலாத அரணாக இருப்பது அறிவு என்பதை வள்ளுவர் வலியுறுத்துகிறார். திரிகடுகம்,
“தன்பயம் தூக்காரைச் சார்தலும் தாம் பயவா
நல்பயம் காய்வின்கண் கூறுலும் பின்பயவாக்
குற்றம் பிறர் மேல் உரைத்தலும் இம்மூன்றும்
தெற்றெனவு இல்லார் தொழில்”(திரி.பா.54)
தனக்கு உண்டாகும் பயனை ஆராய்ந்து உதவி செய்யாதவரை சேர்தலும், ஒருவன் கோபமுற்றபோது நன்மையானச் சொற்களை கூறுதலும், பின்னால் பயன்படாத குற்றங்களை மற்றவர் மேல் சொல்லுவதும் என்ற இம்மூன்றும் அறிவுத் தெளிவற்றவர்களின் செயல்கள் ஆகும் என்று கூறுவதிலிருந்து எச்சூழலிலும் அறிவுடையவர்களாகத் திகழ வேண்டும் என்பதை புலப்படுத்துகின்றது.
கடன்படா வாழ்க்கை
ஒருவன் தனது தேவைக்காகப் பிறரிடம் சென்று கடன் வாங்குவது அவனுக்கு அழிவை உண்டாக்கும். ஒருவன் தன்மானத்தோடு வாழ வேண்டுமானால், பிறரிடம் சென்று கடன் வாங்காமல், தனது தேவையைக் கடின உழைப்பின் வாயிலாகப் பொருள் ஈட்டி அதனை நிறைவு செய்து கொள்ள வேண்டும். அத்தகைய கடன் பற்றி,
“தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்”(திரி.பா12)
கடன் படாமல் வாழ்பவன் முயற்சினையுடையவன் ஆவான் என்று கூறுகின்றது. முயற்சி செய்து உழைத்து வாழ்பவன் வாழ்வில் கடன்பட்டு வாழ மாட்டான் என்பதை உணரமுடிகின்றது. மேலும்,
“கடன் உண்டு வாழாமை காண்டல் இனிதே” (இனியவை நாற்பது.பா.11)
கடன் வாங்கி உண்டு வாழாத முறையைக் கண்டறிந்து வாழ்தலே சிறந்தது என்று கூறுவது பொருத்தமுடையதாகும்.
நல்லவரின் கொள்கை
நல்லவரின் கொள்கை என்பது தங்களின் வருவாயில் கால் பங்கை தானம் செய்தல் செய்த செயல்களை மற்றவர்களிடம் நாடி சிறப்பு பெறாமல் இருத்தல் மற்றும் மற்றவர்கள் சொன்ன நல்ல கருத்துக்களை நாடுதல் ஆகியவற்றை உடையவர்கள் ஆவர்.
“செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் லரிது”(குறள்.101)
தான் எதுவும் செய்யாதிருக்காவும் பிறர் தனக்கு செய்த உதவி இவ்வுலகம் வானுலகம் ஈடாக முடியாது என்பதை வலியுறுத்துகிறது திருக்குறள்.
“வருவாயுள் கால்வழங்கி வாழ்தல்
செருவாய்ப்பச் செய்தவை நாடாச் சிறப்பு உடைமை – எய்தப்
பலநாடி நல்லவை கற்றல் இம்முன்று
நலமாட்சி நல்லவர் கோள்”(திரி.பா.21)
தமது வருமானத்தில் நான்கில் ஒரு பங்கு அற செயல்களுக்குச் செலவிடுதல், போரில் வெற்றி கிடைக்கத் தான் செய்த செயல்கள், ஆராயாதபடி அனைவருக்கும் விளங்கி தோன்றும் சிறப்புடையவனாதலும்,பலவற்றையும் நன்கு ஆராய்ந்து கற்றலும் ஆகிய இம்மூன்றும் நற்குண, நற்செய்கைகளால் சிறப்புற்ற நல்லவரின் கொள்கையால் ஆகும் என்பதை அறிய முடிகின்றது.
நல்ல குடும்ப பண்பு
பெற்றோரால் ஏவப்பட்ட செயலை செய்ய மறுக்கும் மகனும், மனைவியைக் காவாது இகழ்ந்து பேசும் கணவனும், பொய்யை வெறுக்கும் பண்புள்ளோர் விட்டில் உள்ள செல்வத்தை அழிக்கும் மனைவியும் ஆகிய இம்மூவரும் இப்பிறவியில் பயனற்றவர் ஆவர் என்பதை,
“ஏவாது மாற்றும் இளங்கிளையும் காவாது
வைதெள்ளிச் சொல்லும் தலைமகனும் – பொய்தெள்ளி
அம்மனை தேய்க்கும் மனையாளும் இம்முவர்
இம்மைக் குறுதியில் லாள்”(திரி.பா. 49)
என்ற பாடலிலும், தன்னைச் சேர விரும்பும் பெண்ணைச் சேராமையும், பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல், ஆசையினால் பிறர் பொருளை தனதாக்கிக் கொள்ளாமல் இருத்தலும், நிலம் முதலியவற்றை விரும்பி அறப்பயனை அடையாமல் வாழ்கின்ற காலத்தை மதியாமையும் என்ற இம்மூன்றும் நுட்பமான நூல்களை உணர்ந்தவர்களின் கருத்தாகும்.
பிறன்மனை நயவாமை
பிறர்மனை நோக்குதல் அறமல்ல என்பது யாவரும் அறிந்த உண்மை. இருப்பினும், பிறன்மனை விரும்பும் கொடிய செயல் இராமாயணக் காலத்திலிருந்து நடைபெற்றுள்ளது. வானவர்களுக்குத் தலைவனான இந்திரன் கூட இத்தவறினைச் செய்திருக்கின்றான். அவ்வாறு தவறு செய்தவர்கள் மிகப்பெரிய தண்டனையையும் அடைந்துள்ளனர். இருந்தாலும், இக்கொடிய தவறுகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது. இவ்வினைத் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை அறநூலார்கள் வலியுறுத்துகின்றனர். அவ்வகையில் பிறர் மனைவியை விரும்புகின்றவன் விரைவில் அழிந்து விடுவான் என எச்சரிக்கை விடுக்கிறார் இந்நூலாசிரியர். இதனை,
“கொல் யானைக்கு ஒடும் குணம்இலியும் எல்லின்
பிறன்கடை நின்றுஒழுகு வானும்- மறம்தெரியா(து)
ஆடும்பாம்பு ஆட்டும் அறிவிலியும் இம்மூவர்
நாடுங்கால் தூங்கு பவர்”(திரி.பா.19)
என்ற பாடலடியில் போர் யானைக்கு அஞ்சிப் பின்வாங்கும் குணமில்லாத வீரனும், இரவில் பிறர் மனைவியை விரும்பி நிற்பனும் படமெடுத்து ஆடுகின்ற பாம்பை ஆட்டுகின்ற அறிவில்லாதவனும் போன்ற இம்மூவரும் விரைவில் அழிந்துவிடுவர் எனச் சுட்டியிருப்பதைக் காணமுடிகின்றது. இப்பிறமனை நயவாமை பற்றி,
“பிறன்மனை புகாமை அறமெனத்தகும்” (கொன்றைவேந்தன்.பா.61)
பிறர்மனை விரும்புதல் அறமல்ல என்ற நெறியைக் கொன்றை வேந்தன் உணர்த்தியிருப்பதும், பிறன்மனை நோக்குதல் தவறு என்பதற்கான கூடுதல் வலு சேர்ப்பதாக இருக்கிறது.
நட்பு
தனி மனித ஒழுக்கக் கூறுகளில் நட்புக்குத் தனி இடம் உண்டு. நட்பு என்பது வாழ்வின் பற்றுக்கோடு. மனிதனுக்கு அன்பையும், அமைதியையும், ஆறுதலையும் தரும் நட்பைக் காட்டிலும் சிறந்தது வேறு கிடையாது. தனி மனிதனைச் சமுதாயத்துடன் இணைப்பது நட்பாகும். மனித உயிர்கள் உலகில் பிறக்கும் போதே நட்பு தொடங்கி விடுகின்றது. பாலூட்டும் தாயிலிருந்து நட்புத் தொடங்கிப் பின், ஒத்த பண்புடையாளர் இதயம் கவர்ந்தவர்கள் என நட்பு மலர்கின்றது. இந்நட்பு நாளடைவில் உலகம் தழுவிய மனிதநேய ஒருமைப்பாட்டை வளர்க்கின்றது. தனிமனிதன் ஒருவன் பிறருடன் நட்புக் கொள்ளும் போது நீதி நெறியுடையவர்களுடன் நட்புக்கொள்ளல் வேண்டும் என்பதை,
“கயவரைக் கையிகந்து வாழ்தல் நயவரை
நள்ளிருளும் கைவிடா நட்டொழுகல் – தெள்ளி
வடுவான வாராமல் காத்தல் இம்மூன்றும்
குடிமா சிலார்க்கே யுள”(திரி.பா.77)
கீழ் இன மக்களைக் கைவிட்டு வாழ்தலும், நீதி நெறியுடையவர்களை எப்பொழுதும் பிரியாது நட்பு கொண்டு நடத்தலும், தனக்குப் பழி வராமல், தன்னைப் பாதுகாத்துக் கொள்ளலும் ஆகிய இம்மூன்றும் குற்றமில்லாக் குடிப்பிறப்பைச் சேர்ந்தார் செய்யும் செயல்களாகும் என்ற சிந்தனைப் புலப்படுகிறது.
“சான்றோர் இனத்திரு”(ஆத்திசூடி.பா.44)
கல்வி, அறிவு ஒழுக்கங்களில் சிறந்து விளங்குபவர்களுடன் ஒன்றாய் இணைந்து நட்புக் கொண்டு வாழ வேண்டும் என ஆத்திசூடிச் பாடலின் வாயிலாக உணர முடிகின்றது.
முடிவுரை
திரிகடுகம் என்பது ஒரு நீதி நூல் மட்டுமல்ல மனித வாழ்க்கையின் முழுமையான வழிகாட்டியாகவும் விளங்குகிறது. அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் சமநிலையுடன் கடைப்பிடித்தால் மட்டுமே வாழ்க்கை நிறைவடையும் என்பதை இந்நூல் தெளிவுப்படுத்துகிறது.
துணை நூல்கள்
1.திரிகடுகம், தமிழ் பிரியன் (உ.ஆ), கற்பகம் புத்தகாலயம், சென்னை.
2.திருக்குறள், பரிமேலழகர் உரை, சாரதா பதிப்பகம், இராயப்பேட்டை, சென்னை.
3.கொன்றைவேந்தன், நாவலர். திரு. ந. மு. வேங்கடசாமி நாட்டார், பூம்புகார் பதிப்பகம், சென்னை.
4.இனியவை நாற்பது, அய்யாசாமி, சேகர் பதிப்பகம், சென்னை. 5.நாலடியார், புலியூர் கேசிகன் உரை, சாரதா பதிப்பகம், சென்னை.
ஆய்வாளரின் பெயர்
பா. ஜனனி,
முதுகலைத்தமிழ் இரண்டாமாண்டு,
நெறியாளர்
முனைவர் பெ. வெற்றிச்செல்வி,
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரி,
திருவாரூர்.




ஆய்வாளரின் பெயர்

