Ettuthogaiyil Neer Maelaanmai|Dr.T.Sangeetha

எட்டுத்தொகையில் நீர் மேலாண்மை- முனைவர் தி. சங்கீதா
Abstract
       
         This research article provides insight into the scientific knowledge that the Tamils ​​of the Sangam period had about water and its origin, and their understanding of the hydrological cycle. It also provides information about the rivers that existed in the Sangam period and how they were protected. This article provides insight into the importance of rivers in the lives of the Tamils ​​in Sangam literature, the agriculture of the Tamils, the prosperity of the natural environment, the abundance of rain, the experience of the Tamils ​​about the origin of rain, the relationship between water and land, the beauty of water bodies and the living creatures that depend on them, and the way in which the poets dealt with various matters in their works.

Keywords
 : Water, Sangam Tamils, Cycle, Water bodies, River, Prosperity, Nature


“எட்டுத்தொகையில் நீர் மேலாண்மை”

ஆய்வுச் சுருக்கம்
         
      சங்ககாலத் தமிழர்கள் நீரினைப் பற்றியும் அதன் தோற்றம் குறித்தும் அவர்கள் பெற்றிருந்த அறிவினையும், நீரியல் சுழற்சி குறித்து அவர்கள் அறிந்திருந்த தெளிவினையும் இவ்வாய்வுக் கட்டுரையின் வாயிலாக அறியமுடிகின்றது. மேலும் சங்ககாலத்தில் இருந்த ஆறுகள் பற்றிய குறிப்பினையும், அவ்வாறுகளை எவ்வாறு பாதுகாத்தனர் என்பதனையும் தெரிந்து கொள்ள முடிகின்றது. சங்க இலக்கியத்தில் தமிழர்களின் வாழ்வில் ஆறுகள் பெற்றிருந்த முக்கியத்துவம், தமிழர்களின் வேளாண்மை, இயற்கைச் சூழலின் செழிப்பு, மழை வளம், மழையின் தோற்றம் குறித்து தமிழர்களின் அறிவு, நீர் நிலத் தொடர்பு, நீர் நிலைகள் அவைச் சார்ந்த உயிரினங்கள் போன்ற பல்வேறுச் செய்திகளையும் இயற்கையழகை புலவர்கள் தன் படைப்புகளில் கையாண்ட தன்மையினையும் இக்கட்டுரையின் வாயிலாக அறிய முடிகின்றது.

திறவுச்சொல் : நீர், சங்கத் தமிழர்கள், சுழற்சி, நீர்நிலைகள், ஆறு, செழிப்பு, இயற்கை

முன்னுரை
      சங்ககாலம் என்று சொல்லப்படுவது வரலாற்றில் மிகப்பெரிய கூறாகும். சங்ககாலத்தில் வாழ்ந்த புலவர்கள் நுண்மான் நுழைபுலத்தால் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற இருபெரும் இ்லக்கியத் தொகுதிகளை அளித்துச் சென்றிருக்கின்றனர். அவை சங்ககாலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறைகள், பண்பாடுகள், நாகரீகம் போன்றவற்றினையும், அவர்களின் நிலைப்பாடுகள் பற்றியும் நுட்பமாக அறிந்துகொள்ள வாய்ப்பாக அமைந்திருக்கின்றன. சங்க இலக்கியங்கள் காட்டும் நாகரிகம் சமகாலத்தில் நிலவியிருந்த கிரேக்க, ரோம நாகரிகங்களுடன் ஒப்பிட்டுக் கருதப்படுகின்றது. எல்லா நாகரிகங்களும் நதிக்கரைகளின் ஓரமாகவே தோன்றின என்பது நிதர்சனமான உண்மையும் ஆகும். தமிழர்கள் நீரிணையும் மேலாண்மையில் அதனைப் பயன்படுத்தும் முறையினையும் சங்க இலக்கியமாகிய எட்டுத்தொகை நூல்களின் வழி இக்கட்டுரையில் காண்போம்.

நீா்வளம்
     நீா் மனிதவாழ்க்கைக்கு அடிப்படையானது. குறிப்பாகச் சுட்டினால் உலக உயிர்களுக்கெல்லாம் ஆதாரமாய் அமைந்து, உலக இயக்கத்திற்கு அடிப்படையாய் அமைவது நீராகும். நீா் மனிதவாழ்வில் பெறும், இந்த முதன்மை கருதியே இலக்கியங்களும் சமூக வழக்குகளும் நீரின் இன்றியமையாமையை வலியுறுத்துகின்றன. நீர் உயிரினங்களுக்கு மிகவும் இன்றியமையாதது. மனித உடலில் ஏறத்தாழ 65 சதவீதம் நீா் உள்ளது. சில தாவரங்களில் 95 சதவீதம் நீா் உள்ளது. 1781 ஆம் ஆண்டில் கேவெண்டிஷ் என்பார் நீா் ஒருசோ்மம் (Compound) என்பதைக் கண்டறிந்தார் லாவாச்சியா் என்னும் அறிவியலாளா் ஹைட்ரஜனும், ஆக்சிஜனும் இணைந்து நீா் உருவாகும் நிகழ்வை அறிவித்தார். நீா் மூலக்கூறில் இரண்டு ஹைட்ராஜன் அணுக்களும் ஓா் அக்ஸிஜன் அணுவும் உள்ளன.
         
      புவியிலிருந்து சில கி.மீ உயரம் வரை நீா் என்னும் காரணி, நீா்மமாகவோ (Liquid) திண்மமாகவோ (Solid) இருக்கும். நீா்கோளம் (Hydrosphere) என்பது ஏனைய கோள்களைவிட மாறுபட்டது. இதில் புவியிலுள்ள அனைத்து நீா்நிலைகளும் இடம்பெற்றுள்ளன. பெருங்கடல் (Ocean), கடல் (Sea), ஏரி (Lake), ஆறு (River),  குட்டை (Pond), நிலத்தடி நீா் (Underground water) ஆகிய கூறுகள் நீா் வகையில் அடங்கும். நீா் புவியமைப்பில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆவியாதல் வழியாக வளிமண்டலத்துடன் நீா் அமைப்புத் தொடா்பு கொண்டுள்ளது என்பது அறிவியலாளரின் கருத்தாகும்.

தமிழரும் ஆறும்
        ஆறுகளைச் சிறப்புப் பெயரிட்டு வழங்கியவா்கள் தமிழ்நாட்டார் என்பது நோக்கத்தக்கதாகும். “தொண்டை நாட்டில் உள்ளது பாலாறு, பாண்டிய நாட்டில் உள்ளது தேனாறு, சேர நாட்டில் நெய்யாறு உண்டு. பாலாறு என்ற பெயா்பெற்ற ஆற்றிலே நீா் சுரக்கும், தேனாற்றிலே நீா் சொட்டும், நெய்யாற்றிலே நீா் துளிர்க்கும், பாலையும், தேனையும், நெய்யையும் அளவறிந்து ஊட்டிப் பிள்ளையைப் பேணி வளா்க்கும் தாய்போல் ஊற்றுப் பெருக்கால் நிலத்திற்கு நீரூட்டி நலம் பயக்கும்”1. என்பதனை (ரா.பி. சேதுப்பிள்ளை, ஆற்றங்கரையினிலே, ப.10) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். நம் தமிழா்கள் ஆறுகளுக்கு எத்தகைய முக்கியத்துவத்தைக் கொடுத்துள்ளர் என்பதை ஆறுகளுக்கு அவர் இட்டு வழங்கி வந்த பெயா்களால் அறிய முடிகின்றது.

எட்டுத்தொகை நூல்களில் காவிரி
         
      சோழமண்டலத்தின் நீர்வளம் மற்றும் நீர்மேலாண்மைத்திறம் பற்றி அறிய காவிரியின் சிறப்புக்க கூறுகளை ஆராய்வது முக்கியமானதாகும். காவிரியின் பெருமையை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கிய நூல்களில் தொடங்கி பிற்கால இலக்கியங்கள் வரை விரிவாகப் பேசுகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இ்லக்கியங்களில் பொன்னியாற்றால் தமிழகம் பெற்ற நீர்வளமும், நிலவளமும் சிறப்பாகப் பேசப் பெறுகின்றன. மேற்றிசை குடகிலிருந்து பிறக்கும் காவிரி எம்முடைய சோழநாட்டினை வளப்படுத்துகின்றது என்று ஆற்றில் மூலங்கிழார் புறநானூற்றுப் பாடல் ஒன்றில்

குடா அது
பொன்படு நெடுவரைப் புயலேறு சிலைப்பிற்
பூவிரி புதுநீர்க் காவிரி புரக்கும்
தண்புனற் படப்பை எம்மூர்  (புறநானூறு)
         
    என்று எடுத்துரைக்கின்றார். சோழநாட்டு ஆற்றில் பிறந்த மூலங்கிழாரின் இக்கூற்று சிந்திக்கத்தக்கதாகும். மலையில் தோன்றிக் கடலில் கலக்கும் காவிரியாறு எவ்வாறு செல்கின்றது என்பதனை
       
காவிரிக்கோடு தோய் மலிர்நிறைக் கழையழி நீத்தம்    (அகநானூறு)
         
      என்று அகநானூற்றுப்பாடல் குறிப்பிட்டுக் காட்டுவதுபோல பெரு வெள்ளமாகக் காவிரி ஓடியது. மேலும், தான் மோதும் இரு கரைகளையும் தகர்த்துச் செல்லுகின்ற பேராறாக அது சங்க இலக்கியங்களில் வர்ணிக்கப்படுகின்றது. ஞாயிறு நான்கு திசைகளிலும் தோன்றினாலும், வெள்ளி மீன் தெற்கே சென்றாலும், அழகும், குளிர்ச்சியும் கொண்ட காவிரி பல கால்வாய்களாய் ஓடிட கரும்பை விளைவிக்குமாறு அமைந்தது என்பதைச் சோழநாட்டுப் பெரும் புலவர் வெள்ளக்குடி நாகனார்,

அந்தண் காவிரி வந்து கவர்பு ஊட்டத்
தோடுகொள் வேலின் தோற்றம்போல  (புறநானூறு)
         
       என்ற புறநானூற்றுப் பாடலில் உரைக்கின்றார். வெள்ளியாகிய விண்மீன் வடதிசையிலிருந்து, தென்திசைக்குச் சென்றாலும், மழைத்துளியை உணவாகக் கொள்ளும் வானம்பாடி புலரும்படி மழை பெய்தலைத் தவிர்த்து, மேகம் பொய்த்து வற்கடம் உண்டானாலும் தான் பொய்யாமல் காலந்தோறும் வருகின்ற குடகு மலையிடத்தே தலையினை உடைய, கடலினிடத்தே செல்லுகின்ற காவிரி நீர் பரந்து கரையிலே பொன்னைக் குவிக்கும் சோழநாடு என்றும், விளைதல் தொழில் மாறாத சிறப்பையுடைய வயல்வெளியில் பசிய கரும்பின்கமழும் பாகை அடுகின்ற கொட்டிலில் நெருப்பின் புகை சுடுகையினாலே அழகு கெட்டு நீரை உடைத்தாகிய செய்யின்கண் நின்ற நெய்தற்பூ நாடும் நிலத்தை உடையது சோழநாட்டுக் குறும்பல்லூர் என்று குறிப்பிடப்படுகிறது. சங்ககாலம் தொட்டு சோழர்கால இறுதிவரை தோன்றிய தமிழிலக்கியங்களை தொகுத்து நோக்கும்போழுது காவிரியின் பல்வேறு சிறப்புக்கள் அறியப்படுவதோடு, காவிரியின் கிளை ஆறுகளான கடுவாய், அரிசில், மண்ணி, கோட்டாறு, கொள்ளிடம் ஆகியவற்றின் சிறப்புக்கள் பற்றியும் அறிய முடிகின்றது.

நீரியல் சுழற்சி
         
      கடல்நீா் வெப்பத்தில் ஆவியாகி மேகமாகத்திரண்டு மழையாகப் பொழிகிறது. இப்படிப் பெய்யும் மழைநீா் ஆறுகளில் ஓடியும், நிலத்திற்குள் ஊடுருவியும் பலவழிகளில் மீண்டும் கடலை அடைகிறது. இது தொடர்ந்து நடக்கும் இயற்கை நிகழ்ச்சி இதுவே ’நீரியல் சுழற்சி’ என்று அழைக்கப்படுகிறது.
          தமிழ் இலக்கியங்களில் எழிலி, கார், குயின், கொண்டல், கொண்மூ, செல், புயல், மங்குல், மஞ்சு, மாரி, மழை, மால், முகில், மேகம், மை, விசும்பு, வான், விண், எனப் பல பெயா்களால் வழங்கப்படும் மழையானது, ஆவியாகிப் பொழியும் அறிவியல் உண்மையை இன்றைய நவீனக் கருவிகள் எதனையும் கண்டிராத பழந்தமிழா்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உணா்ந்து இலக்கியங்களில் பதிவு செய்துள்ளனர்.

சங்கத்தமிழா்களின் நீரியல்சுழற்சி அறிவு
         
     தமிழன் மழை பற்றிச் சிந்தித்த சமகாலத்தில் வாழ்ந்த கிரேக்க, உரோமானிய அறிஞர்களின் கருத்துக்களை அறிந்தால்தான், தமிழர்களின் அறிவியல் சிந்தனை எவ்வளவு உயர்ந்தது என்பதை அறியமுடியும். அக்கணிதமேதை பிதாகோரசுக்கு ஆசிரியராக இருந்தவர் தேல்ஸ் ஆவார். இவர் கி.மு.7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் மழையில்லாத காலங்களில் ஆற்று நீர் தரும் ஊற்றுக்கு, நீர் கடலிலிருந்து, நிலத்துக்கு அடியில் உள்ள பாறைகளில் உள்ள குகை வழிகள் மூலமாக மலைப்பகுதிவரை சென்று, மலையின் அழுத்தத்தால் மேலெழுந்து ஊற்று நீராக வருகிறது என்று விளக்கினார். கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த பிளினி, செனகா போன்ற உரோமானியத் தத்துவ அறிஞர்களும் கிட்டத்தடிட்ட கிரேக்க அறிஞர்களைப் போலவே கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். இவ்வாறு  உறுதியான தெளிவுபிறக்க நீண்ட நாட்கள் ஆயின. ஆனால், இவ்வுண்மையைப் பழந்தமிழர்கள் நன்கு உணர்ந்திருந்தனர். நல்லந்துவனார் எனும் புலவர்,

நிறைகடல் முகந்து உராய் நிறைந்து நீர் தளும்பும்தம்
பொறை தவிப்பு அசைவிடப் பொழிந்தன்று வானம்     (புறநானூறு)       
        என்று மேகங்கள் நீர்நிறைந்த கடலில் இருக்கும் நீரினை முகந்துகொண்டு வானில் எங்கும் பரவி, நீர்நிறைதலால் தளும்பும் தம் பாரம் தீர்ந்து இளைப்பாறும் பொருட்டுப் பெய்வதைப் போல் மழை பொழிந்தது என்கிறார். இதே பரிபாடலில் மையோடக் கோவனார் என்னும் மற்றொரு புலவர்,

கரை உடை களமெனக் கழன்று வான் வயிறு அழிபு
வரைவரை தொடுத்த வயங்கு வெள் அருவி  (பரிபாடல்)       
என்கிறார். இப்பாடலில் இவர் குளத்தின் கரை உடைந்தால் எவ்வாறு பெரு வெள்ளம் ஏற்படுமோ அதுபோலக் கடலில் நீரை மொண்டு ஆவியாகிய மேகம் குளக்கரை உடைவதுபோல் தன் வயிறு கிழிந்து மழையைக் கொட்டுகின்றது என்று நயம்படப் பாடியுள்ளார். தமிழ் இலக்கியங்களில் மேகத்திற்கு நீர் தரும் மூல ஊற்று கடல் என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளமையால் பண்டைத் தமிழர்கள் நீர்வள இயலைத் தெளிவாக அறிந்திருந்தனர் என்பதை அறிய முடிகிறது.

மழை நீர்
     இயற்கையாகவே புவியிலுள்ள நீர், சூரிய வெப்பத்தினால் ஆவியாகி விண்ணில் மேகமாகத் தங்கிவிடுகிறது. மரங்களிலிருந்து வெளியாகும் காற்று மேகங்களில் பட்டவுடன், புவியில் மழை பொழிகிறது. இதனால் மழைநீரை மிகவும் தூய்மையான நீராக அறிவியலார் அறிவுறுத்தியுள்ளனர்.“இயற்கையில் கிடைக்கும் பலவகை நீரில் மழை நீரே மிகவும் தூய்மையானது. ஆனாலும் மழைநீரிலும் சில மிதக்கும் மாசுகளும், ஆக்ஸஜன், நைட்ரஜன் போன்ற தனிமங்களும், நைட்ரஸ் அமிலம், நைட்ரிக் அமிலம், அம்மோனியா, கார்பன் டை ஆக்சைடு போன்றவையும் கரைந்திருக்கலாம். இருப்பினும் சூரிய ஒளியால் சூடேற்றப்பட்டு ஆவியாகிப் பின்னர் குளிர்ச்சியடைந்து மழை பெய்வதால் மழைநீரை இயற்கையிலேயே காய்ச்சி வடித்தல் மூலம் கிடைக்கும் நீராகக் கருதலாம்” என்னும் களஞ்சியக் கருத்து கருதத்தக்கது. சங்க எட்டுத்தொகை பாடல்கள் மழை பற்றிப் பல்வேறு செய்திகளைத் தருகின்றன. வறண்ட நிலத்தில் மழையின் இன்றியமையாமை கருதி இலக்கியப் பாத்திரங்கள் பல அறிவியல் குறிப்புகளைத் தம் கூற்றுகளில் வழங்கியுள்ளன.

அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்           (குறுந்தொகை-277)
உயர் நெடுங் குன்றம் படுமழை தலைஇ   (குறுந்தொகை -371)
அருவி ஆர்க்கும் பெருவரை அடுக்கத்து (குறுந்தொகை -205)
         
      மழை வந்து வளம் கொழிக்க வேண்டுகோள் விடுக்கும் ஒரு செவிலித் தாய், தன் மகள் உடன்போக்கில் தலைவனுடன் சென்ற பாலைவழியின் வறுமையை நினைந்து புலம்புகிறாள். மழை பற்றி நற்றினை -157, 281, 378, 197, 264 பாடல்கள் உணர்த்துகின்றன. மழையின் அழகு, அது எழுப்பும் ஒலி, மழையால் பெறும் பயன் ஆகியவையும் சங்கப் புலவர்களால் அறிவியல் மரபில் அளிக்கப்பட்டுள்ளன.

கடல்
         
       அனைத்து வகையான பொருள்களையும் கடலில் கொட்டுவதைப் புனிதமாகப் பலர் கருதுகின்றனர். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடலில் கலக்கும் கழிவுகளைப் பட்டியலிட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முனைந்துள்ளனர்.

திரை தபு கடலின் இனிது கண் படப்ப (நற்றினை -18)         
        கழிவுகளால் கடல் உயிரிகள் அழிவதை பல சான்றுகளுடன் இக்காலச் சூழலியலார் விவரித்து வருகின்றனர். கடல் பற்றி நெய்தல் திணைப் பாடல்கள் பெருமளவில் அறிவிக்கின்றன. பொறையன் என்பானின் படை வீரர்கள் அலை அடங்கிய கடல் போல இனிமையாகக் கண்களை மூடிப் போர் முடித்து உறங்கும் காட்சி விவரிக்கப்பட்டுள்ளது.

ஆறுகள் மாசுபடாமல் காத்தல்         
      ஆறுகள் அனைத்தும் அக்காலம் முதல் இக்காலம் வரை போற்றத்தக்கவையாகக் கருதப்படுகின்றன. இன்றைய மக்கள் பெறுகின்ற பல நோய்களுக்கு ஆற்றுநீர் மாசு அடிப்படையாக விளங்குகிறது. ஆறுகளை வணங்கி மகிழ்ந்து நாளைத் தொடங்கிய மக்கள் ஆற்று மாசுகளால் அன்றாடம் அல்லலுறுவதை அறியமுடிகிறது. பழந்தமிழர்கள் ஆறுகளைக் காப்பதற்கென்றே காவலர்களைப் பணியமர்த்தியிருந்த சிறப்பைச் சங்கப் பாடல்கள் அழகியலுடன் வருணித்துள்ளன. பண்டைத் தமிழ் மக்கள் நீர் நிலைகளில் எவரையும் நீராடவோ, மாசுஏற்படுத்தவோ விடாமல் காத்தனர். வரம்பையும் மீறி மாசு செய்வோருக்குத் தண்டணை அளித்துத் திருத்தினர். இப்பணியை மேற்பார்வை செய்யும் காவலர் பற்றிய் செய்தி சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளமையைப் பின்வருமாறு அறியலாம்.

எறிதிரை திவலை தூஉம்சிறுகோட்டுப் பெருங்குளம் காவலன் (அகநானூறு -252)
         
       இவ்வரிகளால் நதிநீர் மாசுபாட்டில் சங்கப் புலவர்களுக்கு இருந்த சமூக அக்கறை தெளிவாகிறது. சங்கப் பாடல்களில் காவிரி நீர் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. வீரக்கழல் அணிந்த பண்ணன் என்பானின் காவிரி ஆற்றுக்கு வடக்கில் உள்ள குளிர்ந்த குளத்தின் அருகில் வளரும் மா மரங்கள் பற்றிய செய்தி பாடல் வடிவம் பெற்றுள்ளது. அழகு மிகுந்த வண்டுகள் ஆரவாரம் செய்து இயற்கையைப் பெருமைப் படுத்தும் காட்சியை வையை ஆறு குறித்த ஓர் அகப்பாடலில் அறிய முடிகிறது.

நீர்நிலையும் உயிரினமும்       
       உயிரினங்களின் நடத்தை நெறிகளையும், தாவரங்களின் இயல்புகளையும் கூர்ந்து கண்ட உணர்ச்சிப் பெருக்கில் பாடும் கவிஞரை, மென்மையான இதயம் கொண்டவராகப் புகழ்ந்துரைப்பர். பல சங்கக் கவிதைகளில் அணில் போன்ற நிலம்வாழ் உயிரிகளும், சிட்டுக்குருவி போன்ற பறவை உயிரிகளும், மீன் போன்ற எளிய நீர்வாழ் உயிரிகளும் குறிக்கப்படுகின்றன. சங்கப் படைப்புகளில் 60% பகுதி, இயற்கை உயிரிகளைப் பற்றியே பேசுகின்றது. உறுதியான யானை முதல் மென்மையான மான் வரை மிகுதியான பாடல்கள் பல்வேறு திணைகளில் நீரை ஒட்டிக் குறிக்கப்பட்டுள்ளன. இக்கால முதுகெலும்பு பெற்ற உயிரினங்கள் அனைத்திற்கும் மீன்களே முன்னோடியாக விளங்கியுள்ளன. எனவே சங்க அகத்தொகை இலக்கியங்கள் விருந்தோம்பலில் மீனை முன்னிலைப்படுத்துகின்றன.

“முதுகெலும்புடைய  உயிரினங்களின்
முதற்படிமுன்னோடிகள் மீன்களே”       
        என்பர். சங்கத் தொகைப் பாடல்களில் இடம் பெறும் உயிரினங்கள் பல்வேறு வகையாக உள்ளன. அவற்றில் நீர்வாழ் உயிரினங்கள் பற்றிய குறிப்புகள் பரந்தும் விரிந்தும் பதிவாகியுள்ளன.

நீரின்மையால் நேரும் அவலங்கள்
         
        நீரின்மையால் நிலத்தின் தன்மை வாழ்வதற்கு அற்ற நிலை ஏற்படுவதனைக் கலித்தொகை,
                  
“உண்ணீர் வறப்பு புலர்வாடும் நாவிற்குத்               
தண்ணீர் பெறாஅத் தடுமாற் றுருந்துயரம்               
கண்ணீர் நனைக்கும் காடு”   – (கலி: 6)
         
என்று எடுத்துரைக்கின்றது இதே போன்று பாலைநிலத்தின் வெம்மையும், அதனால் வாடும் மனிதர்களின் நிலையும்,
                  
“மால்வெள் றோத்திரத்து மையில் வாலிணர்               
அருஞ்சுரம் செல்வோர் சென்னிக் கூட்டும்               
அவ்வரை….”  – (ஐங்: 301)
         
         என்னும் ஐங்குறுநூற்றுப் பாடலில் காட்சிப்படுத்தப்படுகின்றது. இதனால் சங்கப் புலவர்கள் இயற்கை வளத்திற்கு முதன்மை ஆதாரமான நீா்நிலையைக் காத்தலை முதன்மையான கடமையாக மன்னர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனா்.
 
நீரைக் காத்தல்
         
     வானின்று நிலத்தில் விழும் நீரே அனைத்திற்கும் அடிப்படையாய் அமைகின்றது. இதனை உணர்ந்த பண்டைத்தமிழர் நீரைத் தம் உயிçனும் மேலான ஒன்றாகக் கருதிப் போற்றியுள்ளனா். மழை நீரைச் சேமித்து வைத்து, சேமித்துவைத்த நீரைத் திறம்பட பயன்படுத்துவதன் மூலமாகவே வேளாண்மைச் செழிக்கச் செய்ய முடியும் என்று நம்பியுள்ளனா். இவ்வாறு நீçனைச் சேமிக்கும் முறைகளை இளங்கோவடிகள், சிறுபஞ்சமூலத்தில் குளம், கிணறு, ஏç முதலானவற்றை அமைத்து நீர்நிலைகளைக் காத்து வைப்பவர் சொர்க்கத்திற்குச் செல்வார் என்ற கருத்து அறமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பதிணென் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான திçகடுகத்தில் நீர் வரும் வரத்துக்கால் நன்கு அமையாத குளம் இருப்பின் அதனால் பயன் குறையும் என்ற செய்தி,
 
“வாய்நன் கமையாக் குளனும் வயிறாரத்
தாய்முலை யுண்ணாக் குழவியும் சேய்மரபில்
கல்விமாண் பில்லாத மாந்தரும் இம்மூவர்
நல்குரவு சேரப்பட்டார்” – (பா: 83)
         
       என்று எடுத்துரைக்கப்படுகின்றது. தாய்ப்பால் அருந்தாத குழந்தையும், கல்வி அற்ற நிலையில் உள்ளவா்களும் எப்படி சிறக்க முடியாதோ, அதுபோல வாய் நன்கு  அமையாத குளமும் சிறப்பின்றி இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். பெருமளவில் பெருக்கெடுத்து வரும் வெள்ளநீரைத் தம்முள் அடக்கிக் கொள்ளும் ஏçகள் ஒருநாட்டில் நிறைந்திருப்பது அந்நாட்டுக்குச் சிறப்புத் தரும் என்பதனை, “யாறுள் அடங்கும் குளமுள வீறுசால்” என்று நாண்மணிக்கடிகை குறிப்பிடுகின்றது. இப்பாடலில் குறிக்கப்பெறும் ஆறு உள் அடங்கும் குளம் என்ற சொற்றொடர், நீçன் சேமிப்பு முறையை வெளிப்படுத்துவதாகத் திகழ்கின்றது. பழந்தமிழ் நூல்களில் இத்தகு நீர்நிலைகளிலிருந்து மிகுநீரை வெளியேற்றக் கலிங்கு என்ற  அமைப்பை ஏற்படுத்தியிருந்தனர். இக்கலிங்கு குறித்த தகவல்கள் மிகுதியாக இலக்கியங்களில் சுட்டிக்காட்டப்படுகின்றன. இத்தகு தொழில்நுட்பம் நம் தமிழகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. இதனை வெளிப்படுத்தும் கல்வெட்டுச் சான்றுகளும் நமக்குக் கிடைத்துள்ளன.

முடிவுரை         
      உலகம் தோன்றி அதில் உயிர்கள் வாழத் தொடங்கியபோது புவி மிகவும் தூய்மை பெற்றிருந்தது. நிலம் தன் முழுப்பயனைத் தந்து செழித்து விளங்கியது. நீரும், காற்றும் மாசு படியாமல் இருந்தன. குறைந்த மக்கள் தொகை கொண்டதாக இவ்வுலகம் அமைந்தமையால் மக்கள், உலகின் பயனை இயன்ற அளவுக்குத் துய்த்து மகிழ்ந்தனர். அன்று தொழிற்சாலைகளே இல்லாத நிலை காணப்பட்டது. பருவமழை, முறை தவறாமல் பெய்தது புவி, தன் விளைச்சலைப் பெருமளவில் தந்து சிறப்படைந்தது. இதனால் மக்கள் மிக மகிழிச்சியுடன் அனைத்துத் தேவைகளும் நிரம்பப் பெற்றவர்களாக வாழ்ந்தனர். மக்கள் தொகை பெருகியமையால் சிற்றூர்வாழ் மக்கள் மெல்ல நகரம் நோக்கிக் குடிபெயர்ந்தனர். வாழ வழியில்லாத அம்மக்கள் நகர்ப்புறங்களில் தொழில்தேடத் தொடங்கினர். இதனால் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. அங்குக் குடிநீருக்கே துன்புற்ற மக்கள் காலப்போக்கில் மாசு கலந்த நீரிலும் வாழ முற்பட்டனர். நீர் நிலைகள் அனைத்தும் கழிவுநீர்க் குட்டைகளாக மாறின.  தொழிற்சாலைக் கழிவுநீர், வீட்டுக் கழிவுநீர், பொதுக்கழிப்பிட நீர் போன்றவை நீர் நிலைக்குச் செல்வதால் நீரில் மாசு ஏற்பட்டது. இதனால் அங்கு வாழும் உயிரினங்களும் இன்றளவும் அழிவை எதிர் நோக்கியுள்ளன. நீர்நிலைகளை மாசுபடாமல் பாதுகாப்பதும், பத்திரப்படுத்தி அடுத்தத் தலைமுறைக்கு தூய்மையாகக் கொண்டுசேர்ப்பதும் நமது கடமையாகும்.

துணைநூற்பட்டியல்
1.சங்க இலக்கியம் முழுவதும் (மூலமும் உரையும்) நியுசெஞ்சுரி புக்ஹவுஸ் பிரைவேட் லிட், சென்னை. மூன்றாம் அச்சு 2007.
2.சேதுப்பிள்ளை ரா.பி.ஆற்றங்கரையினிலே பழனியப்பா பிரதர்ஸ், சென்னை. 1961

3.அகத்தியலிங்கம்.ச (பதிப்பு) ஆய்வுக் கோவை தொகுதி 1 – பதினேழாவது கருத்தரங்கு இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம். அண்ணாமலை நகர், 1985.

4.சோமசந்தரனார் பொ.வே. – பத்துப்பாட்டு மூலமும் உரையும் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை – 2008.

5.நடராஜன், ப.மு., – நீா் மேலாண்மை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை – 2014.

6.மணிமாறன் – தமிழரின் நீா் மேலாண்மை கல்வி சமூக மேம்பாடு ஆய்வு மையம்-தஞ்சாவுா் – 2019.

7.குமாரசாமி,கி. (பதிப்பு) காலநிலையியல், கிரேஸ் பப்பிளிக்கேஷன்ஸ், கும்பகோணம். 2001.

8.சுப்பிரமணியம், ப. இந்தியாவின் சுற்றுச் சூழல், கிரியா வெளியீடு சென்னை. 1986.

9.வரதராசன்,மு. பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை, பாரிநிலையம், சென்னை. 1964.

10.ஜான் ஆசீர்வாதம் தமிழ் இலக்கியத்தில் அறிவியல், கிறித்தவ இலக்கியச் சங்கம் சென்னை. 1986.

11.சோழமுத்து,பி. சங்க இலக்கியத்தில் பருவகால நிலைகள், அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை, முனைவர்ப் பட்ட ஆய்வேடு, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்-2010.

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் தி. சங்கீதா
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறைத்தலைவர்
மருதுபாண்டியர் கல்லூரி
தஞ்சாவூர் – 613 403

1 COMMENT

  1. நீரின் அருமையை எளிமையாக எடுத்துரைத்துள்ளீர்கள். எட்டுத்தொகை நூல்களில் இருந்து நேரடி மேற்கோள்களைப் பயன்படுத்தி நீர் மேலாண்மை கருத்துகளை விளக்கியிருப்பது சிறப்பு அம்மையே… வாழ்த்துக்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here