இருளில் ஓர் அலறல் | சிறுகதை

            ஊர் ஓரம் மலைப் பக்கம் ஒரு சின்னக் குடிசை. அந்த குடிசையில் விளக்கின் ஒளியை தவிர வேறு எந்த ஒளியும் இல்லை. இருள் சூழ்ந்திருந்தது. எங்கோ ஊரில் கொஞ்சம் ஆரவாரம் கேட்கிறது.

            அவள் மட்டும் தென்னை ஓலையால் பின்னப்பட்டக் கதவைப் பிடித்துக்கொண்டு கால் கடுக்க நின்று எதிர்பார்த்தக் கொண்டிருந்தாள் பார்த்து பார்த்து அவள் இருவிழிகளும் தேய்ந்தனஇ மனதில் ஏதோ பயம். அன்று நிலவும் விண்மீண்களும் ஒன்று கூட வெளியே தலைகாட்டவில்லை. நிலவு குளிர்எடுக்க மேகத்தைப் போர்த்திக் கொண்டது. அவளுக்கோ துக்கம் தொண்டையை இறுக்கிப்பிடித்தது.

            ஊரில் கேட்ட கொஞ்சம் ஆரவாரமும் கேட்கவில்லை. பயம் அவளைத் துரத்த அப்போது ஒரு சத்தம். அந்த சத்தம் யாரோ நடந்து வருவது போல் அவளுக்குக் கேட்கிறது. காதையும் பார்வையையும் அந்தப் பக்கம் திருப்பினாள். இருளில் ஓர் உருவம். மட்டும் தெரிந்தது அப்போது அவளுக்குக் காத்திருப்பது சுகமாகத் தெரிந்தது. நிலவுக்கு வியர்வை கொட்ட தன் மேகப் போர்வையை எடுத்தது. நிலவு தனக்கு விடுதலை கிடைத்ததுபோல் எங்கும் ஒளியை வீசினான். வெளிச்சத்தில் அவள் எதிர்பார்த்த உருவம் தெரிந்தது அவளுக்குப் பயம் பறந்துபோய் சிறகு முளைப்பதுபோல் இருந்தது.

            அந்த உருவம் அவளுடைய ஆசை நாயனக். அவன் பக்கம் வந்ததும் ஏங்க இவ்வளவு ஆநரம் என்று கேட்டாள். இது என்ன புதுசு நான் எப்போதும் வருவதுபோல்தான் வருகிறேன். இன்றைக்குக் கொஞ்ச நேரம் ஆகிவிட்டது. நானும் நகரத்தில் கூலி வேலையை முடித்து விட்டு ஐந்து மைல்கள் நடந்து வர வேண்டும் என்றான். அதற்கு அவள் நான் பயந்தே போய்விட்டேன். உன்னை விட்டால் எனக்கு யார் இருக்கிறார்கள். இனிமேல் வேகமாக வந்திருங்க என்றாள். (அவன் வேகமாக வருவதற்கு என்ன வாகனமா) சரி சோற்றைப்போடு எனக்குப் பசிக்குது என்றான்.

            அவளும் சோற்றை ஆக்கி வைத்தவிட்டு அவனுக்காக காத்திருந்தாள். வயிறு பசியெடுக்க அவர் வரட்டும் சாப்பிடலாம் என்று பசியை அடக்கி வைத்திருந்தாள்.

            கடப்பாரையைப் பிடித்து பிடித்து காப்பு ஏறிய கையைப் பார்த்து முத்தமிடுவாள். அது அவனுக்கு அன்று நாள் முழுவதும் கஷ்டப்பட்டது அத்தனையும் மறந்துபோகும்.

            அவர்கள் அந்த ஊரிலே அனாதையாக இருந்து திருமணம் செய்து கொண்டவர்கள். அவர்களுக்கென்று யாரும் உறவினர்கள் கிடையாது.

            காலையில் அவள் எழுந்து தன் வேலைகளை முடித்துவிட்டு அவனை எழுப்பி வாங்க குளிங்க வேலைக்கு நேரமாச்சு என்பாள். அவள் உடனே எழுந்து குளித்துவிட்டு பாசமாக பரிமாறிய சோற்றைச் சாப்பிட்ட பிறகு மதிய உணவு எடுத்துக்கொண்டு அவள் கண்ணத்தில் முத்தமிட்டுப் புறப்படுவான். அவள் வாசப்படி ஓரமாய் அவன் மறையும் வரை வைத்த கண் வாங்காமல் பார்த்தக் கொண்டே இருப்பாள்.

            அவன் வேலைக்குப்போன பிறகு. அவள் தனிமையைப் போக்கிக்கொள்ள மிகவும் சிரமப்பட்டாள். அவன் போன பிறகு திரும்பி வரும் வரைக்கும் அவனுக்காகவே காத்திருப்பாள். அவன் கால்கள் நடந்து நடந்து தேய்ந்துப் போயின. அவை அவளுக்காகத் தேய்கிறது என்று சுகமாக நினைப்பாள்.

அவன் எவ்வளவு வேகமாக வந்தாலும் இருட்டாகிவிடும். அதற்கு வேலி ஓரத்தில் இருக்கும் மின்மினிப் பூச்சி வெளிச்சத்தைத் தரும். அவள் ஒர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவள் தனிமையைப் போக்கிக்கொள்ள குழந்தை வந்துவிட்டது. அவள் வேலையைச் செய்ய பையன் கை விடவில்லை என்றால் வாசலில் உள்ள வேப்பமரத்தில் தூளிகட்டி  பையனை அதில்போட்டு விட்டு தன் வேலையைச் செய்வாள். மரத்தில் இருக்கும் குயில் தாலாட்டு பாட தென்றல் தூளியை ஆட்ட குழந்தை தூங்கிவிடும்.

மாலை நேரத்தில் அப்பா வருகிறார் பார் என்று குழந்தைக்கு அவர் வருகின்ற வழியைக் காட்டிக் கொண்டு இருப்பாள். அவள் வந்த பிறகு குழந்தையைத்  தூக்கும் வரைக்கும் மாற்றி மாற்றி கொஞ்சுவார்.

அந்த ஆண்டவன் அவனுக்காக அவளையும் அவளுக்காக அவனையும் படைக்கப்பட்டது போல் இருந்தது. இயற்கையே அவர்கள் வாழும் வாழ்க்கையைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தது.

அவள் நாம் அனாதையாக இருக்கிறொம் நமக்கென்று ஒரு சொந்தமும் இல்லை என்று கண்ணீர் விட்டாள். அவன் ஏன் வேதனைப்படுகிறாய் பக்கம் ஆறு ஓடுகிறது. அவை குளிப்பதற்கு குடிப்பதற்கு நீர் தருகிறது. சொந்தம் ஒன்று இருந்தால் ஒரு சொம்பு தண்ணீர் கொடுக்க மாட்டார்கள், நிலா வெளிச்சத்தைத் தருகிறது. காற்று பணம் வாங்காமல் வீசுகிறது. இயற்கையே நம் சொந்த பந்தம் இனி அழவேண்டாம் என்று அவன் கண்ணத்திலிருந்த கண்ணீரை துடைத்தான். அதற்கு அவள் இல்லிங்க நாம் ஒரு பெண் குழந்தை பெற்றுக்கொள்வோம் நம் பிள்ளைகளை வளர்த்து திருமணம் செய்து சொந்தத்தைச் சேர்த்துக் கொள்வோம். நம் மகனை மருத்தவராகவும் பெண்ணை ஆசிரியராகவும் நல்ல முறையில் படிக்க வைத்து மற்றவருக்குப் பொதுச் சேவை செய்ய வைப்போம். அனாதை இல்லாத உலகத்தைப் படைப்போம் என்றாள். இவனும் அதற்கு சரி என்றான்.

அவள் மீண்டும் கர்ப்பமானாள். அவனே காலையில் எழுந்து எல்லா வேலையும் செய்து முடித்துவிட்டு அவளை ஓய்வு எடுக்கச்சொல்லி விட்டு வேலைக்குப் புறப்படுவான்.

அன்று அவன் வேலைக்குப் புறப்பட்டான். அவள் மனசு ஏதோ பறிகொடுத்ததுபோல் இருந்தது. அவரை இன்று வேலைக்குப் போக வேண்டாம் என்று சொல்லலாமா  என்ற எண்ணம். ஆனால் அவளால் சொல்ல முடியவில்லை அப்படி அவள் சொல்லியிருந்தால் அவளைவிட வேலை முக்கியமா என்று நின்றிருப்பானோ என்னவோ? அவன் மறைவிற்குப் பின்னும் எட்டிப் பார்க்கிறாள்.

அவளோ நிறைமாத கர்ப்பிணி. அவளால் மகனைக்கூட எடுக்க முடியவில்லை. அவன் வெலைகடகு நகரத்திற்குப் போய் சேர்ந்திருப்பான் அவளோ பெண் குழந்தைப் பிறக்கும் என்று பெருமகிழ்ச்சியடைந்தாள். உடனே குழந்தை பிறக்க வலி ஏற்பட்டது. அப்பா, அம்மா என்று கத்துகிறாள். அக்கம் பக்கம் ஆளில்லை வயிற்றை ஒரு கையில் பிடித்துக் கொண்டு அழுகின்ற குழந்தையின் தூளியை ஆட்டுகிறாள். கீழே விழுகிறாள்  புரள்கிறாள் எழுந்து கத்துகிறாள்.

அவன் அவன் நினைப்பாகவே வேலை செய்ததனால் கடப்பாரையை எங்கே குத்தவது என்று தெரியாமல் தன் பாதத்தில் குத்திக் கொள்கிறான். அய்யோ என்று கத்துகிறான். இரத்தம் நிறைய வெளியேறுகின்றது.

உடனே அவனை மருத்தவமனைக்குப்போ என்று அனுப்பிவிட்டார்கள்.

மருத்தவமனைக்கு வந்ததும் மருத்தவர் இல்லை மாலை ஆறு மணிக்கு வருவார் என்றார்கள். அவன் அதுவரைக்கும் காத்திருந்து மருத்துவரைப் பார்த்தவிட்டு நொண்டி நொண்டி வருகிறான். கருமை நிற இருட்டு, நிலவை குளிர் ஆடை போர்த்திக்கொண்டது. மேகம் வானத்தை விட்டு கீழே வந்து விழவதுபோல் கருமையாக இருந்தது. வழியே தெரியவில்லை. மின்னல் மின்னினால் தான் வழிதெரிகிறது.

வானம் லேசாகத் தூரல் போடத் தொடங்கியது. காற்று வீசியடிக்க மின்னல் கீற்றுகள் வானம் முழுவதும் பறக்க அவனும் மழையால் முழுமையாக நனைந்துக்கொண்டு குளிரால் நடுங்கி ஒடுங்கி தள்ளாடி வருகிறான்.

அவன் நடக்க முடியாமல் துன்பப்படுவதைப் பார்த்த பூமி வாகனம் ஒன்று கொடுக்கலாம் என்று நினைத்தது. ஆனால் அவன் புனிதமானப் பாதம் பூமியில் படாமல் போய்விடும் என்று கொடுக்கவில்லை.

வானம் அவன் நனைந்துகொண்டு போவதைப் பார்த்து ஒரு குடை ஒன்று கொடுக்கலாம் என்று நினைத்தது. குடை கொடுக்கமுடியாவிட்டாலும் மழையை நிறுத்தியிருக்கலாம், ஆனால் நிறுத்தமுடியவில்லை. ஏன் என்றால் அவன்படும் துன்பக் காட்சியைப் பார்த்து வானமே கண்ணீர்விட்டது.

அவன் காதுகளுக்கு எங்கோ இருட்டில் குழந்தை அலறல் சத்தம் கேட்கிறது. வீட்டிற்கு பக்கம் வரவர வீட்டிலிருந்து வந்தது. அவனுக்கு பயம் ஏற்பட்டது வீட்டில் விளக்கு எரியவில்லை. அவள் தூங்கியிருப்பாளோ? விளக்கை காற்று அனைத்திருக்குமோ? என மனம் ஏதேதோ நினைக்கலாயிற்று. அவன் வீட்டிற்கு நுழைவதற்கு முன்பே பாதி உயிர் போனமாதிரி இருந்தது.

அவள் குழந்தை பிறக்க முடியாமல் வயிற்று வலியால் கத்திக் கத்தி அவள் உடலிலிருந்து உயிர் அறுபட்டு அவன் வரவதற்கு கொஞ்சமுன் அவனை தேடிச் சென்றது.

அவன் வீட்டிற்குள் நுழைந்து விளக்கைப் பற்ற வைத்தான். அவள் இறந்து கிடப்பதை பார்த்து. அய்யோ என்று கத்தினான். அவன் மீதி உயிரும் போய்விட்டது. அவர்கள் உயிர்கள் அந்த மகனைச் சுற்றி சுற்றி வந்தன.

மழை பெய்யாமல் நின்றது. தென்றல் வீசாமல் நின்றது, ஆறு ஓடாமல் நின்றது, பூ பூக்காமல் இருந்தது, நலவு ஒளியை காட்டாமல் இருந்தது, கொடி படராமல் நின்றது பூமி சுற்றாமல் நின்றது, தளிர் தளிர்க்காமல் நின்றது, இவையெல்லாம் அவர்கள் இறப்புக்கு கொஞ்சம் நேரம் இறங்கள் செலுத்திவிட்டு பிறகு அதன் தன் வேலைகளைச் செய்ய தொடங்கின

ஆனால், இரவெல்லாம் தென்னை ஓலையால் வேயப்பட்ட வீட்டில் தனி ஒரு அலறல் ‘சத்தம்’.

சிறுகதையின் ஆசிரியர் : முனைவர் துரை.கிருஷ்ணன்

பார்க்கவும்

1.மறக்க முடியுமா (சிறுகதை)

Leave a Reply