Wednesday, June 24, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home ஆய்வுக்கட்டுரைகள் Polyvalence in Bharathidasan Poetry|Dr.N.Dharmaraj

Polyvalence in Bharathidasan Poetry|Dr.N.Dharmaraj

பாரதிதாசன் கவிதைகளில் பன்முகத்தன்மை
Abstract
          Tamil literature — with roots stretching back over two thousand years — is celebrated as the finest expression of the cultural heritage of the Tamil people. Works produced in this ancient and rich language are of world-class significance. Sangam literature, for example, can broadly be divided into two kinds: agam (interior/subjective) and puram (exterior/public). Following the Sangam tradition, Bharathidasan played a major role in the modern lineage of poetry. This study attempts to examine how his poems address caste, women, and superstitions.

பாரதிதாசன் கவிதைகளில் பன்முகத்தன்மை”

ஆய்வுச் சுருக்கம்
          தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்களின் பண்பாட்டு மரபினைக் கூறும் சிறந்த இலக்கியமாகப் போற்றப்படுகிறது.அத்தகையப் பழமையும் வளமையும் கொண்ட தமிழ்மொழியில் தோன்றிய இலக்கியங்கள் உலகச் சிறப்புடையதாகும்.சங்க இலக்கியம் என்று சொல்லும்போது அகம் புறம் என்ற இருவகைகளில் அடக்கிவிடலாம்.அச்சங்க இலக்கியத்திற்கு அடுத்த மரபுக்கவிதையில் பாரதிதாசன் பங்கு மிகப்பெரியது.அவருடைய கவிதையில் சாதியைப் பற்றியும் பெண்களைப் பற்றியும் மூடநம்பிக்கைப் பற்றியும்  கூறியுள்ளதை ஆராய முற்படுகின்றது.
முன்னுரை
          தமிழ் சார்ந்த இவ்வுலகம்  பல திறம் வாய்ந்த படைப்பாளர்களை வழங்கிய நற்பெயருடையது. அவர்களது படைப்புகள் வாழ்வியலைக் காட்டும் கண்ணாடிகளாக மட்டுமல்லாது சமுதாயம் நலம்பெறவும் விடிவெள்ளி காணவும் எண்ணற்ற கருத்துகளை வழங்கும் பெட்டகங்களாகவும் இருக்கின்றன. எளிய முறையில் கவிதைப்பாடி சமுதாயச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்த பாரதியின் வழிக்கோலாய் வந்தவர் பாவேந்தர் பாரதிதாசன். இலக்கியங்கள் சமூகப் பதிவையும் சமூக மாற்றத்திற்கான பதிவுகளையும் உள்ளடக்கியிருக்கின்றன என்பதை உணர்ந்த அவர், தன்னுடைய உணர்வுகளைக் கவிதைகளில் அழகுற செதுக்கினார். அத்தகைய மாண்புடைய பாவேந்தர் பாரதிதாசனின் கவிதைகளில் பொதிந்துள்ள சமுதாயச் சிந்தனைகளை பன்முகநோக்கில் ஆய்தல் இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சாதிய மறுப்பு
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்” (972)
          என்ற திருக்குறள் எல்லா உயிர்களுக்கும் பிறப்பென்பது ஒத்தத் தன்மையுடையது என்பதை நன்கு உணர்த்துகின்றது. “பெரியோரெல்லாம் பெரியோருமல்லர்; சிறியோரெல்லாம் சிறியோருமல்லர்”, எனும் வெற்றி வேற்கை மனிதர்களுள் வேற்றுமை உடையார் யாருமில்லை; அது அவரவர் செயல் கருதி வருதலாம் என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது.  சமத்துவம் என்பது பன்னெடுங்காலமாகப் பேசப்பட்டு வரும் ஒரு கொள்கையாகும். மக்கள் அவரவர் செயல் வன்மையினால் உயர்ந்த தாழ்ந்த இடங்களை அடைகிறார்களேத் தவிர, பிறப்பால் மாந்தருக்குள் பிரிவென்பது மூடச் செயல் என்பது ஆன்றோர்கள் பன்னெடுங்காலமாக உணர்த்தி வந்த ஒன்றாக இருக்கின்றது.இதனை பாரதிதாசனும் பல கவிதைகளில் எடுத்து கூறுகிறார்.
          தீண்டாமை இந்தியாவில் (இந்தியர்களிடையே) மட்டுமே உள்ளது என்று வெட்கும் பாரதிதாசன், “தீண்டாமை என்னும் ஒருபேய் இந்தத் தேசத்தில் மாத்திரமே திரியக் கண்டோம் எனில் ஈண்டு பிறநாட்டில் இருப்போர் செவிக்கு ஏறியதும் இச்செயலைக் காறி உமிழ்வார்”, (பாரதிதாசன் கவிதைகள் 3, ஞாயமற்ற மறியல் -3) என்று வெகுண்டு எழுகிறார். “சாதிப்பிரிவு செய்தார் தம்மை உயர்த்துதற்கே நீதிகள் சொன்னாரடி-சகியே நீதிகள் சொன்னாரடி”, (பாரதிதாசன் சமத்துவப்பாட்டு -45) கவிதைகள் 3, என்ற வரிகளில் இச்சாதியப் பாகுபாடு என்பது தம்மை உயர்த்திக் கொள்வதற்காக. ஒரு கூட்டத்தினர் செய்த சதி என்று கொட்டி தீர்க்கிறார்.
பெண் உரிமை
          தம்முடைய முன்னோடி ஆகிய பாரதியாரை போலவே இவரும் பெண் உரிமைக்கு குரல் கொடுத்தவர். பெண் அடிமை தீரும் வரை மண்ணடிமை தீராது என்றார். ஊமை என்றே பெண்ணை உரைக்கும் வரை ஆமை நிலைதான் ஆடவர்க்கு என்றார். நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் எனில் அக்கழகத்தின் துணை வேந்தர் பெண்ணாகத்தானே இருக்க முடியும். வீடும் நாடும் விளங்கப் பெண் உரிமை வேண்டும் என்றார்.
“பெண்ணடிமை தீரும்மட்டும் பேசுந் திருநாட்டு
மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற் கொம்பே
புகர் வாய்க் குழிசி பூஞ் சுமட்டு இரீஇ நாள்
மோர் மாறும் நன் மா மேனி” (பெரும் 157-160)
          என்ற பெரும்பாணாற்றுப்படை பாடல், அக்காலச் சமூகம் பெண்வழி இருந்ததற்கு நல்ல சான்றாக அமைகின்றது. குடும்பவியல் என்பதைத் தாண்டி பெண்கள் வணிகவியல் போன்றவற்றிலும் கால் பதித்திருந்தனர் என்பது இப்பாடல் முக்கியச் சான்றாகும். ஔவையும் பெண்ணிம் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசும் பொழுது, “இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை இல்லாளும் இல்லாளே ஆமாயின் இல்லாள் வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில் புலிகிடந்த தூறாய் விடும்”, (மூதுரை -22) என்று கூறுகிறார். பாரதிதாசன் படைத்தப் பெண்கள் உரிமைகளைத் தாங்களே எடுத்துக் கொள்ளும் பாங்கினராக இருக்கின்றனர். “செல்வப் பிள்ளாய்! இன்று புவியில் பெண்கள் சிறுநிலையில் இருக்க வில்லை! விழித்துக் கொண்டார்!” (பாரதிதாசன் கவிதைகள் : முதல் தொகுதி) என்ற வரிகளில் அவர் அதைக் காட்டுகின்றார். அதோடு, அப்பாங்கினராகிய பெண் பிறந்தபொழுது, “மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே! (பாரதிதாசன் கவிதைகள்: முதல் தொகுதி) என்று தாலாட்டுகிறார் கவிஞர். பாரதிதாசன் படைத்தப் பெண்கள் விரிந்த நோக்குடையவர்களாகவும் இருக்கின்றனர். செயல்திறம் வாய்ந்தவர்களாகவும்
“நிற்கையில் நீ நிமிர்ந்து நிற்பாய் குன்றத்தைப் போல்!”
                                              (பாரதிதாசன் கவிதைகள், ‘வீரத்தாய்’ காட்சி : 3)
        என்ற வரிகள் அதை மெய்ப்பிக்கின்றன. பெண்கள் குடும்பம் என்ற கூட்டுக்குள்ளும், சமுதாயக் கட்டுப்பாட்டுக்குள்ளும் இல்லாமல் நாடு, உலகம் என்ற பரந்த நோக்கில் செயல்பட வேண்டும் என்பது அவருடைய கருத்தாக இருக்கிறது. “வினையே ஆடவர்க்கு உயிரே, வாள்நுதல் மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்”, (குறுந் 135) என்ற குறுந்தொகைப் பாடலையும், “அச்சமும் மடமும் நாணும் முந்துறுத்த நிச்சமும் பெண்பாற்கு உரிய’ (தொல், பொருள், களவியல்.நூற்.9) என்ற தொல்காப்பிய நூற்பாவையும் தவிடுப்பொடியாக்கும் வகையில் பெண்கள் செயல்பட வேண்டும் என்பது அவருடைய கருத்தாக இருக்கிறது. பெண் என்பவள் அடுக்களைக்குள் மட்டும் அடங்காமல் உயர்ந்த சிந்தனையோடும், நேர்கொண்ட பார்வையோடும், நெஞ்சில் திறத்தோடும், நாடு, உலகம் சிறக்கச்ச் செயலாற்ற வேண்டும் என்பதை
“விழுந்த தமிழ்நாடு தலைகாக்க என்றன்
உயிர்தனையே வேண்டிடினும் தருவேன்”, (குடும்பவிளக்கு -1)
என்ற வரிகளாலும், “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய் நமதுநலம் சேர்ப்ப தல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம்? என்பதைநாம் நினைத்துப் பார்ப்பதுவு மில்லை” (குடும்பவிளக்கு -1) என்ற வரிகளாலும் படம் பிடித்துக் காட்டுகிறார். பால் கணக்கு, தயிர்க்கணக்கு வைத்துக் கொள்ளும் அளவு கணக்கறிவு, எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரிந்த அளவு படிப்பு ஆகியவை பெண்ணுக்குப் போதும் என்று கருதியிருந்தது பழைய உலகம். கல்வி இல்லா நிலம் களர் நிலம்; அங்குப் புல் விளையலாம்; நல்ல புதல்வர் விளைய மாட்டார் என்றார் பாரதிதாசன். கல்வி வல்லாராய்ப் பெண்கள் திகழ வேண்டும்; தாய் மொழிக் கல்வியைப் பெண்கள் பெறுதல் வேண்டும் என்று நினைத்தார் கவிஞர். அதுக்குறித்துக் காட்டும் பொழுது, “இந்தப் பழம்புகழ் மீள வேண்டும் நாட்டில் எல்லோரும் தமிழர்களாய் வாழ வேண்டும் வழிந்தொழுகும் சுவைத்தமிழே பெருக வேண்டும் மாற்றலர்கள் ஏமாற்றம் தொலைய வேண்டும்”, (குடும்பவிளக்கு- 1) என்று கல்விக் கற்ற குடும்பப் பெண் பேசுவதாகக் கவிஞர் காட்டுவது புரட்சியின் உச்சம்.
மூடநம்பிக்கை
          தமிழர் மத்தியில் அறிவுக்கு ஒவ்வாத மூட நம்பிக்கைகளைப் பாவேந்தர் பாரதிதாசன் பெரிதும் சாடியுள்ளார். “மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே! (பாரதிதாசன் கவிதைகள்: முதல் தொகுதி) என்ற வரிகளின்வழி அன்னார், தமிழர்களிடையே மூட நம்பிக்கைகள் தேங்கி ஏற்பட்டுள்ள தோய்வினை முடைநாற்றம் என்கிறார். இறைவழிபாடு, ஏனைய வாழ்வியல் சார்ந்த மூட நம்பிக்கைகள் பெரும்பாலும் அதிகம் பெண்களிடையே ஊறியிருப்பதால் பெண்கள் அதனிலிருந்து வெளிவர வேண்டும் என்பது அவருடைய கருத்தாக இருக்கிறது. அதோடு,
மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது”,
                                                          (ஔவையார் தனிப் பாடல் : 57)
          என்ற வரிகளில் குறிப்பிட்டுள்ள பேடுத் தன்மையைத் தம்முடைய கவிதைகளில் மாற்றுப் பொருளில் பயன்படுத்துகிறார் பாவேந்தர். ஆணும் அல்லாத பெண்ணும் அல்லாதத் தன்மையைக் குறிக்கும் பேடித் தன்மையை அறிவுக்குப் பொருந்தாத வழக்கங்களின் மீது ஏற்றிப் பாடுகிறார். எப்படி அத்தன்மையினரால் இனம் விருத்தியடையாதோ அதுபோல இந்தப் பேடி வழக்கங்களால் இனம் உய்யாது என்பதை,
“பேடி வழக்கங்கள் மூடத்தனம் இந்தப் பீடைகளே இங்குச் சாத்திரங்கள்
                               (பாரதிதாசன் கவிதைகள் 11, மாந்தோப்பில் மணம் -9)
          என்ற வரிகளில் காட்டுகிறார். அப்படிப்பட்ட மூடத்தனங்களை நாம் சாத்திரம் என்று போற்றுவதால் தான் இன்றளவும் கைப்பெண் மறுமணம் என்பது சமூகத்தில் கேலிக்கூத்தாகப் பார்க்கப்படும்
முடிவுரை
        பாவேந்தர் பாரதிதாசன் சமூகத்திற்கு வழங்கியுள்ள கருத்துகளை ஒவ்வொருவரும் கற்றல் அருமையான செயலாகும். ஞாலத்தின் மேன்மையெல்லாம் உற்று, சீரிய வாழ்வு வாழ விரும்புகின்றவர்கள் பாரதிதாசனின்  கவிதைகளை படிக்க வேண்டும்.  அவ்வாறு செய்தால்  வாழ்வு சிறக்கும்  என்பது உறுதி.
ஆய்வுக்கு பயன்படுத்திய நூல்கள்
1)வரதராசன்.மு.வ. (2008). திருக்குறள் தெளிவுரை. சென்னை: அப்பர் அச்சகம்.
2)பாரதியார்.(2008). பாரதியார் கவிதைகள் முழுவதும். நாமக்கல்:திருமகள் பதிப்பகம்.
3)பாரதிதாசன்.(2015). பாரதிதாசன் கவிதைகள், நாமக்கல்: திருமகள் பதிப்பகம்.
4)புலியூர் கேசிகன். (2010). புறநானூறு மூலமும் உரையும்.சென்னை, சாரதா பதிப்பகம்.
5)பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை.சென்னை:வெற்றி அச்சகம்.
6)ஔவையார். (1997) வாக்குண்டாம் (மூதுரை). வவுனியா:சுதன் அச்சகம்.
7)புலியூர் கேசிகன் (2010) குறுந்தொகை மூலமும் உரையும். சென்னை:சாரதா
Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் ந.தர்மராஜ்
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
ரெமோ சர்வதேசக் கல்லூரி
ஆலந்தூர், சென்னை – 600 016

 

பாரதிதாசன் கவிதைகளில் பன்முகத்தன்மை PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »