Tholkoppiya Akathinai Kotpadu Nookil Inthinai  Ezhubhadhu|T.Santhi

தொல்காப்பிய அகத்திணைக் கோட்பாடு நோக்கில் ஐந்திணை எழுபது
Abstract
         The objective of this study is to elucidate the Akathinai (internal love) concepts mentioned in Tholkappiyam through the work Ainthinai Ezhupathu. Through the classification of the different landscapes (thinai), the Akathinai themes of each landscape are individually presented in this research paper.


“தொல்காப்பிய அகத்திணைக் கோட்பாடு நோக்கில் ஐந்திணை எழுபது”

ஆய்வுச் சுருக்கம்       
      தொல்காப்பியம் குறிப்பிடும் அகத்திணைக் கோட்பாடுகளை ஐந்திணை எழுபது வழி வெளிப்படுத்துவதே இந்த ஆய்வின் நோக்கமாகும். திணைகளின்வழி ஒவ்வொரு திணையும் தனித்தனியாக அகத்திணைச் செய்திகள் இந்த ஆய்வுக்கட்டுரையில் வெளிப்படுகிறது.
 
முன்னுரை
      அகத்திணை என்று பெயர் பெற்றது  தமிழ் மாந்தர்கள் சேர்ந்து வாழ்ந்த நிலப் பகுதியையும் பொழுதையும் முதற்பொருளாகக்கொண்டு தொழில்கள் உணவுகள் பழக்கவழக்கங்கள் போன்றவற்றை கருப்பொருளாகக்கொண்டு உள்ளத்து உணர்வுகளை வாழ்வியல் நோக்கில் உரிப்பொருளாகக்கொண்டு தொல்காப்பியர் வகுத்த இலக்கணம் ஆகும். பல்வேறு இலக்கிய வகைகளை ஆய்ந்தறிந்த பின்னர் எழுதப்பட்டதாகும். தமிழினத்தின் வாழ்வியல் நெறிகள் தன்னையே  அகத்திணைகள் என்றும் புறத்திணைகள் என்றும் மேலும் பகுத்தனர். அகத்திணை என்பது ஏழு வகையாகும். அன்பின் ஐந்திணை என்பது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை இவற்றை உள்ளடக்கியதாகும். கைக்கிளை, பெருந்திணை இரண்டும் அகத்திணையின் பாற்பட்டதாகும். இதனைத் தொல்காப்பியர் ‘கைக்கிளை முதலாப் பெருந்தினை யிறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை என்ப’ என அகத்திணையியல் நூற்பாவில் குறிப்பிடுகின்றார்அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை என்கிறது திருக்குறள். அன்பு அறம் இணைந்த வாழ்க்கையானது அன்பின் ஐந்திணை என்று தொல்காப்பியரால் சுட்டப்படுகின்றது என்பதை காணலாம். இன்பமும் பொருளும் அறனும் என்று தொல்காப்பியம் களவியல் நூற்பாகுறிப்பிடுகின்றது.
குறிஞ்சித்திணையின் சிறப்புகள்
           ஐந்திணை எழுபதில் குறிஞ்சி திணையில் அமைந்துள்ள பதினான்கு பாடல்களில் பதிமூன்று பாடல்கள் நாடன், நாட என்ற சொற்களைக் கொண்டு உள்ளது.தலைவியின் தோழியானவள் தலைவனை வரைவு கடாயது என்பதாகத்தான் பாடல்கள் அமைந்துள்ளதால் அகவொழுக்கக் கற்பொழுக்கப் பண்பாட்டு மரபு சிறப்பாக இருந்துள்ளதைக் காணமுடிகின்றது. தலைமகள் வரைவு வேண்டியும் தோழிக்கு சொல்லியது.அதனை தலைவனுக்கு வெறியாட்டத்தின் போது எடுத்துக்கூறிய தோழிக்கு தலைமைகள் அறத்துடன் நின்றது. தலைமகள் நிலையுணர்ந்த தோழி தலைமகனை வரைவு கடாயது. “அவரை பொருந்திய பைங்குரல் ஏனல், கவரி மடமா கதூஉம் படர்சாரல்,கானக நாட! மறவல் வயங்கிழைக்கு யானிடை நின்ற புணை. தோழியானவள் தலைமகனை கண்டு நீ என் தலைவி மகிழ்ந்திருக்க விரைந்து வந்து மணமுடிப்பாயாக. நான் உதவி செய்ததையும் மறவாமல் இருப்பாயாக என்று கூறுகிறார். இதில் இரண்டு கருத்துகள் கூறப்பட்டுள்ளன. தோழி, தலைவியை விரைந்து மணமுடித்துக் கொள்க என்பது ஒன்று. நீங்கள் இருவரும் களவு வாழ்க்கையில் ஈடுபட்டதற்கு நானே சாட்சியாக இருக்கிறேன் என்பதையும் அவள் கூறியுள்ளதாக அறிய முடிகின்றது. கார்காலம் வந்துவிட்டது. கார்காலப் பொழுதில் வருகிறேன் என்று சொல்லிச் சென்ற தலைவன் வரவில்லை என்பதை உணர்ந்தவளாய்த் தலைவி வருத்தத்தோடு தன் தோழிக்கு சொல்லியதாக இப்பாடல் அமைகிறது.
“செங்கதிர்ச்செல்வன் சினங்கரந்த போழ்தினால்
பைங்கொடி முல்லை மணங்கமழ வண்டிமிரக்
காரோடு அலமரும் கார்வனம் காண்தொறும்
 நீரோடு அலமருங் கண்” (ஐந்திணை எழுபது15).
          தலைவியின் உள்ளக்கிடக்கை இன்பமோ துன்பமோ அது தோழியினிடமே சொல்லப்பட்டது என்பதை இந்தப் பாடல் உணர்த்துகிறது “கார்காலம் தோன்றும் முன்னே வருவெனென,சார்பாய்ச் சொல்லிச் சென்ற தலைவ, நீர் கொண்ட மேகங்கள் விண்ணில் அலைந்தாட,நீர் கலங்கி ஏங்குதே மைதுட்டாக் கண்களே “இனிய தோழா பல்சுவைதிங்களிதழ் பாடலும் நோக்கத்தக்கது     
பாலைத்திணைக்கோட்பாடு
         
      பாலைத்திணையின் இடம், நிலம் ஆனது தனியாக ஏதும் குறிப்பிடப்படவில்லை. குறிஞ்சியும் முல்லையும் தன்னிலை திரிந்த மண்ணினது நீர் வற்றி வறண்ட நிலத்தின் தன்மை பாலை எனப்பட்டது. ஆயினும் இதற்கு தனியே  பாலைத்திணைக்குரிய உரிப்பொருளாக பிரிதலும் பிரிதல் நிமித்தமும் ஆகும். பாலைநிலத்தை சிலப்பதிகாரம் சுட்டும் முறையில் “முல்லையுங் குறிஞ்சியும் முறைமையிற் றிரிந்து, நல்லியல்பிழந்து நடுங்குதுய ருறுத்துப், பாலை என்பதோர் படிவங் கொள்ளும் என்று சிலப்பதிகாரவரிகள் குறிப்பிடுகின்றது. இதனை 11 , 64-66வரி பொருளாதாரம் அகத்திணையியல் இதைக் குறிப்பிடுகின்றார், ஆ. சிவலிங்கனார். வெளியீடு உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்.பிரித்தலும் பிரித்தல் காரணமாக நால்வகை நிலத்தில் இருக்கும் மனிதர்களுக்கும் உரியதாகும். பாலைக்கு தனி நிலம் இல்லையாயினும், பாலைக்குரிய உரிப்பொருளானது அனைவர்க்கும் அனைத்து நில மாந்தர்களுக்கும் உரிய ஒன்றாகவே அமைகின்றது. நடுநிலைத்திணையாக மருதத்தின் முன்னே நிறுத்தி அகத்திணயின்ஜஒன்பதாம் நூற்பா குறிப்பிடுகின்றது. பாலை என்பது நீரில்லா வறண்ட நிலத்தையும் நீரில்லா தன்மையையும் அங்கு மனிதர்களும் பிறவுயிரினமும் தண்ணீருக்கு கொண்டிருக்கும்போது  நரிகளும் ஓநாய்களும் பிற விலங்குகளும் பசியோடும் நீருக்காகவும் உணவுக்காகவும் அலைவதை அழகாக சித்தரிக்கின்றது நற்றிணை பாடல் உரைக்கின்றது. உறைதுறந் திருந்த புறவிற்றனாது செங்கதிர்ச்செல்வன் தெறுதலில் மண்பக உலகு மிகவருந்தி அவர்வுறுகாலை..என தொடரும் அந்தப் பாடல் பாலை நிலத்தை காட்சிப்படுத்துகிறது எனலாம். பொருள்வயின் பிரிந்து போய தலைமகனைக் காய்ந்து தலைமகள் தனக்குத்தானே கூறிக்கொண்டது பிரிவின் வலியை உணர்த்துகின்றதோடு பாலையில் நடக்கும் போது எதிர்ப்படும் துன்பங்கள் தன்னையும் எடுத்து காட்டுகின்றது.

பேழ்வாய் இரும்புலி குஞ்சரம் கோட்பிழைத்துப்
பாழூர்ப் பொதியில் புகாப்பார்க்கும் ஆரிடைச்
சூழாப்பொருள் நசைக்கண் சென்றோர் அருள்நினைந்து
வாழ்தியோ மற்றோ உயிர் (ஐந்திணை எழுபது 31)
         
    பாலையின் கொடுமைதன்னைக்கொண்டதாக இந்த பாடல் அமைந்துள்ளது. யாரோ ஒருவர் பொறியில்சிக்கி புதரில் முட்பாதையில் நடந்ததைப் பார்க்கும் போது ஆறிடை சூழ சுடுமணலில் நடக்கும் தன்மையெல்லாம் பொருள் வேண்டி நசை கண் சென்றோர் அருள் வாழ்த்தியோ மீளுதல் என்பதாகும். தலைவன் உயிர் மற்றொரு உயிர் எனவெண்ணாதவள் தலைவியே ஆவாள்.
 
மருதத்திணைக்கோட்பாடு
        
     மருதத்திணையில் வயலும் வயல் சார்ந்த இடமும் நிலமாகும். இதன்சிறுபொழுது வைகறையாகும். மருதத்திணையின் உரிப்பொருளானது ஊடலும் ஊடல் நிமித்தமும் ஆகும். மருத நிலம் என்பது வளம் நிறைந்த பகுதியை குறிக்கின்றது. இங்குதான் முறைப்படி விவசாயம் செய்து மக்கள் வாழ்ந்திருந்தனர். விவசாயத்தின் மேன்மையையும் உணர்ந்திருந்தனர் எனலாம். அரசும் ஆட்சியும் நற்சமூக அமைப்பும் இங்குதான் முதன்முதலாக தொடங்குகின்றது  எனலாம். சட்டங்கள் வகுக்கப்பட்டு மன்னர்கள் ஆட்சி செலுத்தியதும் மருத நிலப்பகுதியை மையமாகக் கொண்டுதான் இதில் ஆட்சி பகுதி அதாவது நிலப்பகுதி அதிகமாக இருக்கும் என்பதை உணர முடிகிறது. ஐந்திணை எழுபதில் மருதத்திணைப்பாடல்கள் பரத்தையில் பிரிதல் பற்றி கூறுகின்றது.தலைவனை ஆற்றப்படுத்துதல் ஐந்திணை எழுபதில் மருதத்திணை பாடல்கள் மூலம் அறியப்படுகின்றன. பரத்தையிற் பிரிந்த தலைவனை ஆற்றப்படுத்துதல் வாயில மறுத்தல் ஊடல்தெளிவித்தல் தோழிதுணைபுரிதல் போன்ற வகையில் பாடல்கள் அமைந்துள்ளன. “ஆற்றல் உடையன் அரும்பொறி நல்லூன்மேற்று சிறுதாய காய்வஞ்சி போற்றுருவிக், கட்டக முத்திற் புதல்வனை மார்பின் மேல, பட்டம் சிதைப்பவரும்”( ஐந்திணை எழுபது 43 ஆம் பாடல்,73 ஆம் பக்கம்) இதில் தலைவனானவன் தன்மகனை தோளில் அல்ல மார்பில் போட்டுக்கொண்டு கொஞ்சும் மகிழ்ச்சியைக் தோழியானவள் கண்டு தலைவியிடம் உரைக்கிறாள்.தலைவியிடம் தோழி பரத்தையிடம் செல்லும் உன் தலைவன் வீடு வரும்போது அவனை உன்னிடமே இருத்துக் கொள்ள முயற்சி செய் அதுவே எனக்கு மகிழ்ச்சி தருவதாகும். அவனுக்கும் இன்பத்தை கொடுக்கும்படி நல்லாதாக நடந்து கொள் என்று தாய்மை பண்பொடு உரைக்கும் பாடல் மூவாதியார் பாடிஇருக்கின்றார்.

வளவயல் ஊரன் மருளுரைக்கும் மாதர்
வளைஇய சக்கரத்து ஆழி கொனை பிழையா
வென்றிடை யிட்டு வருமேல்நின் வாழ்நாட்கள்
ஒன்றிலன அனைத்தும் உளேன். ( ஐந்திணை எழுபது -56,மருதம்- 14)       
    வளமை பொருந்தி மீன்கள் துள்ளி விளையாடும் மயில்கள் ஆடுதுறை உடைய தலைவன்உன்னிடம் வரும்போது நீ அவனை நிறுத்திக் கொள்ள முயல்வாயாக என்று தோழி உரைப்பது தாய்மை பண்போடு காணப்படுகிறது என்பதை அறிய முடிகின்றது.
 
நெய்தல் திணையின் கோட்பாடுகள்
     நெய்தல் வாழ்வையும் சிறப்பையும் அருமையான பாடல்கள் மூலம் பாடியிருக்கின்றார். நெய்தல் திணையின் வாழ்விடமானது ஆழியும் ஆழி சார்ந்த இடமும் அதாவது கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் நிலமாக அமைகின்றது. இங்கு இருத்தல் இயற்கை மடியில் இருப்பது போலாகும். இரங்கலும் இரங்கல் நிமித்தமும் இன் உரிப்பொருளாக அமைகின்றன. இரங்கல் என்பது மற்ற திணைகளில் சென்றவர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கை இருக்கின்றது. அங்கு எப்போதோ ஒருமுறைதான் பொருள்வழிப்பிரிவு நடைபெறுகின்றது. அனைவருமே ஒவ்வொரு நாளும் கடற்கரையை, கடலலையை தன் வாழிடமாகக் கொண்டு பணி செய்வதால் அங்கு சென்றுவருவது  என்பது நித்திய கண்டம் பூரண ஆயுசு என்பதைப்போல அமைகின்றது. அதனாலேயே நெய்தல் நிலமகளிர் எப்போதும் இரக்கத்தையே தன்னிடத்தில் கொண்டுள்ளனர். தன் தலைவனுக்காக வேண்டிக்கொண்டு இருப்பதே அவர்களின் பண்பாக அமைகிறது. நெய்தல் திணையிலும் வரைவு நிகழ்வதற்காக தோழிக்குரிய பாடல் அதிகமாகவே அமைந்துள்ளதைக் காண முடிகிறது.

” கண்ணுறு நெய்தல் கமழும் கொடுங்கழித்
தண்ணந் துறைவனோ தன் இலன் ஆயிழாய்
வண்ணகைப் பட்டதனை ஆண்மை எனக்கருதிப் 
பண்ணமைத் தேர்மேல் வரும் “(ஐந்திணை எழுபது -63)      
     இந்த பாடலில் தோழி தலைவனை இயற்பழித்துரைக்கிறாள். அணிகலன்களை அணிந்து கொண்டு இருக்கும் தலைவியே உன் தலைவனானவன் உன்னைக் கண்டு மகிழ்தலையே அதாவது உன்னை, உன் கைகளைத் தொட்டு மகிழ்வதையே பெரும் பெயராகக் கொண்டுள்ளான். பலரும் காணும் வண்ணம், மண்ணும் உலகோர் புகழும் வண்ணம் உன்னைத்தேரில் ஏற்றி மணந்து கொள்வது எந்த நாள் என்று கேலி செய்வதாக இந்த பாடல் அமைந்துள்ளது. நெய்தலில் செவிலி நற்றாய் மொழியும் பாடல்கள் அமைந்துள்ளன.
 
நிறைவுரை
தொல்காப்பியம் வழிவகுத்த அகப்பொருள் திணைக்கோட்பாட்டின் அடிப்படையில் வழிவந்த நூல்களாக பல்வேறு அகத்திணை நூல்கள் எழுதப்பட்டு இருந்துள்ளன. நமக்கு கிடைத்தவை சிலவே எனலாம். ஐந்திணையெழுபது அகப்பொருள் நூலாகும். இதில் உரிப்பொருளை மையப்படுத்தி பாடல்கள் இயற்றப்பட்டு உள்ளதைக் காணமுடிகின்றது என்ற வகையில் தொல்காப்பியம் வரையறுத்த அகத்திணைக் கோட்பாட்டை இதுவும் மற்றவையும் பின்பற்றி வருகின்றன. ஆனால் முழுவதுமாக பின்பற்ற முடியவில்லை என்பதையும் உணர முடிகின்றது. இந்த வகையில் தொல்காப்பிய இலக்கணம் இலக்கியமாகவும் செயல்படுகின்றது. தொல்காப்பியம் இமயமலை என்றால் அதன் பிறகு தோன்றிய நூல்கள் எல்லாம் மடுவுக்கு சமமாக அமைகின்றன எனலாம்.ஆனால் அதிலும் முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் வைத்து புனைந்துள்ளனர் தமிழ்ப்புலவர்கள்.நயமிக்க உவமைகளும் சுவைகளும் காணப்படுகின்றன எனலாம். இதனால் தமிழர் பண்பாட்டின் வரலாறுகள் மீண்டும் மீண்டும் அக வாழ்வில் பதிவு செய்யப்படுகின்றன என்பதை இங்கே இந்த கட்டுரையின் கருத்தாக  முன்வைக்கப்படுகின்றது.
 
துணைநூற் பட்டியல்
 
1.தொல்காப்பியம் மூலம் பாட வேறுபாடுகள் ஆய்வுநோக்காய்வு பன்னாட்டு திராவிட மொழி இயக்கம் திருவனந்தபுரம் 1996

2.ஒப்பில் தொல்காப்பியம் ப. மருதநாயகம் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சென்னை தமிழ்நாடு

3.தொல்காப்பியம் தெளிவுரை ச.வே.சுப்ரமணியம்

4.தொல்காப்பியம் பொருள் அதிகாரம் இளம் பூரணர்  தொகுதி ஒன்று இலக்கணச்செம்மல் இளங்குமரனாரின் வாழ்வியல் விளக்கம் இளவழகன் 2003

5.தொல்காப்பியம் பொருள் அதிகாரம் களவியல் மற்றும் கற்பியல் ஆ.சிவலிங்கனார் பதிப்பாசிரியர் உலகத் தமிழ ஆராய்ச்சி நிறுவனம் 1991
 
6.தொல்காப்பியம் காட்டும் வாழ்வியல் 1986

7.திருக்குறள் மணிவாசகர் பதிப்பகம், இனிய தோழாபதிப்பகம் உரைகள்
சென்னை 1 மு. வ. உரை பாரிநிலையம்
 
8.வரலாற்று நோக்கில் தொல்காப்பியம், இராசாராம் வெளியீடு, முல்லை நிலையம்.

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
தி.சாந்தி,
முனைவர் பட்ட ஆய்வாளர்,
திராவிடப் பல்கலைக்கழகம்,
குப்பம், ஆந்திரப் பிரதேஷம்- 517 426.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here