சுவாதி அப்பாவிடம் செல்லமாக சினுங்கினாள். என்னப்பா நீ மாயவரம் போயி தீபாவளி கொண்டாடனும்ன்னு சொல்றே? பாட்டி, தாத்தா இங்க வந்தா எவ்வளவு நல்லா இருக்கும். சேகர் ஒரு அரசாங்க அதிகாரி. நேர்மையானவர். பெரிய குடும்பத்தில் பிறந்தவர். அவர் தந்தை ரங்கனுக்கு நாலு குழந்தைகள். மூன்று மகன் ஒரே ஒரு மகள். மகள் சிவகாமி ஸ்ரீ ரங்கத்தில் உள்ளாள். இரண்டு மகனும் அவரோடு இருக்கிறார்கள். ஒரு மகன் இன்சூரன்ஸ் ஏஜென்சி எடுத்து தனி ஆபீஸ் வைத்து பிசினஸ் செய்யறான். ஒரு மகன் கல்லூரியில் முனைவராக உள்ளார். மூன்றாம் மகன் சேகர் சென்னையில் அரசாங்க வேலை பார்கிறார். சேகருக்கு ஒரு மகள் ஒரு மகன். இந்த முறை ரங்கு தாத்தா வத்சலா பாட்டியுடன் தீபாவளின்னு சொன்னது தான் சுவாதிக்கு கோவம்.
சேகர்: ஒருமுறை கிராமத்துல பண்டிகை கொண்டாடினால் தான் உனக்கு தெரியும். அவங்கல்லாம் சுறுசுறுப்பா இருப்பாங்கன்னு.
சுவாதி: ஆனா, நாம தான் முன்னேற்றத்தோட இருக்கோம் தெரிஞ்சுக்கோங்க. அங்க இன்டர்நெட் வருமா?
சேகர்: எல்லாம் வரும். வந்து பாரேன். இந்த தீபாவளி மறக்கமுடியாததா மாறும்ன்னு யாரும் நினைக்கலை. சேகர், பிரியா, சுவாதி, ஆதித்யா கிளம்பினார்கள். அனைவரையும் குஷிபடுத்த சுவாதி தம் சராத் விளையாடலாம்ன்னு ஐடியா சொன்னா.
சேகர்: ஆயிரம் ஆனாலும் மாயவரம்ன்னு சொல்லுவாங்க. நீங்க அசந்துபோயிடுவீங்க பாருங்க. முதல்லலாம் லீவு வீட்டா பாட்டி வீடும் சித்தி வீடும் தான். இப்போ உங்களுக்கு இன்டர்நெட் மோகம் அதிகம் ஆகிடுச்சு.
பிரியா: குழந்தைங்க பெரியவங்க ஆயிட்டாங்க. நாம தான் புரிஞ்சிக்கணும். ரெண்டு பெரும் பெரிய கிளாஸ் படிக்கறாங்க. ஸ்வாதி பனிரெண்டாம் வகுப்பு. ஆதித்யா பத்தாம் வகுப்பு. அவங்க உலகம் இப்போ வேற இல்லையா?
சேகர்: எவ்வளவு பெரியவங்க அனாலும் நம்ம ஊரு நம்ம மனுஷங்களை மறக்க கூடாது. பிரியா மீண்டும் மாயவரம் வீட்டு கற்பனையில் மிதந்தாள். பிரியா: பெரிய விரகு அடுப்புல சுடுதண்ணீர் இருக்கும். பார்த்து எடுக்கனும். தோட்டத்துல எல்லா ஜீவனும் இருக்கும். துணை இல்லாம இரண்டுபேரும் வெளியில சுத்த கூடாது.
ஆதித்யா : நான் வீடியோ எடுத்து யூ டியூப்ல போடறேன். டிஸ்கவரி சேனல் மாதிரி.நல்லா இருக்கும்.
சுவாதி: சமையல் வீடியோ எடுக்கலாம். அதுதான் பிரம்மாண்டமா இருக்கும்.
பிரியா: சுவாதி உன்னோட பிரி ஹான்ட் ரங்கோலி போட்டு காமி.
சுவாதி: பெரியம்மா ரொம்ப அழகா கோலம் போடுவாங்க. பாட்டி தொன்னை, மண் பொம்மை லாம் அழகா பன்னுவாங்க.
உறவுகள் தொடர்கதைதான். தாய், தந்தை ரசித்ததை குழந்தைகள் ரசிக்கிறார்கள். ஆனால் நேரம் இருப்பது இல்லை. டிராவல்ஸ் வண்டியில கற்பனை கதைகள் அவுத்துவிட்ட குதிரை போல அலைந்தன. சேகருக்கு தன் சொந்த ஊரை நினைத்து பெருமை. பாட்டு போட்டி, கோலம் போட்டி, சமையல் போட்டி, அழகு போட்டின்னு கற்பனை குதிரை பறந்தது. ரங்கன் அரசாங்கத்தில் வேலை செய்து ஓய்வுபெற்றவர். அவர் மனைவி வத்சலா டீச்சராக வேலை செய்தவள். பெரிய குடும்பம் என்பதால் பெரிய வீட்டில் வசித்தார்கள். பெரிய கொள்ளை புறம், தோட்டம்ன்னு இயற்க்கையா இருக்கும். வீட்டின் பின்புறம் கிணறு, துணி துவைக்கும் கல், குளிக்கும் கல் இருக்கும்.
சுவாதி: வெட்ட வெளியில ஆகாசத்தை பார்த்து குளிக்கறது தனி சுகம். நாம சின்ன வயசுல விளையாடுவோமே. ஞாபகம் இருக்கா ஆதித்யா. ஆதித்யா : வடிவேலு ஒரு சினிமா படத்துல சொல்லுவாரே இந்த விட்டத்த பார்கறதுல எவ்வளவு சுகம்ன்னு. அந்த சமயத்துல சரியா யாரோ அவர் மேல இடிச்சுடுவாங்க. சொல்லிவிட்டு சிரித்தான் ஆதித்யா.
சுவாதி: சும்மா சிரிக்காத ஆதித்ய. சிரிக்கும் பொழுது யோசிச்சுட்டு சிரி. இப்போ வர்ற ஜோக்ல ஒரு அர்த்தமே இருக்க மாட்டேங்குது. கிராமத்துல தண்ணீ நிறைய இருக்கு. சென்னைல எங்க இருக்கு?
அக்கா என்றால் இன்னொரு தாய்ன்னு சொல்வார்களே அது சரி தான். பேசிக்கொண்டே இருந்ததில் ஊர் வந்துவிட்டது. பெரியப்பா, பெரியம்மா, தாத்தா, பாட்டி, சுதா, கீதா எல்லாரும் இவங்க வருகைகாக வெயிட்டிங். வெடி வெடிச்சு இவங்கள வரவேற்றார்கள். முதல் மகன் அருணுக்கு ஒரு மகள். அவள் பெயர் சீதா. இரண்டாவது மகன் பாலாஜியின் மகள் தான் கீதா. தீபாவளிக்கு முன்னாடி நாளே வந்துடீங்க. ரொம்ப சந்தோசம் என்றான் பாலாஜி பைகளை எடுத்து வைத்தபடி. சுவாதி, ஆதித்யா, சீதா, கீதா எல்லாரும் சேர்ந்து விளையாடினார்கள்.
வத்சலா பாட்டி இந்த பண்டிகையை ஸ்பேஷலா மாத்தனும்ன்னு நினைச்சாங்க. குழந்தைகளுக்கு நடுவுல ஒரு புரிதல் இருக்கனும்ன்னு நினைச்சாங்க. எல்லாரையும் கூப்பிட்டு தாழ்வாரத்தில் உட்கார சொன்னாள். இந்த வருஷம் நாம எல்லாரும் ஒரு புதுவிளையாட்டு விளையாட போறோம். அதாவது இந்த விளையாட்டுக்கு பெயர் வரவும் செலவும். உங்க அம்மா அப்பா மாசாமாசம் வரவுசெலவு கணக்கு பார்ப்பாங்க இல்லையா? சொந்தகாரங்க வந்தா சமையல் வேலை ஜாஸ்தி ஆகுது பணம் செலவு ஆகுதுன்னு சிலபேர் உறவை விட்டு விலகி பொயிடறாங்க. பணம் மட்டும்தான் வரவுசெலவா. இல்லையே சின்ன சின்ன அனுபவங்களும் வரவு தானே. நீங்க இந்த தீபாவளில எதை குடுத்தீங்க எதை வாங்குநீங்கன்னு சொன்னாதான் இரண்டுமே அழகுன்னு உங்களுக்கு புரியும்.
யாரு அதிகமா செலவு பன்றாங்களோ அவங்களுக்கு நான் பரிசு குடுப்பேன். வரவுசெலவை பொருளாக பணமாக சொல்லாமல் அனுபவமாக சொல்லனும். யாரு அனுபவசாலின்னு நான் பார்த்து பரிசு குடுப்பேன். இது குழந்தைங்க பெரியவங்க ரெண்டு பேருக்கும் உரிய போட்டி. சரி விளையாடலாமா? இது என்ன புதுசா இருக்கே? என்றால் பிரியா. அம்மா எது சொன்னாலும் அது நல்லதுக்குதான் என்று வழிமொழிந்தான் சேகர். தீபாவளி காலையில் எண்ணெய் தேய்த்து குளித்தார்கள். சாமி கும்பிட்டுவிட்டு, தீபாவளி லேக்கியமும், புது துணியும் பெரியவர்களிடமிருந்து வாங்கினார்கள்.
வத்சலா பாட்டி காலை சீக்கிரம் எழுந்தாள். கோலம் போடணும். வேலைக்காரிகிட்ட சொல்லி ஒழுங்கா துடைக்க சொல்லணும். தோரணம் கட்டணும். சூடு தண்ணிர்க்கு அடுப்பு முட்டனும். சாமி அறையில் புது துணி வைக்கணும் இப்படி ஏதாவது ஒரு வேலை யை எல்லாருக்கும் பிரித்து குடுத்து கொண்டே இருந்தாள். இது தான் கிராமத்து மக்களின் சாமர்த்தியம். வேலை யிலும் பேச்சிலும் வேகமா இருப்பாங்க.
பாட்டி இட்லியும் சட்னியும் அனைவருக்கும் கொடுத்தார். மதியம் ஸ்வீட்டு, ஸ்நக்ஸ், பாயசம், பச்சடி, அவியல், கூட்டு, சாம்பார்ன்னு நிறைய சாப்பாடு. வெடி வெடித்தார்கள். அரட்டை அடித்தார்கள். மாலையில் காவேரி கரை சென்று விளையாடி விட்டு நிலா சோறு சாப்பிடலாம் என்று முடிவு செய்தார்கள். ஆடி பேருக்கு அப்போ அந்த காவேரி கரை அவ்வளவு அழகா இருக்கும். தீபாவளி அப்போ தான் நாம எல்லாரும் ஒண்ணா இருக்கோம். இந்த பொழுதை அந்த இடத்தில் கழித்தால் நல்லா இருக்கும்ன்னு வத்சலா பாட்டி நினைச்சாங்க.
ஒரு வட்டம் போல உட்கார சொன்னாள் பாட்டி. அனைவரும் சேர்ந்து கும்மி டான்ஸ் ஆடுங்க நாள் பாட்டு பாடறேன் என்றாள் வத்சலா பாட்டி. கிராமத்து பாட்டுல இருந்த வேகம் சுவாதிக்கு பிடித்தது. கேலாட்டம் ஆடுவது தனி உற்சாகமாக இருந்தது. ஒன்று, இரண்டு, மூனு, நாலுன்னு செல்லிட்டே ஆடுவாங்க. ஒன்று, இரண்டுன்னு வேகமா சொல்லறதுக்கு ஏத்தமாதிரி பாட்டி கிராமத்து பாட்டை பாடுவாங்க. ரொம்ப நல்லா இருக்கும். பாட்டு, டான்ஸ் முடிஞ்ச அப்புறம் நிலா சோறு. குடும்பம் சேர்ந்து சாப்பிடுவதில் ரங்கு தாத்தாவுக்கு வத்சலா பாட்டிக்கு தனி மகிழ்ச்சி. கிராமத்தில் கிடைக்கும் காய்கறிகள் தான் எத்தனை சுவை. இந்த தண்ணிர் இந்த காய்கறிகள் உணவின் சுவையை கூட்டுது. இரவு சப்பாத்தி உருளை மசாலா, நிறைய காய்கறிகள் போட்ட குருமா, மங்கா சாதம், காலையில் செய்த சமையல் எல்லாம் சூடாக வந்தது.
ஒருமுறை பிரியா தீபாவளி லேக்கியம் முயற்ச்சி செய்து பார்த்தாள். அவளுக்கு கல்லு மாதிரி ஆயிடுச்சு. சுவாதியும் ஆதித்யாவும் பந்து மாதிரி விளையாடிவிட்டு தூக்கி போட்டார்கள். பாட்டி செய்யற தீபாவளி லேக்கியம் ருசியாவும் இருக்கும், மிருதுவாகவும் இருக்கும். உடம்புக்கு ரொம்ப நல்லது. பாட்டி கிருஷ்ண ஜயந்திக்கு மண் பொம்மை செய்வாங்க. அவ்வளவு அழகா இருக்கும். பெரியம்மா போடோ எடுத்து மோபைலில் அனுப்புவாங்க. பாட்டி நவராத்திரில மரப்பாச்சி பொம்மைக்கு அழகா அலங்காரம் பண்ணி வைப்பாங்க. பாட்டி ஒவ்வொரு பண்டிகையையும் அழகா மாத்தறாங்க என்று ஸ்வாதி மனதில் நெகிழ்ந்தாள்.
மறுநாள் மாலை சேகர் சென்னை கிளம்பனும். காலைல அதிகம் சாப்பிட வேண்டாம்ன்னு மோர் குடித்தான். பாட்டி எல்லாரையும் கூடத்துக்கு அழைத்து நான் வரவும்செலவும் விளையாட்டு விளையாட போறேன். எல்லாரும் உங்க அனுபவத்தை சொல்லுங்க என்றாள். முதலில் பெரியவங்க பேசினாங்க சமையல், பெரியவங்களுக்கு குடுக்கற மரியாதை, வீட்டு நிர்வாகம் மத்தவங்ககிட்டேந்து கத்துக்கிட்டோம்ன்னு சொன்னாங்க. சுவாதி பேசியது பாட்டிக்கு நெகிழ்வை குடுத்தது. சுவாதி: நான் சென்னைலேந்து கிளம்பறச்ச இன்டர்நெட் அங்க வருமான்னு அப்பாகிட்ட கேட்டேன். அப்பாவும் வரும்ன்னு சொன்னாரு ஆனால் பாட்டி மாதிரி ஒரு இன்டலிஜன்ட் வுமன் இருக்கும் பொழுது எதுக்கு ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ். பாட்டி பாடற பாட்டு எந்த ஏ.ஐ ஆப்பிலும் கிடைக்காது. பாட்டி தீபாவளி லேக்கியம் ஸோமேட்டோல கிடைக்காது. பாட்டி செய்யற மண் பொம்மை, மரபாச்சி பொம்மைக்கு செய்யும் அலங்காரம் ஒரு தனி திறமை. பாட்டியோட ஒவ்வொரு செயலிலும் அவங்க ஆர்வம் பாசம் தெரியுது.
பாட்டி இன்டலிஜன்ஸ் முன்னாடி ஏ.ஐ இன்டலிஜன்ஸ் பெருசு இல்ல. சொல்லிவிட்டு பாட்டியை முத்தமிட்டாள் சுவாதி. நெகிழ்ந்து போன பாட்டி தன் பேத்தியின் அன்பை நினைத்து கண் கலங்கினாள். அவளுக்கு பரிசாக தன் கல்யாண பட்டுப் புடவையைக் குடுத்தாள். இது வெறும் பரிசு இல்ல ஸ்வாதி’மா. என் உயிர் என்றாள். இந்த புடவை நீ கட்டும் பொழுது நான் உன் கூடவே இருப்பேன். உன்னை ஆசிர்வதித்து கொண்டே இருப்பேன் என்றாள். ஊருக்கு போகும் பொழுது சேகர் நினைத்தான் உண்மை தான் பாட்டி இன்டலிஜென்ஸ் முன்னாடி எந்த டெக்னாலஜியும் நிக்க முடியாது. அன்பின் மொழி என்றும் புதிது தான்.
சிறுகதையின் ஆசிரியர்
ரா.ஷர்மிளா,
ஆதம்பாக்கம்.






