Abstract
Thangkar Pachan, who enjoys celebrating his land as Sembulam, has been writing stories, novels, essays, cinematography and directing in the language of the people who had to leave the land. The language of literature and the language of the visual interact in his literary space, full of mind-blowing visualizations of people, animals, plants and trees. Tangkar records the stories of fear and pain about a world that will disappear and the pain, disappointment, poverty, hunger, anger, cruelty, disability and longing for the legacy of the simple people, the compassion and violence that the traditions have embedded in them, on the same platform, with social care. of Bachchan The purpose of this review is to compile the works.
“தங்கர் பச்சானின் படைப்புலகம்”
முன்னுரை
செம்புலம் எனத் தன் மண்ணைக் கொண்டாடி மகிழும் தங்கர்பச்சான் சிறுகதை, புதினம், கட்டுரை, ஒளிப்பதிவு, இயக்கம், என்று பல்வேறு தளங்களில் மண்ணைவிட்டு வெளியேறி வாழ நேர்ந்துவிட்ட மக்களின் மொழியில் மிகக் காத்திரமாகப் படைத்து வருபவர். இலக்கியத்தின் மொழியும் காட்சியின் மொழியும் ஊடாடும் கதைகளை தமது இலக்கிய பரப்பில், மனது கனக்கக் காட்சிப்படுத்துதலும் மனிதர்களும் விலங்குகளும் செடிகளும் மரங்களும் நிறைந்தது .அவை இல்லாமல் போகும் ஓர் உலகம் பற்றிய அச்சமும் வலியும் கொண்ட கதைகளையும் எளிய மக்களின் வலி,ஏமாற்றம், வறுமை, பசி, கோபம், குரூரம், இயலாமையும் மரபுப் பற்றிய ஏக்கமும் மரபுகள் தமக்குள்ளாகப் பொதிந்து வைத்திருக்கும் பேரன்பு, வன்முறைகள் இரண்டையும் ஒரே தளத்தில், சமூக அக்கரையோடு பதிவு செய்யும் தங்கர் பச்சானின் படைப்புகளைத் தொகுத்து அளிப்பதே இவ்வாய்வின் நோக்கமாகும்.
கடலுர் மாவட்டம் பண்ருட்டி அருகிலுள்ள பத்திரக்கோட்டையில், பச்சான் இலட்சுமி அம்மாள் தம்பதியரின் ஒன்பதாவது மகனாக 1961 மே-5 நாள் பிறந்த இவரின் இயற்பெயர் தங்கராசு. இவரது தந்தை தெருக்கூத்து கலைஞர் என்பதால் தங்கர் பச்சானுக்கு கலையின் மீதான ஆர்வம், சிறுவயதிலிருந்தே அதிகமாக இருந்துள்ளது. அதன் தொடர்ச்சியாகத்தான் பள்ளிப்படிப்பை முடித்தவுடன் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து ஒலி ஒளி துறையில் பயின்று, திரைத்துறையில் ஒளிப்பதிவாளராகவும் திரைப்பட இயக்குனராகவும் நடிகராகவும் எழுத்துலகில் சிறுகதை, நாவல், கட்டுரை எனப் பல கோணங்களில் (படைப்புலகில்) பல்கலை வித்தவராக இயங்கிவருகிறார்.
எழுத்துலகம் – சிறுகதை
தங்கர் பச்சான் சிறுகதைகளில், நடு நாட்டு மக்களின் வாழ்வியலை அதன் எல்லா போக்குகளுடன் பிரதிபலிக்குமாறு வெளிப்படுத்தி வருகிறார். பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பல்வேறு சுரண்டல்களுக்கு ஆட்படும், எளிய மக்களின் வலி, ஏமாற்றம், வறுமை, பசி , கோபம் , குரூரம், இயலாமை பற்றியும் மரபு ரீதியான உணவுப் பழக்கங்களில் ஏற்படும் மாறுபாட்டை பற்றியும் வயல்வெளிகளையும் ஆறுகளையும் தோப்புகளையும் பறந்து விரிந்து கிடக்கும் இயற்கை பற்றியும் அதனுடான உழவையும் உழுபவனின் நம்பிக்ககைகளை, களமாகக் கொண்டு சிறுகதை படைத்துள்ளது சிறப்பாகும். இவற்றை பேசும்போது, மரபிலக்கிய தேர்ச்சி பெற்ற இலக்கியவாதியாக விளங்குகிறார்.
சிறந்த கதை சொல்லியாகவும் நடு நாட்டின் வளம் எவ்வாறு சுரண்டப்படுகிறது என்பதை பற்றியும் கலாச்சார ரீதியான சீரழிவு எவ்வாறு ஏற்படுகிறது என்பதை பற்றியும் சிறுகதைகள் வழியாக வெளிப்படுகின்றன. நடுப்பகுதி மட்டுமல்லாது, தான் வாழ்ந்த பல்வேறுபட்ட இடங்களில் இருக்கும் தமிழர்களின் அவலங்களையும் தமது கதைகளில் எடுத்துரைக்கின்றார். எழுத்தாளர் தனது அனுபங்களை படைப்புகளின் வழியே எடுத்துரைக்கும் ஆற்றல் மிக்கவராக விளங்குகிறார். மேலும், நடு நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை முறையினையும் பழக்க வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் சடங்கியல் முறைகளையும் உழுவுதல் சாதிகளுக்கு இடையே ஏற்படுகின்ற பிளவுகளையும் வட்டார வழக்கு சொற்களைக் கொண்டே விவரிப்பதை,
வெள்ளை மாடு – 1993
குடி முந்திரி – 2002
இசைக்காத இசைத்தட்டுகள் – 2006
ஆகியப் படைப்புகளில் காணலாம்.
நாவல் : ஒன்பது ரூபாய் நோட்டு – 1993
தங்கர்பச்சானின் நாவல்கள், பின் தங்கிய மக்களின் உரிமைப் பிரச்சினைகளை எடுத்துக் கூறும் கிராமமாக புலியூர் காணப்படுகிறது. அங்கு வசிக்கின்ற மக்களின் இனிமையும் பெரிய லட்சியமும் ஏதும் இல்லாத சாமானிய மக்களின் உழைப்பும் உண்மையும் நல்லுணர்வுகளும் தன் குடும்பத்திற்காக தன் வாழ்வையே, தியாகம் செய்த மாத படையாட்சி. அவரின் வீரத்தின் விளைநிலமாக விளங்கிய செயல்பாடுகள் அனைத்தையும் பன்முக கோணங்களில் வெளிப்படுத்தி உள்ளார். ஒன்பது ரூபாய் நோட்டு என்னும் புதினம் தங்கர் மச்சான் எழுதிய முதல் புதினமாக இருந்தாலும் வாசகர்கள் அதனைப் படிக்கின்ற பொழுது, பலமுறை எழுதி ஆழங்கால் பட்டவர்களின் எழுத்து ஆட்கள் போல, வெளிப்பட்டு இருப்பதை காணலாம். குறிப்பாக மரக்கன்று நடுதல், ஆட்டு தோல் விற்பனை செய்தல், வழிபாடுகள், இறுதிச் சடங்குகள், தொழில் பற்றிய செய்திகள் மற்றும் சிறப்புகள், நியாயமாக வாழ்பவர், நீதிமொழி நடப்பவர் அடையும் துன்பங்களை பற்றி, வெளிப்படையாக பேசியிருப்பதை அறிய முடிகிறது. மா, பலா, முந்திரி ஆகிய வியாபாரம் உத்திகள் பற்றியும் பெண் பாத்திரமான வேலாயி, தமிழா ஆகியோருடைய அன்பை வெளிக்காட்டும் ஆசிரியரின் தாய்மை நிலை – தங்கு தடை இன்றி வெளிப்பட்டு இருப்பதை அறியலாம். ரங்கசாமி திருவிழாவில் கூத்துக்கட்டுவராக வெளிப்படுவதையும்; முருகர் வழிபாட்டு முறையை ஆங்காங்கே விட்டுச் செல்வதும்; இளைஞனான சிகாமணி மரக்கன்று நடுவதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும்; மாந்தோப்பில் ஒருவரை இறந்து கிடந்த போது அடைகின்ற அதிர்ச்சியும் ஒரு சேர எடுத்துரைப்பது, அவரது நாவலுக்கான பயிற்சியை அதில் வெளிப்படும் முதிர்ச்சியைபடிக்கும் வாசகர்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது அறியலாகிறது.
அம்மாவின் கைப்பேசி – 2009
அம்மாவின் கைபேசி” என்பது இயக்குனர் தங்கர் பச்சான் எழுதிய, இரண்டாவது நாவல் மற்றும் திரைப்படமாகும். நாவல் – ஒரு தாய்க்கும் மகனுக்கும் இடையேயான பாசத்தையும், மொபைல் ஃபோன் வந்த பிறகு ஏற்படும் மாற்றங்களையும் சித்தரிக்கிறது. இந்த கதையில், அம்மா மற்றும் மகன் ஆகியோரிடையே உள்ள உறவு, மொபைல் ஃபோன் வந்த பிறகு எவ்வாறு மாறுகிறது என்பதைப் பற்றி விவரிக்கிறது. கிராமத்தில் வசிக்கும் அம்மா, நகரத்தில் இருக்கும் தனது மகனுடன் பேசுவதற்காக மொபைல் ஃபோன் வாங்குகிறார். நகர வாழ்க்கைக்குப் பழகிய மகன், அம்மாவுடன் பேசுவதற்கு முன்பு மொபைல் ஃபோன் மூலம் நண்பர்களுடன் பேசுவதையே விரும்புகிறான். இதனால், அம்மா வருத்தப்படுகிறார், கதையில் பல உணர்ச்சிகரமான தருணங்கள் உள்ளன.
கட்டுரை – 2015
தி இந்து’ தமிழ் நாளிதழில் தொடராக வெளியாகி, ஒவ்வொரு வாரமும் பரபரப்பையும் எதிர்பார்பையும் சமுதாயத்தில் ஏற்படுத்தி, ஒருமித்த வரவேற்பைப் பெற்ற அரசியல், சமூகக் கட்டுரைகளின் நூல் சொல்லத்தோணுது. இந்நூல் பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கிய 50 கட்டுரைகளை கொண்டது. சமகால விளிம்பு நிலை மக்களை அதிகாரவர்கம் எவ்வாறு அடக்குமுறைக்கு ஆட்படுத்துகிறது என்பதை, மிக நேர்தியாகப் பதிவுச்செய்துள்ளது இக்கட்டுரை. “சிறந்த ஒளிப்பதிவாளர், திரை இயக்குநர் மற்றும் இலக்கியவாதியான தங்கர் பச்சான் ஒரு பன்முகக் கலைஞர். அவரைப் பிடிக்காதவர்கள் இருக்கலாம். அவரது படங்களை ரசிக்காதவர்கள்கூட இருக்கலாம். ஆனாலும் இப்புத்தகத்தில் எழுப்பியுள்ள கருத்துகளை எவராலும் புறக்கணிக்க முடியாது.”– கே.சந்துரு, முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி “இந்நூலைப் படிக்கின்ற அறிவுள்ள தமிழர்கள் சிந்திப்பார்கள். உணர்ச்சியுள்ள தமிழர்கள் செயல்படுவார்கள். இவையொன்றுமே இல்லாமல் வீழ்ந்து கிடக்கும் தமிழர்கள் இந்த நூலில் கொட்டிக்கிடக்கும் உண்மை உணர்வின் உச்சத்தைக் கண்டு குறைந்தபட்சம் வியந்து நிற்பார்கள். இன்றைய தேவை தமிழர்களுக்கு வியப்பு அல்ல. விழிப்புதான். இந்த நூல் அந்த விழிப்புக்கு வித்திடும்.”(உ. சகாயம், இந்திய ஆட்சிப்பணி அதிகாரி)
திரையுலகம்
தமிழ் திரையுலகில் பாலுமகேந்திராவிற்கு பிறகு, சமகால ஒளிப்பதிவாளர்களில் தமது வித்தியாசமான ஒளிக் கோணங்களின் மூலம் மனிதர்களின் ஏமாற்றம், வலி, வேதனை கோபம், குரூரம் போன்ற உள்ளார்ந்த உணர்வை தத்துருபமாக படம்பிடித்து, குறிப்பிட்டத்தக்க இடத்தைப் பிடித்தவர் தங்கர் பச்சான் என்றால் மிகையாகாது. திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். ஒளிப்பதிவின் மூலம் தனித்துவமான படைப்புகளை உருவாக்கி தங்கர் பச்சான் ஒளிப்பதிவு செய்த படங்கள்,
மழைச்சாரல் – 1990
தர்மசீலன் – 1991
கருவேலம் பூக்கள் – 1997
காதலே நிம்மதி – 1998
மறுமலர்ச்சி – 1998
கண்ணெதிரே தோன்றினாள்- 1999
கனவே கலையாதே – 1999
கள்ளழகர் – 1999
உன்னுடன் – 1999
பாரதி – 2000
இயக்குநர்
தங்கர் பச்சான் இயக்கத்தில் 2002 ல் வெளியான ‘அழகி’ அவரது முதல் திரைப்படமாகும். பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி நடித்த இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். 2007 ல் இவர் இயக்கிய சிறந்த படங்களில் ஒன்றான ‘பள்ளிக்கூடம்’ படத்தில் நரேன், சினேகா, ஷ்ரேயா ரெட்டி, சீமான் மற்றும் தங்கர் பச்சானும் நடித்திருந்தார். பரத்வாஜ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். சத்யராஜ், அர்ச்சனா, நாசர் மற்றும் ரோகிணி ஆகியோர் இணைந்து நடிக்க தங்கர் பச்சான் இயக்கத்தில் 2007ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம், ஒன்பது ரூபாய் நோட்டு. இத்திரைப்படம் ஒன்பது ரூபாய் நோட்டு என்ற நூலின் திரைவடிவம் ஆகும். இப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்திருந்தார். 2012 ல் இவர் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நாயகனாக நடித்த ‘அம்மாவின் கைபேசி’ திரைப்படத்தில் இனியா, ரேவதி, அழகம் பெருமாள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ரோஹித் குல்கர்னி இசையமைத்துள்ளார். சொல்ல மறந்த கதை 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சேரன் நடித்த இப்படத்தை தங்கர் பச்சான் இயக்கினார். இப்படத்தின் கதை நாஞ்சில் நாடன் எழுதிய தலைகீழ் விகிதங்கள் என்ற புதினத்தின் திரை வடிவமாகும். தனது படைப்புகளில் மனதிற்குள் பதியும் மனித உணர்வுகளையும், கிராமியவாழ்க்கை அழகாக சொல்லும் தங்கர் பச்சான், தமிழ் சினிமாவில் ஒரு தனித்த அடையாளம் பதித்துள்ளார். அவரது திரைப்படங்கள் இன்று வரை ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கின்றன. அவை வருமாறு,
இயக்கிய திரைப்படங்கள்
அழகி – 2002
சொல்ல மறந்த கதை – 2002
தென்றல் – 2004
சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி 2005
பள்ளிக்கூடம் – 2007
ஒன்பது ரூபாய் நோட்டு – 2007
அம்மாவின் கைபேசி – 2013
களவாடிய பொழுதுகள் – 2017
கருமேகங்கள் கலைகின்றன – 2022
விருதுகள்
1993 சிறந்த சிறுகதை தொகுப்பு லில்லி தெய்வசிகாமணி நினைவு விருது -வெள்ளை மாடு
1993: சிறந்த சிறுகதை தொகுப்பு திருப்பூர் தமிழ் சங்கம் – வெள்ளை மாடு
1996 : சிறந்த நாவல் தமிழ்நாடு விருது – ஒன்பது ரூபாய் நோட்டு
1996 : சிறந்த நாவல் அக்னி சிறைசா விருது – ஒன்பது ரூபாய் நோட்டு
1996 : சிறந்த நாவல் திருப்பூர் தமிழ்ச்சங்கம் – ஒன்பது ரூபாய் நோட்டு
1997 : சிறந்த ஒளிப்பதிவாளர் விருது தமிழ்நாடு மாநில திரைப்பட விருது - காலமெல்லாம் காதல் வாழ்க
1998: கலைமாமணி விருது தமிழ்நாடு அரசு 2002: சிறந்த இயக்கநர் திரைப்படம் அழகி
2005: சிறந்த நடிகர் ஜெயா தொலைக்காட்சி விருது – சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி
2007 : திரைப்பட இயக்குனர் பங்களிப்பிற்காக தமிழ்நாடு மாநில விருது
முடிவுரை
தங்கர் பச்சானின் படைப்புலகம் மொழி மற்றும் ஒளி என இரண்டு பரந்துப்பட்ட தளங்களில் இயங்குகின்றன. குறிப்பாக சிறுகதை மற்றும் நாவல்களில் நடுநாடு என குறிப்பிடப்படும் கடலூர் மாவட்டத்தின் வாழ்வாதாரமாக விளங்கும் முந்திரி மற்றும் பலாகடுகளும் அதனைச் சார்ந்த மக்களின் மேன்மை மற்றும் சிறுமையை ஒருசேர பதிவு செய்வதோடு விவசாயத்தின் வீழ்ச்சி வேலைக்குப் போகும் இடை நிலை மக்கள் எவ்வாறு நவீன மயமாக்களில் மாற்றப் படுகிறார்கள் என்பதோடு அம்மக்களின் கோபம், வீரம், ஏமாற்றம், வலி, குரூரம் போன்ற சமூக நடப்புகளை தமது எழுத்துக்களின் மூலம் படிப்பவர்களின் கண்முன் கட்டுகிறார். சொல்லத் தோணுது கட்டுரைத் தொகுப்பில் சமகால விளிம்பு நிலை மக்களை அதிகாரவர்கம் எவ்வாறு அடக்குமுறைக்கு ஆட்படுத்தப்படுகிறது என்பதோடு இவற்றையெல்லாம் திரைமொழியிலும் மிக நுட்பமாகப் படைத்துவரும் தங்கர் பச்சானின் படைப்பு உலகத்தைத் தொகுப்பதளிப்பதே இக்கட்டுரையின் நோக்கம் அமைந்துள்ளது.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
செ.பிரபு,
முனைவர் பட்ட ஆய்வாளர் ,
கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி,
திருவண்ணாமலை.




ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்


