வல்லினம் மிகும் இடங்கள்| ஒற்று மிகும் இடங்கள்

வல்லினம் மிகும் இடங்கள்
           தமிழ் மொழியில் எழுதும்போது எழுத்துப்பிழைகள் இல்லாமல் எழுதுவதே மிக நன்று. பிழைகளோடு எழுதினால் நாம் சொல்ல வந்த கருத்துக்கு மாறாகவும் வேறொரு செய்தியாகவும் மாறக்கூடும். அதனால் சரியான வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதுதல் வேண்டும்.
           
      இவற்றில் முதலாவதாகச் சந்திப்பிழைகளைப் பார்க்கலாம். தேவையான இடத்தில் மட்டுமே ஒற்றுகளைப் பயன்படுத்த வேண்டும். அதற்கு ஒருசில விதிமுறைகளும் உண்டு.  அவற்றை மட்டும் பார்த்தால் இச்சந்திப்பிழைகளைத் தவிர்க்கலாம்.
 
           இதற்கு நாம் இரண்டு இடங்களை மட்டும் உற்று நோக்கினால் போதுமானது.

1.நிலைமொழி மற்றும் நிலைமொழியின் ஈற்றெழுத்து

2.வரும்மொழியின் முதலெழுத்து க,ச,த,ப – ஆக இருக்க வேண்டும்.

       ( க்,ச்,ட்,த்,ப்,ற் என்ற 6 வல்லின எழுத்துகளில் க,ச,த,ப என்ற 4 எழுத்துகளும் வரும்மொழியில் முதலாவதாக வந்தால் மட்டுமே அவ்விடத்தில் ஒற்று மிகும் என்பது விதி. அதனால்தான் இதற்கு வல்லினம் மிகும் எழுத்துகள் என்கிறோம். அந்த 4 எழுத்துகளின் ஒற்று க்,ச்,த்,ப் என்று வரும்)

இராமனை + கண்டேன் = இராமனைக் கண்டேன் (க் – என ஒற்று மிகுந்தது)

இங்கு,

இராமனை என்பது நிலைமொழி (நிலையாக நிற்கும் சொல்)

கண்டேன் என்பது வரும்மொழி (நிலைமொழியோடு சேர வரும் சொல்)

       இராமன் + ஐ என்பதில், நிலைமொழி ஈற்றெழுத்து இரண்டாம் வேற்றுமை உருபு    ன் +ஐ = னை என்று வருகிறது.  வரும்மொழியின் முதலில் ”க” என்று வல்லினம் வருவதால் இவ்விடத்தில்  ”க்”  என்ற ஒற்று வரும்.

     கீழ்க்கண்ட அனைத்து விதிகளும் நிலைமொழிக்கு மட்டுமே பொருந்தும்.  வரும்மொழியில் முதலெழுத்து – க,ச,த,ப என இருக்கிறதா என்பதை மட்டும் பார்த்தால் போதும்.  வல்லினம் மிகும் இடங்கள், ஒற்று மிகும் இடங்கள் என்றும் அழைப்பர்.

1.நிலைமொழி ஈற்றில் உயிரெழுத்து நிற்க, வருமொழி முதலில் வரும் வல்லினம் மிகுந்து ஒலிக்கும். (உயிரீற்றுச் சொற்களின் பின் வல்லினம் மிகும்)
 
நிலா + சோறு = நிலாச்சோறு

மழை + காலம் = மழைக்காலம்

பனி + துளி =பனித்துளி


 

2.அ, இ, உ என்னும் சுட்டெழுத்துகளின் பின்னும் ‘எ’ என்னும் வினா எழுத்திற்குப் பின்னும் வலி மிகும்.

அ+ குடம்  = அக்குடம்

இ+ புத்தகம்  =இப்புத்தகம்

உ +  சிறுவன் =உச்சிறுவன்

எ + தொழில் =எத்தொழில்


 

3.அந்த, இந்த, எந்த என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகும்.

அந்த + கிணறு = அந்தக்கிணறு  

இந்த + தோட்டம் = இந்தத்தோட்டம்

எந்த + செயல் = எந்தச்செயல்


 

4.அப்படி, இப்படி எப்படி என்னும் சொற்களின் பில் வல்லினம் மிகும்.

அப்படி + கூறினான் = அப்படிக்கூறினான்

இப்படி + சொன்னான் = இப்படிச்சொன்னான்

எப்படி + தந்தான் = எப்படித் தந்தான்


 

5.அங்கு, இங்கு, எங்கு என்னும் சொற்களின் பில் வல்லினம் மிகும்.

அங்கு +சென்றான் =அங்குச்சென்றான்

இங்கு +போனான்  = இங்குப்போனான் 

எங்கு + தேடினான் = எங்குத்தேடினான்


 

6.ஆறாம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகும்.

தாமரை+ பூ = தாமரைப்பூ (தாமரையின் பூ)

குதிரை +கால் = குதிரைக்கால் (குதிரையினது கால்)

 

7. ஏழாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும்

குடி +பிறந்தார் =  குடிப்பிறந்தார் (குடியின்கண் பிறந்தார்)

வழி +சென்றார் = வழிச்சென்றார் (வழியின்கண் சென்றார்)


 

8.இரண்டாம் வேற்றுமை உருபிற்குப்பின் வல்லினம் மிகும்.

கடையை + கண்டேன் = கடையைக் கண்டேன்

பொருளை + தேடு = பொருளைத் தேடு

புலியை + கொன்றான் = புலியைக் கொன்றான்

நூலை + படி = நூலைப் படி


 

9.நான்காம் வேற்றுமை உருபிற்குப்பின் வல்லினம் மிகும்

பள்ளிக்கு + சென்றான் = பள்ளிக்குச்சென்றான்

கடைக்கு + போனான் = கடைக்குப்போனான்

 

10.வன்றொடர்க் குற்றுயலுகரத்தின் பின் வல்லினம் மிகும்

பாக்கு + தூள்  = பாக்குத தூள்

தச்சு  + தொழில் = தச்சுத்தொழில்

கேட்டு + சொல் = கேட்டுச்சொல்

எட்டு + தொகை = எட்டுத்தொகை

பத்து + பாட்டு = பத்துப்பாட்டு


 

11. மென்றொடர்க் குற்றியலுகரத்தின் பின் சில இடங்களில் வல்லினம் மிகும்.

மருந்து + கடை =  மருந்துக்கடை

பண்பு + தொகை = பண்புத்தொகை

கன்று + குட்டி  = கன்றுக்குட்டி


 

12.இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம்  மிகும்

சாரை + பாம்பு = சாரைப் பாம்பு

மார்கழி + திங்கள் = மார்கழித் திங்கள்

மல்லி + பூ. =மல்லிப்பூ


 

13.பண்புத்தொகையில் வல்லினம் மிகும்.

சதுரம் + பலகை = சதுரப்பலகை

வட்டம் + பாறை = வட்டப்பாறை

பச்சை + பட்டு = பச்சைப்பட்டு

நீல + கடல் = நீலக்கடல்


 

14.அகர ஈற்று வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகும்

தேட + சொன்னான் = தேடச்சொன்னான்

என + கூறு = எனக்கூறு

நன்றாக + படிப்பான் = நன்றாகப் படிப்பான்

பாட +தெரியுமா?  = பாடத்தெரியுமா?


 

15.ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வல்லினம் மிகும்

பூ + பறித்தான் = பூப்பறித்தான்

கை + காசு = கைக்காசு

தை + திங்கள் = தைத்திங்கள்


 

16.ஆய், போய் என்னும் வினையெச்சங்களின் பின் வல்லினம் மிகும்.

நன்றாய் + பேசினார் = நன்றாய்ப் பேசினார்

போய் + தேடு = போய்த்தேடு


 

17.இனி, தனி என்னும் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும்.

இனி + காணலாம் = இனிக் காணலாம்

தனி + தமிழ்  = தனித்தமிழ்


 

18.என, ஆக என்னும் சொற்களுக்குப்பின் வரும் வல்லினம்

என + கூறினான் = எனக்கூறினான்

ஆக + சொன்னான் = ஆகச்சொன்னான்

 

19. சால, தவ என்னும் உரிச்சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும்.

சால +  சிறந்தது = சாலச்சிறந்தது

தவ + பெரிது = தவப்பெரிது

 


20.ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வரும் வல்லினம் மிகும்.

உண்ணா + சோறு = உண்ணாச்சோறு

ஓடா + குதிரை = ஓடாக்குதிரை

அழியா + புகழ் = அழியாப்புகழ்


 

21.தனிக்குறிலையடுத்து வரும் ஆ என்னும் நெடிலுக்குப் பின்வரும் வல்லினம் மிகும்.

பலா சுளை  = பலாச்சுளை

இரா+ பகல் =  இராப்பகல்

கனா + காலம்  = கனாக்காலம்


 

22. இனி, தனி, மற்று, மற்ற, மற்றை எனும் சொற்களின் பின் வல்லினம் மிகும்.

இனி + போகலாம் = இனிப்போகலாம்

தனி + காடு = தனிக்காடு

மற்று + கண்டவை = மற்றுக்கண்டவை

மற்ற+பொருட்கள் = மற்றப்பொருட்கள்

மற்றை + கூறுகள் = மற்றைக்கூறுகள்


 

23.முற்றியலுகரச் சொற்களின் பின் வல்லினம் மிகும்.
 
திரு + குறள் = திருக்குறள்

பொது + சொத்து = பொதுச் சொத்து


 

24.இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகையில் வல்லினம்மிகும்.

தண்ணீர்+ குடம் = தண்ணீர்க்குடம்

மலர் + கூடை = மலர்க்கூடை


 

25. மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்.

மரம் + பெட்டி = மரப்பெட்டி

இரும்பு + சாவி = இரும்புச்சாவி

 

26.நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்.

சட்டை + துணி = சட்டைத்துணி

குடை + கம்பி = குடைக்கம்பி


 

27.ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்.

அடுப்பு + புகை =அடுப்புப்புகை

விழி + புனல் = விழிப்புனல்


 

28.உவமைத்தொகையில் வல்லினம் மிகும்

பவளம் + செவ்வாய் = பவளச் செவ்வாய்

மலர் + கண் = மலர்க்கண்

 

29.நெடில் தொடர் குற்றியலுகரத்திற்குப் பின் வல்லினம் மிகும்.

நாடு + பற்று = நாட்டுப் பற்று

வயிறு +போக்கு = வயிற்றுப்போக்கு

முரடு + காளை = முரட்டுக்காளை

காடு + தேன்   = காட்டுத்தேன்.


 

30. ய்,ர்,ழ் என வரும்போது ஒற்று இரட்டிக்கும்

வாய்ப்பு, வார்ப்பு, வாழ்க்கை

 

 

Leave a Reply