“சங்க இலக்கியமும் தொல்லியலும்”
தொல்லியலை “ஆர்க்கியாலஜி” என்று ஆங்கிலத்தில் கூறுவர். அதன் பொருள் “ஆதிகாலத்தைப் பற்றிய அறிவியல்” என்பதாகும். பண்டைக்கால மக்கள் விட்டுச் சென்ற பொருட்களை மேற்பரப்பிலோ அல்லது பூமியை அகழ்ந்தோ எடுத்து அவற்றின் மூலம் அவர்கள் வாழ்ந்த வரலாற்றை உய்த்தறிந்து கூறுவதே தொல்லியல் ஆகும்.
தொல்லியல் என்பது அகழ்வராய்ச்சியை மட்டும் குறிப்பது அல்ல. பழங்காலக் கல்வெட்டு, செப்பேடு, நாணயம், முத்திரை, மோதிரம் முதலிய அணிகலன்கள், ஓலைப் பட்டயம் போன்ற பல பொருட்களைக் குறிக்கும். இப்பரந்த தொல்லியல் சான்றுகளில் பல சங்ககாலக் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இத்தொல்பொருள்களின் காலத்தை அறிவியல் முறைப்படி கண்டுபிடிக்க இக்காலத்தில் வாய்ப்பு உள்ளதால் சங்கத்தின் இருப்பு, காலம், அவை கூறும் செய்திகளின் உண்மைத் தன்மை இவைகள் உறுதிப்படுகின்றன.
சங்கம்
மதுரையில் தமிழ்ச் சங்கம் இருந்ததை இலக்கியம் வழி அறிகிறோம். மதுரை “தமிழ்க்கூடல்” “தமிழ்கெழு கூடல்” “கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழ்” என்ற தொடர்களால் தமிழோடு இணைத்துக் கூறப்படுகிறது. ஒரு சமயம் மாங்குடி மருதன் சங்கத்தலைவராக இருந்ததாக ஒரு சங்கப்பாடல் கூறுகிறது. முற்காலப் பாண்டியர் செப்பேடுகளில் சங்கம் பற்றிய குறிப்புகள் பல காணப்படுகின்றன. பராந்தகன் வீரநாராயணனின் தளவாய்புரச் செப்பேட்டில்,
“தென்மதுரா புரம்செய்தும் அங்கதனில்
அருந்தமிழ்ச் சங்கம் இரீஇத் தமிழ் வளர்த்தும்”
என்ற தொடர் உள்ளது. (97-98)
இராசசிம்ம பாண்டியனின் சின்னமனூர்ப் பெரிய செப்பேட்டில்,
“மதுராபுரிச் சங்கம் வைத்தும்
மாபாரதம் தமிழ்ப் படுத்தும்”
என்று கூறப்படுகிறது (102-103). அதே செப்பேட்டில் தமிழோடு வடமொழிப் பிரிவும் சங்கத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
“வளமதுரை நகர்கண்டும் மற்றதற்கு மதில்வகுத்தும்
உளமிக்க மதியதனால் ஒண்டமிழும் வடமொழியும்
பழுதறத்தான் ஆராய்ந்து”
என்பது அப்பகுதியாகும் (93-93).
அகத்தியர்
தொல்காப்பியருக்கு முன்னர் அகத்தியர் வாழ்ந்து “அகத்தியம்” என்ற இலக்கண நூல் செய்தார் என்பது எல்லோரும் ஏற்றுக்கொண்ட செய்தி. அகத்தியரின் பன்னிரு மாணாக்கருள் தொல்காப்பியரும் ஒருவர் என்பர்.
பாண்டியரின் பழமையான செப்பேடுகளில் பாண்டியருக்கும் அகத்தியருக்கும் உள்ள தொடர்பு கூறப்படுகிறது.
“அகத்தியனொடு தமிழ் தெரிஞ்சும்” (சிவகாசி செப்பேடு 48)
“அகத்தியனொடு தமிழ் ஆய்ந்தும்” (தளவாய்புரச் செப்பேடு 88)
“தென் வரைமிசைக் கும்போத்பவனது
தீந்தமிழால் செவி கழுவியும்” (சின்னமனூர்ப் பெரிய செப்பேடு 81-82)
என்பன அப்பகுதிகள் ஆகும்.
சேரர்
கரூர் மாவட்டம், புகலூர் வேலாயுதம்பாளையத்தில் ஆறுநாட்டார் மலையில் உள்ள பழந்தமிழ்க் கல்வெட்டில் பதிற்றுப்பத்து 7,8,9 ஆம் பத்துக்கு உரிய சேர மன்னர்கள் அதே வரிசையில் கூறப்பட்டுள்ளனர். செல்வக் கடுங்கோ வாழியாதனின் பேரனும், பெருங்கடுங்கோ மகனுமான இளங்கடுங்கோ இளவரசனாக ஆனபோது யாற்றூர்ச் செங்காயபன் என்ற மூத்த சமணத் துறவிக்குக் கல்படுக்கை அமைத்துக் கொடுத்ததை அக்கல்வெட்டுக் கூறுகிறது.
“மூத்த அமண்ணன் யாற்றூர் செங்காயபன் உறைப்
கோ ஆதன் செல்லிருப்பொறை மகன்
பெருங்கடுங்கோன் மகன் இளங்
கடுங்கோ இளங்கோ ஆக அறுத்த கல்”
என்பது அக்கல்வெட்டாகும். சேரமான் கோதைக்குப் படைத் துணைவன் பிட்டங்கொற்றன். அவன் பெயரும் அவன் மகள் கொற்றியின் பெயரும் ஆறுநாட்டார் மலைக் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், நீலம்பூர் வனப்பகுதியில் சேரபுழா என்னும் ஆற்றங்கரையில் உள்ள பாறையில் பழந்தமிழ் எழுத்தில் “கடும்மி புத சேர” என்ற தொடர் வெட்டப்பட்டுள்ளது. ஆய்வாளர்கள் இத்தொடருக்குக் “கடுமான் சேரல்” என்று பொருள் கொள்கின்றனர். சித்தோடு அருகேயுள்ள கருமலைக் கல்வெட்டில் “குட்டுவன்செய்” என்ற பெயர் பழந்தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது. சேரர் மரபில் “சேய்” என்று குறிக்கப்படுபவன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் என்பவனே. இது அம்மன்னனைக் குறிக்கலாம்.
சேரரின் உருவமும் பழந்தமிழ்ப் பெயரும் பொறிக்கப்பட்ட “மாக்கோதை” “மாக்கோக்கோதை” “குட்டுவன்கோதை” “கொல்லிப் பொறை” “கொல்லிரும் பொறை” காசுகள் கிடைத்துள்ளன. ஆதன், அந்துவன் என்பன சேரர்க்கு உரிய பெயர்கள், (சேரலாதன், ஆதன், அழிசி, அந்துவன் சேரல்) அழகர்மலை, குன்னக்குடி, புகலூர், எடக்கல் போன்ற பல இடங்களில் இப்பெயர்கள் காணப்படுகின்றன.
யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை கரூரில் ஆட்சிபுரிந்த கொங்குச் சேரரில் ஒருவன். அம்மன்னன் பற்றிய ஒரு ஆவணம் “மாந்தரஞ்சேரல் பதிகம்” என்ற பெயரில் கிடைத்துள்ளது. மாந்தை எனத் தன் பெயரில் ஒரு நகர் உண்டாக்கி அங்கு ஐயன் என்னும் சாத்தன் கோயில் எடுத்தான் என்று கூறுகிறது.
“உதியனது நன்மரபில் பதிஎனவே வந்தமர்ந்த
ஆய்ந்துணர்வு கொளும்புனித மாந்தரஞ் சேரல்மன்னன்
மாந்தையெனத் தன்நாமம் மருவஒரு நகர்அமைத்து
பாந்தமுடன் ஐயன் என்னும் பகர்சாத்தன் தளிஎடுத்து”
என்பது மெய்க்கீர்த்திப் பகுதி. திருப்பூர் மாவட்டத்தில் வள்ளிஎறிச்சல் கிராமத்தில் “மாந்தபுரம்” என்னும் ஊர் இன்றும் உள்ளது. அங்குள்ள சிவாலயம் மாந்தீசுவரம். அங்குள்ள கோயில் “நாட்டராயன் – நாச்சிமுத்து ஐயன் கோயிலே” மாந்தரஞ்சேரல் எடுத்த சாத்தன் கோயிலாகும். சிவாலய அமைப்பின்றி உள்ள சிறு கோயில் ஒன்று மாந்தீசுவரர் கோயில் என்ற பெயரில் அவ்வூரில் உள்ளது. அது மாந்தரஞ்சேரலின் பள்ளிப்படைக் கோயிலாக இருக்கலாம்.
செப்பேட்டில் வஞ்சி
கரூருக்கு “வஞ்சி” என்ற பெயர் உண்டு. அதனால் சிலர் சேர மரபின் அனைவர்க்கும் கரூர் வஞ்சியே தலைநகர் என்று கூறுவர். சேரர் வஞ்சி பெரியாற்று முகத்துவாரத்தில் கடல் ஒலி கேட்கும் இடத்தில் உள்ளது என்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. கொங்கு நாட்டை வென்று கரூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த சேரர்கள் கரூர் முதலிய சில ஊர்கட்கு வஞ்சி என்று பெயர் வைத்துள்ள விபரம் திருப்பூர் அருகே கிடைத்த அனுப்பப்பட்டிச் செப்பேடு மூலம் தெரிகிறது.
“கொங்கு மலைநாடும் குளிர்ந்தநதி பன்னிரண்டும்
சங்கரனார் தெய்வத் தலம்ஏழும் – பங்கயஞ்சேர்
வஞ்சிநகர் நாலும் வளமையால் ஆண்டருளும்
கஞ்சமலர்க் கையுடையோன் காண்”.
என்பது அப்பாடலாரும். “நாலு வஞ்சியும் சேரப்படைத்த” என்பது ஒரு செப்பேட்டுத் தொடர். கரூர் அருகில் “முசிறி” என்ற சேரர் துறைமுக நகர்ப் பெயருடன் ஓர் ஊர் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு தனிப்பாடல் மூலம் சேலம், தாராபுரம், கரூர், மூலனூர் என்ற நான்கு ஊர்களும் “வஞ்சி” எனப் பெயர் பெற்றிருந்தது தெரிகிறது.
“மாந்தரர்க்கும் மற்றுவரு மன்னவர்க்கும் கொங்குவஞ்சி
ஏந்துபுகழ் சேர்தலைமை ஏய்ந்தபதி – சார்ந்திலகு
சேலமொடு தாரா புரியும் திகழ்கருவூர்
மூலனூர் ஆக மொழி”
என்பது அப்பாடலாகும். தாராபுரம் “பெருவஞ்சி” எனப்பட்டது. இவ்வூர்களில் வஞ்சியம்மன் கோயில்கள் இருப்பது சிறப்புச் செய்தியாகும்.
சோழர்
தேரிருவேலியில் அகழாய்வில் கிடைத்த பானையொன்றில் “நலங்கிள்(ளி) என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. பரணர் பாடிய அகநானூற்றுப் பாடல் ஒன்றில்
“கடும்பகட்டு யானைச் சோழர் மருகன்
நெடுங்கதிர் நெல்லின் வல்லம்கிழவோன் நல்லடி”
என்பான் குறிக்கப்படுகின்றான். சோழரின் அன்பில் செப்பேட்டில் கோச்செங்கட்சோழன் மகன் நல்லடி என்று குறிக்கப்பட்டுள்ளார். உறந்தைத் தலைவன் “தித்தன்” என்பவனை அகமும், புறமும் பாராட்டுகிறது. “தித்தன்” பெயர் பொறித்த மோதிரம் கரூரில் கிடைத்துள்ளது.
பாண்டியர்
நெட்டிமையார் என்ற சங்கப் புலவர் கடல் தெய்வத்திற்கு விழா எடுத்த பாண்டியன் பற்றிக் குறிப்பிடுகிறார். “முந்நீர் விழாவின் நெடியோன்” எனப்படும் அப்பாண்டிய மன்னன் “வடிம்பலம்ப நின்ற பாண்டியன்” என்றும் அழைக்கப்படுவான்.
அம்மன்னன் பற்றி நெடுஞ்சடையன் பராந்தகனின் வேள்விக்குடிச் செப்பேட்டில்,
“மிக்கெழுந்த கடல்திரைகள்
சென்றுதன் சேவடி பணிய
அன்று நின்ற ஒருவன்”
என்றும், பராந்தக பாண்டியன் கல்வெட்டில் மெய்க்கீர்த்திப் பகுதியில்,
“மன்னர்பிரான் வழுதியர்கோன்
வடிம்பலம்ப நின்றருளி
மாக்கடலை எறிந்தருளி”
என்று குறிப்புகள் வருகின்றன. பாண்டியன் நெடுஞ்செழியன் இளம் வயதில் முடிசூடினான். அவனை வெல்ல சேரன், சோழன் ஆகிய அரசர்களும், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் ஆகிய சிற்றரசர்களுமாக எழுபேர் இணைந்து போரிட்டனர். நெடுஞ்செழியன் ஆலம்கானம் என்ற இடத்தில் ஒரே பகலில் எழுவரையும் வென்று “தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்” என்று பெயர் பெற்றான். இதனை நக்கீரர்,
“கொய்சுவல் புரவிக் கொடித்தேர்ச் செழியன்
ஆலங்கானத்து அகன்தலை சிவப்பச்
சேரல் செம்பியன் சினம்கெழு திதியன்
போர்வல் யானைப் பொலம்பூண் எழினி
நார்அரி நறவின் எருமை யூரன்
தேங்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்
இருங்கோ வேண்மான் இயல்தேர்ப் பொருநன்என்று
எழுவர் நல்வலம் அடங்க ஒருபகல்
முரைசொடு வெண்குடை அகப்படுத்து”
என்று பாடியுள்ளார் (அகம் 36).
இச்செய்தி இராசசிம்ம பாண்டியனின் சின்னமனூர்ப் பெரிய செப்பேட்டில்,
“தலையாலங் கானத்துத் தன்னொக்கும் இருவேந்தரை
கொலைவாளின் தலைதுமித்தும் குரைத்தலையின் கூத்தொழித்தும்”
என்று கூறப்பட்டுள்ளது. பாண்டியன் பராந்தக வீரநாராயணனின் தளவாய்புரச் செப்பேட்டிலும் “ஆலங் கானத்து அமர்வென்றம்” என்று கூறப்பட்டுள்ளது. மாங்குளம் பழந்தமிழ்க் கல்வெட்டில் கணியநந்தாசிரியன் என்ற சமணத்துறவிக்கு கடலன், வழுதி என்று பெயர் பெற்ற நெடுஞ்செழியன் காலத்தில் கல் படுக்கை அமைத்துக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அந்நெடுஞ்செழியன் மேற்கண்ட தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனா அல்லது ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனா என்பது தெரியவில்லை. “பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி” பல சங்கப் பாடல்களில் குறிக்கப்பட்ட பாண்டிய மன்னன். நெடுஞ்சடையன் பராந்தகனின் வேள்விக்குடிச் செப்பேட்டில்,
“கொல்யானை பலஓட்டிக் கூடாமன்னர் குழாம்தவிர்த்த
பல்யாக முதுகுடுமிப் பெருவழுதியெனும் பாண்டியாதிராசன்”
என்று அம்மன்னன் குறிக்கப்படுகிறான்.
“பெருவழுதி” “வழுதிபெருவழுதி” என்று பழந்தமிழில் பெயர் பொறிக்கப்பட்ட நாணயங்கள் கிடைத்துள்ளன. இவை இம்மன்னன் வெளியிட்ட நாணயமாக இருக்கலாம். மாங்குடி மருதனாரால் பாண்டியன் நெடுஞ்செழியன் மீது பாடப்பட்ட இலக்கியம் “மதுரைக் காஞ்சி”. பத்துப்பாட்டில் ஆறாவது இலக்கியம். அந்நூலின் தொடக்கமாக அமைந்தது “ஓங்குதிரை வியன்பரப்பில்” என்ற தொடராகும். பராந்தக வீரநாராயணனின் தளவாய்புரச் செப்பேடு “ஒங்குதிரை வியன்பரப்பில்” என்றே தொடங்குகிறது.
மீன் சின்னம்
பாண்டியர்க்குரியது மீன் சின்னம். சில எழுத்தாளர்கள் பாண்டியர் காலம் முடிந்து பல நூற்றாண்டுகள் கழித்து மிகப் பிற்காலத்தில் எடுக்கப்பட்ட கோயிலில் ஒற்றை மீன் சின்னத்தைப் பார்த்தவுடன் இது “பாண்டியர்காலக் கோயில்” என எழுதியுள்ளதைப் பல நூல்களிலும், கட்டுரைகளிலும் காண்கிறோம். இரட்டை மீன்களுடன் நடுவே செண்டு உள்ள மீன் சின்னம் தான் பாண்டியர் சின்னம் ஆகும்.
“வானார்ந்த பொற்கிரிமேல்
வரிக்கயல்கள் விளையாட” என்பது பாண்டியர் மெய்க்கீர்த்திப் பகுதி.
சோழநாட்டை வென்ற பாண்டியர்கள் தம்மோடு தங்கள் நாட்டுச் சிற்பிகளையும் அழைத்துக் கொண்டு சென்று பல இடங்களில் பாறைகளில் தங்கள் மீன் சின்னத்தைப் பொறிக்கச் செய்துள்ளனர். சோழர் செப்பேட்டில் எல்லைகூறும் சில இடங்களில் “இணைக் கயல்கள் பொறித்துக் கிடந்த பாறைக்குத் தெற்கும்” என்பன போன்ற தொடர்கள் காணப்படுகின்றன.
பாரி மகளிர் தொடர்பான செய்திகள்
பாரி மறைவிற்குப் பின்னர் பாரியின் நண்பரும், அவைக்களப் புலவருமாகிய கபிலர் “பாரி மகளிரைப் பார்ப்பாற்படுக்கக் கொண்டுபோவான் பறம்பு விடுத்துப் பாடியது” என்று புறநானூறு 113ஆம் பாடல் அடிக்குறிப்புக் கூறுகிறது. பின்னர் புறநானூறு 236 ஆம் பாடலில் “வேள்பாரி துஞ்சியவழி அவன் மகளிரைப் பார்ப்பார்ப் படுத்து வடக்கிருந்த கபிலர் பாடியது” என்ற குறிப்பும் காணப்படுகிறது.
பறம்புமலையிலிருந்து பாரி மகளிருடன் புறப்படும்போதே பார்ப்பனரிடம் அடைக்கலம் கொடுக்கக் கபிலர் முடிவு செய்திருப்பாரானால் பாரி மகளிரை இருங்கோவேள், விச்சிக்கோ முதலிய சிற்றரசர் அவையில் நிறுத்தித் திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று ஏன் கெஞ்சிக்கேட்க வேண்டும்? எனவே புறநானூறு அடிக்குறிப்பின் மீது ஐயம் ஏற்படுகிறது. விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர் கீழுர் வீரட்டானேசுவரர் கோயிலில் முதலாம் ராசராசன் காலப் பாடல் கல்வெட்டு ஒன்று உள்ளது. அக்கல்வெட்டு பாரி மகளிரைத் திருக்கோயிலூர் மலையமான் மக்களுக்குத் திருமணம் செய்வித்து விட்டுத் தீப்பாய்ந்து கபிலர் உயிர்துறந்தார் என்று கூறுகிறது.
“தெய்வக் கவிதைச் செஞ்சொற் கபிலன்
மூரிவண் தடக்கைப் பாரிதன் அடைக்கலப்
பெண்ணை மலையர்க்கு உதவிப் பெண்ணை
அலைபுனல் அழுவத்து அந்தரிட் சம்செல
மினல்புகும் விசும்பின் வீடுபேறு எண்ணிக்
கனல்புகும் கபிலக் கல்”
என்று இந்நிகழ்வைக் குறிக்கும் கல்வெட்டுப் பாடல் பகுதியாகும். இராசராசன் காலத்துக்கு முற்பட்ட கண்டராதித்த சோழனின் இரண்டாமாண்டுக் கல்வெட்டு ஒன்று திருக்கோயிலூர் மலையமான் வழிவந்த சித்தவடவன் என்பானைப் புகழும் போது,
“பாரி மகளிரைப் பைந்தொடி முன்கை
பிடித்தோன் வழிவரு குரிசில்”
என்று கூறுகிறது. சிவகங்கை மாவட்டம், பிரான்மலைதான் பாரியின் பறம்புமலை. அம்மலை (இப்போது திருக்கொடுங்குன்றம்) அடிவாரத்தில் உள்ள மங்கைநாதர் கோயில் கல்வெட்டில் “தேனாற்றுப் போக்கு வடபறப்பு நாடு, தென்பறப்பு நாடு” என்ற பிரிவுகள் காணப்படுகின்றன. மங்கைநாதர்கோயிலே பாரீச்சுரம் என்று கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. “முன்னூறு ஊர்த்தே தண்பறம்பு நன்னாடு” என்று புறநானூறு கூறும். கல்வெட்டில் முன்னூறு ஊர்ப்பற்று என்ற தொடர் காணப்படுகிறது.
பட்டினப்பாலை
பத்துப்பாட்டில் ஒன்பதாவதாக இடம் பெற்ற நூல் பட்டினப்பாலை. சோழமன்னன் கரிகாற் பெருவளத்தான் மீது கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது. இந்நூல் பாடிய புலவருக்கு மன்னன் 16 லட்சம் பொன் பரிசாகக் கொடுத்தான் என்று கலிங்கத்துப்பரணி இராச பாரம்பரியம் கூறுகிறது. சங்கரசோழன் உலாவும் தமிழ்விடுதூதும் 16 கோடி பொன் அளித்ததாகக் கூறும்.
“தழுவு செந்தமிழ் பரிசில் வாணர்பொன்
பத்தொடு ஆறு நூறாயிரம் பொன்பெறப்
பண்டு பட்டினப் பாலை கொண்டதும்” என்பது கலிங்கத்துப்பரணி.
சோழன் முதல் பராந்தகன் “மதுரை கொண்ட கோப்பரகேசரி” என்று பட்டம் பெற்றான். பின்னர் வந்த பல சோழ மன்னர்கள் பாண்டிய நாட்டின் மீது படை எடுத்து வென்றனர். மதுரைக்கு அந்தகம் விளைவித்தவன் என்ற பொருளில் சோழ இளவரசர்கள் மதுராந்தகன் என்று பெயர் சூட்டப்பட்டனர். மூன்றாம் குலோத்துங்க சோழனுக்குப் பின் பட்டம் பெற்ற மூன்றாம் ராசராசன் காலத்தில் சோழநாடு வலிமை குன்றியது. இதைக் கண்ட மாறவர்மன் சுந்தரபாண்டியன் பெரும்படை திரட்டி வந்து மூன்றாம் ராசராசனை வென்று சோழ நாட்டைக் கைப்பற்றி வஞ்சம் தீர்த்துக் கொண்டான். மாடமாளிகை கூட கோபுரங்கள் அனைத்தையும் இடித்தான். ஆடரங்குளை அழித்தான். தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொழுத்தினான்.
ஒரு புலவர் இந்த வெற்றியையும், பாண்டியன் செய்த அழிவையும் பாடியவர். கரிகாற் பெருவளத்தான் பட்டினப்பாலை பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணனார் நினைவாக எடுத்த 16 கால் மண்டபம் மட்டும் சோழநாட்டில் அழியாமல் நின்றது என்று பாடினார். இப்பாடல் திருவெள்ளறையில் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது.
“வெறியார் தளவத் தொடைச்செய மாறன் வெகுண்டதொன்றும்
அறியாத செம்பியன் காவிரி நாட்டு அரமியத்துப்
பறியாத தூண்இல்லை கண்ணன்செய் பட்டினப் பாலைக்கன்று
நெறியால் விடும்தூண் பதினாறு மேயங்கு நின்றனவே”
என்று அப்பாடலாகும்.
மலைபடு கடாம்
பத்துப்பாட்டில் பத்தாவதாக உள்ள நூல் மலைபடுகடாம். பல் குன்றக்கோட்டத்து செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னன் மீது இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடிய நூல். 583 வரிகளையுடையது. நன்னனது மலை நவிரமலை. நவிரமலையில் பல்வேறு அருவிகள் நீர் விழுகிறது. இது ஒரு பெரிய யானையின் மதநீருக்கு ஒப்பானது என்று பாடிய காரணத்தால் இந்நூல் “மலைபடுகடாம்” என்று பெயர் பெற்றது.
செங்கம் ரிஷபேசுவரர் கோயிலில் ஒரு கல்வெட்டுப் பாடல் உள்ளது. நன்னனின் மலை இலக்கியம் பெற்றது. அருவிகள் உள்ள மலை. ஆனால் இன்று காங்கேயன் கண் சிவந்தால் (கோபித்தால்) அருவிகள் விழும். இரத்த ஆறுதான் புரளும் என்று காங்கேயனின் வீரமும் நயமும் தோன்றப் புலவர் பாடியுள்ளார்.
அப்பாடல் கல்வெட்டு,
“ஸ்ரீ
வண்டறைதார் மன்னர் மலைபடைத்தென் மன்னரைவென்
கண்டதிறல் காங்கேயன் கண்சிவப்பப் – பண்டே
மலைகடாம் பாட்டுண்ட மால்வரை செஞ்சோரி
அலைகடாம் பாட்டுண் டது”.
என்பதாகும். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள கல்வெட்டொன்றில் மலைபடுகடாம் பற்றி குறிப்பு வருகிறது. பிற்காலப் பல்லவமன்னன் கோப்பெருஞ்சிங்கன் மகன் ஆட்கொண்ட தேவன் மலைபடுகடாம் புகழ்பெற்ற நன்னன் மலையில் தனது வெற்றிச் சின்னத்தைப் பொறித்தான் என்று அக்கல்வெட்டுப் பாடல் குறிக்கிறது.
“நல்லிசைக் கடாம்புனை நன்னன் வெற்பில்
வெல்புகழ் அனைத்தும் மேம்படத் தங்கோன்
வாகையும் குரங்கும் விசயமும் தீட்டிய
அடல்புனை நெடுவேல் ஆட்கொண்ட தேவன்”
என்பது அப்பாடலாகும்.
சில சங்கப் புலவர் பற்றிய குறிப்பு
இராமநாதபுரத்தில் உள்ள சீமாறன் சீவல்லவன் கல்வெட்டொன்றில் “இருப்பைக்குடி கிழவன் எட்டி சாத்தன் என்பவன் தமிழ்கெழு கூடலில் சங்கப் பலகையில் வீற்றிருந்தவர் வழிவந்தவன்” என்று குறிக்கப் பெறுகிறார். செங்கை மாவட்டம், திருக்கச்சூர் கச்சபேசுவரர் கோயில் கல்வெட்டொன்றில் “பெருநம்பி முத்தமிழ் ஆசான்” என்பவர் சங்கப் புலவர் சாத்தனார் வழிவந்தவர் என்று குறிக்கப் பெறுகிறார்.
மதுரை மருதன் இளநாகனார் திருப்பரங்குன்றத்தைப் புகழ்ந்து பாடும் பொழுது “அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை” என்று குறிப்பிடுகின்றார். திருப்பரங்குன்றில் உள்ள பழந்தமிழ்க் கல்வெட்டு ஒன்று “அந்துவன் கொடுப்பித்தவன்” என்று பொறிக்கப்பட்டுள்ளது. கீரன், கீரனார், நக்கீரன், இளங்கீரன், பெருங்கீரன் என்று பல புலவர்கள் பெயர் பெற்றுள்ளனர். புகலூர் ஆறுநாட்டார் மலையில் “கீரன்” எனப் பெயர் பொறிக்கப்பட்ட சில கல்வெட்டுகள் உள்ளன. ஓமன் நாட்டில் கிடைத்த ஒரு பானையோட்டில் கீரன் என்ற பெயர் பழந்தமிழில் எழுதப்பட்டுள்ளது. மோசிகீரனார், முடமோசியார் என்ற பெயர்களில் வரும் மோசி என்ற ஊர்ப் பெயர் தொண்டூர் பழங்கல்வெட்டில் குறிக்கப்படுகிறது.
யவனச் சான்றுகள்
சங்க இலக்கியங்களில் யவனர் பற்றிய குறிப்பு பல இடங்களில் வருகின்றன.
“யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்” (அகம் 149)
“யவனர் நன்கலம் தந்த தண்கழ் தேறல்” (புறம் 56)
“யவனர் ஓதிம விளக்கு” (பெரும் 315)
“யவனர் இயற்றிய வினைமாண் பாவை” (நெடு 101)
“வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்” (முல் 61)
என்பன அவற்றுள் சில. தொல்லியல் மேற்பரப்பாய்விலும், அகழாய்விலும் பலவிதமான ரோமானியர் தொடர்பான பொருட்கள் கிடைக்கின்றன.
1.ரோமானியர் மட்டுமே பயன்படுத்தும் “அரிட்டைன்” “ரௌலடெட்” ஓடுகள் பல தமிழ்நாட்டில் கிடைக்கின்றன.
2.உருவமும் பெயரும் பொறித்த ரோமானிய மன்னர் காசுகள் பல கிடைத்துள்ளன.
3.ரோமானியர் பயன்படுத்தும் மதுக்குடங்களான “அம்போரா” மதுக்குடங்கள், எச்சங்கள் பல கிடைத்துள்ளன.
4.ரோமனிய சுடுமண் பொம்மைகள் கிடைத்துள்ளன.
இத்தியாவில் கிடைக்கின்ற ரோமானிய மன்னர் காசுகளில் 80 விழுக்காடு தமிழ்நாட்டில் கிடைக்கின்றன. அரிக்கமேடு அகழாய்வில் ரோமானியக் குடியிருப்பு உள்ளதை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
அகழாய்வில் சங்ககால ஊர்கள்
சங்க இலக்கியம் குறிப்பிடும் 17 ஊர்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
1.அரிக்கமேடு (வீரை முன்துறை)
2.அழகன் குளம் (மருங்கூர்ப்பட்டினம்)
3.உறையூர் (உறந்தை)
4.கரூர் (கருவூர்)
5.காஞ்சிபுரம் (காஞ்சி)
6.காவிரிப்பூம்பட்டினம் (புகார்)
7.கொடுமணல் (கொடுமணம்)
8.கொற்கை (கொற்கையம் பெருந்துறை)
9.தருமபுரி (தகடூர்)
10.திருக்கோவிலூர் (கோவல்)
11.திருத்தங்கல் (தங்கால்)
12.பொருந்தல் (பொருந்தில்)
13.மதுரை (பெரும்பெயர் மதுரை)
14.வசவசமுத்திரம் (நீர்ப்பெயற்று)
15.மாங்குடி (உயர்ந்த கேள்வி மாங்குடி)
16.வல்லம் (சோழர் வல்லம்)
17.கொடுங்கலூர் (முசிறி)
மேற்கண்ட ஊர்களில் நடைபெற்ற அகழாய்வில் கொற்கையின் காலம் கி.மு.850 என்றும், கொடுமணலின் காலம் கி.மு.500 என்றும், பொருந்தல் காலம் கி.மு.490 என்றும் அறிவியல் முறைப்படி நடைபெற்ற கரிப்பகுப்பாய்வு (ஊ14) காலக்கணிப்புப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உயர்ந்த நாகரிகத்துடன், சிறந்த எழுத்தறிவு பெற்று விவசாய உற்பத்தியுடன் கைத்தொழிலும் வல்லவர்களாய் ரோம நாடு, வடநாடு, இலங்கை, ஆப்கானிஸ்தான் முதலிய பகுதித் தொடர்புடன் சங்க கால மக்கள் வாழ்ந்தது தெரிகிறது. பல்வேறு கலைப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளனர். நிலையாக ஊர்கள் அமைத்து வாழ்ந்துள்ளனர் என்றும் தெரிகிறது.
கடல் பணமும் வெளிநாட்டுச் சான்றுகளும்
ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகட்டு முற்பட்டதாகக் கருதப்பெறும் தொல்காப்பியம் “கலத்திற் சேரல்” என்று கடல் பயணத்தைக் குறிக்கிறது. அன்றைய தமிழர்கள் கடல் பயணத்திற்குப் பெண்களை அனுமதிக்கவில்லை. “முந்நீர் வழக்கம் மகடூவோடு இல்லை” என்பது தொல்காப்பிய நூற்பா.
“நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன்”
என்பது புறநானூற்றுப் பாடல், “அலைகடல் நடுவுள் பல கலம்” செலுத்தியவர்கள் தமிழர்கள். “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்பது பழமொழி.
சங்க இலக்கியங்களில் வெளிநாட்டவர் (யவனர்) பற்றிய குறிப்பு உள்ளது. அண்மைக் காலம்வரை வெளிநாட்டில் சங்ககாலத் தமிழர் பற்றிய சான்றேதும் கிடைக்காமலிருந்தது. அண்மைக் காலத்தில் கிழக்கு நாடுகளிலும், மேற்கு நாடுகளிலும் சங்ககாலப் பழந்தமிழ் எழுத்துப் பொறிப்புகள் பல கிடைத்திருக்கின்றன.
1.எகிப்து நாட்டில் செங்கடற்கரையில் உள்ள தொன்மையான நகரம் குவாசிர் அல்காதிம். அங்கு அமெரிக்கத் தொல்லியல் நிபுணர்கள் நடத்திய அகழாய்வில் பழந்தமிழ் எழுத்தில் “கண்ணன்” “சாத்தன்” என்று எழுதப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன.
2.எகிப்து நாட்டில் பெறனிகே என்ற இடத்தில் பழந்தமிழில் “கொறபூமான்” என்று எழுதப்பட்ட பானை ஓடு கிடைத்துள்ளது.
3.தாய்லாந்து நாட்டில் கிளாங்தோம் என்ற இடத்தில் சோழருடைய புலி அடையாளம் பொறிக்கப்பட்ட முத்திரை கிடைத்துள்ளது.
4.தாய்லாந்து நாட்டில் குவான் லுக் பாப் என்ற இடத்தில் பொன் மாற்றுக் காணும் உரைகல் “பெரும்பத்தன் கல்” எனும் எழுத்துப் பொறிப்புடன் கிடைத்துள்ளது.
5.தாய்லாந்து நாட்டில் பூகாதாங் என்ற இடத்தில் “தூதோன்” என எழுதப்பட்ட பானை ஓடு கிடைத்துள்ளது.
6.ஓமன் நாட்டில் கோர் ரோரி என்ற இடத்தில் “ணந்தைகீரன்” என்று எழுதப்பட்ட பானை ஓடு கிடைத்துள்ளது.
7.எகிப்து நாட்டில் குவாசிர் அல் காதிம் என்ற ஊரில் இங்கிலாந்து நாட்டின் தொல்லியல் நிபுணர்கள் நடத்திய அகழாய்வில் “பனை ஒறி” என இருமுறை எழுதப்பட்ட ஒரு மட்கலம் கிடைத்துள்ளது.
8.வியன்னா அருங்காட்சியகத்தில் உள்ள “பேபிரஸ்” என்னும் பழந்தாளில் எழுதப்பட்ட ஆவணம் ஒன்று கிடைத்துள்ளது. கிரேக்க மொழியிலும், பழந்தமிழிலும் எழுதப்பட்ட அந்த ஆவணத்தில் முசிறியைச் சேர்ந்த தமிழ் வணிகன் ஒரு கப்பலில் கொண்டு சென்ற வாசனைப் பொருட்கள், தந்தப் பொருட்கள் போன்றவை குறிக்கப்பட்டுள்ளன. இது போல் பல தமிழக வணிகர்கள் அக்கப்பலில் பொருள்களைக் கொண்டு சென்றார்கள் இந்த ஆவணம் கான்ஸ்டாண்டிநோபில் வணிகருக்கும் சேரநாட்டு முசிறி வணிகர்கட்கும் ஏற்பட்ட ஒப்பந்தமாகும்.
9.கொற்கையில் கிடைத்த பானை ஓடு ஒன்றில் யவனக் கப்பல் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
ஓரியை வென்ற காரி
தகடூர் அதியமான் திருக்கோயிலூர் மலையமான் திருமுடிக் காரிமீது படையெடுத்த போது கொல்லிமலை ஓரி அதியமானுக்குப் படை உதவி செய்தான். தக்க சமயம் வாய்த்த போது ஓரி மீது போர் தொடுக்கக் காரி எண்ணியிருந்தான். அதன்படி காரி ஓரியின் கொல்லிமலை நாட்டை முற்றுகையிட்டுத் தாக்கினான். கொல்லிமலை நாடு காரி வசம் ஆகியது. ஓரியும் போரில் கொல்லப்பட்டான்.
கொல்லிமலையைப் பெறவேண்டும் என்று நெடுநாள் எண்ணியிருந்த பெருஞ்சேரல் இரும்பொறைக்குக் கொல்லிமலையை காரி அன்பளிப்பாக வழங்கினான். பெருஞ்சேரல் இரும்பொறை இந்நிகழ்ச்சியைக் கொண்டாடும் பொருட்டுத் தன் உருவம் பொறித்த “கொல்லிப் பொறை” கொல்லிரும்பொறை என்று காசுகளை வெளியிட்டான். இதனைப் புறநானூறு,
“முள்ளுர் மன்னன் கழல்தொடிக் காரி
செல்லா நல்லிசை நிறுத்த வல்வில்
ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த
செவ்வேர்ப் பலவின் பயன்கெழு கொல்லி”
என்று கூறுகிறது. கண்டாராதித்தன் காலக் கல்வெட்டொன்று மலையமான் திருமுடிக் காரி வழி வந்த சித்த வடவன் என்பானைப் புகழும்போது,
“வல்வில் ஓரியை மதவலி தொலைத்த
செல்பரி மிகுந்த சித்த வடவன்”
என்று புகழுகிறது. இக்கல்வெட்டின் மூலம் மலையமான் திருமுடிக்காரி கொல்லிமலை வல்வில் ஓரியைப் போரில் வென்ற செய்தி உறுதிப்படுகிறது. எடக்கல்லில் கிடைத்த பழந்தமிழ்க் கல்வெட்டில் “பல்புலி தாத்த காரி” என்ற தொடர் காணப்படுகிறது.
அதியமான்
தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவர்கள் அதியமான் மரபினர். அதியமான் நெடுமான் அஞ்சி மகன் எழினி. அஞ்சி – எழினி என்ற பெயரை மாறி மாறி வைத்துக் கொண்டனர். இவர்கள் சேரர் மரபினர் என்பர். பனைமரம் இவர்களின் லட்டிகம் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. தகடூர் யாத்திரையில் சேரனிடம் அதியமான் பற்றிக் கூறும்போது “உம்பி (உன் தம்பி) என்று புலவர் கூறுகிறார். கல்வெட்டில் “சேரன் அதிகன்”, “வஞ்சியர் குலபதி” என்ற தொடர்கள் காணப்படுகின்றன.
திருக்கோயிலூர் மலையமானோடு போரிட்ட அதியமான் மலையமான் தலைநகரை அழித்தான் என்று அவ்வையார் கூறுகிறார். திருக்கோயிலூருக்கு மிக அருகில் உள்ள ஜம்பை என்ற ஊரில் உள்ள குன்றுப்பகுதியில்,
“ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பாளி”
என்ற கல்வெட்டொன்று பழந்தமிழ் எழுத்துப் பொறிப்பில் காணப்படுகிறது. அசோகன் கல்வெட்டில் குறிக்கப்பெறும் “சதியபுத்திரர்” என்ற சொல்லே “ஸதிய புதோ” என்று ஜம்பைக் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. சிலர் “சதிய” என்று அசோகன் கல்வெட்டில் வரும் பெயரைச் “சத்திய” என்று தவறாக உணர்ந்து “வாய்மொழிக் கோசரோடு” தொடர்புபடுத்துவது தவறாகும்.
வேள் ஆவிக்கோமான் பதுமன் மரபு
இவர்கள் பழனிமலைத் தலைவர் மரபினர். இவர்கள் சேரர்கட்கு மகட்கொடைக்கு உரியவர்கள். பதிற்றுப்பத்துக் கூறும் எட்டு அரசர்களில் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், பெருஞ்சேரல் இரும்பொறை மூவரும் பழனி வேள் ஆவிக்கோமான் பதுமன் மரபின் மகள் வழிப் பிறந்தவர்கள் ஆவர். இவர்கள் முறையே 4,6,8 பத்துக்கு உரியவர்கள்.
அழகன் குளம் அகழாய்வில் “பதுமன் கோதை” என்று பழந்தமிழில் எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடு ஒன்று கிடைத்துள்ளது. இக்கோதை (சேரர்) வேளாவிக் கோமான் பதுமன் தேவியர் ஒருவரின் மகனாக இருக்கக்கூடும்.
மலையமான்
திருக்கோயிலூர் மன்னன் மலையமான். மலையமான் என்று பெயர் பொறிக்கப்பட்ட நாணயம் கிடைத்துள்ளது. இது மலையமான் மரபினர் வெளியிட்ட நாணயமாக இருக்கக்கூடும். பண்ணன், வெளியன் என்பவர்கள் சங்க இலக்கியம் கூறும் தலைவர்கள். கொடுமணல் அகழாய்வில் “பண்ணன்” என்ற பெயரும், அரிட்டாபட்டி பழந்தமிழ்க் கல்வெட்டில் “வெளியன்” என்ற பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
புலவர் செ.இராசு,
ஈரோடு.