வறட்சி (கவிதை)

நடந்தேன் நிலத்தில்

நெருப்பில் நடப்பதை விட

கொடுமையாக!

 

நீண்ட

தென்னை,

பாக்கு மரங்கள்

தங்களுடைய தலையை

யாருக்கோ?

அடகு வைத்தாற் போல்

மொட்டையாக!

 

தவளை சத்தம் என்றும்

ஓயாத நிலையில்

இருந்த

அந்த கிணறு

கல்லும் காகிதமுமாக!

 

பூக்களை,

சிரிப்பாய்

சிரிக்க வைக்கின்ற

அந்த செடிகள்

இன்று வாடிப் போக!

பூவையர் கூந்தலில்

காகிதப் பூக்கள்!

 

பறவைகள் பசுமையைத் தேடி…

சிறகுகள் படபடத்தன!

 

எருதுகள்

கலப்பையை

மறந்து விட்டன!

 

சூரியன்

இந்த பூமியை

குத்தகைக்கு

எடுத்தாற் போன்று,

வெப்பத்தை

அதிகமாக கொட்ட!

 

விவசாயிகளின்

அறுவடை நிலத்தில்

காய்ந்த புல்லும்,

வெடிப்புள்ள மண்ணும்

மட்டுமே!

 

மக்கள், மாக்கள்

வறட்சி என்னும் சுமையை

தலையில் மட்டுமல்லாமல்

வயிற்றிலும் சேர்த்து

தாங்கிக்கொண்டு !

கவிஞர் முனைவர் க.லெனின்

1.புதுப்பொலிவு

Leave a Reply