பொருநராற்றுப்படையில் அறநெறிச் சிந்தனைகள் |ஆய்வுக்கட்டுரைகள்|பா.சங்கீதா

பொருநராற்றுப்படையில் அறநெறிச் சிந்தனைகள் - பா.சங்கீதா
முன்னுரை
                 
சமுதாயத்தையும் மனிதனையும் செந்நெறிப்படுத்தும் ஒழுக்க நெறியே அறமாகும். அறம் என்பது எல்லையற்றதும் பரந்து விரிந்ததும் ஆகும். நற்செயல்கள் அனைத்துமே அறத்தின் பாற்படுவனவாகும். உண்மை, வாய்மை, மெய்ம்மை ஆகிய இம்மூன்றும் அறத்திற்கு அடிப்படையாக அமைந்து, நல்வினையை ஏற்படுத்துவதாக அமையும். அந்த வகையில் பொருநராற்றுப்படை காட்டும்  ஈகை சார்ந்த அறங்களை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

அறம் – அகராதி விளக்கம்
               
அறம் என்ற சொல்லுக்கு மதுரை தமிழ்ப்பேரகராதி  “தருமம், புண்ணியம், தகுதி, நோன்பு, அறச்சாலை,  புனிதம், ஒழுக்கம், இன்சொல், இல்வாழ்க்கை” (ப.எ-170) என்று பல்வேறு பொருள்களைத் தருகிறது.
க்ரியாவின் தற்கால தமிழ் அகராதி
                 
“அறம் என்பது தனிமனிதன் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கத்தின் அடிப்படையான நெறிமுறைகளுள் ஒன்று” (ப.எ 81) எனப் பொருள் கூறுகிறது.

அறத்தின் சிறப்பு
                 
“அறம் செய விரும்பு” (ஆத்தி சூடி.பா:1) என்றார் ஒளவையார். திருவள்ளுவரும் முப்பாலுள் அறத்தையே முதன்மையாகக் கொண்டு “மனத்துக்கண் மாசிலன் ஆதல்” (குறள்.34) என்று குறிப்பிடுகிறார். ஒழுக்கமே சிறந்த அறம் என்றும், அறத்தான் வருவதே இன்பம் என்று குறிப்பிடுவதையும் பார்க்கலாம். “அறமே அறிவு, அறிவே அறம்” என்கிறார் சாக்கரட்டீசு. அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கின் பயனாக அறம் விளங்குவதைக் காணலாம். தனிமனிதன், சமுதாயம், சமயம் ஆகிய எந்நிலையிலும் அறமே முதன்மையிடம் பெறுகிறது. அறத்தின் குறிக்கோள் என்பது மாந்தன் முழுமையடைய வேண்டும் என்பதேயாகும்.
  தமிழர்கள் போரிலும் அறத்தையே பின்பற்றினர் என்பதற்குப் பல்வேறு சான்றுகளும் உள்ளன. மணிமேகலையில்,
        
“அறமெனப்படுவது யாதெனக் கேட்டின்        
மறவாதி துகேள் மன்னுயிர்க் கெல்லாம்
‫
உண்டியும் உடையும் உறையுளும் அல்லதுகண்டதில்”    (மணிமேகலை : 228-230)

என்று குறிப்பிட்டு அறத்தை வலியுறத்துகிறது.

ஆற்றுப்படையில் அறம்
 
வாழ்வியல் அறங்கள் பல இருந்தாலும், இல்லையென இரந்தோர்க்கு ஈதல் மிகப்பெரிய செல்வமாகக் கருதப்பட்டது. அறநெறி வாழ்தலே சிறப்பான வாழ்வு என்றெண்ணி ஈகைக்குச் சங்ககால அரசர்களும் முன்னுரிமை வழங்கினர். உலகில் அறப்பண்பு வளர வேண்டி வறியவர்களுக்குத் தன்னிடம் உள்ள பொருளை வழங்கும் வள்ளல்களைப் புகழ்ந்து பாடுவதற்காகச் சங்ககாலப் புலவர்கள், பாடாண் திணையில் ஆற்றுப்படை என்னும் துறையை  உருவாக்கிக் கொண்டார்கள். ஒரு புலவனிடம் சென்று பெரும்பொருள்களைப் பரிசாகப் பெற்று வந்த பொருநர், பாணர், விறலியர், கூத்தர், புலவர் போன்றோருள் ஒருவர், பரிசில் பெறாதார் ஒருவருக்குத் தாம்பெற்ற பெருவளத்தைக் காட்டி, அதனை வழங்கிய தலைவனிடம் அவர்களைச் செலுத்துவதாக அமைவது ஆற்றுப்படையாகும். இதையே தொல்காப்பியரும்,
     
“கூத்தரும், பாணரும், பொருநரும் விறலியும்     
….. ……. …… ……..     
சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்” (தொல்.புறம்:36)
என்று குறிப்பிடுகிறார்.

பொருநராற்றுப்படை சிறப்பு
               
பொருநரை ஆற்றுப்படுத்தியமையால் இது பொருநராற்றுப்படையாகும். ஏர்க்களம் பாடுநர், போர்க்களம் பாடுநர், பரணி பாடுநர் என மூவகையாகப் பொருநர்கள் இருந்தாலும், இந்நூலில் வரும் பொருநன் போர்க்களம் பாடும் பொருநனாவான். கரிகாற் பெருவளத்தானின் சிறப்பினைக் கூறும் இந்நூலை இயற்றியவர் முடத்தாமக் கண்ணியார் ஆவார். இவ்வாற்றுப்படை காலத்தால் முந்தியதால், ஆற்றுப்படை நூல்களுள் முன்னதாக வைக்கப்பட்டுள்ளது.

அறமும் நீதியும்
                 
முதியோர் இருவருக்குள் முரண்பாடு ஏற்பட்டது. அவர்கள் தங்கள் முரண்பாட்டைப் பேசித் தீர்த்துக் கொள்ள முடியவில்லை; கரிகாலனிடம் வழக்குரைத்து நீதி பெறலாம் என்று நினைத்து அவனிடம் அணுகினர். அவன் இளைஞனாயிருப்பதைக் கண்டனர். அவனால் தங்கள் வழக்கை ஆராய்ந்து உண்மை உரைக்க முடியுமோ என்று ஐயுற்றனர். அவர்கள் ஐயத்தைக் குறிப்பால் உணர்ந்த கரிகாலன் அவர்களுடைய வழக்கை மற்றொரு வயது முதிர்ந்த அறநூல் அறிந்தவரிடம் மாற்றுவதாகக் கூறினான். பின்னர் தானே முதியவனைப் போல நரை முடியும் தாடியுடையவனாய் வந்து உட்கார்ந்து அவர்கள் வழக்கைக் கேட்டான். இருவரும் ஒப்புக் கொள்ளும்படி நீதி வழங்கினான். இந்த நிகழ்ச்சியை,
       
“முதியோர் அவை புகுபொழுதில் தம்       
பகைமுரண் செலவும்” (பொரு. 188)
               
என்ற அடிகளால் காணமுடிகிறது. அறம் அகத்தையும் அரசு புறத்தையும் துப்புரவு செய்ய எழுந்த இரு நெறிகளாகும். அரசு சட்டங்கள் செயற்பட இயலா நிலையில் அறக்கருத்துக்கள் மனித மனங்களைச் செம்மைப்படுத்துகின்றன என்று அர.சிங்காரவடிவேலன் (சங்க இலக்கிய உவமைகள் ப. 24) கூறுவதன் மூலம் மனித மனங்களைச் செம்மைப்படுத்துவதற்கு அறம் தேவை என்பதை அறியமுடிகிறது. இக்கருத்திற்கேற்ப பொருநராற்றுப்படையில் கரிகாற்சோழன் அறந்தவறாமல் நீதி வழங்குவதில் சிறந்தவன் என்பதை எடுத்துக் காட்டியுள்ளார் முடத்தாமக் கண்ணியார்.

பசிப்பிணி நீக்கல்
               
பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பர். அந்த வகையில் பசிப்பிணி நீங்க, அந்நாளிலும் விழாக்கள் முடிந்ததும் அனைவருக்கும் சோறு வழங்கப்பட்டிருக்கிறது என்பதை,
 
      “சாறுகழி வழிநாட் சோறுநசை யுறாது”( பொரு-2)
               
என்ற அடிகள் தெளிவுபடுத்துகிறது. மேலும், பொருநனுக்குச் செம்மறியாட்டின் இறைச்சி கலந்த உணவையும், புழுங்கல் அரிசியில் உணவையும் போதும்போதும் என்னும் அளவுக்கு முகம் கோணாமல் பரிமாறியதையும் விழாக்கள் வைத்து மக்களுக்கு உணவு என்னும் அறபண்பினை வழங்கியிருக்கின்றார் என்பதையும் பொருநராற்றுப்படையில் நாம் காணலாம்.

மானம் காக்க  ஆடை வழங்குதல்
          மானத்தின் பெருமை கூற விழைத்த வள்ளுவர்,
 
                 மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்             
                  உயிர்திப்பர் மானம் வரின் (திரு. 969)
               
என்ற குறள் மூலம் அதனை விளக்கியுள்ளார். “உடுக்கை இழந்தவன் கைபோல” என்ற வள்ளுவரின் உவமையும், “ஆள்பாதி ஆடைபாதி” என்ற பழமொழியும் மானம் காக்கும் ஆடையின் அவசியத்தை நமக்குப் புலப்படுத்தும். மிகவும் அழுக்கேறி இற்று நைந்து போன ஆடையுடன் தன்னை நாடி வந்த பொருநனுக்கு, முதலில் மற்றவரோடு ஒப்ப மதிக்கும் சிறந்த ஆடையைக் கரிகாலன் வழங்கினான் என்பதை
       
 ஈரும் பேணு இருந்து இறை கூடி        
……. ……… ……………….        
அரவுரி அன்ன அறுவை நல்கி   (பொரு.79-83)
மேற்கூறிய வரிகள் புலப்படுத்துகிறது.

இருப்பிடம் அளித்தல்
               
 தன்னை நாடி வந்த பொருநர்களுக்கும் அவனைச் சார்ந்தோர்களுக்கும் உணவு, உடை அளித்தது மட்டுமின்றி அவர்கள் தங்குவதற்கு தன்னுடைய அரன்மனையிலேயே இடமும் அளித்திருக்கிறான் கரிகாலன்.இச்செய்தியை,
                    
“……….. ….. மற்று அவன்        
திருக்கிளர் கோயில் ஒருசிறைத் தங்கி” (பொரு.89-90)
என்னும் வரிகள் தெளிவுபடுத்துகிறது.
இசையின் மூலம் நல்வழிப்படுத்துதல்
                 
ஆறலைகள்வர்கள் செல்லும் பாலை நிலத்தில் வாசிக்கப்படும் பாலை யாழின் மூலம் வரும் பாடலைக் கேட்டு, தம்கைகளில் உள்ள கொடிய படைக்கலங்களைப் போட்டுவிட்டு அடங்கி நிற்கும் பண்புடையவர்களாக மாறுவர் என்பதை,
      
“ஆறுஅலை கள்வர் படைவிட அருளின்      
மாறுதலை பெயர்க்கும் மருவுஇன் பாலை” (பொரு . 21-22)
 
               என்ற பாடலின் மூலம் அறியலாம். பொருநர்களால் வாசிக்கப்படும் யாழுக்கே தீயவர்களை நல்வழிப்படுத்தும் இயல்பு இருக்கிறது என்றால், அவர்களால் போற்றிப் பாடப்படும் மன்னனுக்கு அறப்பண்பு மிக்கிருப்பதில் வியப்பேதுமில்லை.

கரிகாலனின் ஈகைத் திறன்
 
பொருநர்கள் ஊருக்குச் செல்ல நினைத்த போது, அவர்களைப் பிரிய மனம் இல்லாத கரிகாலன் பொருநனுக்கும், அவன் குடும்பத்தார்க்கும் எண்ணற்ற கொடைகளை வழங்கி மகிழ்வித்தான். இல்லோரை மேலும் இல்லோராக்கித் தம்முடைய பொருளை மட்டும் பெருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவன் கரிகாலன் என்பதை,
 
“துடிஅடி என்ன தூங்குநடைக் குழவியொடு         
பிடிபுணர் வேழம் பெட்டவை கொள்க” (பொருந: 125-126)
 
               என்ற அடிகள் காட்டுகிறது. பொருநர்கள் விரும்பிக் கேட்பதற்கு முன்பே அனைத்தையும் கொடுத்தவன் கரிகாலன் என்பதை அறியமுடிகிறது.  உண்ண உணவும், உடுக்க உடையும் கொடுத்ததோடு, வாழ்நாள் துயர் நீங்க பொன்னும், மணியும், களிறும், வேழமும் தந்து, அவனுடைய தேரிலேயே பொருநனையும், அவனுடைய குடும்பத்தையும் ஏற்றி, அவர்கள் ஊரில் விடுவான் என்ற செய்தி கரிகாலனின் ஈகைத் திறனை அறிய ஏதுவாகிறது. “இல்லோர்க்கு இல் என்று இயைவது கரத்தல், வல்லா நெஞ்சம் வலிப்ப” (அகம்-53) என்று அகநானூறும், “மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம், உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” (மணி-11: 95-96) என்று மணிமேகலையும் ஈதலின் சிறப்பினை எடுத்துரைக்கிறது. ‘செல்வத்துப் பயனே ஈதல்” என்ற புறநானூற்று தொடருக்கு ஏற்ப, ஈதலறம் மிக்கவன் கரிகாலன்,
            
“பாசிவேரின் மாசொடு குறைந்த           
…….  …………. ………..            
‘பெறல் அருங்கலத்தில் பெட்டாங்கு உண்க” (பொருந:153-156)
என்ற அடிகள் கரிகாலனின் விருந்தோம்பல் மாண்பினை எடுத்துரைக்கிறது.

முடிவுரை
               
 ‘உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும்’ உலக இயல்பு. இத்தகைய இயல்பிற்கு ஏற்ப கரிகாலன் ஒருவருக்கு அடிப்படைத் தேவையான உண்ண உணவும், மானத்தைக் காக்க உடையும்,  மகிழ்ச்சியாக வாழ பொருளும் கொடுத்து அறம் வளர்த்திருக்கிறான் என்பதை பொருநறாற்றுப்படை மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

பார்வை நூல்கள்
1. பரிமணம், அ.மா., (உ.ஆ.)                     
சங்க இலக்கியங்கள் (தொகுப்பு )

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,
அம்பத்தூர், சென்னை – 600 098.
   முதற்பதிப்பு – 2007.
2.அண்ணாமலை, வெ.,                                        
சங்கஇலக்கியத் தொன்மக் களஞ்சியம்,
தொகுதி 1,2,

மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்,
முதற்பதிப்பு – 2000.

3.சிதம்பரனார்.சாமி.,                                                 
எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்,
 
அறிவுப்பதிப்பகம், சென்னை – 14,                                                                                                                             
இரண்டாம் பதிப்பு-2008.

4.சுப்பிரமண்யன்,ந., 
சங்ககால வாழ்வியல்,
   
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,
                                                                                               
அம்பத்தூர், சென்னை – 600 098,
முதல் பதிப்பு-1986

5.செல்லப்பன், சு.,                                                     
சங்க இலக்கியத்தேன்
அன்றில் பதிப்பகம்,
                                                                                               
சென்னை – 600 005,  முதற்பதிப்பு – 1996.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
பா.சங்கீதா,
தமிழ்த்துறை,

உதவிப்பேராசிரியர்,

முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி(தன்னாட்சி),

இராசிபுரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here