பாவகை : நேரிசை வெண்பா
பண்பாடு நாகரிகம் போற்றும் தமிழ்மொழியே!
பண்பட்ட நன்மொழி யாள்நீயே! – தண்மொழியே!
எண்ணச் செயலை முடிக்கும் அமிர்தமே!
மண்ணுலகம் போற்றுமொழி யே! – (ஒரு விகற்ப நேரிசை வெண்பா)
நின்னில் நனைந்த மரமாய் இருந்தேனே!
என்னுள் நறுமணமாய் ஆனாயே! – தண்டமிழே!
என்னவென்று சொல்வேனோ நின்சீரை! திக்கெட்டும்
உன்புகழை ஏற்றிடுவேன் நான்! – (ஒரு விகற்ப நேரிசை வெண்பா)
இலக்கணம் கற்றுத் தமிழினிமை உண்டேன்
இலக்கியம் கற்றனுப வித்தேன் – இளந்தமிழே!
சங்கத் தமிழின் அகப்புறத்தில் மூழ்கினேன்
பொங்கு தமிழே உயிர்! – (இரு விகற்ப நேரிசை வெண்பா)
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
வாய்பாடு : மா மா காய் மா மா காய்
குறையே யில்லாத் தமிழ்மொழியே!
குன்று தோறும் மணப்பாயே!
கறையே யில்லாத் தாய்மடியே!
கொட்டிக் கிடக்கும் ஆழ்கடலே!
முறையாய் பயின்று வந்தாலே
மகிழ்ச்சிப் பெற்று வாழ்வோமே!
நிறைவாய் மனமும் பெற்றிடவே
பொங்கு தமிழைப் பாடுவோமே!
கவிஞர் முனைவர் க.லெனின்