புரிதல்|சிறுகதை|கு.ஜெயா பிரின்ஸி

புரிதல் - கு.ஜெயா பிரின்ஸி
      இருளின் கரம் முழுவதும் விலகாத அதிகாலை வேளை அது. மெல்லிய குளிர்ந்த காற்று அந்த இடம் முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. கவிதா போர்வையை உடம்பு முழுவதும் இழுத்து மூடி கொண்டாள். தூக்கம் வரவில்லை நெஞ்சம் படபடவென அடித்துக் கொண்டது. அவள் சோர்ந்து போயிருந்தாள்.தலை வீக்கம் போட்டிருந்தது.

ம்……ம்…..என்ற முனங்கல் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. என்னாச்சும்மா கவிதா ?கொஞ்சம் வெந்நீர் கொண்டு வரட்டுமா ?என அன்போடு அவளின் தலையை நீவினான் கணவன் முத்து. 

முத்து வண்ணம் பூசுவதில் கெட்டிக்காரன். கலை இழந்து போன கட்டிடத்தின் சுவரும் முத்துவின் கைவிரல் பட்டால் ஒளி வீசத் தொடங்கிவிடும் . அதை விட மன வைராக்கியம் கொண்டவன். கணவன் மனைவி இடையே ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளில் தவறு யார் பெயரில் இருந்தாலும் மனைவியே தன்னிடம் வந்து சமாதானமாக வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடியவன்.

சில சமயங்களில் பேசி நாட்கணக்குப்போய் வாரக்கணக்காகும் அளவிற்கு அதன் வீரியம் அதிகம்.

அன்று இரவு நெடுநேரமாகியும்  கவிதா வீட்டிற்கு வரவில்லை .அவனது சட்டை பாக்கெட்டில் இருந்த அலைபேசி ட்ரிங்…..டிரிங்…… என ஒலி எழுப்பவே கவிதாவாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தவாறே போனை எடுத்துப் பார்த்தான். 
               
எத்தனை தடவை இவளிடம் சொல்ல வேண்டும் நம்முடைய சொல்பேச்சைக் கேட்கவே கூடாது என்று மனதில் தீர்மானமே எடுத்துவிட்டாள் போல. தான் எம்.ஏ பட்டம் பெற்றவள் என்ற திமிர் அவளுக்கு இன்றைக்கு போடுற போடுல இந்த பழக்கத்தையே அவள் மறக்க வேண்டும் என நினைத்தவாறே, பச்சைப்பொத்தானை அழுத்தி ஹலோ என்றான்.  மறுமுனையில் பதில் ஒன்றும் இல்லை. போனை எடுத்தாலும் பேச மாட்டாயா என மறுபடியும் சிடுசிடுத்த ‌படி ஹலோ என்றான் .மறுமுனையில் கவிதா ஓ….. என்று அலறினாள். அதனை சற்றும் எதிர்பாராத முத்துவும்‌ ஒரு கணம் பயந்து தான் போனான். மறுகணம் தன்னை ஆசுவாசப்படுத்தியவாறு அழாதே விவரத்தைச் சொல்லு என்றான். அவள் என் அண்ணன் வீட்டிற்கு வாங்க என்று மட்டும் சொல்லிவிட்டு போனை அணைத்து விட்டாள்.
               
கவிதா எம்.ஏ பட்டதாரி.மாநிற இளம்பெண் .குடும்பத் தலைவி தேனீக்களை விடவும் சுறுசுறுப்பாக இயங்குபவள்.தன்னால் முடிந்த அளவிற்கு 
எல்லாரிடமும் உண்மையாக பழகுபவள். தன் இரண்டு பிள்ளைகளையும் எப்படியாவது உயர்ந்த சிகரத்தில் ஏற்றி அழகு பார்க்க வேண்டும் என கனவு காண்பவள். ஏன் அதற்காக தான் உயிரை கையில் பிடித்தவாறு  ஓடிக் கொண்டிருப்பவள். மற்றபடி கணவனிடம் அவ்வளவாக பிடிப்பு இல்லை. 
         
அவளின் உடைந்து போன குரலை கேட்டவுடன் ஒரு நிமிடம் நடுக்கமே வந்துவிட்டது முத்துவிற்கு; ஏன் அவளுக்கு என்ன ஆச்சு ? ஏன் போனை கட் செய்தாள் என பல்வேறு கேள்விகள் மனதை குடைய மோட்டார் சைக்கிளை  எடுத்துக்கொண்டு விருட்டன்று கிளம்பினான்.

நிலா தன்னுடைய  வட்ட முகத்தை அழகாக காட்டிச் சிரித்துக் கொண்டிருந்தது. அந்த மென்மையான பால் நிற ஒளியில் மோட்டார் சைக்கிள் காற்றைத் கிழித்தவாறே பறந்தது. இப்போது அதன் மஞ்சள் நிற ஒளியில் அவளின் முகத்தை நன்றாகவே பார்க்க முடிந்தது. ஏங்கி அழுது சிவந்து கண்களோடும் ,வீங்கிய கன்னங்களோடும் கவிதா நின்றிருந்தாள். அவனைக் கண்டதும் என்னங்க…… என்று  சத்தமிட்டு கூப்பிட்டாள்  மற்றபடி இருவரும் ஒன்றுமே பேசிக் கொள்ளவில்லை. அவன் மோட்டார் சைக்கிளை எடுக்க அவள் பின்புறம் ஏறிக்கொண்டாள். முகத்தில் விழுந்த  கூந்தலையும் சரி செய்யதிணறியவளாய் மரம்போல உட்கார்ந்திருந்தாள். பிறகு மெதுவாக கூறினாள் மனிதர்கள் ஏங்க இப்படி மாறிட்டாங்க?

ம்..க்கும்…எனத் தொண்டையைச் செருமியவாறே  நீ எந்த மனிதர்களைப் பற்றிக் கேட்கிறாய் ?உன் அண்ணன் வீட்டிற்கு போகக்கூடாது என்று நான் எத்தனை தடவை சொன்னேன். படிச்ச திமிரு உனக்கு.நான் தான் நகையை கொடுக்கும் போதே சொன்னேன்ல.. இனி நகையை திருப்பி தர மாட்டேன்னு  சொல்லிட்டானா? சரி எதுக்கு இப்படி அழுது வடிந்து நிற்கிற. ஒண்ணா  ரெண்டா அஞ்சு பவுன் இந்த விலை போற போக்கில் இனி நினைச்சு பார்க்க முடியுமா? பதில சொல்லு என்ன கத்தினான்.

இருட்டில் ஓரிருவர் வேகமாக அவர்களை திரும்பிப் பார்த்துவிட்டு பின் சென்றனர் . அவள் சிலையென பதில் ஏதும் கூறாமல் உட்கார்ந்திருந்தாள். அவளால் நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை.

மணி இரவு ஏழரை இருக்கும். தமையன் இன்னும் வீட்டுக்கு வரவில்லை .போன் செய்தால் போனும் எடுக்கவில்லை ஒரு வழியாக இரவு எட்டு மணிக்கு அவன் வந்ததும் அதுவரை சும்மா இருந்த தமையனின் மனைவி நாடகம் போட ஆரம்பித்தாள். எல்லாவற்றையும் நீதான் உன் வீட்டிற்கு கொண்டு சென்று விட்டாய் . நீ உன் தங்கச்சியோடு இரு நான் சாகப் போறேன் என்றவரே அடுக்களையிலிருந்து ஒரு வெட்டருவாளை எடுத்து வந்தாள்.
               
நீ சாகப் போறேன்னா போ.முதலில் என்னோட நகையை எடுத்து வைத்துவிட்டு போ என்றவாறு வெட்டருவாளை பிடித்து இழுத்தாள் கவிதா. அப்போது தமையனின் மனைவி கையில் சிறு காயம் ஏற்படவே கோபத்தின் உச்சிக்கே போனான்.

அவளின் தலைமுடியைப் பிடித்து இழுத்து; கல்யாணம் ஆனவள் அடுத்தவனின் மனைவி என்றும் பாராமல் பளார் பளார் என்று அறைந்தான். போதாத குறைக்கு அண்ணனின் மனைவி ஒரு கம்பு ஒன்றை எடுத்துக் கொண்டு அடிக்க பாய்ந்தாள். அடித்தும் விட்டாள்.இது எங்கேயாவது நடக்குமா?

வெளியே சொன்னால் அவமானம் . அவள் உருண்டு திரண்டு இருக்கிறாள். அவள் அடிப்பதை என்னால் தடுக்க கூட முடியவில்லை. பாவி விளங்குவாளா? என மனதிற்குள் விம்மினாள்.

அன்றிரவே காய்ச்சல் கண்டது கவிதாளுக்கு. குறை ஒன்றும் சொல்ல முடியாது தான் நினைத்தபடி இல்லை . மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று நன்றாகவே கவனித்துக் கொண்டான் முத்து. நடந்ததை சொன்னால் மிருகமாகி விடுவான் என மனதிற்குள் எல்லாவற்றையும்  புதைத்துக் கொண்டாள்.

செல்வம், செல்வோம் செல்வோம் என்று சென்று விடும். காலம் தானே எல்லாவற்றிற்கும் மருந்து .காலத்தை வென்றவர் யார்? இனி ஒருபோதும் என்னவனிடம் சண்டை போடக்கூடாது. நான்தான் தவறாக புரிந்து கொண்டேன். அவரின் மனதைப்படிக்க ஒரு வாய்ப்பு கிடைத்ததே அது போதும் எனப் பெருமூச்செறிந்தாள் . உடல் வலிமை குன்றி இருந்தாலும் மன வலிமையால்  மெல்ல மெல்ல எழுந்து கோலமிட தயாரானாள். கதிரவன் உதித்தது. அவளின் வாழ்க்கையும் தான்.

சிறுகதையின் ஆசிரியர்
கு.ஜெயா பிரின்ஸி

பதிவு எண்:23213154022018,

முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர்,

தமிழ்க்கலை ஆய்வகம்,

தெ.தி இந்துக் கல்லூரி,
நாகர்கோவில்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here