முன்னுரை
பாட்டியல் நூல்களுக்கு எடுத்த பழைய உரைகளின் அமைப்பு மட்டுமே இங்கு நோக்கப் பெறுகின்றன. பண்டைய பாட்டியல் உரைகள் பிற இலக்கண உரைகள் போலவே அமைந்துள்ளன. எனினும் பிற இலக்கண உரைகள் போல விரிந்த நிலையிலோ மிகுதியாக மேற்கோள் காட்டும் போக்கையோ நடைநல சிறப்புகளையோ பெரிதும் கொள்ள வில்லை என்று கூறலாம். பாட்டியல் உரைகள் பெரிதும் சுருக்கமாகவே அமைந்துள்ளன. இலக்கிய வகைப் பற்றிக் கூறும் இடங்களில் முழுமையாக இலக்கியங்களை எடுத்துக்காட்டல் என்பது சாத்தியமற்றது ஆகையால் உதாரணங்கள் இந்த உரைகளில் மிகுதியும் இடம்பெறவில்லை. பாட்டியல் இலக்கண செய்திகளுள் வடமொழி இலக்கண செய்திகளும் இடம்பெற்றுள்ளதால் வடமொழி சார்ந்த சொற்கள், ஆட்சிகள் ஓரளவு காணப்படுகின்றன. பாட்டியல் இலக்கண உரைகள் தமது அமைப்புகள் இலக்கண நூற்பாக்களை மேற்கோள்களாக கொண்டுள்ளன. சில இடங்களில் இலக்கிய இலக்கணங்களில் இருந்து மேற்கோள்களாக கொண்டுள்ளன.
உரைகளில் கலைச்சொல் விளக்கம்
பாட்டியல் இலக்கண உரைகள், பாட்டியல் கலைச்சொற் களுக்குச் சுருக்கமாகவும், தெளிவாகவும் விளக்கம் அளித்துள்ளன. ஒரே கலைச்சொல்லுக்கு ஒவ்வொரு உரையும் தந்துள்ள விளக்கத்தைப் பின்வரும் பகுதியில் நோக்கலாம். வெண்பாப் பாட்டியல், வரையறுத்த பாட்டியல், நவநீதப் பாட்டியல், சிதம்பரப் பாட்டியல், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம் இவற்றால் உரைகளின் கலைச்சொல் விளக்கம் கூறும் போக்கினை அறியலாம்.
மங்கலச்சொல்
வெண்பாப் பாட்டியல்
சீர், எழுத்து, பொன், பூ, திரு, மணி, நீர், திங்கள், சொல், கார், பரிதி, யானை, கடல், உலகம், தேர், மலை,மா, மங்கை, தீபம் இவை மங்கலச்சொல்.
நவநீதப்பாட்டியல்
திரு, மணி, பூ, திங்கள், ஆரணம், சொல், சீர், எழுத்து, பொன், தேர், புனல், கார், புயம், நிலம், கங்கை, மாலை, உலகம், பரி, கடல், ஆனை, பருதி, அமுதம், புகழ் ஆக இருபத்து மூன்று மங்கலச்சொல்
சிதம்பரப்பாட்டியல்
மா. மணி, தேர், புகழ், அமுதம், எழுத்து, கங்கை, மதி, பரிதி, களிறு, பரி, உலகம், நீர், நாள், பூ. மலை, கார், திரு, கடல், தீர், பழமை, பார் சொல், பொன், திகிரி இவை இருபத்தைந்தும்.
இலக்கண விளக்கம்
சீர், பொன், பூ, மணி, திங்கள், பரிதி, கார், திரு, எழுத்து, கங்கை, யானை, கடல், நிலம், மா, உலகம், சொல், நீர், தேர், அமுதம், புகழ், நிலம், ஆரணம், கடவுள், திகிரி முதலிய முதற் சீர்கண் அமைவது மங்கலச்சொல்.
முத்து வீரியம்
கார், புயல், மா, மணி, கடல், ஆரணம், உலகு, பூ, அமுதம், தேர்,வயல்,திங்கள், பொன், எழுத்து, சூரியன், யானை, குதிரை, கங்கை, நிலம், திரு, இவை முதலிய மங்கலச்சொல்.
தொன்னூல் விளக்கம்
கங்கை, மாலை, நிலம், கார், புயல், பொன், மணி, கடல், சொல், கரி, பரி, சீர், புகழ், எழுத்து, அவர், திங்கள், தினகரன், தேர் வயல் அழுத்தம், திரு, உலகு, ஆரணம், நீர் என்று சொல்லப்பட்ட இருபத்தினான்கு சொல்லு மித்தொடக்கத்தான் மங்கலச்சொல். காலத்தால் முந்தையது வெண்பாப் பாட்டியல் தொடக்கி தொன்னூல் விளக்கம் வரை மங்கலச்சொல் மாற்றம் பற்றி கலைச் சொல்லுக்கு விளக்கம் அமையுமாறு அமைந்துள்ளது. மங்கலம், சொல், பால், வருணம், உண்டி, தானம், அக்கரம், நாள், கதி, கணம் என்று பத்து பொருத்தங்களில் மூன்றுக்கு மட்டும் கலைச்சொல் எவ்வாறு காலத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது என்பதை காண்கிறோம். முதன்மொழிக்கு அடுத்து இயலில் சிற்றிலக்கியத்திற்கு கலைச்சொல் கூறப்படுகிறது.
வெண்பாப் பாட்டியல்
கோவை கட்டளைக் கலித்துறை நானூறு அகப்பொருள் மேல் வருவன கோவை.
நவநீதப்பாட்டியல்
பொருளதிகாரத்துப் பிரமம், பிராஜா பத்தியம், ஆரிடம், தெய்வம். காந்திருவம், அசுரம், இராக்கதம் பைசாசம் என்று சொல்லப்பட்ட எட்டு வகை மணத்தினுள் காத்திருவ மணத்தில் நானூறு கலித்துறைப் பாடுவது கோவை.
சிதம்பரப் பாட்டியல்
அகப்பொருள்மேற் கலித்துறை நானூறு பாடுவது கோவையாம்.
இலக்கண விளக்கம்
கட்டளைக்கலித்துறை நானூறாகத் திணை முதலாக துறை ஈறாகக் கூறப்பட்ட பன்னிரண்டு அகப்பாட்டு உறுப்பும் வழுவின்றித் தோன்றப் பாடுவது அகப்பொருட் கோவையாகும்.
தொன்னூல் விளக்கம்
பொருளதிகாரத்தின் கண்ணே காட்டிய தன்மையிற் களவு, கற்பென விருபா லுடைய வகப்பொருட்டிணைகளேழும் விளக்கிக் கலித்துறை நானூறாகப் பாடித் தொகுத்த செய்யுள் கோவை.
முத்து வீரியம்
இருவகையாகிய முதற்பொருளும் பதினான்கு வகையாகும். கருப்பொருள் பத்துவகையாகிய உரிப்பொருளும் பெற்றுக் கைக்கிளை முதலுற்ற அமையும் காமப்பகுதியவாம் களவொழுக்கமுற் கற்பொழுக்கமும் கூறவே யெல்லையாகக் கட்டளைக் கலித்துறை நானூற்றால் திணை முதலாகத் துறையீறாகக் கூறப்பட்ட பன்னிரண்டாகப் பாட்டுறுப்பும் வழுவின்றித் தோன்றப்பாடுவது அகப்பொருள் கோவை. ஆறு பாட்டியல் உரைகளில் கோவை கலைச்சொல்லுக்கு விளக்கம் கூறுகிறது.
நவநீதப்பாட்டியல்
இருவர் வேந்தர் யானை பொருத வெற்றி ஒருவன் செய்கிற புறநடைசேர் குரவைமேல் நேரடி முதலான சீர்களின் இவ்விரண்டடியாகத் தாழிசையான் வருவது பரணி.
இலக்கண விளக்கம்
போரிடை ஆயிரம் களிற்றியானை படைவென்ற வீரத் தன்மை உடையோனுக்குப் பாடப்படுவது பரணி.
தொன்னூல் விளக்கம்
பரணி யாமாறுணர்த்தும் போர்முகத் தாயிரம் யானையைக் கொன்ற வீரனே பாட்டு நாயகனாகக் கொண்டு பரணிக் குறுப்பெனக் கடவுள் வாழ்த்துங் கடைதிறப்பும். பாலை நிலமுங் காளிகோயிலும் பேய்களோடு காளியுங் காளியோடு பேய்களுஞ் சொல்ல, சொல்லக் கருதிய நாயகன் கீர்த்தி விளங்கறு மவன் வழியாகப் புறப்பொருள் போன்ற வெம்போர் வழங்க விரும்பறு மென்றிவை யெல்லா மிருசீர் முச்சீரடி யொழிந்தோழிந்த மற்றடியாக வீரடி பஃநொழிசையாய்ப் பாடிய செய்யுளே பரணி.
முத்துவீரியம்
போர், முகத்து ஆயிரம் யானையைக் கொன்ற வீரனைத் தலைவனாகக் கொண்டு கடவுள் வாழ்த்து, கடைதிறப்பு, பாலை நிறம், காளிகோயில், பேய்களோடு காளி, காளியோடு பேய்கள் கூறத் தான் சொல்லக்கருதிய தலைவன் கீர்த்தி விளங்க அவன் வழியாகப் புறப்பொருள் தோன்ற வெம்போர் வழங்க விரும்பல். இவையெல்லாம் இருசீரடி, முச்சீரடி, யொழித்து, ஒழிந்த மற்றடி யாக ஈரடிப் பலதாழிசையாற் பாடுவது பரணி. வெண்பாப் பாட்டியல், சிதம்பரப் பாட்டியல் இவை இரண்டு நூல்களில் பரணி இலக்கணம் கொடுத்துள்ளன. ஆனால் உரையில் கலைச்சொல் விளக்கம் கொடுக்கவில்லை.
உரைகளில் மேற்கோள் நூற்பாக்கள்
உரைகளில் நவநீதப்பாட்டியலில் பல மேற்கோள் பாடல்கள் கையாண்டுள்ளார் உரையாசிரியர்.
📜 ”இந்திர கணமே பெருக்கஞ் செய்யும் சந்திர கணமே வாணாற் தரூஉம் சீர்த்த நீர்கணம் பூக்கணஞ் செழுந்திரு ஆங்கு மென்றாய் கறையப் படுமே” என்பது மாமூலம்,
📜 “நேரசை யாகவும் நிரையசை யாகவும் சீர்பெற வெடுத்தல் சிலவிடத் துளவே” என்பது இந்திர காளியம்,
📜“அந்தர கணமே வாழ்நாட் குன்றும் சூரிய கணமே வீரிய மகற்றும் வாயுகணமே செல்வ மழிக்கும் தீயின் கணமே நோயை விளக்கு” என்று ஒப்புமையாக தொன்னூல் விளக்கம் கூறுகிறது என்ற கருத்து பாட்டியலே ஒப்புமையாக கூறியுள்ளதை காட்டுகிறது.
📜கலம்பகத்தின் செய்யுட் தொகை பற்றி பாட்டியல் நூல்களில் கூறப்பட்டுள்ளது. அதற்கு ஒப்புமை மற்ற இலக்கணங்கள் நூல்களில் இருந்து எடுத்துக்காட்டியுள்ளார் உரையாசிரியர்.
📜“அமராக்கு நூறந் தணருக் கிழிவைத் தரசர்க்குத் தொண்ணூறு மூன்றாம் பட்ட முடிபுடையா மன்னர்க் கெண்பது வணிநர்க் கெழுபது மற்றை யோர்க்குத் துணியி லறுபத் தஞ்சு சொல்லும்” இது முள்ளியார் கலித்தொகை.
📜 ”அந்தணர் அரசர் வணிகர் வினைஞர்க்குத் தொண்ணூ றென்ப தெழுப தறுபது விண்ணோர் தமக்கு நூறெனவிளம்பினர்” என்பது கல்லாடம்.
📜“அமர்ரர்க்கு நூறந் தணருக் கிழிவைத் தரசக்குத் தொண்ணூ நன்றி முடிபுடையாய் புதல்வாக கெண்பது புகலுங் காலை.” ”தானைத் தலைவர்க்கும் வணிகர்க்கும் எழுப தேனை யோர்க்கிழி பிருபது பாட்டே”
முடிவுரை
இவ்வியலில் பாட்டியல் இலக்கண உரைகளின் இயல்புகள் அமைப்புகள், நோக்கப்பெற்றன. பாட்டியல் இலக்கண உரைகள் ஓரளவு சுருக்கமாகவே அமைந்துள்ளன. வடமொழி செய்திகளை ஒப்பிட்டு காட்டு கின்றன. வடமொழி கலைச்சொற்களை இணைத்து சுட்டுகின்றன. முந்தைய, பிற பாட்டியல் இலக்கண நூல்களின் நூற்பாக்கள் பலவற்றை மேற்கோள்காக காட்டுகின்றன. ஆங்காங்கு நடைநயம், தொடர்களைக் கொண்டுள்ளன. தொடர்புடைய பிற பாட்டியல் நூலாரின் கருத்துக்களை ஒப்பிட்டுக் கூறுகின்றன. வடமொழி இலக்கண கலைச்சொல், விளக்கம் தருதல், இலக்கிய மேற்கோள்காட்டல் பிற பாட்டியல் நூலாரின் கோட்பாட்டை ஒப்பிட்டு ஒத்தோ உறந்தோ கூறுதல், நடைநலம் வாய்ந்த தொடர்களை கொண்டிருத்தல் ஆகியக் கூறுகளை உரையின் சிறப்பியல்புகளாக கருதமுடிகின்றது.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்,
முனைவர் ஞா.விஜயகுமாரி,
உதவிப் பேராசிரியர்,
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி,
மீனம்பாக்கம், சென்னை-61.