பர்கூர் வட்டார சோளகர்களின் வாழ்வியல்|ஆய்வுக்கட்டுரை|கு.பூர்ணிமா

பர்கூர் வட்டார சோளகர்களின் வாழ்வியல் - கு.பூர்ணிமா
முன்னுரை

தமிழகத்தின் பெரும்பாலான பழங்குடிகள் மலைப்பகுதிகளில் வசிக்கின்றனர். கிழக்கு மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இவர்கள் தற்கள் வாழ்வாதாரத்தைப் பண்டைய காலந்தொட்டு அமைத்துக் கொண்டுள்ளனர். மலைகள் மட்டுமல்லாது சமவெளியிலும் சில பழங்குடிகள் வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலும் வேட்டையாடு;தலையும், வனத்தில் உள்ளபொருட்களைச் சேகரித்து உண்ணுதலையும் செய்து வந்தவர்கள், தற்பொழுது அரசாங்கத்தின் வனக் கட்டுப்பாட்டால், வனவிலங்கு பாதுகாப்பு சட்டங்களால் வேட்டையாடுதலை கைவிட்டு விவசாயத் தொழிலுக்கு மாறி வருகின்றனர். சோளகப் பழங்குடிகள் பூர்வீகமாகவே வனப்பகுதிகளில் வாழ்ந்து வருபவர்கள். மற்ற பழங்குடிகளோடு ஏற்ற தாழ்வின்றி பழகும் தன்மை கொண்டோராய் விளங்குகின்றனர்.

சோளகர் பெயர்காரணம்
சோளா என்றால் காடு. காட்டில் வாழ்வதால் சோளர்களுக்கு இப்பெயர். சோளகர் என்றால் சோலைகளை ஆள்பவர் என்று பொருள். மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள பழங்குடியினரில் சோளகரும் அடங்குவர். இவர்கள் தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்திலும் அதன் அருகில் உள்ள கர்நாடக எல்லைப்புற மாவட்டங்களிலும் நிறைந்து வாழ்கின்றனர். சோளகரைப் பொறுத்தவரை தமிழகத்தின் பழங்குடி மக்கள் தொகையில் இவர்களின் எண்ணிக்கை ஒரு சதவிகிதத்திற்கும் குறைவே ஆகும். இவர்களின் சமூக – வாழ்வியலில் வனத்திற்கு முக்கிய இடமுண்டு, வனம் என்பது அவர்களின் வாழ்வில் பிரிக்க முடியாத ஓர் பகுதியாகும்.

சோளகர்களின் வேறுபெயர்கள்
🎯 சோளகர்

🎯 கஷாலகர்

🎯 சோளகா
🎯 சோளக நாயக்கன்
என்னும் பெயர்களால் அழைக்கப்படுகின்றனர்.

வாழ்விடங்கள்
சோளகர்கள் தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்திலும் தென் கர்நாடகத்தின் பிலிகிரிரங்க மலைப்பகுதிகளிலும் பரவி வாழ்கின்றனர். சத்தியமங்கலம், பர்கூர் பகுதிகளில் நிறைந்து காணப்படுகின்றனர். திம்பம் மலைப்பகுதியில் உள்ள ஆசனூர், தாளவாடி, கெத்தேசால், கானக்கரை, கேர்மலா, ஒரத்தி,மாவளம், தெங்குமராடா, கோட்டமலா, பெடுகுழி, பெஜலட்டி, புழிஞ்சூர், கோட்டடம், பார்டு, பாடர் தொட்டீ, புத்திபவுகா, நோக்கநல்லி மற்றும் மனுக்காய் ஆகிய இடங்களில் வசிக்கின்றனர்.
மொழி

இவர்களது பேச்சு மொழி தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய இரண்டு மொழிகளின் கலவையாக உள்ளது. இதனைச் சோளகர் வழக்காறு என்றே சொல்லலாம். கன்னடம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளையும் சரளமாகப் பேசுகின்றனர். பள்ளிக் கல்வி பெற்றவர்கள் மட்டும் தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாக உள்ளனர்.

வழிபடும் கடவுள்கள்

                          மாதேஷ்வரன்

🎯 சிவன் (கோத்திரம்)

🎯 பால் (வம்சம்)

🎯 ஏழு (குலம்)

                    சித்தேஷ்வரன்

🎯 விஷ்ணு (கோத்திரம்)
🎯 பொங்கர் (வம்சம்)
🎯 ஐந்து (குலம்)

சோளகருக்குப் பொதுக்கடவுளாக சிவனை வழிபடுகின்றனர், ஒவ்வொரு இனத்திற்கும் தனித்தனியே குல தெய்வங்களும் உண்டு. வாரம் தோறும் தங்கள் குல தெய்வக் கோயிலுக்குச் சென்று பூசை வைக்கின்றனர்.

குலம்
சோளகர்கள் தங்களை ஐந்து குலங்களாகப் பிரித்துள்ளனர்,

🎯 செளிகர்

🎯 பெள்ளீர்

🎯 சூருள்
🎯 தென்னீர்

🎯 ஆலர்

சோளகர்களின் தோற்றக்கதை

(சோளகர்தொட்டி மற்றும் இலிங்காயத்துகள் இனவரைவியல் ஆய்வு நூலில் உள்ளது)

ஒரு காலத்தில் கெத்தேசால் மலையில் காரையன், பில்லையன் என்ற இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். இருவரும் தெய்வ சக்தி மிக்கவர்கள். அதில் காரையன் மூத்தவன். பில்லையன் இளையவன். அவனை மாதேஸ்வரன் என்றும் கூப்பிட்டார்கள். அப்போது சாவண்ணா என்ற மிகப்பெரிய அரக்கன் மலையைப் போன்றவன் இந்த வனம் முழுவதையும் தனது பிடியில் வைத்திருந்தான். அவனது மந்திர சக்தியால் தேவர்களையெல்லாம் அடிமையாக்கினான். கடவுளர்கள் கூட அவனிடம் அடிமை வேலை செய்ய வேண்டிய நிலை வந்தது. காரையனும், பில்லையனான மாதேஸ்வரனும் அவனிடம் அடிமைகளாக ஆக்கப்பட்டிருந்தார்கள். மூத்தவன் காரையன் அரக்கன் சாவண்ணாவின் சக்தியை அறிந்து சற்றுப் பொறுத்துத் தான் அவனிடம் மோத வேண்டுமென்று முடிவு செய்து அவனுக்குப் பணிவது போல நடந்து கொண்டான். சாவண்ணா, காரையனை மலையின் தென் பக்கம் வேலை செய்ய அனுப்பி விட்டான். ஆனால், இளையவன் மாதேஸ்வரன் அரக்கனிடம் அலட்சியமாகவே நடந்து கொண்டான்.

அரக்கன் இட்ட கட்டளைகளை மெதுவாக, தூங்குபவனைப் போலச் செய்து வந்தான். அதனால், கோபம் கொண்ட அரக்கன் சாவண்ணா, மாதேஸ்வரனைத் தூரத்திலிருந்து கூப்பிட்டு, கோபமுடன் உன் பெயரென்னடா? என்றான். “மாதேஸ்வரன்” என்று பதிலுரைத்தான். அது “மாதாரி” என அரக்கன் காதில் விழுந்தது. அரக்கன் மாதேஸ்வரன் செருப்புத் தைக்கும் தொழில் புரிபவன் என முடிவு செய்து, “என் கால்கள் வெப்பத்தில் வாடுகிறது. ஒரு ஜோடி செருப்புகளை எனக்குத் தைத்துக் குடுடா” என்றான். மாதேஸ்வரன் தயங்கவே, தனது கட்டளையை நிறைவேற்றத் தயங்குவதாகக் கருதிக் கோபமுற்றான் சாவண்ணா. உடனே, மாதேஸ்வரன் சமாளித்து, “தங்களைப் போன்ற மகா ராஜாக்களுக்கு நேர்த்தியாக செருப்பு செய்ய காலமும்,உழைப்பும் தேவை. எனவே, தற்காலிகமாக என்னை அடிமையிலிருந்து விடுவிக்க வேண்டும்” என்று பணிவுடன் கேட்டான். உன் செருப்பு சிறப்பானதாக இருந்தால், தற்காலிகமென்ன, நிரந்தரமாகவே விடுதலை தருகிறேன். ஆனால், சரியில்லாததாகக் காலைக் கடித்தால், உன் தலையைச் சீவி விடுவேன்” என்று அவனை செருப்பைச் செய்ய வேண்டி விடுவித்தான். மாதேஸ்வரனுக்கு செருப்பை எப்படி செய்வது என்று தெரியவில்லை.

அதே சமயம் கடவுள்களையே அடிமைப்படுத்திய சாவண்ணாவை அழிக்கவும் எண்ணினான். அப்போது அடிமைகளுடன் சக அடிமையாயிருந்த கிருஷ்ணனிடம் தனக்கு உதவுமாறு கேட்டான். சக அடிமைகளைக் கொண்டு அழகிய மெழுகினால் செய்த ஒரு ஜோடி செருப்பைச் செய்து மாதேஸ்வரனிடம் கொடுத்து, சாவண்ணாவை கெத்தேசால் மலைக்கு வடக்கேயுள்ள பெரிய வழுக்குப்பாறை மலைக்கு கூட்டி வரும்படியும், மற்றதைத் தான் கவனித்துக் கொள்வதாகவும் கூறி அனுப்பினான் கிருஷ்ணன். அதே போல், மாதேஸ்வரன் ஒரு ஜோடி மெழுகிலான அழகிய பெரிய செருப்பை மாட்டு வண்டியில் வைத்து சாவண்ணா முன் கொண்டு வந்து நிறுத்தினான். சாவண்ணா வேலைப்பாடு மிக்க செருப்பில் மனதைப் பறிகொடுத்தான். அதனைப் போட்டுக் கொள்ளப் பிரியமானான். ஆனால், தனது செருப்பை அணிந்து கெத்தேசால் மலையின் வடக்கேயுள்ள வழுக்குப் பாறை மலையில் சாவண்ணா நடப்பதைப் பார்க்க வேண்டும் என்று பணிந்து வேண்டினான். சாவண்ணாவும், அவ்வாறே செய்வதாக ஒப்புக் கொண்டான். அப்போது கிருஷ்ணன் மற்ற தேவர்களின் உதவியுடன் வழுக்குப் பாறை மலை முழுவதையும் இலை, தழைகளை நிரப்பித் தீயிட்டு நன்றாகச் சூடேற்றி அதனை அனல் பிழம்பாக மாற்றி வைத்திருந்தான்.

இதனை அறியாத சாவண்ணா மெழுகுச் செருப்பை அணிந்து தீச் சுவாலை மிக்க பாறையில் நடந்தபோது மெழுகுச் செருப்பு உருகி சாவண்ணா மலையிலிருந்து கீழே உருண்டான். அப்போது மறைந்திருந்த தெய்வங்கள் கற்களை சாவண்ணாவின் மீது உருட்டித்தள்ளி அவனைக் கொன்று சமாதியாக்கினார்கள். சாவண்ணாவைக் கொன்று தெய்வங்களை விடுவித்ததால், தெய்வங்கள் அனைத்தும் மாதேஸ்வரனுக்கு அருளாசி கூறியதால், மாதேஸ்வரனை மக்களும் வழிபடத் தொடங்கினார்கள். மாதேஸ்வரன் கத்திரி மலைப் பக்கம் போய்த் தங்கிக் கொண்டான். காரையன் கெத்தேசால் மலைக்குத் திரும்பி வந்தபோது, அவன் தம்பி மாதேஸ்வரனை மக்கள் தெய்வமாக வழிபடுவதையும், அவன் சாவண்ணாவைக் கொன்றதையும் கேட்டு ஆனந்தமடையாமல் இளையவனான மாதேஸ்வரன் இந்தச் செயல்களைப் புரிவதற்கு முன்பு, தன்னிடம் ஆலோசனையும், உதவியையும் பெற்றிருக்க வேண்டுமல்லவா? தனித்துப் புகழடைய சகோதரனான என்னையே நம்பாமல் அனைத்தையும் மறைத்து விட்டானே துரோகி. அவனை உயிருடன் விடமாட்டேன் என்று மிகப் பெரிய கத்தியை எடுத்துக் கொண்டு கத்திரிமலை நோக்கிக் கோபமாகப் பயணமானான் காரையன். காரையன் பெரிய கத்தியுடன் மாதேஸ்வரனைக் கொல்ல வரும் செய்தி மாதேஸ்வரனுக்கு கத்திரி மலையில் எட்டியதும், அவன் கிருஷ்ணனிடம் மீண்டும் அபயம் தேடினான்.
 
அப்போது சூறாவளியைப் போல காரையன் கத்தரி மலையினை நெருங்கிவிட்டிருந்தான். உடனடியாகக் கிருஷ்ணன் மாதேஸ்வரனைத் தூக்கிக் கொண்டு ஒரே தாவில் கத்திரிமலையிலிருந்து உருகமலைக்குத் தாவினான். கிருஷ்ணனின் கால் வேகமாகப் பதிந்ததில் உருகமலை உருகிப் போனது. எனவே, கிருஷ்ணன், மாதேஸ்வரனை அடுத்த நொடியிலேயே தூக்கிக் கொண்டு ஏக்ரா மலைக்குத் தாவினான். காரையன் கத்தியைச் சுழட்டிக் கொண்டு அங்கும் பாய்ந்து வந்தான். எனவே, கிருஷ்ணன் மீண்டும் மாதேஸ்வரனை வனத்திற்குத் தூக்கிப் போய் அங்கிருந்த ஒரு பாறைக் குகையில் ஒளித்து வைத்தான். ஆனால், காரையன் அந்தப் பாறையையே கத்தியால் இரண் டாகப் பிளந்தான். மாதேஸ்வரன் அங்கிருந்து வேறு வழியின்றி ஒரு எலிப் பொந்தில் புகுந்து ஒளிந்து கொண்டான். காரையன் அங்கிருந்த மேய்ப்பர்களைக் கூப்பிட்டு கால்நடைகளால் எல்லா எலிப் பொந்துகளையும் அடைக்குமாறு உத்தரவிட்டான். அதனால், எலிப் பொந்தில் காற்றோட்டமின்றி வெப்பம் அதிகமாகவே, மாதேஸ்வரன் வெளியே வந்து காரையனிடம் அவனுக்கு மதிப்புத் தராமல், ஆலோசனை பெறாமல் நடந்ததற் காக மன்னிப்புக் கோரினான். காரையன் ஒரு நிபந்தனை விதித்தான். மாதேஸ்வரனுக்கு வழிபாடு செய்வதற்கு முன்பு மூத்தவனான தன்னை வணங்க மாதேஸ்வரன் மக்களுக்குக் கட்டளையிட வேண்டுமென்றான். மாதேஸ்வரனும் அதற்கு ஒப்புக் கொண்டான். அதன் பின்பே. வந்தவன் சாந்தமடைந்தான். மாதேஸ்வரனின் வம்சத்தில் சோளர்கள் இலிங்காயத்துக்கள், காரையனின் வம்சத்தவர்கள் காரையன் வம்சத்தில் வந்த சோளகன் ஒருவன் கறி சாப்பிடப் பிரியப்பட்டுத் தன் கழுத்திலிருந்த லிங்கத்தைக் கழற்றி ஒரு இலிங்காயத்திடம் கொடுத்தான். பின்னர், அதை வாங்கி அணிய மறந்தே போய்விட்டான். எனவேதான், இலிங்காயத்துக்கள் லிங்கம் அணிகிறார்கள், சோளகர்கள் அணிவதில்லை.

தொழில் மற்றும் பொருளாதாரம்

சோளகர்கள் ஆரம்ப காலகட்டங்களில் வேட்டையாடுதலையே முதன்மைத் தொழிலாக கொண்டிருந்தனர். வேட்டையாடிய விலங்கின் தோலையும், எலும்பையும் மண்ணில் குழி தோண்டி புதைத்து விடுகின்றனர். கறிக்கூறு போடும் போது முதலில் விதவை பெண்ணுக்கு ஒதுக்குவர். பிறகு வேட்டையாடியவர்களுக்கு அதிக பங்கும் தொட்டியினருக்கு மீதமும் பிரித்துக் கொடுக்கின்றனர். தற்பொழுது இவர்கள் வேட்டை மற்றும் உணவு சேகரிப்பில் இருந்து பயிரிடுதல் முறைக்கு மாறியுள்ளனர். வனத்தில் வனக்காவல் துறையின் கட்டுப்பாடு அதிகரிக்க அதிகரிக்கப் பழங்குடிகளின் காட்டின் மீதான உரிமை குறைந்துகொண்டே போகிறது. வேட்டையாடிய காலத்தில் கிடைத்த பொருள் தொட்டியில் உள்ள அனைவருக்கும் பொதுவாகப் பகிரப்படுகிறது, வேட்டையாடிய நபருக்கு அதிகப் பங்கு கொடுக்கப்படுகிறது.

உணவு
               
கேழ்வரகு இவர்களின் பிரதான உணவாக உள்ளது. அத்துடன் ஏதேனும் காய்கறி வகையினைச் சேர்த்துக் கொள்கின்றனர். சமீப காலமாக அரிசி இவர்களின் உணவின் முக்கிய அங்கமாக மாறி வருகிறது. இவர்கள் தாங்கள் விளைவிக்கும் பீன்ஸ், அவரை ஆகியவற்றையும் சேகரிக்கும் தேன் முதலியவற்றையும் அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்கின்றனர். கேழ்வரகுக் களி, கஞ்சி மற்றும் கேழ்வரகு அடை ஆகியன இவர்களின் தின உணவாக உள்ளன. 

வேளாண்மை
                 
வேட்டையாடுதலைக் கைவிட்டுப் பயிரிடுதலை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளனர். தற்போதைய பயிரிடுதல் முறையினைக் கடந்த இருபது ஆண்டுகளாகப் பின்பற்றிவருகின்றனர். சோளகர் தற்போது வேளாண் குழுவாக முழுமையாக மாறிவிட்டனர். வேளாண் சார்ந்த உற்பத்தியே சோளகரின் பிரதான வருவாயாக உள்ளது. ஆடிப்பட்டத்தில் ராகியினை விதைக்கின்றனர். ராகி விதைப்பின் போது இவர்கள் கூறும் பழமொழியான,
காத்தவர் தின்னது போக
கண்டவர் தின்னது போக           
கள்ளர் தின்னது போக           
விளையணும் விளையணும் சாமி…
தற்போது ராகிப்பயிர் பயிரிடுவது மட்டுமின்றி  கேழ்வரகு, பீன்ஸ், அவரை, உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ் மற்றும் கேரட் முதலானவற்றை வெவ்வேறு காலங்களில் பயிரிடுகின்றனர். ஆண்டிற்கு ஒரு முறை கேழ்வரகையும் ஆண்டிற்கு இரண்டு முறை பீன்ஸ் அல்லது அவரையையும்  விளைவிக்கின்றனர். மழை பொழியும் போதே கேழ்வரகு விதைக்கின்றனர். பயிரிடுதலைச் சுழற்சி முறையில் கேழ்வரகையும் பிற காய்கறி வகைகளையும் அடுத்தடுத்து விளைவிக்கின்றனர்.

தேன் சேகரிப்பில் இவர்களின் பங்கு
 
தேன்சேகரித்தல் இவர்களின் பிரதான பருவம் சார்ந்த வருவாயாக உள்ளது. தேன் எடுத்தலுக்குரிய காலமாக மழைக்காலம் முடிந்த பின்பு வனத்தில் வேங்கை பூக்களும் மற்ற மலர்களும் பூத்துக் கிடப்பதால் தேனீக்கள் தேன் சேகரித்து அதன் கூடுகளை கனமாக்கி வைத்திருக்கும். எனவே இம்மக்கள் அமாவாசைக்குள் தேன் எடுக்கின்றனர்.
சோளகர் சேகரிக்கும் தேன் வகைகள் நான்கு,
🎯 பெருந்தேன்

🎯 அடுக்குத்தேன்

🎯 கொம்புத்தேன்

🎯 கொசுத்தேன்

என்பவைகளாகும் ஆகும். தேன் எடுக்க செல்லும் போது தகர டின்னும், கயிறும் எடுத்துச்  செல்கின்றனர். தேனினை எடுத்தப் பின்பு சிறிது பிய்த்து (பிரித்து) அதனை மண் தரையில் வைத்து சாமிக்கு நன்றி சொல்வதை இவர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

முடிவுரை
இந்தியா பல்வேறு இனத்தவர்கள் வாழும் ஒரு மதச்சார்பற்ற நாடாகும். இங்கு வாழும் மக்களில் பெரும்பான்மையினர் பழங்குடிகள் பற்றியும், அவர்களது பண்பாடுகள் பற்றியும் அறியாமல் உள்ளனர். அதனை பற்றி ஒரு புரிதலை ஏற்படுத்தும் விதமாக இவ்வாய்வு அமைக்கப்பட்டுள்ளது. எழில் கொஞ்சும் இயற்கையின் அழகை நாகரிக வாழ்க்கையில் ரசிக்க மறந்த நம் மக்களுக்கு, தமிழகப் பழங்குடிகள், அவர்களின் இன்றைய நிலை, வனப் பாதுகாப்பில் பழங்குடிகளின் பங்கு, பண்பாடுகளின் வெளிப்பாடாய் திகழும் சோளக மக்களின் வாழ்க்கையை அறிய இவ்வாய்வேடு பயனுடையதாக அமையும்.

பார்வை நூல்கள்
1.சு. சக்திவேல், நாட்டுப்புறவியல்.

2.பெ. கோவிந்தசாமி, இலிங்காயத்துகள் இனவரைவியல்.

3.அ. பகத்சிங், சோளகர் வாழ்வும் பண்பாடும்.

4.ச. பாலமுருகன், சோளகர் தொட்டி.

5.பக்தவச்சல பாரதி, தமிழகப் பழங்குடிகள்.

6.பக்தவச்சல பாரதி, தமிழக நாடோடிகள் (சங்க காலம் முதல் சமகாலம் வரை)

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
                                                                                                                                                                    ஆய்வாளர்
                                            
                                                                                                                                                                                 திருமதி கு.பூர்ணிமா                 
 பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வாளர்
 
                                                                                                                                                                                                   தமிழ்த்துறை                       
பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரி
 
                                                                                                                                                                     கோபிச்செட்டிபாளையம்
                                                                                                   

Leave a Reply