அனேகமாக, காளிமுத்துவிடம் கடன் வாங்காதவர்கள் யாரும் பாறைப்புதூரில் இல்லை என்றே நம்புகிறேன். ஏதாவது அவசரத் தேவை என்றால் உடனே அவர் வீட்டுக்குத்தான் போவார்கள். எப்போதும் பணப்புழக்கம் உள்ள வெற்றிகரமான விவசாயி அவர். “மாமா” என்றுதான் அவரை அழைப்பேன். முப்போகம் விளையும் அற்புத பூமி அவருடையது. வாழைத்தோப்பும், மாந்தோப்பும் நிறைய தென்னைகளுமாக அவர் தோட்டம் திகழும். அவர் வயலில் விளையும் கிச்சடி சம்பா நெல், பல மாவட்டங்களில் பிரசித்தம். குறிப்பாக சின்ன சேலம் பகுதியிலிருந்து வரும் வியாபாரிகள் முன்பணம் கொடுத்து உறுதி செய்துவிட்டுப் போவார்கள். அறுவடைக்கு ஒருநாள் முன்பே நாமக்கல்லில் தங்கி, நெல் மூட்டைகளை லாரிகளில் ஏற்றிக் கொண்டுதான் ஊர் செல்வார்கள். அந்த அரிசிக்கு அதிக விலை கிடைத்ததால் தவறவிடமாட்டார்கள்.
எங்கள் வீட்டிலும் அந்த அரிசியில்தான் சாப்பாடு. வெறும் சோற்றையே கொஞ்சம் உண்பேன். அத்தனை கவையாயிருக்கும். நான் பத்தாம் வகுப்பு படித்தபோதுதான் அவருக்குத் திருமணமாயிற்று. தோட்டத்தை ஒட்டிய சாளை வீடுதான் அவர்களுடையது. கூட்டுக் குடும்பம். காலி நிலத்தில் பெரிய பந்தல் போட்டு அங்கேயே விருந்து, தரையில் விரிக்கப்பட்ட பாய்களின் மேல், வேட்டிகளைப் அப்போது பரவிய மணத்தை அனுபவித்து ரசித்தது இன்னும் பரப்பி, வெந்த சாதத்தை வடித்துக் கொட்ட கொட்ட என் நினைவில்.
நான் கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரை அவரிடம் வாங்கிய கடனில்தான், எங்கள் வீட்டில் எல்லா காரியங்களும் நடந்தன. அக்காவின் திருமணத்திற்கு, எழுபத்தேழாம் வருடமே இருபதாயிரம் கடன் வாங்கினார் அப்பா. எங்களுக்கிருந்த இரண்டு ஏக்கர் நிலத்தில் விளைந்த காய்களும் கனிகளுமே கடனை அடைத்தன. என் படிப்புச் செலவுக்கும் கடன்தான் வழி செய்தது.
காளிமுத்து மாமா ஒரு கொள்கை வைத்திருந்தார். நூறு, இருநூறு என அவரிடம் வாங்கும் சில்லறைக் கைமாத்துகளுக்கு வட்டி வாங்க மாட்டார். ஆயிரமோ அதற்கு அதிகமோ கடன் தந்தால் நூற்றுக்கு ஒரு ரூபாய் வட்டி கணக்கிட்டு வசூல் செய்துவிடுவார். வசதி குறைந்த சாமானியர்களுக்கு சிறு சலுகையும் தருவார். அவரிடம் நான் கற்றுக் கொண்ட நல்ல பழக்கம் கணக்கு எழுதி வைப்பதுதான். கெட்டி அட்டை போட்ட பேரேடு வைத்திருப்பார். தேதி வாரியாக, ஆள்வாரியாக வரவு செலவு எழுதி வைத்துக் கொள்வார். வட்டி கணக்கில் ஒரு ரூபாய் கூட வித்தியாசம் காண முடியாது. ஆறடி உயரமும், அதற்கேற்ற உருவமும், அடர்ந்த மீசையும், தெளிந்த பார்வையும் அவர் மேல் கூடுதல் மதிப்பை ஏற்படுத்தின.
ஊரில் வேறு சிலரும் அவர் பாணியில் லேவாதேவியில் இறங்கினர். ஆனால், தொழில் தொடர்ச்சி பெரும் கேள்விக்குறியானது. கெடுபிடி செய்யவும் முடியாமல், தணிந்து போகவும் மனமில்லாமல் பணம் கடன் கொடுப்பதை நிறுத்தனர். மாமாவிற்கு விவசாய வருமானம் அபரிமிதமாக வந்ததால்தான் தொடர்ந்து வட்டித் தொழிலை லாபகரமாக நடத்த முடிந்தது. விவசாயம் செழிக்க அவர் நிலத்திலிருந்த கிணறு மிக முக்கியக்காரணம்.
எங்கள் ஊரில் கிணறுகள் அளவில் பெரியவை. வெளியூர்வாசிகள் அதைப் பார்த்து மிரண்டு நிற்பார்கள். அறுபதடிக்கு முப்பதடி என்பது சாதாரண அளவு அதைவிட பெரிய கிணறுகளும் சில இருந்தன. ஊர் சிறுவர்கள் நீச்சல் பழகவும், தேர்ந்த பின்னர் விளையாடித் திளைக்கவும் அவையே நீர்க்களங்கள்.
காளிமுத்து மாமாவின் கிணற்றில் இறங்க யாருக்கும் அனுமதியில்லை. படிக்கட்டுகள் துவங்கும் இடத்தில் முள்படல் ஒன்று கட்டப்பட்டிருக்கும். எளிதாக நகர்த்திவிடலாம். ஆனால் அது இரும்புக் கதவை விட வலிமையாயக் கருதப்பட்டது. குடிநீர் தரும் கிணற்றில் இறங்க, குளிக்க எப்படி அனுமதிப்பார்கள்? அந்தக் கிணற்று நீரின் சுவை, இன்று வரை வேறெங்கும் நான் அனுபவித்தறியாதது. அதுவும் கோடையில், பானையில் குளிர்ந்து கிடக்கும் அந்நீரைப் பருகினால், பழரசத்திற்கு இணையான இனிப்பை உணரலாம். அப்பா சொல்வார் “தேனூத்துடா அது… அப்பிடி அமையறது சாதாரணமில்ல. ரொம்ப அபூர்வம். மண்ணுவாகு, நீரோட்டம், ஆழம் இப்படி பலது ஒண்ணா சேரணும். அம்பது வருஷத்துக்கு முன்னாடி அந்தக் கெணத்த வெட்டுனவங்களோட நல்ல மனசும் ஒரு காரணம்.”
எங்கள் ஊருக்கு ஒரே குடிநீர் ஆதாரம், அவர் தோட்டத்து நீர்த்தொட்டிதான். சுமார் பத்தடி உயரத்திற்கு இருந்த அது மேலே மூடப்பட்டிருக்கும். பதிக்கப்பட்டிருக்கும் குழாய் வழியே நீர் உள்ளே விழுவது வெளியே தெரியாது. சத்தம் மட்டும் கேட்கும். தரையிலிருந்து சுமார் இரண்டடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த மூன்று குழாய்கள் நீரை வெளியே பீச்சிக்கொண்டே இருக்க, பித்தளை மற்றும் தகரக் குடங்கள் வரிசை கட்டி நின்று நிரம்பும். எல்லா வீடுகளிலிருந்தும் காலை, மாலை நேரங்களில் ஆண்களும் பெண்களுமாக அங்கு நீர் பிடித்துச் செல்ல வருவதால் அது ஒரு சந்திப்பு மையமாகவும் உருக்கொண்டது. அலசப்படாத செய்திகளே இல்லை என்னுமளவுக்கு அங்கு வருபவர்கள் அனைத்தையும் பேசித் தீர்ப்பர். நானும் என் பத்தாவது வயதிலிருந்து, கல்லூரியில் இரண்டாமாண்டு முடிக்கும் வரை நீர் எடுத்து வர தினசரி செல்வேன். தேர்வு காலங்களில் மாலை நேரங்களில் போவேன் ஆண்கள் அதிகமாகவும், பெண்கள் குறைவாகவும் நீர் பிடித்துச் செல்ல வருவதால் எப்போதும் பெண்கள் முன்னுரிமை பெறுவர். “அக்கா பாவம் விடுங்கடா பித்தள அண்டாவத் தூக்கிட்டு எவ்ளோ தூரம் போவுணும் மொதல்ல அதப் புடிக்க விடுங்கடா” என்ற கட்டளைக்கு நாங்கள் கீழ்ப்படிந்தே தீரவேண்டும்.
சில திருமணங்களுக்கும் அவ்விடம் புரிந்திருக்கிறது. முத்துசாமியும், சரோஜாவும் அங்குதான் தங்கள் விழைவுகளைப் பகிர்ந்து கொண்டு தத்தமது வீடுகளில் சம்மதம் பெற்று தம்பதியானார்கள். எல்லா காலகட்டங்களிலும் இணைப்பறவைகள் உலவும் தலமாக அவ்விடம் விளங்கியிருக்கிறது.
நான் மூன்றாமாண்டு பட்டப்படிப்பில் தீவிரமாய் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மோகனூரிலிருந்து ஊருக்கு பெரிய குழாய்கள் மூலம் காவேரி நீர் வரத்தொடங்கியது. நாமக்கல் மலையில் இடுப்பில் கட்டப்பட்டிருந்த மேல்நிலைத் தொட்டியிலிருந்து பல ஊர்களுக்கும் நீர் பகிரப்பட்டது. ஊரில் மூன்று முக்கிய இடங்களில் பொதுக் குழாய்கள் நிறுவப்பட்டன. வீடுகளுக்கும் இணைப்புகள் தரப்படவே பெரும்பாலான வீடுகளில் காவேரி பாயத் தொடங்கினாள். அப்போதும்கூட கிணற்று நீரின் சுவைக்குப் பழகிய பலரும் தொட்டிக்கு வந்தே குடிநீர் எடுத்துச் சென்றனர். எங்கள் வீட்டிற்கும் குழாய் இணைப்பு கிடைத்தது. நான் தொட்டிக்குச் சென்று வருவதைக் குறைத்துவிட்டேன்.
படிப்பு முடிந்து இரண்டே மாதங்களில், அப்பாவின் நண்பர் உதவியால் சென்னையில் வேலை கிடைத்தது. கிராமத்தைப் பிரிந்து, மாநகரப் பரபரப்பில் தத்தளிக்கத் துவங்கியிருந்தேன். மாதம் ஒரு முறை ஊர் வருவதே சிரமமாயிற்று. தனியார் நிறுவனம் என்பதால் சனிக்கிழமை அலுவலகம் இயங்கியது. சில சமயம் ஞாயிறுகளில் கூட அரை நாள் சென்று பணியாற்றித் திரும்புவேன்.
ஆற்றுநீர் எங்கள் ஊருக்கு வர ஆரம்பித்ததும், புதிதாக மக்கள் குடி வர ஆரம்பித்தார்கள். வீடு கட்டி வாடகைக்கு விடுவது பெருமளவில் நடக்க ஆரம்பித்தது. கல்லூரியில் என்னுடன் படித்த தென்னரசு பக்கத்து வீதியில் உள்ள ஒரு புது வீட்டிற்கு குடிவந்தான் அவன் பெற்றோர் இருவருமே அரசு அலுவலகத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார்கள், அவன் தேடிக் கொண்டிருந்தான்.
சென்னையில் நான்காண்டுகள் பணி அனுபவம் பெற்றிருந்தபோது, என் ஊருக்கும் எனக்குமான பிணைப்பில் ஓர் இடைவெளியை உணர்ந்தேன். மாரியம்மன் பண்டிகையும், பொங்கல் விளையாட்டுப் போட்டிகளும் நானின்றியே நடைபெற்றன. இளைஞர் மன்றத்தினர் என்னை மெதுவாக மறக்கத் தொடங்கியிருந்தனர். எப்போதாவது ஊர் வரும்போது பழைய நண்பர்களுள் ஓரிருவரை சந்திப்பதோடு சரி. அவர்களும் என்னை “மெட்ராஸ்காரன்” என குறிப்பிடத் துவங்கினர். அறிமுகமில்லாத புதிய இளைஞர்கள் நிறைய காணக் கிடைத்தனர். பள்ளியில் என்னோடு படித்த சிலருக்குத் திருமணம் ஆனது. சேகர் திருமணத்திற்கு மட்டும் வந்து சென்றேன். அது நடந்தது ஞாயிற்றுகிழமை என்பதால்,
ஏப்ரல் மாதம், தமிழ் வருடப்பிறப்போடு வங்கி விடுமுறை நாளொன்றும் சேர்ந்து கொண்டதால் ஞாயிறோடு திங்கள் செவ்வாயும் விடுமுறை கிடைத்தது. சனி இரவே புறப்பட்டு பாறைப்புதூர் வந்தேன். காலையில் தாமதமாய் எழுந்து தயாரானேன். ஊரை ஒருமுறை வலம் வரும் ஆவல் எழுந்தது. நிதானமாய் நடக்க ஆரம்பித்தேன். நெடுநாட்களுக்குப் பின் கட்டியிருந்த வேட்டி அவ்வப்போது தடுக்கியது. பல புதிய வீடுகள் வளர்ந்து கொண்டிருந்தன. கண்ணாடிக் கதவுகளோடு, அபாயகரமான சிவப்பு நிறத்தில் குளிர்சாதனப் பெட்டிகள் தென்பட்டன. கருந்திரவம் நிரப்பப்பட்ட புட்டிகள் உள்ளே தெரிந்தன. தெருக்களின் நீளம் அதிகமாயிருந்தது. முதிர்ந்த மரங்கள் பலவற்றைக் காண முடியவில்லை. மழுப்பப்பட்ட கண்ணாடிச் சுவரோடு நகரின் முகம், மெல்ல மெல்ல எங்கள் ஊருக்கு வந்து தீப்தி அழகு நிலையம் என்னை ஆச்சர்யப்படுத்தியது. கொண்டிருந்ததை உணர்ந்தேன்.
தெரு முனையில் திடீரெனத் தெரிந்த தென்னரசு வேகமாக என்னை நெருங்கினான். மகிழ்வோடு கை நீட்டினேன். “எப்பிடி இருக்க அரசு…?” “நல்லாயிருக்கேன் மணி… இப்பதான் உங்க வீட்டுக்குப் போய்ட்டு வர்றேன். உங்கம்மாதான் நீ வெளீல போ யிருக்கறதா சொன்னாங்க.. ரெண்டு தெரு சுத்தி உன்னப் பாத்திருக்கேன் இப்ப” மூச்சு வாங்கியது அவனுக்கு. “அப்பிடியா…நா வந்திருக்கறது, உனக்கெப்படித் தெரியும்?” “எல்லாம் தெரியும்… மணி எனக்கொரு ஹெல்ப் பண்ணுடா”
“என்ன ஹெல்ப்டா? சொல்லு” என் கேள்விக்கு பதில் சொல்ல முனைகையிலேயே தென்னரசுவின் கண்கள் லேசாகக் கலங்கின. கடையின் நிழலுக்கு அவனை வரச் செய்தேன்.
“என்னாச்சு அரசு? ஏன் பதட்டமா இருக்க?”
“அப்பாவுக்கு வயித்துல கொஞ்சம் பிரச்சினடா… போன வாரம் கோயம்புத்தூர் ஹாஸ்பிட்டலுக்குப் போயிருந்தோம். கண்டிப்பா ஆப்பரேஷன் பண்ணனும்னு சொல்லிட்டாங்க… செவ்வாக்கிழம அட்மிட் பண்ணனும். ஓரளவு பணம் ரெடி பண்ணீட்டோம். இருந்தாலும் இன்னொரு இருபதா யிரம் தேத்தீட்டா தைரியமா நாலு நாளு அங்கேயே தங்கி பாத்துட்டு வந்தர்லாம்…”
“புரியுதுடா… நா போன வாரந்தான் எப்டியில பணம் போட்டேன். இப்ப எடுக்க முடியாதே…?
“பரவாய்லடா…நீ தருவேன்னு நா கேக்குலடா…உனக்கு காளிமுத்து நல்ல பழக்கந்தான? அவருகிட்ட கேட்டு வாங்கித் தாடா…அப்பா மறுபடி ஆபீஸ் போக ஆரம்பிச்ச உடனே வட்டியோட திருப்பிக் குடுத்தர்லாம்… பிளீஸ்”
“சரி சரி வா…” அவன் கையைப் பற்றிக் கொண்டேன். அமைதியின்மையை அவன் உடல் சொல்லிற்று.
காளிமுத்து, இரண்டாண்டுகளுக்கு முன் புதிய வீடு கட்டிக் கொண்டு வந்துவிட்டதை ஏற்கனவே அறிந்திருந்தேன். ட்டிலிருந்த அழைப்பிதழ் மூலம் அது தெரிந்தது. எங்கள் வீட்டுப் புதுமனை புகுவிழாவிற்கு அப்பா சென்று வந்ததாய் சொன்னார். புது வீடு, அடுத்த தெருவின் கடைசியில், அசத்தும் விதமாக அமைந்திருந்தது. கோடம்பாக்கத்தில் ஒரு பிரபலரின் பங்களா என் நினைவுக்கு வந்தது. நாங்கள் நுழைந்ததும் நல்ல வரவேற்பு கிடைத்தது. முன் முற்றத்தில் போடப்பட்டிருந்த சொகுசு இருக்கை என்னை இதமாக உள்வாங்கிக் கொண்டது. தரையின் வழுக்கலும், குளிர்ச்சியும் எங்கள் ஊருக்குப் புதிது. சுவரில் பொருத்தியிருந்த நவீன பாணி படங்களை நான் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். காளிமுத்து உள்ளிருந்து வந்தார். எழப்போன என்னைக் கையமர்த்தி்”வாங்க தம்பி சௌக்கியமா?” என்றார். தென்னரசுக்கு ஒரு புன்னகையும் தலையசைப்பும் வரவேற்பாய்க் கிடைத்தது.
“ம்… நல்லாருக்கேன் மாமா… நீங்க எப்படி இருக்கீங்க?” ”நல்லாருக்கம்ப்பா..மெட்ராஸ்லருந்து எப்ப வந்த? அடிக்கடி பார்க்க முடியறதில்லியே… வருஷக் கணக்காவுது”
“ஆமாங்… மாமா… லீவு கெடைக்கறதில்ல… விடியக்காலந்தான் வந்தேன்…” தொண்டையை செருமிக் கொண்டேன். கொஞ்சம் தண்ணீர் குடித்தால் பரவாயில்லை என்று நினைத்தபோதே ஒரு சிறுமி இரு குவளைகளில் நீரோடு வந்தாள். “குடிங்க தம்பி” என்ற காளிமுத்துவின் குரலில் உற்சாகம் வடிந்திருந்தது. ஆவலோடு, மழை நீரில் தேன் கலந்த சுவையை எதிர்பார்த்து நீரை வாங்கி உள்ளே சரித்தபோது ருசியில் வித்தியாசம் உணர்ந்தேன். “நம்ப கெணத்து தண்ணி மாதிரி தெரியலியே” என்று இழுத்தேன். அடப் போங்க தம்பி… அதெல்லாம் ரெண்டு வருஷத்துக்கு முந்தி… கெணத்து தண்ணி உப்பா ஆயிருச்சு… வாயில வெக்க முடியாது இப்ப… நாங்களே கேன் தண்ணிதான் வாங்கறோம்”
அவர் குரலில் சொட்டிய சலிப்பும், வருத்தமும் என்னை அதிர வைத்தது.
“ஏங்க மாமா… என்னாச்சு?” என்றேன். கம்மிய குரலில் ஒரு பெருமூச்சு வெளிவந்தது அவரிடமிருந்து.
“பக்கத்து தோட்டத்துல ரெண்டு எடத்துல போர் வெல் போட்டாங்க. அதுலருந்தே எல்லாம் மாறிப்போச்சு.. நம்ப கெணத்துல தண்ணி கீழ போயிருச்சு… மோட்டரையும் எறக்கி வெச்சாச்சு… ஏதோ வெவசாயம் ஓடிக்கிட்டு இருக்குது… எல்லாம் போதும்னு விட்டுட்டேன் தம்பி…”
சில நிமிடங்களுக்கு நிசப்தம் கனத்தது. அவரே சுதாரித்துக் கொண்டு உடைத்தார்.
“ஆமா.. என்ன விஷயமா வந்திருக்கீங்க?” “இந்தத் தம்பி வேற வந்திருக்காப்ல…”
‘ஆமாங் மாமா… இவனுக்காகத்தான் வந்தேன். கொஞ்சம் பணம் வேனும்னு சொன்னான். ஒரு இருபதாயிரம்…’
நான் இகழ்ச்சியான சிரிப்பு வெளிப்பட்டது அவரிடமிருந்து. நன்றாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டார். தவிப்போடு அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். தென்னரசுவின் கையில் காலிக்குவளை ஆடிக் கொண்டிருந்தது தெரிந்தது. “பணமா… எங்கிட்ட ஏதுப்பா? எல்லாம் வறண்டு போச்சு… அந்த காலத்துல சம்பாதித்த வெச்சி இந்த வீட்ட கட்டி முடித்தேன்… இல்லேன்னா இதுக்கும் வழியில்லாமப் போயிருக்கும். குடுக்கல் வாங்கல் எல்லாம் நின்னு போயி ஒரு வருஷம் ஆச்சு. கொஞ்சம் வெளிய பாக்கி நிக்கறத வசூல் பண்ணிட்டன்னா போதும்”
“அப்படியா…ஒரு அவசரம்.. இவங்கப்பாவுக்கு ரெண்டு நாள்ல ஆப்பரேஷன்… கோயமுத்தூர் போவணும்… அதாங் மாமா தயங்கி நிறுத்தினேன். மீண்டும் ஒரு பெருமூச்சு வந்தது அவருக்கு நேராக என் கண்களைப் பார்த்தார். “உண்மையை சொல்லட்டுமா, நானே காஞ்சு போயி கெடக்கறேன் தம்பி. நீங்க வேறெங்கியாவது முயற்சி பண்ணுங்க…” மேலே பேச எனக்கு இடமிருப்பதாகத் தோன்றவில்லை. மெதுவாக எழுந்து கொண்டேன்.
“நல்லதுங் மாமா… நா கௌம்பறேன்” என்று சொல்லிவிட்டு தென்னரசு பக்கம் திரும்பினேன். தலைகுனிந்தபடி வேட்டியை சரி செய்து கொண்டிருந்தான். இருவரும் வெளியே வந்தோம். தெருவில் இறங்கி சிறிது தூரம் நடக்கும் வரை எனக்கு பேச்சு வரவில்லை. ஏதோ அடைத்துக் கொண்டது போல் உணர்வு தென்னரசு மெல்லத் தேறியவனாய்ச் சொன்னான். “அம்மாவுது தாலிக்கொடி இருக்குடா… அத அடகு வெச்சு பணம் ஏற்பாடு பண்ண வேண்டியதுதான். வேற வழியில்ல… அதுல கை வைக்க வேண்டாம்னு பாத்தேன்.. ப்ச என்ன பண்றது? இவருதான் இல்லேன்னுட்டாரே”
“ஆமாடா… இருந்தா கண்டிப்பா குடுத்துருப்பாரு… வருத்தப்படாத… எல்லாம் நல்லா நடக்கும்.” மீண்டும் மௌனமே தொடர அசௌகர்யமாய் உணர்ந்தேன். கிணறு பற்றிய நினைவுகள் மனதில் ஊற்றாய்ப் பொங்கின. இருபது வயது வரை என்னை வளர்த்ததில் இரண்டாவது தாயாக விளங்கிய அது, கரிப்பு நீரை சுரப்பதை என்னால் ஏற்கவே முடியவில்லை. தாய்ப்பால் அருந்தி உப்பை உணரும் குழந்தை முகம் சுளிப்பது போன்ற அவல நிலை எனக்கு. நாக்கில் கசப்பு படர்ந்தது. கண்களில் தேங்கிய நீரை சுண்டிவிட்டேன். காளிமுத்து மாமாவின் தோட்டம் இருந்த திசை நோக்கித் தலை திருப்பினேன். பாதை தெளிவற்று கலங்கித் தெரிந்தது; பார்வையிலிருந்து மறைந்தது.
சிறுகதையின் ஆசிரியர்
பழ.பாலசுந்தரம்
ஓசூர் – 635 109
பழ.பாலசுந்தரம் படைப்புகளைக் காண…