🍁 பூமித்தாயின் மடியில் உறங்கி
விடியலில் எழுந்து
விழிகளை விரித்தால்
பசுமைகள் கவிபாடி
பூக்கள் கையசைத்து
வானம் குடை பிடித்து
பாதைகள் பாய் விரித்து
என்னை அழைக்கும்
பின் அணைக்கும்..!
🍁 பஞ்சம் ஒன்றுமில்லை
மிஞ்சும் உறவுகள் கெஞ்சும்
நெஞ்சம் நிறைய கொஞ்சும்
அஞ்சும் அறுவதும் ஒன்றும்..!
🍁 பசியில் வயிற்றைத் தடவ
பானையில் சோறு கொதிக்க
கொஞ்சம் பொறுவென
கொத்தமல்லி இரசத்தோடு
அத்தை வந்து நிற்பாள்..!
🍁 கதறும் சத்தம் கேட்டு
அலறும் அக்கம் பக்கத்து உறவுகள்
ஆறுதலாய்ச் சில வார்த்தை
ஏற்றிவிடும் தோணியாய்
எப்பொழுதும் உண்டு..!
🍁 ஒன்றிருக்க
ஒன்றில்லாப் பொழுதில்
ஒத்த காசுமில்லாது
ஓடிவந்து தந்திடும்
உன்னத கரங்கள்
உன்னன்பு போதாதா என்றுரைக்கும்..!
🍁 குளிக்க ஆறு கிணறு
உல்லாச ஊஞ்சல்
தள்ளப்படாத தனிமை
கொல்லப்படாத அறங்கள்
கோயில் கொண்டிருக்கும்..!
🍁 வாய்ப்புகள் தேடி வரும்
வஞ்சங்கள் ஓடி மறையும்
குறையில்லா வாழ்க்கை
கூடிவரும் இறையும்
நாடி அருளைத்தரும்..!
🍁 ஏறாத மரங்கள் இல்லை
நடவாத பாதைகள் இல்லை
உறங்காத இரவுகள் இல்லை
உறவற்ற உயிர்கள் இல்லை
உடனிருந்தது எல்லாம்
என் கிராமத்துப் பொன்னேட்டில்..!
🍁 அத்தனையும் தொலைத்து
அலறலில் விழித்து
அழுகையை மறைத்து
ஆனந்தத்தை ஒழித்து..!
🍁 அவசரப் பயணமும்
அன்றாடப் பிழைப்பும்
ஆதியான உழைப்பும்
அடுத்தடுத்து துரத்த
தொலைந்தே போனேன்
நகரத்தின் நடுவே அகதியாய்..!
கவிதையின் ஆசிரியர்
முனைவர் கு. நாகம்மாள்,
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
எஸ். ஆர். எம். பல்கலைக்கழகம்,
இராமாபுரம் வளாகம், சென்னை-89.






