கேசவன் சார்… கேசவன் சார்… என்று பியுன் ஆறுமுகம் கூப்பிட்டும் திரும்பிப் பார்க்காமலே ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிப்போய்க்கிடந்தான். திடுக்கிட்டவனாய், என்னஆறுமுக அண்ணே! என்றான். உங்கள மேனேஜர்சார் கூப்பிடுறார் என்றுசொல்லி அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார். தன் மேசையில் இருக்கும் நான்கு ஐந்து பைல்களை எடுத்துக்கொண்டு மேனேஜர் ரூமிற்குள் சென்றான். கதவை மெல்லியதாக தள்ளி “வணக்கம்சார்… நான் உள்ளேவரலாமா” என்றான். வாங்கஆனந்தன். எடுத்து வந்த பைல்களை மேசையின்மீது வைத்தான். கையெழுத்துப்போட ஏதுவாகச் சரியானப் பக்கத்தை அடையாளமிட்டு சிறுசிறு பேப்பர் துண்டுகளைச் சொருகிவைத்திருந்தான். பைல்களில் கையெழுத்து இட்டவாறே, என்ன கேசவன்… டெல்லிக்கு மெயில்அனுப்பிட்டிங்கிளா? அனுப்பிட்டேன்சார்… தூத்துக்குடியில இருந்து வந்த பணத்த நம்ம அக்கௌண்ட்ல மாத்திட்டிங்களா? நேத்தே மாத்திட்டேன்சார்…. கேசவனிடம் கேட்குற கேள்விக்குப் பதில் மட்டுமே வந்தது.
மனதில் கேட்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கூட நரைத்து வெளுத்துப்போன முடியைக் காட்டிலும் அனுபவத்தையே மிகுதியாகக்கொண்டிருப்பவரிடம் விடுமுறை எவ்வாறு கேட்பது. ஏதாவது சொல்லிவிட்டால், என்றபயம் வேறு. பயந்தால் நடப்பது ஒன்றுமில்லை. அந்த ரூமின் கதவினை அடைவதற்குள் ஒருமுடிவினை எடுத்தாக வேண்டும். இதோ… கதவின் பிடியைபிடித்து திறந்தாகிவிட்டது. சார்… என்று மெதுவாக இழுத்தான் கேசவன். என்னகேசவன், சொல்லுங்க… எனக்கு இன்னிக்கு மதியம் லீவு வேணும் சார்.. புன்னகைக்கு மாறகொஞ்சம் நெரம்தேவைப்பட்டது மேனேஜர்க்கு. சரி எடுத்துக்கோ.. தேங்ஸ்சார். மறுபடியும் கதவின்பிடியினை இழுத்தான். இப்போது மேனேஜர்அழைக்கின்றார். “ஒருநிமிஷம் கேசவன்” பிடியைஇலேசாக விட்டபடியேதிரும்பிப் பார்க்கின்றான்.
“என்ன விஷியமுன்னு நான் தெரிஞ்சுக்கலாமா கேசவன்” “எனக்கு… எனக்கு இன்னிக்கு கல்யாண நாள் சார்” என்று தட்டுதடுமாறிச் சொல்லி முடித்தான். வாழ்த்துக்களை கைக்குலுக்களோடு பகிர்ந்து கொண்டார் மேனேஜர். பேசிக்கொண்டே இருவரும் வெளியே வந்தனர். அலுவலகத்தில் இருந்த அத்தனைக் கண்களும் அவர்கள் இருவரைச் சுற்றியே இருந்தது. தனியேப் போனவன், மேனேஜரோடு வருகிறானே… பதவி உயர்வாக இருக்குமோ என்று பலரின்வயிற்றில் எரிந்துகொண்டிருந்தது. “கேசவனுக்கு இன்னிக்கு கல்யாணநாளாம்” என்று பட்டாசு வெடித்ததுபோல் பட்டென்று சொல்லிமுடித்தார் மேனேஜர். தன்னுடைய பேக்கை எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் புறப்படத்தயாரானான். “இதுஎத்தனையாவது கல்யாணநாள்” என்றது ஒருகுரல். திரும்பிப் பார்க்காமலேநாலாவது என்றுசொன்னான். வாயில் வாழ்த்துக்கள் வந்து குவிந்தன. உதடுகள் புன்னகைத்தன.
கேசவன் ஆயிரம் கனவுகளோடு வீட்டிற்குள் நுழைந்தான். மதிமுகம். மயில்தோகையாய் கருநிறக்கூந்தல். கையினால் பார்த்துப்பார்த்துத் தொடுக்கப்பட்ட மல்லிகையைக் கூந்தலில் சூடியிருந்தாள் ஆர்த்தி. சிவப்பும் மஞ்சளும் கலந்த பட்டுப்புடவை. கேசவன் வைத்தக்கண்வாங்காமல் தன்மனைவியையேப் பார்த்துக்கொண்டிருந்தான். “என்னாங்க… என்னைஅப்படி பார்க்கீறிங்க?” என்று ஆர்த்தி சொன்னதுதான் தாமதம். கையில் இருந்த பேக்கை கீழேப்போட்டுவிட்டு ஆர்த்தி… என் ஓடி வந்தவன் இடுப்புக்கு மேலேதூக்கி ஒருசுற்று சுற்றினான். “என்னாங்கபுதுசா கல்யாணம்ஆன மாதிரி? விடுங்க… என்று பொய்வெட்கத்துடன் கேசவனிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டாள் ஆர்த்தி.
சாயங்காலம் சூரியன்மறைய கொஞ்ச நேரமே இருந்தது. இருவரும் பக்கத்தில்உள்ள சிவன் கோயில், பெருமாள் கோயில், பிள்ளையார்கோயில், சர்ச், மசூதி என ஒரு கோயிலையும் கடவுளையும் விடாமல் வணங்கினார்கள். அந்தவீதியிலேயே நல்ல ஹோட்டலா பார்த்து இருவரும் மூக்குப்பிடிக்கச் சாப்பிட்டார்கள். வீட்டிற்கு வரமணி ஒன்பதை தாண்டியிருந்தது. படுக்கை அறை ஜன்னலின் சுவாசத்தால் பிரகாசமாய் இருந்தது. மல்லிகையின் வாசனை மூக்கின் நுனியை நாணச்செய்தது. ஜீரோ வாட்ஸ் பல்பைத்தவிர விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன. வெற்றுடம்போடு லுங்கி மட்டும்அ ணிந்தவாறு கேசவன் படுத்திருந்தான். கேசவனின் முடிகள் நிறைந்த மார்பில் கன்னம் வைத்து படுத்திருந்தாள் ஆர்த்தி. இருவருக்குள்ளும் எந்தவிதமான சம்பாசனைகளும் அங்கே நடைபெறவில்லை. மௌனம் மட்டுமே நிறைந்திருந்தது. கண்மூடி லயித்திருந்தான் கேசவன். மெல்லியதாகஓர் அழுகை. தேம்பலுடன் கண்ணீரைக் கரைத்துக்கொண்டிருந்தாள் ஆர்த்தி. “என்ன ஆர்த்தி அழுவுற.. என்னாச்சு உனக்கு?” விசும்பலையே பதிலாகத் தந்தாள். “என்னன்னு சொன்னதான தெரியும்” “எனக்கு குழந்தை வேணும்” நமக்குதான்குழந்தையே பிறக்காதுன்னுடாக்டர் சொல்லிட்டாருல்ல.. என்ன பன்றது ஆர்த்தி. ஆர்த்தியின் அழுகை பீறிட்டது. உள்ளத்தின் குமுறலைக் கண்ணீராக வடித்தாள். அக்கண்ணீரானது கேசவனின்மார்பு முடியை நனையச்செய்தது. அது அவனை வெட்கப்பட வைத்தது. ஆர்த்தியின் கூந்தலைமெல்ல வருடிய படிமார்போடு இறுக்கிக்கொண்டான் கேசவன். ஒவ்வொரு குடும்பத்திற்கும் குழந்தை முக்கியமானதாகும். அதுவரை மூடியிருந்த கண்களை இருட்டிலே நன்றாக திறந்து பார்த்தான் கேசவன். எங்கும் மயானமாகக் காட்சியளித்தது அவனுக்கு. ஆர்த்தியின் அமைதி வேறு அவனுள் புகுந்துமனதை கரையானாய் அரித்துக்கொண்டிருந்தது. கேசவனே பேச்சை ஆரமித்தான். “ஆர்த்தி… நாஒன்னு சொல்லட்டுமா” ம்… என்ற ஒலி அவளிடமிருந்து வந்தபிறகே பேச ஆரமித்தான். “நாமரெண்டு பேரும் நாளைக்கு அனாதை விடுதிக்கு போவோம். நீயும் நானும் அங்கிருக்கும் குழந்தைகளைப் பார்ப்போம். நமக்கு பிடிச்சகுழந்தையாப் பார்த்து எடுத்துவந்து வளர்ப்போம். இதைப்பத்தி நீஎன்ன நினைக்கிற..” தட்டுதடுமாறி ஈனச்சுரணையில் சொல்லிமுடித்தான். ஆர்த்தியின் மனம்குட்டையைக் குழப்பின. சேறாயிருந்தன. தான்கொஞ்சி விளையாட குழந்தை இல்லையே என்ற எண்ணமே அவளை முழுவதும் தின்றுகொண்டிருந்தது. இருவரும் அழுத கண்ணகளாய் நனைந்தனர். கேசவனின் மார்பில் படுத்திருந்த ஆர்த்தி அழுது அழுதுக ண்கள் சொருகி எப்போது உறங்கினாள் என்றே தெரியவில்லை.
இரவு விடியலைநோக்கி நகர்ந்தது. ஆர்த்தி சிறுநீர்க் கழிப்பதற்காகக் கட்டிலிருந்து எழுந்திருந்தாள். கண்களைச் சுத்தமாகத் திறக்க முடியவில்லை. துக்கமும் தூக்கமும்அ வளை ஓரிடத்தில் நிலைகொள்ளமுடியாமல் தவிக்கச்செய்தது. பழகிய வீடு. கண்ணைத் திறக்காமலே புழக்கடைக்கு வந்தாள். காலினைச் சற்றே அகல விரித்து புடவையைக் கொஞ்சம் மேலுயர்த்தினாள். தன் வயிற்றில் தங்கிய ஒன்று கீழே இறங்குவதாக நினைத்து தன்னையே மெய்மறந்து நின்றாள். இன்னும் முடியவில்லை சிறுநீர். கண்களையும் திறந்துபார்க்க இயலவில்லை. மூக்கின் ஓரம் நாற்றத்தை உணர்ந்தாள். என்னவாயிருக்கும் அந்தநாற்றம். கண்களைத்தான் திறக்கமுடியவில்லை. ஆனாலும் தன்னை கூர்மையாக்கி கொண்டாள் ஆர்த்தி. எவ்வளவு முயன்று பார்த்தாலும் அந்த வாசனையை அவளால் உணரவே முடியவில்லை. க்யிங்.. க்யிங்… காதிலேரீங்காரம். கேட்கத் துடிக்கும்ரீங்காரம். என்ன ஓசையாக இருக்கும். ஆனாலும் அந்த ஓசையைத் திரும்பதிரும்ப கேட்க ஆவலாயிருந்தாள் ஆர்த்தி. உதடுகள் முணுமுணுத்தன. கண்களைத் திறந்து என்னவென்று பார்க்க ஆசைப்பட்டாள். கண்ணைத் திறக்க இவ்வளவு நேரமா? எப்படியாவது என் கண்ணை திறந்துவிடு இறைவனே என்று வேண்டிக்கொண்டாள். காதில்கேட்ட ரீங்காரமும் மூக்கின் நாசியைத்தொட்ட வாசனையுமே அவளை கண்ணை திறக்கச்செய்தது.
புழக்கடை ஓரத்தில்முள் வேலி. வேலிக்குப்பக்கத்தில் அழுக்குசாக்கில் ஒருபச்சிளம் குழந்தை. புழக்கடைக்குமேற்கு பக்கத்தில் சின்னதாய் சந்து தெற்குப்புறச் சாலையை ஒட்டி இருந்தது. அந்தக் குழந்தை அப்போதுதான் பிறந்திருக்க வேணடும். தொப்புள் கொடிக்கூட இன்னும் சரியாக அறுக்கப்படவில்லை. பிறந்த குழந்தையின் உடம்பிலே இரத்த சிதள்கள் அப்படியே ஒட்டிக்கொண்டிருந்தது. ஆர்த்தி குழந்தையைப் பார்த்த அதிர்ச்சியிலிருந்து மீள சிலமணித்துளிகள் தேவைப்பட்டன. தெற்குப்புறச் சாலையில் மறைவாக இருக்கும் இச்சந்தில் ஒருகர்ப்பிணி பெண்ணுக்குக் குழந்தை பிறந்திருக்கலாம். ஏதோ காரணங்களுக்காக இக்குழந்தையை இங்கேயே விட்டுவிட்டு சென்றிருக்கிறாள் என்று அணுமானிக்க முடிந்தது ஆர்த்திக்கு. வீட்டுக்குள் ஓடியவள் வட்டாவில் தண்ணீரை நிரப்பி வந்தாள். இரண்டுகால்களுக்கும் நடுவிலே குழந்தையைப் படுக்கவைத்தாள். தண்ணீரைத் தொட்டுக் குழந்தையின் பிஞ்சு உடம்பினை தடவுகிறாள். குழந்தையின் ஒவ்வொரு அங்கமாக ஆர்த்தியின் வீணை வீரல்கள் நீவுகின்றன. குழந்தையின் தொடுதலையை எண்ணி எண்ணி மனம் சுகத்தை அடைந்துகொண்டிருந்தன. குழந்தையின் இரத்த சிதள்களைத் துடைத்து மார்போடு அணைத்துக்கொண்டாள் ஆர்த்தி.
கண் விழித்தகேசவன் படுக்கையில் மனைவி இல்லாததை அறிந்து திடுக்குற்றான். குழந்தை இல்லாததை எண்ணி தற்கொலை ஏதாவது பண்ணியிருப்பாளோ என்று நினைத்துப்பார்க்கவே கொடுரமாக இருந்தது அவனுக்கு. “ஆர்த்தி… ஆர்த்தி… ஒவ்வொரு அறையாய் மூச்சு வாங்கியபடி பார்த்தான். புழக்கடையில் வெளிச்சம் தெரிந்ததைப் பார்த்து அங்கு வந்து சேர்ந்தான். முதுகு புறமாய் மனைவியைப் பார்த்த சந்தோசத்தில் பெருமூச்சுவிட்டான். ஓடிவந்து ஆர்த்தியின் முன்நின்று, “இங்கஎன்ன பன்ற…” கேட்டவுடன் குழந்தையைப் பார்த்தஅ திர்ச்சியில் உறைந்துபோனான். “யாருது குழந்த? இங்க எப்படி வந்தது? உனக்கு எப்படி கிடைச்சது? கேள்விகளை அடுக்கிக்கொண்டேச் சென்றான். நடந்ததை பொறுமையாகச் சொன்னாள் ஆர்த்தி. வாயைபிளந்தவாறு கேட்டுக்கொண்டிருந்தான் கேசவன். “எவ்ளோ அழகா கொளுகொளுன்னு இருக்கு. இந்தக் குழந்தையக் கடவுளே அனுப்பிவச்சு நமக்குகுழந்தை இல்லாக்குறையை தீர்த்துவச்சிட்டாரு. நான் யாருக்காகவும்இந்தக் குழந்தைய விட்டுத்தரமாட்டேன். இவன் என்னோடப் பிள்ள” என்று மார்போடு குழந்தையை இறுக்கி அணைத்துக்கொண்டாள். குழந்தை தனக்குமடி கிடைத்துவிட்டது என்பதாய்க் கண்ணை மூடிஉறங்கியது.
சேவல் விடிலைகூவி அழைத்தது. கதிரவன்அந்த ஊரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தான். அந்தச்செய்தி ஊர்முழுக்கப் பரவியது. “வாங்கடா… வாங்கடா.. கேசவன் வீட்டுல ஏதோ குழந்த கிடைச்சிருக்காம்… பாக்கலாம்..“ என்று குழந்தையைப் பார்க்க கேசவனின் வீடுமுழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியது. குட்டிப் பசங்க குழந்தையைப் பார்க்கமுடியாமல் பெரியவர்களின்கால் இடுக்குகளில் புகுந்து தலையை மட்டும் நீட்டி பார்த்துவாய் மேல் கைவைத்தனர். “குழந்தஎவ்ளோ அழகா… செவப்பா.. இருக்கு பாரடா…” இரண்டுவாண்டுகளின் பேச்சுகள் அவை. கூட்டத்திலே சலசலப்பு. ஆளாளுக்கு பேச்சுகள் பலவிதம். “இவ்ளோஅழகான குழந்தய பெத்துப் போட்டுபோறதுக்கு அவளுக்கு எப்படி மனசுவந்ததோ தெரியலையே” கூட்டத்தில் ஒருகுரல். “அனாதையா பச்சப்புள்ளயப் பெத்துப்போட்டு எங்கயோபோயிட்டா… அவ எங்கையில கிடைச்சான்ன நாக்கபுடிங்கிகின்னு சாவுற மாதிரி நாலு கேள்வி கேட்பேன். தேவுடியா… குழந்த உடம்புலஇருக்கிற ஈரம் காயிரதுக்கு முன்னாடியேஇப்படி தொப்புள் கொடி உறவ அறுத்துட்டுபோயிட்டாளே…” என்றது கூட்டத்தின் மற்றொரு குரல். “அதுஇதுன்னுவாய்க்கு வந்தபடிதப்பா பேசாதிங்க… அவளுக்கு என்ன நிலமையோ… என்னவோ…” கூட்டத்தின்நடுவே கணிரென்றுஒரு குரல். அக்கூட்டத்தின் பேச்சரவம் முழுவதும் குறைந்தது. மூச்சு விடும்சப்தமும் ஆங்காங்கே இறுமும் சத்தமும்தான் கேட்டது.
ஆர்த்தியின் மடியில்இருந்த குழந்தை அழத்தொடங்கியது. இந்தஅழுகைக்கு காரணம், தன்தாயை இவர்கள் திட்டுகிறார்களேஎன்று அழுகிறதா? இல்லை, தனக்கு பசிக்கிறது உணவு கொடுக்க யாரும் முன்வரவில்லையே என்றுஅழுகிறதா? தெரியவில்லை. குழந்தை அழுது கொண்டுதானிருக்கிறது. கேசவன் பால்வாங்கி வருவதற்காகவண்டியை ஸ்டார்ட்செய்கிறான். கூட்டத்தின் நடுவே ஆர்த்தியின் மடியில் குழந்தை. கூட்டத்தில் உள்ள அனைத்து கண்களும் ஆர்த்தியையேப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். குழந்தையின் அழுகையையும் பார்க்கிறார்கள். இன்னும் ஓரிருவினாடிகளில் அக்குழந்தை அழுது அழுது விக்கி இறக்கப்போகிறது. ஆர்த்தி என்ன நினைத்தாலோ, உடனே மாராப்பைவிலக்கி தன்னுடையமார்பு நுனியைக் குழந்தையின் வாயிலேதிணித்தாள். குழந்தையின் அழுகை நின்றது. எதுவரையில் இது நீடிக்கும். கேசவன் பால்வாங்கி வரும்வரையிலா? இல்லை, இந்தமார்பில் பாலே சுரக்காது என்று அந்த குழந்தைக்குத் தெரியும்வரையிலா? ஆனாலும் எது எப்படியாயிருந்தாலும் உண்மையிலேயே ஆர்த்தி இன்று தாய்மை அடைந்துவிட்டாள்! தாய்மை அடைந்துவிட்டாள்!
சிறுகதையின் ஆசிரியர்
முனைவர் க.லெனின்
உதவிப்பேராசிரியர்,
எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.