🦋 எந்தச்சலசலப்பும்
இல்லாத
ஓர் அதிகாலை
மௌனத்தில்
என்னை நானே
தொலைத்துவிட்டு
மீண்டு வருவதற்குள்
சிறகுகளை விரித்து
எங்கெங்கோ
பறந்து செல்கிறேன்..!
🦋 ஆள் நடமாட்டம்
இல்லாத
பாலை வனத்தில்
எனக்கான
பாடலை இசைத்துக் கொண்டு
செல்கையில்
வண்ணத்துப்பூச்சிகள்
என் அருகில்
வந்து செல்கின்றன..!
🦋 லேசான மழைத் தூறலில்
தெருவோர
தேநீர் கடைத் தேடி
நடந்து சென்ற நேரம்
மழையில் நனைந்த
ஒரு குட்டி நாயின்
சிலு சிலுப்பைக் கண்டு
பொழுது விடியாத
அந்தக் கணத்தில்
தூக்கிக் கொஞ்சுகிறேன்..!
🦋 அலைகள் வந்து
மோதுகின்ற கடற்கரை மணலில்
நடந்து செல்கிறேன்
என் தனிமையை உணர..!
🦋 தனிமையின்
மௌனத்தில்
மூழ்கும்போது
ஆழமான கவிதைகளை
மொண்டு வருகிறேன்..!
🦋 அதோ அந்தப்
பூஞ்சோலையின்
நறுமணமுகர்ந்து
என் விரல்களால்
எழுதி வைக்கிறேன்
முகர்ந்து கொள்ளுங்கள்
முடித்து விடாதீர்கள்..!
🦋 நிலாவின் வெளிச்சத்தில்
விண்மீன்களை
இரசித்துக்கொண்டு
மேகங்களிடம்
என் கவிதைகளைச்
சொல்லிக் கொண்டிருந்தேன்
காதல் மோகமெடுத்து
அவைகள்
ஒன்றாக கலந்து விட்டன..!
🦋 விண்மீன்கள்
மறியல் செய்தன
இவன் ஒரு
காதல் குற்றவாளி..!
🦋 என் சிறகுகளைத் திருப்பி
மீண்டும் வந்து சேர்கையில்
பாலைவனத்தைத்
தெருவோரத்தைக்
கடற்கரையைப்
பூஞ்சோலையைத்
தொலைத்துவிட்ட சோகத்தில்
அழுது கொண்டிருக்கின்றன
என் விழிகள்..!
கவிதையின் ஆசிரியர்
காஞ்சி கிருபா
528/1 கட்டபொம்மன் தெரு,
விஷ்ணு நகர், தேனம்பாக்கம்,
சின்ன காஞ்சிபுரம், 631501