மேலாண்மை என்பது எந்த ஒரு செயலையும் முறையாகத் திட்டமிட்டு சரியாகவும் திறம்படவும் செய்து முடிப்பதே ஆகும். மனிதன் உயிர்வாழ அவசியமானது உணவு. கீரைகள், பழங்கள், இறைச்சி, பால் பொருட்கள், தானியங்கள் எனப் பலவிதமான உணவு வகைகள் அன்றைய காலம் முதல் இன்றுவரை மக்களால் பயன்படுத்தப் பெறுகின்றன. சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட தினை, சாமை, வரகு, நெல் முதலிய தானிய வகைகளில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட தானியமாக நெல் அமைகிறது. மற்ற தானியங்களை விட நெல்லைப்பற்றிய பதிவுகள் கூடுதலாக உள்ளதும் இங்கு குறிக்கத்தக்கது. நிலத்திற்கு அணியென்ப நெல்லும் கரும்பும்” என்ற நான்மணிக்கடிகை (11) அடிகளுக்கு ஏற்ப மருத நிலத்தில் நெல் அதிகம் விளைந்தது. வயல்களை இருப்பிடமாகக் கொண்ட மருத நிலத்தில் ஆறுகளும், ஏரிகளும், குளங்களும் நீர்த்தேவையை நிறைவு செய்தன. நிலத்திற்கு அழகூட்டும் நெல்லும், கரும்பும் மருத நில மக்களின் வாழ்க்கையை உயரச்செய்தன. குறிஞ்சி நிலத்திலும் சில வகை நெல் வகைகள் பயிரிடப்பட்டுள்ளன.
சங்க காலத்தில் இருந்த நெல் வகைகளும் சங்க கால மக்கள் நெல்லைப் பயன்படுத்தி மேலாண்மை முறைகளையும் இக்கட்டுரை உணர்த்துகிறது.
நெல் வகைகள்
ஐவனநெல், தோரை நெல், மூங்கில் நெல் முதலிய நெல் வகைகள் குறிஞ்சி நிலத்திலும் வெண்ணெல், செந்நெல், முடந்தை நெல், சாலி நெல் முதலிய நெல் வகைகள் மருத நிலத்திலும் விளைந்தன.
ஐவனநெல்
ஐவனம் எனப்படும் மலைநெல்லைக் கானவர்கள் அருவியை உடைய நிலத்தில் விதைப்பர். நெல் வளர்ந்ததும் இடையில் உள்ள களைகளான காட்டு மல்லிகைச் செடி, மரல் எனக் கூறப்பெறும் ஒருவகைக் கற்றாழை முதலியவற்றைப் பறித்து எறிவர். இதனை,
அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப்
”பருஇலைக் குளவியொடு பருமரல் கட்கும்
காந்தள்அம் சிலம்பில் சிறுகுடி ”
என்ற குறுந்தொகை அடிகள் (100) உணர்த்துகின்றன. இந்நெல்லை ஐவன வெண்ணெல் என்று கலித்தொகை (43) கூறுவதை
“ஐவன வெண்ணெல் அறை உரலுள் பெய்து”
என்ற அடியின் மூலம் அறியலாம். ஐவன நெல்லோடு இஞ்சி, மஞ்சள், மிளகு போன்றவை விளைந்தன என்று மதுரைக்காஞ்சி (288) குறிப்பதால் அதிக ஈரப்பதம் இல்லாத நிலங்களிலும் இந்நெல் விளைந்தது என அறியலாம்.
தோரைநெல்
மதுரைக்காஞ்சி (287) தோரை என்னும் ஒரு வகை நெல்லைப்பற்றிக் கூறுகிறது. இந்நெல் மேட்டு நிலங்களில் விதைக்கப்பட்டது, குறுகிய கதிர்களையுடையது.
இதனை
“கோட்டின் வித்திய குறுங்கதிர்த் தோரை”
என்ற அடியால் உணரலாம்.
மூங்கில்நெல்
மூங்கிலின் நெல்லைப் பாறை உரலுள் கொட்டி யானைத் தந்தத்தைக் கொண்டு இடித்து, வள்ளைப்பாட்டைப்பாடி சேம்பின் இலைகளில் புடைத்தனர் என்று கலித்தொகை (41) கூறுகிறது. இதனை
“ஆடுகழை நெல்லை அறை உரலுள் பெய்து”
என்ற அடியால் உணரலாம். மூங்கிலரிசி, அவரைவிதை, மேட்டு நிலத்தில் விளைந்த நெல்லரிசி ஆகியவற்றைப் புளிக்கரைத்த உலையில் பெய்து புளியங்கூழினை ஆக்குவர் என்பதை மலைபடுகடாம் (435)
“வேய்கொள் அரிசி மிதவை சொரிந்த
சுவல்விளை நெல்லின் அவரை அம்புளிங்கூழ்”
என்ற அடிகளில் உணர்த்துகிறது. மூங்கில் அரிசியோடு பிற பொருட்களைச் சேர்த்துச் சுவையாக உண்டதைப் போலவே இன்றும் கூட்டாஞ்சோற்றில் பலவித காய்கறிகள், தானியங்கள் இடம்பெறுகின்றன.
வெண்ணெல்
வெண்ணெல்லை அரியும்போது உழவர்கள் தண்ணுமை முதலிய கருவிகளை முழக்கியவாறு பறவைகளை விரட்டுவர் என்பதை
“வெண்ணெல் அரிநர் மடிவாய்த் தண்ணுமை
பல்மலர்ப் பொய்கைப் படுபுள் ஒப்பும்;”
என்ற (அகம்-204) அடிகள் உணர்த்துகின்றன. தொண்டி என்னும் நகரத்தில் விளைந்த வெண்ணெல் சிறப்புடையது என்று குறுந்தொகை (210)
……………….. தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல்
என்ற அடிகளில் உணர்த்துகிறது.
முடந்தைநெல்
முடந்தை நெல் வளைந்த கதிர்களை உடையதாக இருக்கும் என்பதை
“முடந்தை நெல்லின் விளைவயல் பரந்த”
“முடந்தை நெல்லின் கழையமல் கழனி”
பதிற்றுப்பத்து (29இ32) உணர்த்துகிறது. இந்நெல் விளைந்த வளமிக்க ஊர்கள் அழிக்கப்பட்டன என்பதையும் அறிய முடிகிறது.
செந்நெல்
செந்நெல்லின் அரிசி சற்றுச் சிவந்த நிறத்தில் இருக்கும் அந்தணர்கள் இல்லத்தில் இது பயன்படுத்தப்பெற்றதை
”ஆசுஇல் தெருவின் ஆசுஇல் வியன்கடை
செந்நெல் அமலை வெண்மை வெள்இழுது”
என்று குறுந்தொகை (277) உணர்த்துகிறது. மருதநில உழவர்கள் செந்நெல்லை விளைவித்தனர். பாண்மகள் வாளைமீனுக்கு மாற்றாக செந்நெல்லைப் பெறாமல் முத்துக்களையும் அணிகலன்களையும் பெறுவாள் என்பதை அகநானூறு (126)
“பழஞ்செந் நெல்லின் முகவை கொள்ளாள்
கழங்கு உறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம்”
என்ற அடிகளில் உணர்த்துகிறது.
சாலிநெல்
சாலி என்ற நெல் அதிகமாக விளைந்த ஊர் சாலியூர் என்றழைக்கப்பட்டது. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் சாலியூரைக் கைப்பற்றியதை மதுரைக்காஞ்சி (87) உணர்த்துகிறது. பொருநராற்றுப்படையும் (246) இந்நெல்லைப் பற்றிக்குறிக்கிறது.
கருடச்சம்பா (இராசான்னம்)
இந்நெல் அந்தணர்களின் இல்லத்தில் பயன்படுத்தப்பெற்றது கருடச்சம்பா என்னும் அரிசியால் ஆக்கப்பெற்ற நெற்சோற்றையும், வெண்ணெயில் வெந்த மிளகுப்பொடியும் கறிவேப்பிலை கலந்த மாதுளங்காய்ப் பொரியலையும் மாங்காய் ஊறுகாய் போன்றவற்றை உணவாகப்பெறலாம் என்று பெரும்பாணாற்றுப்படை (305) கூறுகிறது. இதனை
“சுடர்க்கடை பறவைப் பெயர்ப்படு வத்தம்
சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்து
உருப்புற பசுங்காய்ப் போழொடு கறிகலந்து
நெடுமரக் கொக்கின் நறுவடி விதிர்த்த
தகைமாண் காடியின் வகைபடப் பெறுகுவிர்”
என்ற அடிகள் உணர்த்துகிறது.
உழவு செய்தல்
உழவுத்தொழிலில் சிறந்த எருதுகளை நுகத்தில் பூட்டி, பெண் யானையின் வாயைப்போன்ற வளைந்த வாயையுடைய கலப்பையை உடும்பு முகம் போன்ற முழுக்கொழு மறையும்படி அமுக்கி உழுவர். இதனை
“………………………. செஞ்சால் உழவர்
நடைநவில் பெரும்பகடு புதவில் பூட்டி
பிடிவாய் அன்ன மடிவாய் நாஞ்சில்
உடும்புமுக முழுக்கொழூ ஊன்றி
தொடுப்பு எறிந்து உழுத”
என்ற பெரும்பாணாற்றுப்படை (198) அடிகள் உணர்த்துகின்றன.
நாற்று நடுதல்
கரிய ஆனேறுகள் தம்முள் போரிட்டமையால் சேறாகிய வயலில், சேற்றைச் சமம்பட மிதித்த உழவர்கள் முடி நாற்றை நடுவதாகப் பெரும்பாணாற்றுப்படை (210)
“…………… வினைஞர்
முடிநாறு அழுத்திய நெடுநீர்ச் செறுவில்”
என்று உணர்த்துகிறது. உழவன் தன் உழத்தியருடன் நாற்று நடுவதற்குச் செல்வான் என்று நற்றிணையும் (60) கூறுகிறது.
சேற்றைச் சமப்படுத்துவதும் நாற்று நடுவதும் இன்றும் இருந்தாலும் ஆண்கள் நாற்று நடும் வழக்கம் அரிதான ஒன்று. நடவுப்பணியில் பெண்களே அதிகம் ஈடுபடுகின்றனர். முக்கூடற்பள்ளு (126) நூலும் இதனையே உணர்த்துகிறது.
களை பறித்தல்
நெற்பயிர்களுக்கு இடையில் இருந்த களைகளைக் களைந்தும், நெய்தல் செடிகளை அப்புறப்படுத்தியும் களை பறித்தல் நடந்துள்ளதாகப் பெரும்பாணாற்றுப்படை (211) கூறுகிறது.
கொண்டையணிந்த கூந்தலையுடைய உழத்தியர் நெல் வயலில் ஆம்பல், நெய்தல் செடிகளைக் களையாகப் பறிப்பர். வயலில் பிறழும் வாளைமீன் வயலைச் செப்பம் செய்யும் தளம்பு என்னும் கருவியால் துண்டிக்கப்படும் என்று புறநானூறு (61) கூறுகிறது. இதனை
“……………. செறுவின் தளம்பு தடிந்து இட்ட
பழன வாளை”
என்ற அடிகள் உணர்த்துகின்றன. வயலில் களை பறிக்கும்போது தளம்பு என்ற கருவியைப் பயன்படுத்தியுள்ளனர். செப்பம் செய்யப்பயன்படும் கருவி என்பதால் பிற உழவுப்பணிகளுக்கும் இக்கருவி பயன்பட்டிருக்கலாம்.
காவல் செய்தல்
வயலைக் காவல் புரியும் உழவரை “கழனிக் காவலர்” (280) என்று நற்றிணை குறிக்கிறது. நெல் விளைந்த வயலில் பறவைகளை விரட்டி, விளைந்த நெல்லைக் காத்துள்ளதை அறியமுடிகிறது. இதனை
“நெல்விளை கழனிப் படுபுள் ஓப்புநர்” (புறம்:29)
என்ற அடியால் உணரலாம்.
அறுவடை செய்தல்
நெல்லரிவாரின் கையிலிருந்த அரிவாள்கள் மடங்கும்படி வளர்ந்த நெல்லைப் பற்றிப் பதிற்றுப்பத்துக் (19) கூறுகிறது. வெண்ணெல்லை அரிகின்ற உழவர்கள் வயலில் உள்ள பறவைகளை விரட்ட தண்ணுமை என்னும் இசைக்கருவியை முழக்குவர் என்பதை நற்றிணையும் (350) அகநானூறும் (40, 204) உணர்த்துகின்றன. பறவைகளை விரட்ட பறையைப் பயன்படுத்தியதை அகநானூறு (84) உணர்த்துகிறது.
பறவைகளை விரட்டும் உழுகுடியோர் கீழே விழுந்த பனங்கருக்கை விறகாகக் கொண்டு கழியில் பிடித்த மீனைச் சுடுவர். அதனுடன் கள்ளை உண்டபின் தென்னையின் இளநீரை உதிர்ப்பர் என்பதை
“நெல்விளை கழனிப் படுபுள் ஓப்புநர்
ஓழிமடல் விறகின் கழிமீன் சுட்டு
வெங்கள் தொலைச்சியும் அமையார் தெங்கின்
இளநீர் உதிர்க்கும்;”
என்ற அடிகளில் புறநானூறு (29) உணர்த்துகிறது. மள்ளர் என்போர் நெல்லரிந்த செய்தியை நற்றிணை (400) உணர்த்துகிறது. நெற்கட்டு;களைக் கள்ளுண்டு களித்திருக்கும் களமர்கள் நெற்களங்களுக்குக் கொண்டு செல்வர் என்பதை
“அரிஞர் யாத்த அலங்கு தலைப்பெருஞ் சூடு
கள்ளார் வினைஞர் களம்தொறும் மறுகும்”
என்று அகநானூறு (84) உணர்த்துகிறது. நன்கு அரிக்கப்பட்ட முதிர்ச்சியுற்ற மதுவை, ஆமை இறைச்சியோடு களமர் உண்பர். ஆரல் மீனின் வேகவைத்த கொழுப்பமைந்த துண்டைத் தம் கன்னத்தில் அடக்கிக்கொண்டு மதுவுண்டு மயங்கி இருப்பர் என்பதை
“களமர்க்கு அரித்த விளையல் வெங்கள்
யாமைப் புழுக்கின் காமம் வீட ஆரா
ஆரல் கொழுஞ்சூடு அம்கவுள் அடா”
என்ற அடிகளில் புறநானூறு (212) உணர்த்துகிறது.
நெற்கதிரை அரிவோர் மடுவில் உள்ள மீன்களைப் பிடித்து அவற்றின் கொழுவிய துண்டங்களைக் களத்தில் இருந்தவாறே கடித்து வயிறார உண்டபின் நெற்கட்டுக்களைக் களத்தில் சேர்ப்பர் என்று அகநானூறு (236) கூறுகிறது. நீர்வளம் நிறைந்த பகுதியில் மீன்கள் இருந்ததால் அவற்றை உண்டு வேலையின் களைப்பைப் போக்கியுள்ளனர். இதே போல் வயலைக் காவல் புரியும் உழவர் ஆமை ஒட்டில் வைத்து நத்தையை உண்டனர் என்று நற்றிணை (280)
“பழன யாமைப் பாசடைப் புறத்து
கழனிக் காவலர் சுரிநந்து உடைக்கும்”
என்ற அடிகளில் உணர்த்துகிறது. நெல் வயலில் பணியில் ஈடுபடுவோர் அங்குள்ள உணவுகளை, உழைப்பின் களைப்பு தீர உண்ட பின்னர் தங்கள் பணியினைத் தொடர்ந்துள்ளனர்.
ஊடுபயிர்
பாணர் குலப்பெண்ணின் வட்டி நிறையுமாறு நெல் வயலில் விளைந்த பயற்றை உழவர்குலப்பெண் நிரப்புகிறாள் என்று ஐங்குறுநூறு (47) கூறுகிறது. நெல் வயலில் பயறு போன்றவற்றை பயிர் செய்துள்ளனர் என்று இதன் மூலம் உணரமுடிகிறது.
நெல்லடித்தல்
உழவர்கள் விடியற்காலை நேரத்தில் வைக்கோலைப் பிரித்துக் கடாவிட்டுத் தூற்றி எடுத்தனர் என்று அகநானூறு (37) உணர்த்துகிறது. செந்நெல்லின் தாளை அறுத்த உழவர்கள் அவற்றை மருதமரத்தின் நிழலில் போராகக் குவித்து வைத்து, அதைக் கடா விட்டு அடித்த பின்னர் நெல்லில் உள்ள வைக்கோல், தூசு முதலியவற்றைப் போக்கி அவற்றை உலர வைப்பர். கோடைக்காற்றில் தூற்றிக் குவித்த நெற்பொலிகள் மேருமலை போல் தோன்றும் என்று பெரும்பாணாற்றுப்படை (238) குறிக்கிறது.
இதனை
“பகடுஊர்பு இழிந்த பின்றை துகள்தப
வையும் துரும்பும் நீக்கி பைதுஅற
குடகாற்று எறிந்த குப்பை வடபால்
செம்பொன் மலையின் சிறப்பத் தோன்றும்”
என்ற அடிகள் உணர்த்துகின்றன. மலை போன்ற நெற்போர்களை அழித்துக் கடா விட்டு வளமையை உண்டாக்கும் உழவரைப்பற்றி மலைபடுகடாமும் (461) குறிக்கிறது. நெல்லடிக்கும்போது உழவர்களுக்கும் பரதவர்களுக்கும் சண்டை ஏற்பட்டது. கடலுக்கு அருகே உள்ள வயலில் நெல்லை அறுத்தனர். நெற்கதிர்ப் போரினைப் பிரித்துக் கடாவிட்டனர். கள்ளுண்டு களித்த அவ்வுழவர்கள் காளைகளை மாற்றி வேறு காளைகளைக்கொண்டு கடாவிட்டனர். பின்னர் நெல்லைத் தூற்றினர். பறந்து சென்ற துரும்புகள் அருகிலிருக்கும் உப்பு காயும் உப்பளத்திலுள்ள சிறிய பாத்திகளில் சென்று வீழ்ந்தது. உணவுக்கு இனிமை தரும் வெள்ளிய உப்பு பாழ்பட்டுப் போனமையால் நெய்தல் நில மக்கள் சினந்து, கழனி உழவருடன் மாறுபட்டுச் சேற்றுக்குழம்பினை எடுத்தெறிந்து கைகலப்பில் ஈடுபட்டனர். நரைத்து முதுமையுற்ற மருதநிலமக்கள் இருவரையும் அமைதியுறச்செய்து முற்றிய கள்ளின் தெளிவை பரதவர்க்குக் கொடுத்து அவரை மகிழ்வித்தனா.;
இதனை
“……………… பரதவர்
தீம்பொழி வெள்உப்புச் சிதைதலின் சினைஇ
கழனி உழவரொடு மாறுஎதிர்ந்து மயங்கி
இருஞ்சேற்று அள்ளல் எறி செருக் கண்டு
நரைமூ தாளார் கைபிணி விடுத்து
நனைமுதிர் தேறல் நுளையர்க்கு ஈயும்”
என்ற அகநானூற்று அடிகள் (366) உணர்த்துகின்றன.
நெல்லடிக்கும்போது காளைகளுக்கு ஓய்வு அளித்து மாற்றி மாற்றிப் பயன்படுத்தியுள்ளனர். வயது முதிர்ந்தோர் நெற்களங்களில் பணிகளைப் பார்வையிடுவர். நெல்லில் சேற்றுக்குழம்பை எறிவதால் நெற்களம் சேறும் சகதியுமாக இருக்கும். உப்பளப் பணிகளுக்கு இடையூறு வந்ததால் நெற்களப் பணிகளுக்கு பரதவர் இடையூறு செய்தனர்.
நெல்லை அறுவடை செய்வதிலிருந்து நெற்களங்களில் நெல்லை அடிப்பது வரை கள்ளின் பயன்பாடு மிகுதியாக இருந்துள்ளது. கடினமான வேலை என்பதால் உடற்சோர்வைப் போக்கக் கள்ளை அருந்தி நெற்களப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
சடங்குகளில் நெல்
விரிச்சி கேட்டல்
வயது முதிர்ந்த பெண்டிர் விரிச்சி (சகுனம்) கேட்கும் பொழுது நெல்லையும் முல்லை மலரையும் தெய்வத்தின் மீது தூவி விரிச்சி வேண்டி நிற்பர். இதனை
“…………… நெல்லொடு
நாழி கொண்ட நறுவீ முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய்க் கைதொழுது
பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப”
என்ற அடிகளில் முல்லைப்பாட்டு (8) உணர்த்துகிறது மாலைக்காலத்தில் பெண்கள் நெல்லையும் மலரையும் தூவி இல்லுறை தெய்வத்தை வணங்கியதை நெடுநல்வாடை (43). உணர்த்துகிறது.
திருமணம்
இன்று திருமணத்தில் மணமக்களின் தலையில் அரிசி தூவும் வழக்கம் உள்ளது. சங்க காலத்தில் மகளிர் நால்வர் கூடி தலைவியின் தலையில் நெல்லையும், மலர்களையும் நீரொடு தூவி வாழ்த்தினர். இதனை
“நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி
பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க”
என்று அகநானூறு (86) உணர்த்துகிறது.
இன்றும் திருமணத்தில் சிலர் அரிசிக்கு மாற்றாக நெல்லைப் பயன்படுத்துகின்றனர். அரிசி முளைவிடாதது. நெல் முளைவிடும் தானியம். அதுவே மணமக்களுக்குப் பொருத்தமான ஒன்று என்கின்றனர்.
மேற்கண்ட சடங்குகளில் பெண்களே நெல்லைப் பயன்படுத்தியவர்கள். நெல் மிக உயர்ந்த பொருளாக அக்காலத்தில் மதிக்கப்பட்டது என்பதை இவற்றான் உணரமுடிகிறது.
நெல்லுணவுகள்
நெல்லைக் குற்றி, அதிலிருந்து அரிசி பெறப்பட்டது. நொய்யரிசி, நெல் மாவு, பொரி, அவல், அரிசி முதலிய வகைகள் சங்க காலத்தில் பயன்படுத்தப்பெற்றன.
நொய்யரிசி
தலைவனின் பரத்தமையை வெறுத்து அவனோடு ஊடல் கொண்ட பெண்கள் நொய் அரிசியை முறத்தால் புடைத்துத் தாமே சமைத்து உண்டு தனிமையை மேற்கொண்டிருப்பர். இனிய மொழி பேசும் குழந்தைகள் பாலின்றி உலர்ந்த முலையைச் சுவைத்துப் பார்த்துப் பெரிதும் வருந்தி இருப்பர் என்பதை
“செய்யோள் நீங்க சில்பதம் கொழித்து
தாம் அட்டு உண்டு தமியர் ஆகி
தேமொழிப் புதல்வர் திரங்குமுலை சுவைப்ப”
என்ற அகநானூற்று அடிகள் (316) உணர்த்துகின்றன.
நெல்மா
நெல்லை இடித்து நெல்மா உருவாக்கப்பட்டது. இம்மாவை ஆண்பன்றிக்குக் கொடுத்து அதைக்கொழுக்க வைத்தனர் என்று பெரும்பாணாற்றுப்படை (343) கூறுகிறது. குதிரைக்கு நெல்மாவு கொடுத்ததை அகநானூறு (340) உணர்த்துகிறது.
பொரி
நெல்லை வறுத்து அதிலிருந்து நெற்பொரி பெறப்பட்டது. “செந்நெல் வான்பொரி” என்று குறுந்தொகை (53) இதனைக் குறிக்கிறது.
அவல்
நெல்லை நீரில் ஊற வைத்து அதிலிருந்து அவல் இடித்தெடுக்கும் வழக்கம் இருந்துள்ளது. மருதநிலச் சிறுவர்கள் வைக்கோலால் வேய்ந்த அழகிய குடிலின் முற்றத்தில் கிடக்கும் உரலில் அவலை இடித்ததாகப் பெரும்பாணாற்றுப்படை (226) கூறுகிறது. நெல் விளைந்த கதிரை முறித்து பசிய அவலை இடிக்கும் பெண்ணை அகநானூறு (237) கூறுகிறது.
மகளிர் அவலினை வாயில் அடக்கி நீராடுவர் என்று புறநானூறு (63) கூறுகிறது. இதனை
…………………. மகளிர்
பாசவல் முக்கி தண்புனல் பாயும்”
என்ற அடிகள் உணர்த்துகின்றன.
மேற்கண்ட உணவு வகைகள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் நெல்லுணவில் அரிசியே முக்கியப்பங்கு வகிக்கிறது. அரிசியில் இருந்து பலவிதமான சோற்று வகைகள் பயன்படுத்தப்பெற்றன. அரிசியை வேகவைத்துச் சோறு பெறப்பட்டது. இன்சோறு, உப்பில்லாச்சோறு, உழுத்தஞ்சோறு, ஊன்சோறு, கொழுஞ்சோறு, செஞ்சோறு, நெய்ச்சோறு, புளிச்சோறு, பாற்சோறு, மூங்கிலரிசிச்சோறு எனப் பலவகை உணவுகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
இன்சோறு
இனிப்புப் பொருட்களைச் சேர்த்தாக்கிய சோற்றுணவு இன்சோறு என்று அழைக்கப்பட்டதை மதுரைக்காஞ்சி (535) உணர்த்துகிறது.
உழுத்தஞ்சோறு
அரிசியோடு உழுத்தப்பருப்பையும் இட்டு ஆக்கப்படும் சோறு உழுத்தஞ்சோறு என அழைக்கப்பட்டது. திருமணத்தில் இச்சோறு உண்ணப்பட்டதை அகநானூறு (86) உணர்த்துகிறது.
ஊன்சோறு
சோற்றோடு ஊனைக்கலந்து ஆக்கினால் அது ஊன்சோறு ஆகும். பதிற்றுப்பத்தில் (45) இடம் பெறும் ஊன்துவை அடிசில் என்ற தொடர் இங்கு எண்ணத்தக்கது. மன்னர்கள் இரவலர்களுக்கு ஊன் சோற்றையே அதிகம் கொடுத்துள்ளனர்.
கொழுஞ்சோறு
கொழுப்பு முதலியன கலந்து ஆக்கப்படும் சோறு கொழுஞ்சோறு எனப்பட்டது. கரும்பனூர் கிழான் இரவலர்களுக்குக் கொழுஞ்சோறு கொடுத்தான் என்று புறநானூறு (384) கூறுகிறது. இதனை
“நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை” என்ற அடி உணர்த்துகிறது.
செஞ்சோறு
செந்நெல்லரிசியால் ஆக்கப்பட்ட சோறு செஞ்சோறு எனப்பட்டது. இதனை “செந்நெல் வல்சி” என்று பதிற்றுப்பத்து (75) கூறுகிறது.
நெய்ச்சோறு
நெய் மிகுதியாகக் கலந்து ஆக்கப்படும் சோறு நெய்ச்சோறு எனப்பட்டது. இதனை
“நெய்ம்மலி அடிசில்” என்று குறிஞ்சிப்பாட்டு (204) கூறுகிறது.
புளிச்சோறு
புளி அதிகம் கலந்து ஆக்கப்படும் சோறு புளிச்சோறு எனப்பட்டது. இச்சோறு இன்றும் பயன்படுத்தப்படுகிறது. எயினர் குலப்பெண் விருந்தினருக்கு இச்சோற்றைக் கொடுத்ததாக சிறுபாணாற்றுப்படை (175) கூறுகிறது. இதனை
“எயிற்றியர் அட்ட இன்புளி வெஞ்சோறு” என்ற அடி உணர்த்துகிறது.
பாற்சோறு
முல்லை நில மக்களுக்கு பால் அதிக அளவில் கிடைத்தது. பாலை உலைநீராகக் கொண்டு ஆக்கப்பட்ட சோறு பாற்சோறு எனப்பட்டது. இன்றும் சிலர் சர்க்கரைப்பொங்கல் வைக்கும்போது பாலை உலை நீராகப்பயன்படுத்துகின்றனர் பாலில் சமைத்த உணவை அகநானூறு (394) “பாலுடை அடிசில்” என்று கூறுகிறது.
“………………. பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார”
என்ற திருப்பாவை (27) அடிகளும் இங்கு உணரத்தக்கன.
வெண்சோறு
வெண்ணெல் அரிசியைக்குற்றி பின்னர் அதனைப் புழுக்கி ஆக்கப்படும் சோறு வெண்சோறு என்று அழைக்கப்பட்டது. இதனை
“அவைப்பு மாண் அரிசி அமலை வெண்சோறு”
என்று சிறுபாணாற்றுப்படை (194) கூறுகிறது.
மூங்கிலரிசிச்சோறு
மலைவாழ் மக்கள் மூங்கில் நெல்லின் அரிசியைச் சோறாக்கினர், அவ்வாறு சோறாக்குவதற்கு மோர் உலை நீராகப் பயன்பட்டது என்று மலைபடுகடாம் (179) கூறுகிறது.
உப்பில்லாச்சோறு
உப்பில்லாமல் சமைக்கப்பட்ட இச்சோறு இடுகாட்டில் ஈமச்சடங்கின்போது பயன்படுத்தப்பெற்றது. பிணத்திற்கு புலையனால் இச்சோறு கொடுக்கப்பட்டது.
இதனை
“உப்பு இலாஅ அவிப்புழுக்கல்
கைக்கொண்டு பிறக்கு நோக்காது
இழிபிறப்பினோன் ஈயப்பெற்று”
என்ற புறநானூற்று (363) அடிகள் உணர்த்துகின்றன. இன்றும் ஈமச்சடங்குகளில் நெல் பயன்படுத்தப் பெறுகின்றது.
கள்
நெல்லில் இருந்து கள் தயாரிக்கப்பட்டது. இது நறும்பிழி என்று அழைக்கப்பட்டது. கொழிக்கப்பட்ட குற்றாத அரிசியைக் களியாக்கிய பின்னர் அதனைக் கூழ்போலக் கரைத்து, தட்டில் இட்டு உலரும்படி ஆற்றி, நெல்முளையை இடித்து, இரண்டையும் ஒன்றாகக் கலந்து, இரண்டு பகலும் இரண்டு இரவும்; கழிந்த பின்னர் சாடியில் இட்டு வேகவைத்து, பன்னாடையால் வடிகட்டி, விரலால் துழாவிப் பிழியப்பட்டது. இதனை
“அவையா அரிசி அம்களித் துழவை
மலர்வாய்ப் பிழாவில் புலர ஆற்றி
பாம்புஉறை புற்றின் குரும்பி ஏய்க்கும்
பூம்புற நல்அடை அளைஇ தேம்பட
எல்லையும் இரவும் இருமுறை கழிப்பி
வல்வாய்ச் சாடியின் வழைச்சுஅற விளைந்த
வெந்நீர் அரியல் விரல்அலை நறும்பிழி”
என்ற பெரும்பாணாற்றுப்படை அடிகள் (281) உணர்த்துகின்றன.
கொழியல் அரிசி என்பது தவிடு போகாத அரிசி. விரலால் அலைத்துப் பிழியப்பட்ட அக்கள்ளைத் தளர்ச்சியான நிலையில் பருகினால் தளர்ச்சி நீங்குமாம். இரண்டு நாட்கள் இரவும் பகலும் ஊறிய கள்ளை வேக வைத்து, விரலால் அலைத்துப் பன்னாடையால் வடிகட்டிப் பயன்படுத்தினர். விரலால் அலைத்துப் பிழியப்பட்டதால் அக்கள் நறும்பிழி எனப்பட்டது. நெய்தல் நில மக்களின் விருந்தோம்பலை பெரும்பாணாற்றுப்படை கூறுவது போலவே இன்றும் நெய்தல் நிலங்களில் சோற்றிலிருந்து பெறப்படும் கள்ளாக “சுண்டக்கஞ்சி” விளங்குகிறது.
பண்டமாற்று
சங்க காலத்தில் நெல்லும் உப்பும் ஒரே விலையுடையதாக இருந்தன. உமணப்பெண்கள் உப்பு விற்கும் பொழுது
“நெல்லின் நேரே வெண்கல் உப்பு”
“நெல்லும் உப்பும் நேரே”
என்று கூவி விற்பனை செய்வதை அகநானூறு (296,126) மூலம் அறியமுடிகிறது. உமணர்கள் மாட்டு வண்டிகளில் செல்ல, உமணப் பெண்கள் அருகில் உள்ள சேரிகளில் உப்பு விற்றுக்கொண்டே செல்வார்கள். படகுகளில் சென்று உப்பை விற்று நெல் கொண்டு வந்ததை
“வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி
நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி”
என்ற அடிகளில் பட்டினப்பாலை (21) உணர்த்துகிறது.
பாணர்குலப் பெண்ணின் வரால் மீனுக்கு முந்தைய ஆண்டு விளைந்த பழைய வெண்ணெல்லை மருதநிலப் பெண் தருவாள் என்பதை
“வராஅல் சொரிந்த வட்டியுள் மனையோள்
யாண்டுகழி வெண்ணெல் நிறைக்கும்”
என்று ஐங்குறுநூறு (48) கூறுகிறது.
இன்னொரு பாணர்குலப்பெண் மீன்களைக் கொடுத்து மாற்றாக நெல்லை வாங்காமல், முத்துக்களையும் அணிகலன்களையும் பெற்றுச் செல்வாள் என்று ஐங்குறுநூறு (126) கூறுகிறது. இதனை
“பழஞ்செந் நெல்லின் முகவை கொள்ளாள்
குறங்கு உறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம்”
என்ற அடிகளால் உணரலாம். நெல்லை விட விலை உயர்ந்த மீன் என்பதால் அப்பெண் நெல்லை வாங்கவில்லை.
கானவன் வேட்டையாடி மான்தசையைக் கொடுக்க உழவர் மகளிரோ வெண்ணெல்லை முகந்து தருவர் என்று புறநானூறு (33) கூறுகிறது. ஆயர் மகளும் பால் பொருட்களை விற்று நெல் முதலிய உணவுப்பொருட்களைப் பெற்று தங்கள் சுற்றத்துடன் உண்பாள் என்று பெரும்பாணாற்றுப்படை (162) கூறுகிறது.
ஈகை
செல்வக்கடுங்கோ வாழியாதன் மரக்காலில் அளந்து இரவலர்களுக்கு நெல்லை வழங்கினான் என்று பதிற்றுப்பத்துக் (66) கூறுகிறது.
அதியமான் செந்நெல்லை நெற்போரோடு கொடுப்பான் என்று புறநானூறு (390) கூறுகிறது. நெற்போரில் நெல்லைச் சேமித்து வைக்கும் வழக்கம் இருந்ததையும் நெல்லை ஈகையாகக் கொடுத்ததையும் இதன்மூலம் உணரமுடிகிறது.
பெண்களுடன் ஆண்கள் நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பெண்கள் களைபறிக்கும் போது தளம்பு என்ற கருவியைப் பயன்படுத்தியுள்ளனர். வயலைக் காவல் காக்கும் வழக்கம் இருந்தது. நெல் அறுக்கும் போது பறவைகளை விரட்ட தண்ணுமை, பறை முதலிய இசைக்கருவிகள் பயன்பட்டன. நெல்வயலில் ஊடு பயிர் செய்யப்பட்டது. விடியற்காலை நேரத்தில் நெல்லடிக்கப்பட்டது, நெல்லால் பரதவர்களுக்கும் உழவர்களுக்கும் சண்டை ஏற்பட்டது. பின்னர் கள் அருந்தி பரதவர் சமாதானம் அடைந்துள்ளனர்.
நெல்லுடன் முல்லை மலர் தூவி பெண்கள் தெய்வத்தை வணங்கினர். திருமணச் சடங்குளில் முறையே நெல்; பயன்படுத்தப்பெற்றது. நொய்யரிசி, நெல்மாவு, பொரி, அவல், பல வகையான சோற்று வகைகள் பயன்பாட்டில் இருந்தன. இறப்புச் சடங்கில் உப்பில்லாச்சோறு பயன்படுத்தப்பெற்றது. நெல்லில் இருந்து கள் தயாரிக்கப்பட்டது.
நெல்லும் உப்பும் ஒரே விலையுடையதாக இருந்தாலும் உமணப்பெண்கள் உப்பை விற்று நெல்லை வாங்கிச்சென்றனர். நெல்லை நெற்போரில் சேமித்து வைக்கும் வழக்கம் இருந்துள்ளது.
குறிஞ்சி, முல்லை, நெய்தல் நில மக்கள் தம் நிலத்தில் கிடைத்த பொருட்களைக் கொண்டு வந்து கொடுத்து மாற்றாக நெல்லை வாங்கிச்சென்றுள்ளனர். மருத நில மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் அங்கு விளைந்த நெல்லால் அவர்களுக்குக் கிடைத்தது. தம் நிலத்தில் விளைந்தவற்றை விற்ற மற்ற நில மக்களைப்போல அல்லாமல் மருதநில மக்கள் நெல்லை மற்ற இடங்களுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்யவில்லை. இதிலிருந்தே அக்காலத்தில் நெல்லுக்கு இருந்த மதிப்பு உணரப்படுகிறது. சங்ககாலத்தில் இருந்த தானியங்கள் நெல்லுக்கு அடுத்த நிலையிலேயே போற்றப்பட்டு வந்துள்ளன. குறிஞ்சி நிலத்தில் சில நெல் வகைகள் விளைந்தாலும் மருதநிலத்தில் விளைந்த நெல்லே அதிகம் பேசப்படுகிறது.
நெல் பயிரிடுவது முதல் நெல் அறுவடை, பண்டமாற்று முதலிய பல நிகழ்வுகள் பதிவுகளாக உள்ளதாலும் மற்ற தானியங்களின் பதிவுகள் நெல்லின் அளவுக்கு இல்லாததாலும் அக்காலத்தில் நெல் சமூகத்தில் மிக உயர்வாக மதிக்கப்பட்டு வந்தமையை உணரலாம். திருமணம், விரிச்சி கேட்டல் போன்ற நிகழ்வுகளிலும் இறப்பு போன்ற நிகழ்வுகளிலும் நெல் பயன்படுத்தப்பட்டிருப்பதாலும் நெல்லுக்கு இருந்த பெருமதிப்பு அறியப்படுகிறது. சங்ககாலத்தில் மற்ற தானியங்களை விட நெல்லே உயர்வானதாகக் கருதப்பட்டு பயன்படுத்தப்பெற்றது. ஈகையாகக் கொடுக்கப்படும் அளவிற்கு நெல்லின் மதிப்பு உயர்ந்திருந்தது. நெல் வயல்கள் இருந்த வளமிக்க ஊர்கள் பகை மன்னர்களால் அழிக்கப்பட்டதும் இங்கு எண்ணத்தக்கது எனவே சங்ககால மக்கள் நெல்லால் வாழ்ந்தும் மன்னர்கள் நெல்லால் வீழ்ந்தும் உள்ளனர் என்பதையும் உணர முடிகிறது.
நிலத்தைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து பயிர் செய்யும் முறைகள், அதற்குரிய சூழல், தரமான விதைகள், நீர்ப்பாசனம், களையெடுத்தல், அறுவடைக்கு முன் பறவைகளை விரட்டுதல், அறுவடை செய்தல், சடங்குகளில் பயன்படுத்தப்பெற்றமை, பண்ட மாற்று, நெல்லில் இருந்து பெறப்பட்ட கள், அரிசியால் செய்யப்பட்ட பல்வேறு உணவு வகைள், நெல்லை இரவலர்களுக்கு ஈந்தமை போன்ற பல்வேறு நிலைகளில் சங்ககால மக்கள் நெல்லை மேலாண்மை செய்து வாழ்;ந்தனர் என்பதை இவற்றான் அறியமுடிகிறது.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் அ.ஜெயக்குமார்
உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை,
மஹேந்ரா கலை அறிவியல் கல்லூரி
காளிப்பட்டி, நாமக்கல்-637501.