மனிதன் முதலில் உணவைத் தேடி அலைந்து உணவைப் பெறுகிறான். பின்னர் உடையை உடுத்துகிறான். நாடோடியாகத் திரிந்து, அலைந்த பின்னர் ஒரே இடத்தில் வாழத்தொடங்குகின்றான். மனிதன் முதலில் குகைகள் போன்றவற்றில் வசிக்க ஆரம்பித்து அவற்றின் தோற்றத்தைக் கொண்டு, அதைப்போலவே குடிசைகள் அமைக்க ஆரம்பிக்கிறான். இவ்வாறே முதலில் மனிதன் உறைகின்ற இடம் அமைகிறது. பல்வேறு விதமான குடிசைகளை இருப்பிடங்களுக்கு ஏற்றவாறு அமைத்த மனிதன், அவற்றில், பல வேறுபாடுகளைச் செய்கிறான்.
தோற்றம்
குடிசைகள் புதர்போன்ற தோற்றத்தில் இருந்ததை புதல்போல் குரம்பை என்று அகநானூறு (315) கூறுகிறது.
மரங்களின் பயன்பாடு
சங்ககாலத்தில் அடர்ந்த காடுகள் இருந்தன. சங்கத்தமிழர் காடுகளில் இருந்த மரங்களை (விறகிலிருந்து வீடு கட்டுவது வரை) அனைத்து நிலைகளிலும் அனைத்து வகைகளிலும் பயன்படுத்தினர். வேட்டை நாய்கள் குரைத்து விளையாடி வர வேட்டையில் வென்ற கானவன் மரக்காலில் சேர்த்துப்பிணித்த தன் குடிசையை நோக்கிச் சென்றான் என்று நற்றிணை (285) கூறுகிறது. இதனை,
“மனைவாய் ஞமலி ஒருங்கு புடைஆட
வேட்டு வலம் படுத்த உவகையன், காட்ட
நடுகாற் குரம்பைத் தன் குடிவயிற் பெயரும்”
என்ற அடிகள் உணர்த்துகின்றன.
கழிகள்
ஆடுகள் நின்று தின்பதற்காகத் தழைகள் கட்டின குறிய காலையுடைய குடில். அக்குடிலின் வாயில் பல கழிகள் சேர்த்து அமைக்கப்பட்ட கதவினைக் கொண்டதாக உள்ளது. குடிலின் மேல் உள்ள கழிகளின் மீது வரகுக்கற்றை வேயப்பட்டிருக்கும், என்று கோவலரின் குடியிருப்பைப் பெரும்பாணாற்றுப்படை (147) உணர்த்துகின்றது. கழிகள் மிடைந்து புல்லால் வேயப்பட்ட குடிலை
“……….. கழி மிடைந்து இயற்றிய
புல்வேய் குரம்பை”
என்ற அடிகளில் மலைபடுகடாம் (437) உணர்த்துகின்றது.
மூங்கில்
மூங்கிலைக் கழிகளாப் பயன்படுத்தியதை வேழம்நிரைத்து என்று பெரும்பாணாற்றுப்படை (263) கூறுகிறது.
ஒடு மரம்
ஒடு மரத்தின் கோல்களால் அமைக்கப்பட்ட கட்டுக்கதவினையுடைய இல்லங்களின் முன்னர் வேட்டுவர் தீயைமூட்டி உடும்பை வாட்டுவர் என்று புறநானூறு (325) கூறுகிறது. இதனை,
“உடும்பு இழுது அறுத்த ஒடுங்காழ்ப் படலைச்
சீறில் முன்றில் கூறுசெய்திடுமார்”
என்ற அடிகள் உணர்த்துகின்றன. மரக்கோல்கள் கொண்ட கதவு படலை என்று அக்காலத்தில் அழைக்கப்பெற இக்காலத்தில் அது படல் என்று அழைக்கப்படுகிறது. ஆடு, மாடுகளை அடைக்கும் குடிலின் கதவு கிராமங்களில் சில இடங்களில் மரக்கோல்களைக் கொண்டே இன்றும் அமைக்கப்படுகிறது என்பது குறிக்கத்தக்கது.
வெப்பம் மிக்க குடில்
குடிலின் உள்ளே இருப்போர் வருந்துதலுக்குக் காரணமான வெப்பம் மிக்க குடிலைப்பற்றி, உறுவெயிற்கு உலைஇய உருப்பு அவிர் குரம்பை என்று சிறுபாணாற்றுப்படை (174) குறிக்கிறது.
வறுமை மிக்க குடில்
கூரையில் உள்ள கழிகள் வீழ்ந்து கிடக்க, சுவரில் கறையான் அரித்ததால் காளான் பூத்து விளங்க, அடுக்களையில் குட்டிகளை ஈன்ற நாய் பாலில்லாமல் வருந்தி குரைக்கும் வறுமை மிக்க குடிலை சிறுபாணாற்றுப்படை (132) கூறுகிறது.
மரக்கால் பந்தல்
குடில்களுக்கு முன்னர் பந்தல் இருந்தது. அப்பந்தல் மரக்கால்களால் அமைக்கப்பட்டிருந்தது. குமிழம் பழங்களை உண்ட வெள்ளாடு துப்பிய விதைகள் பந்தலில் காணப்படும். அங்கு இடையன் தீயை மூட்டுவான் என்று புறநானூறு (324) கூறுகிறது. இதனை,
“குமிழ் உண்வெள்ளை பகுவாய் பெயர்த்த
வெண்காழ் தாய வண்காற் பந்தர்
இடையன் பொத்திய சிறுதீ விளக்கத்து”
என்ற அடிகள் உணர்த்துகின்றன.
பாசறை
பாசறையும் மரக்கால்களைக் கொண்டு அமைக்கப்பட்டது. கூவையிலையால் மூடப்பட்டது. இதனை, கூவை துற்ற நாற்கால் பந்தர் (புறம் 29) என்ற அடியால் உணரலாம். மேற்கண்ட செய்திகளிலிருந்து குடில்களில் மரங்கள் கதவாகவும், கழியாகவும் பயன்பட்டதை அறிய முடிகிறது.
சுவர்
குடில்களுக்கு மண்ணால் ஆன சுவர் வைக்கப்பட்டிருந்தது. தரையை மெழுகுவது போல சுவற்றையும் மண்பூசி செய்யப்படுகிறது.
செம்மண் பூசுதல்
தலைவியை உடன்போக்கில் அழைத்துக்கொண்டு வரும் தலைவனின் தாய், அலங்கரிக்கப்பெற்ற புறச்சுவரில் செம்மண் பூசி, முற்றத்தில் மணலைப் பரப்பி, மாலைகளைத் தொங்கவிட்டு வீட்டினை அழகு செய்வாள் என்று அகநானூறு (195) கூறுகிறது. இதனை,
“………………. தாயே
புனைமான் இஞ்சி பூவல் ஊட்டி
மனைமணல் அடுத்து மாலை நாற்றி”
என்ற அடிகள் உணர்த்துகின்றன. சுவரில் செம்மண் பூசியதால் சுவர் மண்சுவர் என்று அறியலாம். இக்காலத்தில் சுண்ணாம்பு பூசாத மண்சுவருக்கு பண்டிகை போன்ற நாட்களில் செம்மண் பூசும் வழக்கம் உள்ளது. செம்மண் பூசப்பட்ட இல்லத்தை செவ்வாய்ச் சிற்றில் என்று அகநானூறு (394) கூறுகிறது.
திருமணவிழாவின் போது எங்கும் மணல் பரப்பி, இல்லத்திற்குச் செம்மண் பூசி, பெண் எருமையின் கொம்பினை வைத்து வணங்குவர் என்று கலித்தொகை கூறுகிறது. இதனை,
“தருமணல் தாழப்பெய்து இல்பூவல் ஊட்டி
எருமைப் பெடையோடு எமர் ஈங்கு அயரும்”
என்ற கலித்தொகை (114) அடிகள் உணர்த்துகின்றன. இல்லிற்குச் செம்மண் பூசுவர் என்பதன் மூலம் தரை, சுவர் போன்றவற்றிற்குச் செம்மண் பூசியிருப்பர் என்று உணரப் பெறுகின்றது.
சுண்ணாம்பு பூசுதல்
குடிலின் இறப்பில் (தாழ்வாரத்தில்) சுண்ணாம்பு பூசியதை
“……………. இறைமிசை
மாரிச் சுதையின் ஈர்ம்புறத்து அன்ன”
என்று அகநானூறு (346) கூறுகிறது. கலப்பையைச் சார்த்தி வைப்பதால் சுவர் தேய்ந்து காணப்பட்டது என்று பெரும்பாணாற்றுப்படை (188) கூறுகிறது.
குடில்களில் மண்சுவர் இருந்துள்ளது. அதனைச் செம்மண், சுண்ணாம்பு பூசி அழகு செய்வர் என்று உணரப்பெறுகின்றது. சுவர் மண்சுவராக இருந்ததால் தேய்ந்து காணப்பெற்றது என்று அறியலாம்
குடிசையின் கூரைகள்
பலவித புற்களையும் இலைகளையும் கொண்டு குடிசையின் கூரைகளை வேய்ந்துள்ளனர்.
புல்
புல்லால் வேயப்பட்ட சிறிய குடிசையினை புல்வேய் குரம்பை என்று அகநானூறும் (172), புறநானூறும் (120) உணர்த்துகின்றன. புல்லால் வேயப்பட்ட குடிசைகளையுடைய ஊரில் புலால் நாற்றம் வீசியதை, புலால்அம் சேரி புல்வேய் குரம்பை என்று அகநானூறு (200) உணர்த்துகிறது. புல்லிய இலைகளால் வேயப்பட்ட குடிசைகளை உடைய ஊரை, புல்இலை வைப்பின் புலம் என்று பதிற்றுப்பத்து (15) கூறுகிறது.
“ஊகம்புல்லால் வேயப்பட்ட சுவருடைய குடிசையை
ஊகம் வேய்ந்த உயர்நிலை வரைப்பின்”
என்று பெரும்பாணாற்றுப்படை (122) கூறுகிறது. இதைப்போலவே குன்றக் குறவன் புல்வேய் குரம்பை என்று ஐங்குறுநூறு (252) கூறுகிறது. இது ஊகம்புல் என்று உரையாசிரியர் கருதுகிறார். எனவே, புல்லால் வேயப்பட்ட குடிசை என்றால் அது ஊகம்புல்லாக இருக்கவும் வாய்ப்புண்டு.
தருப்பைப் புல்
மூங்கிலைக் கழிகளாக வைத்து, இடையில் மரக்கொம்புகளை வைத்து தாழை நாரால் கட்டி, தருப்பைப் புல்லால் வேய்ந்த வலைஞரின் குடிலை பெரும்பாணாற்றுப்படை (263) கூறுகிறது. மீனவர்களின் குடியிருப்பாதலால் அங்கு கிடைக்கும் தாழை மர நார் கட்டுவதற்கும், தருப்பைப்புல் (நாணற்புல்) வேய்வதற்கும் பயன்படுத்தப்பட்டது என்று அறியலாம்.
தாழை
“தாழையால் வேயப்பட்ட குடிசையை
தடந்தாட் தாழைக் குரம்பை”
என்ற நற்றிணை (270) உணர்த்துகிறது.
முள்ளிச் செடி
முள்ளிச் செடிகளால் வேய்ந்த குறுகிய வாசலையுடைய குடிசையை
“முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பை”
என்று நற்றிணை (207) கூறுகிறது. நெய்தல் நில மக்கள் தருப்பை, தாழை, முள்ளி போன்றவற்றைக் குடிசையில் வேய்ந்தனர் என்ற கருத்து பெறப்படுகின்றது.
ஈந்தின் இலை
கொழுவிய மடலையும், வேல்போலும் நுனியையும் பொருந்திய ஈந்தின் இலையால் வேயப்பட்ட, முள்ளம்பன்றியின் முதுகு போன்ற புறத்தினை உடைய குடிசை, இதன்மேல் எலி, அணில் முதலியன திரியாமல் இருக்கும் என்று பெரும்பாணாற்றுப்படை (86) கூறுகிறது. இதனை,
“……………….. கொழுமடல்
வேற்றிலை அன்ன வைந்நுதி நெடுந்தகர்
ஈத்துஇலை வேய்ந்த எய்ப்புறக் குரம்பை”
என்ற அடிகள் உணர்த்துகின்றன. முள்ளம்பன்றியின் முதுகில் கூர்மையான முட்கள் குத்திட்டு நிற்பது போல குடிசையில் ஈந்தின் இலைகள் குத்திட்டு நின்றன. இவ்வாறு இதை வேய்வது கடினம். எலி, அணில் போன்றவற்றால் வரும் தொந்தரவுகளைத் தடுக்க, தமக்குக் கிடைத்த பொருட்களைக் கொண்டே இயற்கையான முறையில், பாதுகாப்பு அரண்போன்று அமைத்துள்ளனர்.
வரகுத்தாள்
வரகின் வைக்கோலால் வேயப்பெற்ற குடிசையை பெரும்பாணாற்றுப்படை கூறுகிறது. இதனை, கருவை வேய்ந்த கவின் குடிச் சீறூர் (191) என்ற அடி உணர்த்துகிறது. கழிகளுக்கு மேல் வரகுக்கற்றை வேயப்பட்டதை
“…செறிகழிக் கதவின்
கற்றை வேய்ந்த (149)”
என்றும் பெரும்பாணாற்றுப்படை கூறுகிறது. இவை இரண்டுமே கோவலர்களின் குடிசைகள் என்பது குறிக்கத்தக்கது. முல்லை நிலத்தில் விளைந்த வரகு உணவாகவும், வரகுத்தாள் வேய்வதற்கும் பயன்பட்டது என்று அறியலாம்.
நெற்தாள்
உழவர்களின் குடிசைகளில் வைக்கோல் வேயப்பட்டிருந்தது. இதனைப் பெரும்பாணாற்றுப்படை(225) கூறுகிறது. புதுவை வேய்ந்த கவிகுடில் என்ற அடி இதனை உணர்த்துகிறது. உழவர்களாதலால் அங்கு நெல்லடித்த பின்னர் எஞ்சியுள்ள நெற்தாள் வீடு வேயப்பயன்பட்டது. இன்றும் பல இடங்களில் இதனை வீடு வேய்வதற்குப் பயன்படுத்துகின்றனர்.
நெற்கதிர்
நெற்கதிர்களைக் கூரையாக வேய்ந்து, கழிகளாகக் கரும்பைப் பயன்படுத்திய குடிலை
“செந்நெற் கதிர் வேய்ந்த
ஆய் கரும்பின் கொடிக்கூரை”
என்ற அடிகளில் புறநானூறு (22) உணர்த்துகிறது. மருத நில வளத்தை இவ்வாறு கூறியிருக்கலாம்.
பனை ஓலை
சமையற் கூடத்தின் கூரை பனை ஓலையால் வேயப்பட்டிருந்தது என்று நற்றிணை (300) கூறுகிறது. இதனை,
அட்டில் ஓலை தொட்டனை
என்ற அடி உணர்த்துகிறது. இன்றும் பனையோலைகளால் குடில்கள் வேயப்படுகின்றன.
தென்னை மடல்
தென்னந்தோப்புகள் தோறும் தனித்தனியாக இருந்த உழவரின் வீடுகளைப் பற்றி பெரும்பாணாற்றுப்படை கூறுகிறது. இங்கு முற்றத்தில் மஞ்சள் இருக்கும். வீட்டைச் சுற்றிப் பூந்தோட்டங்கள் இருக்கும் தென்னையின் வாடிய மடலால் இதன்கூரை வேயப்பட்டிருக்கும். இதனை,
“வன்தோட்டுத் தெங்கின் வாடுமடல் வேய்ந்த
மஞ்சள் முன்றில் மணம்நாறு படப்பை
தண்டலை உழவர் தனிமனை”
என்ற அடிகளில் பெரும்பாணாற்றுப்படை (353) உணர்த்துகிறது. மருதநிலத்தில், தென்னை முதலியன நன்கு வளர்கின்றன. தோப்புகளுக்கு இடையில் உள்ள குடிசை. அதனால் நிறைய இடம் அங்கு இருக்க அவ்விடத்தில் பூந்தோட்டங்கள் இருந்தன என்று அறியலாம். வாடிய தென்னை மடல் வேயப்பயன்பட்டது என்பதை அறியலாம். இன்று தென்னை மடலைக் கீற்றுக்களாகப் பின்னி, கழிகளின் மேல் அதனைக் கட்டி, அதன்மேல் நெற்தாள் போன்றவற்றை வேய்கின்றனர். இன்றும் பல இடங்களில் வயல்களுக்கு நடுவில் குடிசை வீடுகள் உள்ளன. வீடுகளைச் சுற்றித் தோட்டங்களும், மரங்களும் வளர்க்கப்படுகின்றன.
குறுகிய கூரை
குறுகிய கூரையையுடை குடிசையையும், அதன் அருகில் மிளகுக்கொடி படர்ந்த தோட்டத்தையும் அகநானூறு (272)
“…………. கறிஇவர் படப்பைக்
குறிஇறைக் குரம்பை”
என்ற அடிகளில் உணர்த்துகின்றது. வரகுத்தாள், நெற்தாள், ஈந்தின் இலை, ஊகம்புல், தாழைமடல் போன்றவை கிடைப்பதற்கேற்ப அவை குடிசைகளின் மேற்கூரையாகப் பயன்படுத்தப்பெற்றன என்று உணர முடிகிறது.
பரண்
கானவர்கள் தம் தினைப்புனத்தில் காவலுக்கு இருப்பதற்காக மரங்களின் மீது பரண் அமைப்பர். இப்பரணுக்கு மேற்கூரை இருந்ததை நற்றிணை (306) உணர்த்துகிறது. இப்பரணின் மேற்கூரையில் புலித்தோல் வேய்ந்து இருந்ததையும் நற்றிணை (351) உணர்த்துகிறது.
வாயில்கள்
குடிசைகளின் வாயில்கள் பெரும்பாலும் மிகவும் குறுகியதாகவே இருந்துள்ளன. காட்டு விலங்குகள் குடிசைகளுக்குள் புகாமல் இருக்கவே இவ்வாறு அமைக்கப்பட்டிருக்கலாம் என்று அறியலாம். குனிந்து செல்லும்படியான தலைகுவிந்துள்ள குடிசைகளைக் கொண்ட பாலைநில ஊரைப் பற்றி அகநானூறு (329) குறிக்கிறது. இதனை, குவிந்த குரம்பை அம்குடிச் சீறூர் என்ற அடி உணர்த்துகின்றது. முள்ளிச்செடிகளால் வேய்ந்த குறுகிய வாயிலையுடைய குடிசையை முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பை என்று நற்றிணை (207) உணர்த்துகிறது.குறுகிய வாயிலைக் கொண்ட மீனவர்களின் வீடுகளை குறுங்கூரைக் குடி என்று பட்டினப்பாலை (81) கூறுகிறது. குடில்களின் வாயில்கள் பெரும்பாலும் சிறியதாகவே இருந்துள்ளன என்பதை அறிய முடிகிறது. குறுகிய இறப்பிணையுடைய குடிசைகளை குறிஇறைக் குரம்பை என்று அகநானூறும் (210) புறநானூறும் (129) கூறுகின்றன. இறப்பினை, இறவானம் என்று இக்காலத்தில் கூறுகின்றனர். இறப்பு மிகவும் குறுகியது என்பதால் வாயிலும் மிகவும் குறுகியது என்று உணரலாம்.
முற்றம்
வீட்டின் முன்புறம் முற்றம் என்றும் முன்றில் என்றும் கூறப்பட்டது. முள்வேலிக்கு அருகில் பீர்க்கும், சுரையும் படர்ந்த வீட்டின் முற்றத்தை
“……….. முள்மிடை வேலி
பஞ்சி முன்றில் சிற்றில் ஆங்கண்
பீரை நாறிய சுரை இவர் மருங்கின்”
என்று புறநானூறு (116) உணர்த்துகிறது.
நண்டுகள் விளையாடல்
பரதவர்களின் வீட்டு முற்றத்தில் மணல் பரப்பப்பட்டிருக்கும். புலால் நாற்றம் வீசும். நண்டுகள் விளையாடும் என்று நற்றிணை (239) உணர்த்துகிறது.
பனைமரம்
பனையின் கரிய அடிமரம் மறையுமாறு மணல் மிகுந்த முற்றத்தை
“……………….. பெண்ணை
மாஅரை புதைத்த மணல்மலி முன்றில்”
என்று நற்றிணை (135) உணர்த்துகிறது.
புன்னை, தாழை மரங்கள்
முன்றிலில் புன்னை மரமும், தாழை மரமும் இருந்தன அவற்றின் மணம் எங்கும் பரவின என்று நற்றிணை (49) கூறுகிறது.
பலா
குறிஞ்சி நிலத்தில் முற்றத்தில் கிளைகள்தோறும் பழங்கள் தொங்குகின்ற பலாமரங்கள் இருந்தன என்பதை
“சினைதொறும் தூங்கும் பயம்கெழு பலவின்
சுளையுடை முன்றில்”
என்ற அடிகளில் நற்றிணை (77) உணர்த்துகிறது. முன்றிலில் இருந்த பலாச்சுளைகளைத் தின்ற மந்தி, விதைகளைத் தரையில் பரப்ப, கொடிச்சி தன் தந்தையின் மலையைப் பாடிக்கொண்டே ஐவன வெண்ணெல்லைக் குற்றுவாள் என்பதை நற்றிணை (373) உணர்த்துகின்றது. மரை மான்கள் நெல்லிக்காயைத் தின்று முற்றத்தில் பரப்பும் என்று புறநானூறும் (170) மான்கள் நெல்லிக்காயை உண்ணும் முற்றத்தை குறுந்தொகையும் (235) கூறுகின்றன.
விளாமரம்
எயினரின் குடிசை முற்றத்தில் விளாமரமும் அங்கே மான்களும் கட்டப்பட்டிருந்தன என்று பெரும்பாணாற்றுப்படை (95) கூறுகிறது. இதனை,
“பார்வை யாத்த பறைதாள் விளவின்
நீழல் முன்றில் நில உரல் பெய்து”
என்ற அடிகள் உணர்த்துகின்றன.
குரவைக்கூத்து
முன்றிலில் இருந்த வேங்கை மரத்தின் அடியில் மக்கள் குரவைக் கூத்தாடுவர் என்பதை, வேங்கை முன்றில் குரவையும் கண்டே என்ற அடியில் நற்றிணை (276) உணர்த்துகிறது.
குறிபார்த்தல்
மணல் பரப்பப்பட்ட முற்றத்தில் வேலனை அழைத்து கழங்கிட்டுக்குறி பார்ப்பர் என்பதனை
“பெய்ம்மணல் முற்றம் கடிகொண்டு
மெய்ம்மலி கழங்கின் வேலற் தந்தே”
என்ற அடிகளில் நற்றிணை (268) உணர்த்துகிறது.
விளையாடுதல்
குறவர்கள் முன்றிலில் விளையாடுவர் என்பதை நற்றிணை (44) குறவர் அல்கு அயர் முன்றில் என்ற அடியில் உணர்த்துகிறது.
கழங்காடுதல்
கூரையுடைய நல்ல வீட்டின் முற்றத்தில் வளையணிந்த மகளிர் மணற்பரப்பில் கழங்கு விளையாடுவர். இதனை,
“கூரை நல்மனைக் குறுந்தொடி மகளிர்
மணல்ஆடு கழங்கின்”
என்று நற்றிணை (79) உணர்த்துகிறது.
பறிகள்
வலைஞரின் குடிசைக்கு முன்னால் மீனை வாரி எடுக்கும் பறிகள் இருந்ததை, பெரும்பாணாற்றுப்படை (265) பறியுடை முன்றில் என்று உணர்த்துகிறது.
கன்றுகள்
வீட்டின் முற்றங்களில் பசுக்கன்றுகளை கட்டுவர், நெல் குற்றுவர் குரவைக் கூத்தாடுவர் என்பதால் முற்றம் பெரிய அளவில் இருந்திருக்க வேண்டும் எனக் கருத முடிகிறது.
மான்கள்
வேட்டுவரின் குடிசை முன்னால் மான்கள் கட்டப்பட்டதைப் புறநானூறும் (320) கூறுகிறது.
உரல்
முற்றத்தில் உரல் இருந்துள்ளது. உரல் குடிலில் இருந்தால் உயர்த்திக் குற்றும்போது கூரையில் படும் என்பதற்காக வீட்டின் முன்னால் உரல்களை வைக்கும் பழக்கம் இன்றும் கிராமங்களில் உள்ளது.
தூய்மையற்ற முற்றம்
செத்தைகள் மிகுந்து, தூய்மை செய்யப்பெறாத முற்றத்தை, காட்டொடு மிடைந்த சீயா முன்றில் என்று புறநானூறு (316) கூறுகிறது.
முற்றத்தை மெழுகுதல்
மனைவி தன் கணவன் விண்ணுலகு அடைந்தபின் அவனுக்கு உணவிட விரும்பி, தன் கண்ணீரும், பசுஞ்சாணமும் கொண்டு முற்றத்தில் முறம் அளவு மெழுகுவதைப் புறநானூறு (249) கூறுகிறது. தெய்வத்திற்கு அயரும் குரவைக்கூத்து முதல், இறந்த கணவனுக்கு உணவு படைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவது வரை முற்றம் இன்றியமையாத பங்கு வகிக்கும் இடமாக இருந்தது என்று உணரப்பெறுகின்றது.
பந்தல்
குடிசைகளுக்கு முன்னால் பந்தல் இருந்தது. பந்தலில் பொருட்களைத் தொங்க விடுவர், விருந்தினரைப் பேணுவர். சில கொடி வகைகளை வளர்த்து அவற்றைப் பந்தலாக்குவர். வளைந்த கால்களையுடைய பந்தலை அகநானூறு (394) கூறுகிறது. இதனை, முடக்கால் பந்தர் என்ற தொடர் உணர்த்துகிறது. குழந்தை பாலை உண்ணாமல் முற்றத்தில் உள்ள பந்தலுக்கு ஓடியதை நற்றிணை (110) கூறுகிறது. விருந்தினர் வந்து கொண்டே இருப்பதால் வீட்டில் ஏற்படும் நெருக்கத்தைக் குறைப்பதற்காகவும், ஒய்விற்காகவும் வீட்டின் முன்னர் பந்தலை அமைத்திருக்கலாம்.
கன்றுகளைப் பிணித்தல்
சிறிய கால்களைக் கொண்ட பந்தலில், செழுமையான கன்றுகளைப் பிணித்துள்ளதைப் பெரும்பாணாற்றுப்படை (297) கூறுகிறது. இதனை செழுங்கன்று யாத்த சிறுதாட் பந்தர் என்ற அடி உணர்த்துகிறது.
பசுங்காய்கள்
புன்னையின் கொம்பால் அமைக்கப்பட்ட பந்தலில் பசுங்காய்கள் தொங்குவதை
“கொடுங்காற் புன்னைக் கோடுதுமித்து இயற்றிய
பைங்காய் தூங்கும் பாய்மணற் பந்தர்”
என்று அடிகளில் பெரும்பாணாற்றுப்படை (266) உணர்த்துகிறது. பசுங்காய்கள் தொங்கும் என்பதால் கொடி வகைகளைப் பந்தலில் படர விட்டுள்ளனர் என்றும், அவை காய்த்துத் தொங்கின என்றும் அறியலாம்.
இசைக்கருவிகள்
துடி என்னும் இசைக்கருவிகள் தொங்குகின்ற திரண்ட காலையுடைய பந்தலை
கடுந்துடி தூங்கும் கணைக்காற் பந்தர்
என்று பெரும்பாணாற்றுப்படை (124) கூறுகிறது.
முஞ்ஞைக் கொடி, முசுண்டைக் கொடி
வீட்டின் முற்றத்தில் முஞ்ஞைக் கொடியும், முசுண்டைக் கொடியும் வளர்ந்து, புதிதாகப் பந்தல் அமைக்க வேண்டாமல் அக்கொடிகளே பந்தல் போலக் காட்சியளிக்கும். பலரும் உறங்குவதற்கு அந்நிழல் பயன்படும் என்று புறநானூறு கூறுகிறது. (320) இதனை,
“முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பி
பந்தர் வேண்டாப் பலர்தூங்கு நீழல்”
என்ற அடிகள் உணர்த்துகின்றன. பலரும் உறங்குவர் என்பதால் பெரிய பந்தல் போல் முஞ்ஞையும், முசுண்டையும் படர்ந்திருந்தது என்று அறியலாம். இக்காலத்தில் முல்லை மல்லிகை போன்ற கொடிவகைகளை வீட்டிற்கு முன்னரும் பின்னரும் பந்தல் போல் படர விடுகின்றனர். கன்றுகளைப் பிணித்தல், விருந்தினரைப் பேணுதல், கொடி வகைகளைப் படர விடுதல் போன்ற பலவற்றிற்கும் முற்றத்தில் அமைந்திருந்த பந்தல் பயன்பட்டது என்பதை அறிய முடிகிறது.
வேலி
வீட்டைச் சுற்றிப் பலவகையான வேலிகளை அமைத்துள்ளனர். வீட்டைச் சுற்றி இருந்த முள்வேலியை எருமை தன் கொம்பினால் அகற்றியது. இதனை,
கூர்முள் வேலி கோட்டின் நீக்கி
என்ற அடியில் அகநானூறு (46) உணர்த்துகிறது.
பீர்க்கங் கொடி
வீட்டைச் சுற்றி கூர்மையான முள்வேலி இருந்ததையும், அதன்மேல் பீர்க்கங் கொடிகளைப் படர விட்டிருந்ததையும் நற்றிணை (277) கூறுகிறது. இதனை,
“நுண் உள் வேலித் தாதொடு பொதுளிய
தாறு படு பீரம்”
என்ற அடிகள் உணர்த்துகின்றன. பீர்க்கங்கொடி படர்ந்த வேலியைப் பீர் இவர் வேலி என்று பதிற்றுப்பத்து (26) கூறுகிறது. வேலியில் மற்றச் செடிகளைவிட பீர்க்கங் கொடிகளையே அதிகம் படர விட்டிருந்தனர் என்ற கருத்து பெறப்படுகிறது.
முள் வேலி
முள்வேலியிட்ட, தொழுக்கள் நிறைந்த குடியிருப்புகளை
“………. முள் உடுத்து
எழுகாடு ஓங்கிய தொழுவுடை வரைப்பில்”
என்று பெரும்பாணாற்றுப்படை (184) கூறுகிறது.
கழல் முள் வேலி
கழல் முள்ளால் ஆன வேலியை கழல் முள் வேலி
என்று புறுநானூறு (306) கூறுகிறது. கழல்முள் போன்றவற்றாலும் வேலியை அமைப்பர் என்று அறியலாம்.
மூங்கில் முள்
மூங்கில் முள்ளால் அமைந்த வேலியையுடைய குடியிருப்புகளை வேரல் வேலி என்று நற்றிணையும் (232) குறுந்தொகையும்(18) கூறுகின்றன. இயற்கையாக இதுபோல் அமையும் வேலியை வாழ்வேலி என்றும், செயற்கையாக அமையும் வேலியை இடுமுள்வேலி என்றும் அழைத்துள்ளனர். வாழ்வேலியைப்பற்றி பெரும்பாணாற்றுப்படையும் வாழ்முள் வேலி (126) என்று குறிக்கிறது.
தாழை மரவேலி
தாழை மரங்களும் வேலியாக அமைந்திருந்தன. தாழை மரங்கள் வேலியாக இருந்ததை
நற்றிணை (363, 372) உணர்த்துகிறது. குறிஞ்சி நிலத்தில் மூங்கில் வேலியாக இருந்தது போன்று நெய்தல் நிலத்தில் தாழை இருந்தது என்று அறியமுடிகிறது.
பனையோலை வேலி
பனை மரங்களிலிருந்து விழும் பனையோலைகளைக் கொண்டு வேலி அமைத்த, மணல் பரந்த நெய்தல் நில முற்றத்தை நற்றிணை (354) உணர்த்துகிறது. குடிசையின் கூரை மட்டுமல்ல, வேலியும் பனையோலையால் அமைவதும் உண்டு என்று அறியலாம். பனை ஓலையோடு முட்கள் சேர்த்துக் கட்டப்பெற்ற வேலியையும் நற்றிணை (38) உணர்த்துகிறது.
நொச்சி வேலி
மனைக்கு வேலியாக நொச்சி மரம் இருந்ததையும், அதன் கிளையில் குயில் கூவும் என்பதையும் நற்றிணை (246) கூறுகிறது. இதனை,
“மனைமா நொச்சி மீமிசை மாச்சினை
வினை மாண் இருங்குயில் பயிற்றலும் பயிற்றும்”
என்ற அடிகள் உணர்த்துகின்றன.
முல்லை வேலி
வேலியைச்சுற்றி முல்லைக்கொடி படர்ந்திருந்ததை வேலி சுற்றிய வால்வீ முல்லை என்று அகநானூறு (314) கூறுகிறது. பீர்க்கங்கொடி வேலிகளின் மீது படர்ந்திருந்தது போல் முல்லைக் கொடியும் படர்ந்திருக்கலாம் என்று உணரமுடிகின்றது.
காந்தள் வேலி
குறிஞ்சி நிலத்தில் காந்தள் செடியும் இயற்கை வேலியாக இருந்துள்ளது. இதனை, காந்தள் அம் சிலம்பில் சிறுகுடி என்று குறுந்தொகை (100) உணர்த்துகிறது.
பருத்திச்செடி
பருத்திச்செடியும் வேலியாக இருந்துள்ளது. பருத்திச்செடி வேலியாக இருந்த ஊரை, பருத்தி வேலிச் சீறூர் என்று புறநானூறு (299,345) கூறுகிறது.
எனவே, முள்வேலி, பனையோலை வேலி, மூங்கில்முள் வேலி, தாழை மர வேலி, நொச்சி மர வேலி, முல்லைக்கொடி வேலி, கழற்கொடிவேலி போன்ற பலவகை வேலிகள் இருந்துள்ளன என்று அறியப் பெறுகின்றது. நில அமைப்பிற்கு ஏற்றாற்போல் இவ்வேலிகள் இருந்தன. விலங்குகளின் ஆபத்தில் இருந்து தவிர்க்கவே இவ்வாறு வேலியை அமைத்திருப்பர் என்ற கருத்து பெறப்படுகின்றது.
செடிகளும், மரங்களும்
ஒவ்வொரு நிலத்திலும் அந்தந்த நிலத்திலுள்ள சிறப்பான செடிகள் வீடுகளில் வளர்க்கப்பெற்றன. இல்லத்தில் வயலைக்கொடி வளர்த்ததை இல் எழு வயலை என்று நற்றிணை (179) குறிக்கிறது.
குறிஞ்சி
ஓவியம் போன்ற இல்லத்தின் அருகில் குறிஞ்சிச் செடிகள் இருந்ததையும் அதன் மலர்களில் தேன் இருந்ததையும் நற்றிணை (268) உணர்த்துகிறது.
வயலை, நொச்சி
வீட்டின் முன்னர் வயலைக்கொடியும், நொச்சி மரமும் இருந்ததை,
“…………… வயலையும்
மயில் அடி அன்ன மாக்குரல் நொச்சியும்”
என்ற அடியில் நற்றிணை (305) உணர்த்துகிறது.
பனை
பனை மரங்கள் ஊரைச்சுற்றி இருந்தன என்று நற்றிணையும் (323), குறுந்தொகையும் (81) கூறுகின்றன.
மூங்கில்
மூங்கில் மரங்கள் வளர்ந்த இடத்தில் இருந்த மலைக்குவடுகளுக்கு அருகில் இருந்த ஊரை மூங்கில் குவட்டிடையதுவே என்று குறுந்தொகை (179) கூறுகிறது.
தென்னை
மணம் கமழும் பூந்தோட்டங்கள் சூழுமாறு, தென்னை மரத்தோப்புகளுக்கு இடையில் உழவர்களின் வீடுகள் இருந்ததைப் பெரும்பாணாற்றுப்படை (353) கூறுகிறது. இதனை,
“வன்தோட்டுத் தெங்கின் வாடுமடல் வேய்ந்த
மஞ்சள் முன்றில், மணம் நாறு படப்பை
தண்டலை உழவர் தனிமனைச் சேப்பின்”
என்ற அடிகள் உணர்த்துகின்றன.
பூந்தோட்டங்கள்
பூந்தோட்டங்களுக்கு அருகில் பாணர்களின் குடியிருப்பு இருந்ததை,
“பல்வேறு பூத்திரள் தண்டலை சுற்றி
அழுந்து பட்டிருந்த பெரும்பாண் இருக்கையும்”
என்று மதுரைக்காஞ்சி (341) உணர்த்துகிறது. எனவே, வீட்டைச்சுற்றி அல்லது வீட்டின் அருகில் புன்னை, தாழை, விளா, பலா, வேங்கை, மூங்கில், பனை, ஆலமரம், நொச்சி முதலிய மரங்களும், குறிஞ்சி, முல்லை, காந்தள், பீர்க்கு, சுரை, வயலை, கழற்கொடி, முஞ்ஞை, முசுண்டை, பருத்தி முதலிய செடி கொடி வகைகளும் இருந்தன என்று அறிய முடிகின்றது. பலா, வேங்கை, முஞ்ஞை, முசுண்டை, கழற்கொடி முதலியவை முன்னரே வீடுகளின் அருகில் இருந்தமை உணர்த்தப் பெற்றது.
பறவைகள்
வீடுகளில் சில வகையான பறவைகள் வளர்க்கப்பெற்றன. அவை குருவி, கோழி, புறா, இதல், கிளி முதலியன.
குருவி
குருவிகள் முற்றத்தில் உலர்த்திய புழுக்கலை உண்டு பொது இடத்தில் உள்ள நுண்ணிய புழுதியில் குடைந்து விளையாடி, தன் குஞ்சுகளோடு வீட்டின் இறைப்பில் தங்கியிருக்கும் என்று குறுந்தொகை (46) கூறுகிறது. முற்றத்தில் நெல் போன்ற தானிய வகைகளை உலர வைத்திருக்கலாம் என்றும் அதைக் குருவிகள் உண்டிருக்கலாம் என்றும் அறியமுடிகிறது. வீட்டின் இறப்பில் குருவி இருந்ததை உள் இறைக் குரீஇ என்றும் (181) உள் ஊர்க் குரீஇ என்றும் (231) நற்றிணை உணர்த்துகிறது. இதனை மனை உறைக் குரீஇ என்று புறநானூறும் (318) உணர்த்துகிறது.
கோழி
வீட்டில் கோழிகள் வளர்க்கப்பெற்றுள்ளன. இல்லத்தில் உறையும் கோழியின் பெடை, வேலிக்கு அப்பால் இருந்த காட்டுப் பூனையின் கூட்டம் மாலைக்காலத்தில் இல்லிற்கு வந்ததால், பாதுகாப்பாகப் புகுவதற்கு உரிய இடத்தை அறியாமல் துன்பத்துடன் தன் குஞ்சுகளை அழைத்துக் கூவிற்று என்று குறுந்தொகை (139) கூறுகிறது.
புறா
புறாக்களும் வளர்க்கப்பெற்றுள்ளன. பாணன் விருந்தினராக மாலை நேரத்தில் வந்ததால் குடிலின் முன்னர் தினையைத் தூவி புறாக்களைப் பிடிப்பதற்கு முடியவில்லை என பாலை நிலத் தலைவனின் மனைவி கூறுவதாகப் புறநானூறு (319) கூறுகிறது.
இதல்
இப்பறவை கௌதாரி என்றழைக்கப்படுகிறது. பாணன் மாலைப்பொழுதில் வந்ததால் தினையைத் தூவி இதனைப் பிடிக்க முடியாமல் போனது. இருப்பினும் முயலின் சுட்ட கறித்துண்டுகளைத் தருவோம் என்று பாலை நிலத் தலைவன் ஒருவனின் மனைவி கூறுவதாகப் புறநானூறு (319) கூறுகிறது.
இதனை
“படலை முன்றில் சிறுதினை உணங்கல்
புறவும் இதலும் அறவும் உண்கெனப்
பெய்தற்கு எல்லின்று பொழுதே”
என்ற அடிகள் உணர்த்துகின்றன.
கிளி
இது அந்தணர்களின் வீடுகளில் வளர்க்கப்பெற்றது. கிளிகளுக்கு வேதத்தின் ஓசையைக் கற்பிக்கும் அந்தணர் வீடுகளைப் பெரும்பாணாற்றுப்படை (300) கூறுகிறது. இதனை,
வளைவாய்க் கிள்ளை மறைவிளி பயிற்றும்
மறைகாப் பாளர் உறைபதி
என்ற அடிகள் உணர்த்துகின்றன.
குருவி, கோழி, புறா, இதல், கிளி முதலிய பறவைகள் வீடுகளில் வளர்க்கப்பெற்றுள்ளன. கோழி, புறா, இதல் முதலிய பறவைகள் உணவிற்கும் பயன்பட்டன. குருவி, கிளி முதலியவை பொழுது போக்கிற்காக வளர்க்கப் பெற்றுள்ளன. புறா, இதல் முதலியவை விருந்தினர் வந்தால் உடனடியாக உணவிற்குப் பயன்படுத்தப் பெற்றுள்ளன. இவற்றை உணவிற்குப் பயன்படுத்த முடியாத நிலையில் முயல் போன்றவற்றைப் பயன்படுத்தியுள்ளனர்.
விலங்குகள்
குடில்களில் பறவைகள் மட்டுமன்றி விலங்குகளும் பயன்கருதி வளர்க்கப்பெற்றுள்ளன. பசு, எருமை, மரையா, மான், நாய், பன்றி முதலிய விலங்குகள் வளர்க்கப்பட்டதை அறிய முடிகிறது.
பசு
இது ஆயர்களின் வீடுகளில் பெருமளவில் வளர்க்கப்பட்டது. ஆயர்கள் இதன் மூலம் வளமை அடைந்தனர். காலையில் பசுக்களை மேய்ப்பதற்காக ஓட்டிச்செல்வர். பசுவின் கன்றுகளை வீட்டில் கட்டி வைப்பர். தாயில்லாமல் வருந்தும் கன்றுகளிடம்,
கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர
இன்னே வருகுவர் தாயர்
என்று ஆயர் மகள் கூறுவதாக முல்லைப்பாட்டு (15) கூறுகிறது. பசுக்களை மேய்ப்பதற்கு ஆயர்கள் ஓட்டிச் சென்றதை கலித்தொகை (106) கூறுகிறது. ஆயர்கள் ஏறு தழுவும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர் என்பதை முல்லைக்கலிப் பாடல்கள் உணர்த்துகின்றன.
பசுக்களின் மூலம் ஆயர்கள் பால், வெண்ணெய், தயிர், மோர், நெய் முதலியவற்றை விற்று தங்கள் வாழ்க்கையை வளமாக்கினர்.
எருமை
சிறுவர்கள் எருமைகளின் இனிய பாலை கறந்து கொள்வதற்காக எருமைக் கன்றுகளைத் தொழுவத்தில் விட்டு வைப்பர். எருமைகளின் மேலேறிக் கொண்டு விடியற்காலத்தில் அவற்றை மேய்த்து வைப்பர் என்று நற்றிணை (80) கூறுகிறது. நெய் விற்று வாழ்க்கை நடத்தும் ஆயர்மகள் பசும்பொன்னை விரும்பி வாங்காது எருமைகளையும், பசுக்களையுமே விலைக்கு வாங்குவாள் என்று பெரும்பாணாற்றுப்படை கூறுவதால் பொன்னைவிட எருமை, பசுக்களைப் போற்றினர் என்று அறிய முடிகிறது. இதனை,
நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள்
எருமை நல்ஆன் கருநாகு பெறூஉம் (164)
என்ற அடிகள் உணர்த்துகின்றன.
மரையா
இது ஒருவகை காட்டுப்பசு என்று அறியப்பெறுகிறது. மரையாவால் உண்ணப்பட்ட நெல்லி விதைகள் முற்றத்தில் கிடக்கும் என்று புறநானூறு (170) கூறுகிறது. இதனை,
மரை பிரித்து உண்ட நெல்லிவேலி
பரலுடை முன்றில்
என்ற அடிகள் உணர்த்துகின்றன.
மான்
வேடர்களின் வீடுகளில் இது வளர்க்கப்பட்டது. வீட்டில் வளர்க்கப்பட்ட பெண்மானைத் தழுவி, தன் இனத்தை விட்டுப் பிரிந்த ஆண்மான் விளையாடியதைப் புறநானூறு (320) உணர்த்துகிறது.
நாய்
வேட்டைக்குச் செல்லும் வேடர்கள், கானவர்கள் வேட்டை நாயை வளர்த்துள்ளனர். கானவன் முள்ளம்பன்றியைக் கொன்று, மனையிடத்தே உள்ள நாய்கள் எல்லாம் ஒருசேரப் பக்கத்தில் குரைத்து விளையாடி வர, மகிழ்வோடு இருப்பதை நற்றிணை (285) உணர்த்துகிறது.
ஆடு
ஆடுகள் வளர்க்கப்பெற்றுள்ளன. வெள்ளாடு குமிழம்பழங்களை உண்டு, அதன் விதைகளைப் பந்தலருகில் துப்பும் என்று புறநானூறு (324) கூறுகிறது. இதைப்போன்றே மரையாக்கள் நெல்லி விதையை முற்றத்தில் பரப்பியமை முன்னரே உணர்த்தப்பட்டது.
பன்றி
கள்ளைச்சமைக்கின்ற மகளிர் வட்டிலைக் கழுவியதால் வடிந்த நீர் குழம்பிய, ஈரமாகிய சேற்றில் பெண்பன்றிகள் தங்கள் குட்டிகளோடு அளைந்து கொண்டிருக்கும். அவற்றுடன் புணர்ச்சியை விரும்பிப் போகாதபடி பாதுகாத்து, நெல்லையிடித்து மாவாக்கி அதை உணவாகக் கொடுத்துப் பலநாளும், குழியிலே நிறுத்தி வளர்த்த ஆண்பன்றிகள் இருந்ததாக பெரும்பாணாற்றுப்படை (339) கூறுகிறது. இப்பன்றிகள் உணவிற்காகப் பயன்படுத்தப்பட்டன. இவ்விலங்குகளைத் தவிர குதிரைகள், யானைகள் போன்றவைகளை மன்னர்களும், செல்வந்தர்களும் பயன்படுத்தியுள்ளனர். கழுதைகளை உப்பு வணிகர் பயன்படுத்தியுள்ளனர். எனவே, இவ்விலங்குகளும் வளர்க்கப்பெற்றுள்ளன. விலைஞர் குடில்களின் முன் விலங்குகள் செறிந்து கிடந்தன என்று பட்டினப்பாலை (198) கூறுகிறது.
இதனால் நில அமைப்பிற்கு ஏற்றபடி அந்தந்த நிலங்களில் இருந்த விலங்குகள் அங்குள்ள மக்களால் வளர்க்கப்பெற்றுள்ளன.
தெரு
பல இடங்களில் வீடுகள் முறைப்படி இல்லாமல் கூட்டங்கூட்டமாக இருந்துள்ளன. இருப்பினும் சில சிற்றூர்களில் தெருக்கள் அமைத்துக் கட்டப்பட்ட வீடுகளும் இருந்துள்ளன. புலால் மணம் வீசும் சிறுகுடியின் தெருவை மறுகு தொறு புலாவும் சிறுகுடி என்று நற்றிணை (114) கூறுகிறது. மணல் மிகுந்த அகன்ற நீண்ட தெருவும் நெய்தல் நிலத்தில் இருந்துள்ளதை நற்றிணை (319) உணர்த்துகிறது. மலர்களின் மகரந்தத்தாதுக்கள் நிறைந்த தெருவை,
…….. அம்குடி சீறூர்த்
தாது எரு மறுகின் என்று நற்றிணை (343) உணர்த்துகிறது. இவ்வூரில் தெருக்களின் இருபுறமும் மலர்ச்செடிகள் இருந்திருக்கலாம். இதுபோன்ற தெருக்கள் சில ஊர்களில் இருந்துள்ளன. நகரங்களில் பெரிய தெருக்கள் இருந்துள்ளன.
ஊர்கள்
சிற்றூர்கள் பல இருந்துள்ளன. இவைகளும் நில அடிப்படையில் வேறுபாடுகளைக் கொண்டிருந்தன. அழகிய குடியிருப்புகளை உடைய சிற்றூரை அம்குடிச் சீறூர் என்றும் அகநானூறு(367) குறிப்பிடுகிறது. பொதுமன்றங்களைக் கொண்ட அழகிய சிற்றூரை புன்தலை மன்றத்து அம்குடிச் சீறூர் என்றும் அகநானூறு (321) குறிக்கிறது. புல்லால் வேயப்பட்ட குடிசைகளையுடைய புலால்நாறும் ஊரை புலால்அம் சேரி புல்வேய் குரம்பை ஊர் என்று அகநானூறு (200) குறிக்கிறது. ஊகம்புல் போன்ற புற்களால் அங்குள்ள குடிசைகள் வேயப்பட்டிருக்கலாம். அங்குள்ளோர் வேட்டையாடி விலங்குகளைக் கொன்று, ஊரினருக்கும் இறைச்சியைப் பகுத்துத் தருவதால் அவ்வூரில் புலால் நாற்றம் இருந்திருக்கலாம். குனிந்து செல்லும்படியான தலை குவிந்துள்ள குடிசைகளைக் கொண்ட குடியிருப்புக்களை உடைய சிற்றூரை அகநானூறு (329) குவிந்த குரம்பை அம்குடிச் சீறூர் என்று உணர்த்துகிறது.
விலங்குகள் வீட்டிற்குள் புகாதவாறு சிறிய வாயில்கள் இருப்பதால் அவ்வூர் காட்டு வழியில் இருந்தமையும், விலங்குகளின் ஆபத்தும் உணர முடிகின்றது. மலைச்சாரலில் அமைந்த ஊரை சாரற் சிறுகுடி என்று நற்றிணையும் (168) பல மலர்களையுடைய மலைச்சாரலில் உள்ள ஊரை பல்மலர்ச் சாரற் சிறுகுடி என்று குறுந்தொகையும் (95) கூறுகின்றன. காவற்காடு சூழ்ந்த சிற்றூரைக் குழு மிளைச் சீறூர் என்று நற்றிணை (95) கூறுகிறது. போரினால் அழிந்த வேலிகளையுடைய, ஆளில்லாமல் பொது மன்றம் இருக்கும் குடியிருப்புகளையுடைய சிற்றுரை
அழிந்த வேலி அம்குடிச் சீறூர்
ஆள்இல் மன்றத்து என்று நற்றிணை (346) கூறுகிறது. அகன்ற வயல்கள் சூழ்ந்த கொல்லைகளை உடைய ஊரை அகல்வயற் படப்பை அவன்ஊர் என்று நற்றிணை (365) கூறுகிறது. நெற்கதிர்கள் நிறைந்த ஊரை பிணிக்கதிர் நெல்லின் செம்மல் மூதூர் என்று புறநானூறு (97) கூறுகிறது. மேற்கண்ட இரண்டும் வளம் நிறைந்த ஊர்கள் என்பது புலனாகிறது.
உப்புப்பாத்திகளுக்கு அருகே கடற்கரைச் சோலையால் சூழப்பெற்ற ஊரை,
நேர்கண் சிறுதடி நீரின் மாற்றி
வானம் வேண்டா உழவின் எம்
கானல்அம் சிறுகுடி
என்று நற்றிணை (254) குறிக்கிறது. மணல்மேடுகள் நிறைந்த ஊரை எக்கர் நண்ணிய எம்ஊர் என்று குறுந்தொகை (53) கூறுகிறது. கடற்கரையில் உள்ள குடியிருப்பை காமர் சிறுகுடி என்று நற்றிணை (299) கூறுகிறது. மேற்கண்டவை நெய்தல் நிலச்சிற்றூர்கள் என்று அறியமுடிகிறது. உப்புபாத்திகளுக்கு அருகில் வீடுகள் இருந்தன என்று அறிய முடிகிறது. பாலைநிலத்தில் இருந்த அழகிய சிற்றூரை அத்தம் நண்ணிய அம்குடிச் சீறூர் என்று குறுந்தொகை (79) கூறுகிறது. பரற்கற்கள் மிகவும் அமைந்த செல்லுதற்கு அரிய வழியில் உமணர்களின் குடியிருப்பு இருந்ததை நற்றிணை (374) கூறுகிறது. சங்கத்தமிழர்கள் தமக்குக் கிடைத்த பொருட்களைக்கொண்டே குடிசைகளை அமைத்தனர். மரங்களை வைத்து மரக்கால் கொண்டு அமைக்கப்பட்ட குடிசை, மரக்கோல்களைக் கொண்டு அமைக்கப்பட்ட கதவு முதலியவற்றையும் காட்டு விலங்குகளால் ஆபத்து ஏற்படாமல் இருக்க குடிசையின் வாயில்களை மிகவும் குறுகியதாகவும் அமைத்துள்ளார்கள்.
ஊகம்புல், தழைகள், கூவையிலை, ஈந்தின் இலை, வைக்கோல், வரகுத்தாள், தருப்பைப்புல், தென்னைமடல், தாழையின் தூறுகள், பனையோலை முதலியவற்றைக் கொண்டு சங்கத் தமிழர்கள் குடிசைகளை வேய்ந்துள்ளனர். இதில் ஈந்தின் இலையால் வேயப்படும் குடிசையில் எலி, அணில் முதலியன நுழைய முடியாதபடி இருந்துள்ளது. வீட்டில் பலவகையான பறவைகளையும் பசு, எருமை போன்ற விலங்குகளும் இருந்துள்ளன. பலவகையான செடிகளும் மரங்களும் வீட்டைச்சுற்றி இருந்துள்ளன.
வீட்டின் சுவருக்கு செம்மண் பூசுதல், சுண்ணாம்பு பூசுதல் போன்றவை நடைபெற்றுள்ளன. வுpழாக் காலங்களில் முற்றத்தில் மணல் பரப்பப்பெற்றது. வீட்டைக்காவல் காக்க காவலர்கள் இருந்தது போல், ஊரைக்காக்கவும் காவலர்கள் இருந்துள்ளனர். சங்கத் தமிழர் உறைந்த இடங்கள் பற்றி இவ்வாறு பல செய்திகளை அறிய முடிகிறது. ஐவகை நிலங்களும் தம்முள் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டது போலவே ஐவகை நில மக்கள் வசித்த இடங்களும் மாறுபட்டவை என்று இதைப்போலவே ஊர்களும் குடியிருப்புகளும், வீடுகளும் அமைந்திருந்தன என்று அறிய முடிகிறது. சங்கத்தமிழர்கள் மேற்கண்டவாறு குடில்களை அமைத்தும், தாம் வாழும் சூழலுக்கு ஏற்றவாறு பயிரினங்களையும், உயிரினங்களையும் வளர்த்தும் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தனர் என்பது எண்ணத்தக்கது.
முனைவர் அ. ஜெயக்குமார்
உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை,
மஹேந்ரா கலை அறிவியல் கல்லூரி,
காளிப்பட்டி, நாமக்கல்.
ஆசிரியரின் பிற ஆய்வுக்கட்டுரைகள்