அந்தக் கிராமத்தில் மொத்தம் நூறு வீடுகள்தானிருக்கும். இரண்டு வீதி நாலு சந்து அவ்வளவே. ஊருக்கு நடுவே கோவில். கோவிலில் முன்வாசல் தவிர சுற்றுப்பகுதிகள் அனைத்தும் கருவேல முட்களால் சூழ்ந்துதான் இருந்தது. போனவாரம் வெள்ளிக்கிழமை அம்மன் கோவில்ல சாமிக்கு பூஜை நடந்தது. அந்தப் பூஜையில ஒரு அம்மாவுக்கு சாமி வந்து ஆடுச்சி. அப்போ, “என்னை வடம் புடிச்சி இழுத்து வையுங்கடா… இல்லன்னா காய்ஞ்சிரும்மடா” ன்னு சொல்லிருக்கு. ஊர்க்காரங்க அத்தனைப் பேரும் பயந்து போயி அடுத்த நாளே கோவிலுக்கு முன்னால வந்து உட்காந்துட்டாங்க. நெத்தி முழுக்க விபூதியை அப்பிக்கொண்டு அனைவருக்கும் நேரெதிரே அமர்ந்திருந்தார் பண்ணையார். எல்லாத் தலையும் வந்துருக்கான்னு ஒருமுறை தலைச்சுற்றிப் பார்த்தார். அந்தக் கிராமத்துல இருக்குற அத்துன ஆம்பிள பொம்பளன்னு எல்லாம் அங்கதான் இருந்தாங்க.
“நம்ம ஊரு கோவில் திருவிழா மூணு வருஷத்துக்கு ஒரு தரம் நடத்திட்டு வரோம். இந்தச் சித்திரை வந்தா மூணு வருஷம் முடியப்போகுது. அதான் ஆத்தாளும் குறியா சொல்லிருக்கு” என்றார் பண்ணையார்.
குந்தியிருந்த மக்களும் நின்னுட்டு இருந்த மக்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். இந்த விஷயம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். அதான் யாரும் எதுவும் சொல்லவில்லை. எல்லோரும் தலையை மட்டும் ஒருதரம் ஆட்டி பண்ணையார் சொல்லுக்கு ஆமாம்! போட்டார்கள்.
“இந்த வருஷமும் கோவில் திருவிழாவை நல்லா நடத்திப்புடுவோம். ஆனா சாமி சொன்ன மாதிரி புதுசா ஒரு தேர செஞ்சி ஊர் முழுக்க சுத்தி வர வச்சிப்புடுவோம்” என்றார் நாச்சியப்பன்.
ஒரு தேரு செய்யுனுமுன்னா எவ்வளவு ஆகும் தெரியுமா? நீ பாட்டுக்கு தேர செய்யி… அத செய்யின்னு சொல்லிப்புட்டு போயிடுவ. யாரு செய்யுறது. யாரு நோட்ட அவுக்குறது.. என்றார் சுப்பையா. இப்படித்தான் போன தரம் வாணவேடிக்கை நடத்தனுமுன்னு சொல்லிப்புட்டு, கடைசியா சுப்பையாகிட்ட வசூல் பண்ணிட்டாங்க. அதான் எங்க நம்மல இழுத்து வுட்டுடுவாங்கன்னு பயப்படுறாரு.
“சுப்பையா கொஞ்சம் அமைதியா இரு. நாச்சியப்பன் சொல்றது சரிதான். நாமும் தேர் செஞ்சி இழுப்போமே. ஆகுற செலவுல பாதியை நான் ஏத்துக்குறேன். மீதிய ஊர் மக்கள் கிட்ட வசூல் பண்ணிக்கலாம். நான் சொல்றது சரின்னா சொல்லுங்க உடனே வடகத்திக்கார ஆசாரியை வரச்சொல்லலாம் என்றார் பண்ணையார். மீண்டும் எல்லோரும் ஒருவரை ஒருவர் முகத்தைப் பார்த்துத் தலையை முன்பக்கமாக ஆட்டிக்கொண்டனர்.
“கோவில் திருவிழாவுக்கு என்னென்ன பண்ணனும்முன்னு சொல்லுங்கப்பா…” என்றார் சுப்பையா.
ஒருவர் கரகாட்டம் என்றார். ஒருவர் ஒயிலாட்டம் என்றார். மற்றொருவர் மயிலாட்டம் வைக்கலாம் என்றார். இன்னொருவர் பறையாட்டம் வைத்தால் நல்லா இருக்கும் என்றார்.
கோலம் போடனும் மாவு அரைக்கனும் பொங்கல் வைக்கனும் ராட்டினம் சுத்தனும் வளையல் வாங்கனும் கொலுசு அணியனும் தாவணிப் போடனும் என நீண்டுக்கொண்டேப் போனது பெண்களின் ஆசைகள்.
கலர் கண்ணாடி வாங்கனும் ஊதி வாங்கனும் ஐஸ் சாப்பிடனும் சிறுவர்களும் தனக்கு வேண்டியதைச் சொன்னார்கள்.
“அனைத்திக்கும் ஏற்பாடு செய்யனும்” என்றார் பண்ணையார்.
“எத்தன வருஷம்தான் இருட்டுல நிக்கிறது. இந்த வருஷமாவது முதல்ல கரண்டுக்கு ஏற்பாடு பண்ணுங்க..” என்றார் நாச்சியப்பன்.
“புதுசு புதுசா ஏதாவது சொல்லிட்டு இருக்கானே இந்த நாச்சி… இவன என்ன செய்ய..” என்று பொறுமினார் சுப்பையா.
“என்ன நாச்சியப்பா.. ஒரேயடியா சொன்ன எப்படி? தேரு செய்யனுமுன்னு சொன்ன.. சரி. இப்ப கரண்டு எப்படி?” – பண்ணையார்.
“அண்ணே.. கரண்டு வர வழிய நான் சொல்றண்ணே..” என்றார் நாச்சியப்பன்
ஆறு மாதத்திற்கு முன்….
மணமகளே மணமகளே வா வா… வலது காலை எடுத்து வைத்து வா வா… என்று ஒலிபெறுக்கியில் பாட்டு பாடிக்கொண்டிருந்தது. பண்ணையார் மகளுக்கு கல்யாணம். பட்டணத்தில் பிஎஸ்.சி படித்து முடித்தவள். கூட படிக்கும் பையனுடன் காதல். பையன் வீடு வசதியும் நாகரிகமும் உடையவர்கள். இருட்டில் தீப்பந்தம் பிடித்து வெளிச்சம் தேடுகின்ற ஊரில் பெண் எடுக்க வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்து விட்டார் மணமகனின் பெற்றோர்களும் உறவினர்களும். இறுதியில் வென்றது காதல். கிட்டத்தட்ட பத்துக் கிலோமீட்டர் தூரம் வரை ஒயர் மூலமாகக் கரண்ட் எடுக்கப்பட்டு பண்ணையாரின் வீடு சீரியல் பல்புகளால் பளபளன்னு மின்னியது. அப்ப நம்ம ஊரே ராத்திரியில பளிச்சின்னு இருந்திச்சி. அதேபோல கோவில் திருவிழாவுக்கும் கரண்ட் கொண்டு வந்து ரேடியோ செட்டு கட்டிப்புடனும் என்று நாச்சியப்பன் தனக்கு என்ன தேவையென்று சொல்லிவிட்டார்.
அந்த ஊருல பண்ணையார் வீட்டு கல்யாணத்தப்பத்தான் ரேடியோ செட்டு போட்டிருந்தார்கள். அதுவும் மாப்பிள்ளையின் தயவால். யாருமே ரேடியாவையோ ஒலிபெருக்கியையோ கூட பார்த்ததும் இல்லை. அப்படி ஒன்று இருப்பதாக கேள்விபட்டதாகவோ தெரியவில்லை. அந்த ஊரில் வசிக்கும் ஒயர்மேன் மட்டும் பட்டணத்திற்குச் சென்று சினிமா பார்த்து விட்டு கிராமத்து மக்களுக்கு கதைகதையாய் சொல்லுவான். எல்லாரும் அவனுடைய வாயையே பார்த்துக்கொண்டிருப்பார்கள். அந்தக் கிராமத்து மக்கள் பலருக்கு இவன் ரொம்ப கற்பனைவாதி. அதான் இல்லாததை இருக்கின்ற மாதிரி சொல்லுறான் என்று நினைத்துக்கொண்டார்கள். ஒயர்மேன் சொல்வது அனைத்தும் பொய்யே என்று நம்பினார்கள். ஆனால் பண்ணையார் வீட்டு கல்யாணத்தில் ஒலிபெருக்கியைப் பார்த்தவுடன் கிராமத்து மக்கள் அனைவரும் வாயடைத்துப்போனார்கள்.
நீளமான கூம்பு வடிவிலான ஒலிபெருக்கி. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கல்யாண வீட்டின் முன்னால் கட்டப்பட்டிருக்கும் ஒலிபெருக்கியின் முன்னால் தாடையில் கை வைத்துக்கொண்டு அதையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்தக்கூட்டத்தில் குள்ளமணியும் ஒருத்தன். கருப்பா குண்டா இருப்பான். ஒரு காலு சின்னதா இருக்கும் அவனுக்கு. அதனால குனிஞ்சு குனிஞ்சு பெரியகாலை கையால் பிடித்துதான் நடப்பான். சின்ன வயசுல கேலியும் கிண்டலும் நெறைய இருந்தது. இப்பல்லாம் அது குள்ளமணிக்கு பழகிடுச்சு. நல்லா பேசுவான். யாரும் அவன்கிட்ட வாயைக் கொடுத்து மீள முடியாது. எப்பவும் எதையாவது பண்ணிக்கிட்டே இருப்பான். ஊருல ஏதாவது நடந்ததுன்னா அதுக்கு ஆயிரம் கேள்விகளைக் கேட்பான். அவன் கேட்க நினைக்கின்ற ஒரு கேள்விக்கும் கூட பதில் வராது. ஆனாலும் குள்ளமணி கேள்வியை கேட்கிறதுக்கு நிறுத்தவே இல்லை.
அன்னிக்கு ரேடியோ செட்ட போட்டு ஒலிபெருக்கியில் பாட்டு வந்தவுடனேயே முதல் ஆளாய் கல்யாண வீட்டு முன்னாடி நின்னுட்டான். கூட்டமும் கூடுச்சி. எப்படி பாடுது? யாரோ உள்ளே இருந்து பாடுறாங்களோ? யார் அவன்? அவனைப் பார்ப்பதற்காக ஒலிபெருக்கியை ஒரு சுற்றுசுற்றி வந்து பார்த்தான் குள்ளமணி. யாரும் இல்லை. அந்த ஒலிபெருக்கியிலிருந்துதான் பாட்டும் சத்தமும் வருகிறது. குள்ளமணி பட்டணத்திலிருந்து வந்திருக்கும் ரேடியொ செட் ஆளுடன் ஒட்டிக்கொண்டான். கல்யாணத்திற்கு வந்த கிராம மக்கள் அனைவரும் கொஞ்ச நேரம் ஒலிபெருக்கியின் முன்னால் நின்றுவிட்டுத்தான் போனார்கள். பலர் சாப்பிட கூட போகாமல் வாசலில் கட்டியிருக்கும் ஒலிபெருக்கியைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு அது புதுமையாக இருந்தது. ஒயர்மேன் தம்பி சொன்னது சரிதான்னு பெரிசுங்க சிலர் பேசிக்கொண்டார்கள். ஒலிபெருக்கியின் முன்னால் சின்ன பசங்களெல்லாம் கால் வலிக்க ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தார்கள்.
நாச்சியப்பன் பண்ணையார் மகளுக்கு நடந்த திருமணத்தால் வந்த கரண்டையும் ஒலிபெருக்கியையும் பற்றி நினைவுப்படுத்தினார். ஊர் மக்கள் எல்லோரும் ஆமாம்! ஆமாம்! என்றார்கள். மற்ற விஷியத்தில் நாச்சியப்பனைத் திட்டிய சுப்பையா கூட இப்பொழுது நாச்சியப்பன் சொல்லுறது சரிதான் என்றார்.
“நம்மள வச்சு இவனுங்க காரியத்த சாதிக்கிறானுங்களேன்னு” பொறுமிக்கொண்டார் பண்ணையார்.
“சரி கரண்ட்ட இழுத்துப்புடுவோம். ரேடியோ செட்டுக்கும் சொல்லிப்புடுவோம்“ என்றார் பண்ணையார். அனைவருக்கும் மகிழ்ச்சி.
“ரேடியோ செட்டு போடுறுதுன்னு முடிவாயிடுச்சி. அது நம்ம குள்ளமணிகிட்டயே சொல்லி புடுவோம்” என்றார் நாச்சியப்பன்.
“அங்கிட்டு இங்கிட்டுன்னு கடைசியா தன்னோட அக்கா பையனுக்கு வியாபாரத்த பண்ணிட்டாருய்யா…” என்றான் கூட்டத்தில் ஒருத்தன். இப்ப எல்லோருக்கும் புரிந்து விட்டது. நாச்சியப்பனோட அக்கா மகன்தான் குள்ளமணி.
“யார்ற சொன்னது. யார்ற அது?” என்று அதட்டிவிட்டு நாச்சியப்பன், “நான் ஏதோ நம்ம ஊரு பையன் ஒருத்தன் பட்டணத்துக்கு போயி ஒலிபெருக்கி கடை வச்சிருக்கான். யாரோ ஒருத்தனுக்கு காசு கொடுத்துக் கூட்டியாரதவிட நம்ப பையனுக்கு செஞ்சா நல்லாயிருக்குமேன்னு தான் சொன்னேன்” என்றார். அதற்கு மேல் யாரும் அதைப்பற்றி பேசவில்லை. கோயில் கூட்டம் அத்தோடு கலைந்தது.
விழாவிற்காக நோட்டிஸ் அடிக்கப்பட்டது. நோட்டிஸில் பின்பக்கத்தில் இறுதியில் ஒரு கட்டம் கட்டி, கோவில் தேர் திருவிழாவிற்கு ரேடியோ செட் உபயம் “குள்ளமணி ஒலிபெருக்கி நிலையம்” உரிமை – திரு.குள்ளமணி அவர்கள் என்று போடப்பட்டிருந்தது.
குள்ளமணிக்கு தலைகால் புரியவில்லை. வானத்துக்கும் பூமிக்கும் குதித்தான். இந்த ஊரில் தன்னைப் பார்த்து ஏளனமாய் சிரித்தவர்கள் இன்னும் அப்படியேதான் இருக்கிறார்கள். ஆனால் தன்னுடைய பெயர் ஊர்பொது கோவில் நோட்டிஸில் இடம் பெற்றுவிட்டது என்பதுதான். அவனுடைய நண்பர்கள் அவன் வீட்டுப்பக்கம் போவதையே தவிர்த்தனர். அப்படியே செல்ல நேர்ந்தாலும் அந்த வீதிப்பக்கம் செல்லாமல் இரண்டு வீதி தள்ளியே சென்றார்கள். அவனுடைய கண்ணில் பட்டுவிட்டால் அவ்வளவுதான் பேசியே கொன்று விடுவான் என்ற பயம்.
கரண்ட் இழுக்கப்பட்டது. இந்த ஊர் இன்னும் ஏழு நாளைக்கு கதிரவனை வானத்திலிருந்து இழுத்து வைத்தாற்போன்று இரவில் ஜொலிக்க வேண்டும் என்று குள்ளமணி எண்ணினான். தன்னோட நண்பர்களை அவர்கள் வீடு சென்றே பார்த்தான். முகம் பார்த்துக்கொண்டன. கண்கள் தரையை நோக்கின. மனம் – மனம் விட்டு பேசியன. கால்கள் ஒன்றாகச் சேர்ந்து ஊர்ப்பொது இடத்தில் நின்றன.
ஊர் முமுக்க சீரியல் பல்புகளால் மின்னியது. கோவில் முழுவதும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன. ஒருத்தன் கோவில் வேப்ப மரத்தில் ஏறி சீரியல் பல்புகளைத் தொங்க விட்டான். அம்மன் சிலையையே சீரியல் பல்புகளால் அலங்கரித்து ஊருக்குப் பொதுவில் மிக உயரமாக வைக்கப்பட்டது. ஒரு சந்து விடாமல் ஒலிபெருக்கியை இழுத்துக் கட்டினார்கள். அவ்வப்போது நண்பர்களை அழைக்க ஒலிபெருக்கியில் “மாணிக்கம் எங்கிருந்தாலும் கோவிலுக்கு வரவும். சரவணன் எங்கிருந்தாலும் கோவிலுக்கு வரவும் எனப் பயன்படுத்திக் கொண்டார்கள். இப்போது குள்ளமணிதான் அங்கு பெரிய ஆளாகப்பட்டான். மைக் பிடித்து பேச வேண்டுமென்றால் குள்ளமணியைக் கூப்பிடு… சவுண்ட் வைக்க குள்ளமணியைக் கூப்பிடு… அம்மன் பாட்டு போட குள்ளமணியைக் கூப்பிடு… எல்லாம் அவனுடைய பாடாகவே இருந்தது. அவன் இரவுபகல் என்று பாராமல் கோவிலில் ரேடியோ செட்டுக்கிட்டேயே படுத்துக்கொண்டான். உடல் உபாதைக்கு மட்டுமே அப்பப்ப வெளியே சென்று வருவான். மத்தபடி சாப்பாடு கூட கோவில்லதான்.
அன்னைக்கு வெள்ளிக்கிழமை. சாயங்காலத்துல பொங்கல் வைக்கனுமுன்னு காலையிலயே மைக்குல, “இன்னிக்கு சாயுங்காலம் அம்மனுக்கு பொங்கல் வைக்கனும். மதியம் மூனு மணியிலிருந்தே கோவிலுக்கு வந்துருங்க. வரும்போதே உங்களுக்கு தேவையான எல்லாத்தையும் கொண்டு வந்துருங்க. குழி மட்டும் கோவில்ல ரெண்டு பக்கங்களிலும் அடுப்புகளுக்காகத் தோண்டி வைக்கப்பட்டுள்ளன. கோவிலுக்குத் தேவையான எதுவானாலும் தானமாகக் கொடுக்கலாம்” என்று சொல்லியாச்சு.
கிராமத்துல எல்லா வீடுகள்ளேயும் ஒரே கூட்டம். ரெண்டு மூனு பேர் இருக்குற வீடுகள்ள கூட எட்டு பேர் பத்து பேர்ன்னு சொந்தகாரங்க நிரம்பி வழிஞ்சாங்க. அன்னைக்கு காலையில ஒன்பது மணி இருக்கும். கோவிலுக்கு முன்னால இருக்குற குழாயில நல்ல தண்ணி வந்துச்சு. ஊருல இருக்கிற கிணறெல்லாம் கொஞ்சம் உப்பு கரிக்கும். மண்ணு அப்படி! இந்தத் தண்ணி பக்கத்துல இருக்குற மலையில இருந்து வருது. இந்தத் தண்ணிதான் மலைக்குக் கீழ இருக்குற ஐந்தாறு கிராமங்களுக்கும் போகும். வாரவாரம் வெள்ளிக்கிழமை மட்டும்தான் வரும். குடிக்கிறதுக்கு மட்டும் இந்தத் தண்ணியைப் பிடிச்சு ஒரு வாரம் வச்சுக்குவாங்க.
ஊர் பொம்பளைங்க எல்லாம் தண்ணி பிடிக்க ஓடி வந்தாங்க. அதுக்குள்ள குடமும் குண்டானுமாக அந்த இடம் முழுமையானது. கடா முடான்னு சத்தம். கீச்சு மூச்சுன்னு சத்தம். என்ன நடந்ததோ தெரியல ஒரு அம்மா தண்ணியைத் தூக்கி இடுப்புல வச்சிகிட்டு வாயில என்னவெல்லாம் வந்ததோ தெரியல அதையெல்லாத்தையும் திட்டிக்கிட்டே போச்சு. தண்ணிப்புடிக்கிற இடத்துல இப்ப கூட்டம் அதிகமாயிடுச்சு. கோவிலுக்கு வந்த சொந்தகாரங்களும் தண்ணிப்பிடிக்க ஆளுக்கொரு குண்டானோடு வரிசையா நின்னுட்டு இருந்தாங்க.
திட்டிட்டு போன அம்மா திரும்ப நேரா தண்ணி குழாய்க்கிட்ட வந்து குடத்த வச்சுது. ஏற்கனவே வைத்திருந்த குடம் நிரம்பியவுடன் வரிசையில் நிற்கின்ற மற்றொரு அம்மா குடம் வைக்கப் போனது. திட்டிட்டு போன அம்மா,
“நான்தான் வப்பன். நானு ஒரு குடம்தான் புடிச்சுருக்கன். இன்னும் ரெண்டு குடம் புடிச்சிட்டுத்தான் யாருக்குன்னாலும் வுடுவேன்”
வரிசையில் நின்ற அம்மா…
“அதெப்படி நாங்க நின்னுட்டே இருப்பமா? நீங்க மகாராணியாட்டம் நேரா வந்து புடிச்சிட்டு போவிங்களாம். குடத்த எடுடி…” குடத்தைத் தட்டிவிட்டு இவருடைய குடத்தைக் குழாயின் முன்னால் வைத்தார். இரண்டு பேருக்கும் பெரும் குழாயடி வாய்ச்சண்டை ஆரம்பமானது.
“நீ யாருன்னு எனக்கு தெரியாதாடி.. சிறுக்கி மவளே”
“யாருடி சிறுக்கி.. நீதான் சிறுக்கி… ஒ.. வீட்டுக்கு அப்பப்ப ஒருத்தன் வந்துட்டு போரானே எனக்கு தெரியாதாடி?”
“நீ மட்டும் யோக்கியமாடி….. தேவி….. ” அதற்குமேல் இருவரும் அவர்களுடைய குடும்பத்தை ஏலம் விட்டுக்கொண்டிருந்தார்கள். கோவிலுக்கு முன்னால் சண்டையிடாதீர்கள். இப்படி பேசாதீர்கள் என்று சில ஆண்கள் வந்து சண்டையை நிறுத்த முயற்சி செய்தார்கள். மூக்கு அறுபட்டு ஏண்டா வாயைக்கொடுத்துப் புண்ணாக்கிக் கொண்டோம் என்று நினைத்து ஒதுங்கிப் போனார்கள்.
வெளியூரிலிருந்த வந்திருந்த ஆண்களும் பெண்களும் முகம் சுழித்துப்போனார்கள். தண்ணீர் பிடிக்க வந்த சிலர் வெறும் குண்டானோடு வீட்டுக்கு வந்தனர். தண்ணீர் வந்து கொண்டிருந்த குழாயை இரண்டு பெண்களும் பிடித்து ஆட்டி ஆட்டியே பிடிங்கியிருந்தார்கள். தண்ணீர் யாருக்கும் பயன்படாமல் வெறுமனே மண்ணை நனைத்து வழிந்தோடியது. சண்டையிட்ட பெண்களும் அமைதியாயினர். அவர்கள் இருவரும் குடத்தை எடுத்துக்கொண்டு தங்களின் வீடுகளுக்கு நடையைக் கட்டினார்கள். எப்படியாவது ஒரு குடமாவது தண்ணீரை பிடித்தே ஆக வேண்டும் என்று நினைத்து வரிசையில் காத்துக்கொண்டிருந்தவர்களின் பாதங்களை ஈரமாக்கியது. கொஞ்ச நேரத்தில் பட்டாசு வெடித்து ஓய்ந்தது போல இருந்தது.
அவ்வளவுதான் யாரும் இதை கேட்கவில்லை. கவனிக்கவில்லை. நாளைக்கு நாம் சொன்னதை சொல்லவில்லை என்று சொன்னால் கூட யாரால் இவர்களை நிருபிக்க முடியும். காலம் கடந்து விட்டது. கடந்த காலத்திற்கு சென்று மீண்டும் குழாயடி சண்டையில் என்ன நடந்தது? யார் மேல் தப்பு? யார் யார் என்னன்ன பேசினார்கள்? என்று யாராலும் சொல்ல முடியுமா என்ன? ஆமாம் யாராலும் சொல்ல முடியாது. கரண்ட் வராமால் இருந்திருந்தால். ஒலிபெருக்கி வராமல் இருந்திருந்தால்.. விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது. காலையில் குள்ளமணி உடல் உபாதைக்காகச் சென்றுவிட… அந்நேரம் பார்த்துச் சிறுவர்கள் சிலர் ரேடியொ செட்டில் எதையோ செய்து கொண்டிருந்தார்கள். அங்கு நடந்ததை அப்படியே அம்மன் கேசட்டில் பதிவாகிவிட்டது.
அன்று மாலை கோவிலில் இருந்து பொதுமக்களுக்கு எப்போதும் போல் மீண்டும் மைக் மூலமாகப் பொங்கல் வைப்பதற்கு முன்னேற்பாடாகச் சொல்லப்பட்டன. அடுத்த சில வினாடிகளில் அம்மன் பாடலை குள்ளமணி தன்னுடைய ஒலிபெருக்கியில் ஓடவிட்டான். அன்று காலையில் நடந்த பதிவு செய்யப்பட்ட குழாயடி சண்டை முழுவதும் கோவில் ரேடியோ மூலம் ஒலிபரப்பப்பட்டது. மீண்டும் ஊர் முழுக்க பெண்கள் இருவரின் வாய்ச்சவடால்கள் அரகேற்றப்பட்டன. நிம்மதியாக இருந்த பெண்கள் இருவரும் கோவிலில் இருக்கும் குள்ளமணி ஒலிபெருக்கியை நோக்கி ஓடி வந்தார்கள்.
சிறுகதையின் ஆசிரியர்
முனைவர் க.லெனின்