குறிஞ்சி நில மகளிர் வாழ்வியல்|ஆய்வுக்கட்டுரை|ந.இந்திரா

குறிஞ்சி நில மகளிர் வாழ்வியல் - ந.இந்திரா
மலைநாட்டினைச் சார்ந்த தலைவனும் தலைவியும் தம்முள் தாமே கண்டு, காதலித்து, களவு உறவிலே கூடித் திளைத்து, மகிழ்ந்து வருகின்றனர். இவர்கள் மலைநாட்டு குன்றவரிடையே மதிப்புடன் சிறந்து விளங்கிய பெருங்குடியினைச் சேர்ந்தவர்களாகக் காணப்படுகின்றனர். பொதுவாகக் குன்றவர் குலத்தாரிடையே அந்தநாளின் நிலவிய பழக்கவழக்கங்கள் தற்போது ஓரளவு காணப்படுகிறது. தலைவி தன் தோழியருடன் குல மரபுப்படி தினைப்புனம் காவலுக்குச் செல்கிறாள். தலைவனும் தம் குல மரபுப்படி காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். அங்கு இவர்களின் சந்திப்பு நிகழ்கின்றது. ஊழின் வலிமை பெரிது. உழுவலன்பின் தொடர்போ மிகவும் நெருக்கமானது. அவர்கள் தம்முள் தாமே ஒருவரையொருவர் பார்ப்பதும் பேசுவதும் உள்ளத்தை இழந்து பித்தாகி நிற்கவும் நேரிடுகிறது. இப்படித் தொடங்கியச் சந்திப்பு வளர்ந்து களவாகி, இருவரும் தனித்துக்கூடி இன்புறும் நிலை வரை வளர்ந்தது. எளிமையாக தொடர்ந்த சந்திப்பு பல்வேறு சூழல்களால் கடினமானதாக மாறி இருவரும் மனம்வருந்தும்படியான நிலை ஏற்படுகின்றது. 
களவு, கற்பு 
வாழ்க்கை
அகவாழ்வில் களவு, கற்பு என இருவொழுக்க முறை முக்கியத்துவம் பெறுகின்றன. இதில் ‘வரைவு’ என்னும் திருமணத்திற்கு முந்திய நிலையைக் ‘களவு’ என்றும் அதற்கு அடுத்து திருமணம் முடிந்தப் பிறகு வாழுகின்ற வாழ்க்கை முறையைக் கற்பியல் என்று குறிப்பர்;. சங்க காலங்களில் திருமணம் பெரும்பாலும் களவு வழியிலேயே நடைபெறும். ‘களவுக் காதல் கற்பாக மலர்தல் வேண்டும்’ என்பதே பழந்தமிழர் கோட்பாடாகக் கருதப்படுகிறது. ஒருவனும் ஒருத்தியும் எதிர்பட்டு இருவர் தம் தலைமைக் குணங்களை இழந்து மெய்யுறுப் புணர்ச்சியில் கூடி மகிழும் இயல்பே கந்தர்வமனம் ஆகும்.

வேட்கை மிகுதியால் கூடிப் பின்னர் அன்பின்றிப் பிரிந்து மாறும் நிலையும் உள்ளது. இவ்வகைத் தமிழர் கூறும் களவொழுக்கம் இருவர் உள்ளத்திலும் உள்நின்று தோன்றிய அன்பின் பெருக்கினால்தான் அவள் வேற்றுமையின்றி இருவரும் ஒருவராய் ஒழுகும் உள்ளப் புணர்ச்சியே களவாகும். இதனையே இறையனார் அகப்பொருள் விளக்கத்தில்

“தானே அவளே தமியர் காணக் 
காமப் புணர்ச்சி இருவயின் ஒத்தல்”1
என்று குறிப்பிடுகிறது. களவு கற்பாக மாறும் நிலையில் அது இல்லறத்திற்கு வாயிலாகக் கருதப்படுகிறது. களவு திருமணத்தில் முடியாமல் இடையூறு ஏற்பட்டு நிகழாத அந்நிலையைக் ‘கள்ளத்தனம்’ என்றும் ‘ஒழுக்கக்கேடு’ என்றும் கருதுவர். சமுதாயத்தில் ஆண், பெண் இடையே காதல் அன்பினால் ஏற்பட்ட களவு ஒழுக்கமானது திருமணம் செய்து கற்பு ஒழுக்கமாக மாறிய இல்லற மாட்சிமையை சங்க அகப்படல்களில் குறிஞ்சி நிலப் பாடல்கள் குறிப்பிடுகின்றது.

களவியல் முறை
அகத்திணை ஒழுக்கத்தில் களவியல் பகுதி மிகச் சிறப்பான இடத்தை பெறுகின்றது. களவொழுக்கக் காலம் இரண்டுத் திங்கள் நடைபெறும் என்பதை இறையனார் அகப்பொருளில் குறிப்பிடுகிறார் என்பதனை
“களவினுள் தவிர்ச்சி வரைவின் நீட்டல் 
திங்கள் இரண்டின் அகமென மொழிப”2
என்று அமைந்துள்ளதைக் காணமுடிகிறது. களவானது “பிணி மூப்புகளின்றி எஞ்ஞான்றும் ஒரு தன்மையராய் உருவும், திருவும் பருவமும் குலனுங் குலமும் அன்பும் முதலியவற்றால் ஒப்புமையுடையவராக தலைமகனும், தலைமகளும் பிறர் கொடுப்பவும், அடுப்பவுமின்றி ஊழ் வகையால் தாமே எதிர்பட்டுக் கூடுவது களவு”3 என்று குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். மேலும் தமது மகள் பிறருக்கு உரியவள் என்று பெற்றோரால் நினைத்தாலும் கொடை எதிர்தற்குரிய தலைவியை அவர் கொடுப்பக் கொள்ளாது இருவரும் கரந்த உள்ளத்தோடு எதிர்ப்பட்டுப் புணர்தலே களவாகும் என்னும் கருத்தும் இங்கு நோக்கத்தக்கது.

இக்களவு அன்போடு புணர்ந்ததாதலின் ‘காமக்கூட்டம்’ என்றும் ‘மறைந்த ஒழுக்கம்’ ‘மறை அரும்மறை’ என்னும் சொற்கள் கொண்டு குறிப்பிடுவர். களவினைப் பிறர்க்குரியப் பொருளான ‘மறைக்கோடல்’ என்ற பொருள் கொண்டு இளம்பூரணர் குறிப்பிடுகிறார். வேதத்தை ‘மறைநூல்’ என்று சொல்வதைப் போலவே அறநிலை வழுவாமல் காதலர்கள் கரந்து ஒழுகும் செயலைக் ‘களவு’ என்னும் பெயரால் பண்டையோர் குறித்தனர்.

காதல் பருவம் எய்திய பெண் ஒருத்தியும் குமரப்பருவம் எய்திய ஆண் ஒருவரும் சந்திக்கின்றனர். இருவர் கண்களும் நட்புக் கொள்கின்றன. காதலாக மாறுகிறது. காமத்தீ பற்றுகிறது. கண்டதும் காதல் என்று மக்கள் கூறுவதுபோல குப்பைக்கோழியார் குறிப்பிடுகிறார். இதில் ’கண் தரவந்த காம ஒள்ளெரி’ என்று காமத்தின் பிறப்பிடமாகக் கண்ணைக் குறிப்பிடுகிறார்.

“சிக்கிமுக்கிக் கற்கள் இரண்டும் சேர்ந்து தீ உண்டாவதாக அறிவியலாளர் கூறுவர். அதுபோல கண்ணும் கண்ணும் சேர்ந்து காமத்தீயை உண்டாக்கும். கல்லில் பிறந்த தீ பஞ்சு முதலான விரைவில் தீப்பற்றும் அதுபோல் கண்ணில் பிறப்பித்தக் காமத்தீத் தானாகவே வளரவல்லது என்பது தான் ‘நள்ளெரி’ என்ற சொற்றொடர் குறிக்கின்றது”4 என்று செயபாலன் குறிப்பிடுகிறார்.

களவு வாழ்வில் காதல் கொள்கினறபோது கண்களின் பார்வைக்குள்ள வலிமைக் குறித்து திருவள்ளுவர் தம் குறளில்,

”நாட்டம் இரண்டும் அறிவுடம் படுத்தற்குக்
கூட்டி யுரைக்கும் குறிப்புரை யாகும்”5
என்று குறிப்பிடுகிறார். ஒன்றுபட்ட உள்ளக் குறிப்பினைக் கொண்ட இருவர் கண்களும் பரிமாறிக் கொள்கின்றன. காதல் களத்தில் கண்ணுக்குரிய மதிப்பு வாய்க்கு இல்லை. வாய்ச்சொற்களால் எந்தப் பயனுமில்லை என்கிறார். இதில் பார்வைக்குப் பேச்சைக் காட்டிலும் அதிக சக்தி இருக்கின்றதை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது.

களவின் நிலைகள்

தமிழ் இலக்கணவழக்கில் குறிப்பிடப்படும் அகவாழ்வை இயற்கைப்புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற்கூட்டம், பாங்கியற்கூட்டம் என்னும் நான்குப் பிரிவினில் அடக்குவர். இதனைத் தொல்காப்பியர்,

“காமப் புணர்ச்சியும் இடந்தலைப் படலும்
பாங்கொடு தழா அலுந் தோழியற் புணர்வுமென்று
ஆங்கநால் வகையிலும் அடைந்த சார்வொடு
முறையென மொழிதல் மறையோர் ஆறே”6
என்று குறிப்பர். இதில் ஒவ்வொரு நிலையிலும் பல நிகழ்ச்சிகள் உண்டு. தனித்தனி நிகழ்ச்சியைத் துறை என்று இலக்கண நூலார் குறிப்பர்.  அவற்றில் “காமப்புணர்ச்சி என்பதற்குத் தலைமகனும் தலைமகளும் ஒரு பொழிலகத்து எதிர்ப்பட்டுத் தன் உணர்வின்றி வேட்கை மிகுதியால் புணர்வது”7 என்று சுப்புரெட்டி குறிப்பிடுகிறார்.

குறிஞ்சித் திணையில் இயற்கை புணர்ச்சி
காமப்பருவம் எய்தியத் தலைவி, தன் தாய் கூறியபடி திணைப்புலம் காக்கச் செல்கிறாள். தோழியர்களும் உடன் செல்கின்றனர். முற்றிய கதிர்களைக் கவரும் கிளிக் கூட்டத்தைத் தட்டை கருவிகளைக் கொண்டு விரட்டுகின்றாள். பின்னர் அருவியாடியும், தழைகொய்தும், மலர்தொடுத்தும், அசோக மர நிழலில் அமர்ந்தும் ஓய்வெடுக்கின்றனர். இதனை,

“கிள்ளை ஓப்பியும், கிளை இதழ் பறியாப் 
பை விரி அல்குல் கொய் தழை தைஇப் 
பல் வேறு உருவின் வனப்பு அமை கோதை எம் 
மெல் இரு முச்சிக் கவின் பெறக் கட்டி, 
எரி அவிர் உருவின் அம் குழைச் செயலைத் 
தாது படு தண்ணிழல் இருந்தனம்”8
என்று குறிஞ்சிப்பாட்டுக் குறிப்பிடுகிறது. குமரப் பருவம் எயதிய தலைவன் வேட்டை நாயோடு மலையைச் சுற்றித் திரிகிறான். பல்மணம் கமழும் தழைமாலை அணிந்த தலைவன், தலைவி இருக்கும் இடத்திற்குத் தானாகச் செல்கிறான். மார்பில் செங்கழுநீரும், தலையில் வெட்சிப்பூவும், முகத்தில் சந்தனப்பூச்சும், கையில் வில்லும், அம்பும் கொண்டு முன்னால் நிற்கின்றான். இதற்கிடையே தலைவன் கண்ணும் தலைவியின் கண்ணும் நட்புக் கொண்டன. காதலால் தீப்பற்றின இதனை,

“ஒண் செங்கழுநீர்க் கண் போல் ஆய் இதழ் 
ஊசி போகிய சூழ் செய் மாலையன், 
பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன்   
குயம் மண்டு ஆகம் செஞ்சாந்து நீவி, 
வரிபுனை வில்லன் ஒருகணை தெரிந்து கொண்டு”9
கண் பார்த்தும் காமத்தீத் தானாக வளர்ந்தது என்பதை ‘ஒள்ளெறி’ என்று குறிப்பிடலாம். கண்கள் கலந்த பின் காதலர் தம் உள்ளங்கள் கலக்கின்றன. பார்த்தவுடன் உள்ளங்கள் கலந்தமையைக் காட்டும் அறிகுறியாகக் கண்கலப்பே உள்ளது என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். இதனை,

“நாட்டம் இரண்டும் அறிவு உடன்படுத்தியதற்குக்
கூட்டி உரைக்கும் குறிப்பு ஆகும்”10
ஒன்றுபட்ட உள்ளக் குறிப்பைத் தலைவன் பார்வைத் தலைவிக்கும் தலைவி பார்வைத் தலைவனுக்கும் உரைக்கின்றன. ஒரு கருத்தை வாயினால் கூறினால் வெளிப்படையாக நன்கு விளங்கும். வாயால் சொல்லிக் கொள்ளுதல், காதல் உலகிற்குப் பொருந்துமா? அல்லது காதல் நோயை வளர்க்குமா? அதனால் காதலர்கள் உள்ளக்கருத்தைக் கண்களினால் சொல்லிக் கொள்வர். இதனை,

“கண்ணோடு கண்ணிணை நோக்கொக்கின்
வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல”11

என்று குறிப்பிடுகின்றன. ஆதலால் உள்ளம் காமக் கண்ணில் வெளிப்பட்டது. பாலுணர்வுப்பற்றி ஒரு பொருத்தமான கொள்கையை நாம் கூறுவதற்கு இல்லை என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். பெண் ஒருத்தியைக் காண்கின்றான். அவன் மொழியைக் கேட்கின்றான். அவள் மனதை மேய்க்கின்றான். அவன் மெய்யைத் தீண்டுகின்றான், கண்டு, கேட்டு. உண்டு, உயிர்த்து, உற்று அறியும்போது உள்ளம் காமத்தின் கொல்களம்; ஆகின்றது. உடம்பில் சில மாற்றங்கள் நிகழ்கின்றது. இவையெல்லாம் புணர்ச்சியிற் போய் முடிவடையும் காதல் என்று பேராசிரியர் வாக்கர் குறிப்பிடுகிறார்.

குறிஞ்சிப் பாடல்களில் இடந்தலைப்பாடு

தற்செயலாக ஒருநாள் கண்ட இருவர் உள்ளமும் புணர்ந்து காதலாயிற்று. அடங்கிய வேட்கைப் பெருகிற்று. முதல் நாள் கண்ட இடத்திலேயே இன்றும் காணலாம் என்ற நம்பிக்கையோடு தலைவன் அவ்விடத்திற்குச் செல்கிறான். ஆறாக்காதலுடையத் தலைவியும் அவன் முன்வந்து நிற்கிறாள். தலைவன் தலைவி ஆகிய இருவரும் சந்தித்த இந்த இடத்தையே இடந்தலைப்பாடு என்று கூறுவர். இடந்தலைப்பாடு பற்றியக் குறிஞ்சித்திணைப் பாடலில்,

“சொல்லின் சொல் எதிர் கொள்ளாய், யாழ நின் 
திருமுகம் இறைஞ்சி நாணுதி கதுமென் 
காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ? 
கொடுங் கேழ் இரும் புறம் நடுங்கக் குத்திப் 
புலி விளையாடிய புலவு நாறு வேழத்தின்  
தலை மருப்பு ஏய்ப்ப, கடை மணி சிவந்த நின் 
கண்ணே கதவ? அலல் நண்ணார்”12
என்று நற்றிணைக் குறிஞ்சிப் பாடல் குறிப்பிடுகின்றது. என் இனிய சொல்லுக்கு எதிர்ச்சொல் சொல்லாமல் நிற்கிறார். ஆனால் உன் அழகிய முகம் கவிழ நின்று வெட்கம் கொள்கிறாய். காமம் கை கடந்து போனால் காத்துக் கொள்ளுதல் எளிதாகும். புலியின் வளைந்த வரிகளுடைய பெரிய முதுகில் நடுங்கும்படி குத்தி விளையாடிய யானைக் கொம்பின் நுனிபோல கடைமணி சிவந்த உன் கண்கள் சினத்தை உடையது என்று தலைவன் தலைவியைக் கூறுகின்றான்.

குறிஞ்சிப் பாடல்களில் பாங்கற்கூட்டம்

இடந்தலைப்பாட்டின் பின்னர் தலைவனின் முகச்சோர்வைக் கண்ட பாங்கன் தலைவனிடம், ‘நீ இரவெல்லாம் உறங்கவில்லையா’ என்று கேட்கிறான். அதற்குத் தலைவன், ஒர் இளம்பெண்ணின்மீது நான் கொண்ட காதலால் எனக்கு இந்த நிலை வந்தது என்கின்றான். இந்த நிகழ்வை சங்கக் குறிஞ்சிப் பாடல்,
“சிறுகுடிக் குறவன் பெருந்தோள் குறுமகள், 
நீர் ஓரன்ன சாயல், 
தீ ஓரன்ன என் உரன் அவித்தன்றே”13
என்று குறுந்தொகைப் பாடலின்வழி அறியமுடிகின்றது. தலைவனின் நண்பர்கள் இவ்வொழுக்கம் உன் அறிவுக்கும், பெருமைக்கும், குடிமைக்கும், தகுதியானது அல்ல என்று கூறுகின்றனர். தலைவியின் நினைப்பை விட்டுவிட வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றனர். இதனை
“மலை உறை குறவன் காதல் மட மகள், 
பெறல் அருங்குரையள், அருங்கடிக் காப்பினள், 
சொல் எதிர் கொள்ளாள், இளையள், அனையோள் 
உள்ளல் கூடாது’ என்றோய்! மற்றும் 
செவ் வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லித்   
தெய்வம் காக்கும் தீது தீர் நெடுங்கோட்டு, 
அவ் வெள்ளருவிக் குடவரை அகத்து 
கால் பொருது இடிப்பினும், கதழ் உறை கடுகினும், 
உரும் உடன்று எறியினும் ஊறு பல தோன்றினும் 
பெரு நிலம் கிளரினும், திரு நல உருவின்  
மாயா இயற்கைப் பாவையின், 
போதல் ஒல்லாள் என் நெஞ்சத்தானே”14
என்று நற்றிணைக் குறிப்பிடுகிறது. மலையில் வாழும் குறவன் அன்பு மகளாகிய தலைவியை நீ பெறமுடியாது. அதனை நினைக்கக்கூடாது என்று நண்பர்கள் கூறுகின்றனர். அதற்குத் தலைவன் அவள் என் நெஞ்சை விட்டு நீங்காமல் இருக்கிறாள்.

அதனைத் தலைவன், செம்மையான வேர்ப்பலாவின் பயன் மிகுதியாக கிடைக்கும், கொல்லிமலையின் தெய்வம் காப்பாற்றிக் கொண்டிருக்கும். தீதற்ற மலைமுகட்டில் அருவி கொட்டும் பகுதியில் மேற்குப் பக்கப் பாறையில் காற்று மோதி இடித்தாலும், கடுமையான சினம் கொண்டு மழைப்பொழிந்தாலும், இடி இடித்தாலும் எந்த வகையான துன்பங்கள் நேர்ந்தாலும், நிலநடுக்கமே வந்தாலும், இயற்கைப் பொலிவுடன் காட்சித் தரும் பாவை, நிலையாக இருப்பது போல அவள் என் நெஞ்சை விட்டுப்போகாமல் இருக்கிறாள் என்று கூறுகின்றான்.

தலைவன் தலைவியின் மீது மிகுந்த காதல் உடையவனாக இருப்பதால் அவளோடு கூடி மகிழும் வாய்ப்பு அவனுக்குக் கிடைக்கவில்லை. அதனால் அவன் மிகுந்த வருத்தத்தோடு இருக்கின்றான். அவனுடைய நண்பர்கள் அவனுக்கு அறிவுரை கூறுவதை,
“கேளிர் வாழியோ, கேளிர்! நாளும் என் 
நெஞ்சு பிணிக் கொண்ட அம் சில் ஓதிப் 
பெரும் தோள் குறுமகள் சிறு மெல் ஆகம், 
ஒரு நாள் புணரப் புணரின், 
அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே”15
என்று குறுந்தொகைப் பாடல் குறிப்பிடுவதைக் காணமுடிகிறது. குறிஞ்சி நிலத்தலைவன் ஒரு பெண்மீது காதல் கொண்டிருக்கிறான் அவன் காதல் ஒருதலைக் காதலாக தோன்றுகிறது. தன்னுடைய காதல் வெற்றிப் பெறாததால் தலைவன் உடல்மெலிந்து காணப்படுகின்றான். தலைவனுடைய மெலிந்த தோற்றத்தைக் கண்ட பாங்கன் தலைவனுக்கு அறிவுரைக் கூறி அவனை தேற்றும் சூழலும் நிகழ்ந்துள்ளதை,

“பெருவரை மிசையது நெடுவெள் ளருவி 
முதுவாய்க் கோடியர் முழவின் ததும்பிச் 
சிலம்பின் இழிதரும் இலங்குமலை வெற்ப 
நோதக் கன்றே காமம் யாவதும் 
நன்றென உணரார் மாட்டும் 
சென்றே நிற்கும் பெரும்பே தைமைத்தே”16
என்று குறுந்தொகைப் பாடல் குறிப்பிடுகிறது. அதில் மிக உயர்ந்த மலையின் உச்சியிலுள்ள அருவி மிகத்தாழ்ந்த மலையில் விழுவதுபோல மிகுந்த பெருமையுடைய தலைவன் அவனுடைய பெருமையும், அறிவையும் நீக்கிக் காமம் கொண்டுள்ளதாகக் குறிப்பிடுவதைக் காணமுடிகிறது. இதனை வள்ளுவர்,

  “சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ
 நன்றின்பால் வைப்பது அறிவு”17
என்ற குறளில், தீயவழிகளில் மனதை செலுத்துதாது, நல்ல வழியில் மனதை செலுத்துவது அறிவு என்கிறார் திருவள்ளுவர். காமம் அதன் நன்மையை உணராதவரிடத்தில் செல்வதால் அதைப் ‘பேதை’ என்று குறிப்பிடுகின்றனர். இதனைக் காணும்போது ‘காமத்துக்கு கண்ணில்லை’ என்னும் பழமொழியை இங்கு நினைவுக்கோருவது பொருத்தமாக அமைவதைக் காணமுடிகிறது.

குறிஞ்சிப் பாடல்களில் பாங்கியற்கூட்டம்
களவு, கற்பு என்ற இருநிலைகளிலும் தலைவன் தலைவி ஆகிய இருவருக்கும் உறுதுணையாக இருந்து உதவுபவள் தோழியே ஆவாள். இருதலைப் புள்ளி ஓர் உயிர் தலைவியும் தோழியும் இப்படிப்பட்ட நட்புறவை கொண்டவர்கள். தலைவன், தலைவி திணைப்புனம் காக்கும் பகல் வேளையில் தலைவியைக் கண்டு சந்தித்து செல்வது வழக்கம். தற்போது தினை அறுவடைக்குப் பின் தலைவியை சந்திப்பது இயலாத ஒன்றாகும். பெற்றோரின் கடுங்காவல் தலைவிக்கு அதிகமாயிற்று. ஆதலால் தலைவனைக் காண இரவில் வரட்டுமா என்று தோழியரிடம் கேட்கிறான். அதற்குத் தோழி இவளது தாய் கண்ணை இமைக்காப்பது போலக் காக்கிறாள். இவளது தந்தை இவள் தசையின் அடியெடுத்து வைப்பதைக் கூட விரும்பவில்லை. எங்கே போகிறாய் என்கிறார். நானும் இவளும் துவர்ப்பு இல்லாத இனிய நண்பர்கள். ஓர் உயிரும் இரண்டு தலையும் கொண்ட பறவை போல வாழ்கின்றோம். தினைப்புனம் காப்பவர்களின் ஆரவாரத்தைக் கேட்டு கிளிகளும் அணில் பிள்ளைகளும் விளையாடும். 

பலாமர கிளைகளில் அமர்ந்து கொண்டு ஒன்றையொன்று அணைத்துக் கூச்சலிடும். அந்தப்பலாப்பழம் தரையில் விழுந்து அடிபடாமல் இருக்கக் குறவர்கள் கூரைப்போல் அமைத்திருப்பர். அதில் வேங்கை மலர் கொட்டிப் புலிப்போல தோற்றமளிக்கும். அதை யானைகள் கண்டு பயந்து ஓடும். இப்படிப்பட்ட மலைநாட்டுத் தலைவன் நீ வந்தால் தலைவியின் நிலையை நினைத்துப்பார். இவள் உயிர் வாழமாட்டாள் என்று தோழி கூறுவதாக

“யாயே கண்ணினும் கடுங்காதலளே, 
எந்தையும் நிலன் உறப் பொறாஅன், “சீறடி சிவப்ப 
எவன் இல குறுமகள் இயங்குதி?’ என்னும், 
யாமே பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின் 
இருதலைப் புள்ளின் ஓர் உயிரம்மே, 
ஏனல் அம் காவலர் ஆனாது ஆர்த்தொறும், 
கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெருஞ்சினை 
விழுக்கோட் பலவின் பழுப் பயங்கொண்மார், 
குறவர் ஊன்றிய குரம்பை புதைய, 
வேங்கை தாஅய தேம்பாய் தோற்றம்   
புலி செத்து  வெரீஇய புகர்முக வேழம், 
மழை படு சிலம்பில் கழை படப் பெயரும் 
நல் வரை நாட! நீ வரின் 
மெல்லியல் ஓரும் தான் வாழலளே”18
என்று அகநானூற்றுப் பாடல் குறிப்பிடுகிறது. தலைவியும் தோழியும் இணைபிரியா நட்பையும் தலைவியின் கட்டுக்காவல் பற்றியும் இப்பாடல் விளக்குகிறது. களவு தொடர்பைப் பற்றி தலைவன் தோழிக்கு வெளிப்படையாகவோ, குறிப்பாகவோ கலவை நயமாகப் புலப்படுத்துகின்றான். தலைவியின் நாணத்தைப் பற்றியும் உறவைப் பற்றியும் தோழிக்கு வெளிப்படுத்துகின்றான். இதனை,

“ஒன்று இரப்பான் போல் எளிவந்தும் சொல்லும் உலகம் 
புரப்பான் போல்வது ஓர் மதுகையும் உடையன் 
வல்லாரை வழிபட்டு ஒன்று அறிந்தான் போல் 
நல்லார் கண் தோன்றும் அடக்கமும் உடையன் 
இல்லோர் புன்கண் ஈகையின் தணிக்க  
வல்லான் போல்வது ஓர் வன்மையும் உடையன் 
அன்னான் ஒருவன் தன் ஆண்தகை விட்டு என்னைச் 
சொல்லும் சொல் கேட்டீ சுடர் இழாய், பல் மாணும்”19
என்று கலித்தொகைப் பாடல் குறிப்பிடுகிறது. இதில் தோழியிடம் தலைவன் தன் வேண்டுகோளைத் தெரிவித்தான். அவனது விருப்பத்தைத் தோழி தலைவியிடம் கூறுகிறார். அத்தலைவி இறுதியில் தலைவனின் வேண்டுகோளை ஏற்று நாணத்தால் தலை கவிழ்ந்தாள். அவளது குறிப்பறிந்து அவளுக்குக் கூற வேண்டியதைத் தன் நெஞ்சிற்குக் கூறுகின்றாள் என்று அகநானூற்று குறிஞ்சிப் பாடல் சிறப்பாகக் குறிப்பிடுகிறது. தலைவியுடன் அவன் களவு ஒழுக்கத்தைத் தொடர வழி செய்பவளாகத் தலைவி குறிப்பால் செயல்படுவதைக் காணமுடிகிறது.

முடிவுரை
               
சங்க இலக்கியத்தில் அகப்பாடல்கள் சிறப்பிடம் பெற்றிருப்பதைப் போலவே அகப்பொருள் பாத்திரங்களில் தலைவி சிறப்பிடம் பெற்றிருப்பதைக் காண முடிகிறது. அந்தவகையில் குறிஞ்சி நில வாழ்க்கை முறையை ஆராயும்போது தலைவனும் தலைவியும் குறிஞ்சி நிலத்தில் களவு வாழ்க்கை அதிகமாக ஈடுபட்டுள்ளதை சங்கப் பாடல்கள் மூலம் நம்மால் அறிய முடிகிறது.

சான்றெண் விளக்கம்
1.இறையனார் அகப்பொருள் உரை (களவு ), ப.28

2.மேலது, ப.65

3.என்.சுப்புரெட்டியார், அகத்திணை கொள்கைகள், ப.50, பாரி நிலையம், சென்னை -1, முதற்பதிப்பு – 1981.

4.மேலது, ப.51

5.பரிமேலழகர் (உ.ஆ), திருக்குறள் உரை, பா.1100, கழக வெளியீடு, சென்னை.

6.இளம்பூரணர் (உ.ஆ.), தொல்காப்பியம், செய்யுளியல், ப.178, கழக வெளியீடு, சென்னை – 1, முதற்பதிப்பு – 1953.

7.என்.சுப்புரெட்டியார், தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை, ப.94, பத்மாவதி ஆப்செட், சென்னை – 32, முதற்பதிப்பு – 2017.

8.ச.வே.சுப்பிரமணியம், பத்துப்பாட்டு மூலமும் உரையும், ப.387, மணவாசகர் பதிப்பகம், சென்னை.

9.அ.மாணிக்கம், அகநானூறு மூலமும் உரையும், ப.120, அருணா கிராபிக்ஸ், சென்னை – 17, முதற்பதிப்பு – 2013.

10.இளம்பூரணர் (உ.ஆ), தொல்காப்பியம், களவு, ப.62, கழக வெளியீடு, சென்னை -1, முதற்பதிப்பு – 1953.

11.பரிமேலழகர் (உ.ஆ), திருக்குறள் உரை, பா.1100, கழக வெளியீடு, சென்னை.

12.பாலசுப்பிரமணியன் கு.வெ., நற்றிணை மூலமும் உரையும், ப.80, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், ராயப்பேட்டை, சென்னை – 14, முதற்பதிப்பு – 2004.

13.வி.நாகராஜன், குறுந்தொகை மூலமும் உரையும், ப.180, பாவை பிரிண்டர்ஸ், சென்னை – 14, முதற்பதிப்பு – 2004.

14.பாலசுப்பிரமணியன் கு.வெ., நற்றிணை மூலமும் உரையும், ப.364, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், ராயப்பேட்டை, சென்னை – 14, முதற்பதிப்பு – 2004.

15.வி.நாகராஜன், குறுந்தொகை மூலமும் உரையும், ப.495, பாவை பிரிண்டர்ஸ், சென்னை – 14, முதற்பதிப்பு – 2004.

16.மேலது, ப.148

17.பரிமேலழகர் (உ.ஆ), திருக்குறள் உரை, பா.442, கழக வெளியீடு, சென்னை.

18.இரா.ஜெயபால், அகநானூறு மூலமும் உரையும், ப.47, அருணா கிராபிக்ஸ், சென்னை – 17, முதற்பதிப்பு – 2013

19.அ.மாணிக்கம், கலித்தொகை மூலமும் உரையும், ப.292, அருணா கிராபிக்ஸ், சென்னை -17, முதற்பதிப்பு – 2013.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
ந.இந்திரா
உதவிப்பேராசிரியர்
தமிழ்த்துறை
முத்தாயம்மாள் கலைக்கல்லூரி
இராசிபுரம் 637 408.
 

1 COMMENT

Leave a Reply