முன்னுரை
ஒரு சமுதாயத்தைத் தெரிந்துகொள்ள அவர்களின் வாழ்வியலை ஆய்வதே சிறப்புடையதாக இருக்கும். பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்வில் கடைப்பிடிக்கும் பழக்கவழக்கங்கள், சடங்குகள், வழிபாட்டுமுறைகள் விழாக்கள் அனைத்தையும் உற்றுநோக்கினால் அம்மக்கள் பற்றிய தெளிவு பிறக்கும். அந்த வகையில் காரிமங்கலம் பகுதியில் இருக்கும் வேளாளகவுண்டர்களின் வாழ்வில் தைப்பொங்கல் பெறும் இடத்தை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது. காரிமங்கலம் வட்டார வேளாளர்கள் வாழ்வியலில் தைப்பொங்கல்
ஊர் கூடுதல்
பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகளை ஒரு வாரத்திற்கு முன்னதாகவே தொடங்கிவிடுகின்றனர். பானைக்குத் தேவையான விறகு சேகரிப்பது, வாசலைக் கொத்தி செப்பனிடுவது, மண்ணால் அடுப்புக்கல் செய்வது வெங்கலிச்சான் கல் எடுத்து இதை தோணி உரலில் போட்டு சிறுமிகள் இடித்துக் கோலமாவு உருவாக்குவது எனத் தொடக்க வேலைகளைப் பெரியோர்கள் முதல் சிறியோர்கள் வரை செய்து வருகின்றனர். அதோடு ஊர் மக்கள் ஒன்றுகூடி விழாவிற்கான செயல்பாடுகள் விழாவின்போது மக்கள் நடந்துகொள்ளும் முறைகள், ஒவ்வொரு குடும்பமும் எவ்வளவு பணம் தரவேண்டும் என்பது முதலான அனைத்து முடிவையும் எடுப்பதைக் காணமுடிகிறது.
‘மேரை’ வழங்குதல்
மேரை என்பதற்கு “‘மரியாதை’ என்றும் ‘குடிமக்களுக்குக் களத்தில் கொடுக்கும் தானியம்’”1 என்று தமிழ் அகராதி பொருள் தருகிறது. அதற்கேற்ப காரிமங்கலம் வட்டார வேளாளர்கள் தங்களின் வேளாண்மை சிறக்க பேருதவிபுரியும் மக்களுக்கு நெல் அல்லது நெற்கதிரோடு கூடிய கட்டை அன்பாக வழங்குவர். அவ்வாறு வேளாண் கருவி உருவாக்கித் தரக்கூடிய கொல்லர்கள், ஆடை வெளுப்பவர்கள், சிகை அலங்காரம் செய்பவர்கள், தோட்டிவேலை பார்ப்பவர்கள், சால், பரி தைத்துக் கொடுப்பவர்கள் என அனைத்து தரப்பட்ட குடிகளுக்கும் மேரை வழங்கப்படுகிறது. ‘மேரை’ என்பது பொருளாக இல்லாமல் பணமாகப் பெற்றுக்கொள்வதைக் தற்காலத்தில் ஒருசில இடங்களில் பார்க்கமுடிகிறது. இது அம்மக்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சி நிலையைக் காட்டுகிறது.
போகியும் காப்புக்கட்டுதலும்
“பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவலக்கால வகையி னானே” (நன்னூல். நூ. 462)
என்ற நன்னூலாரின் வாக்கிற்கிணங்க பழைய பொருட்களை எடுத்துவிட்டு, புதிய பொருட்களை வீட்டில் சேர்க்கின்றனர். வீடு தூய்மை செய்வதனால் வந்த குப்பையை வெளியே கொட்டி எரிக்கின்றனர். அன்றே மண்டு (பொதுவிடம்) தூய்மை செய்து அங்கு கூலி கட்டுவதற்காக நிறுத்தப்பட்டிருக்கும் கம்பம், ஜெகினி ஆகியவற்றிற்கு சுண்ணாம்பு மற்றும் செம்மண் சாயம் பூசி அம்மக்களே அழகு படுத்துகின்றனர். அதோடு தோட்டத்தில் இருக்கும் தென்னை, மா முதலிய மரங்களுக்கும் அதே சாயம் பூசப்படுகிறது.
நெல்லு பில்லால் கயிறு திரித்து அதில் வேப்பிலையைச் செருகி ஊரின் முக்கிய தெருக்கள் மற்றும் கோயில் முன்பாகத் தோரணத்தைத் தோட்டியால் கட்டப்படுகிறது. மக்களும் அவரவர் வீடு, கொட்டகை, நெற்போர் ஆகியவற்றை சுற்றி பண்ணைப் பூ, பூலாப் பூ, வேப்பிலை ஆகிய மூன்றையும் சேர்த்து சொருகி வைக்கின்றனர். இந்நிகழ்வைதான் காப்புக் கட்டுதல் என்கின்றனர்.
தைப்பொங்கல்
ஆடிமாதத்தில் விதைத்த நெல்விதை தைக்கு முன்னால் அறுவடையாகின்றது. பொங்கல் விழாவானது நெல்லைக் களத்திற்குத் தந்த இறைவனுக்கு நன்றி தெரிவிப்பதாகக் அமைகிறது. தை முதல்நாளே தமிழர்களின் அறுவடை நாளாகக் கொண்டாடுகின்றனர். பொங்களன்று காலையில் சூரியன் உதயத்தின்போது பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். ஆனால் இப்பகுதியில் இருக்கும் மக்கள் பிற்பகல் பொழுதில் அவர்களின் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று அங்கு அடுப்பு வெட்டி புதுப்பானையில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துகின்றனர்.
இலக்கியங்களில் பொங்கல்
சங்ககாலம் முதற்கொண்டு பொங்கல்விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது என்பதனை பல்வேறு இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. இதனை,
“மரை ஆன் கறந்த நுரை கொள் தீம் பால்
மான் தடி புழுக்கி ய புலவு நாறு குழிசி
வான் கேழ் இரும்புடை கழாஅது, ஏற்றி,
சாந்த விறகின் உவித்த புன்காம்;” (புறம். 168: 8 – 11)
என்ற பாடலில் புலவர் சாத்தனார், மரைபசுவில் கறந்த நுரைக்கொண்ட இனிய பாலை தினை அரிசியோடு சந்தனக்கட்டையால் அடுப்பெரித்து புதுப்பானையில் சேர்த்துப் பொங்கல் வைத்து பலரும் உண்டு மகிழ்ந்த விதத்தை அழகுறத் தெளிவுபடுத்துகின்றார்.
“பைதுஅற விளைந்த பெருஞ்செந் நெல்லின்
தூம்புடைத் திரள்தான் துமிந்த வினைஞர்” (பெரும்.230 – 231)
எனப் பெரும்பாணாற்றுப்படையின் ஆசிரியர் முடத்தாமக்கண்ணியார் உழவுத் தொழிலைப் போற்றுகின்றார். அதிலிருந்து வெளிப்படுவது தமிழர்கள் பண்ணெடுங்காலத்திற்கு முன்பிருந்தே அறுபடை விழாவைக் கொண்டாடியிருக்க வேண்டும் என்பது புலனாகிறது. அதோடு நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகைப் பாடல்களிலும் பொங்கல் பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது. கி.பி இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய சிலப்பதிகாரத்திலும் காவற்பூதத்திற்கு பூவையும் பொங்கலும் வைத்துத் தமிழ் மக்கள் வழிபட்டதாகக் கூறப்படுகிறது.
“மதுக்குலாம் அலங்கல் மாலை
மங்கையர் வளர்த்த செந்தீப்
புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்” (சீவகசிந்தாமணி: 1821)
எனும் பாடல் அடியின் மூலம், கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய சீவகசிந்தாமணியில் சங்கத் தமிழன் புதுப்பானையில் பாலோடு புத்தரிசியிட்டு பொங்கல்வைத்து வழிபட்டான் என்பதை இதன் மூலமாக அறியமுடிகிறது.
பொங்கலும் பகிரிந்துண்ணும் வழக்கமும்
பொங்கலன்று ஊரிலுள்ள அனைவரும் பொங்கல் வைப்பதில்லை மாறாக, ஒருசில குடும்பம் மட்டுமே பொங்கல் வைக்கின்றனர் மற்றவர்கள் மாட்டுப் பொங்கலன்று பொங்கல் வைத்து வழிபாடு நடத்துகின்றனர். அதற்கு காரணம் மக்கள் ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பல்’ என்ற பண்பு படைத்தவர்கள் தமிழர்கள். தான்செய்த உணவைப் பிறருக்குக் கொடுத்துதவும் எண்ணம் அவர்களின் இரத்தத்தில் ஊரி நிற்பதால் தைப்பொங்கல் கொண்டாடுபவர்கள் வீட்டிற்கு மற்றவர்கள் வந்து உணவுண்பதும் அடுத்தநாள் மாட்டுப் பொங்களன்று அவர்களுடைய வீட்டிற்கு இவர்கள் சென்று விழாவைச் சிறப்பிப்பதும் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
மாட்டுப் பொங்கல் (பட்டி பொங்கல்)
விவசாயத்திற்கு முதுகெலும்பாக இருப்பவை மாடுகள். அதனால், தைப்பொங்கலன்று சூரியனை வணங்கிவிட்டு தன்வாழ்வு சிறக்க உதவியாய் இருந்த கண்முன் இருக்கும் கடவுளாய்ப் போற்றப்படும் மாடுகளுக்கு அடுத்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. மாட்டுப்பொங்கலன்று விடியற் காலையில் மன்னால் செய்த அடுப்புக்கல்லை மூட்டி அதன்மேல் புதுப்பானையேற்றி அதில் உப்பிட்டு அதனுடனேயே பாலோடு நீர் கலந்து ஊற்றுகின்றனர். பின் இறைவனையும் முன்னோர்களையும் வணங்கி அடுப்பைப் பற்றவைக்கின்றனர். அடுப்பில் இருக்கும் பானையை ஒரு குடுவைக் கொண்டு மூடுகின்றனர். பானையில் இருக்கும் பால் பொங்கி வழியும்போது ‘பொங்கலோ பொங்கல்’ என்று முழக்கமிடுகின்றனர்.
”பொங்கலே பொங்கல் மாட்டுப்பொங்கல்
பட்டிப் பெருக பால்பானை பொங்க!
நோவும் நொடியும் தெருவோடு போக…”2
அவ்வாறு பொங்கி வழிவது கிழக்கு மேற்கு மற்றும் வடக்கு என்றால் வாழ்வில் சிறப்பு என்றும் தெற்குப் பக்கத்தில் வழிந்தால் முன்னோர்களுக்கு ஆகாது என்றும் கருதுகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதி மக்கள் முன்னோர்கள் மீது எவ்வளவு பற்றோடும் பக்தியோடும் இருக்கின்றனர் என்பது புலனாகிறது.
பட்டி கட்டுதல்
சாணத்தைக் கொண்டு வீடுபோல நாலுமூல சதுரமாகப் பிடித்துக் கிழக்குப் பகுதியில் வாசல்வைத்து அதன் முன்புறத்தில் பெரிய சாணஉருண்டைப் பிடித்து வைக்கின்றனர். முதலில் வைத்த சாணஉருண்டையைக் காட்டிலும் சற்று சிறிய உருண்டையாகச் செய்து அதை சதுரமாக உள்ள சாணத்தின் மேல் வைத்து அதற்கு மஞ்சள், குங்குமம், நெத்திகண்ணாடிப் பூவோடு அருகம்புல்லையும் சேர்த்து அழகுபடுத்துகின்றனர். அந்தப் பட்டிக்குள் வெள்ளை நிறத்துணியால் மத்தை சுற்றி வைக்கின்றனர், அதோடு கிழங்கோடு கூடிய மஞ்சள்செடி, ஆவாரம் பூ, பூலாப்பூ, கடமுடையான் புல் ஆகியவற்றை சேர்த்து வைக்கின்றனர்.
பட்டியின் மத்தியில் தலைவாழை இலைபோட்டு அதில் பால்பொங்கலை வைத்து அங்கே உண்டான அவரைக்காய்க் கொட்டை சேர்த்த பூசணிக்காய் குழம்பு அதில் சேர்க்கின்றனர். அதில் நெய், வெல்லம், தேன், வாழைப்பழம் ஆகியவற்றைச் சேர்த்து படையல் போடுகின்றனர். படையல் பக்கத்தில் வெல்லம் சேர்த்த குழிபன்னியாரம் வைத்து வழிபாடு நடத்துகின்றனர். இறுதியில் ஒரு தட்டில் மஞ்சள் அரிசியும் மற்றொரு தட்டில் படையல் உணவையும் இருவர் எடுத்துக்கொண்டு முதலில் செல்பவர் அரிசியை இறைத்து பொங்கலோ என்று சொல்லிக்கொண்டும் பின்செல்பவர் கையில் இருக்கக்கூடிய தழுகி உணவை இறைத்து பொலியோ என்று கூறி அங்கிருக்கக்கூடிய பசுக்கூட்டத்தை மூன்று முறை வலம் வந்து மீதம் இருக்கும் அரிசியையும் தழுகியையும் வைத்து வணங்குவர். பிறகு படையல் உணவை எடுத்துப் பிசைந்து அங்கு இருக்கக்கூடிய அனைவருக்கும் உருண்டையாகக் கொடுப்பர்.
ஒருசிலர் மாட்டுத் தொழுவத்திற்கு முன் பாத்திரத்தில் பொங்கல் வைத்து பின்வட்டமாகச் சாணத்தால் மெழுகி ஓர் உருண்டை பிடித்துவைத்து அதன்மேல் அருகம்புல், பூ, மஞ்சள், குங்குமம் வைத்து அதற்கு முன்னால் வெற்றிலைப்பாக்கில் இரண்டு வாழைப்பழம் ஊதுவர்த்தி ஏற்றி வழிபட்டு பின் உணவை மாடுகளுக்கு உண்ண கொடுப்பர். அன்றே மாட்டுத் தொழுவத்தில் படையலுக்கு வைத்திருந்த பழம் ஒன்றை எடுத்து அதை பாதியளவுக்கு உரித்து உரிக்காத பகுதியைச் சாணத்தில் அழுத்தி வைத்து அதை மாமன் மச்சான் உறவுக்காரர்கள் அதை கைப்படாமல் வாயால் சாப்பிட அழைக்கின்றனர். அதை சாப்பிட வருவோர், சாப்பிடும் தருவாயில் சானத்தில் அழுத்தி விடுகின்றனர். இது அம்மக்களின் அறியாமையால் செய்கின்றனர் என்று சொன்னாலும் சானத்தில் விஷக்கிருமிகளைக் கொல்லும் தன்மை உள்ளது என்பதை உணர்ந்த நம் தமிழ் முன்னோர்கள் காலம் காலமாக இதைச் செய்துவருகின்றனர்.
முன்னோர் வழிபாடு
ஒவ்வொரு குடும்பத்திற்குமென கூடம் உள்ளது. அந்த ஆண்டில் இறந்தவரை கூட்டத்தில் சேர்க்கும் நிகழ்வு மாட்டுப்பொங்கலன்று நடக்கும். இறந்தவருக்கான கல்லை ஆற்றில் எடுத்து அதற்கு நீராட்டி அக்கல்லை ஆற்றங்கரையில் இருக்கும் அழிஞ்சி மரத்தின்கீழ் வைத்து அதற்கு மஞ்சள், குங்குமம், பூ ஆகியவற்றை வைத்து அதற்கு முன்னால் இறந்தவர் வாழ்வில் எடுத்துக்கொண்ட உணவுப்பொருட்கள் மற்றும் சாராயம் முதலானவற்றை வைத்து வழிபாடு நடத்துகின்றனர். பின் மேலதாளம் முழங்க அந்த கல்லை எடுத்துக் கொண்டு கூடத்தில் கொண்டு சேர்க்கின்றனர். இந்நிகழ்வைக் கூட்டத்தில் சேர்த்தல் என்கின்றனர் இப்பகுதி மக்கள். அக்கூடத்தில் உள்ள முன்னோர்களுக்கு வழிபாடு செய்பவர் கூடத்தில் உள்ள அனைத்து கற்களையும் கழுவி அதற்கு மஞ்சள், குங்குமம் இட்டு அதற்கு முன்னால் முன்னோர்களுக்காக செய்துவைத்த வெல்லம் சேர்த்த அரிசிமாவு தோசையைச் சுட்டு முன்னோர்களுக்குப் படைப்பர் இது காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் சடங்கு முறையாகும். இதன் மூலம் முன்னோர்கள் மீது பற்றும் பக்தியும் கொண்டவர்களாக இருப்பது தெளிவாகிறது.
அம்மன் வழிபாடு
மாட்டுப்பொங்கலன்றே மாரியம்மனுக்கும் பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். மாரியம்மனை வழிபடுவதற்கு முன் ஒரு செம்பில் மஞ்சள் தண்ணீர் மற்றும் மஞ்சள் துணி பூசைக்குத் தேவையான வாழைப்பழம் வெற்றிலைப்பாக்கு, ஊதுவர்த்தி, கற்பூறம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அங்கிருந்து பறை இசைக்க மணி ஒலிக்க ஒரே ஓட்டமாகப் பட்டாளம்மன், கக்குமாரியம்மன் கோயில் இருக்குமிடத்திற்கு ஓடிச்சென்று அங்கு இருக்கக்கூடிய அம்மன்களுக்கு எடுத்துச்சென்ற மஞ்சள் நீரால் அபிஷேகம் செய்து அதன்மேல் மஞ்சள் துணியைச் சாற்றி பழம் பூ வைத்து வழிபாடு செய்து அங்கு உடைத்த தேங்காய்த் தீர்த்தத்தை எடுத்துக்கொண்டு ஒரே மூச்சகாக மீண்டும் வந்த வழியே ஓடிச்சென்று மாரியம்மனுக்கு படையலிட்டு வழிபாட்டை முடிக்கின்றனர்.
அனைவருடைய ஆடு, மாடுகளையும் ஓட்டிச்சென்று தலைக்கொண்டம்மன் கோயில் முன்பாக மாடுவிடும் நிகழ்வு நடைபெறுகிறது. நிகழ்வின் இறுதியில் கோயிலுக்கு முன் ஒரு சிறுகல்லிற்கு மஞ்சள் குங்குமம் வைத்து அதனை தலைகொண்டம்மனாகப் பாவித்து அதற்கு கிடா வெட்டுகின்றனர். அந்தக் கிடா இரத்தத்தை அங்கு சூழ்ந்திருக்கக்கூடிய மக்கள் எடுத்துச் சென்று ஆடுமாடுகளுக்கு பூசுகின்றனர். இதனால் அந்த ஆண்டு முழுவதும் ஆடுமாடுகளுக்கு எந்த நோய் நொடியும் வராது என்ற நம்பிக்கை நிலவுவதைக் காணமுடிகிறது. அந்தக் கிடாதலையை ஒருவர் எடுத்துக்கொண்டு பூசாரி மணியடித்துக் கொண்டு, அடுத்தவர் தேங்காய் உடைத்த தீர்த்தத்தை கையில் எடுத்துக் கொண்டு, அங்கு குழுமி இருக்கும் ஆடுமாடுகளை சுற்றி பொங்கலோ, பொலியோ என்று கூறிக்கொண்டு மூன்றுமுறை வலம் வருகின்றனர். பின்னர் மாடுகளைக் கோயில் சுற்றி வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர். இது அப்பகுதி மக்கள் தலைகொண்டம்மன்மீது கொண்ட பக்தியை வெளிக்காட்டுகிறது.
கானும் பொங்கல்
பொங்கலின் மூன்றாவது நாள் கானும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அன்று ஒரு சிலர் அவர்களின் குலதெய்வக் கோயிலான பெருமாளப்பனுக்கு பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். பட்டாளம்மனுக்கு கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும்போது ஆற்றங்கரை மருங்கில் உள்ள நாகருக்கும் பொங்கலிட்டு கோழி, கிடா முதலானவற்றை வெட்டி வழிபாடு செய்கின்றனர். அங்கு செய்யும் உணவுகளை அங்கேயே உண்டுவிட்டு வரவேண்டும் இல்லையேல் தெய்வ குத்தம் ஆகிவிடும் என்று அங்கிருக்கக்கூடிய மக்களுக்கு மாமிசம் முதலான உணவுகளைப் பகிர்ந்து கொடுத்து உண்கின்றனர். இந்நிகழ்வு சாதாரணமாக ஒரு மனிதன் உணவை மற்றவருக்கு கொடுப்பதற்கு மனம் வராது. மாமிசம் என்றால் அரவே கொடுப்பதற்கு முன்வரமாட்டார். இறையோடு சம்பந்தப்படுத்திச் சொன்னால் பயத்தின் காரணமாகவோ அல்லது தெய்வத்தின் மீதுள்ள மரியாதைக் காரணமாகவோ பகிர்ந்துண்ணும் நிலை தோன்றும். அதை உணர்ந்த முன்னோர்கள் ஒருசில மனித செயல்பாடுகளில் இம்மாதிரியான இறை நம்பிக்கையைப் புகுத்திச் சென்றிருக்கின்றனர் என்பதைக் காட்டுகிறது.
எருதுகட்டு
ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, மாடுஓட்டம், மாடுவிடுதல், கூலியாட்டம், கூலிபிடித்தல், எருதாட்டம் எனப் பல பெயர்களால் அழைக்கப்படும் இவ்விளையாட்டு சங்ககாலம் முதலே இருந்து வந்துள்ளது என்பதை,
”மருப்பில் கொண்டும், மார்பு உறத் தழீஇயும்
எருத்திடை அடங்கியும், இமில்இறப் புல்லியும்
தோள்இடைப் புகுதந்தும், துதைந்துபாடு ஏற்றும்,
நிரைபு மேல் சென்றாரை நீள்மருப்பு உறச்சாடி,” (கலி.முல்லை.105 :30 – 34)
எனும் கலித்தொகை பாடலடி உணர்த்துகிறது. காளை என்பது அவர்களுடைய கௌரவமாகக் கொள்ளப்படுகிறது. எருதுகட்டு என்பது எருதினைக் கட்டி விளையாடும் வீரவிளையாட்டாகும். இப்பகுதியில் எருதின் கழுத்தில் பெரிய கயிரு ஒன்று கட்டப்படுகிறது. அக்கயிற்றைச் சுற்றி துணி சுற்றப்படுகிறது. இது மக்கள் இழுக்கும்போது மாட்டிக் கழுத்தை கயிறு அருக்காமல் இருக்கச் செய்யப்படுகிறது. ஒரு முப்பதடி வடக்கயிறை எடுத்து அதன் நடுப்பகுதி மாட்டின் கழுத்துக் கயிரோடு பிணைக்கப்படுகிறது.
மக்கள் அந்தக் கயிற்றை முன்பக்கமும், பின்பக்கமும் அந்தக் கயிற்றைக் கொண்டு இழுத்தப் பிடித்துக்கொள்கின்றனர். அப்போது மாட்டிற்கு முன் மூன்று குச்சியின்மேல் ஒரு குடவை மூடி அதற்கு மனிதன் போல வேடமிடவைத்து எருதின் முன் நிறுத்துகின்றனர். அங்கு குழுமியிருக்கும் கூட்டத்தைப் பார்த்த எருது கோபத்தில் வேடம் தரித்து வைத்திருக்கக்கூடிய குடுவையைக் கொம்பால் தூக்கியெரிந்து தன்கோபத்தை வெளிக்காட்டுகிறது. அப்போது கூலியாட்டும் வீரர்கள் ஒரு நிலமான குச்சியில் துணியைச் சுற்றி கூலியின் முன்காட்ட கூலி நாலுக்கால் பாய்ச்சலில் அவரை முட்டித்தள்ள முற்படுகிறது. அந்நேரத்தில் முன்னும் பின்னும் கயிறைப் பிடித்து நிற்கக்கூடிய வீரர்கள் விட்டுப் பிடிக்கின்றனர். இம்மாதிரியாகச் செய்துகொண்டே கோயிலை மூன்றுமுறை வலம் வருகின்றனர். கடைசியாகக் கோயில் பூசாரி தீர்த்தம் கொண்டுவந்து கூலியின் மீது தெளிக்க கூலிக்குச் சொந்தக்காரர் கூலியைப் பிடித்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றுவிடுகிறார். இவ்வாறு இப்பகுதியில் எருதுகட்டு நடைப்பெறுவதைக் காணமுடிகிறது.
எருதாட்டம்
வேளாளர் சமூக மக்கள் எருது, மாடுகளைத் தங்களின் குலக்கடவுளுக்கு இணையாகப் போற்றி வணங்குகின்றனர். அதற்குச் சான்று திங்களன்று மாடுகள் பிறந்தநாள் என்று உழவு உழுவதைச் செய்யமாட்டார்.
காரிமங்கலம் வட்டம் கரகப்பட்டி கிராமத்தில் இருக்கும் வேளாளர்கள் எருதுகட்டு முடித்தப்பின் எருதாட்டம் ஆடுகின்றனர். எருதிற்குப் பயன்படுத்திய வடக்கயிரை வட்டமாக வைத்து அதற்குப் பூசாரி மஞ்சள், பூ, குங்குமம் வைத்து பூசை செய்வார். அப்போது கூலியாடுபவர் (எருதைப்போல ஆடுபவர்) காவிவேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு நெற்றியில் பட்டைதீட்டிக்கொண்டு நடுவில் குங்குமம் வைத்து நிற்பார். பூசாரி மணியடிக்க அங்கு சூழ்ந்திருக்கும் மக்கள் ஓசையெழுப்பிக் கொக்கரிக்கச் செய்வார்கள். அப்போது கூலியாடுபவருக்கு அருள் வந்து அங்கு வட்டமாக வைத்திருக்கும் வடத்திற்கு மத்தியில் சென்று நின்றவுடனே அங்கு குழுமியிருக்கும் மக்கள் வடத்தினைச் சூழ்ந்து கெட்டியாகப் பிடித்துக்கொள்கின்றனர். வடத்திற்கு உள்ளிருப்பவர். ஆடிக்கொண்டே வடத்தைப் பிடித்திருக்கக் கூடியவர்களைத் தன்தலையால் இழுத்து முட்டுவார். அதற்கு மாமன் மச்சான் உறவுக்காரர்கள் அவர் முட்டுவதற்கு ஏதுவாக ஒவ்வொருவராகப் பிடித்துக் கொடுப்பார்.
இந்நிகழ்வு இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள் நடைபெறும். இந்நிகழ்வு முடிந்தபின் வடக்கயிரைப் பிடித்திருந்தவர்கள் கூலியாடியவரும் கோயிலுக்கு முன்னால் வந்து மாமன், மச்சான், அண்ணன், தம்பி என அவர் இவர் காலில் விழ முற்படுவதும், இவர் அவர்காலில் விழ முற்படுவதுமான நிகழ்வைக் காணமுடிகிறது. இவையனைத்தும் அம்மக்கள் எருதுகட்டின்போது எருதிற்கு ஏற்படும் வலியை மற்றவர்களுக்கு உணர்த்தக்கூடிய வகையில் அமைந்திருப்பதைக் காணமுடிகிறது. அதோடு ஒருவரையொருவர் மதிக்கக்கூடிய பண்பும் இவ்விழாவில் புலப்படுகிறது.
வழுக்கு மரம்
எருதுகட்டு முடிந்தபின் அங்கு குழுமியிருக்கக்கூடிய இளைஞர்கள் வழுக்குமரம் ஏறுகின்றர். கிரிஸ் தடவிய மரத்தில் ஒருவர் ஏற மற்ற இளைஞர்களும் உதவிபுரிவர். மேல் ஏறி போகபோக அங்கு இருக்கக்கூடிய இளம் பெண்கள் ஏறாமல் இருக்க தண்ணீரை முகத்தில் பீச்சியடிப்பார்கள். இது மாதிரியாகத் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்க கடைசியில் இளைஞர்களின் கூட்டு முயற்சியால் வழுக்கு மரத்தின் உச்சத்தைத் தொட்டு வெற்றிபெறுகின்றனர். இந்நிகழ்வு இளைஞர்களின் விடாமுயற்சியை வெளிக்காட்டுகிறது.
பூப்பத்திரிகை பங்கிடல்
கடைசிநாள் ஊர்க்கூடி பொங்கலுக்குச் செலவழித்த பணம் முதலான வரவு, செலவு கணக்குகளைப் பார்த்தபின் கூட்டத்திற்கு வந்தவர்கள் வெறுங்கையோடு வீடு திரும்பக்கூடாது என்று வெற்றிலையில் பாக்கு வைத்து அதோடு வாழைப்பழம், தேங்காய்சில் வைத்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொடுத்தனுப்புகின்றனர். இதற்கு பூப்பத்திரிகை பங்கிடல் என்கின்றனர். இந்நிகழ்வு அவர்களின் உயரிய பண்பை வெளிக்காட்டுகிறது.
முடிவுரை
தொடக்ககாலம் முதலே வேளாண்மையை நம்பியிருக்கும் தமிழ்க்குடிகள் வேளாளர்கள் ஆவர். இவர்கள் தம் வேளாண்மைக்கு இணக்கமானவர்களை அந்நியர்களாகப் பார்ப்பதில்லை. குறிப்பாகப் காரிமங்கலம் வேளாளர் இனமக்கள் பிற சமுதாய மக்களை மதிப்பதோடு அவர்களோடு இணக்கமாக இருக்கின்றனர். வேளாண்மை சிறக்கப் பேருதவிபுரியும் விலங்குகளிடத்தும் பேரன்பு கொண்டவர்களாக இருப்பதைக் காணமுடிகிறது.
தொகுப்புரை
விழா என்றால் மக்கள் கூடி முடிவெடுக்கும் திறனும், பொங்கலின்போது தாங்கள் தன்குடும்பம் மட்டும் மகிழ்ச்சியாக இல்லாமல் பிற சமுதாயத்தினரையும் தன்குடும்பம்போல் கொடுத்துதவும் தன்மையும் காணமுடிகிறது.
போகியன்று ஊரைத் தூய்மை செய்து காப்புக்கட்டும் வேலையை பிற சமுதாய மக்களோடு இவர்களும் சேர்ந்து செய்வதை சாதியபேதமற்று இருப்பதைக் காணமுடிகிறது.
பொங்கலில் தனக்கு உணவுப் பொருளை விளைவிக்க ஏதுவாக இருந்த இறைவனை வழிபடுவதோடு அவ்வேளாண்மையை தங்களுக்குக் கற்றுத்தந்த முன்னோர்களை வழிபடும் வழக்கத்தை இன்றளவும் கடைபிடித்துவருகின்றனர்.
பகிர்ந்துண்ணும் வழக்கம் என்பது தமிழனுக்கே உரித்தானது. அதற்கேற்ப அம்மக்களுக்கும் நாகருக்கும் மாரியம்மனுக்கும் பட்டாளம்மன், கக்குமாரியம்மன் என எங்குகோழி ஆடு வெட்டி பொங்கல் வைத்தாலும் அதை வீட்டிற்கு எடுத்துச்செல்லக்கூடாது என்றும் அங்கேயே சாப்பிட்டுவிட வேண்டும் இல்லையேல் வீட்டிற்கு ஆகாது என அவர்கள் மட்டுமல்லாமல் அங்கு கூடியிருப்போருக்கும் உணவு வழங்கி அகமகிழ்வதைக் காணமுடிகிறது.
மனிதரைப்போல் மிருகங்களுக்கும் வலி என்பது இருக்கும் என்பதை உணரவைக்க இவர்களுள் ஒருவரைக்கொண்டு எருதாட்டம் ஆடுவது மெய் சிலிர்க்கவைக்கிறது. பிறர் மேல் கால், கை படுவது தவறு என்று உணர்ந்து மன்னிப்பு போரும்விதமாகக் குனிந்து வணங்கும் வழக்கம் இவர்களிடையே காணமுடிகிறது.
References
1.Tamil Wiktionary from Internet
2. Lakhsmanan, Karagapatti, Karimangalam.
Reference Books
1.Thiruthakka Dever., – Sivagasindamani Uma Publications, Chennai
2. Parimanam., – Kazhiththogai,
NCBH, Ambatore, Chennai – 98
First Edition – 2007.
3. Parimanam., – Perumpaanatrupadai,
NCBH, Ambatore, Chennai – 98
First Edition – 2007.
4. Parimanam., – Puranaanuru
NCBH, Ambatore, Chennai – 98
First Edition – 2007.
5.Puzhiyur Kesigan, – Nannool (Kandigaiyurai)
Saratha Publications, Chennai – 600 014.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
திரு.இல.பெரியசாமி
முனைவர் பட்ட ஆய்வாளர்,
எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130,
பெரியார் பல்கலைக்கழகம்.
தொலைபேசி எண் : 97861 80599
மின்னஞ்சல் முகவரி pc.samy86@gmail.com