மனிதர்கள் வாழும் உலகம் மலைகள், காடுகள், வயல்கள், கடல்கள் என்று பன்முகத்தன்மை கொண்டது. உலகின் பெரும்பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது. நிலங்களின் வகைகளுக்கேற்பவே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று பழந்தமிழர் வகைப்படுத்தியுள்ளனர். உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்ற கொள்கையும் பழந்தமிழரிடம் காணப்பட்டது. உலகத்தை மங்கலப் பொருளாகத் தமிழர் கருதினர். தமிழ்ப்புலவர்கள்
உலகம் உவப்ப1
வையகம் பனிப்ப2
நனந்தலை உலகம்3
மூவா முதலா உலகம்4
உலகெலாம் உணர்ந்து5
உலகம் யாவையும்6
என்று தங்களுடைய நூலின் தொடக்கத்திலேயே உலகம் என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தியுள்ளனர். ஐந்து வகையான திணைகளையும் நடுவண் ஐந்திணை என்று தொல்காப்பியர் கூறுகிறார். ஒவ்வொரு திணைக்கும் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற பாகுபாடுகளையும் தொல்காப்பியம் கூறுகிறது. அவற்றுள் முதற்பொருள் என்பது நிலமும், பொழுதும் ஆகும் என்று தொல்காப்பியம் கூறுவதை
”முதல் எனப்படுவது நிலம்பொழுது இரண்டின்
இயல்பு எனமொழிப இயல்பு உணர்ந்தோரே”7
என்ற நூற்பா உணர்த்துகிறது. காடுகளையுடைய முல்லை நிலத்திற்குக் கடவுளாகத் திருமாலும், மலைகளையுடைய குறிஞ்சி நிலத்திற்குக் கடவுளாக முருகனும், மிகுதியான நீரையுடைய மருத் நிலத்திற்குக் கடவுளாக இந்திரனும், மணலால் சூழப்பெற்ற செய்தல் நிலத்திற்குக் கடவுளாக வருணனும் இருந்ததைத் தொல்காப்பியம் உணர்த்துகிறது. இதனை,
”மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே”8
என்ற நூற்பா உணர்த்துகிறது. தொல்காப்பியர் பாலை என்ற நிலத்தைத் தனியாகக் கூறவில்லை. குறிஞ்சி நிலமும் முல்லை நிலமும் மழையின்றி வறண்டு போனதே பாலைநிலம் எனப்பட்டது. பாலைத்திணையின் முதற்பொருள், பாலைத்திணையின் அகத்திணை போன்றவற்றைத் தொல்காப்பியர் கூறியிருந்தாலும், நிலத்தை மட்டும் சுட்டவில்லை. வயலும் வயல் சார்ந்த இடமும் மருதநிலம் ஆகும். மருதநிலக்கடவுள் இந்திரன். உழவர், உழத்தியர் என்று இங்குள்ள மக்கள் அழைக்கப்படுவர். உழிஞைத்திணை மருதத் திணையின் புறத்திணையாக இருப்பதை
”உழிஞை தானே மருதத்துப் புறனே”9
என்று தொல்காப்பியம் உணர்த்துகிறது.
நாடுகாண் காதை
சிலப்பதிகாரம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களைக் குறிப்பிடுகிறது. சங்க இலக்கியங்களுக்குப் பின்னர் ஐந்து திணைகளையும் விவரிக்கும் காப்பியமாக சிலம்பு மிளிர்கிறது. மருதத்திணையின் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் முதலியன சிலப்பதிகாரம் முழவதும் விரிவிக்கிடந்தாலும், நாடுகாண் காதையில் 76 ஆவது அடியிலிருந்து 155 ஆவது அடிவரை மருதத்திணைக் காட்சிகள் விவரிக்கப்படுகின்றன. கவுந்தியடிகள் மதுரை செல்லும் வழியை கோவலன், கண்ணகியிடம் விவரிப்பதாக இப்பகுதி அமைந்துள்ளது. கவுந்தியடிகள் ஒரு சமணத்துறவி. எவ்வுயிருக்கும் தீமை செய்யக்கூடாது என்ற சமண மதக் கொள்கையை அவர் பின்பற்றுகிறார். சமணத்துறவியர் நடந்து செல்லும்போது வழியை மயிற்பீலியால் தூய்மை செய்தவாறு நடப்பர். கவுந்தியடிகளும் கொல்லாமையைப் பின்பற்றி நாம் எவ்வுயிருக்கும் தீங்கு செய்தல் கூடாது என்று கூறுகிறார்.
கோவலனே நாம் செல்லும் வழியில் என்னென்ன துன்பங்கள் பல ஏற்படும் என்பதை அறிவாய். வெயிலின் தன்மையைப் பொறுக்காத மெல்லிய இயல்பினை உடையவள் கண்ணகி. இவளுடன் மலர்களையுடைய சோலை வழியே செல்வோம் என்றால், வள்ளிக்கிழங்கு எடுத்த குழிகளில், சண்பக மரங்களின் பூக்களும் தாதுகளும் நிரம்பி இருக்கும். அக்குழிகள் துன்பம் தரும் என்று கூறுகிறார். இதனை,
”பயில்பூந் தண்டலைப் படர்குவம் எனினே
மண்பக வீழ்ந்த கிழங்ககழ் குழியைச்
சண்பக நிறைந்த தாதுசோர் பொங்கர்
பொய்யறைப் படுத்துப் போற்றா மாக்கட்குக்
கையறு துன்பங் காட்டினுங் காட்டும்”10
என்ற அடிகள் உணர்த்துகின்றன.
”வள்ளிக்கிழங்கினை
கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே”11
என்று புறநானூறு உணர்த்துகிறது. அக்குழிகளை விட்டு ஒதுங்கிச்செல்லலாம் என்றால் பலா, தென்னை போன்றவற்றின் பழங்கள் முட்டும். அதை விடுத்து மஞ்சளும் இஞ்சியும் விளையும் பகுதிகளில் நடந்து செல்லலாம் என்றால், பலாவின் விதைகள் பரல் கற்கள் போல் இருக்கும் என்று கூறும் கவுந்தியடிகள் அடுத்து மருத நிலமான வயலைப்பற்றிக்கூறுகிறார்.
ஆற்று நீர்
வயல் வழியாகச் செல்லலாம் என்றால் குளங்களில் உள்ள நீர்நாய்கள் வாளை மீன்களைத் துரத்துவதால் அம்மீன்கள் வயிலில் குறுக்காகப் பாயும் அதைக்கண்டு கண்ணகி அஞ்சுவாள் என்று கூறுவதை,
”வயலுழைப் படர்குவம் எனினே யாங்குப்
பூநா றிலஞ்சிப் பொருகய லோட்டி
நீர்நாய் கௌவிய நெடும்புற வாளை
மலங்குமிளிர் செறுவின் விலங்கப் பாயின்
கலங்கலு முண்டிக் காரிகை”12
என்ற அடிகள் உணர்த்துகின்றன. வாளை மீனை குளத்தில் நீர்நாய் துரத்துவதை ஒளவையாரும்
”அரில்பவர்ப் பிரம்பின் வரிப்புற நீர்நாய்
வாளை நாளிரை பெறும்”13
என்று குறுந்தொகையில் உணர்த்துகிறார். கரும்புகளில் உள்ள தேன்கூடு அழிந்து, தேன் ஒழுகி அருகில் உள்ள பொய்கையில் கலக்கும். நீர் வேட்கையால் இவள் அந்நீரை உட்கொள்ளவும் கூடும். அந்நீர் அறநூல்களில் விலக்கப்பட்டதால் இதனை உண்ணக்கூடாது என்று கவுந்தி கூறுவதை
”கரும்பிற் தொடுத்த பெருந்தேன் சிதைந்து
சுரம்புகூழ் பொய்கைத் தூநீர் கலக்கும்
அடங்கா வேட்கையின் அறிவஞர் எய்திக்
குடங்கையில் னொண்டு கொள்ளவுங் கூடும்”14
என்ற அடிகளால் உணர முடிகிறது. குறிஞ்சி மலர்களில் உள்ள தேனால் உண்டாக்கப்பெற்ற தேனடையை
”கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும்”15
என்று குறுந்தொகையும், தாமரை மலர்களில் உள்ள தேனால் சந்தன மரத்தில் கட்டப்பட்ட தேனடையை
”சாந்தில் தொடுத்த தீந்தேன் போல”16
என்று நற்றிணையும் உணர்த்துவது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. அவ்விடத்தை விட்டு அகன்று சென்றால் வயலில் களைபறிப்போர் பறித்துப்போட்ட குவளை மலர்களில் வண்டுகள் இருக்கும். அவ்வண்டுகளை அறியாமல் மிதிக்கவும் கூடும் என்பதை
”குறுநர் இட்ட குவளையம் போதொடு
பொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கை
நெறிசெல் வருத்தத்து நீரஞ ரெய்தி
அறியா தடியாங் கிடுதலுங் கூடும்”17
என்ற அடிகள் உணர்த்துகின்றன. சமணர்கள் தாம் நடந்து செல்லும் பாதையில் உள்ள உயிர்களைத் துன்புறுத்த மாட்டார்கள் என்று சமணத்துறவியாகிய கவுந்தியடிகள் கூறுவதன் மூலம் கொல்லாமையைப் போற்றிய சமணமதத்தின் பெருமையை உணரமுடிகிறது. குவளை மலர்களில் தேனருந்திய வண்டுகள் அம்மலர்களில் உறங்குவதை
”பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப”18
என்று திருப்பாவையில் ஆண்டாள் கூறுவதும் ஒப்பு நோக்கத்தக்கது. வாய்க்காலின் கரை வழியாகச் சென்றால் புள்ளிகளையுடைய நண்டினையும், நத்தையையும் மிதித்து அவற்றிற்குத் துன்பம் நேரும். அதனால் வயல்களும்,சோலைகளும் அல்லது வேறு வழிகள் இல்லை. அதனால் பிற உயிர்களுக்குத் துன்பம் நேராமல் பயணத்தைத் தொடர வேண்டும் என்று கவுந்தியடிகள் கூறுகிறார். இதனை,
”எறிநீர் அடைகரை இயக்கந் தன்னில்
பொறிமாண் அலவனு நந்தும் போற்றாது
ஊழடி யொதுக்கத் துறுநோய் காணில்
தாழ்தரு துன்பந் தாங்கவும் ஒண்ணா
வயலுஞ் சோலையும் அல்லது யாங்கணும்
அயல்படக் கிடந்த நெறியாங் கில்லை”19
என்ற அடிகள் உணர்த்துகின்றன. எவ்வுயிருக்கும் நாம் துன்பம் தருதல் கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தை இதன் மூலம் உணர முடிகிறது. நண்டின் உடலில் புள்ளிகள் இருத்தலை,
”தாய்சாப் பிறக்கும் புள்ளிக் களவன்”20
என்று ஐங்குறுநூறு உணர்த்துகிறது. நண்டுகள் ஈரம் மிகுந்த இடங்களில் தம்முடைய புற்றுக்களை அமைக்கும் என்பதை
”அளைவாழ் அலவன்”21
என்று குறுந்தொகை உணர்த்துவதும் ஒப்பு நோக்கத்தக்கது. பயணத்தின் போது சிறுசிறு உயிரினங்களான வண்டு,நண்டு,நத்தை போன்றவற்றிற்கும் நாம் தீங்கு விளைவிக்கக் கூடாது என்ற கவுந்தியடிகளின் மன உணர்வு பாராட்டத்தக்கது. எவ்வுயிரையும் கொல்லக்கூடாது என்ற சமண மதக்கோட்பாட்டை கவுந்தியடிகளின் மன உணர்வின் வழியாக வெளிப்படுவதை சிலம்பு உணர்த்துகிறது.
சான்றாதாரங்கள்
1.திருமுருகாற்றுப்படை, அடி-1
2.நெடுநல்வாடை, அடி-1
3.நனந்தலை உலகம், அடி-1
4.மூவா முதலா உலகம், சீவக சிந்தாமணி பா-1
5.பெரியபுராணம், பாடல்-1
6.உலகம் யாவையும், பா-1
7.தொல்காப்பியம், நூற்பா-950
8.மேலது, நூற்பா-951
9. தொல்காப்பியம், நூற்பா-1010
10. நாடுகாண் காதை, அடி-66
11. புறநானூறு-109
12. நாடுகாண் காதை, அடி-77
13. குறுந்தொகை, பா-364
14. நாடுகாண்காதை, அடி-82
15. குறுந்தொகை, பா-3
16. நற்றிணை-1
17. நாடுகாண் காதை-86
18. திருப்பாவை-3
19. நாடுகாண்காதை, அடி-90
20. ஐங்குறுநூறு, பா-23
21.குறுந்தொகை, பா-35
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் அ.ஜெயக்குமார்,
உதவிப்பேராசிரியர்,
தமிழாய்வுத்துறை,
மஹேந்ரா கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
காளிப்பட்டி, நாமக்கல் – 637501.
அலைபேசி :9994507627
ஆசிரியரின் பிறக்கட்டுரைகள்
1.சங்க இலக்கியத்தில் நெற்பயிர் மேலாண்மை