எறிபத்த நாயனார்‌ புராணம்

எறிபத்த-நாயனார்

எறிபத்த நாயனார்‌

சோழ மன்னரின்‌ அதிகாரத்தில்‌ இருந்த கருவூரில்‌ பிறந்தவர்‌ எறிபத்த நாயனார்‌ ஆவார்‌. இவர்‌ சிவபக்தியிலும்‌ அடியவர்‌ பக்தியிலும்‌ சிறந்து விளங்கினார்‌. அடியவர்‌களுக்கு யாரேனும்‌ தீங்கிழைத்தால்‌ அவர்களை அழிப்பதற்காக மழுப்படை ஏந்தி வலம்‌ வந்தார்‌.

கருவூரில்‌ சிவகாமியாண்டார்‌ என்ற அடியவர்‌ ஒருவர்‌ இருந்தார்‌. அவர்‌ அவ்வூரில்‌ உறைந்தருளும்‌ ஆனிலைப்‌ பெருமானுக்கு நாள்தோறும்‌ பூக்கள்‌ சுமந்து செல்வார்‌. ஒருநாள்‌ காலை அவர்‌ அவ்வாறு பூக்கூடை சுமந்து வருகையில்‌, மன்னர்‌ புகழ்ச்சோழரின்‌ பட்டத்து யானை அவ்வழியே வந்தது. அந்த யானை சிவகாமியாண்டாரின்‌ கையிலிருந்த பூக்கூடையைத்‌ தட்டிப்‌ பறித்தது. அதனால்‌ பூக்கள்‌ வீதியெங்கும்‌ சிதறியது. யானைப்பாகர்கள்‌ யானையை விரைவாக ஒட்டிச்‌ சென்றனர்‌.

அவ்வழியே வந்து கொண்டிருந்த எறிபத்தர்‌ மிகுந்த கோபம்‌ கொண்டார்‌. அவர்‌ நேராக யானையின்‌ அருகில்‌ சென்றார்‌. தன்‌ கையிலிருந்த மழுவால்‌ யானையின்‌ தும்பிக்கையை வெட்டினார்‌. யானை பிவிறியபடி தரையில்‌விழுந்தது. அதைக்கண்ட யானைப்பாகர்கள்‌ எறிபத்தரைத்‌ தாக்க வந்தார்கள்‌. எறிபத்தர்‌ அவர்களையும்‌ தன்‌ மழுவால்‌ வெட்டிச் சாய்த்தார்‌.

பட்டத்து யானையை ஒருவர்‌ வெட்டிச்சாய்த்தார்‌ என்ற செய்தி கருவூர்‌ மடத்திலிருந்த புகழ்ச்சோழ மன்னருக்கு எட்டியது. அவர்‌ கோபம்‌ கொண்டு, புறப்பட்டு வந்தார்‌. என்‌ பட்டத்து யானையைக்‌ கொன்றவர்‌ யார்? என்று கேட்டார்‌.

எறிபத்தர்‌, ஆனிலைப்‌ பெருமானுக்காகச் சிவகாமியாண்டார்‌ கொண்டு சென்ற பூக்களை யானை சிதறடித்ததையும்‌, அதனால்‌, தான்‌ யானையை வெட்டிக்‌கொன்றதாகவும்‌ மன்னரிடம்‌ கூறினார்‌.

அகைக்கேட்ட புகழ்ச்சோழர்‌ எறிபத்தரை வணங்கி, “யானை செய்த தவறுக்கு யானையையும்‌ பாகர்களையும்‌ கொன்றால்‌ மட்டும்‌ போதாது. யானையின்‌ சொந்தக்‌காரனான என்னையும்‌ கொல்லுங்கள்‌!” என்று கூறி தன்‌ வாளை உருவி எறிபத்தரிடம்‌ தந்தான்‌.

தான்‌ வாளைப்‌ பெறாவிட்டால்‌, மன்னர்‌ தற்கொலை செய்து கொள்வாரோ என்று பயந்த எறிபத்தர்‌ வாளைப்‌ பெற்றுக்‌ கொண்டார்‌. பின்பு, எறிபத்தர் மன்னரின்‌ சிவபக்தியையும்‌ அடியவர்‌ பக்தியையும்‌ உணர்ந்து, தன்‌ கையிலிருந்த வாளால்‌ தன்‌ தலையைக்‌ கொய்து கொள்ள முயன்றார்‌.

அதைக்கண்ட புகழ்ச்சோழர்‌, “ஐயோ! என்னைத்‌ தீராப்‌பழிக்கு ஆளாக்கிவிட்டீர்களே!” என்று பதறியபடி எறிபத்தரைத்‌ தடுத்தார்‌. உடனே அவ்விடத்தில்‌, “அடியவர்களே! உமது இருவரின்‌ பக்தியை உலகறியச்‌ செய்யவே இவ்வாறு சோதித்தேன்‌!’ என்ற அசரீரி ஒன்று எழுந்தது. மறுகணமே இறந்து போன யானையும்‌ பாகர்களும்‌ மீண்டும்‌ உயிருடன்‌ எழுந்தார்கள்‌. மன்னரும்‌, எறிபத்தரும்‌ சிவனருளை எண்ணி மெய்ச்‌ சிலிர்த்தனர்‌.

புகழ்ச்சோழரும்‌ யானை மீதேறி புறப்பட்டார்‌. சிவகாமியாண்டாரும்‌ தன்‌ திருப்பணியைத்‌ தொடரச்‌ சென்றார்‌. இவ்வாறு தன்‌ வாழ்நாள்‌ முழுவதும்‌ அடியவர்க்குத்‌ திருத்தொண்டு புரிந்த எறிபத்த நாயனார்‌, சிவனடி நிழல்‌ சேர்ந்தார்‌.

கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

நன்றி

மேலும் அறிய,

1.சுந்தரர் வரலாறு

2.திருநீலகண்ட நாயனார்‌ புராணம்

3.அமர்நீதி நாயனார் புராணம்

4.இளையான்குடி மாற நாயனார்

5.விறன்மிண்ட நாயனார்

6.திருநீலகண்ட நாயனார்

7.மெய்ப்பொருள் நாயனார்

 

 

 

 

 

Leave a Reply